குருட்ஷேத்திரம் 12 (கர்ணனின் முடிவுக்கு குந்தியே காரணம்)

This entry is part 8 of 12 in the series 12 செப்டம்பர் 2021

 

 



 

பெண்கள் எப்போதும் ஆகப்பெரியதை தான் அடைய நினைக்கிறார்கள். தோற்றத்தைவிட ஆணின் பின்புலம் தான் அவளுக்கு பெரிதாகப்படுகிறது. அவனுடைய செல்வம் அளிக்கும் பாதுகாப்பு உணர்வு அவளுக்குத் தேவையாய் இருக்கிறது. ஆணைவிட பெண் முதல்காதல் பாதிப்பிலிருந்தெல்லாம் விரைவில் மீண்டு விடுகிறாள். வாழ்க்கை என்றால் என்னவென்று அவள் அறிவதற்குள்ளாகவே வாலிபம் கடந்துவிடுகிறது. எல்லா பெண்களிடமும் தங்கள் கணவனுக்குத் தெரியாத அந்தரங்க ரகசியம் இருக்கவே செய்கிறது. வெளியில் அவள் பகட்டாக காட்டிக் கொண்டாலும் அவளுடைய மனம் இருளடைந்த குகையாகவே உள்ளது. ஆண், பெண் கலப்பினால் உருவான எவருக்கும் உச்சஉயர்வான ஆண்தன்மை கிடையாது ஆனால் பெண்கள் ஆண்களிடம் அதையே மோகிக்கிறார்கள். தனது அழகை மட்டும் பிததானப்படுத்தும் பெண்களுக்கு முதுமை சாபக்கேடாகவே அமையும். வெறும் உடல் கலப்பினால் உருவான எந்த மனிதனாலும் ஞானத்தை அடைய முடியாது. பிறப்புக்கு முன்னும் இல்லை இறப்புக்கு பின்னும் இல்லை என்ற மாயாவாதத்தை எத்தனை யசோதாவாலும் புரிந்து கொள்ள முடியாது.

 

யாதவ சிற்றரசன் சூரசேனனின் மகள் பிருதை என்று பெயர் கொண்ட குந்தி. சூரசேனன் தனது அத்தை மகன் குந்திபோஜக்கு பிராமண சேவைக்காக குந்தியை தானமாகக் கொடுத்தான். துர்வாசரின் யாகத்துக்கு துணை புரிந்ததற்காக துர்வாசர் குந்திக்கு மந்திர உபதேசம் வழங்குகிறார். குந்தி மந்திரத்தை பரீட்சித்து பார்க்கும் பொருட்டோ அல்லது பருவ வயதில் ஆண்களின் மீது ஏற்படும் இச்சை காரணமாகவோ திருமணத்துக்கு முன்பே மந்திரத்தை உபதேசித்து சூரியனுடன் கலந்து கர்ணனைப் பெற்றாள். குந்தி செய்த அந்த சிசு தண்டணை அனுபவித்தது. அந்த சிசுவை பேழையில் வைத்து ஆற்றில் விட்டாள். சத்திரிய குழந்தை ஆற்றின் நீரோட்டத்தில் சென்று தேரோட்டியான அதிரதன் கையில் சிக்கிறது. பிறப்பால் சத்திரியனான கர்ணன் சூதனாக வளர்க்கப்பட்டான். குந்தி சுயம்வரத்தில் பாண்டுவை கரம் பற்றினாலும், அவளுடைய மனதில் நெருஞ்சி முள்ளாக மூத்தவனின் ஞாபகம் குத்திக் கொண்டிருந்தது. குருதேசத்தது மாமன்னன் பாண்டு திக்விஜயம் செய்து வெற்றியுடன் திரும்பிய இடைப்பட்ட காலமான ஓராண்டு காலமே குந்தியால் அரண்மனை சுகபோகத்தையும், ராணி என்கிற அந்தஸ்தையும் அனுபவிக்க முடிந்தது. திருதராஷ்டிரனின் பகை நெருப்பு பாண்டுவை காடு செல்ல வைத்தது. இளம் மனைவிகளான குந்தியும், மாத்ரியும் பாண்டுவை பின்தொடர்ந்தனர். பாண்டு குருவம்சத்து வாரிசைப் பற்றி கவலை கொண்ட போது குந்தி துர்வாசர் தனக்களித்த மந்திரத்தைப் பற்றி ஞாபகப்படுத்தினாள். பாண்டுவின் சம்மதத்துடன் தருமன், பீமன், அர்ஜூனன் பிறக்கின்றனர். இங்கு தான் குந்தியின் தயாள குணம் வெளிப்படுகிறது. மாத்ரியும் பிள்ளைப் பேற்றை விரும்பவே மந்திரத்தை அவளுக்கும் உபதேசிக்கிறாள் குந்தி. மாத்ரிக்கு நகுலன், சகாதேவன் இரட்டையர்களாக பிறக்கின்றனர். சாபத்தின் காரணமாக பாண்டுவின் மரணத்துக்கு மாத்ரி காரணமாக அமைந்தாள். குற்றவுணர்வாள் மாத்ரி உடன்கட்டையேற பாண்வர்களை கரையேற்ற வேண்டிய பொறுப்பை குந்தி ஏற்றாள்.

 

விதவைக் கோலத்தில் ஐந்து புதல்வர்களுடன் குந்தி அஸ்தினாபுர அரண்மனைக் கதவுகளைத் தட்டினாலும் பீஷ்மர் மறுபேச்சின்றி குந்தியையும் பாண்டவர்களையும் அரவணைத்துக் கொண்டார்.பிதாமகரே கெளரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் ஆசானாக துரோணரை நியமித்தார். பாண்டவர்களுக்கும், கெளரவர்களுக்கும் இடையேயான பகைமைத் தீயை சகுனி நெய்யூற்றி வளர்த்தான். திருதராஷ்டிரன் இருவருக்கிடையேயான விரோதத்தை நீர்ஊற்றி அணைக்க நீங்கள் இந்திரப்பிரஸ்தத்திலுள்ள அரக்கு மாளிகையில் தங்கிக் கொள்ளுங்கள் என்று கூறிய யோசனைியில் இருக்கும் சூழ்ச்சியை அறியாது பாண்டவர்கள் அதற்கு ஒத்துக் கொண்டனர். அரக்கு மாளிகையை எரியூட்டிய போது விதுரரின் முன்யோசனை பாண்டவர்களைக் காத்தது. அர்ஜூனன் திரெளபதியை வென்று வந்தபோது இவள் தான் பாண்டவர்களின் ஆன்மாவாக  இருப்பாள் என குந்தி உணர்ந்து கொண்டாள். தருமன் சூதில் மனைவியை வைத்து தோற்றபோது  இதே குந்திதான் தருமனை பெற்றேனே என வயிற்றில் அறைந்து கொண்டாள்.

 

வனவாசத்தை முடித்த பாண்டவர்களின் சார்பாக கெளரவர்களிடம் வசுதேவ கிருஷ்ணன் தூது சென்றான். கெளரவர்கள் எதையும் விட்டுக்கொடுக்க முன்வராதபோது போருக்கு நாள் குறிக்கப்பட்டது. வில்லாளியான கர்ணன் அர்ஜூனனைக் கொல்ல வல்லவன் என்பதால் கர்ணனின் இருப்பு வசுதேவ கிருஷ்ணனை உறுத்திக் கொண்டே இருந்தது. கர்ணனின் பிறப்பு ரகசியத்தை அறிந்த கிருஷ்ணன் குந்தியிடம் பாண்டவர்களுக்காக கர்ணனிடம் கையேந்த சொல்லுகிறான். போருக்கு முதல்நாள் ராஜமாதா தான் தண்ணீரில்விட்ட தனது மூத்த மகன் கர்ணனைச் சந்திக்கிறாள். அதற்கு அன்பு காரணமல்ல பாண்டவர்களைக் காக்கவேண்டுமென்ற அற்பத்தனமே காரணம். விதி எத்தனையோ வருடங்கள் கழித்து தாயையும், மைந்தனையும் சந்திக்க வைக்கிறது. குந்தி தன் தவறுக்கு மன்னிப்பு கேட்டு கர்ணனை பாண்டவர்கள் பக்கம் அழைக்கிறாள். கர்ணனோ துரியோதனன் எனது உயிர் உடலைவிட்டு உயிரைப் பிரிக்க முடியுமா என்கிறான். கொடை வள்ளலான கர்ணனிடம் குந்தி நாகஅஸ்திரத்தை அர்ஜூனன் மீது இரண்டாம் முறையாக ஏவக்கூடாதென்றும், மற்ற நான்கு சகோதரர்களுக்கு கர்ணனால் அழிவு நேரக் கூடாதென்றும் வரம் கேட்கிறாள். கர்ணனோ நீங்கள் பாண்டவர்களின் ராஜமாதாவாகவே இருக்கிறீர்கள் என் தாயாக அல்ல என்கிறான். இருந்தாலும் வரமளிக்கிறேன் பெற்றுக் கொள்ளுங்கள் என்கிறான். தாயன்பினால் கர்ணன் உருகினாலும் குந்தி கல் நெஞ்சாகவே இருக்கிறாள். போர் முடிந்து திருதராஷ்டிரன், காந்தாரியுடன் வனம் புகுகிறான். கூடவே குந்தியும் செல்கிறாள். காட்டுத்தீயில் சிக்கி தன் வாழ்க்கையை நிராதரவாகவே முடித்தும் கொள்கிறாள்.

Series Navigationஐஸ்லாந்துகுருட்ஷேத்திரம் 11 (பாரதப் போருக்கு வித்திட்ட பாஞ்சாலியின் சபதம்)
author

ப மதியழகன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *