தொற்றெனும் பாவி   

author
0 minutes, 0 seconds Read
This entry is part 9 of 19 in the series 30 ஜனவரி 2022

 

            –எஸ்ஸார்சி            

 

 

 முதல் மாடியில் என் வீடு.. வீட்டின் நிலைக்கதவின் முன்பாக நிற்கிறேன்.    கதவைத்திறக்கவேணும். சாவியைத்தான் காணோம். வீட்டின் முன்பாக ஆம்புலன்ஸ் வண்டி நிற்கிறது.  இரவு மணி எட்டிருக்கலாம்.  என் வீட்டிற்கு வரும் ஆம்புலன்சைப்பார்த்த வீதி ஜனங்கள்  அச்சத்தில்  அவரவர்கள் தங்கள் வீட்டுக்கதவினைத்தாழிட்டுக்கொண்டார்கள். எங்கும்  ஒரே அமைதி.

 என்  பையன்  தெருவில் ஆம்புலன்சிற்கு அருகே நிற்கிறான்.. அவனுக்கு பெங்களூரில்  ஒரு  கம்பெனியில் உத்யோகம். சென்னையில்  எந்த  வேலையும் கிடைக்கவில்லை.  சென்னைக்கு மாற்றிக்கொண்டு  வருவானா என்றால் இல்லை. அவன் வேலை பார்க்கும் அந்தக் கம்பெனிக்கு இங்கு கிளைகள் உண்டு ஆனால் மாற்றல்தான் கிடையாது என்கிறார்கள்.. குலதெய்வம் ராயம்பரம் செல்லியம்மனை எல்லாம் வேண்டிப் பார்த்தேன். ஒன்றும் கதை ஆகவில்லை.

என் மனைவிக்கு ரெண்டு மூன்று நாட்கள் ஜுரம். பெருங்களத்தூர்  அருள் அன்னை ஆஸ்பத்திரிக்கு அழைத்துப்போனேன். உயிர்வளியின் அளவு  பார்க்கும் கருவிகொண்டு சோதித்தார்கள். உயிர்வளி  இருக்கும் நிலமை சரியில்லை என்றார்கள்:.சி டி ஸ்கேன் எடுத்து ப்பார்த்தார்கள். நுரையீரல் பாதிக்குப் பாதிப்பு  எனக்குத் தகவல் சொன்னார்கள். கொரொனா சிவப்பு பிரிவுக்கு ஸ்டெச்சரில் போட்டு  உருட்டிக்கொண்டு போனார்கள். கொரானா மஞ்சள் பிரிவு  என்ற ஒன்று அந்த மருத்துவ மனையில் இருந்தது.. அங்கு  பெருந்தொற்று சற்றே பாதிக்கப்பட்டோர் மட்டுமே அனுமதிக்கப்பட்டார்கள்.

என்னோடு என் பேத்தி இருக்கிறாள். அவளுக்கு வயது ஆறு. அவளின் பெற்றோர்  கலிபோர்னியாவில் இருந்தார்கள்.  லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் வசிப்பதற்கு ஒரு வாடகை  வீடு பார்த்து பால் காய்ச்சிய  பிறகு  இந்தப்பேத்தியை அழைத்துப்போவதாய்ச்சொல்லி ப்போனார்கள். நம் கணக்கில் எதுமே இல்லை.. அதற்குள்ளாய்  உலகமே  தலைகீழாய் மாறிப்போயிற்று,  எங்கெங்கும் பெருந்தொற்று. மனிதகுலம் நோயின் பிடியில் மாட்டிக்கொண்டு திக்கு முக்கு ஆடியது. அமெரிக்காவில்  இந்தப்பெருந்தொற்றின் பாதிப்போ சொல்லிமுடியாது. தெருவெங்கும்  பிணங்கள் குவியக் குவியலாய். எந்த மருத்துவமனையிலும் மனிதர்கள்  நுழையவே இடமில்லை. மருத்துவமனை வாயிலில் ஆம்புலன்சுகளின் முற்றுகை.  அந்த வண்டி உள்ளே   இருக்கும் நோயாளிகளில். மிகவும்  வயதானவர்கள் மிகவும் நோயுற்றவர்கள் ’ ’விதி உனக்கு எப்படியோ போ போ’ என வீட்டுக்கு  விரட்டப்பட்டார்கள்.

 உலக விஞ்ஞானிகள்  இத்தொற்றுக்குத் தடுப்பூசி  கண்டி பிடிக்க பிள்ளையார் சுழி போடத்தொடங்கினார்கள். அது எப்போது  மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்பதெல்லாம் யாருக்கும் தெரியாது.

 என் மனைவிக்கு சர்க்கரை. உண்டு.. ஸ்டீராய்ட் கொடுத்துக்கொடுத்து மருத்துவர்கள் போராடினார்கள். ஐசொலேஷன் வார்டில் பத்து நாட்கள்.. . அந்த மருத்துவர்கள் செவிலியர்கள் மட்டும்தான் அவளிடம் செல்ல  அனுமதிக்கப்பட்டார்கள்.

 நானும் என் பேத்தியும் வீட்டில் தனித்து இருந்தோம்  . எங்களுக்கு நோயின் பாதிப்பு த்தெரியாமல்தான் இருந்தது. வீதியில் உள்ளவர்கள் எங்களோடு யாருமே பேசுவதில்லை.

 ஒரு நாள் செவிலியர்  எனக்குப் போன் செய்து ‘ உங்கள் மனைவி உங்களயும்  பேத்தியையும் பார்க்கவேண்டும் என்கிறாள். ஆக நீங்கள் இருவரும் கொரானா வார்டிலிருந்து தள்ளி  தூரத்தில்  வந்து நில்லுங்க:ள். கைகளை அசையுங்கள். நாங்கள் வீல் சேரில் உங்கள் மனவியைக்கூட்டி வந்து உங்களுக்குச் சைகை காட்டுகிறோம்’  சிவப்பு வார்டு செவிலியர்கள்தான்  சொன்னார்கள்.. நானும் என் பேத்தியும்  அந்தச் சிவப்பு வார்டுக்குப்போய் அப்படியே செய்தோம். என் மனையியை வீல்சேரில் அழைத்து வந்தார்கள். கண்கள் மட்டுமே  வெளித்தெரிந்தது. அவள் குரல் மட்டுமே அவளை அடையாளம் காட்டியது.. பிற எல்லாம் வெள்ளைத்துணிதான் அங்கே. அவள் வீல்சேரில் பொட்டலமாய்க்கிடந்தாள்..

‘ குழந்தை  பத்திரம். அவுங்க  அப்பா  அம்மாகிட்ட பேத்திய ஒப்படைச்சிடுங்க’ அவ்வளவே மனைவி பேசினாள். வீல் சேர் நகர்ந்து கொண்டது. அவள் கைமட்டும் தூக்கி அசைத்தாள்.  தூரத்திலிருந்து என் பேத்திக்கு பாட்டியைக்காட்டினேன்.  ’நம்ப பாட்டி குரல்தான் கேக்குது’ என்றாள் என் பேத்தி.

 பெங்களூரில்  இருக்கும் என் இரண்டாவது மகன் வீட்டில் குழந்தைகள் இருவரில் பெரியவனுக்கு கொறானா. என் மகனுக்கு என் மருமகளுக்கு கொரானா.  ஒரு மனிதனுக்கு எத்தனை கஷ்டம் வரவேண்டுமோ அத்தனையும் வந்து அவர்கள் குடும்பம் சின்னா பின்னமாகியது.,

என் மனைவிக்கும் என் சின்ன பையனுக்கும் ஒ பாசிடிவ் இரத்தம். சிகிச்சை யுக்தியில் அப்போது பிளாஸ்மா  தெரபி பிரபலமாக இருந்தது. என்  பெங்களூர் மகனுக்குக் கொரானா வந்து போனது. அவனுக்கும் ஒ பாசிடிவ் இரத்தம். அவனிடம்  குருதி எடுத்து அதனில்  பிளாஸ்மா பிரித்து எடுத்தார்கள். கொரானா பாதித்த  என் மனைவிக்கு அதனை இரத்தத்தில் ஏற்றினார்கள். உயிர் வளியின்   அளவு மட்டும்  ஏறாமல் என் மனைவிக்கு மிகக்கஷ்டமாக இருந்தது. இரண்டு சிலிண்டர்கள் மாற்றி  மாற்றி வைக்கப்பட்டது. சிலிண்டரை எடுத்தால் அவளுக்கு உயிர்வளி அளவு சர்ரெனக் கீழே போய்விடும். மூச்சுத்திணறும்.

இன்றுதான் என் மனைவியை  அந்த அருளன்னை மருத்துவமனையிருந்து  டிஸ்சார்ஜ் செய்கிறார்கள். என்  மூத்த மருமகளின் தாயார் தகப்பனாருக்குத் திருநெல்வேலிக்குப்பக்கம் சேரன் மாதேவியில் ஜாகை.. சென்னைக்கு வர  ரயிலாவது பஸ்ஸாவது  எதுவுமில்லை. தண்டவாளங்களில்  தார்ச்சாலைகளில் மாடுகள்  ஆடுகள் படுத்து உறங்கிய கொரானாக்காலம் ஆக ஒரு  வாடகைக்காரை ப்பிடித்துகொண்டு சென்னைக்கு வந்தார்கள்.ஆயிரம் நடைமுறைகள் அனுசரித்துத்தான் மருத்துவத்திற்கு மட்டுமே என்று சொல்லி இப்படி ஒரு பயணம். . அவர்கள் என் பேத்தியை கூட்டிக்கொண்டு  இன்று மதியம்தான் சேரன் மாதேவிக்கு திரும்பிப்போனார்கள்.

ஆக்சிஜன் சிலிண்டர்கள் இரண்டோடு ஆம்புலன்சில் வீட்டுக்கு வரும்   அவளின் அன்புப்பாட்டியைப்பார்த்து விட்டு மனம் ஒடிந்து போனால் என்ன செய்வது ஆக . என் பேத்தியை  மதியமே அனுப்பிவைத்துவிட்டேன்.. என் மனைவி  இன்று மாலைதான் டிஸ்சார்ஜ் ஆனாள்…

என் பேத்தியும் நானும் பத்து நாட்கள் தனித்து இருந்தோம். பேத்தியின் தாயும் தந்தையும் அமெரிக்காவில்.  இது நாள்வரை  பேத்தியை பார்த்து பார்த்து  வளர்த்த பாட்டியோ மருத்துவ மனையில்.  நான் தினம்தினம் சமூகத்தால் ஒதுக்கப்பட்டு ஓரமாய்க் கிடந்தேன் . என் பேத்தி.  அத்தனைக்குச் சமத்தாக என்னோடு இருந்தாள்.  அந்தக்கடவுள் அவளுக்கு நல்லறிவு கொடுத்து அவளைக் க்காத்தான். அப்படிச்சொல்வதுவே சரி.  உறவினர்கள். யாரும்தான்  யார் வீட்டுக்கும் வீட்டுக்கு வரமாட்டார்களே.

‘’ பாட்டிய நீ  நல்லா கவனமா  பாத்துகோ தாத்தா’ சொல்லி அழுதுகொண்டே அந்த சேரன்மாதேவி   அம்மாதாத்தா பாட்டியோடு   என் பேத்தி சேரன்மாதேவிக்குப்போனாள்.  நானோ  தாங்கிக்கொள்ள முடியாத துயரத்தை அனுபவித்தேன். என் சம்மந்திமார் என் வீட்டின் உள்ளேயும் வரவில்லை.  கொடூரமான  பெருந்தொற்றுக்காலம். நானும்  பேரக்குழந்தையும் அடிக்கடி மருத்துவ மனை சென்று சென்று திரும்பியவர்கள்..  ஆக தெருவில் நின்று கோண்டே பேத்தியை  கூட்டிக்கொண்டு காரில் போனார்கள்.  சொல்லவேண்டிய மெயின் விஷயத்துக்கு வருவோம்.

நான்கு லட்சம் ரூபாய்.  அருள் அன்னை மருத்துவமனையில்  மருத்துவச் செலவு ஆனது.. இரண்டு சிலிண்டர்கள் துணையோடு சுவாசிக்கும். என் மனைவியை ஆம்புலன்சிலிருந்து இறக்கி ஸ்டெச்சரில் முதல் மாடிக்குத் தூக்கி வருகிறார்கள். இரவு எட்டு மணி.  என்  சின்னப்பையன் கொரானாவில் படுத்து  எழுந்தவன். அம்மாவுக்குப் பிளாஸ்மா கொடுத்தவன். மருத்துவ மனை உதவிஆட்களோடு அம்மாவைக்கூட்டிக்கொண்டு வருகிறான். எல்லோருக்கும் நீல நிற மாஸ்க் இத்யாதிகள் சானிடைசர்கள் வகை எல்லாம்தான்.

‘ தம்பி வீட்டு சாவியை எங்கோ தொலைச்சிட்டேன்’

 என் பையன் பதில் சொல்லவில்லை. ’அப்பா’ என அழைத்தான் ஒரு முறை .

 ‘ சாவியை க்கணுமா. நல்லா பாத்தியா’

‘ பார்த்தேன்’ பதில் சொன்னேன் ’என் வீடு பூட்டிக்கிடந்தது. பெரிய சாவி கொண்டு மட்டுமே கதவு திறக்கமுடியும். தொட்டிப்பூட்டு என்று சொல்வார்களே அந்த இனம்தான் அது.

இரண்டு சிலிண்டர்களோடு என் மனைவியை வீட்டு வாசலில் கிடந்த நாற்காலியில் கிடத்திவிட்டு ஆம்புலன்சுக்காரர்கள் நகர்ந்து கொண்டார்கள்.

ஆம்புலன்சில் சுழலும் சிவப்பு ஓளி. அதனைக் கக்கிக்கொண்டே அது  நகர்ந்து போனது.

சிலிண்டரோடு என்மனைவி சுவாசித்துக்கொண்டிருக்க  தெருவில் எனக்கு உதவத்தான் யாருமில்லை.  எல்லா வீட்டுக்கதவும் சாத்தித்தான் கிடந்தது   எப்படியோ ஒருவர் வீட்டு க்கதவைத்தட்டினேன். அவர் திறந்தார்   வீட்டு ’சாவி தொலைத்து விட்டேன்  கொஞ்சம் உதவி செய்யுங்கள்’ என்று  கெஞ்சினேன். அவர் காலை மட்டும்தான் நான் பிடிக்கவில்லை.  நான் பிடிக்கவும் கூடாதுதானே  அவர் என் முகத்தைப்பார்க்காமல் ஆகாயம் பார்த்து ஏதோ பேசினார்.

என் பையன் சாவிக்காரன் யாரையேனும் பார்த்து அழைத்து வருகிறேன் என்று கடைத்தெருவுக்கு ப்போய்விட்டான். கதவைத்திறந்துகொண்டு வந்த அவருக்கு என் மனைவி ஆம்புலன்சில் திரும்பியது எல்லாம் தெரியும். அவர் முகக்கவசம் அணிந்துகொண்டார். என் வீட்டுக்கு வந்து, ‘ இது சாவிக்காரன் வந்தா தான் முடியும் நா ஒரு பொன் நெம்பர் தர்ரேன். நீங்க பேசுங்க ஆனா மணி எட்டரை ஆயிடுச்சி ராத்திரி வேற’ என்று சொல்லி அவர் தன் வீட்டுக்கு சட்டெனப்போய்விட்டார். அவர் கொடுத்துவிட்டுபோன மொபைல் எண்ணுக்கு போன் போட்டேன்.

 கிராண்ட் ஃபுனெரல் சர்வீசஸ்  என்று சொல்லிக்கோண்டு  மொபைலில்  விளம்பர ஒலிப்பான் ஓடியது.  என் மனம் கிடந்து  பட் பட் என அடித்துக்கொண்டது. இது என்ன விபரீதம் என்று நினைத்தேன்.

‘ சார் சொல்லுங்க’ என்றான் எதிர் முனையிலிருந்து.

‘ என் வீட்டுல கதவுக்கு சாவி போடணும். சாவி தொலஞ்சிப்போச்சி. ரொம்ப அவசரம்’ என்றேன்.

‘  மாத்து சாவி போடுறதும் எனக்கு வேலதான்.  ஆனா இப்ப ராத்திரியா இருக்கு . காலையில வரேன்’

‘ என்ன சாரு ரொம அவசரம் காயிலா கெடக்குற பொண்டாட்டிய தெருவுல வச்சிகிட்டு நிக்குறன்’

‘என்ன காயிலா அத மொத சொல்லுங்க’’

‘ டிசண்ட்ரி போனது’ பொய்தான் சொன்னேன்.

‘  அப்ப சரி  நானு வர்ரேன் ஆனா ஆயிரம் ரூபாய் ஆகும்’

‘ தர்ரேன் சார்’

‘ என் வீட்டு விலாசம் வாங்கிக்கொண்டார். இன்னும் அரை மணியில் அங்கு இருப்பேன்.  வீட்டுக்கு வந்து புடுவேன் என்றார்.

என் பையன் வீடு திரும்பிக்கொண்டிருந்தான்.

‘ ஒரு பாயை பார்த்து பேசியிருக்கேன்  அவுரு சாவிக ஏராளம் வச்சீருக்காரு  இப்ப வருவாரு. நம்ப வீட்டு அட்ரஸ் கொடுத்து  இருக்கேன்’ எனக்குச்சொன்னான்.

சற்றைக்கு எல்லாம் ஒரு டூவீலர் வீட்டு வாசலில் நின்றது.

‘ தோ வந்துட்டாரு பாயி’ என் பையன் கத்தினான்

‘ இங்க  நீங்க தானா.  ஒரு பெரியவரு பேசுனாரு விலாசம் ஒண்ணாதான் இருந்திச்சு நான் ஒண்ணும் பேசிகில போயி பாத்துகுவம்னுட்டு வந்தேன்’

‘ அது எங்க அப்பா’

‘’ இங்க  பக்கத்துல ஒருத்தரு நெம்பர் கொடுத்தாரு அதான் .போன் பண்ணினேன். அவரும் இவரும் ஒண்ணுதானா’

‘ஆமாம் ’ என்றான்.

‘ இந்த வீட்டுக்கு  தெரு கேட் எங்க இருக்குது.  மொதல்ல  அந்த கேட்டுப்பூட்டை யாரு தொறந்தா’

பூட்டு ரிப்பேர் பாய் கேட்டார்.

’நாந்தான் திறந்தேன்’

‘ அதுக்கு சாவி’

யாரோ  என்னை பொட்டில் அறைந்த மாதிரிக்கு இருந்தது .நான் கீழே ஓடினேன்.  கிரில் கேட்டைப்போய் ப்பர்த்தேன்  முதலில்கேட்டைத்திறந்த நான் வீட்டுப்பெரிய சாவியை  அந்தக்கேட்டுப்பூட்டோடு வைத்துவிட்டு  நிலைக் கதவிடம் நின்றுகொண்டு சாவியைதொலைத்துவிட்டதாக  எண்ணிவிட்டேன்.  நொந்து நொந்து போனேன். ஆத்திரத்தில் அவசரத்தில் புலம்பியிருக்கிறேன்.   இத்தனை அமர்க்களம் இங்கு அரங்கேறி  முடிந்திருக்கிறது…

வீட்டுச்சாவி  என்கையில்.. இப்போது  வீட்டுக்கதவும் திறந்தாயிற்று. என் மனவியை  பதனமாய் உள்ளே  அழைத்துப்போய்க்கட்டிலில் படுக்கவைத்து  உயிர் வளி சிலிண்டர்களை அருகே அருகே வைத்தேன்.  இங்கு  நடந்தவை எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டேயிருந்த  மனைவியின் கண்களிருந்து கண்ணீர் தாரையாய் வந்து கொண்டிருந்தது.

பையன் ஒரு ஆயிரம் ரூபாயை எடுத்து பாயிடம் கொடுத்து ’ இத வச்சுகுகுங்க  எப்படியோ சாவி கிடைத்துவிட்டது அது போதும்’, என்றான்.

‘ நானு  இங்க  எந்த வேலயும் செய்யுல. எனக்கு காசு எதுவும் வேணாம். .. எனக்கு மனசாட்சி இருக்கு. அதுக்கு  மட்டும் மாத்து சாவி இல்ல’’

சொல்லிய பாய் தன்னுடைய வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பி விட்டார்.. —

 

 

Series Navigationஅணு ஆயுத யுகத்திற்கு அடிகோலிய ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் – 3விரிசல்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *