தலைமுறை விரிசல்

 

ஜோதிர்லதா கிரிஜா

(25.2.1979 ஆனந்தவிகடனில் வந்தது. ஜோதிர்லதா கிரிஜா கதைகள் எனும் கலைஞன் பதிப்பகத் தொகுப்பில் உள்ளது.)

       “என்னடி பானு, என்ன பண்றதா யிருக்கே?” என்று கவலையும் வேதனையும் வெளிப்பட்ட குரலில் வினவிய கமலம் மகளின் முகத்தின் மீது தனது நெடிய பார்வையை ஓடவிட்டவாறு அந்த அறையின் வாசற்படியில் நின்றாள்.

       பானுமதி திரும்பிப் பார்த்தாள். கையில் இருந்த பேனாவை மூடிவைத்துவிட்டுத் தான் உட்கார்ந்துகொண்டிருந்த நாற்காலியின் முதுகில் நன்றாய்ச் சாய்ந்து பின்னோக்கி வளைந்து கால்களை நீட்டிச் சோம்பல் முறித்து ஒரு கொட்டாவியும் விட்டுவிட்டுச் சிரித்தாள். அவள் சிரித்ததைக் கண்டு கமலத்தின் முகம் கடுத்தது.

       “ … ஏண்டி? சிரிப்பா வருது உனக்கு? இது சிரிக்கிற விஷயமாடி?” – கமலத்தின் குரலில் சூடு தெறித்தது.

       பானுமதி பதில் சொல்லாமல், கால்களை மடக்கிக்கொண்டு முதுகை நெட்டுக்குத்தாக வைத்துக்கொண்டு, சரியாக உட்கார்ந்தாள். முகத்தில் இருந்த சிரிப்பு மட்டும் குறையவில்லை. கமலம் எரிச்சலுடன் வாசற்படியிலேயே நின்றுகொண்டிருந்தாள்.

       “என்னடி, நான் கேட்டுண்டே இருக்கேன் – நீ பதிலே சொல்லாம உக்காந்திண்டிருக்கே! என்ன அர்த்தம்?” – கூடியவரை எரிச்சலை வெளிக்காட்டாத குரலில் கமலம் கேட்டாள்.

        “நான் ஏற்கெனவே சொன்ன முடிவை மாத்திக்கப் போறதே இல்லைன்னு அர்த்தம் …” என்று தாயைப் பார்க்காமலே பதிலிறுத்த அவள் பேனாவைத் திறந்து எழுத ஆரம்பித்தாள்.

       “என்ன எழுதிண்டிருக்கே?”

       “லெட்டர்.”

       “யாருக்கு?”

       “வேற யாருக்கு? எல்லாம் உன் மாப்பிள்ளைக்குத்தான்.”

 “என்னன்னு?”

                 “உங்கிட்ட சொல்லணுமா என்ன?”

       “என்னது! என்ன சொன்னே?”

       “உங்கிட்ட அவசியம் சொல்லணுமான்னு கேக்கறேன்.”

       “ஏண்டி? பெத்த தாயார் கிட்டப் பேசற பேச்சாடி இது?”

       “அப்புறம் சாவகாசமாச் சொல்றேம்மா. ஒண்ணும் பெரிய ரகசியம் இல்லே. ஏற்கெனவே நான் உங்கிட்ட சொன்னதைத்தான் இப்ப எழுதிண்டிருக்கேன். அதைப் படிச்சுட்டு இன்னும் இம்புட்டுக் குதிகுதின்னு குதிப்பே. அதுக்குத்தான் பார்க்கறேன்.”

       “என் குதியை லட்சியமா பண்ணப் போறே?”

       “பின்னே ஏன் நான் என்ன எழுதறேன்கிறதைத் தெரிஞ்சுக்கணும்னு பறக்கறே?”

       “உன் மேல உள்ள அக்கறையாலேதாண்டியம்மா. பெத்த தாயாருக்கு அந்தக் கரிசனம் கூடவா இருக்காது?”

       பானுமதி பேசாமல் இருந்தாள். பேனாவை மூடி வைத்துவிட்டுச் சொன்னாள்: “சரி, நீ என்ன சொல்றே இப்ப? ‘அவனோட போய் இரு’ன்னு சொல்லப்போறே. அதானே?”

