முனைவர் நா.ஹேமமாலினி.
கௌரவ விரிவுரையாளர்,
தமிழாய்வுத்துறை,
மாட்சிமை தங்கிய மன்னர்
கல்லூரி(தன்னாட்சி),
புதுக்கோட்டை.
முன்னுரை:
மனிதனின் எண்ணமும் கண்ணாடியும் ஒன்று. கண்ணாடி மனிதனின் பிம்பத்தை எவ்வாறு பிரதிபலிக்கிறதோ அதே போல தான் நம்முடைய எண்ணமும் வாழ்க்கையும். நம் உள்ளத்தில் எண்ணுகின்ற நல்ல உயர்ந்த எண்ணங்களே நம்முடைய வாழ்க்கையை வளமாக்குகின்றது. இதைத்தான் சான்றோர்கள் எண்ணம் போல் வாழ்க்கை என்று கூறினார்கள் அவ்வகையில் எண்ணமே வாழ்வு என்ற நூலில் அப்துல் ரஹீம் அவர்கள் உயர்ந்த எண்ணங்களை கையாண்டுள்ளார். அவற்றைப் பற்றி விளக்குவதாக இக்கட்டுரை அமைந்துள்ளது.
எண்ணம் போல் வாழ்வு:
உலகின் மிகச் சிறந்த வைரம் நம்மிடம் தோன்றும் எண்ணங்களே. அவ்வெண்ணங்கள் நல்ல எண்ணங்களாக இருக்க வேண்டும். அவ்வாறு நம்முடைய மனதில் உண்டாகும் நல்ல எண்ணங்களே நமது வாழ்க்கையை திறம்பட உருவாக்கும் அரும்பெரும் கருவியாக திகழ்கின்றது.
“எண்ணங்கள் நல்லவையானால் எண்ணம் போல் வாழ்வு அமையும்”
என்பர்.
ஆகவே மனதில் எண்ணுகின்ற ஒவ்வொர் எண்ணமும் உள்ளத்தில் எழுகின்ற ஒவ்வொரு நினைவும் உள்ளத்தில் வந்து விழுந்து வேரூன்றி விடும் ஒவ்வொரு செய்தியும் நம் வாழ்வை ஆக்கவோ அழிக்கவோ செய்கிறது. அவற்றை மனதில் அலசி ஆராய்ந்து அவற்றை நீக்கி வாழ்விற்கு வேண்டுவனவற்றை கொண்டு, கொண்டவற்றை அடக்கியாண்டு திறம்படவும் எச்சரிக்கையுடனும் நிதானத்துடனும் பயன்படுத்தினால் அவ்வெண்ணம் நம்முடைய வாழ்வை உலகுள்ளவும் நீடித்து நிலைத்து நிற்கச் செய்து நற்புகழினைப் பெற்றுத் தரும் என்பதில் சிறிதளவுகூட ஐயமில்லை.
கவிஞர் கண்ணதாசன்,
“பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே!! இருக்குமிடம் எதுவோ நினைக்கும் இடம் பெரிது போய்வரும் உயரமும் புதுப்புது உலகமும் அவரவர் உள்ளங்களே…. நெஞ்சினில் துணிவிருந்தால் நிலவுக்கும் போய்வரலாம் “என்று எண்ணங்களின் மேன்மை பற்றி அழகுற சொல்லியிருக்கிறார்.
நமது எண்ணங்களே நம்மை உருவாக்குகின்றன. ஓர் எண்ணத்தை திரும்ப திரும்ப எண்ணினால் அது வன்மை அடைந்து நன்மை அறியாமலேயே நமக்கு நலன் அளிக்கும் வகையிலோ தீமை பயக்கும் முறையிலோ செயலாற்றுகின்றது. எனவே, வாழ்வில் முன்னேற்றம் அடைய வேண்டுமெனில் நல்ல எண்ணங்களையே எண்ணுதல் வேண்டும் . “எண்ணிய முடிதல் வேண்டும்! நல்லவே எண்ணல் வேண்டும்! திண்ணிய நெஞ்சம் வேண்டும்! தெளிந்த நல்லறிவு வேண்டும்! மனதில் உறுதி வேண்டும்! வாக்கினிலே இனிமை வேண்டும்! நினைவு நல்லது வேண்டும்!” என்கிறார் பாரதி.
நாம் எண்ணும் எண்ணங்களே நமது வாழ்வாக அமைகிறது. நாம் இன்று வாழும் வாழ்க்கை நேற்றைய நமது எண்ணங்களின் தொகுப்பே!! சூரியக்கதிரை குவியாடி (லென்ஸ்) மூலம் குவித்து ஒரு காகிதத்தின் மீது காட்டினால் காகிதம் புகைந்து எரியத் தொடங்கும். நமது எண்ணங்களின் வலிமையும் அப்படித்தான். எண்ணங்களை ஒருமுகப்படுத்தினால் எண்ணங்கள் செயல்கள் ஆகும். இந்த விதியை தான் வள்ளுவர் பெருந்தகையும்,
“எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் எண்ணியர்
திண்ணியர் ஆகப் பெறின்”.-(குறள் 666)
என்ற குறளில் (திண்ணியர் மன உறுதி உடையவராக) ஒரு செயலைத் திட்டமிட்டு எண்ணியவர் எண்ணியபடியே செயலாற்றுவதிலும் மன உறுதியோடும் இருந்தால் அவர் எண்ணியவற்றை எண்ணியபடியே அடைவர் என்கிறார்.
அக்குறளுக்கேற்ப (எண்ணமே வாழ்வு) அப்துற்-றஹீம் அவர்கள் எண்ணங்களை பற்றி நம்மிடம் எடுத்துரைக்கின்றார்.
வளவாழ்வு வாழ நல்லெண்ணம் கொள்ளல்:
ஒருவன் இவ்வுலகில் வளவாழ்வு வாழ விரும்பின் வளமான எண்ணங்களை எண்ணவும் வள வாழ்வினன் போன்று செயலாற்றவும் வேண்டும். நாடகத்தில் அரசனுடைய திறம்பட நடிப்பவர்களுக்குக் கைதட்டல்களும் பாராட்டுரைகளும் வந்து குவிவது போன்று அப்பொழுதுதான் வாழ்வு அவனைத் தழுவி நிற்க அவனை நோக்கி ஓடி வரும் என்று அப்துற்-றஹீம் அவர்கள் பின்வருமாறு எடுத்துரைக்கிறார்.
சிலர் வளவாழ்வு வாழ விரும்புவார்கள். ஆனால் எப்பொழுது பார்த்தாலும் தங்களின் வறிய நிலையை எண்ணிக் கொண்டு வருவோர் போவோரிடம் எல்லாம் தங்களின் துன்பங்களையும் துயரங்களையும் எடுத்துரைத்துக் கொண்டு இருப்பார்கள். அவர்கள் எப்பொழுதாவது வாழ்வு வாழ்வார்களா என்று நீ எண்ணுகின்றாயா ஒருபோதும் வாழ மாட்டார்கள்.
மருத்துவனாக வாழ விரும்பும் ஓர் இளைஞன் எவ்வாறு மருத்துவ நிலையம், மருந்து புட்டிகள், மருத்துவர்கள், மருத்துவ நூல்கள், மருத்துவ கருவிகள், ஆகியவற்றின் சூழலில் வாழுவானோ எவ்வாறு எழுத்தாளனாக வாழ விரும்பும் ஓர் இளைஞன் நூல்கள், செய்தித்தாள்கள், ஆகியவற்றின் குவியல்களினூடே தன்னைப் புதைத்து கொள்வானோ அவ்வாறே வள வாழ்வு வாழ விரும்பியவர் வள வாழ்வைப் பற்றியே பேச வேண்டும். வள வாழ்வை பற்றியே சிந்திக்க வேண்டும். வாழ்வினன் போன்றே உண்ணவும் உடுத்தவும் செயலாற்றவும் வேண்டும். பெரிய மனிதர்கள் போன்ற எண்ணவும் செயலாற்றவும் செய்பவர்கள் எவ்வாறு நாளடைவில் பெரிய மனிதர்களாகிவிடுவார்களோ அதேபோன்றுதான் வளவாழ்வினர் போன்று எண்ணவும் செயலாற்றவும் செய்பவர்கள் வளவாழ்வினர்களாகி விடுவார்கள். எனவேதான் வள்ளுவப் பெருந்தகையும்,
“வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு ” (குறள் 595)
என்றும்,
“உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து” (குறள் 596 )
என்று கூறிச் சென்றார் .
எண்ணங்கள் உயர்வாக உள்ள பொழுது அது நம் செயலில் பிரதிபலிக்கும். அது நம்மிடமும் நம்மை சுற்றி உள்ளோரிடமும் ஒரு நல்ல ஆரோக்கியமான சூழ்நிலையை உருவாக்கும். அதுவே, நம் வெற்றிக்கும் அடி கோலாக அமையும் சில சூழ்நிலைகளில் வெற்றி கைகூடாமல் போகும் பொழுது, நாம் தளர்வடையாமல் எதிர்மறை சிந்தனைகள் நம்மை ஆட் கொள்ளாமல் உயர்ந்த எண்ணங்கள் நீர்த்துப் போகாமல் காக்க வேண்டும்.
“நீ எதுவாக நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய் “
என்கிறார் சுவாமி விவேகானந்தர்.
ஒரு செயலை நினைத்தால் தான் துவங்கி அதனை முடிக்க முடியும். “நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான் நான்” என்ற திரைப்பட பாடலுக்கு ஏற்ப நினைப்பது உயர்வாக இருந்தால்தான் முடிவும் உயர்வாக இருக்கும் .
வெற்றி பெற வேண்டும் என்ற சிந்தனை நமக்கு முதலில் இருக்க வேண்டும். நமக்கு வெற்றி பெறுவோம் என்று சந்தேகமாக இருந்தால் வெற்றி கிடைப்பது கடினம் தான். ஏதேனும் ஒரு லட்சியத்தை வைத்துக் கொள்ளுங்கள் அதை தீவிரமாக எண்ணுங்கள் அந்த ஒரு எண்ணம் உங்கள் மனதில் உணர்வில் நாடி நரம்புகளில் முறுக்கேற்றவேண்டும். அப்போது அந்த இலட்சியம் நிறைவேறும். இந்த உலகமே அந்த இலட்சியம் நிறைவேற துணை புரியும்! என்று சுவாமி விவேகானந்தர் கூறியுள்ளார்.
அவரின் வாக்கிற்கேற்ப அப்துற்-றஹீம் அவர்களும், வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு வெற்றி பெற வேண்டுமென்ற ஆசை இருந்தால் போதுமே என்று சிலர் எண்ணிக் கொண்டுள்ளார்கள். அவர்களின் அந்த எண்ணம் தவறுடையது என்பதை தெளிவாக நான் எடுத்துரைத்துவிட விரும்புகிறேன். ஒருவன் வாழ்க்கையில் வெற்றிபெற வேண்டுமென்ற ஆசை மட்டும் இருந்தால் போதாது கொதிக்கும் ஆசை கொந்தளித்து குமுற வேண்டும். எவ்வாறு இரும்பை உருக்குவதற்கு நம் வீட்டின் அடுப்பு நெருப்பால் இயலாதோ அதற்கு கொல்லனின் ஊதுலையிலுள்ள தகிக்கும் தீயே தேவைப்படுமோ அதுபோல் நம்மால் வெற்றியை இழுத்து வருவதற்கு வெறும் போலி ஆசையால் இயலாது ”எவ்வாறு இளம் வித்து முளைக்கதோ அது போன்று போலி ஆசைகளும் ஒருபோதும் உருவாகா” என்கிறார்.
