குருட்ஷேத்திரம் 16 (தருமனால் ஏற்பட்ட தலைகுனிவு)

This entry is part 7 of 19 in the series 19 செப்டம்பர் 2021

 

 

 

 

இந்த உலகம் தர்ம கேந்திரம். தர்மம் இங்கே தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறது. வாழ்க்கையில் முயற்சி முக்கால் பங்கு விதி கால் பங்கு. உலக மக்கள் பிறரிடமிருந்து என்ன ஆதாயம் அடையலாம் என்பதிலேயே குறியாய் இருப்பார்கள். பிறரது முதுகை படிக்கல்லாய் பயன்படுத்துவதில் விற்பன்னர்கள். வியர்வை மண்ணில் சிந்தாமல் செல்வம் கிடைக்குமென்றால் வரிசையில் நிற்பார்கள். கோடி கோடியாய் குவித்து வைத்திருப்பவனும் ஒரு குண்டுமணி அளவுக்கு பிறருக்கு ஈய யோசிப்பான். தெய்வத்திடம் சென்று பிச்சை கேட்பதைத் தான் இவன் பக்தி என்று எண்ணுகிறான். கொடுப்பதற்கும், பறிப்பதற்கும் விதியையே நம் முன்னோர்கள் காரணம் காட்டுகிறார்கள். பெறுவதும், இழப்பதும் அவரவர் பிராப்த பிரகாரம் தான் என்றாகிறது. சத்தியம் பிறருக்கு உபதேசிக்க தேனாய் இனிக்கும் தன் வாழ்க்கையில் அமல்படுத்த கசக்கும். இந்த வானம் சூரிய, சந்திரர்கள் இருக்கப் போகின்றன நாம் இல்லாமல் போவோம். இது நமக்கு மட்டுமல்ல ஆயிரம் லட்சம் தலைமுறைகளாக இப்பூமியில் இதுதான் நடந்துவருகிறது எனும்போது ஆணவம் கொள்வதற்கு வாய்ப்பே இல்லாமல் போகிறது.

 

கொடியவிதி பலனளிப்பதை கடவுளால் கூட தடுக்க முடியாது. காட்டுவிலங்குகளை இனம் கண்டுவிடலாம் மனிதர்கள் இன்ன ரகமென்று இனம் காண முடியாது. பாவம் செய்யாதவர்களுக்கு ஓடுகின்ற நதியெல்லாம் கங்கை தான். வாழ்க்கைப் புதிருக்கு எந்த மனிதனாலும் இதுவரை விடைகாண முடியவில்லை. யாருடைய ஆரூடமும் நூறு சதவீதம் பலிப்பதில்லை. பாதி பொன்னுடம்பான கீரி தருமனின் அசுவமேத யாகத்தை கேலி செய்தத. பரிகாசம் செய்து சிரித்தது. எதற்காக பெருமை பீற்றிக் கொள்கிறீர்கள் என்றது. அள்ளி அள்ளி கொடுத்தால் தருமன் தர்மவான் ஆகிவிடுவானா என்றது. வாரிவாரிக் கொடுத்தால் வள்ளல் ஆகிவிடுவானா என்றது. குருட்சேத்திரத்தில் வசிப்பவரும் உஞ்சவிருத்தி பிராமணரான ஒருவர் தானம் செய்த ஒருபடி மாவுக்கு சமமாகாதே என்றது. தருமன் பிராமணரின் கதையை கேட்க ஆவல்கொண்டான். கீரி உஞ்சவிருத்தி பிராமணரின் கதையை சொல்லத் துவங்கியது.

 

ஏழை பிராமணர் மனதளவில் தர்மசீலர். மனைவி, மகன் மற்றும் மருமகள் என நால்வர் அவர் குடும்பத்தில் இருந்தார்கள். கிடைத்ததை  உண்டு வாழ்பவர். நாளைக்கு என எதையும் சேமித்து வைக்காதவர். பேச்சு நடையெல்லாம் சுத்தம். வானம் பொய்க்கவே பிராமணர் குடும்பத்தினரின் வயிற்றுப்பாட்டுக்கு வழியில்லாமல் போனது. ஏதோ முன்வினைப் பயனால் கொஞ்சம் தானியம் கிடைத்தது. அதை இடித்து ஒருபடி மாவாக்கினார்கள். தெய்வத்துக்கு நன்றி தெரிவித்து ஆளுக்கு கால்படி அளந்து உண்ண உட்கார்ந்தார்கள். வாசலில் பசியுடன் ஒரு அதிதி கையேந்த பிராமணர் தன் பங்கை அளித்தும் பசி தீரவில்லை அந்த அதிதிக்கு, மனைவியும் தன் பங்கை கொடுக்க அப்படியும் அதிதிக்கு பசி தீராமல் போகவே மகனும், மருமகளும் தன்  பங்கை அளித்தார்கள். அதிதி சுயவுருவை எடுத்து நின்றான். அங்கு இருந்ததோ தர்மதேவதை. பிராமணர் குடும்பத்தினர் மேல் பூமாரி பொழிந்தது. பிராமணர் குடும்பத்தோடு சொர்க்கம் புகுந்தார். அங்கே சிதறிக் கிடந்த மாவில் புரண்டு எழுந்ததாலே என் பாதி உடம்பு பொன் மயமாகியது. மீதி உடம்பும் பொன்மயமாகுமென்று தருமன் நடத்திய யாகத்துக்கு வந்தேன் என் உடம்பில் உள்ள ஒற்றை முடி மட்டுமே இங்கு பொன்னானது. அப்படியென்றால் உங்கள் யாகத்தின் அழகைப் பார்த்தீர்களா என பகடி செய்து மறைந்தது.

 

சந்நியாசம் கொள்வது அவ்வளவு எளிதல்ல. புற அளவில் மட்டுமல்ல அக அளவிலும் பெண்ணை, பொன்னை, மண்ணை துறக்க முடிந்தவனே சந்நியாசி. ஒன்றுமே இல்லாதவன் துறந்துவிட்டுப் போய்விடலாம். சக்கரவர்த்தியாக இருப்பவன் தேசத்தை, மக்களை, அரண்மனையை துறக்க முடிகிறதென்றால் தான் நம்புகிற உண்மைக்காக துறக்க முடிகிறதென்றால் அவனே துறவி. தன்னலம் துறந்தவன் தன்னுடைய நாடு என்ற எல்லை அவனுக்கில்லை உலகமே அவன் தேசம். மக்கள் எல்லோரும் சகோதர்கள். நீதி நாட்டுக்கு நாடு வேறுபடுவதில்லை யாவருக்கும் ஒரே நீதி. யாருக்கும் எந்த விதிவிலக்கும் கிடையாது. பேரரசனுக்கும் பிச்சைக்காரனுக்கும் ஒரே நீதி. வயிற்றுப்பாட்டுக்காக வாழ்வதில்லை வாழ்க்கை. நாடா காடா என்ற ஊசலாட்டம் இருக்கக்கூடாது. சத்தியத்தை அறிய மரவுரி தரிப்பது ஒன்றே வழி. தருமனுக்கு துறப்பதற்கு தேசம் இருந்தது. இழப்பதற்கு உயிர் இருந்தது. தருமனின் சொல்லுக்கு கட்டுப்பட்டு திரெளபதியோடு சேர்ந்து ஐவரும் மரவுரி தரித்து இமயமலை நோக்கி நடைபயணம் தொடங்கினார்கள்.

 

அர்ச்சுனன் தனது ஆறாம் விரலான காண்டீபத்தை கடலில் எறிந்துவிட்டுத்தான் தருமனை பின்தொடர்ந்தான். மேருமலையை கடந்து சென்ற பிறகு திரெளபதி மயஙகிச் சரிந்தாள். பீமன் நமது ஆன்மா போய்விட்டது தருமா என்கிறான். தருமனோ சிறிதும் அலட்டிக் கொள்ளாமல் சகோதரர்களாகிய நம் ஐவரில் அர்ச்சுனனிடம் அவள் அதிக பிரேமை கொண்டிருந்தாள் அதனால் அவள் வீழ்ந்தாள் என்றார். நகுலனும் சகாதேவனும் வீழந்தார்கள். தன்னை பண்டிதனாகவும், அழகின்திருவுருவாகவும் நினைத்ததே அவர்களின் வீழ்ச்சிக்கு காரணமென்கிறார் தருமர். அர்ச்சுனன் வீழவே பீமன் தருமா என அலறினான். ஆனால் தருமனோ அவன் வந்த காரியம் முடிந்துவிட்டது சென்று சேரவேண்டியதுதான் என அலட்சியமாக பதில் சொன்னார். பீமனும் வீழவே தருமன் உன் உடல்பலத்தால் சாதிக்க வேண்டியதை சாதித்த பின்னும் தற்பெருமை கொண்டாய் அதுவே உன் வீழ்ச்சிக்கு காரணம் என்றுரைத்தான். யுதிஷ்டிரனுக்கு ராஜ்யம் கைவிட்டுப் போய்விட்டது. சகோதரர்கள் நால்வரும் உயிருடன் இல்லை. திரெளபதியும் வீழ்ந்தாள். அவனை சக்கரவர்த்தியாக்கி அழகுபார்த்த கிருஷ்ணனும் அவனை தனியே விட்டுப் போனான். அவன் ஆண்ட துவாரகையும் பிரளயத்தால் அழிந்தது. தாய் குந்தியோ வனத்தில் நெருப்பில் வீழ்ந்து தன்னை மாய்த்துக் கொண்டாள். இமயமலையை நோக்கிச் செல்லும் குருதேச பேரரசனான தருமனை அனாதை நாயொன்று மட்டுமே பின்தொடர்ந்து சென்றது.

Series Navigationப.தனஞ்ஜெயன் கவிதைகள்குருட்ஷேத்திரம் 15 (சாத்வீக மனம் கொண்ட பாண்டு)
author

ப மதியழகன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *