அழகியசிங்கர்
தமிழில் கவிதைப் புத்தகங்களுக்கு உள்ள நிலையை நான் சொல்லி யாருக்கும் தெரிய வேண்டு மென்றில்லை.
பலர் அவர்கள் செலவு செய்து கவிதைப் புத்தகங்களைக் கொண்டு வருகிறார்கள். அதற்கு எதுமாதிரியான வரவேற்பு இருக்கிறது.
க.நா.சுவின் நூற்றாண்டின்போது அவருடைய சில கவிதைகளை அச்சடித்துப் புத்தகமாகக் கொண்டு வந்து, இலவசமாக வினியோகம் செய்தேன்.
நான் அப்போது மயிலாடுதுறையில் ஒரு வங்கியில் பணி புரிந்து கொண்டிருந்தேன்.
பஸ்ஸில், ஓட்டலில், பேப்பர் கடைகளில் இவற்றின் மூலம் எல்லோருக்கும் இலவசமாக விநியோகிக்கும்படி கேட்டுக் கொண்டேன். வியாபாரிகளுக்கு அலட்சியம். உண்மையில் அவர்கள் எப்படி இருப்பார்களோ அப்படி இருந்தார்கள்.
நான் பஸ்ஸில் அலுவலகம் போகும்போது அங்குள்ளவர்களுக்குக் கவிதைப் புத்தகத்தை நீட்டினேன். யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. யார் க.நா.சு என்று கேட்கவில்லை?
க.நா.சு கவிதைகள் கொண்டு வரும் பொருட்டு ஒவ்வொரு நாளும் க.நா.சு கவிதைகளை முகநூலில் பதிவிடுவது வழக்கம்.
க.நா.சு யார்? இன்று இலக்கியத்தில் ஈடுபடுபவர்களுக்கு ஒவ்வொரு விதமாக க.நா.சு தெரிந்திருக்கும். அவரைத் திட்டித் தீர்க்காதவர்களே இல்லை.
ஆனால் அவர் ஒரு முக்கியமான பங்கைச் செய்திருக்கிறார். கவிதைகள் எழுதியிருக்கிறார் கதைகள் எழுதியிருக்கிறார். நாவல்கள் எழுதியிருக்கிறார். விமர்சனம் என்ற கலையைத் தமிழில் கொண்டு வந்திருக்கிறார்.
ஆனால் யாரும் அவரை ஏற்றுக்கொள்வதில்லை. ஏன்? முப்பதுகளில் அவரும், ந.பிச்சமூர்த்தியும் புதுவிதமாகக் கவிதைகள் எழுதினார். அதுவும் க.,நா.சு ஒரு படிமேல். அவர் உரைநடையில் கவிதைகள் கொண்டு வந்தார்.
கவிதையை எளிமை ஆக்கினார். இன்று எதிர்க்கவிதை என்பதை விளக்க முன் வருபவர்கள், க.நா.சு கவிதைகளை அதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
க.நா.சுவுக்கு இன்று வரவேற்பு எப்படி இருக்கிறது? க.நா.சு கவிதைகளை முழுவதும் கொண்டு வரும் திட்டத்தோடு அவர் எழுதியிருக்கும் எல்லாக் கவிதைகளையும் சேகரித்துக் கொண்டிருக்கிறேன்.
ஒவ்வொரு கவிதையாக முகநூலில் ஒவ்வொரு கவிதையாகப் பதிவிட்டு வருகிறேன்.
இந்தத் தருணத்தில்தான் பிரம்மராஜன் 1987ல் வந்த ழ என்ற சிற்றேட்டில் பிரம்மராஜன் எழுதியதை இங்குக் குறிப்பிட விரும்புகிறேன்.
முழுமையான போர் மற்றும் முழுமையான அரசியல் – இவை இரண்டின் அனுபவங்களும் ஐரோப்பாவில் எதிர்க் கவிதை பிறந்தது. எதிர்க் கவிதை பிரதானமாய் உருவக எதிர்ப்பானது. ஒரு சொல் அதன் அர்த்தத்திற்காக மட்டுமே பயன்படுத்தப் பட வேண்டும் என்று எதிர்க் கவிதை நிர்ப்பந்தித்தது. ஐரோப்பியக் கவிதை ஆளுமை என்னென்ன சமூக, கலாச்சார, அரசியல் நெருக்கடி நிலைகளைச் சந்தித்ததோ அவை எதுவும் தமிழ்க் கவிஞர்களுக்குக் கிடையாது. மாறாகத் தற்காலத் தமிழ்க் கவிஞர்கள் ஒவ்வொருவரும் தமது ஆளுமை வெளிப்படப் பொருந்துகிற கவிதை மொழியைத் தேர்ந்தெடுக்கிற பொழுது எதிர்க் கவிதைகள் உருவாகின்றன.
எழுதுவதைப் பற்றி எழுதுவதான மெட்டா ரைட்டிங் வகையைச் சேர்ந்த கவிதைகள் க.நா.சுவின் கவிதைத் தொகுதியில் அதிகம் காணப்படுகின்றன. மெட்டா கவிதை என்பதற்கு எடுத்துக் காட்டாகவும், எழுத்தின் அடிப்படை விமர்சன விவாதமாகவும் க.நா.சுவின் போ என்ற கவிதை அமைகிறது.
நீண்ட கவிதையின் ஒரு சிறு பகுதியை பிரம்மராஜன் குறிப்பிடுகிறார்.
போவின் எழுத்துக் கலையின் பூர்ணத் தன்மை
உனக்குப் புரிகிற போது இலக்கியத்தின் அமைதியும்
அமைதியின்மையும் பலித்து விட்டது போல
ஒரு நினைப்பு ஏற்பட்டால் ஆச்சரியப் படுவதில்லை
– க.நா.சு கவிதைகள்”
கிண்டலான அங்கதமாகவும், கவிதை விமர்சனமாகவும் இருப்பதாக நாவலாசிரியை கவிதை ஆகிறது என்கிறார் பிரம்மராஜன்.. கவிதை விமர்சகனுக்குச் சொல்வதாக அமையும் வரிகள்:
நல்ல கவிதை எது கெட்ட கவிதை எது
என்று, நாவலில் சொல்வது போலக்
கவிதையில் சொல்வது அவ்வளவு சுலபம்
இல்லை.
தான் ஒரு எதிர்க் கவிதையாளன் என்பதை இத் தொகுதியின் முன்னுரையில் க.நா.சு தெரிவித்திருப்பதாக பிரம்மராஜன் குறிப்பிடுகிறார்.
ஆனால் கவிதை எழுதுவதற்கு உள்ளூர இருக்கிற உந்துதல்
அடிப்படையான மனுஷ்யத்வம் நிறைந்த உந்துதல்….
…அடைமொழிகளையும் படிமங்களையும் தேடி ஓடாததாக இருக்க வேண்டும். உணர்ச்சி என்கிற தூக்கக் கலப்பில்லாத ஒரு தாகத்துடன் அறிவுத் தாக்கமும் பெற்றிருந்தால்தான் கவிதை புதுக்கவிதையாகிறது என்கிறார் க.நா.சு
சித்து ராஜ் பொன் ராஜ் சமீபத்தில் வெளிவந்த மே 2022 உயிர்மை இதழில் நிக்கனோர் பார்ராவும் கடவுளும் என்ற கட்டுரை எழுதியிருக்கிறார்.
ஒருமுறை யாரோ ஒருவர் சிலி நாட்டுக் கவிஞர் நிக்கனோர் பார்ராவிடம், ‘நீங்கள் ஏன் உங்கள் எதிர்க்கவிதைகளில் மிக அதிகமாக நகைச்சுவையையும் ஆபாச வார்த்தைகளையும் பயன்படுத்துகிறீர்கள்?’என்று கேட்டாராம். அதற்குப் பரர்ராவின் பதில் : ‘எந்தவொரு கவிஞனும் மற்றவர்களோடு தொடர்பு கொள்வதில் நிபுணத்துவம் மிக்கவனாக இருக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். நகைச்சுவை வாசகனை மிக நேரடியாகப் பாதிக்கிறது. நீங்கள் உங்கள் நகைச்சுவை உணர்வை இழக்கும்போது (உங்களையோ அல்லது மற்றவரையோ கூட) துப்பாக்கியைக் கையில் எடுப்பீர்கள் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.’
அதீத வளர்ச்சிக்குப் பின்னர் சாமானிய மக்களிடையே ஏற்பட்டிருந்த அசாத்தியமான வேகத்தையும் இலக்கில்லாத அலைதலையும் அதே சமயத்தில் அவர்களது வாழ்க்கையின் அர்த்தமின்மையையும் சலிப்பையும் மிகத் தெளிவாக எடுத்துக் காட்டியது.
பார்ராவின் கவிதையின் ஒரு பகுதி
நான் இங்கு எப்படி வந்து சேர்ந்தேன்
எனது வலது கையில் நான் அணியும் தொப்பியைப் பிடித்துக்
கொண்டு
என்னை மிகப் பெரிய ஆனந்தத்திற்குள் தள்ளிப் பித்தாகச்
செய்திருந்த
ஒரு ஜோதிக்கும் பட்டாம்பூச்சிக்குப் பின்னால்
மகிழ்ச்சியாகவும், மன நிம்மதியோடும் ஓடிக்கொண்டிருந்த
நேரத்தில்
தொப்பென்று தடுக்கி விழுந்தேன்
இது உதாரணத்திற்குக் கொடுக்கப்பட்ட ஒரு கவிதையில் ஒரு சிறிய பகுதி.
எதிர்க்கவிதைப் பற்றியும் நிக்கநோர் பார்ராவைப் பற்றியும் ஒன்றும் தெரியாமல் எழுபதுகளில் வந்து கொண்டிருந்த சிறுபத்திரிகைகளில் எதிர் கவிதைகள் பதிவாகமலில்லை. இதற்கு முக்கிய காரணம் க.நா.சு.
தேவú காட்டை வா.மூர்த்தி எழுதிய கவிதை
தூரப் பார்வை
மழை பொழியும்
ஞாயிறு பிற்பகலில்
என்ன செய்வதென்றறியா
மனிதனுக்கு
என்று மழியா நிரந்தரத்தில்
ஏனோ ஆசை?
சங்கமம்
கழுவாத ஆஸ்பத்திரி வார்டுகள்
விழி ஒழுகாது காட்சி கண்ட முகங்கள்
முற்றத்தில் நிழலெறிந்த பெயர் தெரியா மரங்கள்
முடிவும் முதலும் என்றன கணங்கள்
இக் கவிதைகள் 1972 கசடதபற இதழில் வெளிவந்தன.
ப்ளேக் என்ற தலைப்பில் கோ.ராஜராம் கவிதையைப் பாருங்கள்.
நிறத்தில் கறுத்த எங்கள்
நின்று துடித்து
வெறியேறிச் சிதறி
வெளியேறி
வீதியில் தோறும் வெளிறிக்
கிறீச் சிட்டுக் குதறி,
அலறல்கள் வெறித்துத்
தனித்துத் திரிந்து
கரைகின்ற குழறல்கள்
வெறுமையிற் கதையச்
சரிந்து, மரிக்கும் –
மறுபடியும் மனிதரில்
ஜன்மித்து,
உருவில் பெருத்த இவர்கள்
நின்று, துடிக்க,
வெறியேறிச் சிதற,…
அந்தச் சமயத்தில் இதை எழுதிய எந்தக் கவிஞருக்கும் எதிர்க் கவிதைப் பற்றியோ நிக்கநோர் பார்ராவைப் பற்றியும் தெரியாது.
01.10.2022 (சனி)
- கவலைப்படாதே
- நாசா ஏவிய விண்வெளிக் கணை திமார்போஸ் விண்பாறை மேல் மோதி சுற்றுப் பாதை மாறியுள்ளது
- பகடையாட்டம்
- கவிதைப் புத்தகங்களை இலவசமாகக் கொடுத்து விடுங்கள்…
- பிரபஞ்ச மூலத் தோற்றம், விரிவை விஞ்ஞானிகள் விளக்கும் பெருவெடிப்புக் கோட்பாடு ஒரு புனைவு யூகிப்பே.
- படியில் பயணம் நொடியில் மரணம்
- சத்தியத்தின் நிறம்
- பொன்னியின் செல்வன் : படித்தது அல்ல , பார்த்தது ! தலைமுறை தாண்டியும் பேசப்படும் வரலாற்றுப் புனைவு !!
- ஆசு என்னும் ஆரவாரமற்ற கவி