மேலும்,
” உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான்
உள்ளியது உள்ளப் பெறின் ” (குரல் 540 )
குறளில் ஒருவன் எண்ணியதை விடாமல் எண்ணி (சோர்வில்லாமல்) இருக்கப் பெற்றால் அவன் கருதியதை அடைதல் எளிதாகும் என்ற வள்ளுவப் பெருந்தகையின் வாக்கிற்கேற்ப,
மனம் எதை வெகுவாக விரும்புகிறதோ அதையே தன்பால் இழுத்து நிற்கும் ஒருவன் வளவாழ்வைப் பற்றியே எண்ணுவானாயின் அவனை வளவாழ்வு வந்தெய்தும். அவன் அல்லும் பகலும் அவ்வித வாழ்வைப் பற்றியே அமைதியான முறையில் எண்ண வேண்டும், பேச வேண்டும் தான சுபிட்ச வாழ்வை எய்தி விட்டதாகவும் தான் அவ்விதமாகவே வாழ்ந்து வருவதாகவும் உணரவேண்டும். அவ்விதம் செய்து வருவானனால் அவன் திட்டமாக வள வாழ்வை எய்தப் பெறுவான் என்று கூறிய அப்துல்ரஹீம் தம் நூலில், இல்லை என்று சொல்லாது அறம் வழங்க வேண்டும் என்று கர்ணன் கொண்ட கொதிக்கும் மனப்பான்மையை பின்வருமாறு எடுத்தாண்டுள்ளார்.
அறம் செய்ய வேண்டும் என்று விரும்பிய கர்ணன், இன்னவன் இனியானென்று யாருக்கும் தெரியாதிருந்த நிலையில் எவ்வாறு துரியோதனனின் அன்பிற்குரிய நண்பனாகி அவனால் எவ்வாறு அங்கநாட்டதிபனாக்கப்பட்டான் என்பதையும் மாபெரும் கருவூலங்களைல்லாம் எவ்வாறு அவன் காலடியில் வந்து குவிந்து கிடந்தன என்பதையும் பார்!
வரையாது வழங்க வேண்டுமென்று அவன் கொண்ட கொதிக்கும் எண்ணம் உருவாகி அவனுடைய எதிரிகளாக இருந்த பாண்டவர்களையும் அவர்கள் அசுவமேத யாகம் செய்யும் பொழுது அறம் வழங்குவதற்குத் தகுதியானவன் கர்ணனே என்று கருதி அவனுடைய காலடியில் தங்கள் கருவூலங்களையெல்லாம் கொண்டுபோய் குவித்து, “இவற்றை அறம் செய்க” என்று அவனை வேண்டிக் கொள்ளுமாறு செய்த புதுமையையும் பார் !!!!
இன்முகம் காட்டி நன்மொழி பகர்ந்து இல்லை எனது வழங்கிவந்த கர்ணனின் பேரும் புகழும் எட்டுதிக்கும் எதிரொலி செய்யவே அதைக்கண்டு, “யாருடைய பொருளை வழங்குவது ,யார் புகழ் பெறுவது?”என்று பொறாமையுற்ற துரியோதனன் இனிமேல் கர்ணன் அறம் வழங்குவதை நிறுத்தி விடவேண்டும் என்றும் தானே அறம் வழங்கப் போவதாகவும் கூறினான். அவ்விதமே கர்ணனும் செய்தான்.
துரியோதனனின் கைகள் அருள் வழங்கத் தொடங்கின. ஒரு பொழுது, அடை மழை விடாது பெய்து கொண்டிருந்த சமயம் ஒரு அந்தணர் தாம் செய்யும் வேள்விக்கு விறகு தேவைப்படுகிறது என்றும் எனவே, தமக்குப் பல வண்டிகள் நிறைய விறகு தந்தருளுமாறு துரியோதனனிடம் வந்து இறஞ்சினார். இதைக்கேட்டதும், துரியோதனனுக்கு ஏற்பட்ட வெஞ்சினத்திற்கு அளவில்லை. ”இந்த அடைமழையில் வேள்வியா! அதற்குப் பலவண்டிகள் விறகு வேண்டுமாம்! வீட்டில் அடுப்பெரிக்க விறகு இல்லாது ஒவ்வொருவரும் தத்தளித்துத் தடுமாறும் பொழுது இவருக்கு வேள்வி செய்ய விறகு வேண்டுமாம்!” என்று கூறி அவரை ஏசித் திட்டி விரட்டினான் அந்த அந்தணரும் வாடிய முகத்துடனும் பெரிய ஏமாற்றத்துடனும் வெளியே வந்தார்.
அவர் கர்ணனுடைய வீட்டைக் கடந்து சென்று கொண்டிருக்கும் பொழுது கர்ணன் அவரை அழைத்து, ”துரியோதன மகாராஜாவிடம் சென்று திரும்பும் காரணம் என்ன ? அங்கு செல்லும் பொழுது முகமலர்ச்சியுடன் சென்ற நீர் முகம் தொங்கிப் போய் திரும்புமாறு அங்கு என்ன நிகழ்ந்தது ?” என்று வினவினான். அந்தணரும் அங்கு நடந்தவற்றை நடந்தவாறே கூறினார். அப்பொழுது கர்ணனுடைய மனம் பெரிதும் இலகியது. ஒன்றுக்கும் கவலைப்படாதிர்! நான் உமக்கு வேண்டிய விறகுகளை அனுப்பி வைக்கிறேன். போய் வேள்விக்கான மற்றவர்களை ஆற்றும்! என்று அவனுடைய வாய் துணிவுரை கூறியது. அந்தணரும் அளவற்ற மன நிறைவுடன் கர்ணனை வாழ்த்தி விட்டு வீடேகினார்.
உடனே கர்ணன் பாழடைந்து கிடந்த சில வீடுகளை இடித்து அதில் இருந்த நிலை கதவு, உத்தரம் ஆகியவற்றை எல்லாம் உடைத்து விறகாக்கி அந்த அந்தணரின் வேள்விச்சாலையில் கொண்டுபோய் கொடுத்து வருமாறு ஊழியர்களிடம் பணித்தான் அவர்களும் அவ்விதமே செய்ய தயாரானார்கள். பாழடைந்த வீடுகள் உடைக்கப்பட்டு அவற்றிலிருந்த மரப் பொருள்கள் எல்லாம் விறகாக்கப்பட்டு வண்டி வண்டியாக ஏற்றப்பட்டு, துரியோதனனின் மாளிகை வழியாக சென்று கொண்டிருந்தன.
இந்த அடைமழையில் வண்டி வண்டியாக விரைந்து சென்று கொண்டிருப்பதைக் கண்டதும் துரியோதனனுக்கு ஏற்பட்ட வியப்பிற்கு அளவில்லை வண்டிக்காரன் ஒருவனை அழைத்து விசாரித்தான் அன்றுதான் ஏசித் திட்டி விரட்டி விட்ட அந்தணரின் வேள்விக்குக் கர்ணன் அளித்த நன்கொடைகள் அவை என்பதை அறிந்ததும் அவனுடைய புருவங்கள் தெரிக்கப்படவில்லை அதற்கு மாறாக மேலேறின.
உடனே கர்ணனை அழைத்து வர ஆணையிட்டான் துரியோதனன், கர்ணன் வந்ததும் அவன் மீது சீறி விழுந்தானா எண்ண? இல்லை!! இல்லை! அதற்கு மாறாக அவனைப் பாராட்டினான். கர்ணா! அறம் வழங்குவதற்கு நீதான் அருகதை உள்ளவன் எனக்கு அணுவேணும் அருகதை கிடையாது இதோ, கருவூலத் திறவுகோலை வைத்துக்கொள்! இன்று முதல் நீயே முன்புபோல் அறம் வழங்கி வா!, என்று கூறி கருவூலத் திறவுகோலை அவனிடம் மகிழ்ச்சியுடன் ஒப்படைத்தான் .
இல்லை எனாது அறம் வழங்க வேண்டுமென்று கர்ணன் கொண்ட கொதிக்கும் மனப்பான்மை எவ்வாறு அடை மழையிலும் அந்த அந்தணரின் வேள்விக்கான விறகுக்கு வழி செய்தது என்பதை பார்! அயராது அறம் வழங்கும் அவனுடைய தன்மையைக் கண்டு பொறாமையுற்ற துரியோதனனையும் மீண்டும் அவனையே அறம் வளங்கி வருமாறு அன்பு மொழி கூறச் செய்த புதுமையையும் பார் !!
போரின்போது சல்லடைக் கண்கள் போன்று கர்ணனின் உடல் அம்புகளால் துளைக்கப்பட்ட போதிம் அவனுடைய உயிர் மட்டும் நீங்காது இருப்பதைக் கண்டு அவன் செய்த புண்ணியம்தான் அவனுடைய உயிரை உடலை விட்டு நீங்கி விடாது காத்து நிற்கின்றது என்பதையும் உய்த்துணர்ந்து கொண்ட கண்ணன் வேதியன் வடிவம் பூண்டு அவனிடம் சென்று தனக்கு அறம் வழங்குமாறு வேண்டிய பொழுது கூட கர்ணன் அந்த வேலின் மீது சீறி விழுந்தானா? இல்லை! அதற்கு மாறாக அவன் என்ன கூறினான் ?
“என்னுடைய உயிரோ நிலையில்லாமல் கலங்கி கொண்டு உள்ளது அது என் உடலின் உள்ளே தான் உள்ளதா அல்லது வெளியேதான் சென்று விட்டதா என்று கூட என்னால் கூறுவதற்கு இயலவில்லை. நான் வேண்டிய வேண்டியாருக்கு வேட்கையுடன் உதவி வரும் நிலையில் இருக்கும் பொழுது நீ என்னிடம் வந்தாயில்லை. நான் எவ்வளவு பெரும்பாவி பார்த்தாயா என்னிடம் இப்பொழுது யாதொன்றும் இல்லையே நான் செய்த புண்ணியங்கள் தான் என்னிடம் எஞ்சியுள்ளன அவற்றை உனக்கு தருகின்றேன் பெற்றுக்கொள்!” என்று அவற்றை அவனுக்கு முகமலர்ச்சியுடன் அளித்தான். பெற்றுக்கொண்ட கண்ணன் தன் உண்மை உருவை அவனிடம் காட்டியதும் கர்ணனுக்கு ஏற்பட்ட வியப்பிற்கு அளவில்லை. அப்பொழுது கண்ணன் கர்ணனை நோக்கி “உனக்கு என்ன வரம் வேண்டுமாயின் கேள், தருகிறேன் ” என்றான் .
அதற்கு கர்ணன் என்ன கூறினான் என்று நினைக்கின்றாய்? ”செல்வத்தைத் தா, செல்வாக்கைத்தா புகழைத்தா என்று அவன் கேட்கவில்லை!!! நான் ஏழேழு பிறவி எடுத்த போதிலும் சரி என்னிடம் வந்து இல்லை என்று இரப்போக்கு நானும் இல்லை என்று உடையதாக இதயத்தை எனக்குத்தா!” என்று தான் கூறினான் அவ்வித இதயத்தை தான் பெற்றிருந்தால் போதும், அதற்கான பொருள் தன்னிடம் வந்து சேர்ந்துவிடும் என்று அவன் கொண்ட நம்பிக்கையை பார் !.
இவ்வாறு நாம் யார் என்பதை நம் எண்ணங்களே வரையறுக்கின்றன. நம் எண்ணங்கள் சொற்களாக உருவெடுக்கின்றன. சொற்கள் செயல்களாக உருவெடுக்கின்றன. செயல்கள் பழக்கங்களாக உருவெடுக்கின்றன. பழக்கங்கள் பண்புகளாக உருவெடுக்கின்றன. பண்புகள் நாம் யார் என்பதை தீர்மானிக்கின்றன. அதனால்தான் நல்ல எண்ணங்களைத் தேர்வு செய்து அவற்றை நினைக்க வேண்டும். நல்ல எண்ணங்கள் இருந்தால்தான் நாம் நல்ல மனிதனாக இருப்போம்.
உயர்ந்த குறிக்கோளை வைத்துக்கொண்டு அயராது உழைத்தால் நாம் எண்ணியது எல்லாம் நடக்கும் இதனை அடியொற்றி பாரதியின் பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது
“தேடிச் சோறு நிதந்தின்று- பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி- மனம்
வாடித் துன்பமிக உழன்று –பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து- நரைக்
கூடிக் கிழப்பருவம் எய்தி- கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் -பல
வேடிக்கை மனிதரைப் போலே- நான்
வீழ்வேனென்று நினைத்தாயோ?”
அதாவது சின்னஞ் சிறுகதைகள் பேசி சிறுமையான செயல்களைச் செய்யாமல் உயர்வான வெற்றியை மட்டுமே எண்ணுதல் வேண்டும்.
முடிவுரை:
எண்ணங்களே செயலை தீர்மானிக்கின்றன. எண்ணங்களுக்கு வலிமை உண்டு அதனால்தான் ”எண்ணம் போல் வாழ்வு” என்றும், எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய் என்பதும் இந்த பிரபஞ்ச வாழ்வில் வலிமை வாய்ந்த வார்த்தைகளாகவே கூறப்பட்டு வருகிறது. ஆனால், இந்த எண்ணங்கள் நாம் எப்படிக் கையாளுகிறோம் என்பதிலேயே வாழ்வின் சூட்சுமம் அடங்கியுள்ளது. உள்ளத்தனையது உயர்வு ஆக வேண்டும் எனில் உயர்ந்த எண்ணங்களை எண்ண வேண்டும். எண்ண அலைகளுக்கு எப்போதுமே பலம் அதிகம் நம் எண்ண அலைகள் எதிரில் உள்ளவரின் மனநிலையை மாற்றும் திறன் கொண்டது. எதிர்மறையான சிந்தனைகள் கொண்டு இருந்தால் தவறாகவும் நேர்மறை சிந்தனைகள் கொண்டு இருந்தால் சரியாகவும் நடக்கும் தவறாகவே யோசித்துக்கொண்டு இருந்தால் கெட்டதே நடக்கும். நல்லதையே நினைத்தால் நல்லதே நடக்கும். எனவே, நல்ல எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள், நல்லதையே பெறுங்கள்.
”இதுவும் கடந்து போகும்” என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவு உண்மை “எண்ணம் போல் வாழ்க்கை “
சான்று நூல்கள் :
- அப்துற்-றஹீம், எண்ணமே வாழ்வு,
- திருக்குறள்.
- பாரதியார் கவிதைகள்.
- கண்மறை துணி என்ற பிரதீபன் கவிதைத் தொகுதியை முன்னிட்டு
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 268 ஆம் இதழ்
- இன்று…
- தலைப்பில்லாத கவிதைகள்
- பார்த்தாலே போதும்
- அறிஞர் அப்துற்-றஹீம் கூறும் எண்ணமும் வாழ்க்கையும்
- ’பாவண்ணனின் வழிகாட்டி ம.இலெ தங்கப்பா’
- கவிச்சூரியன் ஐக்கூ 2022
- இலக்கிய வெளியில் சர்ச்சையை கிளப்பிய குரு அரவிந்தனின் ‘சதிவிரதன்’
- நான் கூச்சக்காரன்
- வர்ண மகள் – நபகேசரா
- வடகிழக்கு இந்திய பயணமும் வடகிழக்கு இந்திய எழுத்தாளர்களின் சிறுகதைகளும்
- இன்னும் எவ்வளவோ
- ஒட்டடைக்குருவி
- பூமியின் சுற்றுப் பாதைப் பெயர்ச்சி, சுழலச்சுக் கோணத் திரிபு ஐந்தறிவு வானரத்தை ஆறறிவு மானுடனாய் வளர்ச்சி பெறச் சூழ்வெளி அமைக்கிறது.
- எமிலி டிக்கின்சன் கவிதைகள் – 31
- சொல்லவேண்டிய சில…..
- ‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
- இசையோடு, காட்சியோடு பாடல் : ஆடும் அழகே அழகு