G. சியாமளா கோபு
(நாற்பதாண்டு சமூக செவிலியராக பணியாற்றி பலதரப்பட்ட மனிதர்களை சந்தித்து அவர்களின் நோய் காலங்களில் உடன் பயணித்த அனுபவம் சிறந்த சமூக செவிலியருக்கான”National Florence nightingale award 2016″ மேதகு ஜனாதிபதியின் கையால் பெற்றுத் தந்தது. என்னுடைய கதைகள் அருணோதயம் பதிப்பகத்தாரால் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
மனங்களைப் படிப்பது பிடிக்கும். மனிதர்களை நேசிப்பது மிகவும் படிக்கும். படிப்பது எனக்கு எல்லாம். எழுதுவது எனக்கு இயல்பு.)
நேற்று மதியம் ரெண்டு வீடு தள்ளியிருக்கும் தோழி வீட்டிற்கு சென்றேன். அவளோ என்னை வா என்று அழைத்து விட்டு தான் செய்து கொண்டிருந்த வேலையில் மிகவும் மும்முரமாக இருந்தாள்.
எப்போதும் படு சுத்தமாகஇருக்கும் வீடும், அதை விட பாந்தசமாக இருக்கும் அவளும் என பார்த்துப் பழக்கப்பட்ட எனக்கு இன்று வித்தியாசமான சூழல் ஆச்சரியம் கொடுத்தது. ஆம். ஆங்காங்கே கிடக்கும் பொருட்களும் படுக்கையின் மீது கிடந்த சூட்கேஸில் எடுத்து வைக்கப்பட்டிருந்த துணிமணிகளும் அவள் எங்கோ பயணம் கிளம்பி விட்டாள் என புரிந்து குழப்பமாக அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்தேன். என்னிடம் சொல்லாமல் எதையும் செய்ய மாட்டாள். இந்த பயணம் எங்கள் லிஸ்டில் இல்லையே.
இருவரும் ஒரே பள்ளியில் படித்து ஒன்றாக வேலை செய்து ஒரே இடத்தில் வீடு கட்டிகொண்டு. வந்தோம். பத்து வருடங்களுக்கு முன் கணவர் இறந்து விட, ஊரோடு வந்து விடு என்று வீட்டினர் வற்புறுத்தியம் போகாமல் தன் ஒரே மகளோடு இங்கேயே தங்கிவிட்டாள். நல்ல தரமான கல்லூரியில் சேர்ந்து படித்து அந்த பெண்ணும் நல்ல வேலையில் அமர்ந்து விட்டாள்.
சில வருடங்களுக்கு முன் மகளுக்கு சிறப்பாக திருமணம் செய்து பெங்களூர் அனுப்பி விட்டாள். மருமகன் மிகவும் தங்கமான பையன். என் தோழியை போலவே சம்பந்தி அம்மாளும் தனியாக மகனை வளர்த்து ஆளாக்கியவள். இப்போது அவனோடு தங்கி விட்டாள்.
தகப்பனின் கண்டிப்பு இல்லாமல் தனியாக வளர்ந்த மகள் கொஞ்சம் சோம்பேறியும் அதீத பிடிவாதமும் கொண்டவள். வீட்டில் எல்லா வேலைக்கும் மாமியாரை ஏவிக் கொண்டிருப்பதைக் கண்டு மனைவியை கடிந்து கொண்டிருக்கிறான். வந்ததே கோபம் அந்த பெண்ணிற்கு. எப்போதும் நமக்குள் சண்டை மூட்டி விடும் உன் அம்மா இங்கே இருக்க கூடாது என்று வம்பு.
மாப்பிள்ளை அழாத குறையாக மாமியாரிடம் சொல்லியிருக்கிறான். இவளும் மகளை கூப்பிட்டு கண்டித்திருக்கிறாள். அந்த தாய் வேறு எங்கு போவாள்? என்று.
நீயும் தான் அங்கே தனியாக இருக்கே. நீயும் இங்கே வந்து விடு என்று பிரச்சினைக்கு எண்ட் கார்ட் போட்டிருக்கிறாள் மகள்.
இதை எல்லாம் சொல்லி கொண்டே பெட்டியை அடுக்கிக் கொண்டிருந்தாள் தோழி.
இவள் தன் மகளை கையாள எத்தனை கஷ்டப்பட்டாள் என்பதை நான் அறிவேன். நல்லபடியாக திருமணம் முடிந்து தான் தன் குடும்பம் என தன் வாழ்க்கையை அவள் வாழ்ந்து கொள்ளுவாள் என நினைத்திருக்க மீண்டும் தாயின் இடுப்பில் ஏறிக் கொள்ள நினைக்கிறாள், இந்த பைத்தியக்காரியும் இதற்கு சம்மதித்து பெங்களூர் போகிறாளே என்று ஆதங்கம் ஆகிப் போயிற்று எனக்கு.
ஸோ, நீ உன் மகள் வீட்டுக்கு கிளம்பிட்டே?
இல்லை
இல்லையா…!!!!!!
இல்லை…தெளிவான பதில்.
அப்படின்னா? கண்களால் பெட்டியைக் காட்டினேன்.
வாலாஜா அருகில் ஒரு முதியோர்இல்லம். மாதம் பதிணைந்தாயிரம், பத்து லட்சம் டெபாசிட்.
முதியோர் இல்லம்?
ஆமாம். தனியறை மருத்துவ வசதி நம் வயது கூட்டாளிகள் பொழுதுபோக்கு அம்சங்கள் என சொகுசான வாழ்க்கை. வேறு என்ன வேண்டும். ?
ஓஹோ
தனியறையில் இன்னும் ஒருவர் கூட இருக்கலாம்.
நானும் வரவா? என்று கிண்டலாக கேட்டேன்.
வேண்டாம். ஆள் ரெடியா இருக்கு என்றாள் சீரியஸாக.
மேற்கொண்டு அவள் செய்த ஏற்பாடுகளை சொல்லி விட்டு கிளம்பி சென்றாள் என் தோழி.
இப்படி அனாதையாக போகிறாளே என்று என்னால் வருத்தப்படத் தான் முடிந்தது என்னால்.
அவள் மகள் என்னை அழைத்தாள். அம்மா தனியா இருக்க வேண்டாம் என்னுடன் வா என்று அழைத்தேன் என்றாள்.
உனக்கு எதுக்கு வீண் தொந்திரவு?
எனக்கு என்ன தொந்திரவு? அவுங்க தானே எல்லாத்தயும் பார்த்துக்க போறாங்க.
அது அவளுக்கு தொந்திரவு இல்லே.
ஓஹோ பெண்ணுக்கு ஒத்தாசை பண்றது அவுங்களுக்கு தொந்திரவா?
உனக்கு ஒத்தாசை பண்ண உன் மாமியார் இருக்காங்க.
அவுங்களுக்கு நான் தான் செய்யணும்.
அது உன் கடமை தானே.
என் அம்மா எனக்கு செய்வதும் கடமை தானே
இல்லை.
இல்லையா
உன் ரெண்டு பிள்ளை பேறு பார்த்து தன் கடமையை முடிச்சிட்டா.
எனக்கு ஒரு அண்ணன் இருந்தா ஆயுசுக்கும் செய்வாங்க இல்லே.
ஆமாம்.
மகளும் மகனும் ஒண்ணு தானே.
நிச்சயமா. உன் நோக்கம் என்ன?
அம்மா தனியா இருக்காங்களே
உன் மாமியார் உன் வீட்டில் இருப்பதால்..என்று தயங்கவே
அவுங்களை தான் முதியோர் இல்லம் அனுப்பியாச்சே
அப்படியா? எங்கே?
வாலாஜாவில் மாசம் பதிணைந்தாயிரம் பத்து லட்சம் டெபாசிட்
சூப்பர் என்று துள்ளினேன்.
ஆமாம். அங்கே அவுங்க சொகுசாக இருப்பாங்க.
அதை தான் உன் அம்மாவும் சொன்னாள்.
ஓஹோ என்றவளுக்கு இப்போது தான் புரிந்திருக்கும்.
எங்கே தன் மாமியாரை அனுப்பினாளோ அங்கே அவள் தாயும் போய் விட்டாள்.
இது மகளுக்கு தண்டனையா? பாடமா?
என் தோழி சொன்னாள். அவள் வாழ்க்கையை அவள் வாழ இது ஒரு அனுபவ பாடம் என்று.
எனக்கு சரி என்று தான் தோன்றியது. உங்களுக்கு?