சோம. அழகு
‘ஆணின் உடலினுள் ஆண்தான் இருக்க வேண்டும்; பெண் உடலினுள் பெண்தான் இருக்க வேண்டும்; ஆணுக்குப் பெண்ணைத்தான் பிடிக்க வேண்டும்; பெண்ணுக்கு ஆணைத்தான் பிடிக்க வேண்டும்… இவைதாம் இயற்கை என்று வரையறுக்கவும் இவற்றையே சமூகக் கோட்பாடுகளாக வகுத்து வைக்கவும் நாம் யார்? நமக்கு யார் அந்த அதிகாரத்தை வழங்கியது?’ – வளை நிறைந்த இரு கைகள் என் காதின் அருகே வந்து தட்டப்பட்ட போது அந்த ஜெராக்ஸ் கடை அண்ணா முணுமுணுத்தவாறே ஒரு ஐந்து ரூபாய் நாணயத்தை அக்கைகளுக்கு இட்டு, அக்கைகளுக்குரிய அக்கா அடுத்த கடை நோக்கிச் சென்ற பின் “இவங்களுக்கு எல்லாம் என்ன குறை? வத்தல் வடாம்னு போட்டு பிழைக்குறதுதானே?” என்று யதார்த்தம் புரியாமல் அத்திருநங்கை அக்காவைக் கோபித்துக் கொண்ட போது தோன்றியவையே மேற்கூறியவை. ஒரு சிறு தொழில் மேற்கொள்வதற்குக் கூட முதல் என்று ஒன்று வேண்டும். அதை யார் தருவார்கள்? அப்படியே அது கிட்டினாலும் அவர்களது உழைப்பில் விளையும் பொருட்களை வாங்கி அவர்களுக்கு உதவத் தயாராக இருக்கிறதா இச்சமூகம்? இந்த நிதர்சனம் எதையும் யோசிக்காமல் ஏன் பெரும்பாலானோர் அவர்களிடம் குற்றம் காண்கிறார்கள்? காணாக்குறைக்கு திரைப்படங்களில் அவர்களைச் சித்தரிக்கும் விதம்… அவ்வாறான உருவக்கேலி காட்சியமைப்பு… இச்சமூகத்தின் பொதுபுத்தியைப் பிரதிபலிப்பதாகவும் குரூரமாக நியாயப்படுத்துவதாகவும் இருக்கின்றது.
நியாயமான எல்லா வாய்ப்புகளும் அநியாயமாக மறுக்கப்பட்ட பிறகு வாழ்வாதாரத்தை நல்ல முறையில் தேடிக் கொள்வதற்கான முனைப்பு, சமூக மதிப்புகள், விழுமியங்கள் எல்லாவற்றையும் சுக்கு நூறாக அடித்து உடைத்து விடுவதில் வியப்பேதும் இல்லை. தம்மை ஒதுக்கி வைத்த இச்சமூகத்தின் மீதான கோபத்தைக் கண்களில் ‘யாரையும் கண்டுகொள்ளாத எதைப் பற்றியும் கவலைப்படாத’ பார்வையாக சூடியிருந்தார்கள் அந்த அக்கா. அந்தப் பார்வை விரக்தியையும் வெறுப்பையும் மெல்ல மென்று முழுங்கி நன்றாக செரித்த பின் அசட்டையான பார்வையாக அடுத்த கட்டத்தை அடைந்துள்ளது என்றே அவதானிக்கிறேன். ஏனோ அக்கண்கள் மனதை விட்டு அகலவேயில்லை. காரினுள் ஏறி வீடு சென்று கொண்டிருக்கையில் அப்பாவிடம் கேட்டேன், “நான் ஒரு திருநங்கையா பிறந்திருந்தா என்ன செஞ்சிருப்பீங்க அப்பா?” சற்றும் யோசிக்காமல் கொஞ்சமும் தடுமாறாமல் வந்து விழுந்தது பதில். “இதென்ன கேள்வி ? இப்போ மாதிரியே அப்பவும் உன்ன உயிரா வளர்த்திருப்பேன். ஒரே ஒரு வித்தியாசம்… ‘யாரிடமும் அங்கீகாரத்தை எதிர்பார்க்கக்கூடாது. உன்னை சக மனிதனாகப் பார்க்கும் அளவிற்கு இச்சமூகம் இன்னும் பக்குவம் அடையவில்லை’னு எதார்த்தத்தைச் சொல்லி தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் இன்னும் கொஞ்சம் கூட ஊட்டி வளர்த்திருப்பேன்.” – மிகவும் சாதாரணமாக இப்பதிலைக் கூறிக்கொண்டே லாவகமாக வண்டியை இடதுபுறம் திருப்பிக் கொண்டிருந்தார்கள்.
சமூகத்தில் நிலவும் பொதுபுத்தியின் முரண் ஏற்புடையதாய் இல்லை. அர்த்தநாரீஸ்வரர் என்றால் விழுந்து விழுந்து கும்பிடுவது, அவர் உருவில் ஒருவரை நேரில் கண்டால் ஒதுக்கித் தள்ளுவது போன்ற பெருங்கொள்கைகள் சிலிர்க்க வைக்கின்றன. கரடு முரடான கல்லும் முள்ளும் நிறைந்த பாதைகள் கூட காலுக்கு மெத்தை என நினைந்து வழிபடப்படும் தெய்வத்தின் இரு பெற்றோரும் ஆண்களே ! அது மோகினி அவதாரம் என்றெல்லாம் சப்பைக் கட்டு கட்டக் கூடாது. அதன் பெயர் பெண் வேடம். தெய்வங்களைச் சுற்றி புனையப்பட்ட கதைகளில் வருபவை உறுத்தாத போது நிஜத்தில் மட்டும் ஏன் ? நல்லா இருக்குடா உங்க நியாயம் !
யார் யாருக்கு எது எது இயற்கையாகத் தோன்றுகிறதோ அதுவே அவர்களுக்கான நியாயம். LGBTயினரின் இடத்தில் இருந்து பார்த்தால் நாம்தான் வித்தியாசமாகத் தென்படுவோம். திருநங்கைகள், திருநர்கள், ஓரினச் சேர்க்கையாளர்கள்… – இவர்களின் மீதான அர்த்தமற்ற வெறுப்பு விளங்கவே மாட்டேன் என்கிறது. அதிலும் பெரும்பாலானோரின் பெற்றோரே பாழாய்ப் போன உறவுகளுக்காகவும் சமூகத்திற்காகவும் அவர்களை ஒதுக்கி வைப்பதை எதைக் கொண்டும் நியாயப்படுத்த இயலவில்லை. உலகில் யார் ஏற்றுக் கொண்டாலும் கொள்ளாவிட்டாலும் கூட அம்மா அப்பாவின் அன்பும் அரவணைப்பும் வாழ்க்கையின் மீதான பிடிப்பை வலுப்படுத்தித் தரும். அதுவும் கிட்டாமல் தமது இயல்புக்காக தனித்து விடப்பட்ட கொடுமையை கற்பனை கூட செய்ய இயலவில்லை.
உலகின் அனைத்து உயிர்களுமே அன்பில் இயங்குவதுதானே? அது (‘ஒருவருக்கு ஒருவர்’ என்ற ஒழுக்கத்திற்கு உட்பட்டு) எங்கு யாரிடம் இருந்து எந்த வடிவில் கிட்டினால் என்ன? அன்பிற்காக ஏங்கித் தவிப்பதைக் காட்டிலும் ஒரு கொடுமை இருக்குமா? தம் மீது அன்பு காட்ட ஒருவர் கூட இல்லாது போன நிலையை எந்தச் சூழ்நிலையில் எந்தக் கணத்தில் ஏற்றுக் கொள்ளத் துவங்கியிருப்பார்கள்? குருட்டு கதியில் ஏதோவொரு நொடிப் பொழுது தந்த தைரியமும் கூட அவ்வப்போது உடைந்தும் நெகிழ்ந்தும் போகும்தானே? அப்போதெல்லாம் அவர்களை அள்ளியெடுத்து ஆறுதலளிக்கவும் தேற்றவும் ஒருவருமில்லாத நிலையில் தாமே அதில் உழன்று முட்டி மோதி அம்மனநிலையினின்று வெளியேறும் கொடுமையெல்லாம் நமக்குப் புரியவே புரியாது. அப்போதும் கூட வாழ்க்கையின் மீதான நம்பிக்கையை மீட்டெடுக்க, மெல்லிய ஒளிக்கீற்றைக் கண்டடைய, தாம் தாமாக இருப்பதற்கும் தமது இயல்பை வெளிப்படையாக நிலைநிறுத்திக் கொள்ளவும் அவர்கள் ஒவ்வொருவருள்ளும் நிகழும் போராட்டம்… அப்பப்பா ! எண்ணிப் பார்ப்பதே வலிக்கிறது.
இச்சமூகத்தின் ஏளனப் பார்வையிலிருந்து மீண்டு வாழ்வையும் உலகையும் ரசிக்கவும் ஒவ்வொரு நொடிப்பொழுதிலும் மகிழ்ந்திருக்கவும் அவர்களுக்கு முழு உரிமை உண்டு என உணரும் சமயம் நமது சராசரி புத்தி அவர்களுக்கான வெளியை மதித்து நடக்கத் துவங்கும் என நம்புகிறேன். அவர்களில் சிலரின் பேச்சு கரடுமுரடாக இருப்பதைக் காணுகையில் தோன்றும், ‘அவர்கள் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்று முடிவு செய்வது நாம்தானே?’ என்று. எவ்வாறு நடத்தப்படுகிறார்களோ அதையே திருப்பித் தருகிறார்கள். வெறுப்பையும் அலட்சியத்தையும் உமிழும் சமூகத்திடம் கருணையையா கொட்ட இயலும்?
எல்லாவற்றையும் விடுங்கள். ‘அந்த மனித உயிருக்கென ஒரு மனம் உண்டு; நம்மைப் போன்றே உணர்வுகள் உண்டு. அவர்களுக்கும் வலிக்கும்’ என்ற அடிப்படை அறிவு கூடவா பெரும்பான்மைச் சமூகத்திடம் இல்லாமற் போனது. நாம் வாழும் சாதாரண வாழ்க்கையை வாழ்வதற்குத்தான் அவர்கள் எவ்வளவு மெனெக்கெட வேண்டியிருக்கிறது? இச்சமூகத்தைத் திருத்துவதோ பாடம் புகட்டுவதோ என் நோக்கமல்ல. ஏதோ ஆங்காங்கு ஒன்றிரண்டு பேர் பல இன்னல்களைத் தாண்டி ஓரளவு நல்ல பணிக்கு வந்துவிட்டாலும் அவர்களில் பெரும்பாலானோரின் நிலை பற்றியே மனம் சிந்தித்துக் கொண்டிருந்ததாலோ என்னவோ உங்களையும் சிறிது நேரம் அந்நினைவலையில் இருத்தி வைக்க முனைந்ததன் விளைவே இக்கட்டுரை.
அவர்களுக்கென ஓர் அற்புத உலகை இவ்வாறாகக் கற்பனை செய்கிறேன். அவர்களுக்கென தனி கல்விச்சாலை. இது அவர்களை ஒதுக்கி வைப்பதல்ல; நம் சீண்டல்கள் இன்றி நிம்மதியானதொரு பள்ளி மற்றும் கல்லூரிப் பருவத்தை அவர்களுக்கு உருவாக்கித் தரும் ஓர் ஏற்பாடு. ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பெண்கள் கல்லூரி போன்ற அமைப்பே இது. அக்கல்விச்சாலைகளில் கல்வி தரும் தன்னம்பிக்கையையும் தாண்டி முக்கியமானதொரு விஷயம் கற்பிக்கப் பட வேண்டும் : ‘தம் மீதான ஒரு பாமரனின் அசட்டுத்தனமான நக்கலான அல்லது சிறுபிள்ளைத்தனமான பார்வையை கேலியை முதன்முதலில் எதிர்கொள்ள நேர்கையில் கூனிக் குறுகவோ சுக்கு நூறாகத் தெறித்துப் போகவோ வேண்டியதில்லை. மாறாக அவனது அறியாமையையும் அடி ஆழத்தில் அமிழ்ந்து கிடக்கும் அவனது அறிவின் முதிர்ச்சி பக்குவம் ஆகியவற்றையும் நமட்டுச் சிரிப்புடன் கடந்து செல்லும் தைரியம் போதும்.’ அத்தன்னம்பிக்கை தரும் பொலிவில் இன்னும் அழகாகிப் போகும் அவர்களின் முகங்கள் இச்சமூகத்தை நாணம் கொள்ளச் செய்யட்டும்.
பிறழ்வு எனப்படுவது யாதெனின் இயற்கை வழிப்பட்ட அவர்களின் உடலோ மனமோ அல்ல; புரிதல் இல்லாத மனித மனங்களேயாம்.
- சோம. அழகு
- ஒளி மூலம்
- காற்றுவெளி மாசி மாத(2022) மின்னிதழ்
- கவிதா மண்டலத்தில் சித்தன்
- எது பிறழ்வு?
- மலையாள சினிமா
- எமிலி டிக்கின்சன் கவிதைகள்
- ரஸ்யாவின் ஆளில்லாத நவீன போர்விமானம்
- அணு ஆயுத யுகத்திற்கு அடிகோலிய ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் – 3
- தொற்றெனும் பாவி
- விரிசல்
- வலி
- பாலைவன நகரத்திலிருந்து ஒட்டகங்களுக்காய் ஒரு குரல்
- யாரே பெரியோர் ?
- பத்திரிக்கைச் செய்தி – ஓவியத்துறையில் இதுவரை பெண்கள் அதிக அளவில் வராதது ஏன்
- மகாத்மா காந்தியின் மரணம்
- எக்ஸ் ஆக்ஸிஸ் 1990
- கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் – புதுமைப்பித்தன் சிறுகதை மதிப்புரை ( நவீன விருட்சம் நிகழ்வு )
- முருகபூபதி எழுதிய வாழும் வரலாறு மல்லிகை ஜீவா (Tamil Edition) Free Kindle Edition
- ஒரு கதை ஒரு கருத்து – சா.கந்தசாமியின் தமிழில் இரயில் கதைகள்