கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் – புதுமைப்பித்தன் சிறுகதை மதிப்புரை ( நவீன விருட்சம் நிகழ்வு )

author
0 minutes, 9 seconds Read
This entry is part 17 of 19 in the series 30 ஜனவரி 2022

 
நாகேந்திர பாரதி
————————————————–
திருந்த விரும்பாத மனிதர்களும் திருத்த விரும்பாத கடவுளுமாக இந்தக் கலிகாலம் இருப்பதைக் காட்டும் விதமாகக்   கேலியும் கிண்டலும் கலந்து இந்தக்  ‘ கடவுளும் கந்தசாமியும் ‘ கதையை புதுமைப்பித்தன் படைத்திருப்பதாகத் தோன்றுகிறது .
 
நமது இன்றைய நிகழ்வில் இந்தக் கதையை நான்கு பேர் சொல்லும் பொழுது நிச்சயமாக யாராவது ஒருவர் கதையை முழுமையாக சொல்லி விடுவார் என்பதால் நான் இதில் கடவுளைப் பற்றிப்   இணைக்கப்பட்டிருக்கும் சில  புராண  விஷயங்களை நகைச்சுவையாக இணைத்திருக்கும் விதத்தை  மட்டும்  பகிர்ந்து கொள்கிறேன்.
 
வைத்தீஸ்வரன் கதை ,  பஸ்மாசுரன் கதை, பிள்ளைக்கறி கேட்ட கதை,  நீலகண்டன் ஆன கதை, சுடுகாட்டில் நடனம் ஆடிய கதை,, பிட்டுக்கு மண் சுமந்த கதை, சிவசக்தி நடனம் ஆடிய கதை இன்னும் பல கதைகள்  இங்கே சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. 
 
 
இருவரும் கை ரிக்ஷாவில் ஏறி வரும்போது   கந்தசாமி பிள்ளை தான்  சித்த வைத்தியம் பார்ப்பதைச் சொல்லி ‘இறைவனுக்கு வைத்தியம் தெரியுமா’ என்று கேட்கும்போது  வைத்தியநாதனாய் வீற்றிருக்கும் வைத்தீஸ்வரன் கோயில் இறைவனின் கதை ஞாபகம் வருகிறது .
 
இறைவன்  திருவல்லிக்கேணியில் வந்து இறங்கியவுடன்  சடா முடியோடு , கடவுள் உருவம் எடுத்து ‘ஏதாவது வரம் கேள்’ என்று கந்தசாமிப்பிள்ளையிடம்  கேட்கும்போது அவர் சொல்வார் ‘எனது  தலைக்கு ஏதாவது பிரச்சனை வந்து விடக்கூடாது’  என்று. அப்பொழுது பஸ்மாசுரன் கதை ஞாபகம் வருகிறது .
 
தலையில் கை  வைத்தால் பஸ்பமாய் ஆகிவிடும் வரத்தை பஸ்மாசுரனுக்கு வழங்கி விட்ட சிவன் , அசுரன்   இவர் தலையிலேயே கை  வைக்க வர , சிவன் தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் அல்லவா இல்லை திருமால் புண்ணியம் அல்லவா , அந்தக் கதை ஞாபகம் வந்தது.
 
இருவரும்  வீட்டுக்குள் நுழையும் போது  குழந்தையைப் பார்த்து , ‘உமது குழந்தையா’ என்று சிவன் கேட்க, கந்தசாமிப் பிள்ளை தயங்க, சிவன் ‘பயப்படாதீர்’ என்று  சொல்ல, நமக்கு சிறுத்தொண்ட நாயனாரிடம்  பிள்ளைக் கறி கேட்ட சிவனின் திருவிளையாடல் ஞாபகம் வருகிறது . 
 
 அடுத்ததாகக்   கந்தசாமிப் பிள்ளையின் பெண் குழந்தை  பரமசிவனாரின் கழுத்தில் ‘இது என்ன நாவல் பழம் போல்’  என்று கடிக்க வர,  பாற்கடலைக் கடையும் போது  முதலில் வந்த விஷத்தை எடுத்து சிவன்  விழுங்க முயல,  பார்வதி அவர்  கழுத்தைப் பிடிக்க, விஷம் அவர் கழுத்திலேயே தங்க, அவர் நீலகண்டன் ஆன கதை நினைவுக்கு வருகிறது . 
 
 
குழந்தையுடன் சேர்ந்து, செத்த காலேஜ்  என்ற மியூசியம் பார்த்து விட்டு வரும் சிவன் ‘; என்னய்யா இது, எலும்புகளைக்  காட்சியாக வைத்து என்னைக் கிண்டல் செய்கிறார்களா’ என்று கேட்கும்போது. சுடுகாட்டில் எலும்புகளை மாலையாக சூட்டிக் கொண்டு ஆடும்  சிவனின் நடனம் ஞாபகம் வருகிறதுதானே. 
 
தான் வாங்கிக் கொடுத்த லட்டில் ‘உதிர்ந்ததை எனக்குக் கொடு, முழு லட்டை நீ எடுத்துக் கொள் ‘ என்று இறைவன் குழந்தையிடம் சொல்லும்போது திருவிளையாடற் புராணத்தில் புட்டு விற்ற கிழவியிடம் அவள் பங்குக்கு ஆற்று  வேலை செய்ய, உதிர்ந்த புட்டைக் கேட்க, அந்தக் கிழவி பிடித்த பிட்டெல்லாம் உதிர்ந்து விழும் காட்சி ஞாபகம் வருகிறதுதானே. 
 
அது போன்று கந்தசாமிப் பிள்ளை சொற்படி ஏதாவது தொழில் செய்து  பிழைக்கலாம் என்று  சிவனும்  சக்தியும் திவான் பகதூர் முன்  புலித்தோலோடும் ,பாம்புக் கழுத்தோடும், சூலத்தோடும், உடுக்கையோடும்   சிவசக்தி தாண்டவம் ஆட  அதைப்  பார்த்துவிட்டு திவான் பகதூர் ‘இது என்ன தெருக்கூத்து  ஆட்டம்  போலிருக்கிறது’ என்று  கேலி செய்து  ‘வேண்டாம் ‘என்று சொல்லும் அந்த காட்சிகளில்  நமது சிவசக்தி தாண்டவ  வரலாற்றைப்  பார்க்கிறோம். 
 
 புராணங்களை  எல்லாம் அவர் நகைச்சுவையாகப்  பொருத்தமாகக் கையாண்டு அதே நேரம்  மக்கள், இந்தக்  கால மக்கள் எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள் என்பதை எல்லாம் அங்கங்கே சுட்டிக்காட்டுகிறார்
 
 
செல்லாத  பத்து ரூபாய் நோட்டை  கடவுளிடம் தள்ளி விடும் ஹோட்டல்காரர்,
தண்ணீர் கேட்ட சாமியைக் காபி குடிக்கக் கூட்டிப் போய் அவர் காசில்  காபி குடிக்கும் கந்த சாமிப் பிள்ளை . 
 
அது மட்டும் அல்ல, ட்ராம்முக்கும் பஸ்ஸுக்கும் காசு கணக்குப் பார்க்கும் கந்தசாமிப் பிள்ளை, கடவுளை  திருவல்லிக்கேணி கூட்டிச் செல்லும் சாக்கில் அவரோடு சேர்ந்து கைரிக்ஷாவில் தன வீட்டிற்குக்  கூட்டிச்  செல்வது . 
 
கலா ரசனை இல்லாத திவான் பகதூர் போன்ற  ஆட்கள் கலா மண்டலங்களை நடத்துவது  
 
 
 இவற்றுக்கு நடுவில் கள்ளம் கபடம் இல்லாத குழந்தையின் நடவடிக்கைகளையும் கலந்து தந்திருக்கிறார். 
 
 
இவ்வளவு ஏமாற்றுக்காரர்கள் மத்தியிலும் ஒரு நம்பிக்கை வெளிச்சமாகக்  குழந்தையும் காட்டுகிறார். 
 
அது மட்டும் அல்ல,   தான் ஒரு எழுத்தாளர் என்ற முறையில் பத்திரிகைக்காரர்கள் கஷ்டத்தையும்  கோடி காண்பிக்கிறார். 
 
சித்த  வைத்தியம் பார்த்துக் கொண்டு அதில் வரும் பணத்தில் குடும்பச்  செலவுகள் போக பத்திரிகை நடத்துவதையும் அதற்கு கடவுளிடமும் சந்தா  கேட்பதையும் சுட்டிக்காட்டுகிறார். கடைசியில் கடவுள் சந்தா பணத்தைக் கொடுத்து விட்டு , ‘வரம் கொடுத்து தள்ளி இருப்பதே தனக்கு நல்லது ‘ என்று  வெறுத்துப் போய்   மறைவதாகக்  காண்பிக்கிறார்.  
 
இந்தக்  காலத்தில் ‘கடவுளுக்கே இங்கே வந்து இருப்பதில்  விருப்பம் இருக்காது; தற்கால மனிதர்களுடைய மனநிலை மோசமாக  மாறியிருக்கிறது ; பல  அநியாயங்கள் நடக்கின்றன . இதைப்  பார்த்து கடவுளுக்கே வெறுப்பு வந்து விடும்  ‘  என்ற  ஒரு  சமுதாயக்  கருத்தையும் நகைச்சுவையாகச்   சொல்வதாக எனக்குத்  தெரிகிறது.
 
மொத்தத்தில் நான் முதலில் சொன்னது போல திருந்த விரும்பாத மனிதர்களும் திருத்த விரும்பாத கடவுளுமாக இந்தக் கலிகாலம் இருப்பதைக் காட்டும் விதமாக  கேலியும் கிண்டலும் கலந்து இந்த ‘ கடவுளும் கந்தசாமியும் ‘ கதையை புதுமைப்பித்தன் படைத்திருப்பதாகத் தோன்றுகிறது .  
 
அது மட்டும் அல்ல,  தான் ஒரு எழுத்தாளர் என்ற முறையில் எழுத்தாளர்கள், பத்திரிகைக்காரர்கள் கஷ்டத்தையும்  அவர்களின் நேர்மையையும்   கோடி காண்பிக்கிறார். 
 
கடவுளே தன்  முன் வந்து வரம் கேட்டாலும் பெரிய வரமாக எதுவும் கேட்காமல், ‘மனிதனைப் போல இரும் ‘என்று  சொல்லி, தனது பத்திரிகைக்கு ஆயுள் சந்தா மட்டும் கேட்கும் ஒரு எழுத்தாளரின்  , பத்திரிகை ஆசிரியரின் நேர்மையையும் எடுத்துக் காட்டி முடிக்கிறார். என்று தோன்றுகிறது .  சிலர் வங்கியில் வேலை செய்து கொண்டு அந்தச் சம்பளப் பணத்தை   வைத்தே,  பத்திரிகை நடத்தினார்கள் அல்லவா . 
 
நன்றி வணக்கம் 
 
 
———–நாகேந்திர பாரதி
 
Series Navigationஎக்ஸ் ஆக்ஸிஸ் 1990முருகபூபதி எழுதிய வாழும் வரலாறு மல்லிகை ஜீவா   (Tamil Edition) Free Kindle Edition
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *