2020ஆம் ஆண்டிற்கான ‘விளக்கு’ விருதுகள் அறிவிப்பு – கவிஞர் சுகிர்தராணி   , பேரா. ஸ்டாலின் ராஜாங்கம்

author
0 minutes, 15 seconds Read
This entry is part 17 of 17 in the series 7 நவம்பர் 2021

 

2020ஆம் ஆண்டிற்கான ‘விளக்கு’ விருதுகள் அறிவிப்பு

 

அமெரிக்கத் தமிழர்களின் ’விளக்கு’ இலக்கிய அமைப்பின் 25வது (2020) “புதுமைப்பித்தன் நினைவு” விருதுகளை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம். எழுத்தாளர் திலகவதி, பேரா. சு. சண்முகசுந்தரம், கவிஞர் சமயவேல் ஆகிய மூன்று உறுப்பினர்களைக் கொண்ட நடுவர் குழு 2020 ஆம் ஆண்டின் விருதுக்குரியவர்களாக கீழ்காணும் இரு எழுத்தாளர்களை ஒரு மனதாகத் தேர்வு செய்துள்ளது.

 

  1. கவிஞர் சுகிர்தராணி   கவிதைகள், பெண்ணியச் செயல்பாடுகள்     

                      

.

  1. பேரா. ஸ்டாலின் ராஜாங்கம்   –            

தலித்திய நோக்கில் இலக்கிய, சமய                             

மற்றும் அனைத்து வரலாற்றுப் பிரதிகளின்       

                                 உண்மைத் தன்மையை அயோத்தியதாசர் 

                                 முறைமையில் பிரதி ஆய்வுகள்,          

                                 தமிழகத்தில் அழிக்கப்பட்ட, அடையாளம்  

                                 மறைக்கப்பட்ட பௌத்தம் பற்றிய கள 

                                 ஆய்வுகளும் என மாற்று அரசியலையும்

                              மாற்றுப் பண்பாட்டையும் உருவாக்குதல்,

 

ஒவ்வொன்றும் ரூ 1,00,000 மதிப்புள்ள இவ்விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.

 

விருதாளர்களைப் பற்றிய குறிப்புகளும், அவர்களின் பங்களிப்புகள் பற்றிய குறிப்புகளும், அவர்களின் படைப்புகளின் பட்டியல்களும் அடுத்த பக்கங்களில் கொடுக்கப்பட்டுள்ளன.

 

இந்தச் செய்தியை தங்கள் தொலைகாட்சி, செய்தித்தாள், அல்லது பத்திரிகையில் விரிவாக வெளியிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

 

‘விளக்கு’ செயற்குழு

அக்டோபர் 30, 2021

 

 

 

 

 

 

 

 

கவிஞர் சுகிர்தராணி

கவிஞர் சுகிர்தராணி இராணிப்பேட்டை மாவட்டம், இராணிப்பேட்டை நகரத்திற்கு அருகில் உள்ள இலாலாப்பேட்டை என்னும் கிராமத்தில் 1973ல் பிறந்தவர். தாய் -தவமணி, தந்தை – சண்முகம். தந்தை இராணிப்பேட்டையில் உள்ள EID Parry நிறுவனத்தில்  பணி புரிந்தவர். சுகிர்தராணி 1-10 வகுப்புவரை  இலாலாப்பேட்டை அரசுப் பள்ளியில் படித்தவர். 11 -12 வகுப்புகளை இராணிப்பேட்டையில் படித்தார். பின்னர் இராணிப்பேட்டையில் உள்ள அரசு மகளிர் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் ஆசிரியர் பயிற்சி பெற்றார். பிற படிப்புகள்: எம்.ஏ. – தமிழ் இலக்கியம், எம்.ஏ. – பொருளாதாரம், பி.எட்.- தமிழ்.

 

தற்போது இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காவேரிப்பாக்கம் என்னும் ஊரில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பட்டதாரி தமிழ் ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். கவிஞர் சுகிர்தராணி 1990களின் பிற்பகுதியிலிருந்து கவிதைகள் எழுதி வருகிறார். இதுவரை ஆறு கவிதைத் தொகுப்புகள் வெளியிட்டிருக்கும் இவரது ஏழாவது கவிதைத் தொகுப்பு விரைவில் வெளிவர இருக்கிறது. ஆறாவது தொகுப்பு வரையிலான மொத்தத் தொகுப்பும் “சூடிய பூ சூடுக” என்ற தலைப்பில் தயாராகி வருகிறது.

 

1990க்குப் பிறகான தமிழ்க் கவிதை இளம் கவிகளுக்கு புதிய சிறகுகளை வழங்கியது. ஆனால் தமிழ் பாரம்பர்ய சங்க காலம், சங்கம் மருவிய காலம், காப்பியக் காலம், பக்தி எழுச்சியின் காலம் ஆகிய தமிழின் சிறப்பான கவித்துவங்களை உள்வாங்கிக் கொண்ட ஒரு பெரிய இளம் கவிகளின் பட்டாளமே உருவாகியது. தமிழின் திணை மரபு மீட்கப்பட்டது. செழிப்பான தமிழ்ச் சொற்களஞ்சியத்தில் அழகுச் சொற்களில் தங்கள் புதிய தவிப்புகளை, ஏக்கங்களைக் கனவுகளைப் பதிவு செய்தார்கள். உலகமயமாக்கலின் தொடக்க கால அரசியலையும் உள்வாங்கி எழுதினார்கள் என்பதுதான் சிறப்பு. இவர்களுடனே தங்களுடைய அசலான பெண்குரலை மீட்டெடுத்த பெண்கள் சிலரும் எழுத ஆரம்பித்ததுதான் தமிழ்க் கவிதைப் புத்தெழுச்சியின் சிறப்பு எனக் கூறுவேன். இவர்கள் ஆண்டாளின் தொடர்ச்சியாக வீறுகொண்டு எழுந்து வந்தார்கள். ஒரு சமயத்தில் உள்ளடங்கிய குரலில் திடுக்கிட வைத்த சுகந்தி சுப்பிரமணியனின் கவிதைகள் மீட்கப்பட்டு மிகப்புதிய குரலில் கூரிய சொல்லாயுதங்களோடு வலிமையாகக் கிளம்பின.

 

சுகிர்தராணி, சாதிக்கு எதிராகவும் ஒடுக்கப்பட்ட பெண்களுக்காகவும் தொடர்ந்து எழுதியும் செயல்பட்டு வருபவர். பெண்ணியச் செயற்பாட்டாளர், சமூக ஆர்வலர். தலித் பெண்ணிய செயல்பாடுகளில் தொடர்ந்து இயங்கி வருபவர். பெண்களுக்கான இயங்குவெளி என்பது சமூகத்தாலும் ஆண்களாலும் வரையறுத்து வைக்கப்பட்டிருப்பதையும், பெண்களின் உடல் என்பது ஆண்களின் அடக்குமுறைக்கும், பாலியல் அதிகாரத்திற்கும் களமாக இருப்பதையும் தன் படைப்புகள்மூலம் கேள்விக்குட்படுத்தி வருபவர்.

 

சுகிர்தராணி எழுதுகிறார்: “பெண் உடலரசியல் இயக்கம் 2000க்கு பிறகு தீவிரமடைந்திருந்தது.  பாலினச் சமத்துவமின்மை, பெண்கள் மீதான கலாசாரப் பண்பாட்டு சமூக அழுத்தங்களை பூடகமாகச் சொல்லி ஆணாதிக்கத்தை இன்னும்  வலுப்படுத்தாமல் கவிதை எனும் ஆயுதத்தை இன்னும் கூர்மையாக வைக்க வேண்டிய தேவை எழுந்தது. ஆனால் உடலரசியல் என்றாலே இங்கே காமத்தை எழுதுகிறார்கள் என்று தட்டையாகத் தவறாகப் புரிந்து கொள்கிறார்கள். பெண் உடலைச் சிதைக்கும்  மனப்பான்மை உலகெங்கும் ஒரே மாதிரிதான் இருக்கிறது. பெண்ணுடைய உடல் போகத்திற்கானது அல்ல, அவள் உடலும் உள்ளமும் ஒருசேர  விடுதலை அடைவதுதான் சமூக மாற்றத்திற்கான வழி என்பதால் இவற்றை வெளிப்படையாகப் பேச வேண்டிய தேவை எழுகிறது. சாதித் தூய்மை,  குடும்பத் தூய்மை அனைத்தும் பெண் உடலில் இருப்பதாக இங்கே கட்டமைக்கப்பட்டிருக்கிறது.” பெண்கள் தம் அதிகாரத்தை வென்றெடுக்க உடலரசியலை ஒரு கூர்மையான ஆயுதமாகப் பயன்படுத்த வேண்டும் என்பதை உரக்கச் சொல்லி வருபவர், பெண்ணுடல் விடுதலை பெறாமல் பெண்விடுதலை சாத்தியமில்லை. பெண்விடுதலை அடையாமல் தலித்விடுதலை சாத்தியமில்லை என்பதை தன் கவிதைகளின் அடிநாதமாகக் கொண்டிருக்கும் சுகிர்தராணி, ஒரு தலித் கவிஞரும்கூட. தான் ஒரு தலித்தாகவும் பெண்ணாகவும் இருக்கச்சொல்லி சமூகம் வற்புறுத்தியதாலேயே எழுத வந்தேன் என்றும் முகத்தில் அறைந்து கூறுகிறார்.

 

சுகிர்தராணி இதுவரை

  1. கைப்பற்றி என் கனவு கேள். (2002),
  2. இரவு மிருகம் (2004),
  3. அவளை மொழிபெயர்த்தல் (2006),
  4. தீண்டப்படாத முத்தம் (2010),
  5. காமத்திப்பூ (2012)
  6. இப்படிக்கு ஏவாள் (2015)

ஆகிய ஆறு கவிதைத் தொகுப்புகள் வெளியிட்டிருக்கிறார்.

 

இதில் முதல் கவிதைத் தொகுப்பில் ஒரு இளம் கவியின் மனவிகாசமாக விரிகிறது. ஆண்டாள் போலத் தன்னைப் பாவித்துக்கொண்டு காதலின் ஏக்கம் பொங்கி வழியும் ரம்மியமானவை. காதலில், தனது அடையாளத்தை முன்னிறுத்துகிறார். தனது இருப்பையும் தனக்கான சுதந்திரத்தையும் முதன்மைப்படுத்தும் தொகுப்பு என்ற வகையில் முக்கியமானதாகிறது. ஏனெனில் தலித்தின் வாதைகளைப் பேசும் கவிதைகளும் இத்தொகுப்பில் இருக்கின்றன. ‘கைப்பற்றி என் கனவு கேள்’ என்னும் கவிதையில், பின்னால் வரப்போகும் எல்லாக் கவிதைகளின் முத்திரைகளும் அடங்கியுள்ளன.

 

“. . . . . . . . .
துள்ளும் வலியும்
மின்னலென வெட்டும்
வேதனையும்
உச்சமாய் எகிற
உயிரை அசைத்து
இரத்தச் சகதியில்
மீண்டழுத குழந்தையின்
துணி விலக்கி
பெண்ணென முகம் சுழிப்பவனே
அன்று
என் மீது பரவியபோது
மனம் களித்தவன் நீதானே?”

 

விமர்சகர் ந.முருகேசபாண்டியன் எழுதுகிறார்: “சுகிர்தராணியின் அடுத்தடுத்த இரு தொகுப்புகளும் கருத்தியல் ரீதியிலும் வெளிப்பாட்டு நிலையிலும் தனித்து விளங்குகின்றன. சராசரிப் பெண்ணின் புனைவியல் மனோபாவத்திற்கும் ஏக்க உணர்வுகளுக்கும் மாற்றாகத் தீவிரமான பெண் முன்னிறுத்தப்படுகிறாள். மரபு வழிப்பட்ட காதல் பற்றிய புனைவினைச் சிதைத்து, உடல்களை மையப்படுத்தி, பெண்ணுடல் இதுவரையிலும் மறைக்கப்பட்ட பெண் குல வரலாற்றை எழுதுவதற்கான ஆதாரமாகின்றது. தமிழ்ச் சமூகம் பன்னெடுங்காலமாக மர்மப்படுத்தியுள்ள உடலையும் விலக்காகக் கருதி ஒதுக்கப்பட்ட கற்பிதங்களையும் புனைவின் உச்சமாகக் கருதி மறைக்கப்பட்ட பாலுறுப்புகளையும் கட்டுடைக்கின்றன சுகிர்தராணியின் கவிதைகள். பெண்ணுடலை மையப்படுத்தி அவர் எழுதியுள்ள கவிதைகளில் பெண் அரசியல் பொதிந்துள்ளது. பெண்ணுடலை எப்படி வேண்டுமானாலும் உருமாற்றுவதற்கான சாத்தியப்பாடுகளை முன்னிறுத்தும் வரிகள் ‘அவளை எழுதுதல்’ என்ற கவிதையாக வடிவெடுத்துள்ளன. பிரக்ஞையில் எப்பொழுதும் பெண் என்ற உடல்ரீதியான மன அழுத்தம் நசுக்குகையில், அதிலிருந்து வெளியேறி உடலை முன் வைத்து ஆண் மேலாதிக்கக் குரலை எதிர்ப்பது கவிதைகளில் நுட்பமாக வெளிப்பட்டுள்ளது. அது மரபு வழியில் உறைந்துகிடக்கும் ஆண் மனங்களில் பண்பாட்டு அதிர்வுகளை ஏற்படுத்துகின்றது. இரண்டாயிரமாண்டுப் பாரம்பரியமுடைய தமிழ்ச் சூழலில் இந்நிலைக்கு எதிராகக் காமத்தை முன்னிறுத்திப் பாலியல் தொடர்பாகப் பெண்ணுடலை மறுவாசிப்புச் செய்திடும் சுகிர்தராணியின் கவிதைகள் தனித்த போக்குடையன. கருத்து ரீதியில் பெண்ணுடலை வெறும் யோனியும் முலைகளுமாகக் குறுக்குவதும் நடைமுறையில் துய்க்கப் பட்ட உடல்களைத் தூக்கியெறிந்துவிட்டுப் போவதுமான ஆண் மைய நுகர்வுப் பண்பாட்டிற்கு எதிராகப் பெண்ணின் காம வேட்கையை முன்னிறுத்திப் பெண் விடுதலையை மையப்படுத்தும் கவிதைகள் தமிழுக்குப் புதியன. மேலும், பாலியல் மூலம் இயற்கையை அவதானிக்க முயல்வதும் பெண்ணுடலை அடையாளப்படுத்துவதும் கவிதைகளின் வழியே தொடர்ந்து முயலப்பட்டுள்ளது.”

“இதுவரை ஆண் மூலம் தன்னையும் தன் உடலையும் தன் பாலியல் வேட்கையையும் கண்டறிவதாகக் கட்டமைக்கப்பட்டிருந்த பெண் பிம்பம் தகர்ந்துபோய், பெண் தனது சுயேச்சையான தேர்வின் மூலம் வீறுகொள்கிறாள். உடலைப் பேசுவதன் மூலம் உடல் அரசியலை முதன்மைப்படுத்தும் சுகிர்தராணியின் கவிதைகள், பெண்ணுக்கான அசலான கொண்டாட்டத்தினைச் சாத்தியப்படுத்தியுள்ளன. இவ்வடிப்படையில் பெண்ணின் சுயபுணர்ச்சி குறித்துப் பேசும் கவிதைகள் முக்கியமானவை. பண்பாடு என்ற நிலையில் பெண் தன்னுடைய காம உணர்வை வெளிப்படையாகக் கூறமாட்டாள் என்ற பொதுப்புத்தியைச் சிதைத்துப் பாலியல் தேவையை விடுதலைக்கான முன்மொழிவாகச் சித்திரிப்பது நவீன அறம் சார்ந்தது. 

சுகிர்தராணியின் கவிதைகளில் வெளிப்படும் இன்னொரு முக்கியமான அம்சம், தலித்திய நோக்கிலான சமூக விமர்சனமாகும். வைதீக சமயம் பிறப்பின் அடிப்படையில் மனிதர்களைப் பிரித்துத் தீண்டாமையைக் கற்பித்திருப்பது, இந்திய சமூகத்தைப் பிடித்துள்ள பெரும்சாபக்கேடு. அதிலும் தலித்தாகப் பிறந்த பெண்ணின் பிரச்சினைகள் ஒப்பீட்டளவில் தலித் ஆணைவிடக் கூடுதலானவை. அவளுடைய உடலின் மீது கணவன் மட்டுமின்றி, ஆதிக்க சமுதாயமும் தொடர்ந்து வன்முறையைச் செலுத்துகின்றது. இன்னொரு புறம் பொருளியல் சுரண்டலின் ஆதிக்கம் வலுவாக உள்ளது. பால் ரீதியில் தலித் பெண்ணின் குரல் சமூக அடித்தளத்தில் பலவீனமாக ஒலித்துக்கொண்டிருக்கின்றது.”

கவிஞர் சுகுமாரன் எழுதுகிறார்: “சுகிர்தராணியின் இந்தத் தொகுப்பு (தீண்டப்படாத முத்தம்) அவர்களை இன்னும் மிரட்சியடையச் செய்யலாம். உடல் தொடர்பான வலிகளை, வாதைகளை, ஆனந்தத்தை வேறு எந்தச் சொற்களால் குறிப்பிட முடியும்? பெண் கவிதைமொழியே உடலும் உடலின் உபாதைகளும் வேட்கைகளும் சார்ந்தது என்று ஜூலியா கிறிஸ்தவா குறிப்பிடுகிறார். இது ஒரே சமயத்தில் மறுப்பும் படைப்புமாகிறது. இதுவரை தன் உடல்மேல் பதிந்திருக்கும் ஆண்மையச் சித்தரிப்பை உதறும் மறுப்பு. தன் உடல் தன்னுடைய உரிமைப் பொருள் என்று உணரும் சுதந்திரம். இந்த நோக்கில் வெறும் வஸ்துவாக சுட்டிய சொற்கள் பெண்ணால் உச்சரிக்கப்படும்போது உடலைக் கடந்த இயக்கமாகின்றன.”

ஆண்மையக் கருத்தாக்கங்கள் தயாரித்து வந்த பெண் என்ற கருத்தாக்கப்படிமத்தைப் சுகிர்தராணியின் பெண்மொழியே நிராகரிக்கிறது. இந்தியக் கலாச்சாரம் முன்வைக்கும் நிபந்தனைகளையும் சலுகைகளையும் மறுக்கிறது. தனது உடலையும் தன்னையும் தனது பெண்ணினத்தையும் விடுதலைப்படுத்தும் இவரது கவிதைகள் பிறப்பால் இழிவுபடுத்தப்படுவதற்கான “தலித்” என்னும் அநியாயமான ஒடுக்குமுறையிலிருந்தும் விடுதலையாகி கொக்கரிக்கும் கவிதைகள் இந்தத் தொகுப்பில் மையக் கவிதைகள்.


“பெண்ணின் காமமும் காதலும் சித்தரிக்கப்படும் கவிதைகள். சுகிர்தராணியின் கவிதைகளைப் பொருத்தவரை காமமும் காதலும் ஒன்றுதான். அதன் ஆதாரம் உடலின் சமிக்ஞைகள்தாம். காமமோ காதலோ மனம் சார்ந்தது என்ற ரொமாண்டிக்கான கருத்தை இந்தக் கவிதைகள் உதாசீனப்படுத்துகின்றன; புறக்கணிக்கின்றன. ஒரு கவிதையின் மையப்பாத்திரம் தன்னைக் ‘காமத்தின் புராதனக் கோவில்’ என்றே சொல்லுகிறது. சுகிர்தராணியின் இரண்டாம் தொகுப்பான ‘இரவு மிருக’த்தில் ஒரு கவிதை இருக்கிறது. ‘உலகத்து மொழிகளின்/ அத்தனை அகராதிகளிலும்/ தேடித் தேடி/ கடைசியில் தெரிந்துகொண்டேன்/உன் பெயரில் காதலுக்கு/ நிகரான இன்னொரு சொல்லை.’ இந்த மென்மையான கற்பனைகளைப் புதிய தொகுப்பில் காண்பது அரிது. மூன்றாவது கூறு: இந்தக் கவிதைகளில் இடம்பெறும் இயற்கை. சமீப காலத்தில் அதிக அளவுக்கு மனித வயப்படுத்தப்பட்ட இயற்கை அல்லது இயற்கையை ஒட்டிச் சித்தரிக்கப்பட்ட மானுடக் கூறுகள்கொண்ட கவிதைகள் இவை என்று சொல்லலாம். மனித சரீரம் இயற்கையின் பகுதியாகவோ இயற்கையின் அம்சங்கள் மனித உடலின் விரிவாகவோ சித்தரிக்கப்படுகின்றன. ‘முதல் கூடலுக்கு முன் நிகழ்ந்தவை’ (பக் 39) என்ற கவிதையை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.” என்று கவிஞர் சுகுமாரன் மேலும் குறிப்பிடுகிறார்.

 

தமிழில் பெண் மையக் குரலை வலுவான குரலில் மரபார்ந்த சமூகத்தின் செவிட்டில் அறைந்து கதறும் சுகிர்தராணியின் கவிதைகள் வெறும் பிரச்சாரமாக நிற்காமல் மிகுந்த கவித்துவத்துடன் மிகப்புதிய அதிர்ச்சியூட்டும் படிமங்களாகவும் வெளிப்படுகின்றன. இன்று, இவரது கவிதைகள் உலகம் முழுவதும் பல மொழிகளிலும் சென்று சேர்ந்திருக்கின்றன. நவீன தமிழ் இலக்கியத்தை உலகம் கவனிக்கும் விதமாக நம்மைப் பெருமிதம்கொள்ள வைக்கும் கவிஞர் சுகிர்தராணியைக் கௌரவித்துப் போற்றும் வகையில் 2020ஆம் ஆண்டின் புனைவு எழுத்துகளுக்கான ‘விளக்கு’ விருதினை அவருக்கு அளிப்பதில் ‘விளக்கு’ விருது’ நடுவர் குழுவும் ‘விளக்கு’ அமைப்பும் மனநிறைவும் மகிழ்வும் கொள்கின்றன.

 

படைப்புகள்:

  1. கைப்பற்றி என் கனவு கேள். (2002),
  2. இரவு மிருகம் (2004),
  3. அவளை மொழிபெயர்த்தல் (2006),
  4. தீண்டப்படாத முத்தம் (2010),
  5. காமத்திப்பூ (2012)
  6. இப்படிக்கு ஏவாள் (2015),

 

டிசம்பர் 2021 ல் வெளியாக இருக்கும் புதிய படைப்புகள்:

  1. நூலின் பெயர்: சூடிய பூ சூடுக (ஒன்றிலிருந்து 6 கவிதைத் தொகுப்பு வரை ஒரே நூலாக வருகிறது.)
  2. ஏழாவது கவிதைத் தொகுப்பு: இன்னும் பெயர் வைக்கப்படவில்லை.
  3. எழுதிக்கொண்டிருக்கும் நாவல் முடியும் தருவாயில் உள்ளது.

 

 

விருதுகள்:

  1. தேவமகள் கவித்தூவி விருது 2002 -கோவை. (விருது ரூ 2000)
  2. பாவலர் எழுஞாயிறு விருது, சேலம். (விருது ரூ 5000)
  3. சாதனைப் பெண் விருது, பெண்கள் முன்னணி – எழுத்தாளர் சிவகாமி IAS அமைப்பு.
  4. புதுமைப் பித்தன் நினைவு விருது – காலச்சுவடு
  5. அம்பேத்கர் பேரொளி விருது, அம்பேத்கர் 125 வது ஆண்டு நிறைவு விழா, தலித் பண்பாட்டுக் கூடல், சென்னை.
  6. The Vibrant Voice of Subalterns Award, 2018, திருவள்ளுவர் பல்கலைக் கழகம்,வேலூர். விருது ரூ.10,000
  7. குத்தூசி குருசாமி நினைவுவிருது – இப்படிக்கு ஏவாள், கோவை.
  8. அன்னை மீனாம்பாள் சிவராஜ் விருது, இந்தியக் குடியரசுக் கட்சி, தமிழ்நாடு மாநிலக் குழு
  9. அவ்வை விருது, மீறல் இலக்கியக் கழகம், புதுச்சேரி. விருது ரூ 10,000
  10. எழுத்துச் செம்மல் விருது, அம்பேத்கர் இலக்கியக் கழகம், சென்னை.
  11. சுந்தர ராமசாமி விருது, நெய்தல் இலக்கிய அமைப்பு, நாகர்கோயில்.
  12. காரைக்கால் அம்மையார் விருது, பன்னாட்டு பெண்கள் அமைப்பு, சென்னை.

 

வெளிநாட்டுப் பயணங்கள்:

  1. ஜெர்மனி (2016). ஜெர்மனி அரசின் கலை பண்பாட்டுத் துறை மூலம் ஜெர்மனி நாட்டுக்கு அழைக்கப்பட்டு கவிதை வாசிப்பு, கவிதை குறித்த உரையாடல் நிகழ்ந்தது.

      பெர்லின், ஹம்பர்க், ஸ்டுட்கார்ட்,லியோன்பெர்க் ஆகிய நகரங்கள்.முதல்    

      வெளிநாட்டு விமானப் பயணம்.

  1. வட அமெரிக்கா (2017). வட அமரிக்க தமிழ்ச்சங்க பேரவை ஆண்டு விழாவின் சிறப்பு விருந்தினர், மினியாபொலிஸ்.

கேரி, சார்லட், சிகாகோ, நியூயார்க், வாஷிங்டன் டிசி, ஆகிய இடங்களில் 

      இலக்கியம், என் படைப்புகள் குறித்து உரையாடல்..

கனடா – ஒண்டாரியோவில் கவிதை வாசிப்பு.உரையாடல்.

  1. சிங்கப்பூர் (2018). சிங்கப்பூர் வாசகர்வட்டம் சார்பாக நூல் வெளியீடு மற்றும் உரையாடல்
  2. மலேசியா (2018). கோலாலம்பூர், ஈப்போவில் இலக்கிய நிகழ்வுகள்.
  3. இலங்கை – மட்டக்களப்பு பெண்கள் சந்திப்பு.
  4. குவைத் – வானம்பாடி கவிஞர்கள் சங்கம் சார்பாக சிறப்பு விருந்தினராக அழைப்பு.

 

சிறப்புகள்:

  1. தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் பல பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் இவருடைய கவிதைகள் இலக்கியத் துறைகளில் பாடமாக வைக்கப்பட்டுள்ளன.

 

  1. பல ஆய்வு மாணவர்கள் இவருடைய கவிதைகளை ஆய்வு செய்து முனைவர் மற்றும் எம்.பில். பட்டங்களைப் பெற்றிருக்கின்றனர். இப்போதும் ஆய்வு செய்து வருகின்றனர்.

 

  1. டெல்லிப் பல்கலைக் கழகத்தில் மகாஸ்வேதா தேவி, பாமா, சுகிர்தராணி ஆகியோரின் படைப்புகள் நீக்கப்பட்ட உலக அளவில் பெரும் சர்ச்சையானது. பல எழுத்தாளர்களும், அறிவுஜீவிகளும் சமூக செயற்பாட்டாளர்களும் குரல் கொடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். தமிழக முதல்வர் மாண்புமிகு ஸ்டாலின் அவர்களும் தமிழ் எழுத்தாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து சட்டமன்றத்தில் அறிக்கை வெளியிட்டார்.

 

  1. இத்தாலியில் நிரந்தர கவிதைக் கண்காட்சியகத்தில் என் கவிதை ஒன்று இத்தாலி மொழிபெயர்க்கப்பட்டு, தமிழில் என் கையெழுத்தில் எழுதிய அந்தக் கவிதையும் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது.

 

  1. உலகின் புகழ்பெற்ற இடதுசாரி பதிப்பகமான வெர்சோ பதிப்பகம், உலகெங்கிலும் உள்ள பெண்ணியச் சிந்தனையாளர்கள்பற்றிக் கொண்டு வந்திருக்கும் The Verso Book Of Feminism ‘Revolutionary words From Four Millennia Of Rebellion’ என்னும் நானூறு பக்க தொகுப்பில்’ மெல்லிய புலால் நாற்றம் வீசும்’ என்னும் என்னுடைய கவிதையின் ஆங்கில மொழிபெயர்ப்பும் என்னைப்பற்றிய சிறு குறிப்பும் இடம்பெற்றுள்ளது. மொழிபெயர்ப்பாளர்  மறைந்த லக்‌ஷ்மி ஹோம்ஸ்ட்ராம். இது உலக அளவில் தனது  கவிதைக்கான மிகப்பெரிய அங்கீகாரம் என்று கருதுகிறார்

       கவிஞர் சுகிதராணி.

 

  1. இவருடைய தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, ‘நதி என்பது என் பெயர்’ என்னும் கவிதைத் தொகுப்பாக கடந்த வாரம் வெளியானது. இது மலையாள இலக்கிய உலகில் இவருக்கான அங்கீகாரம்.

பேராசிரியர் ஸ்டாலின் ராஜாங்கம்

 

ஸ்டாலின் ராஜாங்கம் திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகிலுள்ள முன்னூர் மங்கலம் என்ற ஊரில் 1980ல் பிறந்தவர். தந்தை ராஜாங்கம், தாயார் காளியம்மாள். எளிய விவசாய குடும்பத்தில் பிறந்த இவர் முதல் தலைமுறை பட்டதாரி. சொந்த ஊரின் அரசுப் பள்ளிகளில் பள்ளிக் கல்வியை முடித்து ஆசிரியர் உதவியால் கல்லூரிப் படிப்பு படித்தார். மதுரை செந்தமிழ்க் கல்லூரியிலும் அமெரிக்கன் கல்லூரியிலும் படித்து, பின்னால் திண்டுக்கல் காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். அயோத்திதாசரின் மாற்றுக் கதையாடல்களும் தமிழ் இலக்கியங்களும் என்ற தலைப்பில் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார். இப்போது மதுரை அமெரிக்கன் கல்லூரி தமிழ்த்துறையில் உதவிப் பேராசிரியர் பணிபுரிகிறார். இவரது துணைவியார் பூர்ணிமா. புத்தமித்ரன்,  ஆதன் சித்தார்த் என்று இரு மகன்கள்.

 

விமர்சனம், ஆய்வு ஆகிய மிக முக்கியமான துறைகளில் இளைஞர்களின் பங்கு ஒரு சிறிதும் இல்லாத காலத்தில் ஒரு அபூர்வமான, துடிப்பான இளம் ஆய்வளராக ஸ்டாலின் ராஜாங்கம் 2000களில் எழுதத் தொடங்கினார். குடும்பத்தில் அம்பேத்கர் திராவிட இயக்கம் என்கிற அறிமுகத்தை பெற்றிருந்தாலும்  கல்லூரி நாட்களில் இடதுசாரி அமைப்புகளிடம் நெருக்கம் கொண்டிருந்தார். தொண்ணூறுகளில் கிளைபரப்பி இருந்த தலித் இலக்கியம், தலித் திறனாய்வு ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டு எழுத தொடங்கினார். அவருடைய முதல் நூலான ”சனநாயகமற்ற சனநாயகம்” (ஜனவரி 2007) நூலில் இடம்பெற்றுள்ள அவரைப் பற்றிய அறிமுகக் குறிப்பில் 1990களில் உருவான தலித் எழுச்சியின் இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்தவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவரை 13 மிக முக்கியமான நூல்களை எழுதியுள்ளார்.

 

இவரது தொகுப்பு நூல்கள் ”எதார்த்த பெளத்தம்” (2012), ”அயோத்திதாசரும் சிங்காரவேலரும்: நவீன பெளத்த மறுமலர்ச்சி இயக்கம் (வெளிவராத விவாதங்கள்” (2010) ஆகிய இரண்டு தொகுப்பு நூல்களுமே மிக முக்கியமானவை. இத்துடன் அழிந்த பௌத்தம், சமணம் ஆகிய மதங்களின் ஆதி அடையாளங்களைத் தேடி இவர் நடத்தி வரும் கள ஆய்வுகளும் அவற்றைப் பற்றிய ஆய்வுக் கட்டுரைகளும் ஒரு புதிய ஆய்வு முறையை தமிழில் புகுத்தியிருக்கிறது. மாற்று வரலாற்று ஆய்வு, மாற்று இலக்கிய ஆய்வு, மாற்றுக் கள ஆய்வு என இடைவிடாமல் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறார் ஸ்டாலின் ராஜாங்கம். ஒரு சில இளைஞர்கள் இவரது ஆய்வு முறைமைகளைக் கற்றுப் பின்பற்றி வருவதைக்கண்டு மிக மகிழ்ச்சியாக இருக்கிறது.

தீவிரமான அரசியல் விமர்சனக் கட்டுரையாளராக தொடங்கிய ஸ்டாலின், அதே சமயம் தலித் வரலாறு தொடர்பான கட்டுரைகளையும் எழுதி வந்தார். தலித்துகளுக்கு பிறர் நடத்திய போராட்டங்களே இதுவரை எழுதப்பட்டு வந்திருக்கின்றனவே ஒழிய தலித்துகள் தங்களுக்காக நடத்தி வந்த போராட்டங்களும் தொகுக்கப்பட வேண்டும் என்ற முறையில் அவருடைய  வரலாறு குறித்த தொடக்க காலக் கட்டுரைகள் அமைந்திருப்பதை ‘வரலாற்றை மொழிதல்’ என்கிற நூல் வழியாகப் புரிந்து கொள்ள முடிகிறது. ஸ்டாலின் ராஜாங்கம் வரலாறு குறித்து எழுதுகையில் படிப்படியான வளர்ச்சியைப் பார்க்க முடிகிறது. அப்போதிருந்தே தேடிச் சென்று அறியப்படாத ஆளுமைகளை எழுதியிருக்கிறார். தேடல், புரிந்து கொள்ளல், எழுதுதல் என்பதன் வாயிலாகவே அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்கிறார்.

 

இவற்றின் வாயிலாக ஸ்டாலின் ராஜாங்கத்தின் எழுத்து அடைந்த மாற்றங்கள் எவையென்றால்: வரலாறு என்பது ஆவணங்கள் சார்ந்ததோ, மொத்தத்துவப் பண்பு கொண்டதோ அல்ல. மாறாக அவை அந்தந்த வட்டாரங்களின் தனித்துவமான பண்புகளுடன் அமைந்தவை. அவற்றை அத்தகைய பண்புகளுடனேயே தொகுக்க வேண்டும். ஏறக்குறைய இது உள்ளூர் வரலாறு ஆகும். வரலாறு என்பதை விமர்சனப் பூர்வமாக எழுத வேண்டும் என்பதும் இருக்கிறது. ஒரு ஆளுமை, இயக்கம், போராட்டம் பற்றி எழுதும் போது அதில் நடந்த அர்ப்பணிப்பு, தொடர்ச்சி, தோல்வி, சமரசம் ஆகியவற்றையும் பதிவு செய்கிறார்.

 

இந்த வகையில் ஸ்டாலினின் எழுத்து சிறியவற்றின் பக்கம் நிற்கிறது. சிறுசிறு இயக்கங்கள், அறியப்படாமலே போன உள்ளூர் ஆளுமைகள், வரலாற்றிற்குள் வராத போராட்டங்கள் ஆகியவற்றை எழுதியிருக்கிறார். இதனை ”எழுதாக் கிளவி” நூலில் பார்க்க முடியும்.

 

வரலாற்றிற்குள் வராத பதிவுகள் என்ற முறையில் இவர் அதிகம் செல்லுவது கள ஆய்வை நோக்கி. அங்கு இவர் பெயர் சூடல், சிறு கடிதம், பிரசுரங்கள், மக்கள் நினைவுகள், சிலை, பாடல்கள் ஆகியவற்றை சேகரித்து ஒருவரைப் பற்றிய புரிதலை உண்டாக்குகிறார். வஞ்சி நகரம் என்கிற கிராமத்தில் சாதி ஆதிக்கத்திற்காக போராடி இறந்து போன கந்தன் என்பவரை நடுகல் போல மக்கள் பராமரிக்கிறார்கள். கந்தன் உயிரோடு இருந்த போது எழுதிய டைரி பதிவுகள், அரசுக்கு தந்த விண்ணப்பங்கள் ஆகியவற்றைத் திரட்டி அவர் பற்றி ”வஞ்சிநகரம் கந்தன்” என்னும் சிறு நூல் ஒன்றை எழுதியிருக்கிறார் ஸ்டாலின். அதேபோல அம்பேத்கரின் கடிதத்தில் இடம்பெற்ற ஒரு பெயரிலிருந்து தொடங்கி உள்ளூர் முதியவர்களின் நினைவு வரை சென்று காந்தியவாதியான ஆனந்த தீர்த்தர் என்பவர் பற்றி எழுதியிருக்கிறார்.

 

அவருக்கென கருத்தியல்கள் இருப்பினும் தன்னுடைய கருத்தியலை

அளவுக்கோலாகக் கொண்டு மட்டுமே வரலாற்றின் மீது அவர் திணிப்பதில்லை. ஒரு தலைவர் இவ்வாறு தான் இருந்தார் என்று வரலாறு கூறுகிறது. ஆனால் மக்களிடம் அந்த வரலாறு மிகையாகவோ, குறையாகவோ இருக்கிறது எனில் ஸ்டாலின் வரலாற்றை சொல்லி விடுகிறார். அதற்காக மக்களைக் குறைசொல்வதில்லை. மாறாக மக்கள் ஏன் அவ்வாறு கூறுகிறார்கள் என்பதை சமூக, அரசியல், உளவியல் பின்னணியோடு விளக்க முயற்சிக்கிறார். இதை அவருடைய மிகப்பெரிய பலமாகக் கருத வேண்டும்.

 

இவ்வாறு மக்களிடமிருந்து தரவுகளை சேகரிக்கச் செல்கையில் மக்களிடம் தரவுகள் வெளிப்படையாக இல்லாமல் கதை, நினைவுகள் என்று பண்பாட்டு அடையாளங்களில் இருப்பதால் பண்பாட்டு நிலையிலும் இயங்க வேண்டி வருகிறது.

 

இந்த இடத்தில் தான் ஸ்டாலின் ராஜாங்கத்தின் அயோத்திதாசர் பற்றிய வாசிப்பு வந்து முக்கியத்துவம் பெற்று விடுகிறது. அயோத்திதாசர் பற்றி ”அயோத்திதாசர் : வாழும் பெளத்தம்”, ”பெயரழிந்த வரலாறு”, ”வைத்தியர் அயோத்திதாசர்”  ஆகிய மூன்று நூல்களும் மிக முக்கியமானவை. ”நவீன பெளத்த மறுமலர்ச்சி இயக்கம்: வெளிவராத விவாதங்கள் – அயோத்திதாசரும் சிங்காரவேலரும்” என்கிற தொகுப்பும் அவ்வாறே இவரது ஆய்வுப்போக்கைப் பூர்த்தி செய்கிறது.

 

அயோத்திதாசர் ஆய்வில் இரண்டு பணிகளை மேற்கொள்கிறார். ஒன்று அயோத்திதாசரைப் புரிந்து கொள்வது / விளக்குவது. இரண்டாவதாக அயோத்திதாசர் என்னும் மனிதரை விடுத்து அவரின் சிந்தனையை எடுத்துக் கொண்டு விவாதிப்பது. இதன்படி அயோத்திதாசர் மூலம் ஆய்வுச் சட்டகம் அல்லது ஆய்வு முறைமை என்கிற ஒன்றை அவர் தனியே எடுத்து வைக்கிறார். அந்த முறையியலைக் கையாண்டு வரலாற்றை, சமூக நடைமுறைகளை விளங்கிக் கொள்ள முடியும் என்கிறார். ஏற்கனவே இருக்கக் கூடிய முறையியல்கள் மூலம் பண்பாடு பற்றி இதுவரை கிடைத்திராத புதிய  புரிதல்கள் கிடைக்கின்றன. இந்த முறையியல் படி அவர் மேற்கொள்ளும் கள ஆய்வுகளிலிருந்து தமிழக வரலாறு பற்றி சில வியப்பூட்டும் செய்திகள் கிடைக்கின்றன. தலை வெட்டப்பட்ட புத்தர் சிலைகள், உள்ளுர் தெய்வங்களுக்கான வழிபாட்டு முறைகள் பற்றி அவர் எழுதியிருப்பவற்றை இதற்கான உதாரணமாகக் கூறலாம். இதன் மூலம் தலித் பிம்பமாக அறியப்பட்ட அயோத்திதாசர் இயல்பாகவே தமிழ் பண்பாட்டு சிந்தனையாளராக மாறிப் போகிறார்.

 

இந்த வகையில் ஸ்டாலின் ராஜாங்கம் எழுதிய பெயரழிந்த வரலாறு என்கிற நூல் முக்கியமான ஒன்று. இந்நூல் ஒரேவேளையில் அயோத்திதாசர் பற்றிய நூலாகவும் மறுநிலையில் குறிப்பிட்ட காலக்கட்ட தமிழக வரலாற்றைப் பற்றிய நூலாகவும் அமைந்திருக்கிறது. அதாவது அயோத்திதாசரின் முறையியலை எடுத்துக் கொண்டு அவர் வரலாற்றின் மூலம் விளங்கிக் கொண்ட பகுதிகளை விளக்குவதாகவும், தமிழ் மரபில் ஆய்வு அணுகுமுறை எவ்வாறு இருந்து வந்திருக்கின்றன என்பன பற்றிய அழுத்தமான கேள்விகளை எழுப்புவதாகவும் இருக்கின்றன. குறிப்பாக உ.வே.சா.வும் அயோத்திதாசரும் பற்றிய கட்டுரையில் ஐரோப்பிய ஆய்வு முறையியலின் வரையறை பற்றியும், ஒவ்வொருவருடைய வாசிப்பில் ‘தான் ‘ என்பது கலப்பது – கலக்காதது பற்றிய பிரச்சினை குறித்தும் விவாதித்திருப்பது முக்கியமான பதிவாக அமைந்துவிட்டது.

 

நவீன வாசிப்பில் அயோத்திதாசர் ஏன் புனைகதையாளர் போல் பார்க்கப்படுகிறார் என்பதை விளக்கும் போது எழுத்து சார் பிரதிகள் – பதிப்பு அரசியல் – அவற்றை வைத்து எழுதப்பட்ட வரலாறு போன்றவற்றின் வழியாக நவீனத்துவம் உருவாக்கிய நினைவு எது? மறதி எது ? என்கிற பார்வையை முன்வைக்கிறார். இந்நூலைப் பார்க்கும் போது அயோத்திதாசர் என்பவர் தந்த புரிதலைப் பயன்படுத்திக் கொண்டு – சாட்சியமாகக் கொண்டு தமிழ்த் தன்மை கொண்ட ஆய்வு முறையியல் ஒன்றை சமைக்க முயற்சிக்கிறார் எனலாம். ஒரு சிந்தனையாளர் நூறு ஆண்டுகளுக்கு பின் கண்டுபிடிக்கப்படுகிறார் என்றால், அவர் நூல்களை வைத்து விரிந்த வாசிப்பும், அதன் வழி புதிய புரிதல்களையும் விவாதங்களையும் உருவாக்க வேண்டும். அதனை ஸ்டாலின் செய்திருக்கிறார். அடித்தள சமூகக் குழுக்களிலிருந்து உருவாகி வரும் அறிவுக்குழுவுக்கான குரலாகவும் இதனைக் கொள்ளலாம். வரலாற்றை மாற்றி எழுதுவது என்பது வரலாற்றில் புதிய தகவலை கொணர்ந்து சேர்ப்பதில் இல்லை. மாறாக அதனை எழுதும் முறையியலில் இருக்கிறது என்பது ஸ்டாலின் ராஜாங்கம் பலமாக நம்புகிறார்.

 

அயோத்திதாசர் புகழ் பெற்ற  சித்த வைத்தியராக இருந்தார் என்கிற தகவலை எடுத்துக் கொண்டு வைத்தியர் அயோத்திதாசர் என்கிற புதிய கோணத்திலான நூலை எழுதியிருக்கிறார். வைத்தியம் பார்த்தல், வைத்தியர் என்பவை நம்முடைய செவ்விலக்கியங்களில், மக்கள் நம்பிக்கைகளில் வழிபாடாக – விவாதமாக இருந்து வந்ததைப் பதிவு செய்கிறார். நோய் , வைத்தியம் என்கிற எதிர்மறையில் வைத்து தமிழ் பண்பாட்டு வரலாறு எழுதப்பட்டுள்ளது.

 

அயோத்திதாசர் சாதியமைப்பு எவ்வாறு பரவி நிலைபெற்றது என்பதை சில படிநிலைகளாக விளக்கியிருப்பதை ஸ்டாலின் தன்னுடைய ‘அயோத்திதாசர் : வாழும் பெளத்தம்’ என்னும் நூலில் எடுத்துக் காட்டியிருக்கிறார். சாதியை விட, அது ஏன் இந்தச் சமூகத்தில் நிலைபெற்றிருக்கிறது என்கிற காரணத்தை அறிவது முந்தைய கட்டுரைகளில் ஸ்டாலின் ராஜாங்கத்தால் விவாதிக்கப்பட்டிருக்கிறது (”ஆணவக் கொலைகளின் காலம்” நூலில்). இந்நிலையில் அயோத்திதாசரின் இந்த படிநிலைகளிலான விளக்கம் ஸ்டாலினுக்கு உதவுகிறது. அவர் அடிக்கடி சமூக உளவியல் என்கிற சொல்லைக் கட்டுரைகளில் கையாள்கிறார். அயோத்திதாசர்  படிநிலைகளாக காட்டும் கூறுகள், சமூக உளவியலில் சாதியம் நிலை பெற்றதை, இன்னும் நிலவுவதைப் புரிந்து கொள்ள உதவுகின்றன. அதனை ஸ்டாலின் இன்றைய நடைமுறைகளைப் புரிந்துக் கொண்டு விரிவாக்குகிறார். ஸ்டாலின் ராஜாங்கத்தின் விமர்சன இயலின் முக்கியமான பங்களிப்பு இது.

 

ஒரு கருத்து நிலைபெறுவதற்கான படிநிலைகளாக அயோத்திதாசர் கூறும் இந்த கூறுகளை தன்னுடைய திரைப்பட விமர்சனங்களில் விரிவாக எடுத்தாண்டிருக்கிறார் ஸ்டாலின். ஸ்டாலினின் சினிமா விமர்சனங்கள் புதுமையாகத் தெரிவதற்கு இவையே காரணம். குறிப்பாக ஒரு கருத்தை அல்லது அடையாளத்தை திரும்பத் திரும்பச் சொல்லுவதால் சமூக உளவியலில் உருவாகும் நிலைபேறு பற்றி பேசியிருக்கிறார். சினிமா பற்றி மட்டுமல்லாமல் பொதுவெளியில் நிலவும் பிம்பங்கள், ஊடகங்கள் பற்றியும் எழுதி வந்திருக்கிறார். குறிப்பாக சினிமாவை சினிமாக்குள்ளிருந்தது அணுகும் விமர்சன முறையை விடவும், சினிமா பாடலாக – கதையாக – போஸ்டராக – பேனராக என்றெல்லாம் எவ்வாறு சமூகத் தளத்தில் பொருள் கொள்ளப்பட்டிருக்கின்றன என்று எழுதியிருப்பது தமிழில் புதிது (தமிழ் சினிமா: புனைவில் இயங்கும் சமூகம்). அண்மையில் எழுதிய ‘எண்பதுகளின் தமிழ் சினிமா’ நூலில் புதிய வாதம் ஒன்றை வைத்திருக்கிறார். அதாவது தமிழ் சினிமா தலித்துகளைப் புறக்கணித்தது என்பதற்கு மாறாக தலித் கதையாடல் என்பது எவ்வாறு தொடர்ந்து உள்மெய்யாகப் புழங்கி வந்திருக்கிறது என்று வாதிடுகிறார். கிராமப்புறத் தெய்வங்கள், அதனோடு தொடர்புடைய சமூகக் குழுக்கள், உள்ளூர் இசை மரபு, குடும்ப அமைப்புக்கு வெளியே உள்ள பெண்களின் கலை என்று விவரிக்கப்படுகிறது. வெகுஜன சினிமா வணிக விதிகளின்படியே இயங்கிறது என்பதை ஒத்துக் கொள்ளும் வேளையில் சமூக இயங்குமுறைக்கும் அதற்கும் உள்ள உறவு சினிமாவில் எவ்வாறு ஊடாடியிருக்கிறது என்று சொல்லியிருக்கிறார். அதனாலேயே ‘திரைப்படக் கதையாடல்களினூடான தமிழக சமூக வரலாறு’ என்று நூலுக்கு துணைத் தலைப்பும் இட்டிருக்கிறார்.

 

ஸ்டாலின் நூல்களை எழுதியிருப்பதோடு முக்கியமான நூல்களை பதிப்பித்திருக்கிறார். அவற்றுள் ஒன்று 1978 ஆம் ஆண்டு விழுப்புரத்தில் நடந்த வன்முறையில் 12 தலித்துகள் கொல்லப்பட்ட சம்பவம் பற்றிய நூலும், இரட்டை மலை சீனிவாசனின் சுய சரிதை நூலும் முக்கியமானவை. பதிப்புகளே ஆனாலும் கள ஆய்வு மூலம் திரட்டப்பட்ட தகவல்களைச் சேர்ந்தே பதிப்பித்திருக்கிறார்.

 

 

ஜெயமோகன் எழுதுகிறார்: “ஸ்டாலின் ராஜாங்கத்தின் “எழுதாக்கிளவி வழிமறிக்கும் வரலாற்று ஆவணங்கள்” என்னும் நூலை கையிலெடுத்தபோது படித்து முடிக்க குறைந்தது ஒருவாரம் ஆகும் என்று நினைத்தேன். அதன் தலைப்பு உருவாக்கிய சித்திரம் அது. அன்று மத்தியானத்திற்குள் அந்த நூலை படித்து முடித்தபோது ஒரு வியப்பு ஏற்பட்டது. சென்ற பல ஆண்டுகளில் ஒரு கட்டுரை நூலை இத்தனை ஆர்வத்துடன் நான் படித்ததில்லை.” மேலும் “ஸ்டாலின் ராஜாங்கத்தின் இந்நூல் முழுக்க மறுதரப்பையும் கருத்தில் கொள்ளும் நிதானமும், எவரையும் புண்படுத்தும் அல்லது சீண்டும் நோக்கமற்ற முதிர்ச்சியும், அதேசமயம் தன் தரப்பை வலுவாக முன் வைக்கும் அறப்பற்றும் செயல்படுகின்றன. ஐயமே இன்றி இந்த தலைமுறையின் தலைசிறந்த சிந்தனையாளர்களில் ஒருவர் என்று ஸ்டாலின் ராஜாங்கத்தை இந்நூலை மட்டுமே ஆதாரமாக்கிச் சொல்ல முடியும்… நேரடியான களச்செயல்பாடுகளிலிருந்து கிடைத்த ஒரு அனுபவத்தை, ஒரு திறப்பை முதலில் புனைவுக்குரிய ஒருமையுடன் விவரிக்கிறார். அதிலிருந்து ஒரு சமூக எதார்த்தத்தை நோக்கியோ ஒரு அரசியல் கருத்தை நோக்கியோ விரிந்து செல்கிறார். இது புனைவிலக்கியத்தின் கட்டமைப்பை கட்டுரைகளுக்கு வழங்குகிறது. வாசகனின் ஆர்வம் தூண்டப்பட்டு வெவ்வேறு கோணங்களில் அவனுடைய சிந்தனை விரித்து எடுத்துக் கொண்டு செல்லப்படுகிறது.”

 

“தங்கள் வாழ்வுரிமைப் போரில் மாண்டவர்களும் , தலைமைதாங்கியவர்களும் அடித்தள மக்களின் நினைவில் எப்படியெல்லாம் நிலைநிறுத்தப்படுகிறார்கள் என்பதை விளக்கிச் செல்கிறது. சிந்து முதலிய பாடல்கள், வாய்மொழியாக உலவும் அனுபவக் கதைகள், முதியவர்களின் நினைவுகள், குழந்தைகளுக்குப் பெயர்கள், அரிதாகச் சிலைகள் என அந்நினைவுப்பேணல் பலமுகம் கொள்கிறது. போராட்டநினைவுகளை பேணிக்கொள்வதே ஒருவகை போராட்டம். அது போராட்டத்திற்கான உணர்வுக்குவியம்… ஒவ்வொரு கட்டுரையிலும் முன் முடிவுகள் இல்லாத ஒரு பயணம் நிகழ்வதனால் பிற தலித் எழுத்தாளர்களின் கட்டுரைகளில் இருக்கும் குறுகிய அரசியலை இத்தொகுதியில் பார்க்க முடியாது. அதாவது அரசியல் வழியாக இந்த களயதார்த்தங்களை ஸ்டாலின் பார்க்கவில்லை, மாறாக கள யதார்த்தம் வழியாக ஓர் அரசியலை வந்தடைகிறார்…. தெளிவான ஆதாரங்களுடன் வரலாற்று இயக்கத்தை புரிந்துகொண்டு கல்வியாளனின் நிதானத்துடன் அந்த தரப்பை முன்வைக்கிறார். ஆகவே அவற்றின் கனமும் விசையும் மேலும் அதிகமாகிறது”

 

இந்த நூலை ஒரு வகை வீரகதைப்பாடலென்று சொல்ல தயங்கமாட்டேன். சென்ற கால லட்சியவாதத்தின் முன் ஸ்டாலின் ராஜாங்கம் சென்று நிற்கிறார். சமகால அரசியலில் லட்சியவாதத்தை விட நடைமுறை நோக்கும் அடக்கத்தை விட ஆர்ர்ப்பாட்டமும் அர்ப்பணிப்பைவிட தந்திரங்களும் முக்கியத்துவம் பெறும் சூழலில் பெரும் கனவுகள் நிகழ்ந்த சென்ற காலத்தை நோக்கிச் செல்லும் ராஜாங்கத்தின் உள்ளம் செல்வதை என்னால் மிக அணுக்கமாகப் புரிந்துகொள்ள முடிவதாக இருக்கிறது. நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் எழுந்து வரும் சென்றகாலத்து மாமனிதர்கள் ஒவ்வொருவரின் முன்னாலும் நின்று பணிந்துதான் மேலே சென்றேன்.

 

கவிஞனின் பணி என்பது தன்னை எழுதுவது மட்டுமல்ல தன்னை விடப்பெரியவற்றின் முன் சென்று நின்று தன்னை இழப்பதும் கூடத்தான். வரலாற்று ஆசிரியனின் பணியும் அதுவே. வரலாற்றை மாமனிதர்களினூடாக வாசிக்கப்புகுந்த நூல் என்று இதைச்சொல்லலாம். இந்நூல் அளிக்கும் ஆளுமைச்சித்திரங்களுக்காகவே இதை ஒரு இலக்கிய சாதனை என்றும் தயங்காமல் சொல்வேன்.”

 

மிகப் புதிய ஆய்வுமுறைகள் மூலம் மாற்று வரலாற்றையும் மாற்றுப் பண்பாட்டையும் தலித்துகளுக்காக பெரும் ஆதாரங்களுடன் நிறுவியதையும் மேலும் பல ஆழமான ஆய்வுகளை முன்னெடுத்தும் செல்லும் ஒருவரான, “ஐயமே இன்றி இந்தத் தலைமுறையின் தலைசிறந்த சிந்தனையாளர்களில் ஒருவர்” என்று ஜெயமோகனால் பாராட்டப்படும் ஸ்டாலின் ராஜாங்கத்தைக்  கௌரவித்துப் போற்றும் வகையில் 2020ஆம் ஆண்டிற்கான ‘விளக்கு’ விருதினை அவருக்கு அளிப்பதில் ‘விளக்கு’ விருது நடுவர் குழுவும் ‘விளக்கு’ அமைப்பும் மனநிறைவும் மகிழ்வும் கொள்கின்றன.

***

 

நூல்கள் :

1) சனநாயகமற்ற சனநாயகம் (ஜனவரி 2007)

2) தீண்டப்படாத நூல்கள் :ஒளிபடா உலகம் (டிசம்பர் 2007)

3) ஆரிய உதடும் உனது, திராவிட உதடும் உனது (ஜனவரி 2008)

4) வரலாற்றை மொழிதல்.

5) தீராதியாகம் (அக்டோபர் 2010)

6) சாதியம்: கைகூடாத நீதி (டிசம்பர், 2011)

7) அயோத்திதாசர் :வாழும் பெளத்தம் (மே 2016)

8) எழுதாக் கிளவி: வழிமறிக்கும் வரலாற்று அனுபவங்கள் (ஏப்ரல் 2017)

9) தமிழ் சினிமா: புனைவில் இயங்கும் சமூகம் (ஜூன் 2016)

10) ஆணவக் கொலைகளின் காலம் (செப்டம்பர் 2016)

11) பெயரழிந்த வரலாறு (அயோத்திதாசரும் அவர் கால ஆளுமைகளும்,

           டிசம்பர், 2019)

12) எண்பதுகளின் சினிமா ( டிசம்பர் 2009)

13) வைத்தியர் அயோத்திதாசர் (பிப்ரவரி 2021)

 

பதிப்புகள் :

1) ஜி.அப்பாதுரையார் எழுதிய புத்தர் அருளறம்

2) விழுப்புரம் படுகொலை 1982 (ஆகஸ்ட் 2012)

 

தொகுப்புகள்:

  1. எதார்த்த பெளத்தம் (தொகுப்பாசிரியர், டிசம்பர், 2012)
  2. அயோத்திதாசரும் சிங்காரவேலரும்: நவீன பெளத்த மறுமலர்ச்சி இயக்கம் (வெளிவராத விவாதங்கள், அக்டோபர் 2010)

 

சிறு வெளியீடுகள் :

1) இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தலித்துகளின் பதிப்புப் பணிகள்

2) விண்ணப்பம் சொல்லும் விடுதலை (அயோத்திதாசரின் மூன்று ஆங்கிலக் கட்டுரைகளின் தமிழ் மொழிபெயர்ப்பு)

3) வஞ்சிநகரம் கந்தன் (மே 2008)

 

கூட்டு நூல் :

1) சாதி இன்று

 

விருதுகள் :

ஸ்பாரோ லிட்ரரி விருது 2017

 

எதிர்கால திட்டங்கள் :

  • நமது வரலாற்றில் சொல்லப்படாத,அழுத்தம் தரப்படாத – மறைந்திருக்கும் அவைதீக கூறுகளை,ஏற்கனவே எழுதப்பட்டிருக்கும் நூல்களிலிருந்து அல்லாமல் மக்கள் வாழ்விலிருந்தும்,மறு விளக்கங்கள் தந்தும் தமிழ் பண்பாட்டு வரலாறு எழுதுவது.
  • பதிவு செய்யப்படாத தலித் செயற்பாடுகள் – ஆளுமைகள் பற்றி தொடர்ந்து எழுதி வருவதை ஒட்டி ஒரு நூற்றாண்டுக்கான தலித் அரசியல் வரலாற்றை விமர்சனபூர்வமாக எழுதுவது.

 

 

 

 

Series Navigationசிவகுமார் என்ற ஓவியத்திற்கு வயது 80
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *