Posted in

ஒட்டடைக்குருவி  

This entry is part 14 of 19 in the series 10 ஏப்ரல் 2022

 

மனஹரன்

 

வீட்டில்

இரண்டு வாரமாய்

ஓட்டடை அடிக்கவில்லை

 

வீட்டின்

பின் பகுதி

சுவரில்

சாய்த்திருந்த

ஒட்டடைக் கம்பில்

மெத்தை போலிருக்கும்

அதன் பஞ்சின் மேல்

புதிதாய்

ஒரு குருவிக்கூடு

 

வட்டமடித்துத் திரியும்

ஒரு ஜோடி குருவிகள்

 

கீச்சிட்டுப் பறந்து

வேலியில் அமரும்

மெல்ல எழும்பி

துணி கம்பியில்

கொஞ்ச நேரம்

உட்காரும்

 

ஒரு வாரத்தில்

முட்டை தெரிந்தது

 

வீட்டு வேலை

செய்ய

வந்த பெண்ணிடம்

இனி சொல்லும் வரை

ஒட்டடை அடிக்க

வேண்டாம் என்றாள்

மனைவி

 

மறு வாரத்தில்

மெலிசாய்

கீச்சிடும் சத்தம்

 

புழுக்களை அலகில்

ஏந்திய வண்ணம்

குருவிகள் பறந்தன

 

தாய்க்குருவியைக்

கண்டதும்

கீச்சிடும் சத்தம்

அதிகமாயின

 

ஒரு நாள் காலை

துணிக்கம்பியில்

புத்தம் புதிதாய்

குருவி குஞ்சுகள்

மூன்று

எங்கள் வருகைக்காய்

காத்திருந்தன

 

பல முறை கீச்சிட்டன

தாய் குருவி

பறந்து வந்ததும்

மெல்லப் பறந்தன.

 

இனி புதிதாய்

ஒரு ஓட்டடை கம்பு

வாங்க வேண்டும்

 

நாளை

இன்னொரு குருவி

கூடு கட்ட வரலாம்.

 

Series Navigationஇன்னும் எவ்வளவோபூமியின் சுற்றுப் பாதைப் பெயர்ச்சி, சுழலச்சுக் கோணத் திரிபு ஐந்தறிவு வானரத்தை ஆறறிவு மானுடனாய் வளர்ச்சி பெறச் சூழ்வெளி அமைக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *