ருத்ரா
(உலக புத்தக தினம்)
கணினி யுகம் உன்னை
தூசிக்கிடங்கில் தள்ளி விட்டிருக்கலாம்.
புத்தகக்கண்காட்சிகளில்
உன் உயிர் புதுப்பிக்கப்படுகிறது.
புத்தகப்பக்கங்களை
தொட்டு மலர்ச்சியுறும்
அந்த விரல்கள்
கைபேசிகளிலேயே
முடங்கிப்போய்விடுகிற
“பரிணாமத்தின்”ஒரு முடக்குவாதம்
எப்படி ஏற்பட்டது?
பல்கலைக்கழகங்களையே
விழுங்கிப்புடைத்திருக்கும்
ஆன் லைன் நூலகங்களால்
ஆலமரம் போன்று விழுதூன்றி நிற்கும்
மெய்யான நூலகங்கள்
நூலாம்படைகளால் நெய்யப்பட்டுக்
கிடக்கின்றன.
“ஒரு புத்தகத்தை வெளியிட்டுக்காட்டு
அப்போது தான் உனக்கு பட்டம்”
என்று ஒரு சட்டம் தேவைப்படுகிறது.
அப்போது தான் இந்த
புத்தகங்கள் எனும் காகித சடலங்களிலிருந்து
நம் வரலாற்றின் உயிர்ப்பான
நூற்றாண்டுகளை
நிமிர்த்தி வைக்க முடியும்.
வாழ்க புத்தகங்கள்!
______________________________