நேற்றைய மனிதர்கள்: இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் சிறுகதைத் தொகுதி – மதிப்பீடு

This entry is part 2 of 17 in the series 7 நவம்பர் 2021

 

நடேசன்

 

புலம் பெயர்ந்த எழுத்தாளர்களில் இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் பெண் எழுத்தாளராகவும்  தமிழ் எழுத்தாளர்களில் வித்தியாசமானவராகவும் அறியப்பட்டவர்.  புலம்பெயர்ந்த தனது புற,  அக அனுபவங்களையும்,  மற்றவர்களின் அனுபவங்களையும் உள்வாங்கி எழுதுபவர். அவரது அரை நூற்றாண்டுகளுக்கு மேலான இங்கிலாந்து வாழ்வுடன், அங்குள்ள தமிழர்கள் , தமிழர்கள் அல்லாதவர்களது,  கலாச்சாரம்,  பண்பாட்டுக் கூறுகளை உள்வாங்கி, அவற்றைத்  தனது கதைகளில் வெளிக்கொணர்ந்துள்ளார். மேற்கு நாடுகளுக்குப் புலம்பெயர்ந்த தமிழ்ச்சமூகத்தின் செல்லும் திசையை  அறிய அவரது எழுத்துகள்,  திசைக்கருவியாக எமக்கு உதவும்.

அ. முத்துலிங்கம் வெளிநாட்டு வாழ்க்கையை எழுதிய போதிலும்,  அவர் அந்த சமூகங்களிற்கு வெளியே நின்று ஒரு பார்வையாளனாகவே எழுதியுள்ளார். ஓவியனின் உதாரணத்தில் சொல்வதென்றால் அ. முத்துலிங்கம் லாண்ஸ்கேப் சித்திரத்தைச்  செதுக்கி பல வர்ணமாக அவரது வார்த்தைகளால் நமக்களித்துள்ளார். ஆனால்,  இராஜேஸ்வரி தருவது அப்ஸ்றாக்ட்டான ஓவியம். முதற் பார்வையில் ஒழுங்கற்றதாகத் தெரியும்.  வான்கோவின் வயல் அறுவடை- அ முத்துலிங்கம்,  பிக்காசோவின் திராட்சை அறுவடை-  இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம். இரண்டு சித்திரத்தையும் நீங்கள் பார்க்கவேண்டும்.  எழுத்துமுறையில் முத்துலிங்கம் யதார்த்த (Realistic) எழுத்தில் நிற்கிறார். ஆனால் இராஜேஸ்வரியின் எழுத்து நவீன பாணி(Modern)

இதைத் தமிழர்கள் புரிந்துகொள்ளும் வகையில்  சொல்ல வேண்டுமானால்,  தமிழர்களது ஐந்து திணைகளும் நிலத்தைக் குறிப்பதாகத் தவறாகக்  கட்டுமானம் செய்து பேசப்பட்டபோதும்,  அவை தமிழர்களது மனதின் நிலைகளைப் பேசுகின்றன. அதாவது அக உணர்வு அல்லது ஒழுக்கம் என்பனவற்றைக் குறிக்கின்றன. அந்தவகையில் இந்தக்  கதைகள் புலம்பெயர்ந்த தமிழரின் அகத்திணையை நமக்குக் காட்சிப்படுத்துகின்றன. 

நேற்றைய மனிதர்கள் என்ற  இராஜேஸ்வரியின் இந்த சிறுகதைத் தொகுப்பில் இடம்பெறும் நான்கு  கதைகள்  இலங்கையை பின்னணியாகவும்,  ஏனைய  எட்டும்  இங்கிலாந்தைக் கதைக்களமாகவும்  கொண்டவை.

பெரும்பாலான இங்கிலாந்துக் கதைகள்- புலம் பெயர்ந்தவர்கள்- தங்களை, தங்கள் குடும்பத்தினரை, மனைவிமாரை,  கணவன்மாரை அகத்திரையில் பார்க்கும் தரிசனங்களின் தொகுப்பு. பொதுவாக உபகண்டத்தில் ஆண்- பெண் உறவுகள் காதலுக்காக அமைவதில்லை.  ஆனால், அதற்காக  இளம் மனங்களில் காதல் ஏற்படாது போவதில்லை. அவை முளை விட்டு வெளிவந்த சில காலத்தில்,  பெற்றோர் மற்றும் சமூகத்தால், சாதி , அந்தஸ்து அல்லது உறவு என்ற பெயர்களில் தீ வைத்துக் கருக்கப்படும். ஆனால்,  அதன் வேர்கள் தொடர்ந்து வாழும். அந்த வேர்களே இங்கு இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் இலக்கிய கூறுகளாகும்  (Literary Themes)  

எங்கோ பார்த்தேன், ஞாபகமில்லை:    இந்தியாவில் ஐந்து வீதக் காதல்கள் மட்டுமே  திருமணத்தில் முடிகிறது . இலங்கையில் சிங்களவர் மத்தியில் அதிகமாகவும்,   பாகிஸ்தான்- வங்கதேசத்தில்  குறைவாகவும்  இருக்கலாம் என்பது எனது ஊகம். தென்னாசிய சமூகத்தில் கல்யாணத்தின் நோக்கம்  இனவிருத்தியே. உடலுறவில்  ஈடுபட்டு குழந்தைகள் பிறந்து,  வளர்ந்த பின்பு,  மத்தியகாலத்தில் குழந்தைகளது வாழ்வையும்,  தங்கள் வாழ்க்கையையும் திரும்பிப்பார்க்கிறார்கள்.  அந்த வாழ்க்கையின் நினைவுகள்,  , சுமை வண்டியை இழுத்தபடி சந்தைக்கு வந்த  இரட்டை மாடுகள்,   இறுதியில் களைத்தபின்பு நிழலில் படுத்து அசைமீட்கும் நினைவுகளாக அவர்களுக்கு இருக்கும். அப்படியான மனிதர்களே நேற்றைய மனிதர்களாக இந்த சிறுகதைத் தொகுப்பின் பக்கங்களில் உலா வருகிறார்கள். 

அவர்களின் மனங்களில்,   நாம் இதுவரை ஒன்றாகப் பிணைக்கப்பட்டிருந்தாலும் பரஸ்பர நேசம், பாசம்,  காதல் உணர்வுகள்  இருந்தனவா?  உண்மையான உணர்வுகள்  எங்கள் வாழ்வில் மிஞ்சியதா?

பல  கேள்விகள் நிற்கும்.

சிலர் உடலுறவை ஒரு சமையல் வேலைபோல்  முடித்து, நன்றாகச்  சோப்பு போட்டுக் குளித்துவிட்டு,  வேறு அறையில் போய் படுப்பார்கள்.

சொந்த நாட்டில் தொடர்ந்து வாழ்பவர்களுக்குப்  பாரம்பரியமாக பிள்ளைகளுடன் ஒன்றாக வாழ்வது,  பேரக்குழந்தைகளைப் பராமரிப்பது போன்ற விடயங்களால்,   அவர்களது பிற்கால வாழ்வுகளின் வெற்றிடங்கள்  நிறைக்கப்படுகிறது. ஆனால்,  புலம் பெயர்ந்து இங்கிலாந்து  போன்ற மேற்கு  நாடுகளில் வாழும்போது,  அவர்களது குழந்தைகள் பிரிந்து,   சுதந்திரமாக தாங்கள் வாழும் நாட்டிற்கேற்ப காதல்,  திருமணம்,  பொருளாதார விடயங்களில் முடிவெடுத்து, தன்னிச்சையாக  ஈடுபடுகிறார்கள் .

மேற்கு நாடுகளில் நிலஉடமை மனப்பான்மையில், பெற்றோர்கள்  மின்சாரமற்ற உயர்மாடிக்  கட்டிடத்தின் லிஃப்ட்டில் அடைபட்டு,   வெளிவராது  இருக்கும்போது,  பிள்ளைகள் முதலாளித்துவ நிலைக்கு இலகுவாக  வளர்த்தெடுக்கப்படுகிறார்கள். மத்திய கிழக்கு நாடுகளில் சில பெற்றோர்,  தங்களது  பெண்பிள்ளைகள் பருவமடைந்ததும்  சொந்த நாட்டுக்கு அனுப்பிவிடுவார்கள் அல்லது இடம் பெயர்ந்து விடுவார்கள்.  புலம்பெயர்ந்த தமிழர்கள் இலங்கை அரசியல் நிலை காரணமாக,  அகதிகள்போல் ரிட்டேன் ரிக்கட்டை கிழித்தெறிந்தவர்கள் திரும்பிப்போக முடியாது.

ஐரோப்பாவில்  கிட்டத்தட்ட 500 வருடங்கள் படிப்படியாக  நடந்த சமூக பொருளாதார, தனிமனித உறவுகளில்  மாற்றங்கள்,  புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தில் ஒரு தலைமுறையிலே நடந்துவிடுகிறது.

இதில் விசேடமென்னவென்றால் பெண்கள் அவர்களுக்குக் கொடையான இயற்கையின் தன்மையால் மாற்றங்களைச் சமாளிப்பார்கள். ஆண்கள் இதுவரையும் வீட்டில் கோலோச்சி,  கோனாக இருந்தவர்கள்,  அடிமையின் நிலைக்குத் தள்ளப்படுகிறார். இதுவரையும் பெற்றோரால் –  பாலூட்டி, சீராட்டி,   பாராட்டி, வளர்க்கப்பட்ட குழந்தைகள்,  இந்த இரு அவுஸ்திரேலிய கங்காருகள் (மாசூப்பியல்கள்)  ஏன் பாலூட்டிகளாக பரிணாமம்   அடையவில்லை! இவ்வளவு காலம்  இந்த நாடுகளில் வாழ்ந்து வருகிறார்களே!

 வியப்போடு பார்க்கிறார்கள்.

இந்தத் தொகுப்பில் பல கதைகள் இரண்டு தலைமுறைகளின் பார்வையின்  முரண்பாடாகும். பெண்களின் பார்வையில் எழுதப்பட்ட சில கதைகளின் ஆழம், துண்டுகளாக வருவது  சில நேரத்தில் புரிவது  கடினமாகக் கூட இருக்கலாம்.  மனித நினைவோட்டங்கள் சங்கிலித் தொடராக வருவதில்லை.

முதலாவது கதையான கங்கிறீட்– மத்திய வயதான பெண் தனது நினைவலைகளை மீட்கும் நவீனத்துவமான கதை  (Modern genre) . இளம் வயதில் பெண்களின் மார்பகத்தை   இளனி,  மாங்காய், குரும்பை,  காட்போட்  எனப் பல பெயர்களில் ஒரு காலத்தில்  அழைப்போம்.  அதனால் அந்தப்பெண்ணின் மனம் எவ்வளவு பாதிப்படைந்திருக்குமென்று நினைப்பதில்லை. அப்படி பெண்ணை எள்ளி நகையாடி   காங்கிறீட் என அழைத்தவனால்  மனவைராக்கியம் ஏற்பட்டு, இங்கிலாந்து சென்று படித்த பெண் பிற்காலத்தில் அவனுக்குப் பண உதவி செய்வதாகக் கதை செல்கிறது. அதைப் புரிந்து கொள்ளமுடியாத பாத்திரமாக  அவளது  கணவன். 

கதையில் முக்கியமான விடயங்கள்  நினைவோடையில் சிறிய துண்டுகளாக வந்து விழுகின்றன. (உதாரணம் Mrs. Dalloway in bond street by Virginia Woolf)

உடலொன்றே உடைமையாக–  என்ற கதை நண்பன் ஒருவனுக்கு வீட்டில் இருப்பதற்கு அறையொன்றைக் கொடுத்துவிட்டு,  அவனுக்கும் தனது மனைவிக்குமிடையே ஏதும்  தொடர்பு உள்ளதா என ஆய்வு செய்து அங்கலாய்க்கும் ஆணின் பார்வையில்  மனவோட்டங்களாக வருகிறது

இந்தத் தொகுதியில் மிகவும் ரசித்துப் படித்தது:  காதலுக்கு ஒரு போர் என்ற சிறுகதையே . இதன் களம் இலங்கையில் கிழக்கு மாகாணம். இந்தக் கதையில் உள்ள நகைச்சுவை நம்மைக் கொரோனாவாகத் தொற்றும். கதையைப் படித்து முடிந்தவுடன்  கிழக்கு மாகாணத்தின்  நிலக் காட்சி,   பண்பாடு,   அங்கிருக்கும் சில மூடநம்பிக்கைகள் என்பவற்றுடன் அக்காலத்து அரசியலும் உங்களில் அழுத்தமாகப் படியும் . கதையைப் பற்றி நான் இங்கு கோடு காட்டப்போவதில்லை. நிச்சயமாக மறக்க முடியாத கதையாகும்.

ஹிட்லரின் காதலி – ஹிட்லரின் கடைசி நாட்களை,  அவனது செல்ல நாயான ப்லோண்டி (Blondi)  என்ற நாயின் பார்வையிலும்,  ஆசிரியரின் பார்வையிலும் கலந்து எழுதப்பட்ட வரலாற்றுக் கதை . ப்லோண்டிக்குத் தரப்பட்ட சயனைட்  தரமான விஷமா எனக் கொடுத்துப் பரீட்சித்தபோது அது இறக்கிறது.  அதேபோல் ஹிட்லரின் காதலியும் இறக்கிறாள். அதன்பின்பு ஹிட்லரின் தற்கொலைஎனக் கதை வளர்கிறது . வரலாற்றைப்  புனைவாகவும்,  நாய் ப்லோண்டியை முக்கிய கதை சொல்லும் பாத்திரமாகவும் வரும்போது கதை சுவைக்கிறது.

நேற்றைய மனிதர்கள்- என்ற புத்தகத் தலைப்புக்குரிய கதை.  காதலற்று பெற்றோரால் திருமணம் செய்விக்கப்பட்டு,  லண்டனில் வாழும்  இலங்கைத் தம்பதிகள்,  தங்கள் பிள்ளைகள் சுயமாக வேறு இனத்தவரை  அந்தஸ்துகள் பார்க்காது காதலிப்பதையும், திருமணம் செய்யவிருப்பதையும் அரைகுறை மனதோடு சம்மதிக்கும் கதை.

மேதகு வேலுப்போடி என்ற  2006   இல் வீரகேசரியில் வெளிவந்த  கதையில்,  அந்த ஊரையே தனது மந்திரத்தால்  கட்டுப்படுத்தி,  பயமுறுத்தி,   பல கொடுமைகள் செய்த  பூசாரி வேலுப்போடி,  இரத்தம் கசிய மணலில் வீழ்ந்து கிடக்கிறார் என இரண்டாம் பந்தியில் தொடங்குவது,  முள்ளிவாய்க்காலில் பிரபாகரன் கிடந்ததாக இராணுவத்  தளபதி கமல் குணரத்தின  ரோட் ரு நந்திக்கடலில் (Road to Nandikadal)  எழுதியதை நினைவூட்டியது. இந்தக் கதை கிழக்கு மாகாணத்து மந்திரவாதியினது கதை. பேய்களில் எத்தனை வகை , எப்படி வசிய எண்ணை எடுப்பது எனப் பல விடயங்கள் உள்ளன. கதையின் வெளிவந்த காலம்-    விடுதலைப்புலிகளின் உள்வீட்டுப்பிளவு நடந்த காலம்

டார்லிங்–  என்ற கதை காதலற்ற திருமணத்தின் விளைவுகள்.  வாழ்நாள் முழுவதும் கடமைக்காக  வாழும் புலம் பெயர்ந்த தம்பதிகளது கதை. 60 வயதான தனது மனைவியை டார்லிங் என்பதற்காகப் புகார் எழுதிய கணவனாக விரிந்து,  இலங்கையில் நடந்த அரசியல் காட்டிக் கொடுப்புகள் என மீண்டும் லண்டனில் வந்து கதை  நிற்கிறது.

 

 

தொலைந்துவிட்ட உறவு

சாதியால் பிரிக்கப்பட்ட காதலைப் பிரிந்த ஆண்,  தாய் சொன்ன பெண்ணைத்   திருமணம் செய்து  முப்பது வருடங்கள் அன்னியமாக வாழ்ந்து வந்த கதை. இருவரது வாழ்வில்  மீண்டும் காதல் வருகிறது. காதல் என்பது  தென் ஆசியச் சமூகத்திற்கு  ஆயுத முனையில்  நடத்தும் வழிப்பறி கடத்தல் போன்ற வன்செயலாகப் பார்க்கப்படுகிறது – இது ஒரு அசல் புலம் பெயர்ந்த வாழ்வை சித்திரிக்கும் கதை .

அப்பாவின் இந்துமதி  – மகனது நினைவுகளில் சொல்லப்படும் வித்தியாசமான காதல் கதை. நீண்ட கதையை  கவனமாக வாசிக்கும் போது புதிர், கொடிக்கம்பத்தில் சுற்றப்பட்ட சீலையாக அவிழ்கிறது. இறுதிப்பக்கங்கள் வரையும் இந்துமதிக்கு என்ன நடந்தது   என்பது  மறைபொருளாக வைக்கப்படிருகிறது

மக்டொனல்டின் மகன்  என்ற கதையும் இதே போன்றது.  தமிழ், சைவ ஆசாரங்களுடன் வளர்ந்தது மட்டுமல்ல ,  லண்டனில் அவற்றை வளர்க்க  உதவியவரது மகள்,    பிணத்தை எரிக்கும் மக்டொனால்டின் (Funeral Director) மகனைத் திருமணம் செய்வதை ஏற்கமுடியவில்லை.  அவரது அங்கலாய்ப்பே இந்தக் கதை.

முகநூலும் அகவாழ்வும் – இலங்கையில் நடக்கும் கதை .  ஆனால் இங்கும் காதலைக் கருக்கியபின் வேறு கல்யாணம் செய்து வாழ்ந்தவர் ,  தனது மகள் காதலித்து திருமணம் செய்ததைத் தாங்காது தனது மன உழற்சியைத் தவிர்க்க  முகநூலில் மூழ்கி இருப்பது கதையாகிறது. விரக்திகள்,  விட்டவைகள்,  மற்றும் கைதவறியவைகளை நினைத்து உழல – அல்ககோல்,  சிகரெட்,  சூதாட்டம், போதை வஸ்து என்பவைபோல் முகநூலும் உள்ளது என்ற நுண்ணிய உணர்வை வெளித்தரும் கதையிது.

பேயும் இரங்கும் என்ற இறுதிக் கதை இலங்கையின் கிழக்கு மாகாணக் கதை. பேய் மனிதர்களிலும் நேர்மையாக நடந்துகொள்ளும் என்பதைப் புரியவைக்கும் சிறிய,  ஆனால் எனக்குப் பிடித்த கதை.

இறுதியாக, இந்தச்  சிறுகதைத்தொகுதிக்கு ஒரு சிறு குறிப்பு எனப் பேராசிரியர் சித்திரலேகா மௌனகுரு எழுதியது,  இராஜேஸ்வரியை பற்றியதாகவே இருக்கிறது . இலங்கையிலும் தமிழ்நாட்டிலும்  இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியதிற்கு அறிமுகம் தேவையில்லை.  அவரது சிறுகதைகளே இங்கு பார்க்கப்பட்டிருக்கவேண்டும்.  நாவல் சிறுகதைகளுக்கு முன்னுரை எழுதும்போது அந்தப் படைப்பே முக்கியம்.  அதனாலே பலர் புனை பெயரில் எழுதுகிறார்கள். ஜோர்ஜ் எலியட் என்ற ஆங்கில  பெண் எழுத்தாளரை  (மேரி ஆன் எவன்ஸ் ) பலகாலமாக ஆண் என்றே எழுத்துலகம் நம்பியிருந்தது. 

இந்நூலின்  பதிப்பாசிரியர் எழுத்தாளர் இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தை அறிமுகப்படுத்துகிறார் .  அதுவே போதுமானது .  சிறுகதைகளின்  பெரும்பகுதி பெண்களின்  மனநிலையில் பெண்குரலாகச்  சொல்லப்படுகிறது .  அதைப் பேராசிரியர் சித்திரலேகா மௌனகுரு எழுதியிருந்தால் இவை பெண்ணிய இலக்கியத்தின் கூறுகளாகப் பார்க்கப்பட்டிருக்கும்  என எனக்குத் தோன்றுகிறது.

இலங்கையில் இலக்கிய  நூல்களைத்   தரமாக பதிப்பிக்க முடியும் என்பதற்கு மகுடம் பதிப்பாக வந்த நேற்றைய மனிதர்கள் உதாரணமாகிறது.

—0—

uthayam12@gmail.com

Series Navigationதீபாவளிக் கவிதைகவிதையும் ரசனையும் – 23 – சுரேஷ் ராஜகோபாலின் என்பா கவிதைகள் ……
author

நடேசன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *