உலகின் உயரமான மலை ஹவாய் தீவில்தான் இருக்கிறது என்றால் நம்புவீர்களா?

This entry is part 15 of 17 in the series 7 நவம்பர் 2021

 

 
 
குரு அரவிந்தன்

‘உலகிலே அதி உயரமான மலையின் உச்சியில் இப்போது நீங்கள் நிற்கிறீர்கள்’ என்று சொல்லி எனக்கு அதிர்ச்சி தந்தாள் வரவேற்பில் நின்ற,  தலைமுடியில் ஒற்றைப்பூ செருகிய இளம் பெண்மணி. ஹவாயில் உள்ள மௌனாகியா மலையின் உச்சியில் நாங்கள் அப்போது நின்றிருந்தோம். இமயமலை ஆசியாவில்தான் இருக்கிறது என்ற எனது நம்பிக்கையை ஒரு கணம் கேள்விக்குறியாக்கினாள். நேபாளத்திற்கும், தீபெத்திற்கும் இடையே உள்ள இமயமலையின் எவரெஸ்ட் சிகரம்தான் உலகிலே அதிக உயரமான சிகரம் என்பதும், அதன் உயரம் 29,028 அடி என்பதும் மாணவப்பருவத்தில் இருந்தே என் மனதில் பதிந்திருந்தது. அதன்பின் இன்றுவரை இமயமலை 4 அங்குலம் வளர்ந்திருந்ததும் தெரியும். வரவேற்பில் நின்ற பெண்மணிக்கு அனுபவம் போதவில்லை, எவெரெஸ்ட் பற்றி இவர் அறிந்திருக்கவில்லை என்ற நினைவோடு, அவரைப் பார்த்தேன். எனது பார்வையைப் புரிந்து கொண்ட அவரோ அருகே இருந்த பதாதையை நோக்கிச் சுட்டுவிரலை நீட்டினார். மௌனாகியா மலையின் படத்தையும் அதைப்பற்றிய குறிப்பையும் வாசித்த போது என்னால் ஏற்றுக் கொள்ள முடியாமல் ஒருகணம் தடுமாறிப் போனேன்.  
 
ஹவாய் தீவுகளில் ஒன்றான பிக்ஐலண்டில் உள்ள மௌனாகியா மலையில் மிகப்பெரிய தொலை நோக்கிகள் இருப்பதாக ஏற்கனவே படித்திருந்தேன். கண்ணுக்குத் தெரியாத, எத்தனையோ ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் உள்ள கருந்துளைகளைக் கண்டறிவதற்கும், சமீபத்தில் வியாழனைவிடப் பெரிய கிரகம் ஒன்று 6500 ஒளி ஆண்டுகள் தூரத்தில் இருப்பதையும் இந்தத் தொலைநோக்கிகள் தான் கண்டுபிடித்திருந்தன. எனவே ஒரு நாள் அதற்காக நேரத்தை ஒதுக்கி அங்கு சென்று பார்த்தோம். சுமார் பதின்மூன்று பிரமாண்டமான  தொலைநோக்கி நிலையங்கள் இங்கே இருக்கின்றன. தொலைநோக்கி நிலையத்தில் நின்றபோது எங்களோடு உரையாடிய பெண்மணி அதைப்பற்றி விளக்கம் தந்தபோது எனக்கு உடம்பு சிலிர்த்தது. அவர் சொன்னது உண்மைதான், அதாவது மௌனாகியா மலையின் உயரம் 33,480 அடிகள் என்று அங்கே பதியப்பட்டிருந்தது. எவெரெஸ்ட் உச்சியை விட சுமார் 4000 அடிகள் மேலே உலகத்தின் உச்சியில் நிற்கிறோம் என்று பெருமையாக மனைவியிடம் சொன்னேன். மனைவிக்கு அதில் நம்பிக்கை ஏற்படவில்லை. ‘இவ்வளவு சுலபமாக உலகத்தின் உச்சியைத் தொடமுடியமா, எத்தனை பேர் எவெரெஸ்டில் ஏறமுடியாமல் திரும்பி இருக்கிறார்கள் தெரியுமா?’ என்றார். எனக்கும் அதில் சந்தேகம் இருந்தது. பிரமனும் திருமாலும் அடிமுடி தேடியகதை போல நானும் எது சரி என்பதை கண்டறிவதற்காகக் கணனியில் தேடிப் பார்த்தபோது இந்தத் தகவல் கிடைத்தது.  Most of the mountain is under water; when measured from its oceanic base, Mauna Kea is over 33,480 ft tall and is the tallest mountain on Earth. தண்ணீருக்கு அடியில் இருந்தாலும், ஹவாயில் இருப்பவர்கள் மௌனாகியா மலைதான் உலகத்திலே உயரமானது என்பதை எந்தக் காரணம் கொண்டும் விட்டுக் கொடுப்பதாக இல்லை.
 
எரிமலையான மௌனாகியாவின் உச்சியில், கடல் மட்டத்தில் இருந்து 13,803 அடி உயரத்தில் இந்த தொலைநோக்கிகள் அமைக்கப்ட்டிருக்கின்றன. அவர்கள் ஒழுங்கு செய்திருந்த வண்டியில்தான் மேலே செல்ல முடிந்தது. சாதாரண வண்டிகள் அந்தப் பாதையில் செல்வது கடினமானது. அவர்கள் குறிப்பிட்ட தரிப்பிடத்தில் எங்கள் வண்டியை நிறுத்தி விட்டு அவர்கள் ஒழுங்கு செய்த வண்டியில் மேலே சென்றோம். இந்த இடத்திற்குச் செல்வது என்பது மலையைச் சுற்றிச் சுற்றி மேலே செல்வதைப் போன்றது. இந்த மலையை மௌனா ஓ வாக்கியா (Mauna O Wakea—the mountain of the god Wakea,)  என்றும் பழங்குடி மக்கள் அழைக்கின்றார்கள். இது ஹவாய் பழங்குடி மக்களின் புனிதமான இடமாகையால் அவர்களின் வழிபாட்டுச் சின்னங்களையும் காணமுடிந்தது. நெடுஞ்சாலையின் இரண்டு பக்கமும் எரிமலை லாவாக் குளம்புகள் இறுகியதால் ஏற்பட்ட கறுப்பு நிறப் பாறைகளையும், கற்களையும் காணமுடிந்தது. இங்குள்ள ஜெமினி நோர்த், ஜேம்ஸ் கிளார்க் மக்ஸ்வெல், கனடா-பிரான்ஸ் தொலைநோக்கி போன்ற தொலைநோக்கிகளில் கனடாவின் பங்கும் கணிசமானளவு இருக்கின்றது.
 
 
திரும்பி வரும்போது, பார்வையாளர்களுக்கான தகவல் பரிமாற்ற நிலையத்திற்குச் (The Onizuka Center for International Astronomy Visitor Information Station) சென்றோம். இங்கிருந்து வானத்தைத்; தெளிவாகப் பார்ப்பதற்காக ஏனைய விளக்கு வெளிச்சங்களைத் தடை செய்திருக்கின்றார்கள். தரையில் மட்டும் ஆங்காங்கே சிறிய சிகப்பு விளக்குகள் பொருத்தியிருப்பதால் அந்த வெளிச்சத்தைக் கொண்டுதான் நாங்கள் நகரவேண்டி இருந்தது. நாங்கள் பாதையை இனம் காண்பற்காக செல்போன் வெளிச்சத்தைப் பாவித்தோம். உயரச் செல்லும்போது பிராணவாயு குறைவாக இருப்பதால், முதியோருக்கு ஏறிச் செல்லும் போது, சுவாசிப்பது சற்று கடினமாக இருக்கலாம். இரவுதான் இங்கே நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கின்றன. சிறியதொரு உணவகமும் அங்கே உண்டு. அங்கே கடமையில் இருந்த ஒரு பெண்மணி தன்னிடம் இருந்த நீலநிற ஒளிபாய்ச்சும் அதிசக்தி வாய்ந்த லேசர்கதிர் விளக்கைப் பாவித்து வானத்தில் தெரிந்த ஒவ்வொரு நட்சத்திரங்களைப் பற்றியும் விளக்கம் தந்தார். அங்கே இருள் சூழ்ந்து இருந்ததால் வானத்து நட்சத்திரங்கள் தெளிவாகத் தெரிந்தன. லேசர் கதிர்விளக்கால் வானத்தைச் சுட்டிக்காட்டி ‘அதோ அங்கே பாருங்கள் அதுதான் செவின்சிஸ்ரேஸ்!’ என்றார். தொலைநோக்கியால் பார்த்தபோது ஏழு பிரகாசமான நட்சத்திரங்கள் கூட்டமாக மிக அருகே தெரிந்தாலும் அவற்றைச் சுற்றிவர நிறைய புள்ளிகளாக நட்சத்திரங்கள் தெரிந்தன. எங்கள் கண் பார்வைக்கு அவை எல்லாம் ஒரே இடத்தில் இருப்பது போலத் தெரிந்தாலும் எத்தனையோ கோடி மைல்களுக்கப்பால் ஒவ்வொன்றும் தனித்தனியே இருந்தன.
 
 
இன்னும் ஒருநாள் கௌலா ரேஞ் என்ற இடத்திற்குச் சென்றிருந்தோம்.(Kualoa Ranch, on the Hawaiian island of Oahu)  வண்டியில் ஏறுமுன் கூட்டமாக எல்லோரையும் படம் எடுத்தார்கள். ஐந்து வண்டிகளில் எல்லோரும் ஏறியதும் ஒன்றின் பின் ஒன்றாக வண்டிகள் புறப்பட்டு மலைப்பாதையில் சென்றன. நீண்ட காலத்தின் முன் அழிந்து போய்விட்டதாகச் சொல்லப்பட்ட டைனஸோக்கள் எப்படி இருந்திருக்கும் என்பதை அங்கே காணமுடிந்தது. எப்படி என்று நினைக்கிறீர்களா? யுராசிக்பாக் என்ற பதாதை வாசலில் இருந்தது. இந்த உயரமான காட்டுப் பகுதியில்தான் ஸ்ரீவன் ஸ்பில்பேர்க்கின் நெறியாள்கையில் 1993 ஆம் ஆண்டு வெளிவந்த யுராசிக்பார்க் (துரசயளளiஉ Pயசம) படப்பிடிப்பு நடைபெற்றது. அதில் இடம் பெற்ற வாசல் கதவு, டைனஸோவின் நகக்கீறலுடன் கூடிய மதில் எல்லாம் அப்படியே இருக்கின்றன. டைனஸோவின் பெரியதொரு எலும்புக்கூட்டையும் பெரிதாக அங்கே வைத்திருந்தார்கள்.
 
மீண்டும் எங்கள் பயணம் தொடர்ந்தது. சற்றுத்தள்ளிக் காட்டுப் பகுதியில்  ஹெலிக்கொப்டர் ஒன்று தரையில் உடைந்து விழுந்து கிடந்தது. அதற்கு அருகே கிங்கொங் படத்தில் இடம் பெற்ற ஹெலிக்கொப்டர் என்று அதைப் பற்றிய விபரங்கள் எழுதியிருந்தார்கள். wreckage of a military chopper in Kong: Skull Island movie அந்த இடத்திலும் இறங்கிப் படங்கள் எடுத்துக் கொண்டோம். ‘கொங்’ படத்திற்கான சில காட்சிகளின் படப்பிடிப்பு அங்கு நடைபெற்றதாக வழிகாட்டிப் பெண்மணி குறிப்பிட்டார். யுராசிக்வேள்ட், பேர்ள்ஹாபர், கொட்சிலா போன்ற படங்களையும் இங்கேதான் எடுத்தார்கள். சென்ற வருடம் வெளிவந்த ‘யுமாஞ்சி’ என்ற படமும் இங்கேதான் எடுத்தார்கள் என்பதால் அந்தப் படத்தையும் ஹவாய் திரையரங்கில் பார்த்து மகிழ்ந்தோம். இதைவிட சின்னத்திரை நாடகங்கள்போல, பிறமொழிகளில் பல படங்கள் இங்கே எடுத்திருக்கிறார்கள். அதிசயக்கத்தக்க தீவுகளாகக் ஹவாய் தீவுகள் இருக்கின்றன.
 
Series Navigationஎஸ். சாமிநாதன்  விருதுசிவகுமார் என்ற ஓவியத்திற்கு வயது 80
author

குரு அரவிந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *