ஒரு கல்லின் கதை

author
0 minutes, 0 seconds Read
This entry is part 8 of 15 in the series 6 பெப்ருவரி 2022

 

            வெங்கடேசன் ராஐமோகன்         

 

 

ஒரு வழியா இந்த  வாரமாவது , லாக் டவுன் இல்லாம போச்சே , அத நினச்சு சந்தோச படு….

 

இந்த மாதிரி அவுட்டிங் வந்து எவ்ளோ நாளாச்சு , என்று என் பின்னால் இருசக்கர வாகனத்தில் அமர்ந்திருந்த என் நண்பன் செந்திலிடம் கூறியவாறு அதனை ஓட்டிச் சென்று கொண்டிருந்த நான் ,  மோகன்.

 

நாங்கள் இருவரும் கல்லூரி தோழர்கள்.  படிப்பு முடிந்ததும் , இருவருக்கும் ஒரே கம்பெனியில் வேலையும் கிடைக்க, வாலிப வயதில் சம்பாதிப்பது உண்ண , உடுத்த , ஊர் சுற்ற என்ற கொள்கையின் அடிப்படையில் இப்படி விடுமுறை நாட்களில் சுற்றுலா செல்வோம்….

 

இன்று குற்றாலம் செல்ல தீர்மானித்து , அதிகாலை கிளம்பி திருநெல்வேலி வந்து சிற்றுண்டி முடித்து கொண்டு , பயணத்தை தொடர்ந்தோம்…

 

“ என்னடா, எதுவுமே பேசாம வர ”…..

 

மச்சி , முட்டுதுடா….. கொஞ்சம் எங்கயாவது மறவா ஓரமா நிறுத்துடா…..பாஸ் பன்னிட்டு போலாம் , என்றான் செந்தில்…

அவன் வேண்டுகோளுக்கு இணங்கி வண்டி நின்றது.   அவன் அங்கு இருந்த ஒரு மரத்தின் பின்னால் ஒளிந்தான்.  நான் சுற்றும் முற்றும் பார்த்தேன்…..

 

என் முன்னால் சாலையின் மருங்கில் ஒரு பத்தடி தூரத்தில் , நான்கடி உயரமுள்ள ஒரு கருங்கல் தென்பட்டது….

 

அதில் ஏதோ ஒரு ஆண் உருவம் பொறிக்கப்பட்டது போல இருக்கவே, நான் அதை காணும் ஆவலுடன் நெருங்கினேன்.

 

” எங்கடா போற “

 

இங்க வந்து பாரு.   ” ஏதோ, வித்தியாசமா இருக்குடா “…..

 

இருவரும் அந்த கல்லையே, உற்று நோக்கும் போது , அவ்வழியே வந்த ஒரு பெரியவர்,

“என்ன தம்பிகளா ஏதும் புலப்படுதா ” ? என்று கேட்டார்

இல்லீங்க…. இது என்ன உருவம்னு பார்த்தோம்…

அது எல்லாம் உங்களுக்கு விளங்காது….. எனக்கே எழு கழுத வயசாச்சு அது பற்றி தெரிய , என்றார்.

 

ஐயா , கொஞ்சம் “தெளிவா தான் சொல்லுங்களேன்” என்று கெஞ்சிய குரலில் நான்  கேட்டேன் .

 

சரி வாங்க , அப்படியே கொஞ்சம் நேரம் உட்கார்ந்து பேசுவோம் , என்று பேச ஆரம்பித்தார்…..

 

18ம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் ,

     பாளையக்காரர்களின் ஆட்சி அதிகாரத்திற்கு உட்பட்ட அந்த சிற்றூரின் பெயர் மாவூர். நெல்லை ராஜாங்க மன்னன் வசவப்ப சிக்கலு நாயக்கனின் கீழ் படிந்து மக்கள் வாழ்ந்து வந்தனர்.

      மாவூரின் பதின்ம வயது வாலிபரில் ஒருவன் தான் பேச்சப்பன்….

ஏழ்மை குடும்பத்தில் பிறந்து இருந்தாலும், அவனுடைய வாலிப வயது முறுக்கும் , வீரம் செறிந்த தேகமும் ,  துணிச்சலும் அவனை அந்த ஊரில் அறியாதவரே இல்லை என்னும் அளவுக்கு செல்வாக்கை பெற்று தந்து. இருந்தது….

பேச்சப்பன் பார்வை தன் மீது பட வேண்டும் என்று எண்ணும் கன்னியரின் மத்தியில் அவனுக்கு நிகராய் ஒரு வீர கன்னிகையும் அதே ஊரில் வலம் வந்தாள். அவள் பெயர் மாதங்கி .

 

 கவன் எரிதல், சிலம்பம், கவரி சுற்றுதல்,  போன்ற கலைகளில் ஆண்களுக்கே சவால் விடும் அளவுக்கு கற்றுத் தேர்ந்தவள் .

எப்பொழுதாவது , ஏதேனும் சில சமயங்களில் ஊர் சந்தையிலோ, ஆற்றங்கரையிலோ, மந்தை வெளிகளிலோ இருவரும் ஒருவரை ஒருவர் கடக்கும் அந்த தருணங்களில்,. எதிரெதிரே பார்த்து கொள்ளும் வாய்ப்பு அமையும்.  இருவருக்குமே மற்றவரின் திறன் தெரிந்து இருந்ததால், ஒருவர் மேல் ஒருவர் மிகுந்த மரியாதை கொண்டு இருந்தனர்.

 

மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்து இருந்த மாவூரில், மேய்ச்சல் நிலங்களும் , புல்வெளிகளும், அடர் காடுகளும் சூழ்ந்த ஒரு இயற்கை சூழலின் காரணமாக, கால்நடை வளர்ப்பே, அவ்வூர் மக்களின் பிரதான தொழில்.  நல்ல மேய்ச்சலின் காரணமாக மாவூர் மாடுகளுக்கு, மற்ற ஊர் சந்தையில் மதிப்பு அதிகம்.

மாவூர் மக்களுக்கு என்னதான் அவர்கள் தொழில் செழிப்புடன் சென்றாலும், சில சவால்களும் இருக்கவே செய்தது.  அவற்றில் ஒன்று கள்வர்களிடம் இருந்து கால்நடைகளை காப்பது. மற்றொன்று மேற்கு தொடர்ச்சி மலையின் வன விலங்குகளிடம் இருந்தும் அவற்றை பாதுகாப்பதே…

 

இந்த காத்தல் பணியை செய்வதற்கென்றே அந்த ஊர் பஞ்சாயத்து பெரியவர்களால் , ஒரு ஊர் காவல் படை வடிவமைக்கப்பட்டு வாலிபர்களால் செயல் பட்டு கொண்டு இருந்தது.  இரவு நேரங்களில் கொட்டிலில் அடைக்கப்படும் கால்நடைகளை பாதுகாப்பதே இவர்களின் முக்கிய பணி…

 

பொழுது சாய்ந்ததும் துவங்கும் இந்த பணி, அதிகாலையில் நிறைவுறும். ஒவ்வொரு நாளும் சுழற்சி முறையில் அந்த ஊர் வாலிபர்கள் இரவு நேர காவல் பணியில் ஈடுபட்டு வந்தனர்.   இதில் நம் பேச்சப்பனும் அடக்கம்.

இப்படி போய் கொண்டு இருந்த அந்த மாவூரின் இயல்பு வாழ்க்கையை குலைப்பதற்காகவே ஒரு சிறுத்தை காடுகளை விட்டு இறங்கி அவ்வூரில் உள்ள ஆடு, மாடுகளை தனது பசிக்கு இறையாட தொடங்கி இருந்தது.  

 

இரவு நேரங்களில் அவ்வூரை பயம் தழுவியது.  பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் மாலை நேரத்திற்கு பின் வெளியே நடமாட வேண்டாம் என்றும்,  பொழுது புலரும் வரை வீட்டினுள் இருக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டனர் …

       இரவு காவலில் ஈடுபட்ட வாலிபர்கள் அஞ்சி நடுங்கும்படியான  தாக்குதலை அந்த சிறுத்தை மேற்கொண்டு இருந்தது. ஒரு மாத காலத்திற்குள் , அவ்வூரின் மூன்று பெரியவர்கள் மற்றும் ஐந்து கன்று குட்டிகளை அச்சிறுத்தை அடித்து கொன்று இருந்தது….

 

இந்த கோர தாண்டவத்தை தடுத்து, அச்சிறுத்தைக்கு  முடிவுகட்ட ஊர் பஞ்சாயத்து கூடியது.   அதனை  கொல்லும் பணியை செய்து முடிப்பவர்க்கு சன்மானமும் அறிவிக்கப்பட்டது…

ஆனால் அந்த வீர தீர செயலை  செய்யக்கூடிய ஆற்றல் பெற்றவன் , பேச்சப்பனே என்று அனைவரும் பேசிக்கொண்டனர் .  இச்செய்தி மாதங்கியையும் எட்டியது.  அச்சிறுத்தை தன் முன்னே பகலில் தோன்ற கூடாதா, அதற்கு தன் கையாலேயே முடிவுரை எழுதிடலாமே  என்று எண்ணவும் செய்தாள்.  அதன் மேல் இருந்த வெறுப்பு, அனல் கனலாய் அவள் நெஞ்சில் தகித்துக் கொண்டு இருந்தது..

பேச்சப்பனும் , அச்சிறுத்தையை  தன் வீரத்துக்கு விடபட்ட சவாலாக எண்ணினான்.  அவன் தூக்கம் தொலைத்து பல நாட்கள் ஆயின.  தினமும் இரவு நேர காவலில் அவன் தன்னை அர்ப்பணித்துக் கொண்டான்…‌

மாதங்கி தினமும் அதிகாலை எழுந்து, ஆற்றங்கரைக்கு சென்று ஆற்றில் நீராடி விட்டு , வருவது வழக்கம். அவளுடன் ஓரிரு தோழிகளும் உடன் செல்வது வாடிக்கை. ஆனால் இப்பொழுது சிறுத்தையின் நடமாட்டத்தால் அவர்கள் , இவளுடன் வர தயங்கினர். இதனால் மாதங்கி ஓரிரு வாரமாக தனித்தே ஆற்றங்கரைக்கு சென்று வந்தாள். அவள் எடுத்து செல்லும் மாற்றுதுணிகளுக்குள் , யாருக்கும் தெரியாமல் ஓர் கூர் அரிவாளையும் மறைத்து எடுத்துச்சென்றாள் .

 

அன்றும் அப்படித்தான் அவளுடைய வீட்டின் பின்புறம் உள்ள வேலி படலை திறந்து நடக்க துவங்கினாள்.  அந்த மண் வழிப்பாதை, நேரே ஆற்றங்கரைக்கு இட்டுச்செல்லும்.  பாதையின் இருபுறமும் ஓங்கி வளர்ந்த புளிய மரங்களும், பருத்தி மரங்களும் எதிரும் புதிருமாய் வளர்ந்து நிற்கும்.

ஆற்றை நெருங்க நெருங்க கோரை புற்கள் இருமருங்கிலும் ஆள் உயரத்திற்கு செழித்து வளர்ந்து நிற்கும்.  அங்கு இருந்து ஒரு இருநூறு அடி தூரம் வரை ஆற்று மணல் கால் பாதங்களில், தட்டுபட துவங்கும்.   ஒரு பத்து நிமிட நடை நேரம்தான் என்றாலும், அவள் தனியாய் அந்த இருளின் பிடியில் அவிழ்ந்திட துடிக்கும் விடியலின் முகப்பில்,  மெல்ல நிதானமாய் நடந்து சென்றாள்.  எந்நேரமும் , எத்திசையில் இருந்தும் ஆபத்து தன்னை அடையாளம் காணலாம் என்ற எச்சரிக்கை உணர்வோடும் அவள் இருந்தாள்.

 

     இரவு முழுவதும் கண் விழித்து காவல் காக்கும் தன் பணி,  நிறைவுக்கு வர  பேச்சப்பன் தன் சகாக்களிடம் விடை பெற்று, முதல் ஆளாக வீடு செல்ல எத்தனித்தான். அப்படி கிளம்பி வரும் போது அவனின் வீட்டுக்கு செல்லும் அந்த வழிப்பாதை , மாதங்கி வீட்டின் பின்புறம் செல்லும் அந்த ஆற்றங்கரையின் வழியே தான் வளைந்து நெளிந்து செல்லும்…

இருள் மெல்ல மெல்லத் தன்னை விலக்கி கொள்ள, பொழுது வெகு மெதுவாய் தன் வெளிச்ச கதிர்களை பரப்ப துவங்கியது.  கண்களுக்கு காட்சிகள் சற்று புலப்பட்டது…

 

 மாதங்கி தன் முன் ஒரு உருவம் சிறிது தூரத்தில் நடந்து வருவதை கண்டாள்.  அது பேச்சப்பன் என்று அவளுக்கு விளங்கிற்று.  கையில் வேல் கம்புடன் அவன் தான் இரவு காவல் முடிந்து வருகிறான் என்று நினைக்கவும், அவன் அவளை பார்க்கவும், சரியாக இருந்தது.  அவள் சற்று தன் தலையை தாழ்த்தி, பார்வையை மட்டும் அவன் பக்கம் செலுத்த , அவன் நெஞ்சை நிமிர்த்தி நேர் கொண்ட பார்வையுடன் இவளுக்கு வழி விட்டு பாதையின் ஓரமாக இரண்டு அடி கூட எடுத்து வைத்திருக்க மாட்டான்…

கொர்ர்ர்… என்ற பலத்த உறுமலுடன், கோரை புற்களின் மறைவில் இருந்து வெளிப்பட்டு , திடிரென அச்சிறுத்தை பாய்ந்து வந்து பேச்சப்பனை தாக்கியது.   அத்தாக்குதலை சற்றும் எதிர்பாராத அவன், நிலை குலைந்து கீழே விழுந்தான்.  அவள் கையில் இருந்த வேல்கம்பும் சிதறிற்று…

 

மாதங்கி தன் கையில் இருந்த கூர் அரிவாளுடன் ஓடிச்சென்று சிறுத்தயை தாக்க முற்பட்டாள்.  கீழே மண்ணில் விழுந்த பேச்சப்பன், சுதாரித்து எழுந்தான்.  சிறுத்தை தன் அடுத்த பாய்ச்சலை எடுக்க முற்படுகையில்,    ‘ மாதங்ங்ங்கி…   வராதே போ” என்று பேச்சப்பன் மாதங்கி யை நோக்கி அலறினான்.

 

அவள் அதை காதில் வாங்கவே இல்லை.  அவனுடைய அலறல் சத்தம் கேட்டு சிறுத்தை, இப்போது மாதங்கியை தன் இறையாக்க எண்ணியது.  அவள் மீது தன் பார்வையை பதித்து ,  தன் கோர பற்களை வெளிக்காட்டி அது உறுமிய வண்ணம் அவள் மீது பாய,.  அவள் அதனை லாவகமாக தள்ளி விட, மீண்டும் அது தன் தாக்குதலை அவள் மீது செலுத்த முயல, இம்முறை மாதங்கியின் கூர் அரிவாள் , அதன் தாடயை பதம் பார்த்தது.

இரத்தம் பீறிட, அந்த கொடிய மிருகம் சினம் கொண்டு அவளை திரும்பவும் , தன் நாலு கால் பாய்ச்சலால் அவளை மூர்க்கமாக தாக்க , இவளும் அதனை துணிவுடன் எதிர் கொண்டாள். இவளின் அரிவாள் வீச்சால் காயம்பட்ட அம்மிருகம் , கடைசியில் அவளை  கீழே தள்ளி சாய்த்தது.   அவள் விழவும் , சிறுத்தை  தன் மிருக பார்வையை அவள் மீது பதித்தது.

இந்நிலையில்  கிடைத்த அவகாசத்தில், பேச்சப்பன் தன் வேல் கம்பை கையில் எடுத்தான்.  அவனை காப்பாற்ற வந்த மாதங்கியின் நிலை கண்டு அவனுக்கு ஆவேசம் வந்தது.

 

கீழே விழுந்த மாதங்கியை, சிறுத்தை கவ்வ முற்பட்ட போது , அதன் கழுத்தில் தன் வேல்கம்பை  சொருகினான். இதனால் மாதங்கியை விட்டு , சிறுத்தை பேசச்சப்பனை கொல்லும் முயற்சயில் பாய்ந்தது…  அவனும் கொலைவெறி கொண்டு தாக்கலானான்..

 

பேச்சப்பனின் விலா எலும்பு பக்கம் சிறுத்தை கடும் காயங்களை ஏற்படுத்தியது..    ஆனால் இறுதியில் பேச்சப்பனின் கையாலேயே, வேல் கம்பால் குத்தப்பட்டு, சிறுத்தை மடிந்து விழுந்தது…..

பேச்சப்பனுக்கோ ., வியர்த்து கொட்டியது. அவனுக்கு ஏற்பட்ட இரத்த இழப்பு மற்றும் காயத்தால் , மயக்கம் வர அப்படியே சரிந்து விழுந்தான்.  மாதங்கி செய்வதறியாது நின்றாள்.  பின் அவள் , அவன் உயிரை காக்கும் பொருட்டு , தன் தோளில் அவனை சுமந்தபடி வைத்தியர் வீடு நோக்கி விரைந்தாள்.

விசயமறிந்து , ஊரே வைத்தியர் வீட்டு வாசலில் நின்றது….

 

பேச்சப்பனோ மயக்க நிலையில் கிடந்தான்.  ஊரே இருவரையும் பாராட்டியது….

மாதங்கியின் வீரமும், துணிச்சலும் பேசுபொருளானது.  ஓரிரு நாட்களில் பேச்சப்பனும் குணம் அடைந்தான்.

 

நாட்கள் ஓடின… மாதங்கள் கடந்தன… மாதங்கிக்கு திருமணம் நடந்தது… மணமகன் வேறு யாருமல்ல.  நம் பேச்சப்பனே தான்.   ஊர் கூடி வாழ்த்தியது.  இருவரும் மணமொத்த தம்பதியராய் வாழ,  மாதங்கி தாய்மையுற்றாள்.   பேச்சப்பனோ  பெரு மகிழ்ச்சி அடைந்தான்.  அவள் நிழல் போல நின்று அவளுக்கு அத்தனை பணிவிடைகளும்  அவனே செய்தான்.  இப்படி ஒரு  இணையா என்று இயற்கையே ஏங்கியது.  

 

ஆனால் மாதங்கியின் பேறு காலம் நெருங்க நெருங்க , அவளுடைய உடல்நிலை மோசமானது…. எப்படியாவது ஒரு வாரிசை பெற்றெடுக்க எண்ணியவள் , எப்படியோ வயிற்றில் குழந்தையுடன், இறந்து போனாள்…..

 

பேச்சப்பன் , இடிந்தே போய்விட்டான்… தன் ஆருயிர் மனைவி பிரிந்தததை அவனால் ஏற்க முடியவில்லை… துவண்டு விட்டான்.

 

அவளின் நினைவுகள் அவனை வாட்ட , அவளுக்காக, அவள் நினைவால் , ஊர்  நுழைவில் ஒரு    ” எடை தாங்கி கல் ”    அமைத்தான்.

 

வருடங்கள் உருண்டன…. அவன் தனிமரமாய் வாழ்ந்தான்.  அவனது அந்த ஊர் காவல் வேலையே அவனுக்கு நிரந்தரமாகி போனது.  அதனை கடமை தவறாமல் செய்து வந்தான்.

ஆனால் அதுவும் கூட காலத்துக்கு பிடிக்கவில்லை போலும்….

 

பேச்சப்பன் இருக்கும் வரை நம்மால் கால்நடைகளை களவாட முடியாது என்று எண்ணிய, ஒரு கள்வர் கூட்டம் , அவனுக்கு தேதி குறித்தது….

 

அவனை தொடர்ந்து கண்காணித்து , அவனை சூழ்ச்சியில் வீழ்த்த திட்டம் தீட்டியது.  அவனும் அதில் வீழ்ந்தான்…. அவனை சூழ்ச்சியில் கொல்ல துடித்தவர்களை, அவன் இனம் கண்டு தன் கடைசி மூச்சு வரை சண்டையிட்டு, அக்கூட்டத்தில் ஒருவனேனும் தப்பிக்காமல் , கொன்று போட்டான்.  அவனது உயிரும் அக்கயவர்களால் பரிந்தது…..

 

வீரத்துடன் பிறந்து, வீரத்தை மணந்து , வீரத்துடனே வாழ்ந்து மடிந்தவனை, இயற்கை அணைத்து கொண்டது…..

 

அந்த வீரனின் , வீரத்தை போற்றும் வகையில்,  அவன் அமைத்திருந்த  அந்த “சுமைதாங்கி கல் ”    எதிர் புறம் அவனுக்காக, அவன் நினைவாக  ஒரு    ” நடுகல் ” நிறுவினர் , அவ்வூர் மக்கள்….

அந்த  ” நடுகல் ” தான் தம்பி, இப்ப நீங்க ஆர்வமோட பார்த்து எங்கிட்ட கேட்ட இந்த கல்லு ,  என்று கதையை கூறி முடித்தார்.

இன்றளவும் நாம் சில சிற்றூர்களை கடந்து செல்லும் போது ,  எங்கேனும் ஓரிடத்தில் சாலையின் இரு மருங்கிலும் ஒரு  சுமைதாங்கி கல்லோ, அல்லது ஒரு நடுகல்லோ பூமியில் , பாதி புதைந்த படி காட்சி தரும்….

 

ஆனால் அந்த ஒரு ஒரு கல்லுக்கும் பின்னால் , இதுபோன்று உள்ள கதைகளை ,  நமக்கு  சொல்லத்தான் ஆளில்லை…..

என்று எண்ணிய வண்ணம் , கனத்த இதயத்துடன் நாங்கள் இருவரும் பயணத்தை தொடர்ந்தோம்…

 

வெங்கடேசன் ராஐமோகன்

Series Navigationகாதல் ஒரு விபத்துஅணு ஆயுத யுகத்திற்கு அடிகோலிய ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் – 4
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *