வேல்விழிமோகன்
எலிப்பொந்தில் அகப்பட்டவன் போலத்தான் இருந்தான் அவன். அவனுக்கு அந்த சைக்கிள் விற்பனை ஆகிவில்லை என்றதும் மூச்சு முட்ட ஒரு பெருமூச்சை விட்டு அடுத்து என்ன செய்வது என்று யோசித்தான். அவனுக்கு அந்த சைக்கிள்தான் இப்போதைக்கு சங்கடமான ஒரு விழயமாக தோன்றியது ஆனால் சைக்கிளை கேட்கும்போது பாய் தன்னுடைய தாடியை நீவியபடி சைக்கிளை நான்கு முறை குனிந்து நிமிர்ந்து பார்த்து “நானூறு ரூபா..” என்றதும் இவன் ஏதும் பேசாமல் தள்ளிக்கொண்டு கிளம்பியபோது பாய் விடாமல் “ஐநூறு ரூபா..” என்றான் தொடர்ந்து.
ஆனால் சைக்கிளை தள்ளிக்கொண்டு பத்து நிமிடத்தில் வீட்டுக்கே வந்துவிட்டான். அவன் மனைவி அவன் சைக்கிளோடு திரும்பி வருவதை பார்த்து “அப்பாடா.. சைக்கிளு தப்பிச்சுக்கிச்சு..” என்று சொன்னாலும் அவன் முகம் வருத்தமாக இருப்பது கண்டு இவளும் முகத்தை வருத்தமாக வைத்துக்கொண்டு மகனிடம் “உங்கப்பன் சைக்கிள தள்ளி்ட்டு வருது. என்னா ஆச்சோ..?” என்றபோது பத்தாவது படிக்கும் மகன் “அப்பா சைக்கிள விக்க முடியாதும்மா..”
“ஏம்பா..?”
“அது பழைய சைக்கிளு. துருப்புடுச்சு போய் கிடக்குது. சும்மான்னா வாங்கிக்குவாங்க..” என்றபோது அவள் தடுத்து “ஸ்ஸ்ஸ்.. உங்கப்பன் வந்துருச்சு..” என்று சொன்னவள் அவன் சோர்ந்து போய் உள்ளே வந்தபோது மகனை பார்த்து “சைக்கிளாடா அது..? உம்.. நம்மலால தள்ளவே முடியல. எப்புடி அவன் வாங்குவான்..?”
“பழைய சைக்கிள்னா அப்படிதான்..” என்ற மகன் அக்காவை பார்த்து “அக்கா.. சைக்கிளை வித்துட்டு வரச்சொன்னே..?”
அந்த அக்கா..”ஆமா..”
“அப்பா சும்மா வர்றாரு.. நாய்க்குட்டி மாதிரி சைக்கிள தள்ளிக்கிட்டு. நான்தான் சொன்னேனே.. அது நம்ம வீட்டை விட்டு போகாதுன்னு..”
“போக வச்சுட்டா..?”
“போகாம வச்சுக்கிட்டா..?”
“சும்மாருங்க..” என்ற இவன் தன் மனைவியை பார்த்து “அந்த இஞ்சி கஷாயத்தை கொண்டா..” என்று சொல்லிவிட்டு மகளை முறைத்தவாறு அருகிலிருந்த ஸ்டூலில் உட்கார்ந்து பிறகு அது பிடிக்காமல் சற்று தள்ளியிருந்த சேரில் அமர்ந்து கால்களை நன்றாக நீட்டிக்கொண்டு “வெறும் நானூறு ரூபாய கேக்கறான் பாய். அடுக்குமா..? ம்.. வந்துட்டேன்..”
மகள் குறுக்கிட்டு “பொட்டிக்கடைக்காரன்கிட்ட சொல்றதுதானேப்பா..”
“அவன் சொல்லிதான் பாய்க்கிட்ட போனேன்..”
“என்கிட்ட ஆயிரத்து ஐநூறு ரூபாய்க்கு வித்து தர்றேன்னு சொன்னானே..?”
“அதெல்லாம் ஒரு பொருள் வாங்க அவன் கடைக்கு போனா சும்மா சொல்லி வைக்கறதுதான். பாயி கடைசியா ஐநூறு சொல்றான்னு சொன்னா இவன் சிரிச்சுட்டே அவன் அப்படிதான். நீங்க ஆயிரம்னு சொல்ல வேண்டியதுதானேன்னு சொல்லறான். இவனே ஆயிரத்து ஐநூறுல இருந்து ஆயிரத்துக்கு வந்துட்டான். நம்ப முடியாத ஆளு..”
அப்போது மகள் நம்பிக்கை இழக்காமல் “அந்தாளை விட்டுடுவோம். நம்ப மெக்கானிக் சுந்தரத்த பாக்க வேண்டியதுதானே..?” என்றதும் இவனுக்கு அந்த சுந்தரம் சட்டென்று நினைவுக்கு வந்து “அடாடா.. அவனைய மறந்துட்டோமே..” என்றவன் சட்டென்று எழுந்தபோது அவன் மகள் தடுத்து “போன் நம்பரு இருக்குதுப்பா..”
“அவன் நம்பரு எப்படி?”
“உங்க கூட படிச்சவரு இல்ல.. அவரு நம்ம வீட்டு விசேசத்துக்கு ஒரு முறை வந்தப்ப நம்பரு கொடுத்தாரே..”
“அது நடந்த ரண்டு வருசமாகுது..” என்றவன் சிறிது தயங்கி “போட்டு பாத்துடலாம். ஆனா நண்பன்கிட்ட போயிட்டு எப்புடி?”
“கேட்டு பாக்கலாம். கட்டுப்படி ஆச்சுதுன்னா சைக்கிள கொடுத்துடலாம். இல்லைன்னா அடுத்த ஆள பாப்போம்..”
“சரிதான்..” என்றவன் மகள் போன் செய்வதை பார்த்தவாறு இருந்தான். தன்னுடைய மகனை பார்த்து தேவையில்லாமல் சிரித்து ஏன் சிரிக்கிறோம் என்று யோசித்து பெண் பேச ஆரம்பித்ததும் கவனிக்க ஆரம்பித்தான். அப்போது அவன் மனைவியும் வெளியே வந்து யாரிடம் பேசுகிறாள் என்பது போலு இவன் முகத்தை பார்த்தபோது அவன் “கவனி..” என்பது போல மகளை காட்டினான். மகள் இப்போது “மாமா.. நான் உங்க நண்பரோட பொண்ணு பேசறேன்..” என்றாள்.
“கிருஷ்ணன் பொண்ணாம்மா..?” என்றபோது இவன் அந்த குரலில் இருந்த அந்நியத்தை உணர்ந்து சப்பென்று மனைவியை பார்த்தவாறு வேறு பக்கம் திரும்பிக்கொண்டான்.
“ஆமா மாமா..”
“நல்லாயிருக்கியாம்மா..?”
“இருக்கேன் மாமா..”
“உங்கப்பா..?”
“இருக்காரு மாமா..”
“அவன் பேசலையே..?”
“அவரு இப்ப பேசுவாரு மாமா..”
“சரிம்மா.. என்னாம்மா விழயம்..?”
“ஒண்ணுமில்லை மாமா.. எங்க வீட்ல ஒரு சைக்கிளு இருக்குது. விக்கனும்..”
“பழைய வண்டியா..?”
“ஆமா மாமா..”
“கொண்டார சொல்லும்மா..”
“வீடியோவுல காட்டட்டுமா..?”
“வேண்டாம்மா.. நேர்ல பாத்தாதான் சரியா சொல்ல முடியும்..”
“அது சரிதான் மாமா..”
“அப்பன்கிட்ட சொல்லிடு..” என்பதோடு பேசுவது முடிந்து அந்த மெக்கானிக் நண்பன் இவனிடம் பேசாததற்கு இவன் வருத்தத்துடன் மகளின் முகத்தை பார்த்தபோது மகள் இவனை பார்த்தவாறு “வித்து தந்திடறேன்னு சொன்னாருப்பா..”
“அப்படி சொன்ன மாதிரி தெரியலையே..?”
“சைக்கிள கொண்டார சொன்னாரு..”
“கொண்டு வரத்தான் சொல்லியிருக்கான். பாத்துட்டுதான் சொல்லுவான். எமகாத பைய அவன். ரொம்ப உசாரு..” என்றபோது தம்பி சிரிப்பதை பார்த்து மகள் இவனிடம் “எதுக்கு அதையெல்லாம் சொல்லி காட்டிட்டு..? சைக்கிள தள்ளிட்டு போறோம். அப்பறமா மாமா பாத்துக்குவாரு..”
“பாத்து கிழிச்சான். எடுத்துக்கிட்டு வாப்பா. முடுச்சுக்கலாமுன்னு சொன்னானா..?”
“அவரு மெக்கானிக்பா..”
“இருந்துட்டு போகட்டும்..”
“அவரா வாங்குவாரு சைக்கிள..? இல்ல.. யாராச்சும் கிடைச்சா வித்து தருவாரு. அல்லது விக்க முடியலைன்னு திருப்பி தரப்போறாரு.. இதுல போயிட்டு என்னா இருக்குது..?”
“அவன் பேச்சே சரியில்லை கவனிச்சியா..?” என்றபோது அவன் மனைவி அவனை தடுத்து “சைக்கிள அங்க கொண்டு போகவேண்டாம்..”
“ஏன்..?”
“வேண்டாம்.. அது அப்படியே இருந்துட்டு போகட்டும். அல்லது வேற யாருக்கிட்டேயாவது காட்டி விக்கலாம்..”
“அந்த பய அதை கூட செய்ய மாட்டானா..?”
“அப்பறம் உங்க இஸ்டம்..” என்றபோது இவன் மகனை பார்த்து “நாளைக்கு தள்ளிட்டு போயிடலாம் சைக்கிள அவன்கிட்ட. அவன் வித்து தந்திடுவான்..”
“சைக்கிள வித்து தரலைன்னா..?”
“எல்லாம் வித்து தருவான். நமக்காக அத கூட செய்யமாட்டானா..?” என்று அவன் சொன்னபோது அவனுடைய கண்கள் மனைவியை கவனித்தது. அவள் அதை கண்டுக்கொள்ளாமல் பையனை பார்த்து டிவியை காட்டி சத்தமாக சொன்னாள்..
“அந்த சேனலை மாத்து.. சும்மா கத்திட்டே இருக்குது..”
0000
அந்த சைக்கிளை கவனிக்கும்போது அவனுக்கு சில சமயம் பாவமாக இருக்கும். எப்போதோ வாங்கினது. பயன்பாட்டில் இருந்ததுதான். இப்போது ஒரு இரண்டு வருசமாகத்தான் ஓரமாக ஒதுங்கிவிட்டது. ஏறக்குறைய ஒதுக்கிவிட்டார்கள். அந்த இரண்டு சக்கர வாகனம் வந்த பிறகு அதற்கான பணி முடிந்த மாதிரி அதற்கென ஒரு இடத்தை ஒதுக்கி சும்மா நிறுத்தி வைத்த பிறகு அங்கேயே அடிக்கடி நிற்க ஆரமிபித்தது. பிறகு நிரந்தரமாகவே நிற்க ஆரம்பித்துவிட்டது. அதன் மீது ஒரு சில பொருள்களை வைக்க ஆரம்பித்தார்கள். பிறகு ஒரு சில துணிகளை தொங்க விட்டார்கள். பிறகு பின்னாடி ஒரு பெரிய அட்டை பெட்டியை வைத்தார்கள். முன்புறம் கைப்பிடி மீது ஏற்கனவே ஏதோ இருந்ததின் மீது தேங்காய் மூட்டையை வைத்தார்கள். அப்போது சைக்கிள் ஒன்றும் பாதியுமாக தெரிந்தது. பிறகு டயரில் காத்து குறைந்து முன்புறம் பட்டையாக தெரிந்து அந்த இடத்தில் கருப்பாக படிய ஆரம்பித்தபோது அது இவன் கண்களில் அவ்வபோது தெரிந்து உறுத்த ஆரம்பித்தது. அதில்லாமல் அந்த சைக்கிளின் மீதான பிடிப்பு இவனுக்கு அதன் மீதான அனுதாபத்தை உருவாக்கியது. ஒரு நேரத்தில் அவனை தூக்கி சுமந்த சைக்கிள் என்று அந்த அனுதாபம் அவனுக்கு சங்கடத்தை தந்து அதன் மீது இருந்த பாரத்தை கவனித்து தன்னைத்தானே திட்டிக்கொண்டான். பிறகு ஒரு நாள் அதற்காக நேரத்தை ஒதுக்கவேண்டும் என்று தீர்மானித்து அது தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. ஒரு முறை மறுபடியும் அந்த சங்கடத்தில் சிக்கி என்ன செய்வது என்று யோசித்து மனைவியுடன் பேசியபோது அவள் “எனக்கு கூடத்தான் அய்யோ பாவமுன்னு தோணுது..”
“எனக்கும்தான்..”
“நீங்க அதுக்கு ஆரம்பத்துல ரொம்ப மரியாதை தந்தது நினைவுக்கு வருது..”
“உண்மைதான்..”
“தினமும் துடைப்பீங்க..”
“ஆமா..”
“எண்ண விடுவீங்க..”
“ஆமா..”
“ஆயுத பூஜைக்கு அலங்காரம் பண்ணுவீங்க..”
“ஆமா..”
“பையனையும் பொண்ணையும் சின்ன பசங்களா இருக்கும்போது இதுல உக்கார வச்சு தெருவுல கூட்டிக்கிட்டு போவீங்க. பசங்களுக்கு அது ரொம்ப புடிக்கும்.. அவங்க இந்த சைக்கிளுக்காக அழுதிருக்காங்க நிறைய முறை..”
“ஆமா..” என்றபோது அவனுக்கு குற்ற உணர்ச்சி ஏற்பட்டது. அதன் பிறகு மனைவியிடம் பேசாமல் அன்று ஐந்து மணிக்கு அந்த சைக்கிளின் மீதிருந்ததை எடுத்தவன் பிரமித்துப்போனான். அதன் மீது அவ்வளவு பாரம் இருந்தது. தேங்காய் மூட்டை.. துணிகள்.. கயிறு.. கூடை.. அட்டைப்பெட்டி.. அதற்குள் பிளாஸ்டிக் பொருள்கள்.. பேப்பர் கட்டு.. பின் இருக்கையில் ஒரு கடப்பாரை.. இரண்டு வயர் கூடைகள் கைப்பிடியில் தொங்கிக்கொண்டு அதில் ஏதோ துருத்திக்கொண்டு இருந்தது. பின்புறம் ஸ்டேண்டு அப்படியும் அதே மாதிரி நேராக நின்றிருந்தது ஆச்சரியமாக இருந்தது. எல்லாவற்றையும் தூக்கி அக்கம்பக்கத்தில் வைத்தால் அந்த இடத்தை அடைத்துக்கொண்டது கவனித்து அவன் மனைவியும் அவனும் ஒருவருக்கொருவர் பார்த்து விழித்து “ஒரு ரூம்ல இருக்கறது பூராவும் இது மேல இருக்குதே..” என்றபோது அவளும் “ஆமா..” என்றாள் கொட்டாவி விட்டபடி..
“இப்ப என்னா செய்யறது..?”
“சக்கரத்த பாருங்க. துருப்புடுச்சுருச்சு..”
“இப்பதான் தெரியுது..”
“துணி தொங்கிட்டு தெரியலை. துடைக்கனும். எண்ணய் போட்டு துடைச்சா தாங்கும். பெல் அடிக்குதா பாருங்க..” என்றபோது அவன் அடித்து பார்த்தான். ஏதோ சிக்கிக்கொண்ட மாதிரி “டொக்கு.. டொக்கு” என்று பாதியில் மாட்டிக்கொண்டது. அவன் தளர்ச்சியுடன் “உள்ளாரேயும் துரு புடுச்சுருக்குது. ரண்டு வருசத்துக்கு மேல ஆயுடுச்சு. இப்படியே விட்டா ஒண்ணுத்துக்கும் இல்லாம போயிடும்..” என்றவன் மனைவி கீழே எடுத்து வைத்திருக்கும் பொருள்களை பார்த்து கவலைப்படுவது போல கண்களை வைத்துக்கொண்டபோது அவன் அதையெல்லாம் ஒன்றன் மீது ஒன்றாக ஓரமாக எடுத்து வைத்துவிட்டு சைக்கிளை துடைக்க ஒரு துணியை தேடினான். முதலில் சக்கரத்தை துடைக்க ஆரம்பித்தான். அதற்குள் அவன் மனைவி “ஒரு நிமிசம்..” என்று துடைப்பத்தால் மேலாக்க அடிக்கும்போது ஒற்றடையும் அழுக்கும் படிந்து வருவதை கவனித்து அந்த சைக்கிள் தன்னை திட்டுவது போல உணர்ந்தான். அப்போது அவனுடைய கண்கள் அவன் துடைத்த இடத்தில் முன் சக்கரத்தை கவனித்தது.
