குருட்ஷேத்திரம் 13 (திருதராஷ்டிரன் என்ற யானைக்கு அங்குசமாக இருந்த காந்தாரி)

This entry is part 18 of 19 in the series 19 செப்டம்பர் 2021

 

 

அங்ககீனமானவர்களை இந்த உலகம் கேலிக்குள்ளாக்குமே தவிர அவர்கள் உள்ளம் நோகுமே என்று வருத்தம் கொள்வதில்லை. அங்ககீனமாவர்கள் மீது பெண்கள் இரக்கம் காட்டுவார்களே தவிர அவர்களுக்கு வாழ்க்கை தர முன்வர மாட்டார்கள். கர்மவினை என்ற ஒற்றைப் பதில் அவர்களின் காயத்துக்கு மருந்தாகுமா? காலை ஒடித்து மயிலை ஆடச் சொல்வது  கடவுளின் குரூர குணத்தையே காட்டுகிறது. பெண்கள் தனக்கு குறையிருந்தாலும் வாய்க்கும் கணவனுக்கு எந்தக் குறையும் இருக்கக்கூடாதென்று கருதுகிறார்கள். கண்ணகி வாழ்ந்த பூமியில் கணவனே கண்கண்ட தெய்வம் என்ற பழமொழி அர்த்தமற்று போய்விட்டது. உலகை வென்ற சக்கரவர்த்திகள் கிளியோபாட்ராவின் காலடியில் விழுந்து கிடந்தார்கள். வெறும் தோற்றத்தை வைத்து மட்டுமே எடைபோடுவதால் தான் பல திருமணங்கள் விவாகரத்தில் போய் முடிகிறது. வாழ்க்கை அழகிலோ, பணத்திலோ இல்லை குணத்தில் தான் உள்ளதென்று பெண்கள் கடைசிவரை உணரமாட்டார்கள். வாழ்க்கையெனும் விருட்சத்துக்கு பெண்கள் நீர்வார்த்தால் மட்டுமே உலகம் பூஞ்சோலையாக அமையும். தாயன்பு மேலோங்கி தன்னலத்தைத் துறந்த பெண்கள் மட்டுமே தெய்வமாகப் போற்றப்படுகின்றனர். கடவுளின் பிரதிநிதியான பெண்கள் எதற்காக சாத்தானுக்கு விலைபோனார்கள் என்றுதான் தெரியவில்லை. ராமரின் கட்டளைக்கு அடிபணியாமல் லெட்சுமணக்கோட்டை தாண்டியவள் தானே சீதை. கெளதமருக்கு துரோகம் இழைத்து இந்திரனோடு கூடியவள் தானே அகலிகை. தசரதனுக்கு ஆயிரம் மனைவிகள் இருந்தாலும் சுமத்ரையினால் தானே ஸ்ரீராமரைப் பெற முடிந்தது. ராமரின் பேராண்மையே சீதையை அக்னிப்பிரவேசம் செய்ய வைத்தது. கையேயி பெற்ற வரம்தானே ராமனை வனவாசம் செய்ய வைத்தது.

 

காந்தார தேசத்து இளவரசி காந்தாரி. குருதேசத்து பேரரசை எதிர்க்க முடியாதவனாகத்தான் காந்தார மன்னன் சுபலன் இருந்து வந்தான். கண்பார்வையற்ற திருதராஷ்டிரனுக்கு காந்தாரியை பீஷ்மர் பெண் கேட்டதும் முடிவு எடுக்க முடியாமல் குழம்பித்தான் போனான் சுபலன். குருதேசத்துக்கு பெண் கொடுத்தவர்கள் என்றால் யார் காந்தாரத்தை  எதிர்ப்பார்கள் என்று பேசி மன்னன் சுபலனை சம்மதிக்க வைத்தான் காந்தாரியின் சகோதரன் சகுனி. சீர்வரிசைகளோடு சகுனியும், காந்தாரியும் அஸ்தினாபுரம் புறப்பட்டார்கள். ராஜ மரியாதையோடு ராஜமாதா சத்தியவதியும் பீஷ்மரும் காந்தாரியை வரவேற்றனர். அஸ்தினாபுரத்து அரண்மனை காந்தார தேசத்தில் பாதியளவு இருப்பதைக் கண்டு காந்தாரி வியந்தாள். மறுநாள் கல்யாணம் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த காந்தாரியை சகுனி சந்திக்க வந்தான். குருதேசத்தைப் பற்றி புகழ்ந்து பேசியவன். திருதராஷ்டிரன் யானை பலம் மிக்கவன் ஆனால் ஒரேயொரு குறை பிறவிக்குறை அவரிடம் ஒன்றுண்டு என்று காந்தாரியின் முகத்தைப் பார்க்காமல் கண்களைத் தாழ்த்தி சொன்னான். என்ன குறை என்று கேட்ட காந்தாரியிடம் திருதராஷ்டிரனுக்கு கண்பார்வை கிடையாது பிறவிக்குருடர் என்றான். செய்தி கேட்டு அம்பிகாவும், சத்யவதியும் காந்தாரி இருக்கும் இடத்துக்கு வந்தார்கள். காந்தாரி கறுப்புத் துணியால் கண்களை மறைத்துக் கொண்டிருப்பதைக் கண்டார்கள். அவர்கள் எவ்வளவோ கெஞ்சியும் கணவருக்கு இல்லாத ஒன்றை நான் மட்டும் ஏன் அனுபவிக்க வேண்டும் என்று அவர்களின் கோரிக்கையை ஏற்காமல் மறுத்துவிட்டாள்.

 

குந்தியும், காந்தாரியும் கருவுற்று இருந்தனர். திருதராஷ்டிரன் காந்தாரியே முதலில் மகனைப் பெற வேண்டும் என்று நினைத்தான். அப்போதுதான் குருதேசத்து மூத்த இளவரசன் என்று பட்டாபிஷேகம் செய்து வைக்கலாம் என்று நினைத்தான். ஆனால் குந்தியே முதலில் தருமனைப் பெற்றாள். துரியோதனன் பிறந்ததும் நிமித்தங்கள் சரியில்லாததால் சிசுவைக் கொன்றுவிடும்படி விதுரன் திருதுராஷ்டிரனிடம் கூறுகிறார். இல்லையெனில் குருதேசம் அழிவைச் சந்திக்கும் என்று கூறுகிறார். காந்தாரி பிடிவாதமாக மறுத்துவிடுகிறாள். சகுனி எல்லாவற்றிலிருந்தும் துரியோதனைக் காப்பான் என்று காந்தாரி நம்பினாள். அதேபோல் துரியோதனனுக்கு சகுனியின் பேச்சே வேதவாக்காக இருந்தது. துரியோதனன் ஈடுபடும் காரியங்களைப் பற்றி தெரிய வரும்போது அதை காந்தாரி திருதராஷ்டிரனிடம் தெரிவிப்பாள். அவனோ என்னால் அவன் கரங்களைக் கட்டிப்போட முடியாது என கைவிரித்து விடுகிறான். சகுனியை சந்திக்கும் போதெல்லாம் திருதராஷ்டிரன் துரியோதனன் மீது வைத்திருக்கும் பாசத்தைப் பற்றிக் கூறி துரியோதனனை நல்வழிப்படுத்தும்படி கூறுகிறாள். சகுனியின் முடிவும், செயல்களும் துரியோதனனை வேறு பாதைக்கு அழைத்துச் செல்கின்றன. திருதராஷ்டிரனிடம் துரியோதனன் மீது வைத்திருக்கும் பாசம் உங்கள் கண்களை மறைக்கிறது என்கிறாள் காந்தாரி. ஆனால் திருதராஷ்டிரனோ கல்போல் சமைந்திருக்கிறான். போரின் முடிவில் திருதராஷ்டிரனோடு வனம் புகுகிறாள் காந்தாரி. கடைவிவரை திருதராஷ்டிரனையும், கெளரவர்களையும் பார்க்காமலேயே காட்டுத்தீயிக்கு இரையாகி உயிரை பலி கொடுக்கிறாள். திருதராஷ்டிரன் என்ற மதம் பிடித்த யானைக்கு அங்குசமாக காந்தாரி கடைசி வரை இருந்தாள்.

 

ப.மதியழகன்

115,வள்ளலார் சாலை,
ஆர்.பி.சிவம் நகர்,
மன்னார்குடி – 614001.
திருவாரூர் மாவட்டம்.
cell:9597332952

Whatsapp: 9384251845

 

 

 

 

 

 

 

Series Navigationநெருடல்குருட்ஷேத்திரம் 14 (யாதவ வம்சமும் கிருஷ்ணனும் துர்வாசரின் சாபத்தால் அழிந்தார்கள்)
author

ப மதியழகன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *