ஜனநேசன்
5
மறுநாள் இரண்டாம் சனிக்கிழமை. மாமாவுக்கு விடுமுறை. ஒரு காரை வாடகை எடுத்தக் கொண்டு அவனை சிரபுஞ்சிக்கு அழைத்துச் சென்றார். மேகாலாயா, அஸ்ஸாம் எல்லைக்கும் பங்களாதேஷ் எல்லைக்கும் நடுவே உயரமான அடர்ந்த பசுமையான மலைகள் சூழ்ந்த சிரபுஞ்சிக்குப் போனோம். மார்ச் மாதம் வெயில் ஆரம்பித்திருந்தது. நீரின் சாரமில்லை. உயர்ந்த மலைகளும் சரிந்து தாழ்ந்த பள்ளத்தாக்குகளையுமே பார்க்க முடிந்தது. அவற்றில் நீர்த்தாரைகளால் பச்சைபாசக்கோடுகள் தெரிந்தன. அவற்றில் எல்லாம் மழைக்காலத்தில் அருவிகள் வழியுமாம். சுற்றிலும் அருவிகள் சூழ்ந்த திட்டில் நிற்பதுபோல் இருக்குமாம். மாமா சொல்லச் சொல்ல கற்பனையில் மனச்சித்திரம் தீட்ட முடிந்ததே தவிர நிஜத்தில் ஒரு சொட்டு நீர்த் தடத்தைக் காணோம். சிரபுஞ்சி ஜுரபுஞ்சியாக வறண்டு அனல் கக்கிக் கிடந்தது.
வெயில்காலமாக இருந்தாலும் அந்த பள்ளத்தாக்கு களிலிருந்து மேகக்குஞ்சுகள் எழுவதும் ஒன்றை ஒன்று விரட்டி தழுவி மறைவதுமாய் விளையாடிக் கொண்டிருந்தன. அந்தப் பள்ளத்தாக்கில் அரசு பராமரித்து வரும் இரு குகைளுக்கு கூட்டிச் சென்றார். அந்த மலைக்குகைக்குள் இருட்டில் நிதானமாய் காலை வைத்து நடப்பது ஒரு திகிலான அனுபவம். !
அதுவும் அந்த சுண்ணாம்பு குகைகளுக்குள் கடுமையான வெயில் காலத்திலும் சலசலத்து ஓடும் குளிர்ந்த நீரில் கால் வைத்து வழுக்குப்பாறைகள் வழுக்கி விடாமல் நடக்கும் சாகசம் அவனை பாலபருவத்திற்கு அழைத்தச் சென்றது. இங்கெல்லாம் அப்பாவும் அம்மாவும் ஆசை பொங்க வந்திருப்பார்கள். இனம், மதம், மொழி கடந்த தம் காதலை வளர்த்திருப்பார்கள்; என்ற எண்ணம் இவனுக்குள் சிலிர்ப்பை ஏற்படுத்தியது. மாமா இவனை கவனித்துக் கொண்டே வந்தார். இவன் நடை, உடை, பாவனையில் இவனது அப்பாவைப் போல் இருக்கிறான் என்று மாமாசொன்னது அவனை உணர்ச்சியின் உச்சத்தில் கொண்டு சென்றது. அப்பாவின் சேவைமனப்பான்மையும் சுயநலமில்லாத வாஞ்சைமிக்க மனிதனாக தான் இல்லாமல் போனது குறித்து வருந்தினான்.
பின்னர் மலைப்பகுதியில் எழுந்து நிற்கும் இராமகிருஷ்ண மடத்திற்கு அழைத்துச் சென்றார். அப்பகுதியில் கல்விக்கும், ஞானத்திற்கும் திறப்பாக இருந்தது. சிரபுஞ்சி மலையில் இருந்து பார்த்ததில் வங்கதேசத்து நகரம் மங்கலாகத் தெரிந்தது. அப்புறம் ஹாஸி இன மக்களின் பூர்வீக வனப்பகுதிக்கு அழைத்துச் சென்றார். சூரியக்கதிர்களும் உள்ளே நுழைய இயலாத கருஞ்சோலைவனமாக இருந்தது. அங்கு வனவிலங்குகள் இருக்கின்றவாஎன்று கேட்டான்.
