சன்னல்

This entry is part 4 of 15 in the series 17 அக்டோபர் 2021

ஜோதிர்லதா கிரிஜா

(குங்குமம் 2.9.1988 இதழில் வந்தது. கவிதா பப்ளிகேஷன்ஸ்-இன் மகளுக்காக எனும் தொகுப்பில் இடம் பெற்றது.)

       எதிர் வீட்டு மாடி சன்னல் எப்போதும் திறந்தே இருந்தது. முன்பெல்லாம் அவ்வாறு திறந்திருந்தது குறித்துச் சங்கரகிருஷ்ணனுக்கு மறுப்பு ஏதும் கிடையாது. ஆனால் தம் புது மனைவியைக் கூட்டி வந்து வாழத் தொடங்கியதற்குப் பிறகு அந்தக் கிரிசை கெட்டவன் தன் வீட்டு மாடியறை சன்னலைத் திறந்தே வைத்திருந்ததை அவரால் தாங்க முடியவில்லை. அவனது செயலில் தெரிந்த பண்பின்மை மட்டுமே அதற்குக் காரணமன்று என்பது அவரது உள் மனத்துக்குத் தெரிந்தே இருந்தது. அதைப் பண்பின்மை என்று கூடச் சொல்லிவிட முடியாது என்பதை அவர் அறிந்தே இருந்தார். ‘உன் வீட்டுப்பக்கம் யாரும் பார்க்கக்கூடாது என்றால் உன் வீட்டுச் சன்னலை நீ மூடி வைக்க வேண்டியதுதானே’ என்று அந்தக் கிரிசை கெட்டவன் கேட்கக் கூடும். பார்த்தால் ரொம்பவும் புத்திசாலித்தனம் நிறைந்த இளைஞனாகத் தெரிந்தான். அப்படியே கேட்டாலும் கேட்பான்.

       தம் மாடியறைச் சன்னலை அவர் மூடிவிடுவார்தான். ஆனாலும், படுக்கையறையாகப் பயன்படுத்திய அந்த அறையில் ஒரே ஒரு சன்னல் மட்டுமே இருந்தது. அதை மூடிவிட்டால் குமையும். அதிலும், வெயிற்காலத்தில் நெருப்புக் கோளத்தைப் போல் தகிக்கும். எனினும், எப்படி அவனிடம் அது பற்றிப் பேசுவது என்று அவருக்குத் தெரியவில்லை.  அவன் வீட்டு மாடியறையில் இருப்பதும் ஒரே சன்னலாயின், அவன் ஒத்துக்கொள்ள மாட்டான். ஒரு திரை தைத்து மாட்டி விடுதலே பிரச்சனையைப் பெரும் அளவுக்குச் சரி செய்யும்  என்று அவர் நினைத்தார்.

        “கல்பகம்! கல்பகம்!” என்று அவர் இரைந்து கூப்பிட்டார்.

        “இதோ வந்துட்டேங்க!” என்ற பதில் குரலுக்குப் பிறகு இரண்டு நிமிடங்களுக்குப் பின்னர் அவர் இளம் மனைவி கல்பகம் காபியுடன் விரைந்து வந்தாள். அவள் சமையலறையிலிருந்து கிளம்பியதிலிருந்து தமது அறையை அடையும் வரை அவரது பார்வை அவளை விட்டு நீங்காதிருந்தது. அவள் பார்வை எதிர்வீட்டுச் சன்னல் பக்கம் போகிறதா என்று அவர் கவனமாய்க் கண்காணித்தார். அவள் பார்க்கவில்லை. அவள் தலை தாழ்ந்தே இருந்தது

       அடுத்து, அவர் பார்வை எதிர்வீட்டுச் சன்னல்  பக்கம் சென்றது. அழகும் உடற்கட்டும் உள்ள அந்த இளைஞன் சன்னலுக்குப் பக்கத்தில் உட்கார்ந்து நாளிதழ் படித்துக்கொண்டிருந்தான். முகம் பக்கவாட்டில் தெரிந்தது. எதிரே இருந்தால் நாளிதழ் முகத்தை மறைத்து அதனால் தம் வீட்டுச் சன்னலைப் பார்க்க முடியாமற்போகலாம் என்பதால்தான் அவன் பக்கவாட்டில் உட்கார்ந்து கொண்டிருந்தான் என்று அவர் எண்ணினார். படாரென்று சன்னலை அறைந்து சாத்த வேண்டும் போல் அவருள் ஆத்திரம் புறப்பட்டது. ஆனால் அடக்கிக்கொண்டார்.

         “என்னங்க, ஒரு மாதிரி இருக்கீங்க?” என்றபடி காபியை அவள் அவர் கையில் கொடுத்தாள்.

        தமது வழக்கப்படி அவள் கையையும் சேர்த்துப் பிடித்துக் காபியை வாங்கிக்கொண்ட அவர் ஓர் இளைஞனுக்குரிய உற்சாகத்தைத் தமக்குள் தோற்றுவித்துக்கொண்டு அவளைப் பார்வையால் விழுங்கிக்கொண்டே காபியைப் பருகினார். காபித் தம்ப்ளருடன் அங்கிருந்து நீங்குவதற்கு முன்னால் அவள் பார்வை தற்செயலாக எதிர் வீட்டுச் சன்னல் பக்கம் போயிற்று. இதைக் கவனித்துவிட்ட சங்கரகிருஷ்ணனுக்குக் கணப்பொழுதில் முகம் விகாரமாயிற்று.

        அவர் உடனுக்குடனாய்த் தலை திருப்பி எதிர் வீட்டுப் பக்கம் பார்த்தார். அந்த இளைஞனின் பார்வையும் அவர் பார்வையும் சந்தித்துக்கொண்டன. அவன் முகத்தில் இலேசான சிரிப்பு இருந்ததாக அவருக்குத் தோன்றியது. அவர் முகக்கடுப்புடன் கல்பகத்தின் பக்கம் பார்வையைச் செலுத்திய போது அவள் அங்கு இல்லை. போய்விட்டிருந்தாள்.

       அவர் மறுபடியும் எதிர்வீட்டுப் பக்கம் பார்த்த போது இளைஞன் படிப்பதில் முனைந்திருந்தான். அவருள் சகிக்க மாட்டாத எரிச்சல் மூண்டு உச்சியிலிருந்து அடிக்கால் வாரை தகித்தது. தாம் வெளியே போன பிறகு,  வேலைவெட்டி எதுவும் இருப்பதாய்த் தெரியாத அந்தப் பொறுக்கிப் பயல் தம் வீட்டுச் சன்னல் பக்கமே பார்த்துக் கொண்டிருப்பானோ என்கிற ஐயம் அவருள் எழுந்து அவரை வதைக்கத் தொடங்கியது.

       கல்பகத்தின் பார்வை மாடிப்பக்கம் போனது தற்செயலாகவா, இல்லாவிட்டால் பார்க்கும் எண்ணத்துடன் அவள் அவன் பக்கம் நோக்கினாளா என்பதை அவரால் திட்டவட்டமாய் ஊகிக்க முடியவில்லை. கையாலாகாத கணவன்மார்களின் இளம் மனைவிகள் வேற்றாளுடன் தொடர்பு வைத்துக்கொள்ளும் கதைகள் எல்லாம் அவருக்கு ஞாபகம் வந்து அவரது முகத்தில் வேர்வைத் துளிகளை எழச் செய்தன.

       அந்த இளைஞனைப் பற்றி விசாரிக்க வேண்டும் என்று உடனே அவர் முடிவு செய்தார். கல்பகத்தையும் அவள் அறியாத முறையில் வேவு பார்க்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டார். …

       கீழ்த் தளத்தில் வீட்டுக்கார அம்மாள் இருந்தாள். பார்வைக் குறைவானவள். அறுபது வயதுக்கு மேல் இருக்கும். அவளைப் பார்த்து ஒரு வார்த்தை சொல்லி வைக்கலாமா என்கிற அசட்டுத்தனமான யோசனை கூட அவருக்கு வந்தது. அது சரியாக இராது என்று அதைக் கைவிட்டார். தாமேதான் கவனிக்கவேண்டும். அவள் தம்முடைய மனைவி. அந்தப் பொறுக்கிப் பயல் தம் மனைவியை உற்றுப் பார்த்துக்கொண்டிருப்பவன். அதில் ஊரார் தலையீட்டுக்கோ கண்காணிப்புக்கோ தேவை இல்லை.

       … சற்றுப் பொறுத்து அவர் எதிர்வீட்டுப் பக்கம்  பார்த்த போது, அவன் சன்னல் கம்பிகளை இரு கைகளாலும் பற்றிக்கொண்டு தெருவை நோக்கிக்கொண்டிருந்தான். அவரும் தெருவில் குனிந்து பார்த்தார். நாலைந்து இளம் பெண்கள் தெருவில் நடந்து போய்க்கொண்டிருந்தார்கள். அவர்களைத்தான் அவன் பார்க்கிறான் என்று அவர் முடிவுகட்டினார்.  இள வயதில் பெண்களைத் துரத்தியதும், அதனால் வம்புகளில் சிக்கியதும், ஒருத்தியின் அண்ணன்காரன் கையால் அடி வாங்கியதும் அவருக்கு அறவே மறந்து போக, ‘பொறுக்கி ராஸ்கல்’ என்று அந்த இளைஞனை அவர் முணுமுணுப்பாய்த் திட்டினார்.

       வேலையிலிருந்து ஓய்வு பெற இன்னும் முன்று ஆண்டுகள் இருந்தன. அது வரையில் இளம் மனைவியைக் கட்டிக் காத்துவிட்டால், அதற்குப் பிறகு எந்தப் பொறுக்கியும் அவளிடம் வாலாட்ட முடியாது. அவர்தான் ஒரு சிங்கம் மாதிரி – அல்லது காவல் நாய் மாதிரி – வீட்டிலேயே பழி கிடப்பாரே!

        அலுவலகத்துக்குப் புறப்படும் போது, என்றுமில்லாத வழக்கமாய், “கதவை நல்லாச் சாத்திக்க. சன்னலைச் சாத்திக்க. திறக்காதே!” என்றார்.                    “அய்யய்யோ! காத்தே வராதே?”                                                    “வராட்டி போகுது. செத்தா போயிறுவே? அந்த எதிர் வீட்டுப் பொறுக்கிப்பய இங்கேயே பார்த்துக்கிட்டிருக்கான். வேலைவெட்டி இல்லாத வெறும் பய! …”

        கல்பகம் திகைப்புற்றதை ஓரத்து விழிகளால் பார்த்தார். அவளது வாடிப்போன முகம் அவருள் ஒரு குரூரமான நிறைவைத் தோற்றுவிக்க, அவர் உதடுகள் சிறு முறுவல் கொண்டன.

        “எனக்குத் தெரிஞ்சு அப்படி யெல்லாம் அந்தாளு பார்க்கிறதில்லீங்களே? ஒருக்கா தற்செயலாத் திரும்பினப்போ பார்த்திருப்பான்.”

        அவள் சொன்ன பதிலில் தன்னைக் காத்துக்கொள்ளும் தற்காப்பு மட்டுமே இல்லை என்பதாகவும், எதிரிவீட்டு இளைஞனுக்கு வக்காலத்து வாங்கும் பரிவும் அதில் தொனித்ததாகவும் அவருக்குத் தோன்றியது.

         “இன்னிக்குக் காலையில எனக்குக் காபி கொணாந்து கொடுத்தியில்ல? அப்ப நீயே பாத்தே.”                                                                     “என்னது!”                                                                      “அதாவது என்ன சொல்றேன்னா, தற்செயலா நீ அந்தப் பக்கம் பார்த்தப்ப, அவன் நம்ம வீட்டுப் பக்கம் பார்த்ததை நீ பார்த்தேன்னு சொல்ல வறேன் …”

        தம் சொற்கள் மனைவியைப் பாதித்துவிட்டன என்கிற நிச்சயம் ஏற்பட்டவுடன் அவர் கால்களில் செருப்புகளைத் திணித்துக்கொண்டு இறங்கலானார். அவள், அவர் காதுபட, சன்னல்களை இரைந்து சாத்தி மூடினாள். அவர் சிரித்தபடி தெருவில் இறங்கினார். இளைஞன் இன்னும் தெருவில் பார்த்துக்கொண்டிருந்தான். ஆனால், அந்நேரத்தில் தெருவில் பெண்கள் யாரும் நடந்து கொண்டிருக்கவில்லை. ‘எவளாவது வர மாடாளான்னு பார்க்கிறானாயிருக்கும்’ என்று நினைத்தபடி வெறுப்புடன் எச்சில் உமிழ்ந்துவிட்டு நடந்தார். …

       அன்றிரவு அவராலேயே சன்னலை மூடிவிட்டு உள்ளே இருக்க முடியவில்லை. திறந்து வைத்தார். ஒவ்வொரு நாளும் அவர் புறப்படும் முன் கல்பகம் சன்னலை அறைந்து சாத்துவது வழக்கமாயிற்று.

       ஒரு வாரம் கழிந்த பிறகு, “அந்தப் பய இந்தப் பக்கம் பார்க்கிறானா?” என்று மனைவியை விசாரித்தார்.

        “சன்னலைத்தான் சாத்தியே வச்சிருக்குறேனே?”                             “என்னயக் கல்யாணம் கட்டிக்கிட்டதுல உனக்கொண்ணும் வருத்தமில்லியே?”                                                                  “என்னங்க இப்படியெல்லாம் கேக்குறீங்க? வேளாவேளைக்குச் சோறு கிடைக்குது. எங்கப்பாரு வீட்டில நான் அரை வயித்துக்கில்ல சாப்பிட்டுக்கிடிருந்தேன்? பட்டுப் படவைங்கிறதை நான் தொட்டாவது பார்த்ததுண்டா? எம்புட்டு நகைங்க போட்டிருக்குறீங்க?”                            “எல்லாம் சரிதான்.  …. ஆனா …”                                                     “வேணாங்க. அதைப் பத்திப் பேசாதீங்க …”

        கல்பகத்தின் கண்கள் பொங்கிவிட்டன. அதைப் பற்றி அவள் பேச விரும்பாதது தம் மனத்தைப் புண்படுத்தாதிருக்கும் பொருட்டு அன்று என்பதையும், அவளது ஏமாற்றம் விவாதிக்கப்படுவதை அவள் தவிர்க்க விரும்பினாள் என்பதையும் புரிந்துகொள்ளாத அந்த முக்கால் கிழவர் திருப்தியுடன் படி இறங்கிப் போனார்.                                                                                                                                       அன்று மாலை தெருமுனையில் வரும்போதே தம் வீட்டு மாடி சன்னல் திறந்திருந்ததை அவர் பார்த்துவிட்டார். அவருள் ஒரு பொங்குதல் ஏற்பட்டது. ஓட்டமும் நடையுமாய் வீட்டையடைந்தார்.

       சன்னலைப் பற்றி உடனே கல்பகத்திடம் கேட்காமல், காபி குடித்த பிறகு, “சன்னலை ஏன் திறந்து வெச்சே? நாந்தான் படிச்சுப் படிச்சுச் சொல்லி இருக்கேனில்ல?” என்றார். குரலில் சிறிது கடுமை கலந்திருந்தது.                        “அவன் வீட்டில இல்லீங்க. வெளியே போயிட்டான்.”                           “அவன் வெளியே போனது உனக்கேப்படித் தெரியும்?” என்று கேட்டுவிட்டு ஒரு வெற்றிவீரத்தனத்தோடு மனைவியை ஏறிட்டார்.                “கீழ் வீட்டுப் பாட்டி கூப்பிட்டாங்க. போனேன். அப்ப அவன் தெருவில் இறங்கி நடந்ததைத் தற்செயலாப் பார்த்தேன்.”                                         “அவன் உன்னைப் பார்த்தானா?”

        மனசுக்குள் பல்லைக் கடித்த கல்பகம், “அவரு பாட்டுக்குத் தலை குனிஞ்சுக்கிட்டுப் போனாருங்க,” என்றாள்.

        “அவரு என்ன அவரு? போக்கிரிப்பய. அவன்னே சொல்லு.”                        “ ……. ”                                                                   “அந்தக் கிழவி எதுக்கு உன்னைக் கூப்பிட்டிச்சு?”                             “இன்னைக்கு வெள்ளிக்கிழமையில்ல? வழக்கம் போல வெத்திலை பாக்கு வாங்கிக்கக் கூப்பிட்டாங்க. போனேன்.“                                          “ஓகோ.”

        காபித் தம்ப்ளரைத் தம்மிடமிருந்து பெற்றுக்கொண்ட போது கல்பகத்தின் முகம் இறுகி இருந்ததைக் கவனித்தார். தமது பேச்சு அவளுக்குப் பிடிக்கவில்லை என்பதாக அந்த இறுக்கத்துக்குப் பொருள் செய்துகொண்டார்.

        மறு நாள் வேண்டுமென்றே பிற்பகல் மூன்று மணிக்கு வீடு திரும்பி ஓசைப்படாது படிகளில் ஏறினார். சன்னல் திறந்திருந்ததும் எதிர்வீட்டு இளைஞன் அதை வெறித்துக்கொண்டிருந்ததும் அவருக்கு வெறியேற்றி இருந்தன. ‘கழுதை … இன்னைக்கு என்ன விளக்கம் குடுக்கிறான்னு பார்க்கிறேன் …’

        அவர் கதவை இடித்தார். ஒரு நிமிடத்துக்கெல்லாம் கல்பகம் கதவைத் திறந்தாள்.          

        “ஏது இன்னிக்கு இவ்வளவு சீக்கிரம்? உடம்பு சரியில்லையா என்ன?”

        அவளது கேள்விக்குப் பதில் சொல்லாமல், “அந்தத் தடியன் இப்ப அவன் வீட்டு மாடியிலதானே இருக்கான்? எதுக்கு நம்ம சன்னலைத் திறந்து வெச்சிருக்கே?” என்று கேட்டுவிட்டுத் தம் ஆழமான பார்வையால் அவளை ஆராய முற்பட்டார்.

        “ஓ! வந்துட்டானா?”                                                          “அப்ப, அவன் வெளியில போறது வாரதையெல்லாம் பார்க்கிறதுதான் உன் வேலையா? அந்தச் சாக்கில வேற நீ அடிக்கடி மாடிப்பக்கம் பார்க்கிறயா?”

        கல்பகத்துக்கு அழுகை வரும்போலாயிற்று. உதடுகள் துடிக்கலாயின. அவளால் பேச முடியவில்லை என்பது தெரிந்தும், அது வருத்தத்தினால் இருக்கலாம் என்பது புரியாத சங்கரகிருஷ்ணன் அதை அவளது குற்ற நெஞ்சின் குறுகுறுப்பாக எடுத்துக்கொண்டார். 

        “இத பாரு. நான் கிழவனா இருக்கலாம். ஆனாலும் மானஸ்தன். நாலு பேரு கன்னா பின்னான்னு பேசற மாதிரி நடந்துக்கிட்டே …ஆமா… நான் பொல்லாதவனாயிடுவேன்.

        வரும் போல் இருந்த அழுகை இப்போது வரலாயிற்று. அவள் துடித்துக்கொண்டு அப்படியே தரையில் உட்கார்ந்து முழங்கால்களில் முகம் பதித்து அழத் தொடங்கினாள். …

        அன்று முழுவதும் அவள் கண்களைத் துடைத்தவாறே இருந்தாள். தமது ஆத்திரம் அவளுக்கு நன்றாகப் புரிய வேண்டும் என்கிற எண்ணத்தால் அவர் அவளை ஒப்புக்காகக்கூடத் தேற்றாதிருந்து விட்டார்

        … மறு நாள் அலுவலக வேலைத் தொடர்பாக அவர் வெளியூர் செல்ல வேண்டிய கட்டாயம் விளைந்தது. வேறு யாரையும் பதிலுக்கு அனுப்ப முடியாத நிலை. அவரே போயாக வேண்டும். கல்பகத்தை வீட்டினுள் வைத்துப் பூட்டிவிட்டுப் போவதென்று முடிவு செய்தார். ஆனால், சன்னலை அவள் திறந்து வைத்துக் கொள்ளுவதைத் தடுக்கத் தம்மால் அப்போதைக்கு எதுவும் செய்ய முடியாது என்று நினைத்துக் கொண்டார். சன்னலையும் உட்புறம் பூட்டுகிற முறையில் ஊரிலிருந்து திரும்பியதும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று எண்ணிக்கொண்டார்,

        “நான் வர்றதுக்கு மூணு நாளாகும். சன்னலையும் உள்ளே மூடிக்க. அந்த தடியன் ஒரு பொம்பளைப் பொறுக்கியாம். சொல்றாங்க. அதானால கதவை வெளிப்பக்கம் பூட்டிட்டுப் போறேன்.”                                               “அந்த அளவுக்கு அவன் நடந்துப்பானா?”  

    அவளது கேள்விக்குப் பதில் சொல்லாமல், சில விநாடிகளைக் கடத்திய பிறகு, “பஞ்சும் நெருப்பும் எதிரும் புதிருமா இருக்கக்கூடாது,” என்றார்.

         ‘ஆமா. நீங்க சொல்றது மெய்தான். பஞ்சும் பஞ்சும் பத்திக்காது. பஞ்சும் நெருப்பும்தான் பத்திக்கும்… நீங்க வெறும் பஞ்சுதானே?’ என்று அவள் தனக்குள் பொருமிக்கொண்டாள்.

        “சரிங்க. பால்காரன் வந்தா வெளியில பூட்டி வெச்சிருக்கிறதைப் பார்த்து உங்களைத் தப்பா நினைக்க மாட்டானா?”

        அவர் சிரித்தார்: “உன்னைப் பத்தித்தான் தப்பா நினைப்பான்.”

        அவள் அடிபட்டாலும், காட்டிக்கொள்ளாமல், “அப்ப  பால் பாக்கெட்டை சன்னல் வழியா வாங்கிக்கச் சொல்றீங்களா?” என்றாள்.

        “பாலே வாங்காதயேன். நீ வீட்டுக்குள்ள இருக்கிறதே யாருக்கும் தெரிய வேண்டாமே? சன்னலையோ சாத்திடப் போறே. நாம ரெண்டு பேருமே வெளியூர் போயிருக்கிறதா இருக்கட்டுமே?”

        “வெளியூருக்கு என்னையும் இட்டுட்டுப் போயிறுங்களேன்! உங்க கண் முன்னாடியே இருப்பேனில்ல?”

        அவர் பார்வையைக் கூர்மையாக்கிக்கொண்டு அவளைப் பார்த்தார். ஆனால், குரலில் அவள் காட்டாததாய்த் தாம் ஊகித்த கிண்டல் அவள் கண்களில் தெரிந்ததா என்பதை அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஏனெனில் அவள் தலையை மிகவும் தாழ்த்திக் கொண்டிருந்தாள்.

  • “அதுக்கு வசதிப்பட்டா உன்னை இங்க விட்டுட்டுப் போவேனா என்ன? வெளியூர்ல நான் சுத்திக்கிட்டேல்ல இருப்பேன்? உன்னை முன்ன பின்ன தெரியாத இடத்தில தனியால்ல விட்டுட்டுப் போக வேண்டி வரும்?”

        “அது சரிங்க. ஆனா நான் காபிக்கும் தயிருக்கும் என்ன செய்யிறது? பால் வாங்க வேணாம்கறீங்களே?”

                “காபியும் தயிரும் இல்லாட்டி செத்து விழுந்திடுவியோ? காபியிலயும் தயிர்லயும் மிதியலாடிக்கிட்டிருந்தவதானே நீ?”

        “ …….”

       அவள் கண்கள் கலங்கித் தொண்டை அசைந்தது. ஆனால் பேச முடியவில்லை. ‘அதுவும் சரிதான். அப்புறம், பால்காரன் சன்னல் வழியா பால் பாக்கெட்டைக் குடுக்கிறப்ப உன் கையைப் பிடிச்சானான்னு கேட்டாலும் கேக்கும் கிழம் …’ – முதன் முறையாகக் கணவனைக் கிழம் என்று எண்ணியது அவள் மனம்.

        … அன்று மாலை ஏழு மணிக்கு அவர் வெளிக்கதவைப் பூட்டிவிட்டுப் புறப்பட்டுப் போனார். …

        ரெயில் வண்டி செண்டிரலை விட்டுப் புறப்படும் நேரம் தாண்டிய பிறகு அவள் சன்னலைத் திறந்தாள். எதிர்வீட்டுச் சன்னலும் திறந்திருந்ததது. அந்தப் பையன் சன்னலுக்கு அருகே உட்கார்ந்து என்னமோ எழுதிக்கொண்டிருந்தான். கல்பகம் அவன் திரும்புவதை எதிர்பார்த்து அந்தச் சன்னலையே பார்க்கலானாள்.

…….

 

Series Navigationபொறுப்புகவிதையும் ரசனையும் – 22
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *