உஷாதீபன், (ushaadeepan@gmail.com)
அந்த வீடு அப்படியேதான் இருந்தது. யாரும் குடியிருப்பதற்கான அறிகுறி இல்லை. பாழடைந்தமாதிரியும் தெரியவில்லை. கோடவுனாகப் பயன்படுத்துகிறார்களோ என்று தோன்றியது. திரும்பவும் அந்த ஊருக்கே, தான் வருவோம் என்று நந்தினி நினைக்கவேயில்லை. எவ்வளவு முயற்சித்தும் வேறு இடம் கிடைக்கவில்லை. அதுவும் முன்பு எங்கு குடியிருந்தோமோ அந்தத் தெருவே வந்து அமைந்திருக்கிறது.. அதே வீடுதான் இல்லை. தான் பார்க்கச் சொல்லவில்லை. ஸ்கூல் பியூன் அப்படிப் பார்த்து நிச்சயித்திருந்தான். அவனுக்குத் தெரியாது தன் பழைய கதை. அது அந்தத் தெருவாக இருக்கும் என்று கொஞ்சமும் நினைக்கவில்லை. சந்தேகம் உறுதியானது முதல் மனதே சரியில்லை. எதை மறக்க யத்தனிக்கிறோமோ அதுவே வந்து வந்து முன்னால் நிற்கிறது. தாண்டவமாடுகிறது. இப்போது வலிய வந்து இங்கே மாட்டிக் கொண்டாயிற்று. தன் குற்றம் என்றும் மனதை விட்டு அகலாது போலிருக்கிறது. அந்த மனசாட்சிதான் தன்னை இங்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறதோ? காலம் தரும் பதில்.
திரும்பிப் பார்க்கக் கூடாது என்றுதான் நினைக்கிறாள். ஆனால் தலை தானாய்த் திரும்பி விடுகிறது. கால்களும் தயங்கி நின்று விடுகின்றன. அவள் இருக்கிறாள். ஆனால் அவர் இல்லை. அவன்…அவன் என்றே விளித்து, திமிர்த்து நின்ற காலம் அது. இப்போது அவர் என்று அதே மனதுக்குத் தோன்றுகிறது. இந்த மரியாதை அப்பொழுது இருந்திருக்கக் கூடாதா? வயதாகிவிட்டதனால் வந்த பக்குவமா அல்லது அந்த வாழ்க்கையை, அவருடனான வாழ்க்கையை அநியாயமாய் இழந்து விட்டோமே என்ற மனத் தாக்கமா? நீதான் பேரழகியாயிற்றே? இப்பொழுது மட்டும் மனம் ஏன் இத்தனை பின்னோக்கிப் பாய்கிறது? எல்லாம் போன பின்னால்தான் புத்தி வருகிறது. மேனகை, அப்சரஸ் என்ற நினைப்பு. அதே தோல்தான் இன்று சுருங்கி, கறுத்து, தொங்கி….நசுங்கி…பிசுங்கி…பொசுங்கி…என்னவெல்லாமோ ஆகிப் போயிற்றே…! இப்போது எவனாவது பார்ப்பானா? பின்னால் தட்டுவானா? தட்டினால்தான் அவனுக்குக் கிளர்ச்சி உண்டாகுமா?
கிடைத்ததைக் கொண்டு அப்போது திருப்தியுறத் தெரியவில்லை. கிடைத்ததின் மீது மதிப்பும் மரியாதையும் ஏற்படவில்லை. சமரசம் செய்துகொள்ளும் பக்குவமும் அமையவில்லை. என் முன்னாடி நிற்கவே தகுதியில்லை…அப்புறமில்ல வேறு பேச்சு? கண்மூடித்தனமான திமிர். அன்பை எடை போடத் தெரியவில்லை. ஆதரவை அணைத்துக் கொள்ளப் புரியவில்லை. ஒழுங்காய் அமைந்த வாழ்க்கையைப் பொத்தி அடைகாக்கத் தெரியவில்லை. உடலழகுதான் முதலாய் இருந்தது. மனதழகுக்கு மதிப்பில்லை.
மகாராணி மாதிரி உன்னை வச்சிருந்தானே….! பாவி…அநியாயமா அத்தனையையும் உதறிட்டியே?-இப்போதுதான் உறைக்கிறது அந்த வார்த்தைகள். எத்தனை அலட்சியம்? எடுத்தெறிந்த போக்கு…! கொஞ்ச அலட்சியமா பண்ணியிருக்கிறோம்? அவரை ஒரு மனிதனாகவே மதித்ததில்லையே? ஆட்டம் ஆடி ஓய்ந்தால்தான் புத்தி வருமா? இப்போது வந்து என்ன செய்ய? அவர்தான் இல்லையே? இல்லாததனால்தான் இத்தனை நியாயங்கள் மனதில் தோன்றுகிறதா? இருந்தால் இந்த நல்ல புத்தி வேலை செய்யுமா?
முன்பு குடியிருந்தவர்கள் யாரும் தென்படவில்லை. எல்லாமும் புதிய முகமாகத் தோன்றுகிறார்கள்.. பல வீடுகள் புதுப்பிக்கப்பட்டிருந்தன. சில பாழடைந்திருந்தன. இன்னும் சில இடங்கள் காலி மனைகளாக. திரும்பவும் அந்த ஊருக்கு, தான் ஏன் வந்தோம்? எந்த உணர்வு தன்னை அப்படித் துரத்தித் தள்ளியது? மனசாட்சி உறுத்தலில் ஏதோவொன்றைச் சமன் செய்து கொள்ள அல்லது பாவத்தைத் துடைத்து எறியவென்று தன்னை அப்படி அங்கு கொண்டு வந்து நிறுத்தி விட்டதா? எந்தச் செயலுக்கும் எதிர்வினை எந்தக் காலத்திலேனும் நிகழ்ந்தே தீரும் என்பதுதான் உண்மையா? ஒரு சுழற்சியில் பதிலுக்கு பதில் என்பது நடந்தே தீருமா? ஆயுளில் அதை எதிர்நோக்காமல் சாக முடியாதா? முற்பகல் செய்யின் பிற்பகல் விளைந்தே தீருமா? என்ன தண்டனையைப் பெறுவதற்காக நான் இங்கே மீளத் தள்ளப்பட்டிருக்கிறேன்?
சுற்று முற்றும் ஒரு முறை பார்த்துக் கொண்டாள். எந்த வீட்டிலிருந்தும் ஒரு தலையும் தென்படவில்லை. சில வீடுகளில் வாசலில் கோலமிடப்பட்டிருந்தது.. கதவு சாத்தப்பட்டிருக்கிறது. திண்ணையில் எந்த வீட்டிலும் ஒருவர் கூடப் படுத்திருக்கவில்லை. முன்பெல்லாம் ஆட்கள் திண்ணையில் படுத்து உருளுவார்கள். இப்போது அந்தப் பழக்கம் விட்டுப் போயிருக்கிறது. தூரத்தில் யாரோ ஒராள் அங்கிருக்கும் சாக்கடையைத் தோண்டிக் கசடுகளை அள்ளி வெளியே போட்டுக் கொண்டிருந்தான். வாடை இதுவரை வீசியது. தன் மனதிலான கசடுகளையும் நீக்கிவிட்டு அல்லது காலத்தின் கோலத்தில் அதுவே நீங்கிய நிலையில், தானும் மீண்டும் அங்கு பிரவேசித்திருக்கிறோமோ என்று நினைத்துக் கொண்டாள். கவடுகள் நீங்கி விட்டனவா? உண்மைதானா? இப்போது அவர் இருந்தால் மனது ஏற்றுக் கொள்ளுமா? மடங்கி வாழத் துணிந்திருப்பேனா?
முன்பு வீட்டுக்கு வீடு தலை தென்படும். உறுத்து உறுத்துப் பார்க்கும். யார் இது…புதிதாகக் குடி வந்திருப்பது? எத்தனை கண்கள் தன்னை விடாது மொய்த்தன? எத்தனை பேர் தன்னைப் பின் தொடர்ந்து வந்து பேச முனைந்திருக்கிறார்கள்? எந்தவகையிலேனும் தான் மசிய மாட்டோமோ என்று எத்தனை ஆண்கள் வெட்கமின்றி யத்தனித்திருக்கிறார்கள்? அந்த உணர்வு பெருமையாய் மனதிற்குத் தோன்றிய காலம். தன்னை மிஞ்சிய அழகு அந்த ஊரில் யார்? என்கிற நினைப்பில் ஆடி ஆடி ஒயிலாக நடந்த நேரம். தன் நடையும், அந்த இடையும், தன்னுடைய விசேஷ உடையும் கவனிக்கப்படுகிறது என்பதில் ஏற்பட்ட கர்வம். கணவன் என்று ஒருவன் இருக்கிறான் என்பதை அலட்சியப்படுத்தி ஒதுக்கிய கால கட்டம்.
எல்லாரும் பார்க்கிறாங்க…கொஞ்சம் இழுத்துப் பொத்திட்டு வாயேன்…? பார்த்தா பார்த்திட்டுப் போகட்டும்…ஒண்ணும் கெட்டுப் போகாது…. – எப்படிப் பதில் சொல்லியிருக்கிறேன்?
போலியாய் மனம் எவ்வளவு பெருமைப் பட்டிருக்கிறது? ஒருவன் துணிந்து தன்னை நெருங்கி வந்து பின் புறத்தைத் தட்டினானே? அப்போது ஏன் அதை எதிர்க்கவில்லை? அதில் தனக்கு ஒப்புதல் இருந்ததா? அழகு ரசிக்கப்படுகிறது என்பதில் திமிர் இருந்ததா? உரிமையோடு தட்டுவதற்கு அல்லது தொட்டு அணைப்பதற்கு வேறொருவன் இருக்கிறான் என்பதை அந்தக் கணம் அவனுக்கு உணர்த்தியிருக்க வேண்டாமா? ஓங்கிக் கன்னத்தில் ஒரு அறை விட்டு அலறி ஓடச் செய்திருக்க வேண்டாமா? ஏன் செய்யவில்லை? அன்று ஒரு மயக்கமிருந்தது. வெட்கமின்மை கலந்து. மெல்லிய புன்னகையோடு, அதை அவன் அறியா வண்ணம் நகர்ந்தேனே…? எவ்வளவு பெரிய தவறு அது. மனசாட்சி அன்று உறுத்தவில்லையே? அன்று உடன் அவர் இருந்திருந்தால் இதற்குத் துணிந்திருப்பானா அந்தக் கயவன்?
என் கணவன் மீதே எனக்கு மதிப்பில்லாமல், மரியாதையில்லாமல் இருந்த காலம். தொட்டுத் தாலிகட்டிய அவனை மனதுக்குப் பிடிக்காதிருந்த, மனசு ஏற்காத காலம். ஒப்புதலில்லாமல் பண்ணி வைத்த திருமணம் என்பதில் உள்ளேயும், சமயங்களில் வெளியேயும், தனிமையிலும் அழுது கொண்டிருந்த காலம். மனம் புழுங்கிய காலம். என் தோழிகள் ஒருவருக்குக் கூட இப்படி நிகழவில்லையே? எனக்கு மட்டும் ஏன் இப்படி? விரலுக்கேத்த வீக்கம் என்று அப்பா சொன்னாரே…அதை ஏன் அப்போது உணர்ந்து மனம் சமாதானமாகவில்லை? அப்படியானால் இப்போது புத்தி வந்து விட்டது என்று கொள்ளலாமா? எல்லாரும் போன பிறகு, தனிமை இப்படிப் பயமுறுத்துகிறதா? ஆதரவற்ற தன்மை தன்னை பலவீனமாக்கிவிட்டதா?
எதுக்கு இப்டி சதா அழுதிட்டே இருக்கே? என்னன்னு விபரம் சொன்னாத்தானே தெரியும்? மனதுக்குள்ளேயே வச்சிட்டிருந்தேன்னா வருத்தம் போகாது. வாய்விட்டுச் சொல்லிடணும்….மனபாரம் அப்பத்தான் குறையும். உன்னைப் பாதுகாக்கத்தான், சந்தோஷமா வாழ வைக்கத்தான் நான் இருக்கேன்….இப்டி அழவிடுறதுக்கா? அதுக்காகவா அப்பா பேச்சையும் மீறி உன்னைத் தனிக்குடித்தனம் கூட்டிட்டு வந்தேன்? உன் சந்தோஷத்துக்காகத்தானே செய்தேன்? எங்கிட்டச் சொல்லாமே வேறு யார்ட்டச் சொல்லப்போறே? நீ சுதந்திரமா இருக்கணும்னுதானே இதைச் செய்தேன்? ஆறேழு பேர் இருக்கிற வீட்டுல சமைச்சுக் கொட்டி, நாள் பூரா வேலை செய்து நீ சிதைஞ்சு போயிடுவே, உன் அழகு பாழாப் போயிடும்னுதானே இப்டித் தனியா இழுத்திட்டு வந்தேன்? எல்லாம் உனக்காக….உனக்காகவே செய்தது. அதை உணரலியா நீ?
எப்படியெல்லாம் தாழ்ந்து தழைந்து குழைந்திருப்பார்? அன்பை அள்ளி அள்ளிக் கொட்டினாரே…கெஞ்சிக் கெஞ்சிக் கசிந்தாரே…கொஞ்சமாவது பொருட்படுத்தியிருப்பேனா? பதிலுக்கு நான் என்ன கொடுத்தேன் அவருக்கு? அவர் கையையாவது எடுத்து என் நெஞ்சில் வைத்துக் கொண்டிருப்பேனா? ஒரு ஆறுதல் எனக்கும் அவருக்கும். அந்த ஸ்பரிச சந்தோஷமாவது அவருக்குக் கிடைக்கச் செய்தேனா? அவரையே பிடிக்காது எனும்போது கையை எப்படித் தொடுவது? அவரையே நான் தொட விட்டதில்லையே? ச்சீ..!s.என்ற பதத்தையல்லவா பிரயோகித்து விரட்டினேன். எவ்வளவு திமிர் இருந்தது எனக்கு?
தொடாதீங்க….உங்கள எனக்குப் பிடிக்கல….-மூஞ்சியிலடித்ததுபோல் எத்தனை முறை சொல்லியிருக்கிறேன். நான் உன்னத் தொடக் கூடாதா? ஏன்? உன் புருஷனில்லையா நான்? தொட்டாத் தப்பா? நீ எதுக்கோ பயப்படுறே… பரவால்ல…முதல்ல அப்டித்தான் இருக்கும்.போகப் போகப் பிடிச்சி வந்திடும். எல்லாம் சரியாப் போயிடும். ஆனா எனக்கு அப்டியில்ல…உன்னைப் பார்த்த அன்னைலர்ந்து மயக்கந்தான்..!..சதா உன் நினைப்புதான். உன்னை அப்படியே கடிச்சுத் திங்கணும் போல இருக்கு… ஓட்டல்ல ஆர்டர் கொடுக்காமயே உன் நினைப்புல, தோசையாப் போட்டு அடுக்கிட்டேன் தெரியுமா? இன்னிக்கு ஓனர்ட்டத் திட்டு….உன் கவனம் இங்கில்லேன்னு வசவு….என் மீதுதான் எவ்வளவு ஆசை அந்த மனுஷனுக்கு? கண் கொட்டாமப் பார்த்துப் பார்த்து ரசிப்பாரே? என் காலடிலயே கிடப்பாரே?
பொண்ணு கண் கலங்குற மாதிரித் தெரியுதே….எதுக்காக இப்டி அழுவுது? பிடிக்காம கல்யாணம் பண்ணி வைக்கிறாகளோ? – யாரோ மணமேடையின் அருகே நின்று கிசுகிசுக்கும் குரல் கேட்டு ஏன் அழுகுற? என்று அந்தக் கணமே கேட்டாரே…சொல்லியிருந்தால் அன்றே திருமணத்தை நிறுத்தியிருக்கலாமோ? கண்ணீரோடே தாலியை வாங்கிக் கொண்டதுதான் தப்பாகப் போயிற்றோ? இந்தக் கல்யாணத்துக்கு மட்டும் நீ சம்மதிக்கல்லே…அப்புறம் நீ என்னை உயிரோட பார்க்க முடியாது….அப்பாவின் மிரட்டல்…! பெரிய மன்மதன் வேணுமோ உனக்கு….பொண்ணா அடக்கமா இருக்கப் பாரு….ஏதாச்சும் எடக்குப் பண்ணினே, அப்புறம் நானே பிடிச்சுக் கிணத்துல தள்ளிடுவேன்…ஜாக்கிரதை….
நீ என்ன சொன்னாலும் சரி…நான் ஒத்துக்க மாட்டேன். அந்தப் பிள்ளைக்கு என்ன குறைச்சல்? என் பால்ய சிநேகிதன் கிருஷ்ணன்…அவனோட மூத்த பிள்ளை…தங்கமான பையன்…அதிர்ந்து ஒரு வார்த்தை பேச மாட்டான்….அவ்வளவு ஒழுக்கமானவன்…அவனைக் கட்டிக்கிறதுக்கு உனக்கென்ன குறைச்சல்? நீ என்ன பெரிய படிப்பாளியோ? பெரிய எடத்துல வேலை பார்க்கிறியோ? கை நிறைய அள்ளிக் கொட்டுறயோ? கோயில் தர்மகர்த்தாவோட ஒரே பொண்ணு….அவ்வளவுதான்…விரலுக்கேத்த வீக்கம் வேணும்…ஞாபகம் இருக்கட்டும்…..ஓட்டல்ல வேலை பார்த்தா கேவலமா? மாஸ்டராத்தானே இருக்கான். நல்ல சம்பளம்… சர்வராவா இருக்கான்…அந்த ஓட்டலையே ஆளறான்…தெரியுமா? அவன் முதலாளிக்கு அவன் இல்லாம ஆகாது….அவனைத் தலைல தூக்கி வச்சுக் கொண்டாடுறார்…சௌக்கியமா இருக்கலாம்….அடக்க ஒடுக்கமா பொறுப்பா, குடும்பத்துக்கு ஏத்த பொண்ணா இருக்கப் பாரு…அநாவசியமா வாழ்க்கையைக் கெடுத்துக்காதே…
அப்பா சொன்னது எதுவும் அப்போது புத்தியில் ஏறவில்லை. புத்தியில்லாமல் என் வாழ்க்கையையும் கெடுத்துக் கொண்டு, அவரையும் பைத்தியமாக்கி….அலையவிட்டு….அந்தக் குடும்பத்திற்காகவேனும் நான் என்னை மாற்றிக் கொண்டிருக்கலாம். எல்லோரும் அன்பாகத்தான் இருந்தார்கள். அண்ணி, அண்ணி என்று சொல்லிக் கொண்டு….அம்மா ஸ்தானத்தில் அன்பே உருவாய் இருந்த மாமியாரின் வெறுப்பையும் சம்பாதித்துக் கொண்டேன். வாய் திறந்து ஒரு வார்த்தை இன்று வரை சொல்லாத மாமனாரையும் பகைத்துக் கொண்டேன். தங்களுக்கு அழகான அண்ணி என்று சுற்றிச் சுற்றி வந்த அன்பார்ந்த மைத்துனர்களின், மைத்துனிகளின் வெறுப்பையும் சம்பாதித்தேன். அத்தனையையும் உதறி விட்டல்லவா என்னைத் தனிக் குடித்தனம் கூட்டிக் கொண்டு போனார் அவர். அப்போது மட்டும் ஏன் வரமாட்டேன் என்று சொல்லத் தோன்றவில்லை எனக்கு? தனியாய் இருந்தால் ஜாலியாய் இருக்கலாம்…நன்றாக ஊர் சுற்றலாம், சினிமா போகலாம், ஓட்டலில் போய் சாப்பிடலாம்…யாருடைய தடையுமின்றி விட்டேற்றியாய்ச் செலவழிக்கலாம்.. வித விதமாய்த் துணிமணிகள் எடுத்து உடுத்தலாம். .அடிக்கடி டூர் போகலாம். சுற்றி அலையலாம். இப்படியெல்லாம்தானே தோன்றியது?
இப்ப வேண்டாம் தனிக்குடித்தனம்…இன்னும் ஒரு வருஷம் போகட்டும்…நானே உன்னை அனுப்பி வைக்கிறேன்…வீட்டு வேலைகள், வரவு செலவுகள் அவளுக்கும் கொஞ்சம் பழகட்டும்…உனக்கும் ஒரு திட்டம், பொறுப்பு வரட்டும் மனசுல…அதுவரை பொறு…. – அப்பா எவ்வளவோ சொல்லியும் அவர் கேட்கவில்லையே…! என் பேச்சை மீறிப் போறேன்கிறே…அப்டியே போயிடு….இனி இந்த வீட்டு வாசப்படி மிதிக்கக் கூடாது…என்று அப்பா கொதித்துப் பேசியபோதும் அடங்கவில்லையே…! அன்று தான் ஏன் சொல்லவில்லை. சொல்லி அவரைத் தடுத்திருக்கலாமே…தனக்குமல்லவா புத்தி வேலை செய்யவில்லை? எல்லாவற்றிற்குமான செயல்பாட்டிற்கே ஒரு வயது வர வேண்டுமோ? அனுபவங்கள் சேகரமாக வேண்டுமோ? அப்பொழுதுதான் நல்லது எது, கெட்டது எது என்று தெரியுமோ? பாம்பு எது, பழுது எது என்றே தெரியாமல் போய்விட்டதே?
இந்த வீட்டுல இருந்தாங்களேம்மா…ரெண்டு பேரு…சில வருஷங்களுக்கு முன்னாடி…அவங்க இப்ப எங்க போனாங்க…? ஏன் பூட்டிக் கிடக்கு? யாரும் குடியில்லையா?
தெருவில் போய்க் கொண்டிருந்த ஒரு அம்மாளை நிறுத்திக் கேட்டாள். வேலை முடித்து வீடு வரும் சமயம்….
அது ரொம்ப வருஷமாப் பூட்டியேதானம்மா கெடக்கு…யாரையும் குடி வைக்கலியே….அந்த வீட்ல பிசாசு இருக்காம்மா….பொம்பளப் பிசாசு….அது அந்தப் பையன அடிச்சிருச்சாம்….அவரு பைத்தியமாயிட்டாராம்…..அவுக காலி பண்ணிட்டுப் போனதுலர்ந்து யாரும் குடி வரல்ல….பூட்டியேதான் கெடக்கு…..
அவங்கள உங்களுக்குத் தெரியுமாம்மா…..?- யாரேனும் தன்னை அடையாளம் வைத்திருக்கிறார்களா என்பதை அறிய முற்படும் வகையில் இந்தக் கேள்வியை வீசினாள் நந்தினி. உண்மையில் ஒருவருக்கும் தன்னை அடையாளம் தெரியவில்லை. தனக்கும் கூட அவர்கள் புதிதாகத்தானே தோன்றுகிறார்கள்? தெருவில் அவ்வளவு பேருமா மாறியிருப்பார்கள்? இல்லை…யாருமே அடையாளம் காண முடியாத அளவுக்கு நான் உரு மாறி விட்டேனா?
யாரோ…எங்களுக்குத் தெரியாதும்மா……ராத்திரி என்னென்னவோ சத்தமெல்லாம் கேட்குதுன்னு ரெண்டு பக்கத்து வீட்டுக்காரவுகளும் புகார் செஞ்சு, அந்த வீட்டுச் சொந்தக்காரரு அதை அடைச்சுப் போட்டிட்டு எங்கயோ வெளியூர்ல இருக்காராம். அடைச்சுப் போட்டா…சத்தம் கேட்காமப் போயிடுமா…இல்ல பயம்தான் விலகிடுமா? இப்பயும் சத்தம் கேட்குதுன்னு சொல்றாக….அந்த வீட்டப் பார்த்த ஜன்னலத் தெறக்கவே மாட்டாங்க….ராத்திரி அந்த வீட்டு வாசல் பக்கம் கூட யாரும் போக மாட்டாங்க….நா பாட்டுக்குச் சொல்லிட்டிருக்கேன்….நீ ஏம்மா இதையெல்லாம் கேட்குற….?
அதோ அந்தப் பதிமூணாம் நம்பர் வீட்டுக்குத்தாம்மா நா குடி வந்திருக்கேன்…ஸ்கூல்ல டீச்சரா இருக்கேன்…
எங்க..கொட்டாரம் பெரிய ஸ்கூல்லயா…?
ஆமாங்க…அங்கதான்….! அது கொஞ்சம் பெரிய வீடாத் தெரியுதேன்னு கேட்டேன்…. வீடு பெரிசா இருந்து என்னம்மா பண்ண..? ராசி வேணாமா? .அப்டியா புதுசாக் கல்யாணம் பண்ணினவுகளக் கொண்டு குடி வைக்கிறது? நல்லா விசாரிக்க மாட்டாகளா? வாழ வேண்டியவுகள அநியாயமா இப்டிக் கெடுத்திடுச்சே…? அந்த வீட்டுக்காரருக்குத் தெரியாமயா இருக்கும்? இருந்தும் வாடகைக்கு ஆசைப்பட்டுக் குடி வச்சா? இப்ப அந்த ரெண்டு சின்னஞ் சிறிசுக வாழ்க்கை பாழாப் போச்சே…அந்தப் பாவம் அவரச் சும்மா விடுமா? – முன்பின் பார்த்திராத, பழகாத தன்னிடம் வெள்ளம்போல் கொட்டிய அந்த அம்மாளின் மனம் திறந்த பேச்சு….நந்தினியை மிகவும் சங்கடப்படுத்தியது. அந்த அம்மாள் சொன்ன விஷயத்திற்குள் தன் வாழ்க்கை அடங்கிக் கிடப்பதை அவர்கள் அறிய மாட்டார்கள். அந்த விபத்தில் தப்பித்தது தானென்றும், தன் கணவன்தான் புத்தி பேதலித்துப் போனது என்றும் அவர்களுக்குத் தெரிந்தால்?
ராத்திரி அந்த ஆவி வந்தபோது அந்த திசைல உங்க பையன் திரும்பிப் படுத்திருக்கான். அவனை அடிச்சிருக்கு. அதே சமயம் அந்தப் பொண்ணு எதிர்ப் பக்கம் புரண்டிருக்கு…அது தப்பிச்சிது…இல்லன்னா…கதை மாறியிருக்கும்…..வாழா வெட்டியா ஆன பொண்ணு…புருஷேனோட அன்பு கிடைக்காம, அவனோட தப்பான நடவடிக்கைகளைத் தடுக்க முடியாமே…தனக்குத்தானே புழுங்கிட்டிருந்த மனசு….துக்கம் தாளாம…தன் வாழ்க்கை இப்டி வீணாயிடுச்சேன்னு நொந்து, அடுப்படில தூக்கு மாட்டிச் செத்திருக்கு….அதோட ஏக்கம், கோபம், ஆத்திரம், வாழ்வு பாழான, உடம்பு அடங்காத தாபம் இப்டி எல்லாமும் சேர்ந்து மாயாத ஆவியா அந்த வீட்டுல அலையுது….அதுதான் அவுகளச் சேர விடாது தடுத்திருக்கு….பழி வாங்கிற நிமித்தமா உங்க பையனைப் பத்தியிருக்கு….. உங்க மருமக தப்பிச்சிருக்கு….பெண்ணுக்குப் பெண் இரக்கப்பட்டது போல அதத் தொடல.. விட்டாலும் விட்ருச்சின்னு உறுதியாவோ, இறுதியாவோ சொல்ல முடியாது…தப்பிச்சது அப்போதைக்கு அதிர்ஷ்டந்தான்….தன் வயதொத்த மத்தவங்க சந்தோஷமா வாழ்றது அதுக்குப் பிடிக்காது…இது அந்த ஆவியோட குணம்…யாருன்னு பேதம் பார்க்கத் தெரியாது…யாரையும் அடிக்கும்….அந்த வீட்டோட மட்டும் இது நிக்காது. அந்தத் தெருவுலயும் அலையும்….சாந்தி கிடைக்காத கன்னிமை கழியாத பிரேதம்…ஆதங்கத்தோட அலையும் ஆத்மா…..!..பலி வாங்கிக்கிட்டேதான் இருக்கும்….!!
அந்த மலையாள வைத்தியர் சன்னதம் வந்தது போல் பொழிந்தார். குடம் குடமாய்த் தண்ணீர் குடித்தார். தீபம் ஏற்றி வைத்து, பக்கத்து வீட்டுப் பெண்மணிகள் முதற்கொண்டு பதறியடித்து வந்து விழுந்து வணங்கியபோதும் அடங்கவில்லை. வெற்றிலையில் மையிட்டுப் படம்போல் பார்த்துச் சொன்ன கதைகள் ஏராளம். அப்பா அதிர்ந்தார். அப்டியே போயிடு…இனிமே என் முகத்துல முழிக்காதே என்று சாபமிட்டுத் தான் சொன்னதே பலித்து விட்டதே என்று மனம் புழுங்கினார். நானும் வெளியேறிய பிறகு அந்த சோகமே அவரது முடிவுக்குக் காரணமாய் அமைந்து விட்டதே.
அதன் பிறகு என்னவெல்லாம் நடந்து விட்டது. எத்தனை எத்தனை மருத்துவர்களெல்லாம் வந்து பார்த்தனர்? ஊரில் இருந்த பூசாரிகளெல்லாம் வந்து பூசையிட்டு, தாம்பாளத்தை வளைத்து, ஊரின் நான்கு திசை முக்குகளிலும் பலி கொடுக்கச் சொல்லி….கடைசியில் யாரிடமும் சொல்லாமல் அவர் வீட்டை விட்டு வெளியேறியதுதான் மிச்சம். புத்தி கலங்கிய மனிதன் எங்கு நிலைத்திருக்கிறான், எதில் நிலைத்திருக்கிறான்? எங்கு போனார், என்ன ஆனார்? இன்றுவரை தெரியாத சோகம், மர்மம். வருடங்கள் கடந்து விட்டன. அந்த மட்டும் துன்பம் விலகியதாய் வீட்டில் தானாகவே வந்து விட்ட மன அமைதி..நிம்மதி.
அண்ணா ஒரு வேலை பார்த்து வச்சிருக்கானாம் எனக்கு. ஒரு சின்ன ஸ்கூல்ல டீச்சர் வேலையாம்….நான் கிளம்பிப் போய் அந்த வேலையை ஏத்துக்கட்டுமாப்பா? அண்ணா கூட அவருக்குத் துணையா இருந்துக்கட்டுமா? அவருக்கும் யாருமில்லை… இங்க இருந்தா என்னால உங்களுக்கும் சிரமம், ஊரெல்லாம் புரளிப் பேச்சு…நான் போயிட்டாலாவது ஊர் வாய் மூடும்…ஏதோ என்பாட்டைப் பார்த்துண்டு நான் இருந்துப்பேன்…சரியாப்பா….? கிளம்பட்டுமா…? என் வாழ்க்கை என்னோட…நீங்க எல்லாரும் ஏன் கஷ்டப்படணும்?
தாராளமாப் போயிட்டு வாம்மா….என் பிள்ளை எங்க போனான்னே தெரில…உயிரோட இருக்கானா இல்ல செத்துட்டானாங்கிறதே தெரில….நீ சின்னப் பொண்ணு….உன் வாழ்க்கை அநாவசியமா அவனால பாழாப் போயிடுத்து….அதுக்கு பெரியவங்களான நாங்களும் ஒருவகைல காரணம்தான்…நான் உனக்கு சுதந்திரம் தர்றேம்மா….நீ இங்கயே இருந்தியானா நானே அதை நிறைவேத்தவும் செய்வேன்னு சொல்லிக்கிறேன். நீ தாராளமா இன்னொரு கல்யாணம் பண்ணிக்கலாம். எங்க எல்லாருக்கும் சம்மதம்…உன் அண்ணாட்ட நான் சொன்னேன்னு சொல்லு…உன்னோட கல்யாணத்துக்கு என்ன செலவானாலும் பரவால்ல…எங்கிட்டக் கேட்கச் சொல்லு…என்னால முடிஞ்ச அளவு செய்து, உன் மறுமணத்தை நானே முடிச்சு வைக்கிறேன்…இது சத்தியம்…..
எவ்வளவு பெரிய மனது அவர்களுக்கு? எத்தனை நல்ல குடும்பம்? இதில் வாழக் கொடுத்து வைக்கவில்லையே எனக்கு? எந்த அளவுக்கு முற்போக்கான எண்ணங்கள்? ஏன் செய்து கொள்ளவில்லை மறு திருமணம்? எது தடுத்தது? மனசாட்சி ஏன் இப்படிக் கொல்கிறது? ஏன் என்னை இப்படி ஒற்றைப் பனையாய் அலைய விட்டிருக்கிறது? இதுதான் காலத்தின் கோலமா? கடைசியில் புறப்பட்ட இடத்திற்கே வந்து சேர்ந்திருக்கிறேனே…! இதுதான் விதியா?
உறக்கம் கலைந்தது போலிருக்கிறது. திரும்பக் கண்ணைச் சுற்றுகிறது. தலையை வலிக்கிறது. எழ முடியாத உடம்பு கனம்..அடித்துப் போட்டது போலான அயர்ச்சி…என்னென்னவோ நினைவுகள். கனவுகளா…நிஜமா?அந்த வீடு ஏன் மனதில் தோன்றிக்கொண்டேயிருக்கிறது? எல்லாவற்றையும் மீறி எழும் ஏதோ ஒரு சக்தி. ஏன் எனக்குள் அமைதியில்லை. இந்த வீடே ஏதோ மாதிரியிருக்கிறதே…! இங்கும் ஏதேனும் அபாயம் இருக்குமோ? எதையோ நினைத்து மனம் கலங்கிக் கொண்டேயிருக்கிறதே…! நந்தினி…நந்தினி…நந்தினி….- அவர் குரலா இது? அவரா அழைக்கிறார்? தொடர்ந்து கேட்டுக் கொண்டேயிருக்கிறதே.? மனப் பிரமையா? ..நேற்று வரை தோன்றாதது இன்று எப்படி முளைத்தது. அமாவாசை நாளில் இந்த அமானுஷ்யம் எங்கிருந்து தோன்றியது. எப்படிக் கிளைத்தது? என்றுமில்லாமல் அவரை நினைத்து நினைத்து ஏன் மனம் இப்படிக் குழம்பித் தவிக்கிறது? ஐயோ…என்னை அடிக்காதீங்க…அடிக்காதீங்க…எனக்குப் பயமாயிருக்கு….என்னை விட்ருங்க….என்னை விட்ருங்க….யாரு நீங்க….ஏன் என்னை அடிக்கிறீங்க…? ஐயோ…அத்தான்…வந்து காப்பாத்துங்களேன்…யாரோ என்னை அடிக்கிறாங்க…வாங்களேன்….
ஆஆஆஆஆஆ…….!!! – யம்மா….யம்மா…..என்னம்மா ஆச்சு…என்னம்மா ஆச்சு….ஏன்ம்மா…ஏன்ம்மா இப்டிக் கத்துறீங்க…? உங்க உடம்பு இப்டி நடுங்குதே…ஐயோ…இங்க யாருமே இல்லையே? ….ஏதாச்சும் கெட்ட கனவு கண்டீங்களா? அடடா……எழுந்திருக்காதீங்கம்மா….படுங்க…படுங்க….தூங்குங்க…தண்ணி குடிக்கிறீங்களா…தரட்டுமா…? .நானும் இங்கயே படுத்துக்கிறேன்..உங்களுக்குத் .துணையா இருக்கேம்மா…பயப்படாதீங்க…திண்ணைல படுக்கலை….உங்ககிட்டயே வந்திடுறேன்…என்னம்மா…சொல்லச் சொல்லக் கேட்க மாட்டேங்கிறீங்க…எழாதீங்க படுங்க……வெளில போகாதீங்கம்மா…நடு ராத்திரி நேரம்…மழை வேறேகொட்டுதும்மா….வீதிலலைட்டும்இல்ல…ஓடாதீங்கம்மா..ஓடாதீங்கம்மா…ஐயையோ…இப்டிஓடுறாங்களே….யாராச்சும்வாங்களேன்…ஐயா…அம்மா…யாராச்சும் ஓடி வந்து நிறுத்துங்களேன்….காப்பாத்துங்களேன்……டீச்சரம்மா….டீச்சரம்மா…நில்லுங்க…நில்லுங்க….ஓடாதீங்க….ஐயையோ…வெறி பிடிச்ச மாதிரி ஓடுறாங்களே….
வேலைக்காரி மாரியின் ஓலத்தையும், தடுப்பையும் மீறி, அவளைக் கீழே தள்ளிவிட்டு, தலைவிரி கோலமாய், புரியாமல், உருவம் தெரியாமல் தனக்குத்தானே அலறிக் கொண்டு எதிர் வரிசையிலான அந்தப் பழைய வீட்டை நோக்கி அர்த்த ராத்திரியின் இருட்டைக் கிழித்துக் கொண்டு, கொட்டும் மழையில் தறிகெட்டுத் தெருவில் வெறி கொண்டு ஓட ஆரம்பித்தாள் நந்தினி.
—————————————————-
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 256 ஆம் இதழ்
- பெண்மை-பெண்ணியம்-பெண் ஆற்றல்
- பொறுப்பு
- சன்னல்
- கவிதையும் ரசனையும் – 22
- விடாது கருப்பு…!
- தீக்காய்வார் போல …
- கவிஞர் வைதீஸ்வரனின் புதிய நூல் குறித்து……
- எஸ். சாமிநாதன் விருது
- பூகம்பத்தால் பூகோளச் சுற்று அச்சின் சாய்வு மாறி பூமியின் சூடேற்ற நிலை பேரளவு பாதிப்பாகிறது
- 2021 ஆண்டில் 20 செல்வீக நாடுகளில் கரிவாயு வீச்சு விரைவில் மிகையாகிறது .
- காணாத கனவுகள்
- குருட்ஷேத்திரம் 23 (சக்கரவியூகத்தில் அகப்பட்டு மாண்ட வீரஅபிமன்யூ)
- குருட்ஷேத்திரம் 24 (யயாதி மனித நிலையிலிருந்து வீழ்ச்சிக் கண்டவன்!)
- எஸ். ஜெயஸ்ரீ மற்றும் கே. பி. நாகராஜன் தொகுப்பாக – ’மிகையின் தூரிகை’ ஒரு பார்வை