சிறை கழட்டல்..

author
2
0 minutes, 2 seconds Read
This entry is part 9 of 11 in the series 21 நவம்பர் 2021

 

மஹ்மூது நெய்னா .எஸ் – கீழக்கரை

சிறை கழட்டுவது ஹராமா ஹலாலா?

ஹலால்னு சொன்னா “பேயன்” என்று கைகொட்டி சிரிக்க ஊரில்  நூறு பேர் காத்திருப்பார்கள்…

 

ஊரில் திருமண நாளைக்கு முந்தைய இரவன்று சிறை கழட்டல் என்றழைக்கப்படும்  சடங்கு  ஏச்சுக்கும் எதிர்ப்புக்கும் மத்தியில் சில திருமன நிகழ்வுகளில் இன்றும்  தொடர்ந்தாலும். .பாரம்பரிய சடங்குகள் தற்போது பெயர் மாறி “மெஹந்தி ஃபங்ஷன்” என்ற பெயரில் நவீன சிறை கழட்டலை வடக்கிலிருந்து இறக்குமதி செய்து மருதானி படலமாக   பரிணாமித்து படு ஜோராகத்தான் நடந்து வருகிறது.

 

 

சிறையிலிருந்து மீட்பதுதான்  சிறை கழட்டுவதா மாமா?

நீண்ட நாள் இதயத்தில் பொத்தி வைத்திருந்த கேள்வியை பழைய  சரித்திரம் அறிந்த லெப்பைக்கனி மாமாவிடம் கேட்டேன்… முழுதும் நரைத்திருந்த  புருவங்களை வெடுக்கென சுருக்கியபடி…

சீதக்காதி மரைக்கா  பொறந்த ஊருலதனே நீமரு இருக்கிறீரு…

ஆமா… என்றேன்..

 

சீதக்காதி திருமணவாழ்த்தை படிச்சிகிறீருமா?

என்று கிடுக்கி பிடியாக எதிர் கேள்வி கேட்டார்..

 

அது என்ன வாழ்த்து? பழைய வீட்டில் கூடத்தில் சுன்னாம்பு மதிலில் பழுப்பு கரை ஏறி தொங்கி கொண்டிருக்கும் கண்ணாடி பிரேம் தானாகவே கன் முன் வந்து ஆடியது..

வாப்பாவோட  கல்யானத்துக்கு மெட்ராஸ்ல இருந்து வந்த கூட்டாளி ஒருவர் அன்பளிப்பாக கொடுத்த  திருமன வாழ்த்து போட்டா பிரேம்தான் அது..

 

ஆதம் நபி  – ஹவ்வா  தொடங்கி அலியார்- பாத்திமா நாயகி வரை மனமக்களை உவமானம் கூறி எழுதி  புகழும் வாழ்த்து கவிதை அட்டையை  சுற்றிய கட்டத்தின் நாலுமூலையிலும் நாலு ரோசாப்பூ படம் போட்டு ஒய்யாரமாக தொங்கும் திருமன வாழ்த்து போன்று இருக்குமோ.. என நினைத்துக் கொண்டேன்..

 

மனமக்கள் வாழ்த்துதான் தெரியும்  மாமா… என்று தயங்கிச் சொன்னேன்..

 

பொறவு என்னத்தபடிச்சி கிழிச்சீரோ… சொல்றேன் கேளும் என்றவர்..

அந்த காலத்துல் வைர யாவாரத்துக்கு கொழும்புக்கு போன இடத்துல சிறை பிடிக்கப்பட்ட நானூறு கோமுட்டி செட்டிமாரை சமரசம் பேசி மீட்டு கொண்டுவந்தவர்தான்  சீதக்காதி மரைக்கா…தெரிஞ்சு கொள்ளும் என்றார்…

 

சீதக்காதி திருமனவாழ்த்துல இதுவும் இருக்கிது …  என்ற லெப்பைகனி மாமாவின் முகத்தில் கர்வத்தின் ரேகைகள் மெலிதாக தெரிந்தது..

 

யாரு…லெப்பைகனியா.. மெத்தபடிக்கிறவன்ல அவன் .. என்று எப்போதோ வாப்பிச்சா சொன்னது காதில் வந்து அன்றுதான் உரைத்தது…

 

ஆஹா… அப்படியா சங்கதி .. அதான் சிறைகழட்டலா மாமா ?

 

கூறு கெட்ட மாதிரி பேசக்கூடாது… என்றார்

 

அந்த காலத்தில் மனப்பென்னுக்கு பூட்டப்பட்ட வஜ்ர அழுக்கத்து, வைடுரிய கருசமனி… என் ஏகப்பட்ட  ஆபரனங்களை மளமள வென  பட்டியலிட தொடங்கினார்….

 

முந்தைய காலத்தில் மனப்பென்னுக்கு இந்த அணிகலன்களை கையிலும், காதிலும் பூட்டுவதைதான் சிறை கழட்டுவது  என்று பெயரிடுவார்களா ?  சடங்குகள்  குதர்க்கமாகத்தான் இருக்குமோ என நினைத்தேன்…

 

நானூறு செட்டிமாரை சீதக்காதி மரைக்காயர் தென்  இலங்கையிலிருந்து மீட்டதுக்கும், லெப்பைகனி மாமா மானாவாரியாக பட்டியலிடும் இந்த வச்ர நெளி, சின்ன சிறை போன்ற ஆபரண வகைகளுக்கும் என்ன சம்பந்தம்?

யோசித்தால் மனப் “பிரவண்டம்”தான் அதிகமாகிறது… சீதக்காதி பெருமகனாரின் ஆஸ்தான புலவரான கந்தசாமிப் புலவரிடம்தான் பொருள் புதைந்திருக்க கூடும்…

 

இந்த நகை சமாச்சாரங்களை நான் அறிவேனோ இல்லையோ.. தங்கத் தோள்காப்பும், மடக்கு கொழுக்கட்டை போல காதுமடலில் விட்டு விட்டு நெடுக குத்தப்பட்ட குட்டித் துளைகளில்  பளீரென   மின்னும் வைர அலுக்கத்து  அணிந்து வரும் வாப்பிச்சாவின் தோழி அரக்காசுமாவை நன்கு அறிவேன்..

 

அரக்காசுமாவின்  கணவர் சந்தனப்பெட்டி மரிக்கா   ஒரு காலத்திப் சூரத்தில் மிகப்பெரும் வைர வியாபாரியாக வலம் வந்தவராம்,

வைர வியாபாரத்தில் ஊறித் திளைத்திருந்த குஜாராத்தி மார்வாடிகள் கண்களிலேயே விரலை விட்டு ஆட்டும் மதி நுட்பம் கொண்டவராம். ஆட்டின் விழி போன்றே இருக்கும் கருத்த  மச்சம் ஏறிய இடது கன்னை சந்தனப்பெட்டி மரிக்கா ஒருமாதிரி சுருக்கி மார்க்கட்டுக்குள் புதிதாக வரும் வைரத்தை கூர்ந்து நோக்கி மதிப்பை கூறி தூக்கி வீசினால் போதும்..

 சூரத் மட்டுமின்றி பம்பாய் வைர மார்க்கெட்டிலும் கூட அந்த வைரக்கல் அவர் நிர்னயித்த மதிப்புக்கு மேலே பத்து பைசா கூட அதிகமாக தேறாது  என்பார்கள்.

 

கற்களின் பார்வை பார்ப்பத்திலும், மதிப்பு சொல்வதிலும் சந்தன பெட்டி மரிக்காவின் மதி நுட்பத்தை கண்டு பெல்ஜியம் ஆண்ட்வெர்ப் நகரில் கோலோச்சும் யூத வியாபாரிகளே வியந்துபோனார்கள்..

 

கொழும்பு- ரத்னபுராவிலிருந்து யூத வியாபாரிகள் அடிக்கடி ஊருக்கே வந்து கனிக்க முடியாத வைர கற்களை கொண்டு வந்து மரிக்காரிடம் காட்டி செல்வது வழக்கமாக இருந்து வந்திருக்கிறது.

 

எனது ஆன்மீக குரு சேகுனாதான் ஒரு முறை சொன்னார்கள்….  2500 வருஷத்துக்கு முன்னாடி எழுதப்பட்ட அர்த்த சாஸ்த்திரத்திலேயே வைரத்தை பற்றி செய்தி இருக்கிது…பாமினி சுல்தான் முகம்மது பின் துக்ளக் காலத்துலதான் கோதாவரி ஆற்றங்கரையில  வைரக்கற்களை தோண்டி எடுத்து  இங்கிருந்து அரேபியாவுக்கும், ஐரோப்பாவுக்கும் நம்ம ஆளுவ அனுப்பி வியாபாரம் செஞ்சாங்க..என்றார்கள் .

 

உண்மைதான்.. முதலில் பட்டை தீட்ட இந்தியாவில் இருந்து வெனிஸ் நகருக்கு சென்று கொண்டிருந்த வைரங்கள் பின்பு மற்றொரு ஐரோப்பிய நகரமான

பெல்ஜியம் -ஆண்ட்வெர்புக்கு கொண்டு செல்லப்பட்டு பட்டை தீட்டப்பட்டு உலகமெங்கும் விற்பனை செய்யப்பட்டது.

 

இந்தியாவிலிருந்து கோஹினூர் வைரத்தை உருவிச் சென்று ருசி கண்ட ஆங்கிலேயர்கள்,பின்பு   கோயில், அரண்மனை, நவாப்கள், சுல்தான்கள், ஜமீன்தார்கள், சாமுத்திரிகள்,  பாளையக்காரர்கள் என எவரையும் விட்டு வைக்காமல் அவர்களிடமிருந்து கவர்ந்து எடுத்து சென்ற வைரங்களை பெல்ஜியத்தின்  ஆண்ட்வெர்ப் நகருக்குத்தான் கொண்டு போய் சேர்ந்தனர்.

 

வரலாறு மீண்டும் மீண்டும் திரும்புவது தொடர்கதையாகத்தான் போய்க்கொண்டிருக்கிறது.. அரக்காசுமாவின் கனவர்  சந்தனப்பெட்டி மரிக்காவிடம் மிக நம்பிக்கையாக  வேலை செய்த பல்லாக்கு தம்பி சமயம் பார்த்து கொடுக்கல் வாங்கலில் மரிக்காவிடம் இருந்த பலரின் வைரகற்கள் பார்சல்களை மொத்தமாக உருவிக் கொண்டு கானாமல் போனதால்,   அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு , பிறகு பம்பாய் நிழலுக காடையர்களால் சிறை பிடிக்கப்பட்டு  சித்திரவதை செய்யப்பட்டு … மரிக்காரின் ஜனாஸாதான் கடைசியில் ஊர் வந்து சேர்ந்தது..

நம்பிக்கை சிறைபட்டு நயவஞ்சகம் தனது கோரமுகத்தை காட்டிய நாள் அது…

 

சிறை கழட்டுறதுனா ஒன்னும் இல்ல வாப்பா…அந்தக்காலத்துல குமரிப்பிள்ளைகள  வீட்டோட வச்சு நகை போட உடமாட்டாஹா.. கல்யானத்துக்கு மொத நாள் இந்த சிறை கழட்டுற அன்னைக்கு மாப்பிள்ளை ஊட்டுக்காரவர்கள் வந்துதான் நகை போட்டு உடுவாங்க..  என்றார் அரக்காசுமா ..

.அவர் காதில் பூட்டப்பட்ட அலுக்கத்தில் அழுத்தப்பட்டிருந்த செரந்தீப் வைரத்தின் ஒளி கண்னைப்பறித்தது.  பெர்சியன் பூனைக் குட்டியின் மினுங்கும் விழிகள் போன்று ஜொலித்துக்கொண்டிருந்த அரக்காசுமாவின் காதுகள் சந்தனப்பெட்டி மரிக்காரின் இறப்புக்கு பிறகு மொட்டையாகி  காது கடுக்கு முள்ளில் துளைகள் மட்டுமே எஞ்சி போயிருந்தது..

 

அரக்காசுமாவின் இறுதி நாட்கள் ஒடுங்கிய அடுப்பாங்கரை சிறையாகி, இடியப்பம் அவிக்கும் அடுப்புத் தனலில் முடங்கிப் போகும் என நினைக்கவில்லை. விதியின் சுழலில் நெருப்பின் அனலே நிழலாகிப் போய்  வேகாமல் வெந்து ஒரு வெள்ளிக்கிழமை  சுப்ஹ் நேரம் அரக்காசுமா உயிரை விட்ட போது பனியக்கார தெருவே அழுதது…

 

காற்று வாங்க கடற்கரைக்கு போகும் பின் மாலை வேளைகளில் , லைட் ஹவுஸின் உச்சியில் பொறுத்தப்பட்ட 1000 வாட்ஸ் பல்புகள் பொறுத்தப்பட்ட  இராட்சத விளக்கின் மஞ்சள் ஒளி கடல்பரப்பை சுற்றி வட்டமிடும்.  ஜெட்டி பாலத்தின் உள் பகுதியில் இருளில் அமர்ந்து கொண்டிருக்கும் எங்களை தொட்டு செல்லும் வெளிச்சம் கடல்நீரில் பிசிறும் போது ஒய்யாரமாக துள்ளி மேலெழும்பும் பல பொடி மீன்களை நோக்கியவாறே பூபன் ஹஜாரிக்காவின் .. டில் ஹூம் ஹூம் கரீ .. பாடலில் லயித்து கிறங்கி கிடக்கும் வேளையில்

 

 ” இடியப்பம் வாங்க போவனும்.. டைம் ஆச்சு.   சீக்கிரம் கிளம்புங்க மச்சான் ” என யாஸீன் அவசரப்படுத்துவான்.. பனியக்காரத் தெருவில் அரக்காசுமா  அவிக்கும் இடியப்பத்தின் தெவிட்டாத சுவையில் கிறங்கி கிடந்த  யாஸீனுக்கு சூடான இடியப்பத்தை நெத்திலி கருவாடு பொறித்த என்னையில் பிசைந்து சாப்பிடுவது என்றால் வெகு இஷ்டம்.

 

அரக்காசுமா இடியப்பம் சுடுவதிலும் வைரத்தை பட்டை தீட்டும் நேர்த்தி இருக்கும், ரைஸ்மில்லில் அரைத்து வரும் கருப்பரிசி மாவை சளித்து  கப்பி மாவை தனியாக பிரிப்பதாகட்டும், பின் சளித்த மாவை மாவுசட்டியில் போட்டு பதமாக  வறுத்து எடுப்பதாகட்டும் அவ்வளவு இலாவகம்.

 

எரிந்து கொண்டிருக்கும் அடுப்பில் உலை சட்டியில் , இடியப்ப மாவை உரலில் பீச்சி பனை ஓலையில் முடைந்த ஓட்டைகள் நிறைந்த இடியப்பப தட்டில் அடுக்காக  வைத்து  அவித்து எடுத்து இடியப்பபத்தை ஆவி பறக்க   நார் பொட்டியில் போடும் போதே நாவு ஊறும்.

 

காய்ந்த குண்டு மிளகாய், தேங்காய் துறுவலுடன், மாசி கருவாடு சேர்த்து அரைத்த மாசி சம்பலுடன் சேர்த்து இந்த சூடு பறக்கும் இடியப்பத்தை சாப்பிட மனம் ஏங்கும்…. கைப்பக்குவமும், நேர்த்தியும் அரக்காசும்மாவுக்கு மட்டுமல்ல அவரது கணவர் சந்தனபெட்டி மரிக்காருக்கும் மிகுந்து வாய்க்க பெற்றது இறைவனின் அருள்தான்…

 

நீ கொடுத்தற்கே நன்றி சொல்ல முடியவில்லை இன்னும்…

இனி அடுத்தடுத்து கேட்பதற்கு அஞ்சுதே என் உள்ளம்..

 

நாகூர் ஈ.எம்.ஹனீபா வின் இந்த இசைப்பாடலில் எவ்வளவு உண்மை புதைந்து கிடக்கிறது என சில நேரம் வியப்படைவேன்..

 

ஒரு முறை சைக்கோனில் கிடைத்த காக்கை  முட்டை சைஸ் வைரக் கல்லை சிறு கற்களாக பிரிக்க பெலிஜியத்தில் இருந்து போன வைர விற்ப்பன்னர்களே முட்டிக் கொண்டு தினறிய போது சந்தனபெட்டி மரிக்கார் தான் விமானம் ஏறிப்போய் கற்களை சரி சமமாக பிரித்து கொடுத்தாராம்.

 

அதில் கிடைச்ச ஈவுல வாங்கிப்போட்டதுதான் ” நம்ம காட்டுப்பள்ளி தோப்பு… என்று அரக்காசுமா சொன்ன ஞாபகம்…  இறைவனின் அருட்கொடை எல்லைகளற்றது…

 

தொடர்ந்து… பல்லாக்கு தம்பிட்ட  மோசம் போனதுல.. காட்டுப்பள்ளி தோப்பும் நாசமா போச்சு… அவன் படாத பாடு படாம..  நான் மவுத்தா போனாலும் என் கட்டையை மன்னு திங்காது…

என அரக்காசுமா அடுப்புத் தனலுக்கு முன்பு அழுது அரற்றி  சாபம் விட்டபோது அவரது விழியோரத்தில் கசிந்த கண்ணீர் துளி,  முன்னே அடுப்பில் எரியும் நெருப்பு வெளிச்சத்தில் ஒரு வைரக்கல்லை போலவே ஒளிர்ந்தது…

 

காலமும், சாபமும் பொல்லாதது என்பார்கள் சேகுனா… ரெம்ப காலத்துக்கு பிறகு யாஸீனுடன் பாதுஷா நாயகத்தின் தர்பாருக்கு ஜியாரத் செய்ய ஏர்வாடி சென்றோம்…

 

தன்னீர் பந்தலை கடந்து செல்லும் வழியில் செம்பரட்டை தலையும் , அழுக்கேறிய வெறும் மேனியுமாக, ஒட்டு பீடியை காதில் சொறுகி வைத்தபடி .  புளியங் குச்சியை அக்குளில் இடுக்கி  கொண்டு தூத்துக்குடிக்கு செல்லும் பேருந்தை துரத்திப் போய்  பேருந்தின் பின்புறத்தை  காலால் எட்டி உதைத்துவிட்டு திரும்பி வந்த மன நோயாளி ஒருவரை கூர்ந்து பார்த்தேன்,,,

மன நல காப்பகத்திலிருந்து தப்பி ஓடிய அந்த மனிதரை வளைத்து பிடித்து சிறைபிடித்த காப்பக  ஊழியர் , அந்த பைத்தியத்தின் பிடரியில் ஓங்கி ஒரு அடி கொடுத்து இரும்பு சங்கிலியால் கையையும் , காலையும் பினைத்து திண்டுக்கல் பூட்டு ஒன்றை பூட்டி காட்டுப்பள்ளியை  நோக்கி பரபரவென இழுத்து கொண்டு சென்றார்….

 

இவ்வளவு காசு இருந்து என்ன செய்ய . அந்தாளுதான்…பல்லாக்கு லெப்பை… ரெம்ப முத்திப் போச்சு … நஸீபு யார உட்டுச்சு… .நல்லா  சிறை கழைட்டுறானுவ…என்றான் யாஸீன்…

———————————————————————————

மஹ்மூது நெய்னா .எஸ்கீழக்கரை

மின்னஞ்சல் : naina1973@gmail.com

Series Navigationமுகங்கள்… (இரயில் பயணங்களில்)சொல்வனம் இணையப் பத்திரிகையின் 258 ஆம் இதழ்
author

Similar Posts

2 Comments

  1. Avatar
    Moulana SAK says:

    இன்னும் நிறைய பல்லாக்கு லபைகள் இந்த ஊரில் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள் இறைவன் அவர்களை காப்பாற்றட்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *