IYAKKI – KEEZHADI VANIGAR MAGALIN KATHA… |
இயக்கி பாகம் 1
இயக்கியின் முகம் மாறியது. அவளின் மனது இசக்கியான காளியம்மனை எண்ணியது. அவள் மெல்ல ஆனால் உறுதியாக சொன்னாள்.
“இசக்கி அம்மையே! எமது பாண்டிநாட்டுக்கு யார் எதிராக இருந்தாலும் அவர்களை அழிக்கும் சக்தியை, உறுதியை, தாயே.. எனக்கு என்றும் தா. எனது தந்தையை அழித்து பாண்டிநாட்டின் வளத்தை கெடுத்தவனை அழிக்கும் ஆற்றலைத் தா”
என்று மெல்ல சொன்ன இயக்கியின் மனதில் மாபெரும் சக்தி வந்தது. மனதில் வந்த சக்தி அவளது உடலிலும் பரவியது.
ஆற்றினில் இறங்கியவள் நன்றாக நீராடினாள். தாமிரபரணி தண்ணீர் குளிர்ந்து வந்தாலும் அவளின் உள்ளத்தின் சோகத்தைப் போக்க முடியவில்லை. இதையெல்லாம் பார்த்த கருமேகம் தன்னாலாவது அவளின் சோகத்தைக் குறைக்க முடியுமா என்று எண்ணி ஆற்றுக்கு மேலாக விரைந்து சூழ்ந்தது.
இயக்கியின் சோகத்தைப் பார்த்து சூழ்ந்த கருமேகத்தில் இருந்து கண்ணீர் மழை வடிய நீராடிக் கொண்டிருந்த இயக்கி ‘மழை வரும் போலிருக்கிறது; விரைவில் மாளிகைக்குத் திரும்பவேண்டும்’ என்று எண்ணி தாமிரபரணி ஆற்றிலிருந்து மெல்லக் கரை ஏறினாள். கரை ஏறிய இயக்கி பார்ப்பதற்கு அழகான பெண் சிறுத்தை போல இருந்தாள். அவளின் விரைந்த நடை சிறுத்தை இரையைத் தேடிச்செல்வது போலிருந்தது. அப்பொழுது அவளின் எதிரில் சீனத்து சிறிய பெண் ஒருத்தி ஓடினாள். அவள் ஓடுவது மான்குட்டி குதித்து ஓடுவது போலிருந்தது. அவளைப் பார்த்த இயக்கியின் முகம் சட்டென்று ஒரு விநாடி மாறி மீண்டும் இயல்பு நிலைக்கு வந்தது.
இயக்கியின் கண்களில் தெரிந்த சீனத்துப்பைங்கிளி வெண்மையான நிறத்தில் இருந்தாலும் சற்று கருமையும் கலந்து அது வெளியே தெரியாமல் மறைந்திருந்தது. அந்தப் பெண்ணின் முகம் ‘எழினி’ என்ற அவளின் பெயருக்கு ஏற்ப எழிலாகவே இருந்தது. அவளின் கண்கள் இரண்டும் அழகிய திராட்சையை ஒத்திருந்தது. கருமையான நீண்ட கேசம் அவளின் இடுப்பையும் தாண்டி முழங்கால் வரை நீண்டு அங்கும் இங்கும் ஆடி தாமிரபரணி நீரைத் தொட்டுப் பார்க்க ஆசைப்பட்டுக் கொண்டிருந்தது. அவளின் வாய் செம்பவளம் போலிருந்தது. அவளின் நீண்டகைகள் சீவிய வாழைத்தண்டினைப் போலிருந்தது. தாமிரபரணிக்கரையில் நின்று ஆற்றுநீரின் வேகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த அந்தச் சிறு பெண்ணை தாமிரபரணி நங்கையும் கவனியாமல் மிக வேகமாக ஓடிக் கொண்டிருந்தாள்.
ஆற்று நீரில் விழுந்த சிவந்த மலர்களின் ஓட்டத்தை வைத்து நீரின் வேகம் மிக அதிகமாக இருப்பதை சீனத்துப்பைங்கிளியும் உணர்ந்தாள். ஆனால் ஆற்றுநீரில் இறங்கவேண்டும் என்ற அவளின் ஆசை அதைவிட அதிகமாக இருந்தது அவளின் கருநிறக் கண்களில் தெரிந்தது. ‘எப்படியும் தந்தை ஆற்றில் இறங்க அனுமதிக்கமாட்டார் என்று எண்ணியபடி ஆற்றின் கரையில் அமர்ந்தவள் தனது வெண்ணிறக் கால்கள் இரண்டையும் நீரில் படும்படி செய்தாள். நீரின் வேகத்தில் கால்கள் இழுக்கப்பட்டன. ஆற்றிலிருந்த மீன்கள் அவளின் காலை ஆசையுடன் தொட்டுத்தடவி லேசாக கடித்தும் சென்றது எழினிக்கு மகிழ்வைக் கொடுத்தது.
சற்றுத் தொலைவில் வித்தியாசமான உடை அணிந்த ஒருவர் நின்று கொண்டிருந்தார். ஆறடிக்கும் உயரமான அவரின் முகத்தில் பாசம் தெரிந்தது. கருமையும் உறுதியும் திடமும் அவருக்கிருந்தது. அவரின் நீண்ட வெள்ளை நிறமான மீசை அவரின் அனுபவத்தைக் காட்டியது. அவரின் கரியநிறக் கண்களில் வியாபார வெறி தெரிந்தது.
இயக்கி அவரை வெகுதூரத்திலிருந்து உற்றுப் பார்த்தாள். அவளின் மலர் போன்ற கண்கள் சிவந்தன. வயதானவரின் பெயர் ‘தீசன்’ என்றும் அவரின் பூர்வீகம் பூம்புகார் என்றும் மூன்று தலைமுறைகளுக்கு முன்னால் சீனத்துக்குச் சென்று வியாபாரம் செய்து வந்தார்கள் என்றும். சீனத்திலிருந்து பட்டுத்துணி கொண்டு வந்து கொடுத்து அதற்குப் பதிலாக முத்துகளைக் காயலில் இருந்து வாங்கி வியாபாரம் செய்பவர் என்றும் இயக்கிக்கு ஞாபகம் வந்து அவளின் முகத்தில் ஒரு விநாடி வெறுப்பு தெரிந்து மறைந்தது.
‘இவன்தானே பாண்டியநாட்டை அழிக்க நினைத்தவன்; இந்த சின்னபெண் தானே அவனுக்கு ஆசையைக் கொடுத்தவள். அழியப்போகும் நமது வாழ்வுக்கு காரணம் இவர்கள்தானே’ என்ற எண்ணம் தோன்ற இயக்கியின் கண்களில் அடுத்த விநாடி சோகமின்னல் வெடித்து சிதறியது. இயக்கியின் காதுகளில் அவளது தந்தை ஆதனின் குரல் ‘யாரையும் விடாதே இயக்கி’ என்று சொன்னது மீண்டும் மீண்டும் ஒலித்தது.
தாமிரபரணிக்கரையில் நின்ற தனது பெண் எழினியை, தீசன் மிகக் கவனமாகப் பார்த்துக் கொண்டிருந்தார். அவள் நீரில் இறங்கினால் ஆற்று நீரின் வேகத்துக்கு அவளால் ஈடு கொடுக்க முடியாது என்று அவர் எண்ணிய அவரின் முகம் பயத்தைக் காட்டியது.
படபடக்கும் குரலில் “எழினி, வா போகலாம் மகளே. இன்னும் சற்று நேரத்தில் கலம் இலுவோயங்[i] புறப்பட்டுவிடும்” என்று தீசன் சொன்னது எழினியின் காதுகளில் சரியாக விழவில்லை. ஆனால் இயக்கியின் காதுகளில் அவர் சொன்னது நன்றாக விழுந்தது. ‘இன்றா புறப்படுகிறாய்? உங்களால் எங்கள் பாண்டியநாட்டுக்கு எத்தனை நஷ்டங்கள். உன்னால் தான் கொற்கையை இழந்தோம்; என்று எண்ணியவள் எழினி என்றழைக்கப்பட்ட பெண்ணை மேலும் கூர்ந்து கவனித்தாள்.
எழினி முகத்தில் ஆற்றுநீரில் இறங்கவேண்டும் என்ற ஆசை இருந்ததை இயக்கியால் ஊகிக்க முடிந்தது.
‘சரியான நேரம். பயன்படுத்திக் கொள் இயக்கி’ என்று அவளின் தந்தை ஆதன் சொன்னது அவளின் காதுகளில் மீண்டும் ஒலித்தது.
கரையில் நின்ற இயக்கி மெல்ல மீண்டும் நீரில் இறங்கியவளை பிரளயத்தின் வேகத்தில் ஓடிய தாமிரபரணியிலிருந்த மீன்கள் இயக்கியையும் தொட்டுப் பார்த்து ‘இது நம்மவீட்டுப் பெண்’ என்று விலகி ஓடியது. ஆற்றின் போக்கிலே சென்ற இயக்கி ஆற்றில் சென்று கொண்டிருந்த சுறாவைப் பார்த்தாள். சுறா தன்னைப் பார்ப்பது அவளுக்கு புரிந்தது. அவள் கண்களில் இருந்த சோகம் சுறாவுக்கு புரிந்திருக்கவேண்டும். தனது வாழ்வு சீர்குலைந்த சோகம் சுறாவைத் தாக்கி இருக்கவேண்டும்.
கரையின் அமர்ந்து காலை நீரில் வைத்து மகிழ்ந்திருந்த எழினியின் இடது காலை சட்டென்று சுறா இழுத்தது. எழினிக்கு ஒரு நிமிடம் ஒன்றும் புரியவில்லை. ‘இதுவரை மீன்கள்தானே தொட்டு விளையாடி சென்றன. காலைப் பிடித்து இழுத்தது என்ன?’ என்று சீனத்துபைங்கிளி எழினியின் சிந்தனை சிதறி என்னவென்று ஊகிக்க முடியாத விநாடிப்பொழுதில் ஆற்றினில் விழுந்தவள் நீரின் வேகத்தில் இழுத்துச் செல்லப்பட்டாள்.
கரையிலிருந்து சற்றுத்தள்ளி நின்று பார்த்துக் கொண்டிருந்த தீசன் தனது மகள் தாமிரபரணியில் விழுந்து நீருடன் இழுத்துச் செல்லப்படுகிறாளே என்று நெஞ்சம் துடிதுடிக்கத் திகிலுடன் ஓடி வந்தார். அதற்குள் எழினி கடலை நோக்கிச் சென்ற ஆற்றுடன் கலந்து விரைந்து செல்ல ஆற்றில் குதிக்க அவர் முனைந்த போது அவரின் இருகரங்களும் பின்புறம் இருந்து பிடிக்கப்பட்டு நிறுத்தப்பட்டார்.
ஆற்றில் குதிப்பவரைத் தடுத்து நிறுத்திய வீரர்கள் “இங்கு யார் விழுந்தாலும் காப்பாற்றவே முடியாது” என்று சொன்னது அவர் காதுகளில் அரைகுறையாகக் கேட்டு அவரை உலுக்கியது. தடுமாறி கீழே விழுந்த அவர் “எனது மகள் எழினி” என்று குழறியதை வீரர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவரை தூக்கி அங்கிருந்து வலுக்கட்டாயமாகக் கூட்டி சென்றார்கள்
காயலில் பிறந்து தாமிரபரணியாற்றில் புரண்டு விளையாடிய இயக்கிக்கு ஆற்று நீரின் வேகம் ஒன்றும் பெரிதாக தெரியவில்லை. நீரில் இழுத்துச் செல்லப்பட்ட எழினியைத் தொடர்ந்து நீரின் அடியில் சென்ற இயக்கி தாமிரபரணி ஆறு கடலடரசனிடம் செல்லும் இடம் வந்ததும் எழினி ஆற்றுடன் செல்வதைப் பார்த்தாள். ஆற்றில் கிடந்த நீண்ட கொடி அவளின் கழுத்தை சுற்றிக் கொண்டதைப் பார்த்தாள். ஏற்கனவே நீரில் விழுந்த எழினி திகிலடைந்து மயங்கிப் போயிருந்தாள். நீர்க்கொடியினால் கழுத்து இறுக்கப்பட்டு நெறிக்கப்பட்டதும் எழினியின் உயிர் சற்று நேரத்தில் பிரிந்தது.
எழினி நீரின் ஓட்டத்திலேயே கடலுக்குள் செல்வதைக் தலையை நீருக்குள் மேல் தலையை சற்று தூக்கிக் கவனித்த இயக்கி, ஆற்று நீருடன் கடலுக்குள் சென்றாள். நீரின் போக்கிலே அரை நாழிகைக்கு மேல் சென்றவள் வேகம் குறைய வேகமாக செல்லும் நீரிலிருந்து மெல்ல மெல்ல வெளியே வந்தாள்
இதுவரை இனிப்பாக இருந்த நீர் சட்டென்று உப்பு கரிக்க அதை உணர்ந்த இயக்கி தலையை நன்றாக தூக்கிப் பார்த்துவிட்டு கரையை நோக்கி நீந்த ஆரம்பித்தாள். இரண்டு காததூரம் நீந்தியவள் மெல்லக் கரை ஏறினாள். கரை ஏறிய இயக்கிக்கு வெகு தூரத்தில் அவள் மனக்கண்ணில் குமரி அன்னை தெரிந்தாள்.
தனது இரண்டு கரங்களையும் தூக்கி தெற்கு நோக்கியபடி நின்று ‘குமரியம்மையே, பாண்டிய நாட்டை என்றும் வளம் பெறச் செய்’ என்று வணங்கியவள் கடற்கரையில் அமர்ந்தாள். அவளின் நெஞ்சத்தில் நடந்தது எல்லாம் ஒவ்வொன்றாக ஞாபகம் வந்தது.
[i] இலுவோயங் நகரம் தற்போதைய சீனத்தில் இருக்கிறது. பட்டுத் துணிகளை அங்கிருந்து சாங்காய் வழியாக பாண்டிய நாட்டுக்கு கொண்டு வந்து கொடுத்து அங்கிருந்து முத்துகளை சீனத்துக்கு எடுத்து சென்று வியாபாரம் செய்து வந்தார்கள் சீனத்து வணிகர்கள்.
- தீபாவளிக் கவிதை
- நேற்றைய மனிதர்கள்: இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் சிறுகதைத் தொகுதி – மதிப்பீடு
- கவிதையும் ரசனையும் – 23 – சுரேஷ் ராஜகோபாலின் என்பா கவிதைகள் ……
- புறம் கூறும் அறம்
- கிளாஸ்கோ 2021 காப்பு-26 [COP-26] காலநிலை மாற்றப் பன்னாட்டுப் பேரரங்கில் அறிஞர் பங்கெடுத்து என்ன தீர்மானித்தார்
- தமிழ் நாட்டில், அரசியல் கலந்த போராட்டங்களினால், தடுக்கப்பட்ட முக்கியமான தொழில் திட்டங்கள்
- சைக்கிள்
- மெய்நிகரில் மூன்று நாட்கள் தமிழ் எழுத்தாளர் விழா !
- இயக்கி – புதினத்தின் முதல் அத்தியாயத்தின் முக்கிய பகுதி
- திருமந்திர சிந்தனைகள்: பெருவுடையாரின் மூலமும் ஸ்ரீஅரவிந்தரின் குறிப்பும்
- “தையல்” இயந்திரம்
- குருட்ஷேத்திரம் 29 (மண்ணின் மகாபுருஷர் பீஷ்மர் உரைத்த கதை)
- என்னை நிலைநிறுத்த …
- எஸ். சாமிநாதன் விருது
- உலகின் உயரமான மலை ஹவாய் தீவில்தான் இருக்கிறது என்றால் நம்புவீர்களா?
- சிவகுமார் என்ற ஓவியத்திற்கு வயது 80
- 2020ஆம் ஆண்டிற்கான ‘விளக்கு’ விருதுகள் அறிவிப்பு – கவிஞர் சுகிர்தராணி , பேரா. ஸ்டாலின் ராஜாங்கம்