“வனவிலங்குகள் புலியிலிருந்து யானைகள் வரை இருகின்றன. அவை வனத்தை விட்டு வெளியே வந்தால் அவற்றை கொன்று தின்றுவிடுவார்கள் இப்பகுதி மக்கள். ஆகவே அவை அருகி வருகின்றன. ஆனால் வனத்தின் உள்பகுதிகளுக்குள் இருக்கும். இவ்வனப் பகுதிக்குள் சாதாரண மனிதன் போனால் திரும்பி வர வழி தெரியாது. வனப்பகுதியினர் மட்டும் அலுவல் கருதி இடம்காட்டிக்கருவி கொண்டு உள்ளே போய் வருவார்கள்.”
அந்த கருகும்மென்றிருந்த காட்டின் அருகிலிருந்து பார்க்கவே அச்சமாக இருந்தது. சில் வண்டுகள் இரைச்சல், இருட்டு புதர்மரங்கள் என உள்ளே நுழைய முடியவில்லை. அந்தப் பகுதியில் உள்ள வெட்ட வெளியில் நடுகல் தூண்கள் கற்காலத்தை நினைவூட்டின. அதனருகே சேவல் சிலை ஒன்று இருந்தது. அது அவர்களின் குலதெய்வம் என்று சொன்னார். பயபக்தியோடு கும்பிட்டார். அம்மா வீட்டு தெய்வத்தை இவனும் கும்பிட்டான்.
மறுநாள் ஞாயிற்றுக்கிழமை. வீடு சுறுசுறுப்பானது. பெரியவர்கள் பலகாரம், உணவு வகைகளைச் செய்வதும், இருபெண்களும் அவற்றை சூடுகாக்கும் பாத்திரங்களில் வைப்பதும், நல்ல உடைகளை அணிந்து வெளியே செல்ல தயாராவதுமாக இருந்தார்கள். காலைஉணவு முடிந்தது. எல்லோரும் நகரின் மையப் பகுதியில் உள்ள பூங்காவுக்குச் சென்றார்கள். பூங்காவின் ஒவ்வொரு மரத்தின் கீழும், பூஞ்செடிப் புதர்களின் நிழலிலும் குடும்பங்கள் அமர்ந்திருந்தனர். மாமாவின் மகன் முன்னதாகவே வந்து ஒரு மரத்தின் கீழ் ஜமுக்காளம் விரித்து இவர்களுக்காகக் காத்திருந்தான்.
இவன் கேட்டான் “மாமாஜி இன்றைக்கு ஊர் திருவிழாவா? குடும்பம் குடும்பமாய் குழுமி குதூகலத்துடன் இருக்கிறார்களே!”
“ஜெய்கோஜி திருவிழா இல்லை. வாரத்தில் ஆறு நாள் கடுமையாக உழைப்பார்கள். ஏழாவது நாள் ஞாயிற்றுக்கிழமை இப்படி பூங்காக்களில், சோலைவனங்களில் கூடி பேசி, உண்டு மகிழ்வார்கள். ஆண்களும் ஓய்வாய் உள்ளவர்கள் கலந்து கொள்வார்கள். டிரைவர்கள் ஓய்விருக்கும் போது கலந்து கொள்வார்கள்”
ஆச்சரியமாக இருக்கிறது. இப்படி வாரம் ஒரு நாளாவது கலந்து பேசி கூடி உண்டால் குடும்பத்தில் எப்படி பிரச்சனை வரும்.
சித்தி குரல் தழுதழுக்கச் சொன்னாள் “இந்த மரம் எங்கள் குடும்ப மரம். இந்த மரத்தின் அடியில் நாங்கள் இருக்கும் போது தான் குரங்கின் குறும்பால் எங்கள் அக்காவின் வாழ்வில் உங்கள் அப்பா நுழைந்தார். இந்த மரத்தினடியில் இருக்கும் போதெல்லாம் எங்கள் அக்கா ஹாஸிமா எங்களுடன் இருப்பது போல் உணர்கிறோம்”
இவனுக்கு மெய்சிலிர்த்தது. உடலெங்கும் ரோமாஞ்சனம். கண்ணீர் ததும்பியது. ‘….இப்படியும் ஒரு குடும்பப் பிணைப்பா. அம்மா ஊரில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிமையும் மௌன விரதம் இருப்பது – இவர்களொடு மானசீகமாக பேசுவதற்காகவா…’ நெகிழ்ந்து நெக்குருகிப் போயிருந்தான்.
பெண்கள் தாங்கள் பணியாற்றும் இடங்களில் நடந்த சம்பவங்கள், வந்த மனிதர்களின் சுபாவங்கள், முதலாளிகளின் இயல்புகள் இவற்றை எல்லாம் சொல்லி கேலியும், கிண்டலும் தொனிக்க பரிமாறிக் கொண்டனர். மாமாவும், அவரது மகனும் அவரவர் பங்கிற்கான விஷயங்களைப் பரிமாறிக் கொண்டனர். மரத்தின் மீது வெயில் படர படர நிழல் பார்த்து மாறி மாறி உட்கார்ந்தார்கள். ஒரு மணிக்கு உணவு பரிமாறப்பட்டது. அந்த உணவுகளின் ருசி இவனது நாவுக்கு பிடிபடவில்லை. எனினும் வழக்கத்தைவிட கூடுதலாக உண்டதாக உணர்வு. உணவு சிந்தல் சிதறல் குப்பைகளை ஒரு ஓரத்தில் வைக்கப்பட்டக் குப்பைத் தொட்டியில் கொட்டினார்கள். எங்கும் குப்பை சிதறல் இல்லை. பான்பராக் எச்சிலை உமிழும் ஆண்கள் கூட எழுந்துபோய் குப்பைத் தொட்டியில் உமிழ்ந்து வந்தார்கள். இவனுக்கு ஒவ்வொன்றும் புதிதாக ஆச்சரியமாக இருந்தது. மாலை மூன்று மணிக்கு மேகத்திரை விரியத் தொடங்கியது. எழ மனமில்லாமல் எல்லோரும் எழுந்தார்கள். வீடு நோக்கி நடந்தார்கள்.
இரவு ஏழு மணி இருக்கும். வீட்டில் பாட்டியின் போட்டோவுக்கு மாலை சார்த்தி பத்தி கொளுத்தி வணங்கினார்கள். இவனும் உணர்ச்சி பிரவாகத்தில் நெடுஞ்சான் கிடையாக கீழே விழுந்து வணங்கினான். சித்தி விம்மியது. மற்றவர்கள் கண்ணீர் பொங்க நின்றனர். சித்தி, பாட்டி போட்டோவின் கீழ் இருந்த ஒரு கவரை எடுத்து மாமாவிடம் கொடுத்து கண்ணால் ஜாடை காட்டினாள்.
மாமா அந்தக் கவரை இவனிடம் கொடுத்தார். “ஜெய்கோஜி, இந்தக் கவரில் ஐந்து லட்ச ரூபாய்க்கான பணவரைவு உங்கள் அம்மா பெயருக்கு இருக்கிறது. இந்த வீட்டில் பெண் பிள்ளையாகப் பிறந்த அவருக்கு நாங்கள் செய்ய வேண்டிய கடமை. அவர் அந்நியரை மணந்து எங்கள் சமூகத்திலிருந்து பிரிக்கப்பட்டாள். அன்று எங்கள் இனக் கட்டுப்பாட்டையும் மீறி நாங்கள் கொடுத்த சொத்தை அவர் வாங்கிக் கொள்ளவில்லை. உங்கள் அப்பாவும் வாங்கிக் கொள்ள மறுத்து விட்டார். எங்கள் அக்காவை மணந்ததற்காக மாதா மாதம் பணம் தருவதாகச் சொன்னார். எங்கள் அம்மா மறுத்துவிட்டார். நீங்களும் உங்கள் அப்பா மாதிரி மறுக்காமல் இதனை வாங்கி எங்கள் அக்காவிடம் கொடுங்கள். அப்போதுதான் எங்களது அம்மாவின் ஆத்மா சாந்தி அடையும்”.
இவனிடம் பேசுவதற்கு வார்த்தைகள் இல்லை. நா எழவில்லை. கண்ணீர் பொலபொலவென உருண்டது. இவன் என்ன சொல்லப் போகிறான் என்று கூப்பிய கைகளும் கெஞ்சும் பார்வையுமாய் நின்றனர். மீண்டும் இவன் பாட்டியின் படத்தின் முன் விழுந்து வணங்கினான். சித்தியும், மாமாவும் இவனைக் கட்டிக் கொண்டனர். கண்களைத் துடைத்து விட்டனர். எல்லோர் முகத்திலும் புன்னகை அரும்பியது. அத்தை உணவு பரிமாறினாள்.
மறுநாள் காலை 7 மணிக்கு கார் வந்தது. இவனுக்கும் மாமாவுக்கும் காலை உணவு பரிமாறப்பட்டது. கண்ணீர் மல்க விடை கொடுத்தவர்கள் ‘ஒருமுறை நீங்கள் எல்லாரும் இங்கு வந்து போங்கள்” “நிச்சயமாக, இப்படி ஒரு பாசக்குடும்பத்தை மறக்க முடியுமா. பிரிந்து தான் இருக்க முடியுமா?” என்றான். எல்லோரும் நெகிழ்ந்து போனார்கள். மாமாவின் மகன் இவனது கைகளைப் பற்றி முத்தம் கொடுத்தான். “குட்டையான மனிதர்கள் தாம், அவர்கள் வாழும் மலையைப் போலவே அவர்களது மனசும் உயர்வாய்த்தான் இருக்கு” என்று எண்ணிக் கொண்டான். பிரியாவிடை கொடுத்து காரில் ஏறினான்.
இரயில் கிளம்பியது. மாமாவின் இடுங்கிய கண்ணீரில் ஊற்றெடுக்க கையசைத்தார். ‘அக்காவும், நீங்கள் எல்லோரும் வாங்க” என்றார். வண்டி நகரநகர ஷில்லாங் நினைவுகள் காட்சிகளான நகர்ந்தன. அந்த பெட்டியில் பலர் இருந்தாலும் இவன் மட்டும் தனித்திருப்பதாக வெறுமையை உணர்ந்தான். மனதுக்குள் இருந்து ஒரு குரல் “ஐந்து லட்சம், ஐந்து லட்சம்” முழங்கியது. கண்களையும், காதுகளையும் கைக்குட்டையால் இறுக்கிக் கட்டினான். ஐந்து லட்ச ரூபாய் பணவரைவு அகலத்திரையாக விரிந்தது. ஆடியது, குதூகலித்தது. இவன் விரும்பிய மதுவகைகளாய், ஐம்பத்திரண்டு சீட்டுகளாய் உருமாறி, உருமாறி கூத்தாடியது. “அம்மா, அம்மா” என்று மெல்ல உச்சரித்தான். அம்மாவின் இடுங்கிய கண்களிருந்து ஒளிப்பிரவாகம் கூசிய கண்கள் முடின. காதுமடல்கள் விரிந்தன. அலையடித்த மனது அமைதியானது. அப்படியே உறங்கி விட்டான்.
ஒரு பெரிய ஸ்டேஷனில் நின்ற ரயில் ஒரு குலுங்கலோடு கிளம்பியது. ஒரு பெரியவரும், ஒரு அம்மாவும் தட்டுத் தடுமாறி இவனருகே வந்தனர். அவர்கள் இருவருக்கும் நடு அடுக்கும் மேலடுக்கும் ஒதுக்கப்பட்டிருந்தது. பெரியவர் அலுப்போடு மேலடுக்கையும், மனைவியையும் பார்த்தார்.
“எங்கே போகிறீர்கள்” என்று கேட்டான்.
“சென்னைக்கு வைத்தியம் பார்க்க போகிறோம்” என்றார் ஆயாசத்தோடு பெரியவர்.
“நானும் சென்னை தான் போகிறேன். நீங்கள் கீழடுக்கில் படுத்துக் கொள்ளுங்கள். நான் மேலடுக்கில் படுத்துக் கொள்கிறேன் என்றான்.
அவர் முகத்தில் முதுமையும், நோய்மையும் கனிய கையெடுத்துக் கும்பிட்டார். இவன் தனது கம்பளி விரிப்பான்களோடு மேலடுக்கில் ஏறினான். அப்பெரியவர் தனது மனைவியைக் கீழடுக்கில் படுக்கச் சொல்லிவிட்டு அவர் நடுவடுக்கில் படுக்க முயற்சித்தார். விட்டுக் கொடுத்தலின் உவகை உடலெல்லாம் பரவியது. இவனுக்கு உறக்கம் வந்தது.
- துயரம்
- வானத்தில் ஓர் போர்
- கொரனாவின்பின்னான பயணம்
- ஹைக்கூ
- பிரமிக்கத் தக்க பிரமிடுகள் எப்படி நிறுவப்பட்டன, தொல்பொருள் ஆய்வாளரின் புதிய கண்டுபிடிப்புகள்
- வலுவற்ற சூப்பர் வல்லரசு
- சிதறல்கள்
- உள்ளங்கைப்புண்
- தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]
- வடகிழக்கு இந்தியப் பயணம் : 11
- பாலினப் போர்
- சொல்வனம் 271 ஆம் இதழ் வெளியீடு அறிக்கை
- பயணம் – 5