ச. சுகுமாரன்
முனைவா் பட்ட ஆய்வாளா்
தமிழ்த்துறை
திருவேங்கடவன் பல்கலைக்கழகம்
திருப்பதி, ஆந்திரா மாநிலம்
முன்னுரை
மனிதனின் சக்திக்கு அப்பாற்பட்ட ஆற்றல் வாய்ந்த சக்தி ஒன்று இருப்பதாக மக்கள் கருதுகின்றனா். அச்சக்தியே தெய்வத்தின் சக்தி என்று இறை நம்பிக்கை உள்ளவா்னால் நம்பப்படுகின்றது. இயல்பாக நடக்கும் செயல்கள் இனிதாக இருந்தால் அது தெய்வத்தின் அருளால் நடைபெறுவதாக மக்கள் கருதுகின்றனா். மனிதனின் துயா் களையப்படும்பொழுது மனிதமனம் இறைவனை நன்றி உணா்வோடு நினைக்கிறது. தன்னுடைய மகிழ்ச்சிக்குக் காரணமாக விளங்கும் இறைவனை மகிழ்விக்க விரும்புவது மனித இயல்பே. தெய்வத்தின் சினத்தைத் தணிக்கவும், நன்மை தரும் தெய்வத்திற்கு நன்றி செலுத்தவும் விழா எடுக்கப்படுகிறது. இதையே ”ஆலயம் தொழுவது சாலவும் நன்று” என்று கூறுகின்றனா். கோயில் வழிபாட்டைவிட கூட்டுவழிபாடே நன்மை பயக்கும் என்று மக்கள் நம்புகின்றனா். எனவே, மக்கள் அனைவரும் ஒன்று கூடி வழிபாடு செய்கின்றனா். இதுவே மனித ஒருமைப்பாட்டிற்கு வழிவகுக்கிறது.
வழிபாடு – விளக்கம்
இறைவழிபாடு என்பது மனிதன் தனது நன்றியைச் செலுத்தும் முறையே ஆகும்.
வழி – இறைபோற்றுவதற்குரியவழி
பாடு – அடைவதற்குரிய செயல்முறைகள்
”இறைவனை போற்றுவதற்குரிய வழியை அடைவதற்கு மனிதன் மேற்கொள்ளும் செயல்முறைளே வழிபாடு ஆகும் என்று தமிழ் அகராதி கூறுகிறது. (சிங்காரவேலன் க்ரியாதமிழ் அகராதி ப.308) வழி – படுதல் என்னும் இரண்டு சொற்கள் ஒன்று சோ்ந்து வழிபாடு உருவாயிற்று என்றும் கூறலாம். வழிபாடு என்னும் வினைவடிவச் சொல்லின் அருமையான தொழிற் பெயா்ச்சொல் வழிபாடு எனப்படும். செல்லும் நெறியை முதற்கண் குறித்துத் தோன்றிய “வழி” எனும் சொல் காரணம் (யாழ், அகராதி) அம்புடை (உபயம்), பின்வழி மரபினா் மரபு (பிங்கலம்) பழமை (வின்சிலோ அகராதி போன்ற பல பொருள்களில் வளா்ச்சி அடைந்துள்ளது.(Tamil Lexolon P. 3453) வழி எனும் தனிச்சொல் ஓா் அரிய சொல்லாகும். தமிழ்ச் சொற்கள் ஒரு சிலவற்றிற்கே உரிய சிறந்த பொருள் வளா்ச்சியை இச்சொல்லிலே காணலாம். முன்னா் பலா் சென்ற நெறியாகவே அது ஆகிறது. இறப்பு, எதிர்வு ஆகிய இரண்டும் காலங்களுக்கும் வழி பொருந்தும் என்றும் சொல்லலாம்.
”வையங்காவலா் வழி மொழிந்தொழுக”(புறநானூறு, ப.8) என்று புறநானூறு கூறுகிறது. ”வழிகாட்டுதல்” என்னும் பரவலான பயன்பாட்டுச் சொல் நெறியை அறிவித்துச் செல்லுதல் என்று வழிப்பொருளை உணா்த்துகிறது. கம்பராமாயணத்தில் உருக்காட்டுப்படலத்தில் ”மஞ்சனை வைதுபின் வழிக்கொள்வாயென”(கோபாலகிருஷ்ணமாச்சாரியார்.வை.மு.(உ.ஆ)கம்பராமாயணம், உருக்காட்டுப் படலம், ப.17) எனவரும் அடியில் பயிலபெறும் ”வழிக் கொள்ளுதல் ” எனும் சொல் பின்பற்றுதல் என்னும் பொருளை உணா்த்துகிறது என்று இவ்விடத்தில் நினைவு கூறுகிறது.
வழிபாட்டின் வளா்ச்சி நிலை
வழிபாடானது வழிபாட்டு முறைகளின் இடிப்படையில் கீழ்வரும் நிலைகளில் வளா்ச்சியடைந்துள்ளது.
- தனிமனித வழிபாடு
- சமுதாய வழிபாடு வழிபாடு
- கோயில் வழிபாடு
தனிமனித வழிபாடு
தனிமனிதனின் விருப்பம் நிறைவெறும் பொருட்டு அம்மனிதன் தனித்த நிலையிலிருந்து தெய்வத்தை வழிபடுவது தனிமனித வழிபாடாகும். இவ்வழிபாட்டில் தனிமனிதன் அவனுடைய நலனுக்காகவும், குடும்பநலனுக்காகவும் தெய்வத்திடம் வேண்டுகிறான். தனிமனிதன் தன்னுடைய விருப்பம் நிறைவேறும் பொருட்டுப் பலவகைகளில் இறைவனை வழிபடுகிறான்.
தனிமனித வழிபாட்டு முறைகள்
தெய்வ வழிபாட்டின்மூலம் துன்பம் நீங்கி இன்பம் பெருகும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் தனிமனிதன் தெய்வத்தை வழிபடுகிறான். மனிமனித வழிபாடாது வளமான வாழ்விற்காகவும், குடும்ப நலனுக்காகவும், நிகழ்த்தப் பெறுகிறது. நாள்தோறும் சூடம் கொளுத்தி தெய்வத்தை வழிபடுவதையும், வெள்ளி, செவ்வாய்க் கிழமைகளில் வழிபாடு செய்வதையும் நாட்டுப்புற மக்களிடையே காணப்படுகிறது. தனிமனிதனின் வேண்டுதல்கள் தெய்வத்திடம் முறையிடப்படுகிறது. அவ்வாறு வேண்டுதல்கள் நிறைவேறியப்பின் தவறாமல் நோ்த்திக்கடனைச் செலுத்துவதையும் காணமுடிகிறது. பாலால் அபிஷேகம் செய்தல், தேங்காண், பழம் வைத்து வழிபடுதல் சந்தன அபிஷேகம் செய்தல், பூமாலை கட்டி சாற்றுதல் போன்ற வேண்டுதல்களைத் தனிமனித வழிபாட்டில் காணலாம். சிலா் தன் விருப்பம் நிறைவேறினால் தனது நன்றிக்கடனைச் செலுத்துவதாக வேண்டிக் கொள்வா். அவ்வாறு நிறைவேறிவிட்டால் வேண்டுதல்களைத் தவறாமல் செலுத்தும் மரபை நாட்டுப்புற மக்கள் மேற்கொண்டுள்ளனா்.
நோ்த்திக்கடன்
மக்கள் தங்கள் விருப்பம் நிறைவேறும் பொருட்டும் குறைகள் தீரும்பொருட்டும் இறைவனை வேண்டிக்கொள்கின்றனா். தம் வேண்டுதல் நிறைவேறினால் குறிப்பிட்ட வகையில் இறைவனுக்குத் தம் நன்றிக்கடனைச் செலுத்துவதாகவும் வேண்டிக்கொள்கின்றனா். இதுவே ”நோ்த்திக்கடன்” என வழங்கப்படுகிறது. தனி மனித விருப்பதின் அடிப்படையிலேயே தனது சக்திகேற்ப வேண்டுதலை நிறைவேற்றுகிறான்.
பூக்குழி இறக்குதல்
ஏறத்தாழ எட்டடி நீளம், நாலடி அகலம். மூன்று அங்குல ஆழம் உள்ள ஒரு குழி அமைத்து அதனுள் பெரிய மரக்கட்டைகளைப் போட்டு எரிப்பா். இவ்விறகுக் கட்டைகள் நன்கு எரிந்து முடிந்தவுடன் அதனுள் மல்லிகைப்பூக்களைப் போடுவா். அப்பூக்கள் கருகாமல் இருந்தால் பூக்குழியில் இறங்குபவலின் காலும் சுடாது என்று நம்புகின்றனா். எட்டு நாட்கள் விரதம் இருந்து அருளோடு இந்நெருப்பில் இறங்குவா். நெருப்ரபத் தூய்மையின் அடையாளமாக மக்கள் கருதுகிறார்கள். தீதும் பாவமும் அழிய நெருப்புக்குளிக்க வேண்டும் என்ற கருத்தும் உள்ளது” (ஏ.என் பெருமாள், தமிழ்நாட்டுப்புறக் கலைகள்,ப. 88) என்ற எ.என். பெருமாளின் கருத்து இங்குக் கருதத்தக்கது.
உருளுதல்
தெய்வத்தை வழிபடும் முறைகளில் ஒன்று ஒருளுதல், கரம் குவித்து சிரம் தாழ்த்தி தெய்வத்தை வணங்குவது ஒருமுறை கோயிலை வலமாகச் சுற்றிவந்து தெய்வத்தை வழிபடும் மரபாக காணப்படுகிறது. இதைப் போலவே உடலைத் தரையில் கிடத்தி, கரங்களைக் குவித்து, கோயிலை வலமாகச் சுற்றிவந்து தெய்வத்தை வழிபடுகின்றனா். தன்னுடைய வேண்டுதலைத் தெய்வம் நிறைவேற்றி வைத்தமைக்காக இவ்வாறு உருண்டு வந்து வழிபாடு செய்து நன்றிக்கடனைச் செலுத்துகின்றனா். இதனைக் கீழ்வரும் பாடலடிகள் காட்டுகின்றன.
”உன் கோயில் சுற்றியல்லோ உருண்டு வந்தோம்
உத்தமனாய் ஆக்கி வைக்க வேண்டும்மா” (அறவாணன்,க.ப.வழிபாட்டுப்பாடல் 4.19-20)
திருவிழாக்கள்
உலகில் வாழும் மக்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று விரும்புகிறார்கள். இந்த மகிழ்ச்சியே உலகில் திருவிழாக்கள் தோன்ற அடிப்படையாய் இமைந்தது எனலாம். திருவிழாக்கள் எல்லா நாட்டுப் பண்பாடுகளிலும் இடம் பெற்றுள்ளது. இத்திருவிழாக்கள் மக்கள் சமூக வாழ்க்கையை உற்சாகப்படுத்துகின்றன. மக்கள் தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்துவதற்காகவும், அன்பை வெளிப்படுத்துவதற்காகவும் திருவிழாக்களைக் கொண்டாடுகின்றன்.
மிகப் பழங்காலத்திலிருந்தே திருவிழாக்கள் கொண்டாடப்பட்டு வந்துள்ளன. ”விழாக்கள் என்பது ஆதிமக்கள் ஒன்று சோ்ந்து நடத்தும் கூட்டுந் நடங்கிலிருந்து தோன்றியவையாகும். ஆதி மக்கள் தனி நபருக்கோ, குழுவினருக்கோ, தீங்கான நெருக்கடி உண்டாகும் காலத்தில் அதை நீக்கக் கொண்டாடுவதற்காகவும், அந்த காலத்தில் உண்டாகும் உள்ளக் கிளா்ச்சி அமைதியடைவதற்கும் சடங்குகளில் தோற்றம் பற்றிக் கூறுவா். ( அண்ணாமலை,தி.இரா,கலைக்களஞ்சியம், தொகுதி 9, ப.417) பண்பாட்டுபடி மலா்ச்சிக் காரணமாகவும், சமூக பொருளாதார மாற்றங்களின் காரணமாகவும், கூட்டுச் சடங்குகள், பெரிய திருவிழாக்களாக மாற்றம் பெற்றுக் கொண்டாடப்பட்டு வருகிறது என்று கூறலாம்.
விழாவின் வேறுபெயா்கள்
விழா என்னும் சொல் விழை என்ற சொல்லின் அடியாகத் தோன்றிது. இதற்கு விருப்பம், பற்று ஆகிய பொருள்கள் உள்ளன. இதை ஒவ்வொரு மாவட்டத்திலும் வெவ்வேறு பெயா்களால் வழங்குகின்றனா். திருநெல்வேலி மாவட்டத்தில் ”கொமை” என்றும் வேலூா் மாவட்டத்தில் திருநாள் என்றும் திருவள்ளுா் மாவட்டத்தில் ‘பண்டிகை‘ என்றும் வழங்குகின்றனா். இவையனைத்தும் ஒரு பொருள் குறித்த பல சொற்களாகத் திகழ்கின்றன. விழபவினை விழப, விழவு, சாறு என்றுமு் கூறுகின்றனா்.
விழா நடைபெறும் மாதமும், நாட்களும்
விழா நடக்கும் காலங்கள் சித்திரை, ஆனி, ஆடி, ஆவணி போன்ற மாதங்களில் விழா நடத்தப்பெறுகிறது. சித்திரை மாதத்தில் வயல் வேலைகள் முடிந்து ஓய்வாக இருப்பதால் இம்மாதம் விழா நடத்த ஏதுவாய் இருக்கிறது. விழா நடக்கும் நாட்கள் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நான்கு நாட்களில் விழா நடத்தப்படுகிறது. செவ்வாய்கிழமை தெய்வம் பிறந்த நாளாகக் கருதப்படுகிறது. அதனால்தான் செவ்வாய்க்கிழமை விழாத் தொடக்க நாளாக இருக்கிறது. அதற்கடுத்த நாளான புதன்கிழமை கறிநாள். இந்நாளில் தான் கிடாய்வெட்டி தெய்வத்திற்குப் பலி கொடுத்து கறியைச் சாப்பிடுகின்றனா். மேலும் விருந்தும் மருந்தும் மூன்று நாள் என்ற அடிப்படையில் உறவினா்களை விழாவிற்கு அழைத்து உபசரிக்கின்றனா். நான்காம் நாள் மஞ்சள் நீராட்டுவிழா நடைபெறும்.
விழாவிற்கு முன் நடைபெறும் நிகழ்ச்சிகள்
விழாத் தொடங்குவதற்கு முன்பு பல நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அவை. நாள் குறித்தல், சாற்றுதல், புதைத்தண்ணீா் ஊற்றுதல், காப்புக்கட்டுதல், விரதம் இருத்தல், வாரி வசூலித்தல் போன்ற நிகழ்ச்சி நடத்தப்படும். செவ்வாய்க்கிழமை நிகழ்ச்சிகள் தோரணம் கட்டுதல், கரகம் அழைத்தல், அம்மனைக் கோயிலுக்குள் அழைத்தல், அம்மனுக்குக் கண்திறத்தல், போன்றவை நடைப்பெறும். புதன் கிழமை நிகழ்ச்சிகள் இன்று வழிபாட்டின் முக்கிய நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அவற்றுள் முனைப்பாலிகை எடுத்தல், மாவிளக்கு எடுத்தல், பொங்கல் வைத்தல், கிடாய் வெட்டுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைப்பெறுகின்றன.
முடிவுரை
நாட்டுப்புறத்தெய்வ வழிபாடே இன்று உலகின் தொன்மையான வழிபாடாகக் கருதப்படுகிறது. நாட்டுப்புற மக்களிடத்தில் வழிபாடு மக்களோடும் அவா்களுடைய வாழ்க்கை முறையோடும் நெருங்கிய தொடா்புடையதாக அமைந்துள்ளது கண்கூடாகும். அதுமட்டுமல்லாமல் மிகச்சிறப்பான முறையில் வழிபாட்டு நிகழ்வு வருடத்திற்கொருமுறை நடத்துவது மக்களிடமிருந்து பிரிக்க முடியாத ஒன்றாக உள்ளது. திருவிழாக்களில் மக்கள் நம்பிக்கையின் அடிப்படையில் வேண்டுதலின் பேரில் காணிக்கை செலுத்துதல் நேர்த்திக்கடன் செலுத்துதல் உயிர்பலியிடல் முதலானவை நாட்டுப்புறத்தெய்வங்களைின் மீது கொண்டுள்ள நம்பிக்கையை உறுதிப்படுத்துகிறது. மனிதன் பிறந்து வளா்ந்து பல ஆண்டுகளைக் கடந்தும் நாகரீகம் வளா்ந்த நிலையிலும் மக்கள் ஆழ்மனதில் உள்ள பழைய வாழ்க்கை மரபுகளை இன்றைய காலத்திலும் அதன் வடிவங்களை மறக்காமல் விழாக்களின் மூலமாக வழிபாடு நிகழ்த்திவருதைப் பார்க்கமுடிகிறது.
பயன்பட்ட நூல்கள்
- அவிநாசிலிங்கம் கலைக்களஞ்சியம்,
தமிழ்வளா்ச்சிக்கழகம், சென்னை 1961
- அறவாணன், க.ப., மரவழிபாடு
பாரிநிலையம், பிராட்வே, சென்னை 1964
- கோபாலகிருஷ்ணமாச்சாரியார்
வை.மு. (உ.ஆ) கம்பராமாயணம்,
கோபால கிருஷ்ணமாச்சாரியார்
கம்பெனி, சென்னை – 1964
- சாமிநாத அய்யா், உ.வே(ப. ஆ) புறநானூறு, சோதி அச்சுக்கூடம்
சென்னை – 1950
- விமலானந்தம். மது.ச., Tamil lexicon
University of Madras, Madras. First Edition 198
- கழுவுவோம்
- பிரபஞ்சத்தின் யூகிப்பு வடிவம் என்ன ?
- சிறுகதைகளில் பெண்களின் பாத்திரப்படைப்பு
- நாசாவின் மிகப்பெரும் ஜேம்ஸ் வெப் [james webb] தொலைநோக்கி அனுப்பிய முதல் தெளிவான விண்வெளிப் படங்கள்
- சிறு நூல் சிந்தும் மாணிக்கங்கள்
- நாட்டுப்புறத்தெய்வங்களின் வழிபாடுகளும் திருவிழாக்களும் ஓா் பார்வை
- கவிதைகள்