பிரபஞ்சம் சீராகத் திட்டமிட்ட படைப்பா ? தாறுமாறாக வடிவான சுயத் தோற்றமா?

This entry is part 11 of 17 in the series 2 ஜனவரி 2022

சிஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

 

https://video.nationalgeographic.com/video/untamed/blue-morpho-butterfly?source=relatedvideo

ஓர் இயற்கை நிகழ்வு ஏற்பாட்டை நிறுவி நிலைப்பாக்க நான்கு மூலாதாரம், கருமைப் படைப்பாளி, கருமைத் தூண்டு விசை, கருமைச் சக்தி, கருமைப் பிண்டம்  [Dark Creator, Dark Force, Dark Energy, Dark Matter] தேவை .

ஆசிரியர்

ஓர் அப்பத்தைச் சுட்டுத் தின்ன முதலில் ஒரு பிரபஞ்சம் உண்டாக்கப் படவேண்டும்.

அகிலவியல் விஞ்ஞானி கார்ல் சேகன்.

பிரபஞ்சத்தை மாபெரும் மகத்தான ஒரு நூலகமாக உருவகித்துப் பார்த்து கருத்துரை கூறியவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்.  அந்த நூலகத்தின் கோடான கோடி நூல்களை எழுதியது யார் ?  எப்படி அது எழுதி வைத்துள்ளது ? ஏன் எழுதி இருக்கிறது ?  எப்போது எழுதியவை அந்த நூல்கள் என்றெல்லாம் கேள்வி கேட்கிறார் ஐன்ஸ்டைன் !  இருபதாம் நூற்றாண்டின் சவால் அப்பிரபஞ்ச மர்மத்தை நாம் புரிந்து கொள்ள முடியும் என்ற மன உறுதியே.

பிரம்மாண்டமான, மகத்தான, மர்மமான, பெரும் புதிரான நமது பிரபஞ்சம் எப்படித் தோன்றியது ? எப்படித் துவங்கியது ? அது  எத்தனை பெரியது ?  பிரபஞ்சத் தோற்றத்துக்கு முன்பு எதுவும் இருந்ததா ? எப்போது தோன்றியது பிரபஞ்சம் ? எத்தனை கோடி ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது ? காலம் எப்போது ஆரம்பித்தது ? காலக் கடிகாரத்தின் வயதென்ன ? சூரியனின் வயதென்ன ?  பூமியின் வயதென்ன ?  நிலவு எப்போது, எப்படித் தோன்றியது ? கோடான கோடி விண்மீன்கள் கொண்ட காலக்ஸி என்னும் ஒளிமந்தைகள் எப்படி உருவாயின ? நமது சூரிய மண்டலத்தின் கோள்கள் ஒன்பதா அல்லது பத்தா ?

சூரியனைச் சுற்றும் அகக்கோள்களான புதன், வெள்ளி, பூமி & நிலவு, செவ்வாய், புறக்கோள்களான பூதக்கோள் வியாழன், சனிக்கோள், யுரேனஸ், நெப்டியூன், புளுடோ எப்படி உருவாயின ? அக்கோள்கள் ஒவ்வொன்றும் ஏன், எப்படி, எப்போது சூரியனைச் சுற்ற ஆரம்பித்தன ? ஈர்ப்பியல் கவர்ச்சி என்பது என்ன ? ஈர்ப்பியல் கவர்ச்சிக்கு எதிரான விலக்கு விசை என்னும் கருஞ்சக்தி எப்படித் தோன்றியது ? நமது சூரிய மண்டல எல்லைக்கு அப்பால் என்ன உள்ளது ? பேரொளி வீசி வால் நீண்ட வால்மீன்கள் எங்கிருந்து சூரிய மண்டலத்துக்கு வருகின்றன ? அண்டவெளிப் பிண்டம் எப்படி உண்டானது ?  முரண்கோள்கள் என்பது என்ன ? ஒளிமந்தை நடுவே உள்ள பூத விழுங்கியான கருந்துளை என்பது என்ன ? காலக்ஸிகள் என்னும் ஒளிமந்தைகள் எவ்வாறு உருவாகி வளர்ந்தன ?  பிரபஞ்சத்தின் வடிவம் என்ன ? பிரபஞ்சம் ஒன்றா, பலவா ?  இணைப் பிரபஞ்சங்கள் உள்ளனவா ?  சோப்புக் குமிழிபோல் பிரபஞ்சம் தொடர்ந்து விரிகிறதா ? மெதுவாக விரிகிறதா ? அல்லது விரைவாக விரிகிறதா ?  அவ்விதம் விரிந்து கொண்டே போய் இறுதியில் முறிந்துவிடுமா ?  ஒளிமந்தைகள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டால் என்ன நேர்ந்திடும் ?

சூரிய குடும்பத்திலே மிகவும் புதிரான அமைப்பு கொண்ட பூமியில் மட்டும் ஏன் பயிரினங்கள், உயிரினங்கள் தோன்றின; எப்படித் தோன்றின; எப்போது தோன்றின; உலகிலே உன்னத படைப்பான, உயர்ந்த மூளையுடைய மானிடர் பூமியில் மட்டும் தான் தோன்றினாரா ? வேறு அண்டவெளிக் கோள்களிலும் உயிரினங்கள் வசிக்கின்றனவா ? பூமியில் மூன்றில் இருமடங்கு பரப்பை நிரப்பிய பேரளவுக் கடல் வெள்ளம் எப்படிச் சேர்ந்தது ? உப்புக்கடலாய் எப்படி மாறியது ? மர்மமான பூகாந்தம், பரிதிக் கதிர்களைக் குடைபோல் தடுத்து உயிரினம், பயிரினம் பாதுகாக்கும் வாயுச் சூழ்வெளி எவ்விதம் தோன்றி இன்னும் நீடிக்கிறது ?

சனிக்கோளின் அழகிய நீண்ட வளையங்கள் எப்படித் தோன்றின ? பரிதிபோல் வாயுக்கோளான பூதக்கோள் வியாழன் ஏன் சுய ஒளிவீசும் சூரியனாய் மிளிரவில்லை ?  கோடான கோடி விண் பாறைகள், முரண்கோள்கள் ஏன் செவ்வாய்க் கோளுக்கும், பூதக்கோள் வியாழனுக்கும் இடையே சூரியனைச் சுற்றி வருகின்றன ? வால்மீன்கள் சூரிய மண்டலத் தோற்றத்தின் எச்சங்களா ? பூமியைப் பன்முறைத் தாக்கிய வால்மீன்கள் வழியாக    உயிரின மூலவிகள் பூமியில் சேர்ந்தனவா ?

பிரபஞ்சம் எதிலிருந்து, எப்படி உருவானது என்னும் கேள்விக்கு விஞ்ஞானிகள் இன்னும் ஏற்றுக் கொள்ளக் கூடிய விடையைக் கூற முடியவில்லை என்பது என் கருத்து.  படைப்பா அல்லது பரிணாமமா ?  திட்டமிட்ட படைப்பா ?  அல்லது தாறுமாறாய் உண்டான சுயத் தோற்றமா ?

unnamed (2)

டார்வின் எழுதிய பரிணாமக் கோட்பாடு உயிரினத் தோற்றத்தையோ அதன் விருத்தியையோ, மாற்றத்தையோ ஆரம்பம் முதல் முழுமையாக விளக்கவில்லை.. டார்வின் விஞ்ஞானம் உயிர் என்பது என்ன வென்று எங்கும் கூற வில்லை. உயிரற்ற வெற்றுக் கூடுகளைப் பற்றியும் அவற்றின் வளர்ச்சி, விருத்தியைப் பற்றியும்  அவரது பரிணாமம்  சிறப்பாக விளக்குகிறது.

பிரபஞ்சம் ஓர் உன்னத சக்தியான கடவுளால் திட்டமிட்டுப் படைக்கப் படவில்லை. அது தானாக உருவானது என்று விஞ்ஞான மேதை ஸ்டீஃபன் ஹாக்கிங் கூறியிருப்பதும் ஓர் ஊகிப்பே ! முதலில் அக்கூற்று ஒரு விஞ்ஞான ஆய்வு விளக்கம் இல்லை; முடிவு மில்லை. அப்படி மேலாகச் சொல்லித் தப்பிக் கொள்வது ஒரு விஞ்ஞான மேதையின் இயலாமையைத்தான் குறிக்கிறது. 500 பேரைச் சுமந்து கொண்டு வானில் பறக்கும் நவீன 707 ஜம்போ ஜெட் விமானம் தானாய் உருவானது என்று கூறினால் யார் இப்போது நம்புவார் ?  வெவ்வேறான  தோற்றம், பண்புடைய ஆறு பில்லியன் மக்களும், கோடான கோடிப் புள்ளினம், பூவினம், பயிரினம், ஊர்வன, நீர்வள மீனினம் வாழும், சிக்கலான இந்த பூமி, 4.5 பில்லியன் ஆண்டுகளாய்த் தவறாது, மணிக்கு ஆயிரம் மைல் வேகத்தில், ஒரே சுற்றுப் பாதையில் சூரியனைச் சுற்றி வருவது தானாகத் தோன்றியது என்று ஒருவர் கூறினால் இப்போது யார் நம்புவார் ?  பிரபஞ்சம் ஏன் தோன்றியது, ஆறறிவு படைத்த மனிதர் ஏன் பிறந்தார் என்னும் வினாக்களுக்கு விஞ்ஞானம் பதில் கூற முடிய வில்லை.

பிரபஞ்சம் தானாய்த் தோன்றி மாறி வருகிறது என்று விஞ்ஞானிகள் கூறினாலும், கடவுள் படைத்தது என்று ஆன்மீக மதவாதிகள் கூறினாலும் இரண்டு கோட்பாடுகளும் ஒன்றுதான். விஞ்ஞானிகள் பிரபஞ்சம் எப்படித் தோன்றியது என்று விளக்கி, இதுவரை எழுதிய யூகிப்புக் கோட்பாடுகள் எல்லாம், நாளுக்கு நாள் மாறி வருகின்றன. பிரபஞ்சம் எப்படி இறுதியில் முடிவாகப் போகிறது என்பதும் யூகிப்புக் கோட்பாடாகவே இருக்கிறது.

இரசாயனக் கதிர் ஏகமூலங்களின் (Radio Isotopes) அரை ஆயுள் தேய்வு நியதிப்படிப் பிரபஞ்சம் 13.7 பில்லியன் ஆண்டுக்கு முன்னே தோன்றி யிருக்க வேண்டும் என்று பல்வேறு உலக விஞ்ஞானிகள் ஏற்றுக் கொண்டுள்ளார்.  அதாவது படைப்பாளியே இந்தப் பிரபஞ்சத்தின் ஒரு தோற்றப் பகுதியை உண்டாக்க 13.7 பில்லியன் ஆண்டுகள் எடுத்திருக்கிறது என்பது என் னுடைய கருத்து.  இதுவரை விஞ்ஞானிகள் ஒப்புக் கொண்டுள்ள பெரு வெடிப்பு நியதியின் (The Big Bang Theory) ஆரம்பமே ஓர் அனுமான ஊகிப்புதான்.  மெய்யாக இந்தப் பிரபஞ்சம் எப்படித் தோன்றியது என்று இதுவரை எந்த விஞ்ஞானியாலும் தர்க்க ரீதியாக விளக்க முடிய வில்லை. எல்லாம் கால வெள்ளத்தில் கருத்து மாறி, திசை மாறி, உருமாறிப் போகும் விஞ்ஞானத்தின் வெறும் அனுமான ஊகிப்புகள்தான்.  விஞ்ஞானம் பிரபஞ்ச ஆதி அந்தங்களை ஆராய முடியாமல் இறுதியாக அந்த முயற்சியைக் கைவிட்டு விடுகிறது.  அத்துடன் பிரபஞ்சத் தோற்ற கால இடைப்பட்ட நிகழ்ச்சிகளுக்கு மட்டும் விளக்கம் அளிக்க முற்படுகிறது.

காரண-விளைவு நியதியைத் (Cause & Effect Theory) தர்க்க ரீதியாக ஒப்புக் கொள்ளும் உலக  விஞ்ஞானிகள், பிரபஞ்சம் தானாக உருவானது, தானாக இயங்குவது, தானாக மாறுவது, தானாக அழிவது என்று ஆதாரமின்றிக் கூறுவதை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது.

விஞ்ஞானிகள் இதுவரை “உயிர்” என்றால் என்னவென்று விஞ்ஞான விளக்கம் தர முடிய வில்லை. எந்த இரசாயன மூலகங்களோ, மூலக்கூறுகளோ சேர்ந்து, உயிரென்னும் புதிரை உண்டாக்குவதில்லை. ஆங்கிலத்தில் “உயிர்” என்பதற்கு ஒரு தனிச்சொல் கூடக் கிடையாது. உயிர், ஆத்மா இரண்டு மட்டுமே மனிதனுக்கும் படைப்பாளிக்கும் உள்ள தொடர் இணைப்பைக் காட்டுபவை என்பது என் கருத்து.

 

நமது பிரபஞ்சத்தின் தோற்றம், அதன் இயக்கங்கள் யாவும் “தாறுமாறான சீரமைப்பு”  [Irregular Order] என்பது என் கருத்து.  நமது பால்வெளி ஒளிமந்தை, அதன் கோடான கோடிப் பரிதிக் குழுமங்கள்,  சூரிய மண்டலக் கோள்களின் அமைப்பு, பண்பாடு, நகர்ச்சி முறை, சுற்றும் பாதை, தட்ப / வெப்ப நிலை, சூழ்வெளித் தோற்றம், காலவெளி மாற்றம் போன்றவை எல்லாம் ஒன்றுக் கொன்று முரண்பட்டவை, தாறுமாறானவை, ஆனால் ஓர் சீரமைப்புக்கு உட்பட்டவை.  காரண-விளைவு நியதிப்படி ஒன்றிலிருந்து மற்றொன்று உருவானதாய், முதல் வடிவைச் சார்ந்ததாய், அதிலிருந்து படிப்படியாய் மேம்பட்டதாய் விருத்தி யாகி வந்துள்ளதாய்த் தெரிகிறது.

இந்தப் பிரபஞ்சத்தின் உள்ளே இயங்கிவரும் கோடான கோடி காலக்ஸி ஒளிமந்தைகள், அவற்றில் உள்ள விண்மீண்கள், அவற்றைச் சுற்றும் அண்டக் கோள்கள், கண்ணுக்குத் தெரியாமல், கருவிகளுக்குத் தென்படும் கருந்துளைகள், கருஞ்சக்தி, கருமைப் பிண்டம், பூமியில் உள்ள பயிரினங்கள், உயிரினங்கள் அனைத்தும் ஒன்றிலிருந்து ஒன்றாய் உருமாறி, அடுத்தடுத்துச் சங்கிலித் தொடர்பில் பிறந்தவை. அழிபவை.  அதாவது அவை யாவும் இயற்கை விதியான “காரண-விளைவு நியதியைப்” (Cause & Effect Theory) பின்பற்றித் தோன்றியவை.

தற்போதைய நவீனக் கணினி மேற்பார்க்கும் மோட்டார் வாகனம் விருத்தியாகச் சுமார் 100 ஆண்டுகள் எடுத்துள்ளன.  எலும்புக் கூடு போன்று ஹென்றி  ஃபோர்டு செய்த முதல் கார் வாகனம் எத்தனை முறை மாற்றம் அடைந்து செம்மையாகி நவீனக் காராய் மாறி யுள்ளது ?  ரைட் சகோதரர் முதன்முதல் செய்த சைக்கிள் உறுப்புகளில் உருவான வான ஊர்தி 100 ஆண்டுகளில் விருத்தி யாகிச் சந்திரனுக்குச் செல்லும் ராக்கெட்டாய், சூரிய மண்டலம் தாண்டிய முதல் வாயேஜர் விண்கப்பலாய் முன்னேறியுள்ளது.  கணினி மின்கருவி எத்தனை ஆண்டுகள், எத்தனை முறைகள் சீராகி நவீன வல்லமை மிக்க கணினியாக உருவாகி உள்ளது ?  சார்லஸ் டார்வின் அறிவித்த  உயிரின விருத்திக் கோட்பாடு இயற்கை முறையில் எத்தனை தரம் உருமாறிச் செயல் மாறிச் சீராகி, மானிடம் தற்போதைய ஆறறிவு படைத்த உன்னத மனிதராய் உலவி வருகிறது ?

விஞ்ஞானிகள் அணுவைப் பிளந்து  அணுவுக்குள் இருக்கும் நுண்ணிய புரோட்டான், எலெக்டிரான், நியூட்ரான் [நேரான், எதிரான், நடுவான்] என்னும் பரமாணுக்களை வெளியேற்றி  அவற்றின் அளவைக் கணித்து விட்டார்.  பரமாணுக்களையும் பிரித்து அவற்றின் அடிப்படைத் துகள்களைக் [ஃபெர்மியான், போசான், (குவார்க்ஸ், லெப்டான்ஸ்)] கண்டுபிடித்து விட்டார்.  எலெக்டிரான், புரோட்டான், நியூட்ரான் ஆகியவற்றைப் பல்வேறு எண்ணிக்கையில் சேர்த்து, நூற்றுக்கு மேற்பட்ட மூலகங்கள் [Elements], ஆயிரக்கணக்கான மூலக்கூறுகள்  [Molecules] இயற்கை / செயற்கை மூலம் தயாரிக்கப் பட்டு இப்போது மனிதர் பயன்படுத்த ஏதுவாக உள்ளன.  ஒரு புரோட்டான் எப்படி ஹைடிரஜன் வாயு ஆனது ?  எட்டுப் புரோட்டானும் எட்டு நியூட்ரானும் சேர்ந்து எப்படி ஆக்ஸிஜன் வாயுவானது ? அவைபோல் எப்படி நைட்ரஜன், வெள்ளி, தங்கம், தாமிரம், தகரம், பாதரசம், இரும்பு, ஈயம், கால்சியம், கார்பன், ஸல்ஃபர், ரேடியம், தோரியம், யுரேனியம் உருவாயின ?  வெவ்வேறான வடிவம், பண்பாடுள்ள மூலகம் எல்லாம் தானாய்த் தோன்றினவா ? சீரமைப்பில், அணி வரிசையில் இருக்கும் இவைத் தாறுமாறாய்த் தோற்றம் எடுத்தவையா ? அல்லது திட்டமிட்டுப் படைக்கப் பட்டனவா ?

சமீபத்தில் [2017 நவம்பர்] ஈரான், ஈராக் பகுதியில் நேர்ந்த பூகம்பத்தில் 500 மேற்பட்ட மாந்தர் மரித்தார்.  இவ்வாறு ஆண்டு தோறும் பற்பல இயற்கை இடர்ப்பாடுகள், சுனாமிகள், பேய்மழைச் சேதாரங்கள், சூறாவளி, ஹர்ரிக்கேன்கள் தாக்குதல் நமது பூமியில் ஏன் ஏற்பட வேண்டும்.  படைக்கப் பட்ட பூமியோ, தானாகத் தோன்றிய பூமியோ, அது பூரணச் சீரமைப்புக் கோளாகத் தோன்ற வில்லை. பூமிக்குள்ளும் புற்று நோய் பரவியுள்ளது   தூரத்தில் பூரண வட்டக் கோளமாகத் தென்படும் பூமி, தோற்ற காலம் முதலே சற்று தாறுமாறாகத்தான் உருவாகியுள்ளது.  மனிதர் போன்ற உயிரின வளர்ச்சிக்குப் படைக்கப்பட்ட நமது பூமி ஒரு தாறுமாறன சீரமைப்புக் கோளே.

தேனீக்கள் ஆயிரக் கணக்கான ஆண்டுகளாய் ஒன்றாய் உழைத்துக் கூட்டில் தேனைச் சேர்க்கின்றன.  தூக்கணாங்குருவி தானாய் கூடு நெய்து முட்டை யிட்டுக் குஞ்சுகள் பொரிக்கின்றது.  இலைப் புழுவாய் கிளையில் நெளிந்த புழு முடத்துவ நிலை அடைந்து சில நாட்களில் பறக்கும் பட்டாம் பூச்சியாகக் கண்ணைக் கவர்கிறது.  ஜிம்பான்சி மனிதக் குரங்கிலிருந்து மனிதன் படிப்படியாக மாறினானா ? அல்லது ஒரே பாய்ச்சலில் மாறினானா ? படிப்படி யாக மாறினான் என்றால் கால் மனிதன், அரை மனிதன் இருக்க வேண்டுமே !  குரங்கிலிருந்து மனிதன் உருவானான் என்று கூறினால், இப்போது ஏன் அந்நிகழ்ச்சி கண்முன் நேருவதில்லை ?  ஜிம்பான்சியும், மனிதமும் தனித்தனியாய் ஒரே சமயத்தில் பிறந்து, தமது இனத்தைப் பெருக்கி, விருத்தி செய்து வருகின்றனவே !

உலகில் நிகழும் வினைகள் அனைத்தும் இரண்டு விதமான முறைப்பாட்டில் நேர்கின்றன. ஒன்று இயற்கை நிகழ்ச்சி: இரவு பகல் சுழற்சி. பருவக் காலச் சுழற்சி, இடி மழை வெள்ளம், புயல், சுனாமி, பூகம்பம், எரிமலை போன்றவை யுகயுகமாய் நேரும் இயற்கை நிகழ்ச்சிகள் !  அதே சமயம் முதல் உலகப் போர், இரண்டாம் உலகப் போர், ஜப்பான் அணுகுண்டு வீச்சுகள், ஆறு மில்லியன் யூதரைக் கொன்ற கோலோஹாஸ்ட் கொடூரம், ஈராக் படை யெடுப்பு, சமீபத்தில் நிகழ்ந்த ஈழப் போர் ஆகிய அனைத்தும் ஆக்கிரமிப்பு மனிதரால் உண்டாக்கப் பட்டவை.  அதாவது இயற்கை செய்வதை மனிதர் செய்ய முடியாது.  மனிதர் செய்வதில் இயற்கை ஈடுபடாது, தலையிடாது, தடுக்கவும் செய்யாது, ஆனால் எச்சரிக்கை செய்யும்  !  ஒரு சில பௌதிக, இரசாயன வினைகளை மனிதன் செய்து காட்டியுள்ளான்.  அணுவைப் பிளந்து பேரளவு சக்தியை வெளியாக்கியது, சூரியனின் அணுப்பிணைவு சக்தியை உண்டாக்கி ஹைடிரஜன் குண்டை வெடித்தது,  அணுக்கருச் செயற்கை முறையில் மூலங்கள் [புதியவை, பழையவை] உண்டாக்கியது, இவற்றுக்குச் சான்றுகள்.

விண்வெளி விஞ்ஞானம் அனுதினம் விருத்தியாகும் மகத்தான 21 ஆம் நூற்றாண்டில் நாம் வாழ்கிறோம். விண்வெளி ஏவுகணைகள் பாய்ந்து செல்லும் இருபதாம் நூற்றாண்டில் பிறந்த இளைஞ ரெல்லாம் பல விதங்களில் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். முக்கியமாக விண்வெளி விஞ்ஞானம் பேரளவில் விருத்தி அடையும் ஒரு மகத்தான யுகத்திலே நாம் புதிய அற்புத விளைவு களைக் காண்கிறோம். வெண்ணிலவில் தடம் வைத்து மீண்ட மனிதரின் மாபெரும் விந்தைகளைக் கண்டோம் !  அடுத்து இன்னும் பத்துப் பதினைந்து ஆண்டுகளில் மனிதரின் மகத்தான தடங்கள் செவ்வாய்த் தளத்திலேயும் பதிவாகப் போகின்றன என்று நினைக்கும் போது நமது நெஞ்ச மெல்லாம் துள்ளிப் புல்லரிக்க வில்லையா ?

பூதளத்தில் தோண்டி எடுத்த பூர்வ மாதிரிகளையும், உயிரின எலும்புக் கூடுகளையும் சோதித்து கடந்த 100,000 ஆண்டு முதல் வாழ்ந்து வந்த மானிடரின் மூல தோற்றத்தைக் காண முடிகிறது !  5000 ஆண்டுகளுக்கு முன்னே நாகரீகம் தோன்றி கிரேக்க, ரோமானிய, எகிப்த், இந்திய, சைன கலாச்சாரங்களை அறிய முடிந்தது.  பிரபஞ்சத்தின் பல்வேறு பூர்வப் புதிர்களை விடுவிக்க பல்லாயிரம் ஆண்டுகளாக மானிடச் சித்தாந்த ஞானிகள் முயன்று எழுதி வந்திருக்கிறார்கள்.  சிந்தனைக்குள் சிக்கிய மாபெரும் சில புதிர்கள் விடுவிக்கப் பட்டாலும் பல புதிர்கள் இன்னும் அரை குறையாக விடுவிக்கப் பட்டும், படாமல்தான் நம்கண் முன் தொங்கிக் கொண்டிருக் கின்றன !

பிரபஞ்சத்தின் பல புதிர்களில் ஒரு புதிரை விடுவிக்கப் போனால் ஒன்பது புதிர்கள் முளைக்கின்றன. பரமாணுக்களில் நுண்ணிய நியூடிரினோ துகள்கள் (Neutrino Particles) எப்படி விண்வெளியில் உண்டாகின்றன ?  காமாக் கதிர் வெடிப்பு (Gamma Ray Bursts), ஈர்ப்பியல் அலைகள் (Gravitational Waves) என்றால் என்ன? செவ்வாய்க் கோளின் தளப்பகுதி ஏன் வரண்டு போனது ?  அகிலக் கதிர்கள் (Cosmic Rays) எங்கிருந்து வருகின்றன ?  பிரபஞ்சத்தைப் புதிய “நூலிழை நியதி” (String Theory) கட்டுப்படுத்துகிறதா? ஈர்ப்பாற்றல் அலைகளை (Gravitational Waves) உருவாக்குவது எது? இந்தக் கிளைப் புதிர்களுக்கும் விஞ்ஞானிகள் விடைகாண வேண்டிய நிர்ப்பந்தம் இப்போது ஏற்பட்டுள்ளது.

இப்புதிர்களுக்கு எனது கட்டுரைகளில் விடை பூரணமாகக் கிடைக்கலாம். அரைகுறையாகக் கிடைக்கலாம். கிடைக்கா மலும் போகலாம்.  வானியல் விஞ்ஞானம் வளர்ச்சி அடையும் ஒரு விஞ்ஞானத் துறை. பெருவாரியான புதிர்களுக்கு விடை கிடைக்க இன்னும் நெடுங்காலம் ஆகலாம்.  புதிய கருவிகள் படைக்கப் பட்டு, கண்டுபிடிப்புகளும் உண்டாகி முன்பு மெய்யாகத் தோன்றியவைப் பின்னால் பொய்யாக நிரூபிக்கப் படலாம். குறிப்பாக இப்போது விண்வெளியைச் சுற்றிவரும் ஹப்பிள் தொலைநோக்கி பல அரிய விண்வெளிக் காட்சிகளைத் தொடர்ந்து ஆராயத் தந்திருக்கிறது.

+++++++++++

Series Navigationவெற்றியின் ஓய்வில் யோசனை தவறேல்2021 ஒரு பார்வை
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *