அழகியசிங்கர்
பாரதி மறைவுக்குப் பிறகு கவிதை உலகம் ஸ்தம்பித்து விட்டது. பாரதிதாசன், தேசிய விநாயகம் பிள்ளை முயற்சியெல்லாம் ஓரளவுதான் வெற்றி பெற்றது. முப்பதுகளில் ந.பிச்சமூர்த்தி, க.நா.சு வின் முயற்சியால் தமிழில் புதுக்கவிதை என்ற புதிய பாதையை உருவாக்கக் காரணமாக இருந்தார்கள்.
இருபதாம் நூற்றாண்டு படைப்பாளிகளில் கவிதைக்கு நிகழ்ந்து கொண்டிருந்த சிக்கல்களை அறிந்தவர்களில் பாரதி, பிச்சமூர்த்தி, கு.ப.ராஜகோபாலன், புதுமைப்பித்தன், க.நா.சு இவர்கள்தான் முக்கியமானவர்கள்.
க.நா.சுவின் கவிதைகள் பிச்சமூர்த்தி கவிதைகளுக்கு நேர் மாறான போக்குக் கொண்டது. க.நா.சு அடிக்கடி கவிதை வசனத்தை ஒத்திருக்க வேண்டுமென்று சொல்வார். வசனம் என்று அவர் குறிப்பிட்டது ஒரு நடை விசேடத்தை மட்டும் அல்ல. சிறுகதை, நாவல் முதலிய இலக்கிய வடிவங்களில் உலகம் எப்படி வெளிப்படுகிறதோ அப்படி கவிதையிலும் வெளிப்பட வேண்டும் என்பது அவர் கருத்து.
க.நா.சு இரண்டு வார்த்தைகள் என்ற கட்டுரையில் இப்படி எழுதுகிறார்.
1985ல் கவிதை எழுத நினைப்பவன் ஒரு விதத்தில் அசட்டுப் பட்டம் கட்டிக்கொள்ளத் தயாராக இருப்பவன்தான். கவிதை பத்திரிகைத் துணுக்குகளாகவும், அரசியல் கமெண்ட்களாகவும், சினிமா ரெட்டை அர்த்தங்களாகவும், உருப் பெற்றபின் கவிதை எழுத நினைப்பது ஒரு விதத்தில் தவறு என்றுதான் சொல்ல வேண்டும்.
எனக்கு நான் புதுக்கவிதை என்று எண்ணுவதில் அபார நம்பிக்கை. அது நிஜமாகவே கவிதையாக இருப்பதுடன் வசனத்தின் பல அம்சங்களையும் கொண்டதாக, அடை மொழிகளையும் படிமங்களையும் தேடி ஓடாததாக இருக்க வேண்டும். உணர்ச்சி என்கிற தூக்கக் கலப்பில்லாத ஒரு தாக்கத்துடன் அறிவுத் தாக்கமும் பெற்றிருந்தால்தான் கவிதை புதுக்கவிதையாகிறது என்று எண்ணுபவன் நான் என்கிறார் க.நா.சு.
க.நா,சு கவிதைகளைப் பார்ப்போம்.
ஏன்
நீ பார்க்கிற அதே உலகத்தைத்தான்
நானும் பார்க்கிறேன்
உன் பார்வை மட்டும்
வேறாக இருக்கிறதே
ஏன்?
எளிமையாகக் கொண்ட இந்த வரிகள். நமக்குப் புலப்படுத்துவது என்ன. ஒவ்வொருவரும் அவரவர் ரசனைக்கு, அனுபவத்திற்கு ஏற்ப உலகத்தைப் பார்க்கிறார்கள். இங்கே கவிகுரலோன் பார்க்கிறவரைக் குறை கூறவில்லை. வேறாக இருக்கிறது ஏன் என்கிறான். அதிலேயே அடங்கி விடுகிறது அவனுடைய ஆதங்கம். மிகக் குறைவான வரிகளிலேயே கவிதையை எங்கேயோ கொண்டு போய் விடுகிறார் க.நா.சு.
எனக்கு ஒரு கை
என் கையைப் பிடித்துக்கொண்டு
என் பேத்தி
தாத்தா தாத்தா என்கிறாள்
எனக்குப் பிடித்துக்கொள்ள
ஒரு கை
எங்கேயும் காணோமே
இந்தக் கவிதையில் கவிகுரலோன் என்ன சொல்ல வருகிறார். அதாவது வழிகாட்ட அவருடைய கை பேத்திக்கு எளிதாகக் கிடைத்து விடுகிறது. ஆனால் அவருக்கு வழி காட்ட யாருமில்லை.
சின்ன சின்ன கவிதைகள் மூலம் ஆயிரம் அர்த்தங்களை க.நா.சு உண்டாக்குகிறார்.
இன்னொரு கவிதையைப் பாருங்கள்
காலம் தாழ்ந்தபின் வந்தவன்
“ நாடகம் பார்க்கக் கிளம்பியவன்
நாடகம் முடிந்தபின்
நாடகக் கொட்டகையில் புகுந்தேன்
எல்லா நாற்காலிகளும்
காலியாகக் கிடக்கின்றன
எந்த நாள்காலியில் உட்காரலாம் என்று
யோசித்துக் கொண்டே
நான் நிற்கும்போது
பொழுது
விடிந்து விட்டது.
இந்தக் கவிதைமூலம் என்ன சொல்ல வருகிறார் கவி குரலோன். நாடகம் பார்க்கத்தான் கிளம்புகிறான் ஆனால் நாடகம் முடிந்தபின்தான் அங்குப் போகிறான். அப்படி ஏன் போக வேண்டும். நாடகம் பார்ப்பதில் விருப்பமில்லையா? ஊசலாடும் மனதா? போகிறவன் வெறும் கொட்டகையைப் பார்க்கிறான். யோசித்துக் கொண்டே நிற்கிறான். பொழுது போய் விடுகிறது.
ஒரு விதத்தில் இந்தக் கவிதை எளிதாக இருப்பதுபோல் தோன்றும். இப்படிச் சொல்வதன் மூலம் கவிகுரலோன் என்ன சொல்லவருகிறார்.
இப்படி ஆழமான உணர்வைக் கவிதை மூலம் கிளறி விடுகிறார் க.நா.சு.
காசியும் பம்பாயும் என்ற கவிதையைப் பார்க்கலாம்.
காசியிலும்
கூலிக்கு இன்பம்
தரும் பெண்கள்
உண்டு உண்டு
பம்பாயிலும்
கூலிக்கு இன்பம்
தராத பெண்கள்
உண்டு உண்டு
காசி என்று நினைக்கும்போது பாவத்தைக் கழுவும் புண்ணிய ஸ்தலமாகத்தான் நினைப்போம். அங்குக் காம உணர்ச்சிக்கு இடம் கொடுக்கக் கூடாது. ஆனால் அங்குதான் கூலிக்கு இன்பம் தரும் பெண்கள் இருக்கிறார்கள். அதே போல் மும்பையில் காம இச்சைக்குப் பெயர் போன இடம் உண்டு. அங்குப் போனால் கூலிக்கு இன்பம் தராத பெண்கள் இருக்கிறார்கள்.
தேடிக்காண்பது என்ற கவிதையில் கவிதை எப்படி இருக்க வேண்டுமென்று சொல்லாமல் சொல்கிறார்.
பெரிய தோட்டத்திலே ஓரே ஒரு
பூதான் பூத்திருக்கிறது. ஆயிரக்கணக்கான
பட்டுப் பூச்சிகள் அந்த ஒரு பூவை
கண்டுகொள்கின்றன. தேடிக் காண்பதுதான்
கவிதை. தேடாமல் காண இயலாது.
உண்மையில் க.நா.சு வின் கவிதைகளையும் நாம் தேடிக் கண்டு பிடிக்க வேண்டும். எளிமையான வரிகளில் எல்லா ஜால வித்தையும் செய்கிறார் க.நா.சு. படிப்பவரை யோசிக்க வைக்கிறார்.
- ஆதலால் காதல்செய்வோம்…
- மோதிடும் விரல்கள்
- சோளக்கொல்லை பொம்மை
- புத்தாண்டு பிறந்தது !
- Hypocrite -பசுனூரு ஸ்ரீதர்பாபு
- எமிலி டிக்கின்ஸன் கவிதைகள்
- எஸ். பொன்னுத்துரையின் எழுத்துகள்
- அமெரிக்க விமானத்தில் ரஸ்யாவின் சிகப்பு நட்சத்திர சின்னமா?
- குரு வந்தனம்
- வெற்றியின் ஓய்வில் யோசனை தவறேல்
- பிரபஞ்சம் சீராகத் திட்டமிட்ட படைப்பா ? தாறுமாறாக வடிவான சுயத் தோற்றமா?
- 2021 ஒரு பார்வை
- ஆதியோகி கவிதைகள்
- கவிதையும் ரசனையும் – 24 க.நா.சு
- வலி
- இரண்டு நாவல்கள் வெளியீடு
- விளக்கு விருதுகள். 2020