அந்த இடத்தில் நடுவில் அரித்து சின்ன சின்ன ஓட்டைகளாக தெரிந்தது.
0000
அவன் அதன் பிறகு அந்த சைக்கிளை துடைப்பதில் ஏறக்குறைய இரண்டு மணி நேரத்தை எடுத்துக்கொண்டான். இருக்கை உட்புறம் நைந்துப்போய் மேலேயும் கீழேயும் ஆடியது. அதன் மீதுதான் பெரிய பாரம் இருந்ததாக தோன்றியது. இரண்டு சக்கரங்களையும் சீமெண்ணெய் வைத்து துடைத்தபோது தரையில் பொலபொலவென்று உதிரியாக படிந்தது. கம்பிகளில் அழுக்கும் துருவும் படிந்து துடைப்பதற்கு கஷ்டமாக இருந்தாலும் தொடர்ந்து துடைத்தான். கைகளுக்கு நல்ல வேலை என்று நினைத்துக்கொண்டான். நடுவில் டீ வந்தாலும் அதை கவனிக்காமல் அது ஆறிப்போய் மனைவி வந்து ஒரு பெருமூச்சு விட்டு “இதுக்கப்பறம் என்னா செய்யறது..?”
“நாளைக்கு காத்தடிக்கனும்..”
“அடிச்சுட்டு..?”
“ஓட்ட வேண்டியதுதான்..” என்றபோது அவள் சிரித்து “அப்படியா..?”
“ஏன் சிரிக்கறே..?”
“அதெல்லாம் நடக்கற காரியமா..? நீங்க முதல்ல நடக்கறதே இல்லை. பக்கத்து தெருவுக்கு கூட வண்டிலதான் போறீங்க. ஆனா பையனை ஓட்ட வைக்கலாம்..”
“பையனும் ஓட்டுவான். நானும் ஓட்டுவேன்..” என்று பையனை கூப்பிட்டு “வண்டிய ஓட்டுவதானே..?”
“இல்லைப்பா..”
“ஏன்டா..?”
“வேணாம்பா..”
“அதான் ஏன்டா..?”
“எனக்குதான் சைக்கிளு ஓட்ட தெரியாதே..” என்றான். அப்போதுதான் இவனுக்கு தெரிந்தது. பையன் சைக்கிள் ஓட்ட கற்றுக்கொள்ளும்போதுதான் அந்த ஸ்கூட்டரை வாங்கி சைக்கிளை ஓரமாக ஒதுக்கி வைத்தது. பையன் ஸ்கூட்டரை பார்த்தபடி “அதிருக்கும்போது இது எதுக்கு..?”
“டேய்.. சைக்கிள் ஓட்டனும். சைக்கிள் ஓட்டறது நீச்சல் மாதிரி..” என்றதும் அவன் சட்டென்று “ஆமாமா.. நீச்சல் கத்துக்கனும்.. எனக்கு வெக்கமா இருக்குது நீச்சல் தெரியாம இருக்கறது..” என்று கவலைப்பட்டபடி உள்ளே போய்விட்டான். இவன் மனைவியை பார்க்க அவள் “அவனுக்கு வேற கவலை வந்துருச்சு..”
“இப்ப என்னா செய்யறது..?”
“முதல்ல காத்தடிக்கனும். பிறகு அதை தள்ளிப்பாத்து ஓட்டிப்பாக்கனும்..”
“பிறகு..?”
“வித்துடலாம்..” என்றாள். அவளை சட்டென்று நிமிர்ந்து பார்த்து “என்னா இப்படி சொல்லிட்டே..?”
“பின்ன..?”
“நான் ஓட்டிக்கறேன்..” என்று அவன் மறுநாள் காற்றடித்து அது அப்படியே நின்றதும் ஆச்சரியப்பட்டு தெருவில் தள்ளியபடி வந்தான். பிறகு பாதி தெருவிலிருந்து சைக்கிளின் மீது ஏறியபோது புதிதாக இருந்தது. சைக்கிளை மிதித்தபோது கடக்.. கடக்..கென்று ஏதோ சத்தம் வந்தது. பிறகு அந்த சத்தம் சரியாகி உட்கார்ந்திருந்த இருக்கை நழுவிக்கொண்டு ஒரு பக்கமாக போனது இல்லாமல் அந்த இருக்கை வலிக்கவும் செய்தது. “புதுசா சீட்டு வாங்கனும்..” என்று முணுமுணுத்துக்கொண்டபோது மறுபடியும் அந்த “கடக்.. கடக்..” சத்தம் வந்து ஒரு இடத்தில் ஏதோ மாட்டிக்கொண்டது போல நின்றுவிட்டது சைக்கிள். இவன் ஒரு காலை தரையில் ஊன்றியபடி அழுத்திப்பார்த்து தெருவில் போன ஒருத்தர் “செயினு மாட்டியிருக்கும்” என்று பொத்தாம் பொதுவாக நடந்துக்கொண்டே சொல்லியபடி போனபோது இவன் எரிச்சலுடன் இறங்கி பெடலை பின்புறமாக திருப்பி பார்த்தான்.
உகும்..
அவன் தள்ளிப்பார்த்தான் ஒரு வித நம்பிக்கையோடு. தரையோடு தேக்கியது வண்டி. இரண்டு வீடுகள் தள்ளி வீடு. பின்புறமாக தூக்கிப்பிடித்தபடி மூச்சு வாங்கியபடி ஒரு சில அடிகள் தள்ளியபோது முடியாமல் ஓரமாக நிறுத்தி ஸ்டேண்ட் போட்டு வீட்டுப்பக்கமாக போய் “டேய்.. டேய்ய்..” என்றான்.
பையன் எட்டிப்பார்த்ததும் “இங்க வாடா..”
“ஏம்பா..?”
“சைக்கிள புடிக்கனும்..”
“இதா வர்றேன்..” என்று பையன் வெளியே வந்து இவனை எதிர்பார்க்காமல் பக்கத்தில் போய் அப்படியே அலேக்காக தூக்கியபடி வந்து ஏற்கனவே நிறுத்தியிருந்து இடத்தில் மாடிப்படிக்கு அருகில் நிறுத்தியபோது இவன் இன்னமும் மூச்சு வாங்கிக்கொண்டிருந்தான்.
பையன் அப்பனை பார்த்து “வித்துடலாம்பா சைக்கிள..”
“வேணாம்..”
“ஏம்பா..”
“அது என்னைய சோதிக்குது..” என்றவன் நிதானமாக “அப்பவெல்லாம் ஒண்ணும் தெரியலை. ஆனா இப்ப மூச்சு வாங்குது..” என்றபோது பையன் சிரித்தபடியே சொன்னான்..
“வயசாயிடுச்சுப்பா..”
0000
பக்கத்து தெரு முனையில் ரோடை ஒட்டி சைக்கிள் கடை வைத்திருக்கும் பாய் வீட்டுக்கு வந்து சைக்கிளை கவனித்து “நேத்து வந்து காத்தடுச்சுட்டு வந்தீங்களே.. அதானே இது..?”
“ஆமாங்க..”
“ம்.. நேத்தே சொல்லலாமுன்னு இருந்தேன். பல நாளு ஓட்டலை போல..”
“ரண்டு வருசமுங்க..”
“சரியாப்போச்சு..” என்றவன் முன்னே பின்னே பார்த்து பெடலை அழுத்திப்பார்த்து வேகமாக ஒரு அழுத்தி அழுத்தியபோது அது கடாமுடா சத்தத்துடன் லேசாக சுற்ற ஆரம்பித்தது. பாய் அப்படி செய்தது பிடிக்கவில்லை. ஆனால் வெறுமனே வேடிக்கை பார்த்தபடி இருந்தபோது பாய் தாடியை தடவியபடி “செயின் பிரச்சனைங்க..”
“சரி..”
“முன்னாடி காத்து குறைஞ்சுருக்குது பாருங்க..” என்றவன் பின்புறம் அழுத்தி “பின்னாடியும் காத்து கம்மியா இருக்குது பாருங்க..” என்றபோது ஆச்சரியமாக இருந்தது.
“நேத்து இருந்துச்சே காத்து..”
“இறங்கிட்டிருக்கும். உள்ளாற ஓட்ட விழுந்திருக்கும். இங்க பாருங்க..” என்று டயரை காட்டியபோது ஒரமாக நீளத்துக்கு வெடிப்பு தெரிந்தது. ஒரு இடத்தில் பாய் பிதுக்கி காட்டியபோது உள்ளே டியூப் தெரிந்தது. பாய்க்கு மென்மையாக எதுவும் செய்யத்தெரியாது போல என்று நினைத்துக்கொண்டு “பாத்து பாய்..” என்றபோது அந்தாள் சிரித்து “நான் தள்ளிட்டு போயிடறேன். டயரு டூப்பு மாத்தனும்..”
“அப்படியா..?”
“ஆமாங்க. தாங்காது. ஏறி மிதிச்சிங்களா..?”
“ஆமாப்பா..”
“அதாங்க. உள்ளாற தாங்கலை. வெயிலு மழைல இருந்தா அப்படிதான். அப்பறம் செயின் சரி பாக்கனும். சக்கரம் பாருங்க.. வெடிப்பு விட்டிருக்குது. முடுஞ்சா பின்னாடி சக்கரத்த மட்டும் மாத்திக்கோங்க. ஒரு சக்கரம் பழசு இருக்குது. மாத்திக்கறீங்களா..?”
“அதெல்லாம் வேணாமுங்க. செயின மட்டும் சரி பண்ணிக்கொடுங்க..”
“காத்து இறங்குதே..?”
“காத்து அடிச்சுக்கலாம்..”
“சரிங்க..” என்று தள்ளிக்கொண்டு போனான். அன்றைக்கு மாலை சைக்கிளை தேடி போனபோது செயினை கழட்டி சீமெண்ணையில் ஊற வைத்ததை காட்டி “நாலு பல்லு போயிடுச்சுங்க.. மாத்தனும்..”
“காலைல புடுச்சு அழுத்திட்டே இல்லையா.. அதனாலதான்..” என்றபோது பாய் சிரித்து “செயினு பல் சக்கரத்துல் இருந்து வெளிய போயிடுச்சு. அதனாலதான் அப்படி. அழுத்தலைன்னா வெளிய வந்திருக்காது. பல்லு மாத்தி போட்டு கொடுத்திடறேன். ஆனா பல் சக்கரத்துல முன்னாடியும் பின்னாடியும் கழட்டி வேலை செய்யனும். பால்ஸ் ஜாம் ஆயிருக்குது. அப்படியே ஓட்டினா உள்ளாற தேஞ்சுடும். செலவு வச்சுடும்.. எல்லாம் சேந்து முன்னூரு ரூபா ஆகும்..”
இவன் அவசர அவசரமாக “அதெல்லாம் வேணாம். செயினை மட்டும் மாட்டி விடுங்க..”
“அப்படீங்களா..?”
“எவ்வளவு ஆகும்..?”
“நூத்தைம்பது கொடுங்க..”
“நூத்தைம்பதா..?” என்றபோது பாய் சிரித்தது பிடிக்காமல் “நாலு பல்லு மாத்தறதுக்கு நூத்தைம்பதா..?”
“வேல செய்யனுமில்லையா..?”
“அதுக்கு..?”
“அதுக்குதுதான்..” என்றவன் “கொரானா காலமுங்க. அப்படிதான் இருக்கும். பத்து ரூபாய குறைச்சுக்கோங்க.. சீட்டெல்லாம் மாத்தனும். ரண்டு கம்பி பின்னாடி சக்கரத்துல போயிருக்குது. மாத்தனும். இல்லைன்னா சக்கரம் பெண்டு ஆயுடும். பெல்லு கழட்டி வேல செய்யனும். முன்னாடி சக்கரத்துல ரண்டு பால்ஸ் வெளியில வந்துட்டிருக்குது. அதை கழட்டி உள்ளாற ரிங்கு செக் பண்ணி பால்ஸ் மாத்தனும். பின்னாடி கேரியர்ல பாரத்த வைக்காதீங்க..”
“ஏம்பா..?”
“சொன்னேனே.. கம்பி போயிருக்குதுன்னு. ரிம்மு வளைஞ்சுடும்” என்றபோது இவன் சலித்தபடி நூறு ரூபாயை எடுத்து நீட்டி பாய் ஏதேதோ பேசுவதை காதில் வாங்கிக்கொள்ளாமல் “பின்னாடி காத்து அடிக்கலையா..?”
“அடிச்சேனே.. இறங்கிருச்சு போல..”
“நீ தள்ளிட்டு வர்றப்ப இருந்துச்சே..”
“கொஞ்சம்தாங்க இருந்துச்சு. காத்து அடிச்சேன். சொன்னேனே.. உள்ளாற டூப்பு வீக்கு ஆயிருக்கும். பஞ்சரா இல்லைன்னாலும் டூப்பு நைஞ்சு போயிருக்கும். மாத்திக்கறீங்களா பழசு ஒண்ணு இருக்குது..?”
“வேணாம்.. காத்து அடிச்சு குடுங்க”
“நிக்காதுங்க..”
“காலைல இருந்துச்சே..”
“நீங்க நம்பலை போல. நான் ஏதும் பண்ணலைங்க..”
“நான் அப்படி சொல்லலை. காத்து அடிங்க” என்று காற்றடித்துக்கொண்டு வீட்டுக்கு மிதித்தபடியே வந்தான். சைக்கிளை ஓட்டுவது சுகமாக இருந்தது. ஓட்டிக்கொண்டே இருக்கவேண்டும் என்று தோன்றியது. அந்த செயின் சத்தம் இல்லை. சீட்டுதான் ஒரு பக்கமாக நழுவிக்கொண்டே இருந்தது. மறந்து அவ்வபோது பெல்லை அடித்து எரிச்சலடைந்தான். நிதானமாக பெடலை அழுத்தி வண்டி நகரும்போது தன்னை மீண்டும் புதிதாக உணர்ந்தான். வண்டியை சரிசெய்து தொடர்ந்து ஓட்டவேண்டும் என நினைத்துக்கொண்டான். வீட்டுக்கு வரும்போது ஏதோ வித்தியாசம் தெரிந்தது. சைக்கிள் ஒரு பக்கமாக அலைந்தது. அவன் புரியாமல் சட்டென்று நின்று இறங்கி முன்னே.. பின்னே பார்த்தபோது பின் சக்கரத்தில் காத்து இல்லாதது தெரிந்து பாயை திட்டினான்.
“நாசமா போனவன்..” என்று தள்ளியபடியே வீட்டுக்கு போனபோது உள்ளேயிருந்து எட்டிப்பார்த்து இவன் மனைவி “என்னாங்க.. தள்ளிட்டு வர்ற மாதிரி தெரியுது..”
“பின்னாடி காத்து இல்ல..”
“ஏன்..?”
“காத்து இறங்கிருச்சு..”
“அடடா..”
“பாய் சரியில்ல. நல்லாத்தானே இருந்துச்சு. வேணுமுன்னே ஓட்டைய போட்டிருப்பான் போல..” என்று அந்த வழக்கமான இடத்தில் சைக்கிளை நிறுத்திய பிறகு மனைவியை கவனித்தான். அவள் இவனுடைய சலிப்பை முகத்தில் பார்த்து “வித்துடலாமுங்க..”
இவன் யோசித்து தயக்கமாக “சரி..” என்றான்.
0000
சுந்தரம் தாடி வைத்து கண்களில் தளர்ச்சி தெரிந்து ஒரு பனியனுடன் இருந்தான். இவனை நிமிர்ந்து பார்த்து ஒரு பழைய ஸ்டூலை காட்டி “உக்காருப்பா..” என்று தொடர்ந்து ஒரு சைக்கிளின் பின்புற சக்கரத்தை தனியே வைத்து இரண்டு பக்கமும் தட்டிக்கொண்டிருந்தான். பிறகு இவனை பார்க்காமல் “நல்லா இருக்கியாப்பா..?” என்றபோது சுந்தரத்திடம் பேசுவது போல தெரியாமல் இவன் “இருக்கேன்..” என்றபோது கூட அவன் அதை கவனித்த மாதிரி தெரியவில்லை.
பிறகு அந்த சைக்கிளை நிமிர்ந்து பார்த்து “இந்த சைக்கிளா..?”
“ஆமாப்பா..”
“ஒரு கிலோ மீட்டருக்கு மேல வருமே.. தள்ளிட்டே வந்துட்டியா..?”
“ஆமாப்பா..”
“பாய் இருப்பானே அங்க..?” என்றபோது இவன் ஆச்சரியப்பட்டு “தெரியுமா அந்தாள..?”
“ஒரே தொழிலு.. தெரியாம இருக்குமா..?”
“அந்தாள் சரியில்லை. பின்னாடி ஓட்டைய போட்டு பஞ்சருன்னு சொல்லறான். ஆள் சரியில்லை. முரடு..”
“அப்படியா..?”
“ஆமா. அந்தாளை விடு. சைக்கிளை வித்து குடுத்தின்னா போதும்..”
“அப்படியா..?” என்றவன் அந்த சைக்கிளை உட்கார்ந்த இடத்திலிருந்தே பார்த்து “டயரெல்லாம் போயிருக்குது. ரொம்ப நாள் ஆச்சுது போல நிறுத்தி?”
“ஆமாப்பா.. ஏறக்குறைய ரண்டு வருசம்..”
“ம்..” என்று தொடர்ந்து சைக்கிளையே அவன் கவனித்தபோது இவன் அவனை கவனித்தான். காதோரம் நரைக்க ஆரம்பித்திருந்தது. கைகளில் முரட்டுத்தனம்.. பனியனில் கரி வாசனை.. லுங்கி கட்டி கால்களில் கூட கருப்பாக அழுக்கு தெரிந்தது. உள்ளங்கையில் ஒரு கம்பியை வைத்து சுற்றிக்கொண்டிருந்த சக்கரத்தில் இரண்டு பக்கமும் தட்டிக்கொண்டே இருந்தான் தன்னிச்சையாக. அந்த கடை குட்டியாக மேலே நிறைய டயர்களும் டியூபுகளும் தொங்கியபடி இருந்தது. ஒரு சின்ன போட்டோவுக்கு ஒற்றையாக ஒரு ரோஸ் வைத்து பக்கத்தில் அப்போது கூட ஒரு வத்தி புகை விட்டுக்கொண்டிருந்தது. தரையில் ஒரு மூலையில் ஸ்பேனர்கள்.. வளையங்கள்.. கம்பிகள்.. தரையில் கூட அந்த கருப்பு.. ஒரு சாப்பாட்டு பாத்திரம்.. தட்டு.. ஒரு மஞ்சப்பை.. சம்பந்தமில்லாமல் ஒரு சின்ன நாய்க்குட்டி பொம்மை தலைகீழாக விழுந்தபடி..
அவன் இப்போது வாயை திறந்து அந்த சைக்கிளில் இருந்த கண்களை தளர்த்தி “டயரு டூபு மாத்தனும். பின்னாடி பெண்டு தெரியுது. ரண்டு கம்பிங்க போயிருக்குது. முன்னாடி நடுவுல சக்கரம் ஒதுங்கியிருக்குது. அப்படி பாத்தா அங்க வேல செய்யனும். சீட்டு சரியில்லை. மாத்தனும். பெல்லு அடிக்குதா..?”
“இல்ல..”
“அதுக்கும் வேலை செய்யனும். பல் சக்கரத்துல வேல இருக்கற மாதிரி தெரியுது. முனை மழுங்கியிருக்குது. இதையெல்லாம் சரிப்பண்ணி வித்தா ஓரளவுக்கு நல்ல ரெட்டுக்கு விக்கலாம்..”
“இப்ப..?”
“கம்மி ரேட்டுக்குதான் போகும்..”
“எவ்வளவு..?”
“ம்..” மீண்டும் சைக்கிளை ஒரு முறை பார்த்துவிட்டு மறுபடியும் சக்கரத்தை கவனித்தவாறு உருட்டியபடியே “முன்னூறு.. முன்னுத்தம்பது போகலாம்..”
“அம்புட்டுதானா..?” என்றவன் நண்பனின் மீது எரிச்சலாக வந்ததை உணர்ந்து அந்த எரிச்சலுக்கு தன்மீதும் எரிச்சலடைந்து “ஐநூறு சொன்னான் பாயி..”
“ஓ.. அவன்கிட்டே கேட்டாச்சா..?”
“ஆமா..”
“அப்ப அவன்கிட்டேயே கொடுத்துடுலாமே.. பரவாயில்லையே அவன் சொன்னது..”
“அப்படியா..?” என்று தானாக சைக்கிளை நெருங்கி அதை ஸ்டேண்ட் எடுத்து தள்ள முயற்சித்து “பாயி தப்பா சொல்லறான்னு நினைச்சேன்..”
“சைக்கிளு வாங்கறவங்களுக்கு மத்த செலவு இருக்குதுல்ல..”
“அது சரிதான்..”
“ஆனா நானா சொன்னது அந்த ரேட்டு. கேக்கறவங்க இன்னும் கம்மியா கூட கேக்கலாம். நிறைய வேல இருக்குது. பாயிக்கிட்ட கொடுத்துட்டா எல்லாத்தையும் மாத்தி நல்ல ரேட்டுக்கு வித்துடுவான். என்னைய விட அவன்கிட்ட பொருளுங்க அதிகம், பழச போட்டு புதுசு மாதிரி பண்ணிடுவான். அதே மாதிரி செஞ்சுக்கிட்டு நாமே வண்டிய ஓட்டிக்கலாம். கம்மியா ஆகும் செலவு..”
“நீ பண்ணமாட்டியா..?”
“எனக்கு இப்ப வேல அதிகம். ஒரு வாரத்துக்கு அப்பறம்தான் கைய வைக்க முடியும்.. பாய்க்கு சொல்லுட்டா போன் பண்ணி..?”
“இல்ல.. நானே பாத்துக்கறேன்..” என்று தள்ளியபோது “காத்து அடிச்சுக்கறது..?” என்றான் அவன். இவன் யோசித்து “பஞ்சர் போட்டுக்கறது..?”
“ஓட்டைய காட்டாது. டூபு வீக்கா இருக்கும். காத்து அடிச்சுக்கிட்டா பாய் கட வரைக்கும் போயிடலாம்..” என்று காற்றடித்துக்கொண்டு ஏறி மிதித்து பாய் கடையை தாண்டி இவன் தெருவுக்கு திரும்பியபோது காற்று குறைந்திருப்பது தெரிந்தது. வேக வேகமாக அழுத்தினான். அப்படி செய்தது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. அப்போதெல்லாம் காற்று குறைவாக இருந்தால் மிதிக்கமாட்டான். இறங்கிக்கொள்வான். இப்போது அப்படி செய்யாதது அவனுக்கு அவன் மேலேயே எரிச்சலையும் அந்த சைக்கிள் மீது மீண்டும் அனுதாபத்தையும் வரவழைத்தது. வீட்டுக்கு வந்து சைக்கிளை நிறுத்தி எரிச்சலுடன் மனைவியிடம் “நண்பனாச்சேன்னு போனா அடுத்த வாரமாகும் கையை வைக்கன்னு சொல்லிட்டான்..”
“அப்படியா..?”
“பாய்க்கிட்ட விடுன்னு சொல்லிட்டான்..”
“அப்படியா..?”
“என்னா நண்பனோ..?”
“அந்தாளு சொன்னது சரிதான்..” என்றபோது மனைவியை திரும்பி பார்த்தபோது அவள் “வேலைல அதிருப்தி வரப்படாது. அப்பறமா கூலி சரியா தரனும். எதுக்கு வம்புன்னுதான் அப்படி சொல்லியிருப்பாரு..”
“இதுல என்னா இருக்குது..?”
“நட்பு..”
“அப்படீன்னா..?”
“அதான் சொன்னேனே.. அங்க போகாதீங்கன்னு..” என்றபோது அவன் விழித்தான். அவள் சிரித்தபடி “அவருக்கு ஏதாவது வாங்கிட்டு போனீங்களா போகும்போது..?” என்றபோது இவன் தொடர்ந்து விழித்தபடி தன்னருகில் உட்கார்ந்து அந்த சுந்தரம் வகுப்பில் கலகலப்பாக தன்னிடம் பேசிக்கொண்டிருப்பதை நினைத்துக்கொண்டான். இப்போது தரையை பார்த்தபடி தலையை திருப்பிக்கொண்டு அமைதியாக உட்கார்ந்திருந்தவனிடம் “அடுத்து என்னா செய்யப்போறீங்க சைக்கிள..?” என்றாள்.
இவன் யோசித்து தொடர்ந்து அமைதியாக இருந்தான். சுந்தரம் இவன் கையை பிடித்தவாறு கூட நடந்தான் பள்ளி மைதானத்தில். இவனை கிண்டலடித்தான். இவன் அவனுடைய பேனாவை வாங்கி எழுதினான். டீச்சரிடம் அவனை பற்றி பொய் சொல்லி திட்டு வாங்க வைத்து அவனை பார்த்து சந்தோழப்பட்டான். வழியில் தேங்காய் தோட்டத்தில் அவனை மரம் ஏற வைத்து தேங்காயை உடைத்து சாப்பிட்டான். கிணற்றில் அவனோடு குளிக்கும்போது அவன் இவனை விட நீச்சலில் சாமர்த்தியமாக இருப்பதை பார்த்து பொறாமைப்பட்டான். தேர்வில் அவனை பார்த்து பிட்டு அடித்தான். அவனோடு அவன் வீட்டில் ஒரு தீபாவளி நேரத்தில் பட்டாசு வெடித்து வாழையிலையில் சோறு சாப்பிட்டான்… ம்.. ம்..
“என்னாங்க..?” என்றாள் மனைவி. அவன் அந்த சைக்கிளை நினைத்துக்கொண்டபோது ஒரே சைக்கிளில் அவனும் சுந்தரமும் எப்போதும் பள்ளிக்கு போய் வருவது நினைவுக்கு வந்தது. மனைவியை பார்த்து “சைக்கிள அவன்கிட்டேயே விட்டுடலாமுன்னு பாக்கறேன்..”
“விட்டுட்டு..”
“அவனுக்கே அது..” என்றபோது மனைவி இவனை உறுத்தலாக பார்த்து நிதானமாக சொன்னாள்..
“வாங்க மாட்டாரு..”
0000
- தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]
- சைக்கிள்
- கன்னித்தீவு
- குருட்ஷேத்திரம் 25 (யட்சனுடன் சம்வாதம் செய்த தருமன்)
- குருட்ஷேத்திரம் 26 (தருமனின் வாயிலிருந்து வசைச் சொல் வந்து விழுந்தது)
- அ. முத்துலிங்கம் எழுதிய “ ஐந்து கால் மனிதன் “ வாசிப்பு அனுபவம்
- சூட்சுமம்
- மலர்களின் துயரம்
- வெப்ப யுகப் பிரளயம்!
- அதிரடித் தாக்குதலுக்கு உள்ளான ஹவாய் பேர்ள் ஹாபரின் நினைவுச் சின்னங்கள்
- கவிஞர் அ.வெண்ணிலா எழுதிய ‘கங்காபுரம்’ நாவலுக்கு விருது
- அற்ப சுகங்கள்
- ப.தனஞ்ஜெயன் கவிதைகள்
- மாதிரி மலர்கள்
- தமிழவனின் நடனக்காரியான 35 வயது எழுத்தாளர்
- அணுவியல் துறை வெப்ப சக்தி உற்பத்தியால் குளிர் & வெப்ப நாடுகள் பெறும் உறுதிப் பயன்பாடுகள்