மலையாள சினிமா

This entry is part 5 of 19 in the series 30 ஜனவரி 2022

 

 

நடேசன்

நான் பார்த்த தமிழ்ப் படங்களில் யதார்த்தமானவை எனக்கருதும்  திரைப்படங்களிலும் 99 வீதமானவை புறவயமானவை. அதாவது மனம் சம்பந்தப்படாதவை. இலகுவாக கமராவால் படம்பிடிக்க முடிந்தவை. அதாவது ஒரு செகியூரிட்டி கமராவின்   தொழில்பாடு போன்றவை. 

வர்க்கம் ,சாதி,  மதம்  போன்ற தடைகளை மீறுதல், வன்முறைகளுக்கு எதிராகப் போராடுதல்  அல்லது அதற்கு எதிரான  பிரசாரத்தில் ஈடுபடுவது என்ற புறச்சார்பு  அல்லது உலக நடைமுறை விடங்களைப் பிரதிபலிப்பவையே  தமிழ்த்திரைப்படங்கள்.  இவற்றில்  பெண்களை முக்கிய பாத்திரங்களாக கொண்ட சில படங்களும் அவர்களது அகச்சூழலைப் பிரதிபலிக்கவில்லை. சமூக வன்முறை,  குடும்ப வன்முறை,  அல்லது அவர்களது தயாரிப்போடு  (Manufactured morality) மீண்டும் சாட்சியப்படுத்தலாக நின்று கொண்டன.

யதார்த்த சினிமாவுக்கப்பால்,  எம் ஜி ஆரின் பிரசாரம் , சிவாஜி கணேசனின் நாடக பாணி,  மலினமான நகைச்சுவை அத்துடன்  வன்முறையே இதுவரையும் நம்மை மூச்சுத்திணற வைத்த பெரும்பாலான  சினிமாக்களின் பேசுபொருட்களாகும். நாமும் அவற்றைக் குறை சொல்லாது ரசித்தோம். 

தமிழ் சினிமா தற்போது பிரமாண்டமான பணம் புழங்கும் வர்த்தக  சந்தை , அதில் பல இலட்சக்கணக்கானோரது  வாழ்வாதாரங்கள் தங்கியுள்ள ஒரு சர்வதேசத் தொழில்துறையாக மாற்றப்பட்டுள்ளது. அதையும்  நான் குறை சொல்லவில்லை – எனக்குத் தெரிந்தவை இவை என்கிறேன் – அத்துடன் சிறு வயதிலிருந்து இந்த சந்தையில்  நானும் பங்குதாரியே.

ஏற்ற தாழ்வுகள்,   அதிகமுள்ள புறச்சூழல் கொண்ட   தமிழ்ச் சமூகத்தில் அவை திரையில் வருகிறது. ஆனால்,  தற்பொழுது இந்தியாவில் தமிழ்நாடு முன்னேறிய மாநிலம்.  மிகப்பெரிய மத்திய வகுப்பு இங்குள்ளது . தனிமனிதர்களது அகவாழ்வுப் பிரச்சினைகள் ஏராளமிருக்கும் .  அதிலும் பெண்கள் என்ற 50 வீதமானவர்களது எண்ணங்களை  நாம் பிரதிபலிப்பது குறைவாகவே உள்ளது. ஆனால் மலையாளிகள் இதில் முன்னிற்பதாக எனக்குத் தெரிகிறது

சமீபத்தில் நான் பார்த்த மலையாளப் படங்கள் என்னைச் சிந்திக்க வைத்தன. அந்தச்  சிந்தனையை  உங்களுக்கும் தருகிறேன். அதற்காக நாம் மாறவேண்டுமென்றில்லை.  நாம் ஏன் மாறவேண்டும்?

நமக்குத் தலைவர்கள்,  பிரமுகர்களை உருவாக்கித்தரும் திரைத்துறையை நாம் புறக்கணிக்க முடியுமா?

மலையாளிகள், ஒரு காலத்தில் நமது  தமிழைப் பேசியவர்கள், அதிலும் அயலவர்கள். அவர்களது  சில படங்கள் வித்தியாசமாக இருந்தன.

 எக்காலத்திலும் மலையாளத் திரைப்படங்கள், தென்னிந்தியாவில் மட்டுமல்ல,  மற்றைய இந்திய மொழிகளிலுமிருந்தும்   தனித்து நிற்பவை. வித்தியாசமான பல படங்களை  இந்த கொரோனோ  காலத்தில் பார்க்க முடிந்தது . இக்காலத்தில் அமேசன் மற்றும் நெற்ஃபிளிக்ஸில்  வரும்போது தமிழ்ப்படுத்தியோ அல்லாதபோது ஆங்கில உப  தலைப்புகளுடன் வெளியாவதால்  நம்மால் தடையின்றி  ரசிக்கமுடிகிறது. அப்படியான படங்களில் சிலவற்றை  நான் இங்கு கோடி காட்டுகிறேன்

எலக்ரா என்ற மலையாள படத்தை தமிழில் லேடி ரைகர் என மொழி பெயர்த்திருந்தார்கள்- Big Boss என்ற புருஸ்லியின் ஆங்கிலப்படத்தை அண்ணாத்தே என்பதுபோன்று !    எதாவது ஈழத்துப் பெண் புலிகளது கதையாக இருக்குமா என்ற எண்ணத்துடன்   அதனைப் பார்த்தபோது நயன்தாரா,  மனுஷா கெய்ராலா,  மற்றும் பிரகாஷ் ராஜ் நடித்த அந்தப்  படம் விறுவிறுப்பாகச் சென்றது.

படம் முடிந்தபின்பு இந்தக் கருவை எங்கோ படித்திருக்கிறோம் என்ற நினைவு வந்தது. சிறிது நேர மன அலசலின் பின்பு  கிரேக்க நாடக ஆசிரியர் சோபிகிளிஸ்(Sophocles (c. 496 BCE – c. 406 BCE)எழுதிய நாடகத்தின் மறுபதிப்பு  இது என்பது புரிந்தது .

தந்தையைக் கொலை செய்யும் தாயையும் அவளது காதலனையும் , சகோதரனைக் கருவியாக  வைத்துப் பழிவாங்கும் சகோதரியின் கதை.   அதில் மூலக் கதையான சோபிகிளிஸ்சின்  கிரேக்க நாடகத்தில்  ,  இலியட் காவியத்தில் வரும் ரோய் , போரில் வென்ற அரசன் அகமனன் தந்தையாகவும், அவனது மனைவி  கிளைரோமெஸ்ரா (Clytemnestra ) என வருகிறார்கள்.

எலக்ரா படத்தில் தந்தையாகவும் காதலனாகவும் இரட்டைப் பாத்திரத்தில்  பிரகாஷ்ராஜ் வருகிறார்.  தாயாக மனுஷா கெய்ராலா நடிக்கிறார் . எலக்ராவுக்கு  நயன்தாராவின் வேடம் பொருந்தியுள்ளது.

இதே கதையை மற்றைய கிரேக்க நாடக ஆசிரியர் ஏசிகிளிஸ்(Aeschylus) சிறிதளவு மாறுபாடாகத் தனது நாடகத்தில் எழுதியுள்ளார்.

ஈடிப்பஸ் (Oedipus)  என்ற  கிரேக்க புராணக்கதையில்,  தந்தையைக் கொன்ற தனையன் அரசனாவதாகவும்,  அதன்பின் தாயை மணப்பதாகவும்  வருகிறது. இந்த பிரபலமான கருப்பொருளை சிக்மண்ட் ஃபிரய்ட் (Sigmund Freud) ஆண் குழந்தைகள் தாயை நேசிப்பதென்பதை   தனது கருத்தாக்கமாக வைத்தபோது அது ஈடிபஸ் கொம்பிளக்ஸ் (Oedipus complex) எனப் பிரபலமானது. அதே போல் பெண்குழந்தைகள் தந்தையில் அன்பு வைப்பதை எலக்ரா கொம்பிளக்ஸ் (Electra complex.) என்றார்கள். தற்பொழுது இரண்டும் ஈடிப்பஸ் என அழைக்கப்படுகிறது

சிக்மண்ட்  ஃபிரய்ட் , எலக்ரா கொம்பிளக்ஸ் தனிமனிதர்களது கனவுகள். சமூகத்தின் தொன்மையான கதைகள் , தேவதைக்கதைகள் மற்றும் சாதாரணமாகப் பேசும் நகைச்சுவைகளிலும் தெரிவதாகக் கூறினார்.

இப்படியான ஒரு விடயத்தை நமது சமூகத்தில் பேசுவதைக்கூடத் தவிர்ப்பார்கள் .  ஆனால், மலையாளத்தில்,  தற்காலத்திற்கு ஏற்ப இதனை கருப்பொருளாக –  கிரேக்க நாடகத்தை திரைப்படமாக எடுத்தது பெரிய விடயம் .

இதேபோன்ற மற்றைய ஒரு படம்  ‘ஸ்டார்’  என்ற பெயரில் வெளிவந்துள்ளது.  மூன்று பிள்ளைகளின் தாய் தனது நாற்பது வயதில் திடீரென விசித்திரமாக  நடக்கும்போது கணவர்,  பிள்ளைகளுக்கு மிகவும்  அன்னியமாகத் தெரிகிறாள்.  அவளது பிள்ளைகள்,  கணவன்  மட்டுமல்ல ஏன் வேலைக்காரர்களும் கூட   அவளிடமிருந்து அந்நியப்படுகிறார்கள்,  அவளைப் புறக்கணிக்கிறார்கள். அவளைப்   பேய் பிடித்தவள் அல்லது  மனோவியாதி பிடித்தவள் எனக்கருதுகிறார்கள்  மதநம்பிக்கை உள்ள பாரம்பரியத்தில் வந்த பெண்ணானதால் பேயோட்டுவதற்குக் கொண்டு செல்கிறார்கள்.

சினிமாவின் சில காட்சிகளில்,  வாகனத்தில் சிறுநீர் கழிப்பதாகவும்,  நாற்காலியில் இருக்கும்போது நிலத்தில் இரத்தம் வடிவதாகவும்  சில முன்னறிவிப்பு காட்சிகள் (Foreshadowing) வந்தபோதும், முடிவை  இறுதிவரை இரகசியமாகப் பொத்தி  வைத்திருக்கிறார்கள் . இறுதியில்  வைத்தியர்,   அவருக்குப் பெண்  ஓமோன்கள் அற்றுப்போவதால் (Post-menopausal syndrome) இப்படியான மன நிலை ஏற்படுகிறது . பிள்ளைகளும் கணவனும் அவளுக்கு  ஆறுதலாக இருந்தால்  மீண்டும்  அவள் விரைவாகக் குணமாகிவருவதற்கு அந்தப்பரிவு  உதவும் என்று சொன்னபோதே,   அப்படி ஒரு நோய் இருப்பது  பலருக்குப் புரிகிறது. கணவர் அதிர்வடைந்து மன்னிப்புக்கேட்கிறார்.   இப்படியான பெண்களை ஹிஸ் ரீ ரியா   ( Hysteria) என ஒரு காலத்தில்  சொல்லி   வதைப்பதைப்பற்றி சமீபத்தில்  ஒரு கட்டுரை எழுதியிருந்தேன்.

இதேபோல் The Great Indian Kitchen என்ற மலையாள சினிமாவில்,  திருமணமாகிய பெண் எப்படி அடுப்பங்கரையில் வதைபடுகிறாள் என்பதையும்  , அதனால்  அந்தப்பெண், திருமண பந்தத்தையே இறுதியில் தூக்கி வீசிவிட்டு வெளியேறுவதையும் சித்திரித்திருந்தனர்.  திருமணம் பெண்ணுக்கு எப்படி சிறைத்தண்டனையாகியது என்பதும் , அந்தச் சிறையில் பெண்ணினது போராட்டமுமே அந்தக் கதை.

கதாநாயகனாக எம்மைக்  கற்பனை செய்து,  அழகிய பெண்களுடன்- கடல் – மலை, காடுகள் என  ஓடிவிளையாடி,  ரவுடிகளை அடித்துக் களைத்ததுடன், அதிகரித்த  வன்முறையைப் படமாக்கி வரும் தமிழ்த் திரைப்படங்களை பார்த்துச் சலித்துவிட்டோம்.

குறைந்த பட்சம் கருணை காட்டுங்கள் 

மலையாளத்தில் வித்தியாசமான கருப்பொருளை வைத்து சினிமாவாக்கியிருக்கிறார்கள் . அதைப்போன்று  சில படங்களாவது நமக்கும் தேவை.  தமிழில் குறைந்த பட்சம் தண்ணி  அடிப்பவனது  ஊறுகாய்போல்  ருசிக்க ஆவல் என்பதுபோல்தான்  இந்த குறிப்பை  எழுதினேன்.

Courtesy: Tamil Nadu, it is India’s largest liquor market(economictimes.indiatimes.com)

 

Series Navigation  எது      பிறழ்வு?எமிலி டிக்கின்சன் கவிதைகள்
author

நடேசன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *