தமிழவனின் நடனக்காரியான 35 வயது எழுத்தாளர் 

author
0 minutes, 1 second Read
This entry is part 15 of 16 in the series 24 அக்டோபர் 2021

 அழகியசிங்கர்

 

சமீபத்தில் நான் ஒரு சிறுகதைத் தொகுப்பைப் பலமுறை படிததுக் கொண்டிருக்கிறேன்.  எதாவது ஒரு கதையை எப்பவாவது  படிக்க வேண்டுமென்று தோன்றினால் உடனே அந்தப் புத்தகத்தில் உள்ள கதையைப் படித்து விடுவேன்.

 

            அந்தச் சிறுகதைத் தொகுப்பின் பெயர் ‘நடனக்காரியான 35 வயது எழுத்தாளர்’ என்ற தமிழவன் சிறுகதைத் தொகுப்பு.

            அப்படி என்ன விசேஷம் அந்தக் கதைகளில்.   ஒருவர் அக் கதைகளை வாசித்தால்தான் ஏன் சிறந்தது என்று தெரியும். 

 

            மொத்தம் 22 கதைகள் அடங்கிய தொகுப்பு.  136 பக்கங்களில் எல்லாக் கதைகளும் முடிந்து விடுகின்றன.  

 

            ஒவ்வொரு கதையும் 3 பக்கங்களுடன் அல்லது 5 அல்லது 6 பக்கங்களுடன் முடிவடைந்து விடுகின்றன. 

 

            பக்கம் பக்கமாகக் கதைகளைப்படித்துக் கொண்டிருக்கும் எனக்கு இது புது அனுபவம்.  அதே சமயத்தில் இது குறுங்கதைகளும் இல்லை. உண்மையில் நெடுங்கதைக்கும் குறும் கதைக்கும் இடைப்பட்ட ஒரு வகை.

 

            எளிதாகக் கதையைப் படித்து விடலாம்.  நமக்கும் கதை புரிந்தது போலிருக்கும்.  ஆனால் இன்னொரு முறை படிக்க வேண்டுமென்று தோன்றும்.

 

            முதல் கதை ‘உங்களுக்குப் பாரம்பரியம் இல்லையென்பது உண்மையா?’ இராமநாதன் என்பவர் தமிழ் நாட்டில் கோயம்புத்தூர் ரயில் ஏறி பாலக்காடு வரை பயணம் செய்பவர்.  பின்பு பாலக்காடு சென்றபின்பு யாருடனும் பேசாமல் கேரளக் காற்றைச் சுவாசித்தபடி ரயிலில் ஸ்டேஷனில் அமர்ந்து வருவோர் போவோர் பெரியவர்கள், இளைஞர்கள், இளம்பெண்கள், உடல்  நலமுள்ளவர்கள், நோயாளிகள், வசதியானவர், ஏழைகள், நடுத்தர வயதினர் எல்லோரையும் பார்த்து, பார்த்து நிறைய ஆலோசனைகளை மேற்கொள்வார். எப்போது திரும்ப வேண்டுமென்று தோன்றுகிறதோ அப்போது திரும்புவார்.

 

            வழக்கமாக எஸ் 4 கோச்சில்தான் பயணம் செய்வார்.  அன்று கூட்டம் அதிகமாக இருந்ததால் எஸ் 8 கோச்சில் பயணம் செய்கிறார்.

 

        ஒரு வெள்ளைக்கார பெரியவரைச் சந்திக்கிறார்.  ஏதோ ஆய்வு செய்கிறாராம். எதற்கு என்று கேட்டால், எதையும் தெரிந்துகொள்வதில் ஆர்வம் என்றார்.

 

            அந்த வெள்ளைக்காரரின் பெயர் ஜார்ஜ் மேயர்.  சமஸ்கிருத மொழியை அமெரிக்காவில் படித்தபோது அந்த மொழி மூலமாகப் பழைய  மனிதக் குலத்தின் குரல் ஒன்று தனக்குக் கேட்கத் தொடங்கியது என்று கருதினார் ஜார்ஜ் மேயர்.  பின்பு தமிழ் படிக்க விரும்பியதையும் தமிழ் சமஸ்கிருதத்துக்கு மாறுபட்ட மனநிலை கொண்டது என்று கண்டு கொண்டதால் இந்தியாவில் வேறு உண்மைகளும் உண்டு என்று தான் அறிந்ததையும் விளக்கிச் சொன்னால் ஜார்ஜ் மேயர்.

 

            இராமநாதனுக்கு எல்லாம் வியப்பாக இருந்தது.  தன்னுடைய மொழியைப் படித்து அதில் உள்ள ரகசியங்களைத் தேடி வந்திருக்கிறார் ஒருவர் என்பது ஞாபகங்களைத் தாண்டிய உணர்வுகளை எழுப்பியது.  அவை என்ன உணர்வுகள் என்று தெரியவில்லை.

 

            பேசிக்கொண்டு வந்த ஜார்ஜ் மேயர், இராமநாதன் பற்றிக் கேட்கிறார்.”

 

            இப்போது இராமநாதன் தன்னைப் பற்றி ஜார்ஜ் மேயரிடம்,    தனது தந்தையைப் பற்றியும் அவரது தந்தை அதாவது தாத்தா பற்றியும் சொன்னார்.  அதற்கு மேல் தனது குடும்பம் பற்றித் தெரியாதென்றார்.

 

            இருவரும் பேசிக்கொண்டிருந்த போதும் இராமநாதன் ரயில் ஜன்னல் வழி மரச்சீனி கம்புகள், வாழை, மா, பலா, முருங்கை, மரங்களைக் கவனித்தபடியே பேசினார். வீடுகள், வேலிகள், வீசும் காற்று, சூரியக் கதிர், ஓடும் ரயிலைக் கண்டு பயப்படாமல் மேயும் ஆடுகள், ரயிலைப் பார்க்கும் வழிப்போக்கர்கள் என் இராமநாதன் எதைப் பார்க்க வந்தாரோ, அதில் எதையும் வி0டாமல் கவனித்தபடியே பேசினார்.

 

            ஜார்ஜ் மேயர், இராமநாதனின் தாய் பற்றிக் கேட்டபோது தாயின் பழக்க வழக்கங்கள், தாயின் மரணம் பற்றியெல்லாம் சொல்லிவிட்டுத் தாயின் தாய், அதாவது தனது பாட்டி பற்றி ஓரளவு தெரியும் என்றார் இராமநாதன்.  தெரிந்ததைச் சொன்னார்.

 

            இங்கு இராமநாதன் ஆச்சரியப்படும்படியான ஒன்றை ஜார்ஜ் மேயர் குறிப்பிடுகிறார்.

 

            “உங்கள் அறிவு மூன்று தலைமுறை வரை மட்டுமே விரிந்தது. அதற்கு முன்பும் யாரைப் பற்றியும் ஒன்றும் தெரியாது.  உங்களுக்குப் பின்பும் எதுவும் தெரியாமல் போகப்போகிறது” என்றார். “உங்கள் மரணத்தோடு மூன்று தலைமுறைகளின் சரித்திர ஞாபகம் முற்றுப் பெற்று விடும்” என்கிறார்.

 

            உங்கள் நாகரிகத்தை மிகவும் பழமை வாய்ந்தது என்று பொய் சொல்கிறார்களே என்று மீண்டும் அந்த வெள்ளைக்காரர் சொன்னபோது இராமநாதன் ஏதாவது சொல்லலாமா என்று நினைத்தாலும் ஏதும் சொல்லவில்லை.  உங்கள் ஞாபகத்தில் உங்கள் குடும்பம் பற்றிக்கூட இல்லை.  இரண்டு தலைமுறை ஞாபகம்தான் உங்கள் சொத்து என்றார் வெள்ளைக்காரர். 

 

            அதன்பின் அவர்கள் பேசுவதை நிறுத்திவிட்டு மௌனமானார்கள்.

 

            இந்தக் கதையில் ராமநாதனும், ஜார்ஜ் மேயரும் ரயில்வே ஸ்டேஷனலில் ரயில் பயணமாகும்போது ரயில் பெட்டியில் சந்தித்துப் பேசுவதுதான் கதை.

 

            வெள்ளைக்காரர் பரம்பரை பற்றிக் கேட்டுவிட்டு அது குறித்து போதாது என்பதுபோல் ராமநாதனைப் பார்த்துக் குறிப்பிடுகிறார்.  ஆனால் அதே சமயத்தில் ராமநாதன் தன் முன்னால் நடக்கும் காட்சிகளைக் கூர்ந்து கவனித்தபடியே வருகிறார்.  வெள்ளைக்காரருடன் பேசினாலும் இதை அவர் விடவில்லை.  இன்றைய நிகழ்ச்சிகளில் தன் கவனத்தைச் செலுத்தும் ஒருவர், தன்னுடைய பரம்பரைபற்றி அக்கறை கொள்ளவில்லை.

 

            உண்மையில் இந்தக் கதை எதைப் பற்றியது?  கோயம்புத்தூரிலிருந்து கேரளத்தில் பாலக்காடு  வரைச் செல்லும் ஒருவர் அதை வீணான வேலை என்று நினைக்கவில்லை.  அதன் மூலம் இந்த நிகழ் உலகத்துடன் ஒரு தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள விரும்புகிறார்.  ஆனால் அவரைச் சந்திக்கிற வெள்ளைக்காரர் பழைய உலகத்திற்குப் போகிறார்.  பழைய நினைவுகளைக் கொண்டு வரச் சொல்கிறார்.  

 

            இதை நுணுக்கமாக தமிழவன் வெளிப்படுத்துகிறார். இதுதான் இந்தக் கதையின் சிறப்பு.  இத்தொகுதியில் எல்லாக் கதைகளையும் இப்படிக் கூறிக்கொண்டே போகலாம்.

  

            பொதுவாக தமிழவனின் கதைகளைப் பற்றி சில கருத்துக்களைக் கூறலாமென்று நினைக்கிறேன்.

 

  1. அனாவசியமானவிபரங்களைக் கதைகளில் தவிர்க்கிறார்.
  2. எளிதாக 4 அல்லது 5 பக்கங்களில் கதையை முடித்துவிடுகிறார்.
  3. கதைகளுக்குள் உருவாக்கும் மௌனம்நம்மைச் சிந்திக்கத் தூண்டுகிறது.
  4. வித்தியாசமான கதை அமைப்பை உருவாக்கி உள்ளார்.

       

Series Navigationமாதிரி மலர்கள்அணுவியல் துறை வெப்ப சக்தி உற்பத்தியால் குளிர் & வெப்ப நாடுகள் பெறும் உறுதிப் பயன்பாடுகள்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *