கடல்புத்திரன்
சலீம்மைத் தேடி சிற்ரரஞ்சன்,பாபு,இன்னும் இருவர் வந்திருந்தார்கள்.”தோழர் இவர்கள் மாட்டுப் பிரச்சனையைக் கொண்டு வாரார்கள் . ” எங்களை வந்து தீர்க்கட்டாம் ” என்ற ரஞ்சஜனைப் பார்த்து “பிரச்சனையைக் கூறு” என்றவன், யோசித்து விட்டு.”கேட்டடியிலே நின்று கதைக்க வேண்டாம், உள்ளே வாருங்கள் ” கூட்டிச் சென்றான். வாடகையில் ‘ராஜ’ களையுடன் இருக்கிற அந்த பெரிய பழைய வீடு வந்தாரை வாழ வைக்கும் . வெளியிலுள்ள பூச்சுக்கள் கழன்று பெரிதாக விழுந்திருக்கவில்லை . உள்ளுக்க தான் அங்காங்கே விழுந்து கொஞ்சம் அலங்கோலமாக இருக்கிறது . அந்த காலத்தில், முருகைக்கற்களை வைத்து சுண்ணாம்புக் காறையால் கட்டிய தடித்த சுவர்களை உடையது . செல்லடிக்கெல்லாம் லேசிலே விழுந்து விடாது பயப்படாமல் நிற்க வல்லது . வக்கீலுக்குச் சொந்தமாக பழைய சங்கக் கடை இருந்த இதே போன்ற வீட்டை திருத்தி புது வீடாக்கி இருக்கிறார் . ” பாரம் குறைந்த (முருகைக்) கல் வீடு ,உறுதிப் படைத்தது ! ” .அவருக்கு தெரிந்திருக்கிறது . எங்களைப் போல வெங்காயம் என்றால் அதை தகர்த்து விட்டு புதியதாய்க் கட்டியிருப்போம் . இந்தியனாமி ,பாலத்தடியிலே இருந்த கிரிஸ்தவ சுடலையிருந்து அடித்த செல்லிலே பாதுகாப்பற்றதாக கொல கொலத்திருக்கும் . ஆனால் நாம் ஓடியது அந்த வீட்டுக்குத் தான் . நாம் ( அம்மா , தங்கச்சி , அவர்கள் எல்லோரும் ) சுவரை ஒட்டியே இருந்தோம் . அந்த வீடு இன்றும் இருக்கிறது . ஆனால் நாம் இருந்தது …இப்ப இல்லை . உள்ளக்க ஒரு அழுகை இருக்கிறது .
எங்க வீட்டின் கதை ஆச்சரியமானது . சொந்தக்காரர் ஒரு இன்ஜினியர் . தனது கனவு இல்லமாக கட்ட வெளிக்கிட்டாராம் . டையினிங் ரூமை வாசிகசாலை பெரிய மேசை வைக்கக் கூடிய மாதிரி நீட்டி மண்டபமாக்கி விட்டிருந்தார் . நிஜமாகவே மண்டபத்துண்டு தான் . மூன்று பக்கமும் ஜன்னல்களுடன் பின் வாசல் கதவு . அப்படியே இறங்கி தோட்டத்திற்குள் ( வளவுக்குள் ) பிரவேசிக்கலாம் . வரிசைக்கு நல்ல இடைவெளியுடன் வைக்கப்பட்ட தென்னை மரங்கள் . பூவரச மரங்களுடன் கூடிய (கம்பி) வேலி வீடு வீதியோடு ஒட்டிய தோடு இருக்கிற நீளத்திற்கு சற்று தூரம் வரையில் உயர்ந்த மதில் சுவர் .அடுத்து சிறிய நீளத்திற்கு செவவரத்தை மரங்கள் .செடி மரம் போல வளர்ந்த்து பூக்களாக பூத்து தள்ளும் . காலையிலே ஐயர் வீட்டினர் வீதியிலே இருந்தே பூவை பறித்து விட்டுச் செல்வர் . பின்வளவு மூலையில் பெரிய புளியம் மரம் ,அடுத்து வீட்டுப் பக்கமும் கிளையை பரப்பு பகிர்ந்து கொண்டு கம்பீரமாக நிற்கிறது . பின்வளவின் மத்தியிலே காவாளிக் கூண்டு போல இரண்டு கழிவறைகளுடன் நிற்கும் கூண்டு . இடதுபுறமாக சிமேந்துப்பலகை மூடியக் கிடங்கு . அதில் பொறியியல் இன்னமும் தேவைப்படுவதாக நினைக்கிறான். அவர்கள் நினைக்கிற வட்டம் ….நடைபெறுவதில்லை எனப்படுகிறது . உக்கப்படுவதை ஊக்குவிக்க ஏதாவது இரசாயனம் சேர்க்கப்பட வேண்டுமோ ? இவர்கள் இதற்கு முதலிருந்த அராலி வீட்டிலேயும் …பிரச்சனையாயே உருவெடுத்தது . நீண்ட காலத்திற்குப் பிறகு வேற இடத்தில்…திரும்பவும் கட்ட வேண்டுமோ ?
முதலில் இந்த மண்டபத்தையும் இறகு போல இரண்டு பெரிய படுக்கை அறைகளையும் வயிற்றுப் பகுதியில் சிறிய வசிப்பு பகுதியையும் கீறி கட்டப்பட்டிருக்க வேண்டும் . பிறகு இடது பக்கம் நாற்சாரத்துடன் வெளிக்கதவுடன் , முன்னும் ,பின்னும் வெறும் வாராந்தா ,வேலிப்பக்கமாக வீட்டை விலகிய சமையல் கூடம் , ஸ்டோர் அறையைக் கொண்ட தொகுதியைக் கட்டி இருக்கிறார்கள் . படுக்கை அறைகளுக்குச் செல்ல ஜன்னல்களுடன் நடைபாதை கொரிடார் . முன் பக்கம் வசந்த மண்டபம் போல பெரிய போர்ட்டிக்கோ . கார் வைத்திருக்கிறார் . போர்ட்டிக்கோவூடாக ஓடி கிணற்று மறைப்பு மதிலைச் சுற்றி பெரிய மாட்டுக் கொட்டில் போல ஓடுடன் கூடிய கட்டிடத்தில் கராஜ் . ஐய்யா ,குட்டிச்சாமிப்பிள்ளைப் போல தான் வாழ்ந்திருக்கிறார் . உள்ளே டாணா வேலியிலே ஐந்தடிக்கு தள்ளி அன்னமுன்னா செடிமரங்களாக வைத்திருக்கிறார். பறங்கி அன்னமுனா மரம் ஒன்று கூட . எல்லாமே நல்லாய்க் காய்த்தன . பக்கத்து வீட்டுத் தாத்தா , ” இவன் முழுமண்ணை அள்ளி விட்டு நிரப்பு மண் ..போட்டு தான் வைத்தவன். அது தான் ( மாமரம் , சீமைப்பழம் …)எல்லாமே காய்த்துக் கொட்டுற சோலையாய் இருக்கிறது ” என்றார் .
வீட்டின் பெயரும் கூட ரட்னஹரி. அவன்ர அண்ணரின் பெயர் ஹரி . அதனாலே அம்மாவிற்கு வீடு நல்லா பிடித்து விட்டது . காய்க்கா விட்டாலும் கிராமத்திலே அந்த வீட்டிலே தான் பேரீச்சை மரம் ஒன்றும் நின்றது . அவர்கள் குடி புகுந்த போது வசிப்பு கூடங்களின் சுவர்கள் எல்லாம் ரவிவர்மாவின் நளதமயந்தி , சீதாவின் என பலரின் அற்புத ஓவியங்கள் மாட்டப்பட்டிருந்தன . கலைக்கூடத்திற்குள் புகுந்த மாதிரி இருந்தது .அவருக்கு மூன்று பையன்களே பிறந்தார்கள் . மூவருக்குமாக வலது பக்க கூரைச் சரிவை இன்னும் கூடுதலாக நீட்டி அடைப்புகளைப் போட்டு நாலு சிறிய அறைகளாக்கி இருக்கிறார் . பிறகான இணைப்பு என தெரிந்தது . கொழும்பிலே தான் சீவியம் . சித்தப்பாவின் பொறுப்பிலே இருந்தது . ” அப்பரின் கனவு வீடு எனவே பராமரித்தார்கள் . நல்ல மாதிரியே இருந்தார்கள் . அதை விற்காமல் சந்ததி சந்ததியாக காப்பாற்றி வைத்திருக்கவே வேண்டும் . போர்க்காலத்தில் அழிபட விட்டு , மூன்று பங்காக்கி விற்றும் விட்டார்கள் . ஒரு காலத்தில் இருந்த அந்த அற்புதச் சுவடு தெரியாமலே போய் விட்டிருக்கிறது .
வரந்தா இணைப்பில் முதல் இருந்த சிறிய அறையை தனது ஒவிஸ் ரூமாக்கிக் கொண்டார் . அதிலேயும் ஒரு புதுமை அலுமாரியை சுவருக்குள்ளேயே பதித்து விட்டார் . கதிரையும்,மேசையும் மட்டுமே அறையில் இடம் பெற்றன . பைல்கள் , மற்றைவை எல்லாம் சுவர்ப் பொந்துகளில் அடக்கம் . அதிலே,நம்ம சலீம் சுவரோட சிறிய கட்டிலை மட்டும் போட்டிருக்கிறான் . கதிரை மேசை ஒன்றும் கிடையாது . கட்டிலில் , ஜன்னல் (கட்டு)லே வந்தவர்கள் எல்லாரும் இருந்தார்கள்.சலீம்மின் தங்கச்சி ஜானகி,இங்கிதம் தெரிந்து எல்லாருக்கும் தேனீர்(சிறிய வெள்ளித் தம்ளரில்) குவளைகளைக் கொண்டு வந்தாள்.என்ன நம்ம ஆள் ‘சலீம்’ என பெயர் வைத்திருக்கிறான் என பார்க்கிறீர்களா ? இயக்கத்தில் , அரச படைகளிடம் கைதாகினால்…..அவர்களை குழப்புவதற்கே எல்லா மதப்பெயர்களிலும் புனைப்பெயர்களை வைக்கச் சொல்லி ஊக்குவிக்கிறார்கள் . ரஞ்சனின் பெயர் கிராமத்தில் சிற்ர ரஞ்சன் பெயர் பழகி போய் விட்டது. வெளியிலே புதுப்பெயர் ” போல் “.
தோழர்களில் கணிசமானவர்கள் , அரைவாசி சீமேந்திலும்,கூரை ஓலையிலும், ஒலைத் தட்டிகளாலும்..என பல்வேறு விதமாக கட்டப்பட்டவையில் வாழ்கிறவர்கள் . அங்கே,மெல்ல மெல்ல தான் முழு வீடாகிறது … உருபெறுகிறது . அவர்களின் பெரும்பாலோனர் வீடு ஓலை வீடுகளாகவே இருக்கின்றன. எனவே , இந்த இஞ்ஜினியர் வீட்டால்… மனதில் அரற்றுவது ஆச்சரியமில்லை . இனி , வந்தப் பிரச்சனையைப் பார்ப்போம். மாட்டு வியாபாரி தியாகர் , சைக்கிளில் திரிந்து திரிந்து வாங்கி கசாப்புக் கடைகளிற்கு விற்கிறவர் . சிலவேளை தானே வெட்டி பங்கும் போடுவார் . கிழமாடு , தீடீரென இறந்த மாடு எல்லாம் கூட வியாபாரமாகி விடும் . அது அவரவர் வியாபார தந்திரம் (ரகசியம் ) , கஸ்ட நட்டம் அப்படி ஆட வைக்கிறது . எல்லா வியாபாரத்திலும் , தில்லுமுல்லு கிடக்கவே செய்கிறது .
ஒரு வீட்டினர் , வயிற்றில் கன்றுடன் இருந்த மாட்டை விற்க , அதை இவரால் கசாப்புக் கடையில் விற்க முடியாததலால் வெட்டி பங்கு போட்டிருக்கிறார் . மாட்டு வியாபாரத்தை பழக்குவதற்காக அவர் தனது மருமகப் பெடியனையும் கூட கூட்டிப் போறவர் . என்ன இருந்தாலும் …அந்த மாட்டை வெட்டுற ரகசிய இடத்திலிருந்து அவனை விலத்தி இருக்க வேண்டும் . பார்த்துக் கொண்டிருந்த அவனை வயிற்றிலிருந்து கன்றை எடுத்தது…என்னவோ செய்து விட்டது . இது சரி இல்லை , என அக்காட்சி அவனை பயமுறுத்திக் குழப்பிக் கொண்டிருந்தது . வாசிகசாலைப் பெடியளிடம் சொல்லி விட்டான் . அவர்களும் பங்கு கேட்டிருந்தவர்கள் . கேட்டு திகைத்துப் போனார்கள் . அசாத்திய கோபம் பொங்கி வர பங்கெல்லாம் வேண்டாம் என மறுத்து விட்டார்கள் . இறைச்சியை யாரும் வாங்கவில்லை . தியாகரிடம் நேர்மையும் இருந்தது . ரஜனிகாந்தைப் போல வாங்கிய பணத்தை எல்லாம் திருப்பிக் கொடுத்து விட்டார் . தியாகர் இறைச்சி எல்லாத்தையும் தனது சகாவிடம் கொடுத்து கசாப்புக் கடைக்காரனுக்கு அனுப்பி விட்டார் . அதை பெடியள் தடுக்கவும் இல்லை , மறிக்கவும் இல்லை .
ஆனால் , இவர் இனிமேல் இப்படிச் செய்யக் கூடாது? . என்பதற்காக ஏதாவது படிப்பினை , தண்டனை கொடுத்தே ஆக வேண்டும்’ என கோபத்திலே இருந்தார்கள். அது , எம்மை ஏமாந்த சோனகரியாக நினைத்து ஏமாற்றப் பார்த்தாரே’என்ற கெளரவப் பிரச்சனையும் கூடத் தான் என அவ்விடத்துப் பெட்டைகள் கூறுகிறார்கள் . உள் வீட்டுப் பிள்ளையாக பிழங்குவதால் தோழர்களின் சகோதரிகளும் இவர்களோடு . ” அண்ணே…” என்று இயல்பா கதைப்பவர்கள் . பெடியள் , தண்டனையையும் தீர்மானித்து விட்டார்கள் . உள்குறிச்சியில் , மாட்டின் குடலை எடுத்து அவருடைய கழுத்தில் போட்டு ஊர்வலம் நடக்க தயாராகி விட்டது . பல இயக்கங்கள் இருக்கின்றன . சிலவேளை அவர்களுடைய இயக்க தோஸ்துகள் கொளுவ வரலாம் …..என்பதால் பாதுகாப்புக்கு ஊர்வலத்தில் நாங்களும் கலந்து கொள்ள வேண்டும் என்பது பெடியள்களது விருப்பம் .
ஒரு பொது அநியாயம் நடந்திருக்கிறது . மனிதனுக்கு நடந்திருந்தால் ‘போர்க்குற்றம்’என சொல்கிறோமில்லையா ? அதுவே , மற்ற உயிர்கள் என்றால் குற்றமில்லையா என்ன ? . அப்புறம் என்ன தமிழன் ? எல்லா உயிர்களும் ஒன்று தான் . எந்த வலத்திலும் எதிர்ப்பைக் காட்டத் தான் வேண்டும் . ” போய் கலந்து கொள்வோமடா ” என்றது சலீமுக்குப் புரிய அவர்களோடு சேர்ந்து புறப்பட்டுப் போனான் . இவர்கள் கலந்து கொண்டதால் வாசிகசாலைப் பெடியள்களால் சுதந்திரமாக கோசம் போட முடிந்தது . இது , பழைய கால கழுதையில் ஏற்றி கரும்புள்ளி,செம்புள்ளி குத்திப் போறது மாதிரி இருக்க வேண்டும் . இங்கை கழுதையும் இல்லை.தவிர,அதிகமாக தண்டிப்பதும் பிழை என்ற நிலமையும் இருந்தது . நாமும் மாட்டிறைச்சி சாப்பிடுறோமே . இதற்கென்ன தான் தீர்வு ? மாட்டை கொஞ்ச நாள் வாழ விட்டு,கன்றைப் போட்ட பிறகு, மாட்டையும் கன்றையும் வெட்டி சாப்பிடலாம் . யாரும் எதும் கேட்க . போவதில்லை . ஆனால் , இங்கே தாய்மை அவமதிக்கப்.பட்டிருக்கிறது , அது சரி இல்லை , பிழை ! எனவே தான் கலந்து கொண்டோம்’ என்பது விமர்சினம் . விமர்சனம் ! சலிமின் வாதமும் கூட .
தியாகர் அவர்களில் ஒருத்தர்.அவருடைய பெடியள்கள் தான் செய்கிறார்கள். அவர் அந்த நிகழ்வை தூசை தட்டிக் கொள்வது போல தட்டிக் கொள்ளலாம் . நாளை , அவ்விடத்து மக்களே அதை மறந்து போய் விடுவார்கள் . அந்த ஊர்வலம் எதற்கும் பயன் படப் போவதில்லை . அதற்காக … நிகழ்வை லாப நட்டம் பார்த்து கழித்து விட முடியாது .
எதிர்ப்பைக் காட்டுவது? அவசியம் ஒரு சிக்கலுக்கு …. தோள் கொடுக்கவே வேண்டும் . சரி , பிழை பிறகு தான் ஆரம்பமாகிறது . அடுத்த நாள்,கடையடியில்,கழுகுப் பெடியள் “மாட்டுக்காரனுக்கு கயல் இயக்கம் தண்டனை கொடுத்திருக்கிறது ” சலீம்மைப் பார்த்தும் பாராது போல நின்று காது பட பேசிக் கொண்டிருந்தார்கள் . திரும்பி வரும் வழியில் சந்திரா அக்கா,செல்வத்தின் மனைவி எதிர்ப்பட்டார் . செல்வம் , கடிகாரம் திருத்துற தொழிலாளி . அவர்களிற்கு எல்லாப் பிள்ளைகளும் பெட்டைகளே ! அவர்க்கு சலீமின் மீது பாசம் . ” தம்பி , கொஞ்சம் நில்லு உன்னோடு தனிய பேசனும் ” என நிறுத்தினார் . சிறிது தள்ளி கூட்டிச் சென்று ” நீ படிச்ச பெடியன் , ஊர்வலத்தை நிறுத்தி இருக்க வேண்டாமா , அவன் வியாபாரி . அது அவன்ர தொழில் இல்லையா ? ” எனக் கேட்டார் . ” நாங்கள் நடத்தவில்லையக்கா ” என்று அவன் பதில் அளிக்க , ” நீ சொன்னால் கேட்பாங்களில்லையா ? ” என ஒரு போடு போட்டார் . அவன் என்ன பதில் சொல்வான் . ” ஆனால் , அந்த செய்தியைக் கேட்க ஒருமாதிரி இல்லையா அக்கா ” என திருப்பிக் கேட்டான் . ” இருக்கிறது தான் . ஆனால் , ஊர்வலம் போனது பிழை தான் ” என்றார் . “எங்களிற்கு எதிர்ப்பைக் காட்டுறது நல்லம் எனப் பட்டது . அது தான் கலந்து கொண்டோம் ” என்று கூறினான் . அவரிற்கு அது புரிந்திருந்தது . ஆனால் , இனிமேல் இப்படியான விசயங்களில் கவனமாக இரு ” என்று எச்சரித்தார் .
இவர்களை மேலிடம்”கத்திக் குத்து,வெட்டு…விசயமாக இருந்தாலும் , அந்த இடத்தில் பிரசன்னமாக வேண்டும் ” என சொல்கிறது . இவன் ஊர்ப் பிரச்சனையை மேலிடத்திற்கு கொண்டு போக விரும்புறதில்லை . என்ன இருந்தாலும் மேலிடம் பொலிஸைப் போல பலத்தை பிரயோகிக்கிற அமைப்பு . அவன் ஊராக்களை தேவையில்லாமல் கொண்டுப் போய் மாட்டி விட்டு , அடி வாங்கிக் கொடுக்க விரும்புறதில்லை . கூடுமானவரை அவர்களையே பேச வைக்கிறான் . அவர்களே பேசி ஒரு தீர்வை எட்ட முயல்வதையும் ஊக்குவிக்கிறான் . தீர்வு அமுலாகிறதுக்கு பெடியளுடன் சேர்ந்தும் ஆதரவாகவும் ,நிற்கிறான் . சலிம் , சனி,ஞாயிறுகளில் தொழினுட்பகல்லூரியில் வகுப்புகள் வேறு எடுக்கிறான். பக்கத்து எ.ஜி.எ பிரிவுக்குள்ளாக சைக்கிளில் செல்கிற போது கெளரியை சந்தித்தான் . ” என்னடாப்பா நீங்க சமூகப்பிரச்சனைகளிற்கு தண்டனைகள் எல்லாம் கொடுக்கிறீங்களாம் ” என்று கேட்டான் . ” நாங்க அந்த ஊர்வலத்திலே போய் கலந்து கொண்டது மட்டும் தான் . மற்றப்படி வாசிகசாலைப் பெடியள்களே… தீர்மானித்து நடத்தியதெல்லாம் . எங்களிற்கும் அதற்கும் சம்பந்தமே இல்லை”என்று விளக்கினான் .
” நீ நேரடியாய் தொடுற மூக்கை,சுத்தி வளைத்து தொடுறாய் . ஆனால் உதுவெல்லாம் மக்களுக்கு விளங்காது ” என்று சொல்லி சிரித்தான் .
மத்தியபகுதியிற்கு “அமைப்புக்கள் கட்டுப்பாடில்லாமல் கண்டறிமாட்டுக்கு இயங்குகின்றன “என்ற குற்றசாட்டும் சென்றவாரே இருக்கின்றன . நல்லாவே விமர்சிக்கப்படுகிறார்கள்.
( ரஸ்யப் புரட்சியின் போது நடந்தவற்றை இப்படி குட்டிக்கதைகளாகவே நாவல் போல எழுதி வைத்திருக்கிறார்கள் . அந்த அருட்டலில் எழுதியது . )
- இரவு
- காற்றுவெளி புரட்டாதி (2022) மின்னிதழ்
- ஒளிமய மந்தைகள் (Galaxies) எப்படித் தோன்றின?
- மாட்டுப் பிரச்சனை
- “ஜெயபாஸ்கரன் கவிதைகள்” -ஆய்வு-அணிந்துரை
- மெல்லச் சிரித்தாள்
- தொலைந்து போன சிரிப்புகள்
- சலனமின்றி அப்படியே….
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 277 ஆம் இதழ்
- சிவப்புச்சட்டை….
- நடேஸ்வராக்கல்லூரி பழையமாணவர் சங்க ஒன்றுகூடல் – 2022
- மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டில் முருகபூபதியின் பாரதி தரிசனம் நூல் வெளியீடு
- 2022 ஆண்டின் சிறந்த தொகுப்பாக நான் கருதுகிறேன் – எம்.டி.முத்துக்குமாரசாமியின் ஒரு படிமம் வெல்லும் ஒரு படிமம் கொல்லும்
- தொடரும் வெள்ளங்கள் – தீர்வுக்கான முதல் அடிகள்