       ‘அவனோட’ என்று ஏகவசனத்தில் மகள் தன் கணவனைக் குறிப்பிட்டது தன் வாயிலான சொல்தானென்றாலும், அவள் அப்படிச் சொன்னது பிடிக்காத முகச் சுழிப்புடன், “என்னடி அவன் இவன்கறே?” என்று கமலம் அவளை விழித்துப் பார்த்தாள்.

       பானுமதி சிரித்துவிட்டு, “நீ சொல்ற வார்த்தையைத் திருப்பிச் சொன்னேம்மா. என்ன இருந்தாலும் எனக்குத் தாலி கட்டினவர் இல்லையா? வேற என்ன யோக்கியதை இருக்கோ, இல்லையோ, என்னைவிட நாலு வயசு பெரியவர். அதனால அவன் இவன்னெல்லாம் பேச மாட்டேன். … ஆனா, அதுக்காக, நீ அப்பாவுக்கு விழுந்து விழுந்து நமஸ்காரம் பண்ணிண்டிருந்த மாதிரி நான் பண்ண மாட்டேன் …” என்று பதில் சொன்னாள்.

       சொல்லிவிட்டுப் பெரிதாய்ச் சத்தம் போட்டுச் சிரித்தாள். கமலத்துக்குப் பற்றிக்கொண்டு வந்தது. மகளின் குத்தல் மொழிகளால் மனம் அவமானப்பட்டு அதனால் முகம் சிறுத்துப் போனது.

       “நமஸ்காரம் பண்ணினாலும் ஒண்ணும் குறைஞ்சு போயிட  மாட்டே….”

 “நான் ஒண்ணும் குறைஞ்சு போயிட மாட்டேன்தான். ஆனா அவருக்குத் திமிர் அதிகமாயிடும். இந்தப் பொம்மனாட்டிகள்ளாம் உன் மாதிரி இருந்து இருந்துதான் இது மாதிரித் திமிர் பிடிச்ச வர்க்கத்தை வளர்த்து வெச்சிருக்கேள்.”

       கமலம் வாயடைத்துப் போய் அவளைப் பார்த்தாள். பானுமதியின் ஐந்து வயசுத் தோற்றம் அவள் கண்களில் தோன்றியது.

 “ … சின்னப் பொண்ணாயிருந்தா பளார் பளார்னு இந்தக் கன்னத்துல நாலு, அந்தக் கன்னத்துல நாலுன்னு நன்னா சாத்துவேன். அதுக்கு முடியாம இருக்கு. …”

 “அந்தக் குறை உனக்கு வேண்டாம்மா. இப்பவும் நீ என்னைச் சாத்தலாம். என்ன இருந்தாலும் நான் உன் குழந்தைதான்.”

 “போறுண்டி. சிரிக்காதே. பத்திண்டு வருது எனக்கு… குழந்தை இல்லே, குழந்தை இல்லேன்னுான் கவலைப்பட்டிருக்கவும் வேண்டாம், இப்படி ஒரு பொண்ணு என் வயித்துல வந்து பொறந்திருக்கவும் வேண்டாம். …”

  “அம்மா! என்னை நீ பெத்ததுக்காகக் கோவிச்சுக்க வேண்டியது நான். … நீ இல்லே.” – பானுமதி மறுபடியும் இரைந்து சிரிக்கவும், எரிச்சலடைந்த கமலம் ஏலாமை நிறைந்த ஆத்திரத்துடன்  அங்கிருந்து நீங்கினாள். அடுக்களைக்கு வந்து படியில் தலை வைத்துப் படுத்த அவள் தான் புதுப் புடைவை கட்டும்  ஒவ்வொரு தடவையும் தன் கணவருக்கு முதலில் ‘நமஸ்காரம்’ செய்து கொண்டிருந்த வழக்கத்தை மகள் கேலி செய்ததை நினைத்து அவமானப்பட்டாள்.

 ‘இந்தக் காலத்துப் பொண்ணுகள் தஸ் புஸ்னு இங்கிலீஷ் பேசக் கத்துண்டு, அந்தத் திமிர்ல தலை தெறிச்சுப் போறதுகள். … பொம்மனாட்டிக் குழந்தைகளைப் படிக்க வைக்கக் கூடாதுன்னு நம்ம பெரியவா வெச்சிருந்தது ரொம்ப கரெக்ட். .. ஆண்பிள்ளைன்னா கொஞ்சம் முன்னே பின்னேதான் இருப்பான். அதுக்காக அவனோட போய் இருக்க மாட்டேன்னு அடம் பிடிக்க முடியுமா?’

 அவள் சட்டென்று ஒரு முடிவுடன் எழுந்தாள் – மறுபடியும் பெண்ணுடன் பேசிப் பார்க்கும் முடிவுடன்தான். அவிழ்ந்திருந்த தலைமுடியை முடிந்துகொண்டு அவள் விரைவாக நடந்தாள்.

 பானுமதியின் அறை வாசற்படியில் அவள் கால் வைத்த போது, மகள் தனது கடிதத்தை உறையினுள் நுழைத்துக் கொண்டிருந்ததைப் பார்த்துப் பதறிப் போனாள். பாய்ந்து சென்று அவளுக்கு முன்பாக நின்று, “அடியே! வேண்டாம். நேத்து நீ எங்கிட்ட பேசினதை யெல்லாம் கடுதாசியிலே எழுதிடாதே. கொஞ்சம் பொறுமையா இருடியாம்மா …” என்று ஆரம்பித்தாள். மகள் உறையை ஒட்ட விடாமல் அவள் கையைப் பிடித்துத் தடுக்க முற்பட்டாள்.

 பானுமதி சிரித்துக்கொண்டே உறையை மேசை மீது போட்டுவிட்டு, ‘பொறுமை என்னும் நகை யணிந்து கொண்டு வாழ வேண்டும் பெண்கள்’ என்று பாடத் தொடங்கினாள். கமலத்தின் எரிச்சல் இன்னும் மிகுதியாயிற்று.

  “பானு! உனக்கு இதெல்லாம் விளையாட்டாயிருக்கு. எனக்கு வயித்தைக் கலக்கறது – இது எங்கே போய் முடியப் போறதோன்னு. பொம்மனாட்டிகளுக்கு இம்புட்டு அழிச்சாட்டியம் ஆகாது. உன் மாதிரி நானும் அடம் பிடிச்சு உங்கப்பாவோட வாழ மாட்டேன்னு முரண்டியிருந்தா என்ன ஆகியிருக்கும்னு யோசிச்சுப்பாரு…”

 “என்ன ஆகியிருக்கும்? ‘இப்படி ஒரு பொண்ணு என் வயித்துல வந்து பொறந்திருக்க வேண்டாம்’னு நீ இப்ப சொல்லிக் காமிச்சயே, அதுக்கு அவசியம் இருந்திருக்காது.”

 “என்னது!”

 “இன்னும் பச்சையாச் சொல்லணுமாக்கும்!”

 கமலத்தின் முகம் ரொம்பவும் சிவந்து போயிற்று.  “பானு! ஒரு தாயாரோட மனசு இதனால என்ன பாடு படும்கிறதைப் புரிஞ்சிக்காம விளையாடறே. என்னடி எழுதியிருக்கே? உள்ளது உள்ளபடி சொல்லு.”

 “அதான் மேஜை மேல போட்டிருக்கேனே! நீயே படிச்சுப் பாரு.”

 “நீ சொன்னா நம்பறேன். நான் ஒண்ணும் படிக்க வேண்டாம்.”

 “அது ஒண்ணும் லவ் லெட்டர் இல்லே. எடுத்துண்டு போய்ப் படிச்சுப்பாரு…” – இப்படிச் சொல்லிவிட்டு, பானுமதி அந்த உறையைக் கமலத்தின் புறமாக நகர்த்தினாள்.

 கமலம் சற்றுத் தயங்கிவிட்டுப் பிறகு, ’என்னதான் எழுதி யிருக்கிறாள் பார்க்கலாமே’ எனும் ஆவலுடன் அதை எடுத்துக்கொண்டு அடுக்களைக்குப் போனாள். கண்ணாடியை எடுத்து மாட்டிக்கொண்டு அதைப் படிக்கலானாள்.

 ‘ … உங்கள் கடிதம் கிடைத்தது’ என்று கடிதம் மொட்டையாகத் தொடங்கப்பட்டிருந்ததைப் பார்த்ததும்,   ‘மரியாதை கெட்ட கழுதை’ என்று மகளை மனசுக்குள் திட்டிவிட்டு அவள் அதை மேலும் படிக்கலானாள்.      

      ‘ … ஆறு ஆண்டுகளாக என்னை ஏறெடுத்தும் பார்க்காமல் இருந்த உங்களுக்குத் திடீரென்று என் மேல் கரிசனம் ஏற்பட்டிருக்கும் காரணம் எனக்குப் புரியவே செய்கிறது. உங்கள் சுயநலம் ஈடேற நான் இடம்  கொடுக்க மாட்டேன். உங்களால் ஆனதைப் பார்த்துக் கொள்ளுங்கள். கடந்து போனவைகளுக்காக நீங்கள் என்னிடம் மன்னிப்புக் கேட்டுக் கடிதத்தில் எழுதி யிருப்பவை யெல்லாம் வெறும் பாசாங்கு என்பதைக் கூடப் புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு நான் ஒன்றும் அறிவுகெட்டவள் இல்லை. என் வாழ்க்கையில் இனிமேல் நீங்கள் குறுக்கிடுவதை நான் பொறுத்துக்கொள்ள மாட்டேன். உங்களிடமிருந்து விவாகரத்துப் பெறுவதென்று நான் தீர்மானித்திருக்கிறேன். அதற்கான வக்கீல் நோட்டீஸ் விரைவில் உங்களை வந்தடையும். அதுதான் என்னிடமிருந்து உங்களுக்கு வரவிருக்கும் அடுத்த தபாலாக இருக்கும். எனது மனநிலையைப் புரிந்துகொள்ளாமல் மேலும் மேலும் எனக்குக் கடிதம் எழுத வேண்டாமென்று கேட்டுக் கொள்ளுகிறேன். இதை மீறி எழுதினால், உங்கள் கடிதங்கள் பிரிக்கப்படாமலே உங்களை வந்தடையும் என்பதை யறியவும். …’

 கமலத்தின் காது மடல்கள் சிவந்தன. ‘என்ன திண்ணக்கம்! எவ்வளவு அதிகப் பிரசங்கித்தனம்!’ – கமலம் கடிதத்தைக் கிழித்துச் சன்னல் வழியாகச் சுக்கல்களை வெளியே வீசிவிட்டு மறுபடியும் மகளின் அறைக்குப் போனாள்.

 “என்னடி? என்ன நினைச்சிண்டிருக்கே உன் மனசிலே? பத்து மாசம் சுமந்து, பெத்து, வளர்த்த தாயார்க்காரி சொல்றேண்டி. எம் பேச்சைக் கேளு. பெத்த தாயார் பொண்ணுக்கு நல்லதுதாண்டி சொல்லுவா…”

 “அம்மா! இந்த உபதேசமஞ்சரிக் கெல்லாம் வேற ஆள் பாரு. லெட்டரைக் கொண்டா, சொல்றேன் …”

 “கிழிச்சுப் போட்டுட்டேன் …”

 பானுமதி அவளை எரிச்சலுடன் பார்த்தாள். “கிழிச்சுப் போட்டுட்டா வேற எழுதத் தெரியாதா எனக்கு?”

 “எழுதுவேடி, எழுதுவே. அதை விட மோசமா எழுதினாலும் எழுதுவே. படிக்க வெச்சிருக்கேனோல்லியோ? எம்மேலதான் தப்பு. உன்னைப் படிக்க வெச்சிருக்கப்படாது.”

 “அது ரொம்ப நன்னாருந்திருக்கும். நீ சொல்றதும் ஒரு விதத்துல சரிதான். படிக்காம இருந்திருந்தா நாளையச் சோத்துக்கு என்ன வழிங்கிற பயத்துல – நீ அப்பாவுக்குப் பணிஞ்சு போனியே, அதே மாதிரி – நானும் இவருக்குப் பணிஞ்சு போயிருப்பேன்.”                                            “பானு! செத்துப் போயிட்ட ஒரு மனுஷரைப் பத்திக் கன்னா பின்னான்னு பேசாதே.”

“மனுஷா செத்துப் போயிட்டதால அவா  பண்ணின அக்கிரமங்களும் செத்து போயிடுத்துன்னு ஆயிடுமா? … அம்மா! உன்னை ஒண்ணு கேக்கறேன், பதில் சொல்றியா?”

 ‘இவள் இன்னும் குத்தலாக என்ன பேசித் தன்னைப் புண்படுத்துவாளோ’ என்கிற திகிலுடன் கமலம் மகளைப் பார்த்தபடி ஒன்றும் சொல்லாமல் இருந்தாள்.

  “உன்னை எட்டு வருஷம் தள்ளி வெச்சுக் கொடுமைப்படுத்தின அப்பாவைத் தேடிண்டு போய், அவர் கால்ல விழுந்து வாழ்ந்தியே, எதுக்காக? வயித்துப் பிழைப்புக்கு வழி இல்லாததாலதானே! ஓட்டல்ல வேலை செஞ்சிண்டிருந்த தாத்தா செத்துப் போனதும், நாளையச் சோத்துக்கு என்ன வழின்னு தெரியாத நிலையிலே, அப்பாவைத் தேடிண்டு ஓடினே. அதுக்கு முன்னாடியும் எத்தனையோ தரம் போய்ப் போய்க் கெஞ்சினதைப் பத்தி நீயே சொல்லியிருக்கே. என்னத்துக்காக?”

 “என்னத்துக்காகவா? ஒரு பொண்ணு  இருக்க வேண்டிய இடம் அவ புருஷன் வீடுதாண்டி. அதுக்காக. … வேற எதுக்காகவும் இல்லே.”

 “அம்மா! பொய் சொல்லாதே. நீயே ஒரு தரம் சொல்லி யிருக்கே எங்கிட்ட. ‘தாத்தாவும் போயிட்டதுக்கு அப்புறம் தெரிஞ்சவா வீட்டிலே ஏதேதோ எடுபிடி வேலைகள் பண்ணி வாழ்க்கை நடத்தலாம்னு பார்த்தேன். ரெண்டு மாசத்துக்கு மேல தாக்குப் பிடிக்க முடியல்லே. என் அழகும் சின்ன வயசும் பல ஆண்பிள்ளைகள் மனசைக் கெடுத்து எனக்கும் கெடுதல் பண்ணப் பார்த்தது. அதனால மட்டுமில்லாம, அடுத்த வேளைச் சாப்பாட்டுக்கு என்ன வழிங்கிற மலைப்பிலே நான் உன் அப்பா கால்லே விழுந்து அவரோட வாழத் தொடங்கினேன்’னு! இல்லியா?”

 “சொன்னேன் தான். ஆனா அதையெல்லாம் ஏன்தான் புத்திகெட்டுப் போயி உங்கிட்ட சொன்னேனோன்னு இப்ப வருத்தப்படறேண்டி …”

 பானுமதி சிரித்தாள் “ஒரு வேளை நீயும் படிச்சவளாய் இருந்தா – என்னாட்டமா ஒரு ஆஃபீஸ்ல எண்ணூறு ரூபாய் சம்பளம் வாங்கறவளாய் இருந்தா – ஆம்படையான் எப்படிப்பட்டவனாய் இருந்தாலும் அவன்தான் தெய்வம்னு போயிருக்க மாட்டியோ என்னவோ?”

 கமலம் உண்மையில் வாய் மூடிப் போனாள். அந்தக் கேள்வியின் உண்மை அவள் மனசைக் குத்தியதுதான் அதற்குக் காரணம். கமலம் உண்மையாகவே அடுத்த வேளைச் சோற்றுக்கு என்ன வழி என்கிற மலைப்பில்தான் அவரைத் தேடிக்கொண்டு போனாள். கட்டிய மனைவியைத் தள்ளி வைத்துவிட்டு எவளுடனோ வாழ்ந்து கொண்டிருந்த அவர் இவள் அவரைத் தேடிக்கொண்டு போன போது அந்த வைப்பாட்டி இறந்து போயிருந்த நிலையில், அவளை ஏற்றுக்கொள்ள முன்வந்தார்.

அதற்கு முன்னால்  பசிக்கொடுமையால் தான் பட்ட துன்பங்கள் எல்லாம் அவளுக்கு ஞாபகம் வந்தன. ‘மகள் கேட்பது சரிதானோ?’ என்று இப்போது தன்னைத் தானே கேட்டுக்கொண்டு அவள் மலைப்பில் ஆழ்ந்து மவுனமாக இருந்தாள்.

 கல்யாணம் ஆன கையோடு தன்னைக் கூட்டிப் போகாமல், பிறகு வந்து கூட்டிப் போவதாகச் சொல்லிவிட்டு, அவர் வராமலே இருந்த நிலையில், அவள் தகப்பனார் எத்தனை தரம் அவரைப் போய்ப் பார்த்தார்! அவர் எவளையோ வைத்துக் கொண்டிருப்பதாகத் தாம் கேள்விப்பட்டதை அவளிடம் சொல்லாமல், அவள் தகப்பனார் எத்தனை காலம் அதை ரகசியமாக வைத்திருந்தார்! அப்புறம், யாரோ ஓர் உறவுக்காக்  கிழவியின் வாயிலாக அந்த ரகசியம் அவளை வந்தடைந்த போது அவள்தான் எப்படித் துடித்துப் போனாள்!

       முதலில் வருத்தம் வந்து, பின்னர் அது ஆத்திரமாக மாறியதும் இப்போது அவளுக்கு ஞாபகம் வந்தது. ஒருவேளை பானு மாதிரித் தானும் படித்தவளாகவும், நாலு காசு சம்பாதிப்பவளாகவும் இருந்திருப்பின், அடிக்கடி கணவனைப் போய்ப் பார்த்துக் கெஞ்சியிருந்திருக்க மாட்டாளோ என்கிற எண்ணம் முதன் முதலாக அவள் மனத்தில் தோன்றியது.

       “என்னம்மா பேசாம இருக்கே?”

        “ … பானு! நீ கேக்கற கேள்வி ரொம்ப நியாயமான கேள்வியாவே இருக்கட்டும். ஆனா சோறு மட்டுமே வாழ்க்கையிலே லட்சியம்கிறது சரியில்லே. ஒரு பொண்ணு தன் புருஷனோட  வாழறதுதான் அவளுக்கு நல்லதுங்கிறது அனாதி காலந்தொட்டு இருந்திண்டிருக்கிற வழக்கம். …”

       “இருக்கட்டும். ஆனா, புருஷன் புருஷனா யிருக்கணும். அட் லீஸ்ட், மனுஷனாவாவது இருக்கணும். இல்லியா?”

       “நீ மன்னிக்கலாம், இல்லியா?”

       “மன்னிக்கலாம் … யாரை? உண்மையாய் வருத்தப்பட்டு மன்னிப்புக் கேக்கறவாளை. என் மாமனார் மனசு வெறுத்துப் போய்த் தன் சொத்தை யெல்லாம் என் பேருக்கு எழுதி வெச்சுட்டதால, இப்ப திருந்திட்டதாச் சொன்னா நான் நம்புவேனா? அந்தப் பணத்துக்கு ஆசைப்பட்டுன்னா அந்தக் கை அப்படி எழுதறது இப்ப? ஆறு வருஷமாய் இல்லாத கரிசனம் இப்ப என்ன வந்தது? ஆஃபீஸ்ல ஏதோ தப்புத் தண்டாப் பண்ணி வேலையையும் போக்கிண்டாச்சு. எண்ணூறு ரூபாய் சம்பாதிக்கிற பொண்டாட்டி ஞாபகம் வரத்தானே செய்யும்? …”

      கமலம் திகைத்துப் போய் நின்றுகொண்டிருந்தாள். அவளால் பேச முடியாமற் போயிற்று.

      பானுமதி எழுந்தாள். அவள் வெளியே புறப்படத் தயாரானதைத் தெரிந்துகொண்ட கமலம், “பானு! இது சின்ன விஷயம் இல்லே. வாழ்க்கைப் பிரச்னை.  ஒரு கோபத்திலே உணர்ச்சி வசப்பட்டுத் தப்புப் பண்ணிட்டு, அப்புறம் காலமெல்லாம் கண்ணைக் கசக்கிண்டு நிக்காதேடி … உன் சிநேகிதி மாலா கூடக் கிட்டத்தட்ட உன் மாதிரி நிலைமையிலே தாலி கட்டினவனை மன்னிச்சுட்டு அவன் கூடப் போய் வாழ்ந்துண்டு இருக்கல்லியா? இதிலே கௌரவப் பிரச்னை என்ன வந்தது?” என்று மறுபடியும் தொடங்கினாள். அவள் கண்கள் நிறைந்திருந்தன.

       பானுமதி ஆயாசத்துடன் பெருமூச்சு விட்டவாறு உட்கார்ந்தாள்: “அம்மா! ஒண்ணு சொல்றேன், கேட்டுக்கோ. காலம் மாறிண்டிருக்கு. நீ வாழ்ந்த காலம் வேற, நாங்க வாழற காலம் வேற. என் மாதிரி சில பொண்ணுகள்தான் இப்படி தைரியமான முடிவுக்கு வரா. மத்தவா மாறல்லே. பரம்பரை பரம்பரையாப் பெண்கள் கிட்ட உன் மாதிரிப் பெரியவா வளர்த்து வந்திருக்கிற பயம், கோழைத்தனம், சமூகத்தைப் பார்த்து நடுங்கறது, கணவனே தெய்வம்னு நினைக்கிறது இது மாதிரியான குணங்கள்ளாம் இன்னும் நம்ம பெண்களை விட்டுப் போகல்லே. அதுக்கு ரொம்ப நாள் ஆகும். ஆனா, என்னை மாதிரியும் சில பேர் நடக்கத் தொடங்கியிருக்கா. என் மாதிரியான பெண்கள் தொகை அதிகமாகாம இருக்கணும்னா, அதுக்கு ஒரே வழி ஆண்பிள்ளைகள் திருந்தணும். திரேதா யுகத்து உரிமைகளை யெல்லாம் அவா விட்டுடணும். எனக்கு அவரோட இனிமே மனசு ஒட்டாது. மாலா பயந்தங்கொள்ளி. அதனாலே சமூகத்துக்குப் பயந்துண்டு அவ புருஷன் கிட்ட போயிட்டா. மனசு ஒட்டிப் போயிருக்கான்னு மட்டும் நினைக்காதே. மனசு ஒட்டாத உறவு என்ன உறவும்மா? அவளே எங்கிட்ட அதைப் பத்திச் சொல்லியிருக்கா. உள்ளூர அவளுக்கு அவனைப் பிடிக்கல்லே. இருந்தாலும் போயிருக்கா. ஆனா, அது மாதிரி நான் போக மாட்டேன்…”

       “அப்படின்னா இப்படியே இருந்துட்றதுன்னு இருக்கியா?”

       பானுமதி பதில் சொல்லவில்லை. அவளுக்குச் சந்திரனின் ஞாபகம் வந்தது. அவள் விவாகரத்துப் பெற்றதும் அவளை மணக்கப் போகிற சந்திரன். அம்மா ஒப்புக்கொள்ளுவாளா? நிச்சயமாக மாட்டாள். இதற்கே அதிர்ந்து போய் அழுதுகொண்டிருக்கிறவள் இடிந்து போய்விட மாட்டாளா?

       அவள் என்ன செய்வதாக இருக்கிறாள் என்பதைப் பற்றி இப்போது அவளிடம் சொல்லுவது சரியாகாது. அதற்குரிய நேரம் வந்ததன் பிறகு பக்குவமாகச் சொல்லிக்கொண்டால் போயிற்று. …

       பெரும்பாலான ஆண்கள் இன்னமும் தங்கள் நியாயமில்லாத பழைய உரிமைகளை வைத்துக்கொண்டு பெண்களைப் படுத்திக் கொண்டிருக்கிற நிலையில் சந்திரனைப் போன்றவர்களும் சிறுகச் சிறுகத் தோன்றத் தொடங்கியிருப்பதை அவள் நினைத்துப் பார்த்தாள். இனித் தன்னையொத்த பெண்களுடையவும், சந்திரனைப் போன்ற இளைஞர்களுடையவும் எண்ணிக்கை கால ஓட்டத்தை ஒட்டிக் கொஞ்சங் கொஞ்சமாகப் பெருகும் என்று எண்ணி அவள் தனக்குள் மகிழ்ச்சியுடன் சிரித்துக்கொண்டாள்.

       “என்னடி, பதிலைக் காணோம்? உன் அம்மா என்னிக்கும் சாசுவதமா? எனக்கும் வயசாயிண்டிருக்கு. வர வர, உடம்பு தள்ளவே இல்லே. எனக்கு அப்புறம் உன் வாழ்க்கை என்னவாகும்கிறதையும் கொஞ்சம் யோசிச்சுப் பாரு. …”

       “உனக்கென்னம்மா இப்ப? எல்லாம் நன்னாத்தான் இருக்கே. சும்மா என்னைப் பயமுறுத்தாதே. …”

       “விளையாட்டுப் பேச்சை நிறுத்திட்டு பதில் சொல்லு என் கேள்விக்கு …”

       “நீ பயப்பட்ற மாதிரி ஒண்ணும் ஆகாது. அப்படியே ஆனாலும், முன்னெ மாதிரி நிலைமை இப்ப இல்லே. பெண்களுக்குன்னு நிறைய ஹாஸ்டல்கள்லாம் இருக்கு. நானும் ஒரு ஹாஸ்டல்ல இருந்துப்பேன். தயவு செஞ்சு இனிமே இதைப் பத்திப் பேசாதே. என் முடிவை ஒரு நாளும் நான் மாத்திக்கிறதாய் இல்லே. தெரிஞ்சுதா? வேற ஏதாவது இருந்தா பேசு. … அது சரி, இன்னிக்கு என்ன டிஃபன் பண்ணப் போறே?”

        பேச்சின் முடிவில் மகள் கேட்ட கேள்வி கமலத்தின் ஆத்திரத்தை மிகுதியாக்கிற்று. ‘எவ்வளவு திமிர் பிடிச்சவ இவதான்! என்ன அலட்சியம்!’ – கமலம் பதில் சொல்லாமல் பானுமதியை முறைத்தாள்.

       பானுமதி சிரிப்பை அடக்கிக்கொண்டது கமலத்துக்கு வெளிப்படையாய்த் தெரிந்ததும், அவள் கண்கள் சிவந்து போயின.

       “ … நீ பெண் ஜென்மமே இல்லேடி. ஒரு சொட்டுக் கண்ணீர் கூட விடல்லியே! உன்னையும் பெத்தேனே!”

       “அம்மா! பொய் சொல்லாதே. கல்யாணம் ஆன புதுசுலே உன் மாப்பிள்ளையுடைய சுய ரூபம் தெரிய வந்ததும் நானும் அழுதிருக்கேன். நான் அழுதா நீ அழுவேங்கிற ஞாபகத்தோடேயே என்னைக் கட்டுப்படுத்திக்க முடியாம அழுதிருக்கேன். நிறைய நாள் அழுதிருக்கேன். உனக்கே அது தெரியும். நீ பார்க்காம எத்தனையோ நாள் அழுதிருக்கேன். இப்ப என் மனசு கல்லாயிடுத்து. ஆறு வருஷம் பொறுமையா யிருந்தேன். என் மாமனாருக்கு என் மேலே இருந்த பிரியம் கூட உன் மாப்பிள்ளைக்கு இல்லே. … இன்னொண்ணு சொல்லட்டுமா?”

       கமலம், ‘இவள் இன்னும் என்ன சொல்லித் தன்னைக் குத்துவாளோ’ என்று அஞ்சியவாறு அவளைப் பார்த்தபடி இருந்தாள்.

       “வயித்துப் பிழைப்புக்காக ஒருத்தரை அண்டி இன்னொருத்தர் வாழறதுங்கிற நிலைமையிலேதான் அடிமைத்தனம்கிற கேவலமே உருவாறது. எல்லாரும் சமம்கிற சின்ன நியாயத்தைப் பெரிய மனசோட ஏத்துண்டு எல்லாருமே வாழத் தொடங்கினா, இந்த உலகம் சொர்க்கமாயிடும். சுருக்கமாச் சொன்னா, ஒவ்வொருத்தரும் அவாவா சொந்தக் கால்களால நிக்க முடிஞ்சா இது மாதிரிக் கொடுமைகளை எதிர்க்கிற தைரியம் சிறுகச் சிறுகவாவது வரும். நீ உன் சொந்தக் கால்களால நிக்க முடியாமதான் அப்பாவைத் தேடிண்டு – உன் மானம், மரியாதை, கௌரவம் இதையெல்லாம் மூட்டை கட்டி வெச்சுட்டு – போனேங்கிறதை நினைச்சுப் பார்த்தா என் கோபம் உனக்குப் புரியும். …”

      மேலும் மகள் பேசியதைக் கேட்கப் பிடிக்காமல் அளவு கடந்த ஆத்திரத்துடன் கமலம் விருட்டென்று அந்த அறையை விட்டு வெளியேறினாள். அவள் அப்போது விட்ட பெருமூச்சு இரைந்த சீறலாகப் பானுமதியின் செவிகளில் புகுந்தது.

       ‘இவ பண்ணப் போற தப்பை இவ கைவிட்றதுக்கு என்ன வழி?’ என்கிற கவலையால் தாய் பெருமூச்சு விட்டதை எண்ணிப் பாராத மகள்,  ‘இன்னும் பழைய யுகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிற இந்த அம்மாவின் மனப்போக்கை மாற்றித் தான் செய்வது சரிதான் என்பதை இவளுக்கு உணர்த்த என்ன வழி?’ என்கிற கேள்வியால் விளைந்த ஆயாசத்தில் தானும் ஒரு பெருமூச்சு விட்டாள். …

…….

author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *