ஜனநேசன்
மனைவி விம்மி விம்மிக் கேவினாள் ; வறண்ட உதடுகளைத் தாண்டி குரல் எழும்பவில்லை.; கண்ணீர் பொங்கியது. கணவன் அவளது தோளைப் பரிவுடன் தொட்டு “ அழுவதை நிறுத்து; யோசிப்போம்; ஏதாவது வழி பிறக்கும். “ என்றான்.
“ பச்சைமண்ணுக ரெண்டும் பசி பொறுக்காம அழுகிறதைப் பார்க்க முடியலை .பெத்தப்பிள்ளைகளுக்கு கஞ்சி ஊத்த வக்கத்துப் போனோம்; சாவதைத் தவிர வேற வழி தெரியலை. ரயில்ல விழுந்து சாகலாமுன்னா ரயிலும் ஓடலை . பிள்ளைகளைப் பார்த்துக்குங்க ; தண்டவாளத்து ஓரமா முளைச்சுக் கிடக்கிற அரளிச்செடியிலிருந்து விதைகளை எடுத்து வாறேன்; அரைச்சு நாலுபேரும் குடிச்சு .செத்துறலாம். பசியில பைய பைய சாகுறத்துக்கு ஒரேயடியா கண்ணை மூடியிறலாம் .” வறண்ட தொண்டை கரகரக்க வார்த்தைகளை உதிர்த்தாள்.
“ பயித்தியக்காரி கணக்கா உளறாதே; உயிரை மாச்சுக்கிறதுக்கா ஊரு விட்டு ஊரு வந்து இம்புட்டுக் கஷ்டப்படறோம். கொஞ்சம் பொறு “ என்று முகக்கவசத்தை மாட்டிக் கொண்டு வீட்டுக்கு வெளியே மரத்தடியில் நின்றான். வெறிச்சோடிய தெரு உணவு பரிமாறப்படாத தட்டுப்போல் காற்றும் வெயிலும் கலந்து நிரம்பிக் கிடந்தது. கண்ணை உறுத்தியது . வாகன இரைச்சலற்ற காற்று, சலனமில்லா வெயிற்கானலில் வானவில் பார்த்து மிதந்தது . மரத்தை அண்ணாந்தான் மனுசரை அண்டிப் பிழைக்கும் காக்கை, குருவிகள்கூடக் கண்ணில் படவில்லை . வழக்கமாக இந்நேரம் கூட்டில் குஞ்சுகளுக்கு இரையூட்டிக் கொண்டிருக்கும் தாய்குருவியையும் குஞ்சுகளையும் காணோம்; எங்கே போயின. அவனுக்கு கண்ணீர் கசிந்தது.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பொதுமுடக்கம் அறிவித்ததால் இவனுக்கு ஆட்டோ ஓட்டமில்லை. கையில் காசு புழக்கம் இல்லை. மனைவி ஒரு தனியார் மழலையர் பள்ளியில் ஆயாவாக வேலை பார்த்தாள். பள்ளி மூடப்பட்டதால் சம்பளம் போடவில்லை. எப்போது பள்ளி திறப்பார்களோ …, மீண்டும் வேலைக்கு சேர்த்துக் கொள்வார்களோ.. .என்பதும் நிச்சயமில்லை. ‘ சென்னைக்கு வந்து மூணு வருசமாச்சு. பழைய ஊர் ரேசன்கார்டை ஒப்படைச்சுட்டு புது ரேஷன்கார்டுக்கு மனுப்போட்டு ரெண்டு வருசமாச்சு . இன்னும் கிடைக்கலை. ரெண்டு வீடு மாறியாச்சு. ரேசன்கார்டு இருந்தாக் கூட அரசு கொடுக்கிற இலவச அரிசியை வச்சு கஞ்சித் தண்ணியாவது காச்சிப் பிள்ளைக பசி தீர்க்கலாம். வேகமா ஓட்டுச்சீட்டு கொடுக்கிற அரசு, ரேசன்கார்டு கொடுக்கிறதில சுனங்குது. நாமெல்லாம் ஓட்டுப்போட மட்டுமே விதிக்கப் பட்டவங்களா….
பள்ளிக்கூடம் விட்டதும் நாலுமணிக்கு மேல மனைவி ஒருவீட்டில பாத்திரம் கழுவி , துணி துவைச்சுக் கொடுப்பாள் . மாசம் ரெண்டாயிரம் ரூபாயும் சம்பளம் ; அன்றாடம் மிஞ்சும் சோறு, கொழம்பு ,பலகாரமுன்னு கிடைச்சது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த வேலைக்காரி வச்சுக்கறதுக்கும் தடை வந்திருச்சு. அந்த வீட்டு வேலையும் போச்சு. அவுங்க ஒருமாசச் சம்பளம் ரெண்டாயிரத்தைக் கொடுத்து கட்டுப்பாடுகள் நீங்கினதும் கூப்பிடறேன்னு சொல்லிட்டாங்க. இந்தக் கொரோனா எப்ப ஓயும் எப்ப பிரச்சினைத் தீருமுன்னு யாருக்கும் தெரியலை.! சுனாமி அலையாவது ரெண்டுநாளு ,மூணு நாளுல வடிஞ்சிருச்சு . இந்தக் கொரோனா அலை எப்ப ஓயுமோ பிழைப்பு எப்ப விடியுமோ….!
அக்கம் பக்கம் எல்லாரிடமும் அரிசி, பருப்புன்னும் , நூறு எரநூருன்னும் கைமாத்து வாங்கியாச்சு. அவுகளும் நம்மளைப்போல அன்னாடங்காச்சிகள் தாம். வீட்டுச்சிறைக்குள்ள அடைஞ்சு கிடக்கிறவங்க தாம் .நமக்குத் திரும்பக் கொடுக்க வக்கில்லாதபோது யாருகிட்ட போய்க் கதவைத் தட்டி என்ன கேட்கமுடியும் ? தெருவில் நடமாட விட்டால்கூட மனைவியை அனுப்பி வேலை பார்க்கும் வீட்டில் அரிசி , பருப்புன்னு ஏதாவது வாங்கி வரச் சொல்லலாம். தெருவுக்கு தெருவு தகரங்கள், தட்டி அடைச்சு வச்சி காவலுக்கு போலீசையும் நிறுத்தியிருக்காங்க. அலறிகிட்டு ஓடும் ஆம்புலன்சுகளுக்கு மட்டுமே வழி . சக ஆட்டோக்கார நண்பர்கள் இறந்த சேதிக வாட்ஸ் அப்பில வந்தபடி இருக்கு;. போக முடியலை. இந்தக் கொரோனா காலத்தில் நிம்மதியா வாழவும் முடியலை; சாகவும் முடியலை .’
வாட்ஸ் அப் நினைவு வந்ததும் அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது. முகத்தில் ஒரு மின்னல் தெளிவு ! .ஆட்டோ சவாரிக்கு அவனை அழைக்கும் வாடிக்கைகாரர்களுக்கு , “ இரண்டு நாளா சாப்பிடாமல் நாலு உயிர் சாவின் விளிம்பில் தவிக்கிறோம் . ஏதாவது திங்கக் கொடுத்து எங்களைக் காப்பாத்துங்க.” என்று அவனது வீட்டு முகவரி, தெரு அடையாளங்களைக் குறிப்பிட்டு குறுஞ்செய்தி அனுப்பினான்.
அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் சரசரன்னு வாட்ஸ்அப்கள் கிண்கிணினு பொழிந்தன. குறுஞ்செய்திகளை வாசித்தான். “ கொஞ்சம் பொறுத்துக்குங்க இன்னும் அரைமணி நேரத்தில் உணவுப் பண்டங்களோடு வருகிறோம்;” “உங்களுக்கு உதவத் தக்க ஏற்பாடு செய்கின்றோம் …” என்பதாகவே இருந்தன. எவரும் மறுக்கவில்லை.! புதுத்தெம்போடு மனைவியிடம் சொல்ல ஓடினான். வீட்டில் மனைவி இல்லை. பிள்ளைகள் இரண்டும் பசிக் கிறக்கத்தில் வாடிய செடிகளாக சுருண்டு கிடந்தனர் . அடுப்படி , குளியலறை , வீட்டின் பின்புறம் எல்லாம் கதறலோடு மனைவியைத் தேடினான். எங்கேயும் காணோம். ‘ செல்லை நோண்டிக் கொண்டிருந்த நேரத்தில் அரவமில்லாமல் பூனைமிதியில் போனாளோ.. ; ஒருவேளை, ரயில் தண்டவாளத்துப் பக்கம் அரளிவிதை பறிச்சு வரப் போய்ட்டாளோ…பசிக்கிறக்கத்தில் எங்கேயும் விழுந்து கிடக்கிறாளோ… ஐயோ , கடவுளே… பிள்ளைகளை இந்தக்கதியில விட்டுட்டு அவளை எங்கே , எப்படித் தேடித் திரிவேன்…’
- கவிதையும் ரசனையும் – 27 – கானப்ரியன் கவிதைகள்
- காற்றில்லாத கடற்கரை
- அன்பு வழியும் அதிதி – வரத.ராஜமாணிக்கம் நாவல் மதிப்புரை
- தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]
- கொரோனோ தொற்றிய நாய்
- அணு ஆயுதப் புளுடோனியம் ஆக்கிய விஞ்ஞானி கெலென் ஸீபோர்க்
- கதிரியக்கம், கதிரியக்க விளைவுகள், கதிரியக்கப் பாதுகாப்பு முறைகள்
- அந்நிய மண்ணில்
- எமிலி டிக்கின்ஸன் கவிதைகள் – 27
- நில்லாதே போ பிணியே …
- அஞ்சுவாசல் கிட்டங்கி…
- புதிய வாழ்க்கையில் புதிய தலைமுறை – அந்நியர்கள் சுப்ரபாரதிமணியன் நாவல்
- பாடம்
- துருக்கி நாட்டில் நடந்த ரஸ்யா – உக்ரைன் பேச்சுவார்த்தையின் அடுத்த கட்ட நகர்வு என்ன?
- எஸ் சாமிநாதன் விருது வழங்கும் விழா