ஜோதிர்லதா கிரிஜா
(20.4.1972 குமுதம் இதழில் வெளிவந்தது. “விடிந்த பிறகு தெரியும்” எனும் தலைப்பை “தர்ம சங்கடக் கதை” என்று மற்றி, குமுதம் வெளியிட்டது. கலைஞன் பதிப்பகத்தின் “ஜோதிர்லதா கிரிஜா கதைகள்” எனும் தொகுப்பில் உள்ளது.)
கையில் பெட்டியோடு நான் தெருவில் நடந்துகொண்டிருக்கிறேன். பெட்டியின் சுமையை விட மனத்தின் சுமை அதிகமாக இருப்பதால், கை நடுங்குகிறது. இடக்கையிலிருந்து வலக்கைக்கும், வலக்கையிலிருந்து இடக்கைக்குமாகப் பெட்டியை மாற்றி மாற்றிச் சுமந்தவாறு நான் நடந்து கொண்டிருக்கும் போது அந்தத் தெருவில் ஈ, காக்கை இல்லை.
வெயில் தாளாமல் வானத்தை நோக்கிக் குரைத்துக்கொண்டிருக்கிற நாயொன்று குப்பைத் தொட்டியில் எச்சில் இலை பொத்தென்று வந்து விழுந்த ஓசையைக் கேட்டதும், குரைப்பதை நிறுத்திவிட்டு அதைப் பொறுக்கித் தின்ன ஓடுகிறது.
எச்சில் இலை பறந்து வந்த திசையில் பார்க்கிற போது, மங்களம் மாமி என்னையே பார்த்துக்கொண்டு தன் வீட்டு வாசலில் நிற்பது தெரிகிறது. மாமியின் முகத்தில் மலர்ச்சி இல்லை. என் வரவை எதிர்நோக்கியிருந்ததற்கான ஓர் எதிர்பார்ர்பு மட்டுமே அவள் கண்களில் தெரிகிறது.
நான் விரைவாக நடக்கிறேன். மங்களம் மாமியின் வீட்டு வாசலருகே நின்று, “அப்பாவுக்கு எப்படி இருக்கு?” என்று நான் கேட்கிறபோது, “நேத்துலேர்ந்து கண்ணைத் திறக்கல்லே. மஞ்சு, மஞ்சுன்னு உன் பேரைச் சொல்லிச் சொல்லிப் புலம்பிண்டிருக்கார் …” என்ற மாமி சட்டென்று கண் கலங்கிப் போய்த் தலையைத் தாழ்த்திக் கொள்ளுகிறாள்.
என் முகத்தில் கப்பிக் கிடக்கிற துயரமும், கண்களின் சிவப்பும் அவளைப் பாதித்துவிட்டன என்பது புரிகிறது. நான் கண்ணீர் தேங்கிய கண்களால் தரையைப் பார்த்தவாறு கால்களை எட்டிப் போடுகிறேன். ஆயிற்று. இன்னும் இரண்டு வீடுகள் தள்ளினால் …
வாசலில் யாருமே இல்லை. பெட்டியைத் திண்ணையில் வைத்துவிட்டுப் பதைப்புடன் கதவைத் தட்டுகிறேன்.
தம்பிதான் முதலில் எட்டிப் பார்க்கிறான். “அக்கா வந்துட்டா …” என்று இரைந்த குரலில் கூவியபடி அவிழ்ந்த வேட்டியைக் கையால் பற்றிக்கொண்டு ஓடோடியும் வந்து கதவைத் திறக்கிறான்.
அவனைப் பின்பற்றி விரைந்து வருகிற அலமுவை நான் திகைப்போடு பார்க்கிறேன். கண்ணீரால் மங்கியிருக்கும் என் கண்களின் பார்வைக்குறைவையும் மீறிக்கொண்டு அலமு பளபளவென்று ஒளிர்கிறாள்.
ஆமாம். பத்து ஆண்டுகளுக்கு முன்னால் நானும் எனது பதின்மூன்றாம் வயசில் அலமுவைப் போலத்தான் பளபளத்தேன் என்பது நினைவுக்கு வருகிறது. கண்களைத் துடைத்துக்கொண்டு நான் மீண்டும் அவளைப் பார்த்துச் சிரிக்க முயல்கிறேன்.
“தந்தி கொடுக்கிறதுக்கென்ன, அக்கா? நான் கோடை ரோடுக்கு வந்திருப்பேனோ இல்லையோ?” என்று கடிந்து கொள்ளுகிறான் அம்பி. திண்ணையில் வைத்த பெட்டியை எடுத்துக்கொண்டு அவன் என் பின்னால் வருகிறான். எனக்கு முன்னால் நடக்கிற அலமுவின் உயரத்தையும் செழுமையையும் கண்டு வியக்கிற வியப்பில் அப்பாவைச் சில கணங்களுக்கு அடியோடு மறந்தே போகிறேன். தம்பியின் கேள்விகளுக்குப் பதில் சொல்லாமல், “இப்ப எப்படி இருக்கு அப்பாவுக்கு? எத்தனை நாளா அப்பாவுக்கு உடம்பு சரியில்லை?” என்றவாறு அ[ப்பாவின் படுக்கையை நெருங்குகிறேன்.
ஓரங்கள் கிழிந்த பழைய பாயொன்றில் அப்பா மல்லாந்து படுத்திருக்கிறார். வாய் சற்றே திறந்திருக்கிறது. அவரது மெல்லிய குறட்டை ஒலியும், கூடத்துச் சுவரில் மாட்டியிருக்கிற கெடியாரத்தின் டிக்டிக் ஓசையும் என்னை இனந்தெரியாத திகிலில் ஆழ்த்துகின்றன.
“பத்து நாளா உடம்பு சரியில்லை,” என்று அலமு கூறுகிறாள்.
“பத்து நாளா உடம்பு சரியில்லைன்னா இப்பத்தான் கடுதாசி எழுதறதா? தந்தியாவது அடிக்கக் கூடாதா? ஆஃபீசில் லீவ் வாங்கிண்டு ஒரு நாளாவது முந்தி வந்திருப்பேனோ இல்லையோ?”
அலமுவும் அம்பியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளுகிறார்கள்.
“தந்தி அடிக்கிறதுக்குக் காசு இல்லேக்கா. அதுதான் …” – அம்பி தலையைக் குனிந்து கொள்ளுகிறான். நெஞ்சில் யாரோ நெருப்பை அள்ளிப் போட்டுவிட்டாற்போல் சுரீரென்கிறது.
பங்களூரில் அலுவலக வேலையாகத் தற்போது தங்கியிருக்கும் என் “அவ”ருடைய பிறந்த நாளை முன்னிட்டுச் சென்ற ஞாயிற்றுக் கிழமையன்று மூன்றரை ரூபாய் செலவு செய்து அவருக்கு நான் வாழ்த்துத் தந்தியனுப்பியதைப் பற்றிய நினைவு நெஞ்சில் தைக்கிறது.
“பணமில்லேன்னா எனக்கு எழுதக் கூடாதாடா, மண்டு? போகட்டும். மருந்துக்கெல்லாம் என்ன செஞ்சேள்? டாக்டர் என்ன சொன்னார்?”
“மருந்தெல்லாம் வாங்கிக் குடுத்துண்டுதாங்க்கா இருக்கோம். அப்பா வெச்சிருந்த பணமெல்லாம் ரெண்டு நாளுக்கு முந்தி செலவாயிடுத்து. அம்மாவோட சங்கிலியை நாணா மாமா கிட்ட அடகு வெச்சு இன்னிக்குக் காலம்பர நூறு ரூபாய் வாங்கிண்டு வந்தேன் …”
“டாக்டர் என்ன சொல்றார்னு கேட்டா என்னமோ கதையெல்லாம் சொல்லிண்டிருக்கியேடா?”
அம்பி சட்டென்று முகத்தைப் பொத்திக்கொள்ளுகிறான். அலமு முகத்தைத் திருப்பிக்கொண்டு கேவுகிறாள். அவர்களது அழுகையின் பொருள் விளங்கியதும், என் உணர்வுகள் தம்பித்துப் போகின்றன.
“அப்பா! அப்பா! நான்தான், மஞ்சு வந்திருக்கேன்!” என்று அரற்றியவாறு நான் அப்பாவின் படுக்கையின் விளிம்பில் உட்காருகிறேன்.
கள்ளங்கபடற்ற முகத்துடன் தூங்கிக்கொண்டிருக்கிற அப்பாவைப் பார்த்ததும் மனத்தில் பொங்குகிற தாய்மையுணர்ச்சியால் அவரை எடுத்து மடியில் போட்டுக்கொண்டு வாய்விட்டு அழவேண்டும் போன்ற தாபம் மேலிட நானும் அவர்களோடு சேர்ந்துகொண்டு அழுகிறேன்.
மார்பில் கைவைத்துப் பார்க்கிறேன். சிவப்புக் குறைந்து வெளிறிக் கிடக்கிற மார்பின் சொறசொறப்பும் மெல்லிய துடிப்பும் என்னுள் கனத்த சோர்வையும் அவநம்பிகையையும் விளைவிக்கின்றன.
“என்னடா சொன்னார் டாக்டர்?”
“பிழைக்க மாட்டார்னு சொன்னார், அக்கா!”
‘பிழைக்க மாட்டார் … பிழைக்க மாட்டார் …அப்படின்னா எங்களை யெல்லாம் பெத்து வளர்த்து ஆளாக்கின நீங்க இனிமேல் இருக்க மாட்டேள்னு அர்த்தமா? எல்லாரையும் போல நீங்களும் செத்துப் போயிடப் போறேளாப்பா? … பிடி சாம்பலா ஆயிடப் போறேளா?…’ – நெஞ்சுக்குள்ளே இருக்கிற ஏதோ ஒன்று தூள்தூளாய்த் தெறித்துப் போகிறாற்போல் இருக்கிறது. நெஞ்சுக்கூடே விண்விண் என்று தெறிக்கிறது. அப்பாவின் தலையை வருடியபடி, “அண்ணாவுக்குத் தெரிவிச்சேளாடா?” என்று கேட்கிறேன்.
“அண்ணாவுக்கு எழுதக் கூடாதுன்னு அப்பா கண்டிப்பாச் சொல்லியிருக்கார்.”
“அப்பா ஏதோ கோபத்துலே சொன்னா, அதை வேத வாக்கா யெடுத்துண்டு கம்னு இருந்துட்றதா? சின்னப் பசங்கங்கிறது சரியாயிருக்கு. அவன்தானேடா மூத்த பிள்ளை? நாளைக்கு அவன்தானேடா வந்து கொள்ளி வைக்கணும்?” – சட்டென்று உதட்டைக் கடித்துக் கொள்ளுகிறேன். ‘டாக்டரின் கூற்றைப் பொய்யாக்கிவிட்டு எத்தனை பேர் பிழைத்துக்கொள்ளவில்லை? அப்பாவும் ஒருகால் பிழைக்கலாமில்லையா? ஏன் இப்படி அச்சானியம் மாதிரி வாயில் வருகிறது?’
“அப்படியெல்லாம் ஒண்ணும் ஆகாது. இருந்தாலும் எழுதிப் போட்டுடணுண்டா… மொதல்ல அண்ணாவுக்கு ஒரு தந்தி அனுப்பு. போ!’
அம்பி சட்டையை மாட்டிக்கொண்டு கிளம்புகிறான்.
தங்கையின் திருமணத்தை முன்னின்று நடத்த வேண்டியவன். அப்பா அதை வற்புறுத்தியும் கேளாமல் தன்னிச்சையாக எவளையோ, ‘குலம், கோத்திரம்’ பார்க்காமல் மணந்துகொண்டு குடும்பத்திலிருந்து பிரிந்து சென்றதால் விளைந்த ஆத்திரம் அப்பாவின் மனத்தில் அப்படியே இருக்கிற உண்மை புலனாகிறது.
அப்பாவின் தலைமாட்டில் உட்கார்ந்து கேவிக்கொண்டிருக்கிற அலமுவை இழுத்து அருகில் இருத்திக்கொள்ளுகிறேன்.
“டாக்டர்களுக்கு ஒண்ணும் தெரியாது. அவா பாட்டுக்கு வாய்க்கு வந்ததைச் சொல்லுவா. டாக்டர்கள் கைவிட்ட எத்தனை கேஸ்கள் பிழைக்கல்லே? அது மாதிரி அப்பாவும் பிழைச்சுக்குவார். …உச் …அழக்கூடாது…” என்று நான் சொல்லுகையிலேயே என்னையும் மீறி என் கண்களில் குபுக்கென்று பொங்குகிற கண்ணீர் கண் மடல்களைச் சுருக்கென்று குத்துகிறது.
மார்பின் மேல் விழுந்து சிதறுகிற கண்ணீர்த் துளிகளின் சூட்டினாலோ என்னவோ அப்பா சட்டென்று கண் விழித்துப் பார்க்கிறார். முதல் சில கணங்களுக்கு மிரள மிரளப் பார்க்கிற அவர் கண்கள் என் உருவத்தை அவர் மனத்தில் பதித்ததும், கண்களின் மிரட்சி மறைந்து, என்னை அடையாளம் தெரிந்துகொண்டுவிட்ட மலர்ச்சி அவற்றில் தோன்றுகிறது.
“யாரு? மஞ்சுவா? வந்துட்டியாம்மா?” என்று முனகியவாறு தம் மார்பில் கிடந்த என் கையை எடுத்துத் தம் உதடுகளில் அழுத்திக் கொள்ளுகிறார். சின்னஞ்சிறு குழந்தை மாதிரி அவர் திடீரென்று அழுவதைப் பார்த்ததும், என் துயரமும் கட்டுக்கு அடங்காமல் பெருகுகிறது. நான் என் அழுகையை அடக்கிக்கொள்ள முயன்றபடி, அப்பாவின் கண்களை ஒற்றித் துடைக்கிறேன்.
“மஞ்சு! எனக்கு ஏதாவது ஆயிட்டா இந்தக் குழந்தைகளைக் கூட்டிண்டு போய் உன்னோட வச்சுண்டு காப்பாத்தறியா?” – அப்பா நான் எப்போது வந்தேன் என்பதைப் பற்றியோ, தம் மாப்பிள்ளையின் நலனைப் பற்றியோ எதுவும் கேட்காமல் சட்டென்று விஷயத்துக்கு வந்ததும் எனக்குப் பகீரென்கிறது. வீண் பேச்சுப் பேசி நேரத்தைக் கழிக்க அப்பா விரும்பவில்லை என்பது விளங்கிய போது, தமது முடிவின் அண்மையை அவர் உணர்ந்திருந்த நிலையும், அதைத் தொடர்ந்து நிகழப் போகிற பூதாகாரமான உண்மையும் என் இதயத்தில் பாறாங்கல்லாய்க் கனக்கின்றன. அடிவயிற்றிலிருந்து பீறிட்டுக் கிளம்பித் தொண்டையில் வந்து சிக்கிக்கொள்ளுகிற துயரத்தை விழுங்கும் முயற்சியில் கழுத்து நரம்புகள் புடைக்க, நான் அவர் நெற்றியைத் தடவுகிறேன். குரல் எழும்பச் சில விநாடிகள் பிடிக்கின்றன.
“அப்படியெல்லாம் சோல்லாதீங்கோப்பா. நீங்க கண்டிப்பாப் பொழைச்சுக்குவேள்! …”
அப்பா மெல்லச் சிரிக்கிறார். குரல் உள்ளேயே அமுங்கிப் போனாற்போல் சிரிப்பு அடங்கி ஒலிக்கிறது. குரலின் கரகரப்பும் தேசலும் அவரது வலுவின்மையைப் பறைசாற்றுகின்றன. அளவுக்கு மீறி ஆசைப்படும் அறியாமை நிறைந்த குழந்தையொன்றைப் பார்க்கிற தாயின் முதிர்ச்சி தம் கண்களில் வழிய, அவர் என்னைப் பார்த்து, ‘அடி, அசட்டுப்பெண்ணே!’ என்பது போல் புன்னகை புரிகிறார். அந்தப் புன்னகையின் பொருள் என் விழிகளின் வழியே நெஞ்சுக்குள் இறங்கி அடி வயிற்றை ஒரு கலக்குக் கலக்குகிறது. நான் நானாக இல்லாமல் ஏதோவாகிக் குலைந்து போகிறேன்.
சிதறிக்கொண்டிருக்கிற என் உணர்வுகளையெல்லாம் ஒருங்கிணைத்துச் சமநிலைக்குக் கொண்டுவரும் நான், “ஏம்ப்பா இவ்வளவு அதைரியப்படறேள்? உங்களுக்கு ஒண்ணுமே இல்லே. இன்னும் நாலே நாள்ல எழுந்து உட்கார்ந்துண்டு, ‘வாழைப்பூ அடை தட்டிப்போடு’ன்னு கேக்கப் போறேள், பாருங்கோ!” என்கிறேன்.
சிரிக்கும் முயற்சியில் நான் மேனோக்கி வளைக்க முயல்கிற உதட்டு முனைகள் என் முயற்சியை மீறிக்கொண்டு கீழ் முகமாக வளைந்து என் உண்மை நிலையை அப்பாவுக்கு உணர்த்தி விடுவதால் அப்பா மறுபடியும் சிரிக்கிறார்.
“அசடு! அசடு! நானா அதைரியப்படறேன்? எனக்கொண்ணும் பயமில்லேம்மா. மரணம்கிறது பெரிய விடுதலை. அதனோட அருமை தெரியாதவாதான் அதைக் கண்டு பயப்படுவா. எனக்கு அதைரியம் ஒண்ணுமில்லேம்மா. ஆனா, இன்னும் கொஞ்ச நாள் வாழ்ந்தா, அலமுவை ஒருத்தன் கையிலே பிடிச்சுக் கொடுத்துட்டு நிம்மதியாச் சாவேன் பாரு. … அந்தப் பொறுப்பை உன் தலையிலே சுமத்திட்டுப் போகவேண்டி இருக்கேங்கிறதை நினைச்சுத்தான் வருத்தப்படறேன். … மஞ்சு! குழந்தைகள் ரெண்டு பேரையும் நீ கவனிச்சுக்கிறியாம்மா?”
“அந்தக் கவலையே உங்களுக்கு வேண்டாம்ப்பா.”
“மாப்பிள்ளை வரல்லையா?”
“ஆஃபீஸ் விஷயமா பெங்களூர்க்குப் போயிருக்கார்ப்பா. நான் மாமியார் கிட்ட சொல்லிட்டுத் தனியாத்தான் புறப்பட்டு வந்தேன். …”
“அப்படியா? மாப்பிள்ளை கிட்டவும் ஒரு வார்த்தை சொல்லலாமேன்னு பார்த்தேன்.”
“அதெல்லாம் அவசியமில்லேப்பா. அவர் ஒண்ணும் சொல்ல மாட்டார்.”
“குடிக்கக் கொஞ்சம் வெந்நீர் குடுக்கிறியாம்மா, அலமு?”
கண்களைத் துடைத்துக்கொண்டு அடுக்களைக்குச் சென்ற அலமு திரும்பி வருவதற்குள் அப்பாவின் தலை சரிந்து விடுகிறது. என்னைப் பார்த்து நேரில் ஒரு வார்த்தை சொல்லிவிட வேண்டும் என்பதற்காகவே போல் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டிருந்தவர் மாதிரி அப்பா நான் வந்த சிறிது நேரத்துக்கெல்லாம் போய்விட்டார். மறுமணம் செய்துகொள்ளாமல், தாயற்ற எங்களைத் தாயில்லாக் குறை தெரியாமல் வளர்த்து ஆளாக்கிய அப்பா செத்துப் போய்விட்டார். டாக்டர் வந்து அப்பாவின் இறப்பை உறுதிப்படுத்திவிட்டுப் போன பிறகும், நடந்துவிட்ட கோரத்தின் உண்மையைச் செரித்துக்கொள்ள முடியாமல் திணறுகிறேன்.
கொள்ளி போடுவதற்குக்கூட அண்ணா வரவில்லை. அலுவலக வேலையின் தவிர்க்க முடியாத நெருக்கடி காரணமாக இவர் வரமுடியவில்லை. …
‘காரியங்கள்’ எல்லாம் ஆனதும் அலமுவையும் அம்பியையும் கூட்டிக்கொண்டு நான் புறப்படுகிறேன். நான் அவர்களையழைத்துக்கொண்டு சென்னைக்கு வந்து சேர்ந்த அன்றைக்கு முந்திய நாளே இவர் தம் அலுவல் முடிந்து பங்களூரிலிருந்து வந்து விட்டிருக்கிறார்.
அன்று இரவு இவர் என்னைக் கேட்கிறார்: “ஆமா? நீ பாட்டுக்கு, ‘அவர்களுக்கு வேறு யாரும் இல்லாததால், என் தம்பியையும் தங்கையையும் கூட்டிக்கொண்டு வருகிறேன்’ அப்படின்னு தோரணையா ஊர்லேர்ந்து கடுதாசி எழுதறியே, என்ன அர்த்தம்?”
ஒரு கணம் நான் திகைக்கிறேன். எனக்கு ஒன்றும் புரியவில்லை.
“என்ன சொல்றேள்?”
“என்ன சொல்றேளாவது, என்ன சொல்றேள்? புருஷனுக்கு அடங்கின பெண்டாட்டியா யிருந்தா, ‘அவாளை அழைச்சிண்டு வரலாமா’ன்னு ஒரு வார்த்தை கேட்டுட்டுத்தான் கூட்டிண்டு வருவா…”
எனக்குச் சொரேர் என்கிறது. நான் திடுக்கீடும் திகைப்புமாக நிமிர்ந்து அவரைப் பார்க்கிறேன். அவர் நேருக்கு நேராக என்னைப் பார்க்காமல், தம் கையிலிருந்த புத்தகத்தின் பக்கங்களைப் புரட்டுகிறார்.
“ … ‘அழைச்சிண்டு வரலாமா’ன்னு உங்ககிட்ட நான் உத்தரவு கேக்கிறதுலேயும் ஒரு அர்த்தம் இருக்கணுமா இல்லியா? அந்தக் குழந்தைகள் வேறே எங்கே போய் இருக்க முடியும்? என்னை விட்டா வேறே யார் இருக்கா அதுகளுக்கு?”
“அதுக்காக இங்கே கூட்டிண்டு வந்துட்றதா?” “கூட்டிண்டு வறேன்னு எழுதிப்பிட்டுத்தானே கூட்டிண்டு வந்தேன்? சொல்லாம கொள்ளாம திடுதிப்னு அவாளோட வந்து இறங்கல்லையே?”
“கூட்டிண்டு வரலாமான்னு கேட்டா அது மரியாதை. கூட்டிண்டு வறேன்னு எழுதினா – ஜஸ்ட் ஒரு இன்ஃபர்மேஷன் மாதிரி எழுதினா – அது அகம்பாவம்.”
“அகம்பாவாமா!”
“பின்னே வேறென்ன? … உன் தங்கை கல்யாணத்தை நாந்தானே நாளைக்கு நடத்தி வைக்கணும்? அது எவ்வளவு பெரிய பொறுப்பு? எவ்வளவு பெரிய பாரம்? என்னை ஒரு வார்த்தை கேக்காமெ, இவ்வளவு பெரிய சுமையை இழுத்துண்டு வந்து என்மேலே போட்டிருக்கியே? உன்னை என்ன செஞ்சாத் தேவலை?”
“என் சம்பளப் பணத்தை அப்படியே பாங்க்லே போட்டு வெச்சு மூணே வருஷத்துல பணம் சேர்த்து நம்ப ருக்கு கல்யாணத்தை முடிக்கல்லையா? அதே மாதிரி … என் தங்கை கல்யாணத்தையும் …”
“ … ‘அகம்பாவமா?’ அப்படின்னு ஒண்ணுமே தெரியாத அப்பாவி மாதிரி கேட்டியே! இப்ப நீ பேசறே பாரு, அதுக்குத்தான் அகம்பாவம்னு பேரு. சம்பாதிக்கிற திமிர்னும் பேரு! …”
நான் வாயடைத்துப் போகிறேன்.
எங்கள் ஊரில் அடுத்த வீட்டுப் பெண் கணவனால் தள்ளி வைக்கப்பட்டு வாழாவெட்டியாகப் பிறந்த வீட்டுக்கு வந்து சேர்ந்த போது, அவளைப் படிக்க வைக்காத குற்றத்தை உணர்ந்து, விட்ட இடத்திலிருந்து அவளை மறுபடியும் அவள் தந்தை படிக்க வைத்த நிகழ்ச்சியைப் பார்த்ததால் விளைந்த மனப்போக்கினாலோ என்னவோ, ‘எதற்கும் இருக்கட்டும்’ என்றுதான் அப்பா என்னைப் படிக்க வைத்தார்.
படித்து முடித்ததன் பிறகு கொஞ்ச நாள்களுக்கெல்லாம் என்னை மணமும் செய்து கொடுத்துவிட்டார். நான் படித்த படிப்பின் பயனைப் பொருளாதார ரீதியில் அவர் அடையவில்லை. அதாவது, அவர் என்னை வேலைக்கு அனுப்பவில்லை.
நான் புக்ககத்துக்கு வந்த பிறகு, நான் படித்த படிப்பு வீண் போகாமல் என்னை வேலைக்கு அனுப்புமாறு என் மாமியார் என் கணவருக்கு யோசனை சொன்னதன் பேரில் இவர் என்னை வேலைக்கு அனுப்பினார். என் நாத்தனார் ருக்குவின் திருமணச் செலவுக்குப் பணம் சேர்க்க என் வருவாய் உதவும் என்று என் மாமியார் கூறிய உபாயத்தை இவர் ஏற்றுக்கொண்டார்.
ருக்குவின் நன்வினைப்பயனோ என்னவோ, எடுத்த எடுப்பிலேயே நல்ல சம்பளத்தில் எனக்குப் பாங்கியில் வேலை கிடைத்தது. எனக்கென்று எதையுமே எடுத்துக் கொள்ளாமல், என் முழு வருவாயையும் நான் இவர் கையில் கொடுத்துவிடுவது வழக்கம். ருக்குவின் திருமணத்துக்கென்று என் சம்பளம் முழுவதுமே ஒதுக்கி வைக்கப்பட்டது.
ஆறு மாதங்களுக்கு முன்புதான் ருக்குவுக்குத் திருமணம் நிகழ்ந்தது.
என்னை வேலைக்கு அனுப்பி எனது மூன்றாண்டு வருவாய் முழுவதையும் தம் தங்கையின் திருமணத்துக்காகச் சேமித்துச் செலவு செய்த என் கணவர் வேறு ஆதரவற்றுப் போன என் தம்பியையும் தங்கையையும் நான் அழைத்து வந்ததற்கு இவ்வளவு ஆத்திரப் படுவானேன் என்றுதான் எனக்குத் தோன்றிற்று.
‘நேற்று வந்தவர்’ ஒருவருடைய தங்கையின் திருமணச் செலவின் பெரும் பகுதியை ஈட்டிக்கொடுத்த ஒரு பெண் தன் உடன் பிறப்புகளைக் காப்பாற்றத் தன் வருவாயைப் பயன்படுத்தக் கூடாது என்று இவர் நினைப்பதோ, இவரைக் கேட்டுக்கொண்டுதான் அவர்களைக் கூட்டிக்கொண்டு வரவேண்டும் என்று எதிர்பார்ப்பதோ எந்த நியாயத்தை அடிப்படையாகக் கொண்டது என்பது எவ்வளவு சிந்தித்துப் பார்த்தும் எனக்குப் புரியவில்லை. என்னைத் தவிர வேறு ஆதரவு இல்லாத நிலையில் அவர்களை அழைத்து வர இவரிடம் உத்தரவு கேட்பதில் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா? அப்படிக் கேட்பது வெறும் போலியான மரியாதையாக இருக்காதா? …
“சம்பாதிக்கிற திமிர்னு மட்டும் சொல்லாதீங்கோ. உங்களை ஒரு வார்த்தை கேக்கறேன்னே வெசுக்குங்கோ. நீங்க வேண்டாம்னு சொல்லிட்டா என்ன பண்றது? அதுக்காகத்தான்.”
“அதுக்காகத்தான் கேக்காமயே கூட்டிண்டு வந்துட்டியாக்கும்! நான் வேண்டாம்னு சொன்னாலும் கூட நீ அவாளைக் கூட்டிண்டுதான் வந்திருப்பே. இல்லையா?”
“நீங்க நியாய உணர்ச்சி உள்ளவர்ங்கிற நம்பிக்கையினாலேயும், நாந்தான் அவாளைக் காப்பாத்தியாகணும்கிற நியாயத்தை நீங்களாவே புரிஞ்சுக்குவேள்னு எதிர்பார்த்தும்தான் நான் அவளைக் கூட்டிண்டு வந்தேன். அது தப்பா?”
“ரொம்ப சாமர்த்தியமாப் பேசறதா எண்ணமா? அவாளை வெச்சுக்கப்படாதுன்னு இப்ப நான் சொன்னா அதை நீ மீறிடுவியா?”
நான் பேசாமல் நிற்கிறேன். இந்த மூன்றாண்டுகளாக உடலும் உயிரும் ஒட்டி என்னோடு உறைந்து வாழ்ந்த கணவர் என்கிற உறவினருக்கும் எனக்குமிடையே ஒரு பெருந்திரை விழுந்துவிட்டாற் போல் தோன்றுகிறது. அவருடன் நான் கொண்டிருக்கும் உறவு விட்டுப்போய் விட்டாற்போலவும் நான் ஓர் அந்நியளாகிப் போனது போலவும் என் மனத்தில் ஒரு வெறுமை சூழ்கிறது. இத்தனை நாள்காளாக இவர் என்னோடு வாழ்ந்து வந்திருக்கும் வாழ்க்கையில் மனிதாபிமானமோ, அல்லது மன உணர்வுகளை அடிப்படையாகக்கொண்டு எழும் காதலோ இருக்கவில்லை என்கிற கைப்பான உண்மை முதன்முதலாகப் புரிகிற அதிர்ச்சியைத் தாங்க மாட்டாமல் என் நெஞ்சு கனக்கிறது. அல்லது, ‘ஒரு பெண்ணுக்கு வகுத்து வைக்கப்பட்டுள்ள எல்லைகளைக் கடந்து நாம்தான் அளவுக்கு மீறிச் சிந்திக்கிறோமோ’ என்று கூட நான் நினைக்க முற்படுகிறேன். ஆயினும் எங்கள் உரையாடலின் போது அவர் நேருக்கு நேராக நிமிர்ந்து என்னைப் பார்க்கவில்லை என்பது நினைவுக்கு வரும் போது, இவர் பக்கம் நேர்மை இல்லை என்பது கண்கூடாகத் தெரிகிறது. அந்தக் கண்டுபிடிப்பின் விளைவாக இவர் அமுக்கப் பார்க்கும் எனது தனித்துவம் இன்னும் அதிகமாக முறுக்கேறி நிமிர்கிறது.
எனது படிப்பும், உத்தியோகமும், கை நிறைய சம்பாதிக்கிற எனது நிலையும் என் அப்பா எனக்களித்தவை என்பதை நினைத்துக் கொள்ளுகிறேன். அப்பா எனக்களித்த கல்வியால் கிடைத்த ஊதியம் வேறொரு குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு மணமுடிக்க உதவியிருக்கையில். அப்பாவின் சொந்தக் குழந்தைகளுக்கு அந்தக் கல்வியும் வருவாயும் உதவக் கூடாது என்று இவர் தடை விதிப்பதா! என் பிடிவாதம் உறுதியடைகிறது.
“எங்கப்பாவுக்கு நான் கொடுத்த வாக்கைக் காப்பாத்துறதுக்காக உங்க வார்த்தையை நான் மீறி யாகணும்னா மீறித்தான் ஆகணும்… உங்கள் தம்பி, தங்கைகளைக் காப்பாத்துற கடமை உங்களுக்கு இருக்கிற மாதிரி எனக்கும் அந்தக் கடமை இருக்குன்னு நான் நம்பறேன். அவா இங்கே இருக்கக் கூடாதுன்னா நானும் இங்கே இருக்கல்லே. அவாளை அழைச்சுண்டு போயிடறேன். நீங்க செஞ்சது சரியில்லேன்னு என்னிக்குத் தோணினாலும், வெக்கப்படாம எனக்குத் தெரிவிச்சா நான் மறுபடியும் இங்கே ஓடி வந்துடுவேன். ராத்திரி முழுக்க யோசிச்சு நாளைக்குக் காலம்பர உங்க முடிவைச் சொல்லுங்கோ…”
கனத்த இதயத்துடன் வெளிவருகிறேன். கூடத்தில் படுத்துக்கொண்டிருக்கிற என் தம்பி, தங்கைகளுக்கு அருகே ஒரு துணியை விரித்துக்கொண்டு படுக்கிறேன். அந்நியர்களாகவும், வேண்டாத சுமைகளாகவும் தாங்கள் கருதப்படுவது தெரியாமல் கவலையற்றுத் தூங்கிக்கொண்டிருக்கிற அவர்களைப் பார்த்ததும், என் மனத்தில் இரக்கம் மேலிடுகிறது. என் உடம்பில் ஓடுகிற என் அப்பாவின் இரத்தமே அவர்கள் உடம்புகளிலும் ஓடுகிறது என்கிற நினைப்பால் என் மனம் அவர்கள் பால் கனிந்து கண்கள் கசிகின்றன.
இரவு முழுவதும் என் கணவர் யோசிப்பார்.
என் வருங்காலம் எப்படி இருக்கும் என்பது பொழுது விடிந்த பிறகுதான் தெரியும் …
……
- ஒரு கதை ஒரு கருத்து – சிவசங்கரியின் ‘வெள்ளிக்கிழமை ராத்திரி அவள் செத்துப் போனாள்’
- இந்தியாவின் பிரமாஸ் வான்வெளி நிறுவகம் லக்னோவில் ஓர் உற்பத்தி தொழிற்சாலை நிறுவத் திட்டம்.
- வடமொழிக்கு இடம் அளி
- சிறுவர் இலக்கிய கர்த்தா துரைசிங்கம் விடைபெற்றார்
- குஜராத்: அசோகனின் கட்டளையும் அசோகனின் வைத்தியசாலையும்
- கலியுக அசுரப்படைகள்
- விடிந்த பிறகு தெரியும்
- குடை சொன்ன கதை !!!!!
- மரங்கள்
- குருட்ஷேத்திரம் 7 (அர்ச்சுனனின் ஆன்மாவாக கிருஷ்ணன் இருந்தான்)
- குருட்ஷேத்திரம் 8 (பீஷ்மரின் மரணத்திற்குக் காரணமாக அமைந்த அம்பா)
- நவீன பார்வையில் “குந்தி”
- மீண்டும் மிதக்கும் டைட்டானிக்!
- கூலி
- தொலைக்காட்சித்தொடர்களின் பேய்பிசாசுகளும் பகுத்தறிவும்
- யாப்பிலக்கணச் செல்வி சாப்போ
- ‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் இரு கவிதைகள்
- பெரிய கழுகின் நிழல்