வளவ. துரையன்
பள்ளி வெற்பின் மாறுகோள்
பெறாது விஞ்சை மன்னர்புகழ்
வெள்ளி வெற்பு எடுத்துஇடும்
குதம்பை காதில் மின்னவே. [371]
[பள்ளி=இருப்பிடம்; மாறுகோள்=ஈடு; விஞ்சை மன்னர்=வித்தியாதரர்; வெற்பு=மலை; குதம்பை=ஒருவகை காதணி]
பூதப்படைகள் சிவபெருமான் உறையும் வெள்ளிமலைக்கு ஈடாகாவிட்டாலும், வித்தியாதரர் வசிக்கும் இடமான வெள்ளிமலைகளை எடுத்துத் தம் காதுகளில் குதம்பை என்னும் காதணிகளாய் அணிந்தன.
குஞ்சி வேர்பறித்த குண்டர்
செம்பொனின் குயின்றபேர்
இஞ்சி வேர் அகழ்ந்து காதில்
இட்டதோடு எறிப்பவே. [372]
[குஞ்சி=தலைமுடி; குண்டர்-சமணர்; இஞ்சி=மதில்; அகழ்ந்து=பெயர்த்து; எறிப்ப=ஒளிர]
சமணர்களின் தலைமுடியை அடியுடன் பெயர்த்து எடுத்தால் அவர்களின் இறுதிநாளில் சேரும் பொன்வட்டத்தைப் பேய்கள் அடியோடு பெயர்த்து எடுத்துத் தம் காதுகளில் ஒளி வீசும் தோடாக அணிந்து கொண்டன.
பாரிடக் குலங்கள்பேய்
நெடுங்கை கால்களிற்படக்
காருடற்சமண் குழாம்
அநேக கோடி கட்டியே. [373]
[பாரிடம்=பூத கணம்; காருடம்=நஞ்சு போக்கும் வித்தை; குழாம்=கூட்டம்]
பூத கணங்கள் நஞ்சை முறிக்கும் வித்தை அறிந்த சமணர்களைத் தம் நீண்ட கைகளிலும், கால்களிலும் பலகோடியாகக் கட்டிக்கொண்டன.
படர்ந்த பாரமே கவர்ந்து
தின்று பாழ் படுத்தின
கிடந்த குண்டர் மெய்ந்நரம்பும்
என்புமே கிடப்பவே. [374]
[பாரம்=உடம்பு; குண்டர்=சமணர்; மெய்ந்நரம்பு=உடல் நரம்பு; எனு=எலும்பு]
சமணர்களின் உடம்புகளை எடுத்து அவ்வுடல்களின் நரம்புகளையும் எலும்புகளையும் விட்டுவிட்டு உடலின் தசையை மட்டும் அவை உண்டன.
ஏறு நாலு திக்கிலும்
புதுப்புலால் கமழ்ந் தெழுந்து
ஆறுநால் அமண் பிணம்
கிடந் தெயிற்று அலைப்பவே. [375]
[ஆறு நால்= இருபத்து நான்கு; எயிறு=பல்; அலைப்ப=கடிபட]
பூதப்படைகள் இருபத்து நான்கு சமணத் தீர்த்தங்கரர்களைப் பற்களால் கடித்துத் தின்றபோது சிந்திய குருதி மற்றும் சதைக்கழிவுகளால் நான்கு திசைகளிலும், புலால் வாடை வீசியது.
தாழியில் பிணங்களும்
தலைப் படாவெறும் தவப்
பாழி யிற்பி ணங்களும்
துளப் பெழப் படுத்தியே. [376]
[தாழி=மிகப் பெரிய மண் பாண்டம்; தலைப்படாத=பயன் இல்லாமல்; பாழி=குகை; துளப்பு=வயிறு]
பூத கணங்கள் பெரிய மண்பாண்டங்களில் வைத்து புதைக்கப்பட்ட சமணர்களின் உடல்களையும், பயன் இல்லாத வெறும் தவத்தைச் செய்துகொண்டு குகைக்குள் உயிரோடு இருக்கும் பிணங்களையும், எடுத்துத் தம் வயிற்றுக்குள் போட்டுக்கொண்டன.
பால் எழுங்கொல்! பண்டுபோல
அன்றியே பசும்புணீர்
மேல் எழுங்கொல்! என்று தேரர்
தேஅடங்க வெட்டியே. [377]
[பண்டு=முன்போல; புணீர்=இரத்தம்; தேரர்=சோதிப்பவர்; தேஅடங்க= சந்தேகம் நீங்க]
பால்தான் வடிகிறதா? இல்லை எல்லார்க்கும் வருவதுபோல பச்சைரத்தம்தான் ஓடி வருகிறதா? பார்ப்போம் என்று சோதிப்பது போல ஐயம் நீங்கப் பலரின் உடலைப் பூதகணங்கள் வெட்டினர்.
தடந்தொறும் படிந்து கைத்ரி
தண்டும் ஏக தண்டுமாய்
மடந்தொறும் கிடந்த ஏக சோரர்
கொத் தடங்க வாரியே. [378]
[படிந்து=மூழ்கி; கைத்ரி=கைகளில் ஏந்தியுள்ள திரிதண்டம்; ஏகம்=ஒன்று; மடம்=துறவிகள் தங்கும் இடம்; சோரர்=கள்வர்]
குளங்களில் நீராடிவிட்டுக் கைகளில் திரிதண்டம் மற்றும் ஏகதண்டம் என்னும் கோல்களை எடுத்துக்கொண்டும் மடங்கள் அமைத்துக் கொண்டும் மக்களை ஏமாற்றும் போலித் துறவிகளான கள்வர்களைக் கொத்துக் கொத்தாக எடுத்துப் பூதப்படைகள் வீசின
வேலைவாய் அரக்கர் தம்மை
மேரு வில்லி மஞ்சனச்
சாலை வாய்வெதுப்பி வாள்
எயிற்றி நில்ச வட்டியே. [379]
[வேலை=கடல்; மேரு வில்லி=சிவபெருமான்; மஞ்சனம்=நீராட்டு; வெதுப்பி=வாட்டி; வாள் எயிறு=வாள் போன்ற பல்; சவட்டுதல்=மெல்லுதல்]
கடல் சூழ்ந்த தீவுகளில் குடியிருக்கும் அரக்கர்களை எல்லாம் மேருமலையை வில்லாக எடுத்த சிவ பெருமான் திருமஞ்சனம் ஆடுகின்ற நெருப்பில் இட்டு, வாட்டித் தம் கூரிய வாள் போன்ற பற்களிடையே வைத்துப் பூதப்படைகள் மென்று தின்றன.
காவி வண்ணன் ஊர்தியும்திரி
வேத போத காரணன்
தூவி அன்னமும் கலந்து
சுட்டு வாயில் இட்டுமே. [380]
[காவி=கருங்குவளை; வேத போதகன்=பிரமன்; தூவி=சிறகு]
கருங்குவளைப் பூ வண்ண மேனியன் திருமால்; அவர் வாகனம் கருடன்; வேதங்களுக்கெல்லாம் மூல காரணன் பிரமன்; அவர் வாகனம் அன்னம்; பூதப்படைகள் வானில் பறந்த கருடன்களையும் அன்னப் பறவைகளையும் தம் வாயில் இட்டுத் தின்றன.