நெருடல்

This entry is part 17 of 19 in the series 19 செப்டம்பர் 2021

 

கே.எஸ்.சுதாகர்

 

நள்ளிரவு, நாய்களின் ஓலம்

சருகுகளின் சலசலப்பு

நான்கு சுவர்களுக்குள் படுக்கை

என்றாலும் நடுக்கம்தான் வருகிறது.

 

 இது குளிரின் நடுக்கமன்று,

குண்டின் நடுக்கம்.

பக்கத்து அறையில் அம்மா, தங்கை

முன் விறாந்தையில் அப்பா, தம்பி

ஓர் கணம் கிரிசாந்தி

கமலிட்டா வந்து போனார்கள்.

 

ஓர் நெருப்புக் குச்சியேனும் 

கிடைக்காதாவென தானாகக்

கைகள் தலையணைக்குள் நீளுகையில்

நான்கு ‘பூட்ஸ்’ ஒலிகள்

நகர்ந்து போயின.

 

பாட்டொன்றை முணுமுணுத்துப்

பாடுவதிலிருந்து, அவர்களுக்கும்

பயம் இருப்பது  தெரிகிறது.

 

நேற்று முன் தினம் கோப்ரல் ஒருவன்

முன் வீட்டில் போய் நின்று

கோகிலாவைத் தான் மணப்பேன்

இது உறுதி என்றானாம், நிச்சயம்

கோகிலா ஒருநாள் பிணமாவாள்.

 

பொழுது புலர்கிறது. புலர்ந்துதான் என்ன?

புலர்வது அதன் வேலை.

சமாதானம் என்பது சொல்லில் எழுதுகையில்

சற்றேனும் கனவுகள் வந்து போகின்றன.

 

பாடசாலையொன்றில் கலைவிழா.

ஆமையாய் அவயவங்கள் உள்ளிளுத்து

பத்து முழத்துக்கொரு ‘காம்’ தாண்டி

போய் சேர பாதி விழா முடிந்தது.

 

கிரீச்சிடும் சைக்கிள், பாதையிலே படுகுழிகள்,

கந்தகவாசனை – போரின் தழும்புகள்

போட்டு வைத்த கோலங்கள்.

சொல்லொணாத் துயர் கொண்டு

ஒடுங்கிப் போகுதுயிர்.

 

மந்திரவாதி ஒருவன் மார்மீது கை தட்டி

வெற்றுக்கையை ஒரு சுழற்றுச் சுற்றி

இரும்புக் குண்டொன்றை எடுத்தான்.

 

பார்த்திருந்த சிப்பாய், ‘நிறுத்து’ என்று

கோசமிட்டு  பாய்ந்து சென்று

நிஜக் குண்டா என்று பார்த்து வந்தான்.

 

ஐம்பத்தெட்டில் எங்கள் பண்டா ஒரு நாளில்

உலகை எல்லாம் ஜாலம் காட்டி

சிங்களமே தனிச்சட்டம் என்று தந்த குண்டைவிட

இதில்  ஒன்றும் புதுமை இல்லை என்றான் சிப்பாய்.

 

திரை மூடி அடுத்த நிகழ்ச்சி

தொடங்குகையில் அழகான பெண்ணொருத்தி

வீணையின் முன் அமர்ந்திருந்தாள்.

 

யாழ்பாடி மீட்டிவைத்த நரம்பிழையின்

சந்தம் போல் சோகத்தின் விளிம்புவரை

தொட்டுவிட்டுச் சென்றது.

 

வந்தவர்க்கு இசை மயக்கம்

வாலிபர்க்கு வன மயக்கம்.

 

வானத்து தேவதை கானத்து மழை பொழிய

வீறு கொண்டு வீணே ஓடித் திரிந்து

வீணீர் வடித்து வைத்து கையில் தாளமும்

தட்டிக் கொண்டு முன்னே போனது

கோப்ரல் எண்ட பெரு விலங்கு.

 

ஐம்புலன்கள் அகத்தடக்கி – அவை

ஆடிப் போய் இருக்கையில்,

அவள் குரல் சுரமிழந்து

உடைந்தறுந்து தொங்கியது.

 

அண்ணனும் தம்பியும் அவசரப்பட்டு

அவளருகே வந்து,

ஆளுக்கொரு பக்கம் நின்று

அவள் கரம் பற்றி அணைத்துத்

தூக்குகையில்

அந்ததோ

 

அறுந்து தொங்கியது அவள் குரல்

மட்டுமல்ல

இடுப்புக்குக் கீழே அவயவங்களும்தான்.

 

அகத்தின் அழகு முகத்தில் தெரிகிறது

முகத்தின் உணர்வு

முடமானதில் புரிகிறது.

 

வீணீர் வடித்த நாய்

கலக்கமுற்று கவலை கொண்டு

வந்த வழி திரும்பியது.

 

நீங்களே செய்துவிட்டு

நீங்களே கலங்குவதில்

என்ன நியாயம் இருக்கிறது?

இன்று கவலை, குடிகாரன் பேச்சுபோல்

நாளை மீண்டும் அதுவே தொழில்.

 

வீடு திரும்புகையில் கச்சேரி இருந்த

பக்கம் நீண்ட ‘கியூ’ தெரிகிறது.

எழுபத்தியிரண்டில் பாண் கொடுத்த

ஞாபகம் கண்முன் விரிகிறது.

 

புகையிலை, வெங்காயம்,

குண்டு குண்டாய் முந்திரிகை

இதன் மேலே கொடி பறக்கும்.

கொடியின் கீழ் எண்ணெய் அரிசியும்

எலி சாப்பிடா மாவும்தான் கிடைத்தது.

 

இன்றும் ஏதேனும் நிவாரணமா

என்று கேட்டால்

காணாமல் போனோரின்

எலும்புகள் தட்டில் வைத்துக்

கொடுக்கினம் என்கிறார்கள்.

 

வீட்டினை அண்மிக்க

விசும்பல் ஒலி கேட்கிறது.

முன்வீட்டில் திரளாக சனக் கூட்டம்

துப்பாக்கி ஏந்தியபடி இராணுவ வீரர்கள்.

முற்றத்தில் வெள்ளைத் துணி பரப்பி

மூடிக் கிடக்கிறது

இரண்டு பொட்டலங்கள்.

 

வேறொன்றுமில்லை ஒத்திகை

முடிந்ததென்று மனம் வேறு

சொல்கிறது.

 

கிழம் ஒன்று முன்சென்று

துணி பிரித்து நிற்கிறது.

‘ஏய் கிழவா!’ என்றபடி துப்பாக்கி

நுனியால் கிழவரின் தலையை

நெருடினான் ஒருவன்.

நெற்றிப் பொட்டிலிருந்து இரத்தம்

இழை பிரித்து வெள்ளைத் துணியதனில்

கறையாகிப் போகிறது.

 

வடக்கிலும் கிழக்கிலும் நிதம் இது

நடக்க, தெற்கில் – ஓர்  பெரிய ஓட்டைப்

பானை செய்து ஒன்றாக உள்ளிறங்கி

ஓயாமல் பொய் சொல்லி

ஒத்தூதும் தவளையினம்

தானாகவே கத்தி வயிறு வெடித்தே சாக

இருக்கும் மீதியும் தங்களுக்குள்ளே

வடம் பிடித்து தவிடு பொடியாகின்றன.

 

நல்ல மனிதர்கள் நாலுபேர் உளரெனில்

அவர்களும் தாமரை இலைமேல்

நீர்த்துளிகள் – அங்கொருபால் மெல்ல

அசைத்துவிட்டால் அவர்களும்

நழுவிப் போய் விடுவார்கள்.

 

திடீரெனக் கிழவரின் முனகலொலி

எழுகிறது.

 

இதோ!

இன்னொரு பெண்!!

 

வி

ழு

ந்

து

 

கிடக்கின்றாள்.

 

வேரோடி விரிகின்ற வேளையிலே

வேரிழந்து வீழ்ந்து கிடக்கின்றாள்.

 

கூடவே

      கிடப்பது

             கோப்ரலின்

                    உடலும்தான்.

 

Series Navigationஅஞ்சலிக்குறிப்பு: எழுத்தாளர் நந்தினிசேவியர் விடைபெற்றார் !குருட்ஷேத்திரம் 13 (திருதராஷ்டிரன் என்ற யானைக்கு அங்குசமாக இருந்த காந்தாரி)
author

கே.எஸ்.சுதாகர்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *