மெல்லச் சிரித்தாள்

author
0 minutes, 1 second Read
This entry is part 6 of 14 in the series 4 செப்டம்பர் 2022

 

மீனாட்சி சுந்தரமூர்த்தி

வாங்க சித்தி, வா தம்பி, சித்தப்பா வரலையா? 

அவருக்கு திடீர்னு ஒரு வேல வந்திடுச்சி,ராத்திரி இராமேஸ்வரத்துல வந்திடுவாரு ஜமுனா.

சித்தியையும் , தம்பியையும் அழைத்துக் கொண்டு மாடிப்படி ஏறினாள்.

அடடே சம்மந்தியம்மா வாங்க என்று வரவேற்றாள் முகமெல்லாம் மத்தாப்பூவாக மகளுக்கு வீட்டைச் சுற்றிக் காட்டிக் கொண்டிருந்த வைரம்.

பழைய ஓட்டு வீடு இரண்டடுக்கு மாடியாக தாராளமாக மூன்று குடும்பங்கள் வசிக்குமளவு  வசதிகளோடு நிமிர்ந்து நின்றது. மறுநாள் காலையில் புதுமனைப் புகுவிழா.

 ஜமுனாவின் அம்மா மகளுக்குத் திருமணம் தள்ளிக்கொண்டே போகிறதே என்ற கவலையிலேயே நோயில் வீழ்ந்து இறந்து போனாள். ஜாதகத்தில் ஏதோ சரியில்லை என்பதுதான் காரணமானது.அப்பா ஓய்வு பெற்ற தாசில்தார்.ஒரே தம்பி  வங்கி ஒன்றில் பணிபுரிகிறான். பார்த்திபனோடு திருமணம் முடிந்தபோது இவளுக்கு முப்பத்தைந்து வயதாகிவிட்டது. பட்டதாரி ஆசிரியப் பயிற்சி முடித்து சென்னையில் நர்சரி ஒன்றில் பணி செய்து கொண்டிருந்தவள் சீர்காழிக்கு வந்தாள். பார்த்திபன் சொந்தமாக பேன்சி ஸ்டோர் வைத்திருந்தான்.அம்மாவும் தம்பியும் உடனிருந்தனர்.தங்கைக்கு மணமாகி இரண்டு குழந்தைகள் பள்ளி செல்கின்றனர். அப்பா இல்லை.

    ஜமுனாவைத் தாயைப் போல் பார்த்துக் கொண்டாள் மாமியார்.அன்பான கணவன் ஒரு குறையும் இல்லை.வேலை கிடைக்காதது மட்டும் சற்று வருத்தமாக இருந்தது. அவளுடைய அப்பாவின் தொடர் முயற்சியால் விருத்தாசலத்திற்கு அருகிலிருந்த கிராமம் ஒன்றில் அரசு உதவி பெறும் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியப் பணி கிடைத்தது  நாற்பத்தி இரண்டு வயதில். தினம் சீர்காழியிலிருந்து செல்வது சிரமமாக இருந்ததால் பார்த்திபனும்,ஜமுனாவும் மகன் தீபனோடு. விருத்தாசலத்திற்கு  குடிவந்தனர் படித்து  வேலை தேடிக் கொண்டிருந்த தம்பி பேன்சி ஸ்டோரை பார்த்துக் கொண்டான்.

    இங்கு ஜெராக்ஸ் கடை ஒன்றை வைத்திருக்கிறான் பார்த்திபன். அதற்கு ஜமுனாவின்  அப்பாதான் பணம் கொடுத்தார். இப்போது  தீபன் பத்தாம் வகுப்பு பயில்கிறான். சீர்காழியில் உள்ள  பழைய வீட்டை அம்மாவின் ஆசைப்படி இடித்துக் கட்ட முடிவு செய்தார்கள்.முப்பது இலட்சம் வங்கிக்கடன் வாங்கித் தந்தாள் ஜமுனா. ஆனால் அது அறுபது இலட்சம் வரை இழுத்தது.இரண்டு குழந்தைகள் கொண்ட தம்பிக்கு பெரிதாக வருமானம் பேன்சி ஸ்டோரில் வரவில்லை என்பதால் மொத்த செலவும்  ஜமுனாவின்  எண்பது சவரன் நகைகளை விற்று முடிந்துள்ளது

         புதுமனைப் புகுவிழா கோலாகலமாக நடந்தது.இரண்டு பகுதிகளை வாடகைக்கு விட்டனர். ஆனால் அந்தப் பணம் பார்த்திபன் கைக்கு வருவதில்லை.அம்மாதான் வாங்குகிறாள்.தனது மருத்துவ செலவுக்கே சரியாகிப் போகிறது என்கிறாள் அம்மா .நாட்கள் வாரங்களாகி மாதங்களாகி ஓடுகின்றன.ஜெராக்ஸ் கடையில் முன்போல் வருமானமில்லை, அதோடு அந்த மெஷின் வேறு பழுதாகிப் போனது சரிசெய்ய இயலவில்லை. பால் ஸ்டோர் வைத்தான் அதிலும் இலாபமில்லை,  கடன்தான் ஏறியது.

தம்பியிடம் கேட்டதற்கு,’ நானா அண்ணா வீட்ட கட்டச் சொன்னேன்’.

‘டேய் எங்களோட உழைப்பு முழுசா இதுல போட்டிருக்கமே’

அதுக்கு என்ன செய்றது?

 அப்ப வீட்ட வித்திட்டு போட்ட பணத்தை எடுத்துக்கறேன்.

‘எனக்குத் தெரியாது, அம்மாகிட்ட கேளு.’

 ஆனால் தன் பெயரிலிருந்த வீட்டை விற்க அவள் உடன்படவில்லை. அதோடு பேசுவதும்  நின்று போனது. அம்மாவிற்கு ஒருமுறை தலையில் அடிபட்டு மருத்துவமனையிலிருந்த போது சென்று பார்த்து வந்தான்.அதோடு சரி.                 

   நண்பனோடு சேர்ந்து உளுந்து மொத்தமாக வாங்கி வந்து கடைகளுக்கு  விநியோகம் செய்திட ஏற்பாடானது. ஆந்திர எல்லைக் கிராமம் ஒன்றில்அறுவடை முடிந்தவுடன்உளுந்து மூட்டைகளை வாங்கி லாரியில் லோடு ஏற்றினர். பாதி தூரம் வரும்போதே கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு நடைமுறைக்கு வந்தது.உடலும் மனமும் சோர்ந்து போனது. பதினைந்து நாட்களுக்குப் பிறகு ஊர் வந்து சேர்ந்தனர். மூட்டைகளைப் பிரித்தபோதுதான் தெரிந்தது சரியாகத் தார்ப்போலின்களை வைத்து கட்டாததில் வழியில் பெய்த மழையில்  நனைந்து அத்தனையும் வீணாகிப் போயிருந்தது.இதற்காக வைத்திட்ட முதலீடு  இரண்டு இலட்சம்.

       ஜமுனாவின் வருமானம் ஒன்றில் அத்தனை செலவினமும் அடங்கவில்லை. போதாததற்கு பெரிய நஷ்டங்கள் வேறு. வீடு கட்ட வாங்கின கடனுக்காக மாதந்தோறும் பிடித்தம் வேறு. ஒரு நகை இல்லை தாலிக்கொடி மஞ்சள் கயிறாகி பலநாளாகி விட்டது. இருவருக்கும் சர்க்கரை, இரத்த அழுத்தம், ஜமுனாவிற்குத் தைராய்டு பிரச்சனையும் சேர்ந்து கொண்டது. ஏகத்திற்கு உடல் எடையும் கூடி விட்டது. நடந்தாலே மூச்சு வாங்கும்.அவ்வப்போது இயலாமையால் சச்சரவு வரத் துவங்கி விட்டது. தீபன் பொறியியல் மூன்றாமாண்டு படித்துக் கொண்டிருந்தான். அவனுக்குப் பணம் கட்டவும் படாதபாடு படவேண்டி வந்தது. ஜமுனா சீர்காழியில் கட்டின வீட்டை விற்று கடனை அடைக்கவழி தெரியவில்லை , வேறு வருமானத்திற்கும் வழியில்லை என்றாள்.

        அப்போதுதான் அது நடந்தது.ஜமுனாவின் அப்பா மகளின் வீட்டிற்கு வந்திருந்தார். எப்போது வந்தாலும் ஓரிரு நாட்களில் கிளம்பிவிடுவார். ஓய்வூதியம் தவிர வேறு சேமிப்பு இல்லாததால் அவர்களுக்குத் தன்னால் உதவ முடியவில்லை என்ற கவலை அவருக்கு. அதோடு மருமகன் பொறுப்பில்லாமல் நடப்பதாக வெறுப்பும் உண்டு.அந்த முறை ஊரடங்கால் உடன் திரும்பிட இயலவில்லை.அப்போதுதான் அது நடந்தது.

 

ஊரெல்லாம் தொற்று தீவிரமாகப் பரவி வந்தது.முதலில் ஜமுனாவிற்குக் காய்ச்சல் வந்தது.கபசுர குடிநீரும் , சுக்கு,அதிமதுரம், திப்பிலி முதலானவை சேர்த்த கஷாயமும் வைத்துத் தந்து பார்த்துக் கொண்டான் பார்த்திபன். சரியாகிவிட்டது. அடுத்து அவனுக்கு நல்ல காய்ச்சல், இருமல். இந்த கைவைத்தியம் அவனுக்குக் கேட்கவில்லை. நான்கு நாளானது, மூச்சுத் திணறல் அதிகமானது.ஜமுனா  மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாள். தொற்று உறுதியாகிவிட்டது.மூன்றாவது நாள் அலைபேசியில் அழைத்துச் சொன்னார்கள் இறந்துவிட்டதாக,இவளும், மகனும் சென்று இறுதிச் சடங்கு முடித்து வந்தார்கள்.

எல்லாம் முடிஞ்சிடுச்சா மா,

ஆமாம்பா ,

மகளையும், பேரனையும் கட்டிக் கொண்டு கதறினார் முதியவர்.

அக்கம்பக்கத்தினரும், உறவும், நட்பும் ஒதுங்கிய சூழலில் தள்ளாடி விழும் தந்தைக்கும், உடைந்து போன மகனுக்கும் தந்தையும் தாயுமாகி  சமைப்பதற்கு குக்கரை அடுப்பில் ஏற்றினாள் ஜமுனா.

 

மறுநாள் அலைபேசியில் பேசிய மாமியார் வருந்திவிட்டு,

சின்னவன் அம்பதாயிரம் அனுப்பறேனு சொன்னான்,

எதுக்குங்க மாமி?

உனக்கு உதவியா இருக்குமே?

பரவாயில்லை வேண்டாம்,

அலைபேசியை வைத்ததும் அப்பா கேட்டார்,

வீட்டுக் கடன் முடிஞ்சிடுச்சா மா.

இல்லபா, இன்னும் அஞ்சு வருடம் இருக்கு.

ஓய்வு பெற எட்டு வருடமிருக்கு பா.

எப்படிமா சமாளிக்கறது?

பார்த்துக்கலாம்பா என்று மெல்லச் சிரித்தாள்.தோளில் சாய்ந்த மகனை அணைத்துக் கொண்டு.

Series Navigation“ஜெயபாஸ்கரன் கவிதைகள்” -ஆய்வு-அணிந்துரைதொலைந்து போன சிரிப்புகள்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *