ப.தனஞ்ஜெயன் கவிதைகள்

author
0 minutes, 0 seconds Read
This entry is part 13 of 16 in the series 24 அக்டோபர் 2021

 

 

ப.தனஞ்ஜெயன்

.1.அந்த சாலையை

கடக்க முடியாமல்

தவித்திருந்தேன்

சக மனிதர்களின் மலத்தை

கையால் அள்ளிய காட்சிகளை

மனதிலிருந்து நீக்கமுடியாமல் தவித்திருக்கிறேன்

விடுதியில் உணவை உண்டு

செரிக்காமல் தவித்திருக்கிறேன்

நாம் சாப்பிட்ட எச்சில் தட்டுகளையும்

சிந்திய உணவை

மேசைகளில்

துடைக்கும் மனிதர்களின்

முகங்களைக் கண்டு வேதனை அடைந்திருக்கிறேன்

பேருந்து பயணத்தில் இரவு

தூங்க முடியாமல் விழித்திருக்கிறேன்

பல மணி நேரம் தூங்காமல்

வாகனம் ஓட்டும் ஓட்டுநரின்

துயரங்களைக் கண்டு துயரமடைந்து பயணித்திருக்கிறேன்

செவிலியர்களின் கரங்களில்

பதிந்துபோகும் நோயாளிகளின் ரத்தங்களையும்

கழிவுகளையும் பார்த்து கடந்திருக்கிறேன்

அகதிகளின் ஆழமான

கருத்துரிமையை அறிந்திருக்கிறேன்

அவர்கள் நிலத்தின்

குரலையும் கேட்டு அழுதிருக்கிறேன்

இப்படி என் வார்த்தைகள்

எத்தனையோ

மனிதர்களைச் சுற்றிவந்தாலும்

நான் நினைப்பதெல்லாம்

துயரமான வேதனைகளை

அனுபவிக்கும்

இந்த மனிதர்களின்

ஒவ்வொரு நாளும்

ஒரு வேரைப்போலவே மலர்ந்து மகிழ் வித்து மடிந்துபோகிறதே என அடிக்கடி நினைத்திருக்கிறேன்.

 

2.பெண்

−−−−−−−−

புரிதலின்றி வாழ்ந்துவிட்டேன்

உன் சக துக்கங்களை முழுமையாகப் புரிந்து கொள்ளமுடியவில்லை என்னால்

நீ வாழ்ந்து கொண்டிருக்கிறாய்

ஒரு தியாகத்தோடு

நீ கோவில்

உன் கருவறையில் தான் பிரம்மா சூட்சமமாய் தங்கியிருக்கிறான்

கடவுளுக்கே இடம் கொடுத்த புண்ணிய உடல் நீ

இது வரை புரிந்து கொள்ளவில்லை உன்னை

எத்தனை துயரங்களைத் தாண்டியும்

அழகான உன் புன்னகையை மட்டும்

பார்த்துக்கொண்டே இருந்துவிட்டேன்

புன்னகையின் ஓரத்தில் வடியும்

துன்பங்களைப் பார்க்கவில்லை நான்

துயரம் மிகுந்த உன் சிறகுகளை

கவனிக்கவில்லை

இனி சிறகை ஒடிக்க ஆசையில்லை

நான் புரிந்து கொள்ளும் முயற்சியில்

இன்னும் இருக்கிறேன்

நீயோ மன்னித்து ஏற்றுக்கொண்டே அன்பின் லயத்தில் செல்கிறாய்

நீ பறக்கச் சிறகுகளுக்கு விடுதலை தரலாம்

புரிதலற்ற என்னை

புரிதலாக மாற்றிவிடுவாய் என நினைக்கிறேன்

எப்பொழுதாவது புரிந்து கொள்வேன் உன்னை

தாய்மை என்றுமே புதிரானது

புதிரில் தான் இந்த உலகம் இயங்குகிறது.

 

 

3.அழகான வெள்ளை இதயமும்

வெள்ளை இரத்தமும்

கருப்பு ரத்தத்தைக்

தனக்குள் அடக்கி

அழகுபார்க்கிறது

தன் தூய்மையான முகத்தில்

எழுதித் தீர்க்கும் வரிகளைச் சுமந்து

வேதனையோடும்

இன்பத்தோடும்

புத்தக உடலாக நீள்கிறது

எரிந்து சாம்பலாகி

ஆற்றலை வெளிப்படுத்தும்

ஒவ்வொரு பக்கத்திற்குள்ளும்

வெள்ளைத்தாளும்

கருப்பு மையும் விளையாடி மகிழ்ந்து

எடிட்டர்களோடு கருப்பு மை தன்னை சரிசெய்து கொள்கிறது

வெள்ளைத்தாள் எப்பொழுதும் மேகம் போன்று எழுத்தைப்பொழியும்

வெள்ளைத்தாளின் கற்பத்தில் எத்தனையோ எழுத்துகள் மழைபோல் பிறக்கிறது

மனிதர்களைப்போலப் பேசவும் செய்கிறது

கணத்த இதயத்தோடு

காகிதங்கள் இசை குறிப்பின் தீராத பக்கங்களாய் அசைகிறது.

 

4.பூக்களும்

குழந்தைகளும்

பெரு மகிழ்ச்சியில்

மலர்ந்து சிரிக்கும்

கணத்தில்

தெய்வீகம்

இறங்கிவருகிறது

நுண் நொடிகளில்

அந்த நொடிகளை

தவறவிட்டுக்கொண்டேதான்

இருப்போம்

அதுதானே இயல்பு

சிலிர்க்கச் சிலிர்க்க

தெய்வீகம் மகிழ

பதிலுக்கு ஒரு முத்தம் தரவேண்டாமா

அந்த பூவிற்கு.

 

5.

பசி தீர்க்க பறந்து வந்தது

பறவைகள்

பரிதி தேய்ந்து

அதிகார வயிற்றில்

அமர்ந்து கொண்டது எடை

சுக்ராச்சாரியாருக்கு

ஒரு கண் குருடு

திருடப்பட்டது எடை

மக்களுக்கோ பசி

திரும்பிய பக்கமெல்லாம் இருள்

இருள் படிந்த கண்கள்

உறங்கவில்லை இதுவரை

இன்னும்

களவாடப்படுகிறது மண்

துளிர்க்கும் கண்களில் பிலாக்கணம்

அதிகார கண்களில் விளித்து

கிடக்கிறது வறுமையின் நிறமொன்று

செத்து வீழும் பறவையை

எண்ணிக் கொண்டேவா இருக்கிறோம்.

 

தனிமையான படுக்கை அறையில்

ஒளிந்துள்ளது

ஒரு பாட்டில் நிறையக் காமம்

அறை நிறையத் தூக்கம்

பித்து தெளிய வைக்கும் அன்பு

காதலியின் வாசனை

அறையளவு வானம்

மனப் பறவை ஒன்று

தமிழில் தட்டச்சு செய்யக்கூடிய செயலியும்

ஒரு தொலைப்பேசியும்

அடிக்கடி வந்து போகும் ஒரு சிலரின்

தடயங்கள்

ஈர உதடு

அடிக்கடி முத்தம்

அறையின் நிர்வாணம்

ஆளற்ற சமுத்திரத்தில்

அலைகளின் ஏக்கத்தில்

நழுவும் நுரை வெடித்து

துக்கத்தைக் கொண்டாடுவது போல்

இருவரின் தனிமையில்

சில நேரத் துன்பம்

வெகு நேர இன்பம் எனக் குலுங்கி

சிரிக்கும் என் அறைக்குள்

அலை

தொலைந்து கொண்டிருக்கும்

என் நினைவுகளுக்கு மத்தியில்

தினம் சூதாடிக் கடத்துகிறது

இந்த இரவு

சந்தித்த மனிதர்கள் எல்லாம்

வேடமேற்று விளையாடுகிறார்கள்

சலித்துப் போன இந்த விளையாட்டை

எப்படித்தான்

இன்று பிறக்கும் வேடதாரிகள் வரை

விளையாடுகிறதோ காலம்

என் அறையைச் சீட்டுகளால் நிரப்பி

என்னையும் சூதாடி ஆக்கிவிட்டது

இந்த தெய்வம்

இங்குள்ள சீட்டுகளில் உங்கள் முகம்

பொறிக்கப்பட்டுள்ளது.

 

6.இந்த இரவு அவ்வளவு

அழகாக இல்லை

அவளை விரும்பினேன்

இது மோன இரவு

தூங்கும் மலரைத் தட்டி எழுப்பி

முத்தம் தருவதைப்போன்ற இரவு

அவள் தூங்குவதைப்போல் நடிக்கிறாள்

மெத்தையில் பூக்கள் பூத்துக்கொண்டேயிருந்தன

அவ்வளவும் வாசனை

அது உன் வாசனை மாயா

நீ கனவில் அடிக்கடி வந்தாய்

உன்னைக் காதலி என்று

அழைத்துவிட்டேன்

அதனால் உன் கோபம்

எனக்குப் புரிகிறது

அறை முழுவதும் உன் நினைவுகள்

மாய பூக்களோடு போரிட

என் இதய ஆயுதத்தை

சுதர்சனமாக்கி எரிந்துவிட்டேன்

பூக்களை உதிரச்செய்யும் அளவிற்கு

காதல் செய்கிறது காம சக்கரம்

ஆடையற்ற இந்த இரவை

ஒளி குடிப்பதைப் போல்

நான் உன்னைக் குடித்துக்கொண்டே

இருக்கிறேன்

மன்னித்துவிடு மாயா

உன் அனுமதி இல்லாமலேயே

உன்னைக் குடிப்பதற்கு.

 

  1. ஊரேசந்திக்கும் இடத்தில்

தழைத்திருந்தது ஆலமரம்

விழுது ஊன்றி தன் கம்பீரத்தோடு

பழுத்திருந்தது ஆலம் பழம்

அழகான இந்த ஆலமர

நிழற் சாலையில்

சிறிது நேரம்

அமர்ந்தும்

நின்றும் போவார்கள்

அந்த வழியே செல்பவர்கள்

நிழலுக்கு அவ்வளவு பிரியங்கள்

இந்த மனிதர்களைப் பார்த்து

நரை மேகம் சூழ்ந்த தாத்தாக்கள்

சிலர் ஆலமர நிழலில் பேசிக்கொள்வார்கள்

இங்கிருந்து கூடுகட்டி

எந்த திசையாக்கியோ

பறந்த பறவைகள்

இரைதேடி முடிந்தவுடன்

என்றாவது இங்கு வந்துதான் ஆகவேண்டும்

சொந்த மண்ணில் இறகுதிர்ந்து

வாழ்வை மீட்டும் இந்தப் பறவைகள்

என்று பேசி தீர்க்கும் குரலைக் கேட்டு

ஆமோதிப்பது போல்

குரல் எழுப்பி

தனக்கான தேடலோடு

இன்று வரை பறக்கிறது

பறவை கூட்டங்கள்.

8.இரவு சிறகுகளில் ஏறி

கண்கள் தோறும் சுற்றிவிட்டு

பகலில் பறவை மேல்

ஏறி வானம் சுற்றி

விளையாடும் நட்சத்திரம்

பகல் இரவு பந்தங்களாய்

அதன் தீராத ஒளியை

சொட்டுகிறது

ஒவ்வொரு இரவிலும்

பெரும் கானத்தோடு.

 

  1. உடலிருந்தும்ஊடல் செய்யாமலிருப்பதால்

உடல் மொழி தவிக்கிறது

ஒற்றை நிலவையும்

ஒற்றை சூரியனையும்

உடலில் வைத்து காதலையும்

காமத்தையும் பிழிந்து

மற்றொரு உடலைச் செய்துவிட்டேன்

துளிர்க்கும் செடிகளுக்கெல்லாம்

தூரலைப் பிழிந்து

மரமாகிப்போனது விதைகள்

உருமாறி உறைந்து கிடக்கும்

வித்துக்களில் மௌனத்தை

கற்றுக்கொண்டேன்

நதியோரம் காலம் கரைந்து

வளர்ந்த நாகரிகத்தால்

இன்று வரை நான் நதியை மறக்கவில்லை

நதியிடமிருந்து நாகரிகம் இன்னும் கற்கவே ஆசைப்படுகிறேன்

கடலோரம் விரிந்து கிடக்கும் அலையிடம்

இயக்கத்தை கற்றேன்

முதுமையடைந்தும் ஓயாமல் அதே துடிப்போடு நடனமிடும் அழகை கற்றேன்

எல்லா உடல்களிடமும் காமம் கரைந்து

எரிந்து உடலைச் செய்துவிடுகிறது

செய்யப்போகும் உடலிடம் எந்த அனுமதியும் பெறாமலேயே

மனிதன்

நாய்

பூனை

கழுதை

பன்றி

ஆமை

நத்தை…

எனக் காமம் சுமந்து

காதலைச் செய்து

பசிக்கிறது என இயங்கிக்கொண்டிருக்கிறது

பைத்தியக்காரனிடம் இந்த மன ஓட்டம் நின்று போயிருக்கிறது

அனேகமாகக் கடவுள் பைத்தியக்காரனாய் தான் இருக்க வேண்டும்

இத்தனை பொறுப்பை மனிதர்களிடம் கொடுத்து

பூமித் தீவைக் கொடுத்துவிட்டான்

உடலைச் செய்ய

நாம் இன்னும் நாகரிகம் தேடிக்கொண்டிருக்கிறோம்

தாயிடம் தமிழ் பாலை

சுவைத்து விட்டேன்

காமத்தோடு கீறப்பட்ட எழுத்துகளில்

நாகரிகம் புதைந்து கிடக்கிறது

என் பெயரை விரைவில் கண்டெடுத்துவிடுவேன்

நான் செய்த உடலுக்கும் சரியான

பெயரைச் சொல்லிவிட்டுச்செல்வேன்.

 

  1. மெழுகுவர்த்தியின்கூடல்

−−−−−−−−−−−−−−−−−−−−−−

தீப சுடரில் கசிந்து உருகும்

அந்த இரவை

எனக்குப் பிடித்திருக்கிறது

என்ன செய்ய

இரவு என்றால்

எரியத்தான் வேண்டும் வெளிச்சம்

அணைந்ததும்

தன்னை அழித்துக்கொண்டு

காணாமல் போன

மெழுகுவர்த்தியே

நீ பகலையும்

இரவையும் செய்து விட்டு

தீப நடனத்தில்

எதையோ ரசித்துக்கொண்டிருந்தாய்

உன் வெளிச்சத்தால்

உலர்ந்து போன

ஓர் இரவைப்போல்

உதிர்த்துக்கொண்டிருக்கிறேன்

என் மௌனங்களை.

 

  1. காலநதி

−−−−−−−−

நாட்காட்டியின் தீராத தாகத்தால்

பிணத்தை விழுங்கி

கருப்பையில் விதைத்து எழுகிறது

உயிர்கள்

மண்ணில் வீழ்ந்து இறப்பை எழுதும்

சாம்பலுக்கு அழகான ருசி

ஒரு மயான வாசியின்

அணைப்பில் எரியும் தீ ஜுவாலையில்

ஆயிரம் இறப்பு நடனங்கள்

மயான வாசியின் இறப்புக்குக் காத்திருக்கிறான் அரிச்சந்திரன்

விதை வீழும் நேரத்தில்

சருகொன்று நழுவுகிறது

கருப்பையிலிருந்து குதித்து

சருகாகி வீழ்கிறது உடல்

புதிய ஏதேன் தோட்டம் அமைக்கவில்லை இதுவரை யாரும்

மண்டியிடுகிறேன் மௌன முடிச்சுகளோடு உன் முன்

வாழ்ந்த கதையை நீ சொல்

எப்படி வாழவேண்டும் என்பதையும் நீயே சொல்

உடல் படகு தத்தளிக்கிறது

உயிர் தந்த முதல் நாளைப்போலவே

உயிரையும் இந்த பூமி செடியிலிருந்து பறித்தெடுத்த நொடியே

நாட்காட்டியில் அடைக்கலமாகி

நழுவுகிறாய் கால நதியாய்

மரணத்தோடும்

பிறப்போடும் செல்கிறது உன் அலை.

 

12.

 எனக்கு மரம் வளர்க்கப் பிடிக்காது

என்று சொல்பவர்கள் வீட்டில் எல்லாம்

கதவாகிக் கிடக்கிறது மரம்

எனக்கு வானம் பார்க்கப் பிடிக்காது

என்று சொல்பவர்கள் வீட்டில் எல்லாம்

ஜன்னலாகிப் பார்க்கிறது வானம்

நேரகாலத்தை வெறுத்தவர்களை

கடிகாரமாக்கிப் பார்க்கிறது நேரம்

பறவையைப் பிடிக்காது என்று சொல்பவர்கள் வீட்டில் எல்லாம்

இறகை உதிர்த்து அன்பை விட்டுச் செல்கிறது

அந்தப்பறவை

வெப்பத்தைப் பிடிக்காது

என்று சொல்பவர்கள் வீட்டில்

அடுப்பாய் எரிகிறது சூரியன்

வெறுப்பவையெல்லாம் நம்மை

அறியாமல் நெருங்கியே இருக்கிறது

நாம் நெருக்கமாக இருப்பதாக நினைப்பவையெல்லாம் நம்மைவிட்டு விலகியே இருக்கிறது இந்த வாழ்வில்.

 

 

 

 

 

13.அவ்வப்பொழுது

வந்தமரும் பறவைகளுக்கு

இசையமைக்கிறது மூங்கில் காடுகள்.

 

14.குங்குமம்

−−−−−−−−−−

அழகு நிலவின் சாயலில்

நிமிர்ந்து நடக்கும்

ஷாம்பவியே

நெற்றிக்கண் பிறந்த இடத்தில் தான்

மற்றொரு பிறை நிலவைப் பூக்கச் செய்தாய்

அந்த வெளிச்சத்தின் அழகில் தான்

ஆயிரம் நடனங்கள்

பிறக்கிறது

அந்த சிவந்த நிலவு

உதிர்ந்து பிறந்த நிர்வாணத்தில்

எரிந்து போக நக்கீரன் அல்ல நான்

உன் அகத்திலிருந்து பார்க்கும்

என்னை நீ எரிப்பது கடினம்

நீ கண்ணாடியின் முன் நின்றால்

எரிந்து போகும் உன் பிம்பங்கள்

இப்பொழுது நெற்றிக்கண்ணை

உனக்கும் பாதி தந்ததின் விளைவு

புரிகிறது

உன் குங்குமம் அநீதியால்

களையிழந்தால்

மூன்றாவது கண்ணைத் திறந்துவிடு

அதற்காகவே உனக்குப் பாதி தரப்பட்டுள்ளது

நெற்றிக்கண் நக்கீரனை மட்டும்

எரிக்க அல்ல.

 

 

15.இரவு சிறகுகளில்

ஏறிக்கொண்டே பாரதமே

எங்களை

சூரியக் கதிர்களிடம்

சுமந்து செல்.

ப.தனஞ்ஜெயன்

இரவு சிறகுகளில்

ஏறிக்கொண்டே பாரதமே

எங்களை

சூரியக் கதிர்களிடம்

சுமந்து செல்.

 

 

  1. தன்கூட்டத்திலிருந்து

உதிரும் ஓர் பூவுக்காக

மலர்ந்து மலர்ந்து

அஞ்சலி செய்து கொண்டே

இருக்கிறது

காம்பு கழன்று

அந்தரத்திலிருந்து நழுவி வரும்

மற்றுமொரு பூ.

 ப.தனஞ்ஜெயன்

danadjeane1979@gmail.com

Series Navigationஅற்ப சுகங்கள்மாதிரி மலர்கள்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *