லதா ராமகிருஷ்ணன்
//*செப்டெம்பர் 10 அன்று சென்னையில் நடந்தேறிய கவிஞர் ஆசு சுப்பிரமணி யனின் முழுக்கவிதைத் தொகுப்பு அறிமுக விழாவில் ஆற்றிய உரையிலிருந்து//
சக கவிஞரான திருமிகு ஆசுவுக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.. அவருடைய கவிதைகளின் முழுமையான தொகுப்பை இத்தனை நேர்த்தியாக வெளியிட்டிருக்கும் கல்விளக்கு பதிப்பகத்திற்கும் இந்த மிக அவசியமான முன்முயற்சியை மேற்கொண்ட கவிஞரும் கல்விளக்கு பதிப்பக உரிமையாளருமான தோழர் அமுல்ராஜுக்கும் என் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
சமீபத்தில் நடந்த ஒரு நூல் வெளியீட்டு விழா நிகழ்வில் நான், ‘வழக்கமாக சமகாலத் தமிழ்க்கவிஞர்களாக முன்வைக்கப்படும் பெயர்ப்பட்டியல்களில் ஆசு சுப்பிரமணியன், விஜேந்திரா முதலிஅ பல பெயர்கள் இடம்பெறுவதேயில்லை’ என்று குறிப்பிட்டேன்.
“எழுத்தாளர்கள், வாசிப்பாளர்கள், விருது அமைப்புகள் ஆகியவற்றுக்கிடையே இன்றைக்கு ஊடாடும் அரசியல் மிகவும் அபத்தமானது. மண்ணுக்குள் நுழைந்து ஒரு செடியின் வேர்பிடித்து ஆராய்வதைப்போல ஓர் எழுத்தாளனை, அவனது எழுத்தை இந்த அரசியல் ஆழத்தேடி ஆராய்ந்து புறக்கணிக்கிறது அல்லது ஒரு வார்த்தை பேசாமல் மௌனமாகக் கடந்துபோகி றது”, என்று பதிப்புரையில் நடப்புநிலவரம் ரத்தினச்சுருக்கமாகப் பேசப்பட்டிருப்பது குறிப்பிடத் தக்கது. இத்தகைய அரசியல் அல்லது அலட்சியத்தையெல்லாம் கடந்துதான் ஆசு போன்ற பல முழுநிறை கவிஞர்கள் கவிதையின்பால் கொண்ட தீராக் காதலினா லும், பேரரும் பற்றினாலும் உலகாயுத வாழ்வின் நெருக்கடிகளையெல்லாம் மீறி, அவற்றிற்கான வலிநிவாரணமாகவும் கொண்டு, கவிதை எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.
POETRY IS AN END IN ITSELF என்பார்கள். கவிதை என்பதை நாட்குறிப்பு – டயரி – அல்லது MEMOIRS என்று கூறலாமா? ஒருவகையில் அப்படிக் கூறமுடியும் என்றாலும் கவிதை நாட் குறிப்பிலிருந்து குறிப்பிடத்தக்க அளவு வேறுபட்டது. கவிதை ஒரு தனிநபரால் எழுதப்படுவ தென்றாலும் தனிமனித உணர்வுகளின் தாக்கத்தில் எழுதப்படுகிறதென்றாலும் அது ஒரே சமயத்தில் பலருக்கானதாகிவிடுகிறது. பொதுக்குரலாகவும் மாறிவிடுகிறது.
சாதாரணங்களில் அசாதாரணங்களைக் காண்பதுதான் கவிமனம். ஒருவகையில் சாதாரணம் – அசாதாரணம் எல்லாம் highly relative terms. நபருக்கு நபர், நேரத்திற்கு நேரம் மாறக்கூடி யவை. மழலைச் சிரிப்பு சாதாரணமா? அசாதாரணமா? ரயில் சாதாரணமா? அசாதாரணமா? இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இந்த அவதானிப்புகளுக்கான பல வரிகளை தோழர் ஆசுவின் கவிதைகளிலிருந்து எடுத்துக்காட்ட முடியும்.
வாழ்வைப்போல் கவிதையும் ஆயிரங்காலத்துப் பயிர்” என்று கவிஞர் ஆசு தன்னுடைய இந்த முழுத்தொகுப்பின் என்னுரையில் குறிப்பிடுகிறார். ‘கவிதை என்பது என் நம்பிக்கையின் கைவிளக்கு’ என்று அவர் தனது ‘என்னுரை’ பகுதிக்குத் தந்திருக்கும் தலைப்பே ஒற்றைவரிக் கவிதை. வாழ்வைப்போல் கவிதையும் ஆயிரங்காலத்துப் பயிர்’ என்று அவர் கூறும்போது நிஜ வாழ்வின் 60, 70, 80, 90 வயதின் இருப்பும், அதைத் தாண்டிய நம் வாழ்வின் முன், பின் தொடர்ச்சியும், கவியின் அநாதிகாலமும், அமரத்துவமும் – என பலப்பல நமக்கு உணர்த்தப்படுகிறது.
”என் கவிதையின் நிலை என்ன? நோக்கம் என்ன? என்பதெல்லாம் இந்த எட்டுத்து தொகுப்பு களின் கவிதைகள் முழுத்தொகுப்பாகத் தொகுக்கும்போது என் வாழ்வு இவ்வாறாகத்தான் இருந்தது என்றெல்லாம் சொன்னாலும் இது எல்லோருக்குமான வாழ்வு என்று என் கவிதைகள் சாட்சியமானாலும், இக்கவிதைகள் புறக்கணிக்கப்பட்டவர்களின் குரலாக உறுதியுடன் சொல்ல முடியும்”,
_ என்று அறிவிக்கும் கவிஞரின் கூற்றை மெய்ப்பிக்கும் கவிதைகள் பல இந்த முழுத்தொகுப்பில் உள்ளன. உதாரணம்: மண்புழுவின் வலி (பக்கம் 682)
“நான் எழுதுவது வாழ்வைப் பார்த்து அல்ல. வாழ்வின் அனுபவங்கள் கொதித்து எழுகையில் துளித்துளியாகத் தெறிக்கும் அந்த கணநேரத் துடிப்பு. இந்தத் துடிப்புகள் காலத்தின் வெளியைத் தமதாக்கிக்கொண்டு நகர்கின்றன. என் கவிதைகளின் அம்சம் அல்லது சாரம் மானுடத்தின் மீதான நம்பிக்கை”,
என்கிறார் கவிஞர்.
‘ஒரு வாளி நீர்’ என்ற தலைப்பிட்ட கவிதையில் கவிமனக் கனிவு கனவுமயமாய் அத்தனை அழகாய் வெளிப்படுகிறது (பக்கம் 683)
‘வீட்டுப் பூந்தொட்டிச் செடியில்
பூக்களின் காம்புகளில்
ரொட்டித்துண்டுகள்
காய்த்திருக்கின்றன’
உள்ளடக்கம்போல் நடையும், Style ம் கவிதைக்கு முக்கியம் என்பதை உணர்ந்தவராய் தோழர் ஆசு கவிதைகளைப் படைத்திருக்கிறார்.
கடலாய் விரிந்த வாழ்க்கை
உள்ளங்கை குவித்து அள்ளினேன்
விரல் இடுக்கில் வழிந்த வானவில்
கண்ணீராய் சுருங்க’
_ என்று விரிகிறது ஒரு கவிதை.
‘ அம்மா
என் கவிதைக்கேனும்
வாய்க்கக்கூடுமோ
உனக்கான ஒரு புன்னகை
என்று முடியும் அம்மாவுக்கான ஒரு புன்னகை’ என்ற கவிதை எத்தனை கவித்துவமானது! அன்பு மயமானது!\
இரண்டு பறவைகள் என்று தலைப்பிடப்பட்ட கவிதை பின்வருமாறு: (பக்கம் 529)
இரண்டு பறவைகள்
எனது சொற்களில்
இரண்டு பறவைகள் பறந்தன
காற்றைப்போல் ஒன்றிருந்தது
நீரைப்போல் ஒன்றிருந்தது.
காற்றைப்போல் இருந்த பறவை
நீரைப் பருகியது
நீரைப்போலிருந்த பறவை
காற்றை சுவாசித்தது
இடையில் வாழ்க்கைப் பறவை
என்னிடம் காதல் கொண்டது
பறத்தல் – கனவு; நீர் – நிலத்தில் வேரூன்றியும் வேரூன்றாமலுமாய் நிற்கும் வாழ்வு என்று கொள்ளலாமா? காற்றும் நீரும் உயிர்மூச்சுக்கு எத்தனை அவசியம்! கவிதைக்கும்தானே!
சமன்பாடுகள் என்ற தலைப்பிடப்பட்ட கவிதை பின்வருமாறு (பக்கம் 95)
சமன்பாடுகள்
அவர் கைகளில் சாமரமுண்டு
என் கைகளில்
பிச்சைப் பாத்திரமுண்டு
அவர் கைகளில்
இனிப்பும்
என் கைகளில்
விலங்குகளும்
அவர் கைகளில்
மண்டையோடும்
என் கைகளில் தவழும்
குழந்தையும்
அதன் மழலைப் புன்னகையும்
எனினும்
கைகுலுக்கிக்கொள்கொறோம்
அவர் உள்ளங்கையின்
‘இரத்தக்கறை
காயாத மணத்துடனே’
எத்தனையோ அர்த்த அடுக்குகளை இழைபிரிக்க முடியும் கவிதை இது. மண்டையோடுடைய கைகளைக் கொண்டிருப்பவரின் அதே கைகளில் இனிப்பும். இரண்டும் இருவேறு தருணங்கள் எனக்கொள்ளலாமா? அல்லது இனிப்பில் விஷம் கலக்கப்பட்டிருப்பதாகக் கொள்ளலாமா? சமயங்களில் ‘தீயவர்’ என்பது தெரிந்தே சினேகம் தொடர்கிறதா? தொடரவேண்டிய நிலையா கவிதையில் இடம்பெறும் இருவரும் இருவரா? ஒருவரா? அல்லது பலரா?
கைத்தட்டல்களை எதிர்பார்த்து எழுதப்பட்டவையல்ல இவருடைய கவிதைகள். மனதின் ஆழத்திலிருந்து எழுந்தவை என்பதற்கு எத்தனையோ எடுத்துக்காட்டுகளைக் காணமுடியும்.
தன் கவிதைப்போக்கை தோழர் ஆசு வெவ்வேறு வடிவங்களில் கட்டமைத்துப் பார்க்கிறார். 1997ம் ஆண்டில் வெளியான அவருடைய முதல் கவிதைத்தொகுப்பான ஆறாவது பூதம் தொகுப்பில் புலரியின் குரல் என்ற கவிதையில் கவிஞர் பிரம்மராஜனின் பாணி புலப்படுகிறது. ஆனால் அது ‘நகலெடுப்பாக’ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது:
கடிகாரத்தின் முகமொத்த
என் முகம் வரைந்தேன்
பதற்றங்களை
வாழ்வின் எண்களாய் நகர்த்தி
என்னைத் தோற்கடித்தது அது
எனினும்
அசையும் நினைவு ஓவியமாய்
உயிர்ப்புறு கிறது என் முகம்’
எந்தவொரு கவிஞரின் கவிதைவெளியும் சில அடிச்சரடுகளை, அடிநாதங்களை உணரமுடியும். தோழர் ஆசுவின் கவிதைகளில் காலம் அத்தகைய அடிச்சரடுகளில் ஒன்றாகப் பிடிபடுகிறது. காலம் இவர் கவிதைகளில் வெவ்வேறு குரல்களாய், கதாபாத்திரங்களாய், தாக்கங்களாய், பாதிப்புகளாய் இடம்பெறுகிறது:
‘கண்ணாடியுள் காலம்
அதன் சிதறிய சில்லுகளில்
கீற்றின்
ஒளி பாய்ச்சும்
என் நரம்பின் விறைப்பு அறுந்து ‘
என்ற விதமாய் பல சொற்றொடர்களை இந்தத் தொகுப்பில் காண முடிகிறது.
இந்த முழுத்தொகுப்பின் முத்தாய்ப்பாய் இடம்பெற்றிருக்கும் கவிதை – கரையொன்றும் எதிரியில்லை’ – வாழ்வு குறித்த ஒரு முழுமையான சித்திரத்தை முன்வைக்கிறது என்றால் மிகையில்லை
இதுவரை இவருடைய எட்டு கவிதை நூல்கள், நான்கு சிறுகதை நூல்கள், 209 – கவிஞர்களின் கவிதைகளின் கவிச்சித்திரம் இரண்டு நூல்கள், உரைச் சித்திர நூல் ஒன்று என 15-நூல்கள் வெளியாகியுள்ளன. இவை இன்னும் கூட வேண்டும் அதற்கான சூழல், பெருங்கனவு வெளியாக ஆக வேண்டும் என்பதே என் அவா என்று ஆர்வமும் நம்பிக்கையுமாகக் கூறும் கவிஞர் ஆசுவின் இயற்பெயர் ஆ .சுப்பிரமணியன். 5-10-1961இல் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டத்தைச் சேர்ந்த முன்னூர் என்ற இடத்தில் பிறந்தவர் தற்சமயம் சென்னையிலுள்ள அம்பத்தூர் ஒரகடம் பகுதியில் வசித்துவருகிறார். கடைசல் இயந்திரப் பணியாளராகப் பணியாற்றிவரும் இவர் வேலை, குடும்பம் ஆகிய பொறுப்புகளை செவ்வனே நிறைவேற்ற அயராது பாடுபட்டுவருகிறார். அவற்றி னூடாய் முப்பது வருடங்களுக்கும் மேலாக அவருடைய காத்திரமான இலக்கியப் பங்களிப்பும் தொடர்கிறது. இவருக்கு
கவிஞர் ஆசு – விவரக்குறிப்புகள்
பிறந்த ஊர்: முன்னூர்
திண்டிவனம் வட்டம்,
விழுப்புரம் மாவட்டம்.
தற்போது வசிக்கும் ஊர் :
சென்னை, அம்பத்தூர், ஒரகடம்.
குடும்பம் :
சு.மஞ்சுளா என்கிற மனைவியும், சு.சித்தார்த்தன், சு.தமிழ்ச்செல்வன் என்கிற மகன்கள்.
சு.பிரியா மகள், மூத்த மகனுக்கு திருமணமாகி, ஹேமலதா என்கிற மருமகளும் பேரன் குகனும் உள்ளனர்.
கல்வி : S. S. L.C,….iTi…
தொழில் : கடைசல் இயந்திரப் பணியாளர்.
எழுதிய நூல்கள்
………………………..
கவிதைகள்
- ஆறாவது பூதம்
- என்றொரு மெளனம்
- ஈரவாடை
- குரல்களைப் பொறுக்கிச் செல்கிறவன்
- நேசித்தவனின் வாழ்வுரை
- தீண்டும் காதலின் சொற்கள்
- நிலம் பருகும் மழை
சிறுகதை நூல்கள்
……………………………..
- அம்மாக்கள் வாழ்ந்த தெரு
- நாட் குறிப்பில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்
- கடந்து போகிறவர்களின் திசைகள்
- செல்லி
கவிச்சித்திர நூல்கள்
………………………………..
- திறந்திருக்கும் சன்னலுக்குள் ஓடிக்கொண்டிருக்கும் நதி.
(102 – கவிஞர்களின் கவிதைகளின் உரைச் சித்திரம்)
- ஆகாயத்தை அளந்த பறவைகளின் தடங்கள்
(107-கவிஞர்களின் கவிதைகளின் உரைச் சித்திரம்)
வெளிவர இருக்கும் நூல்
………. …………………. .. ……..
- மயிலிறகு வாசிக்கும் புத்தகம்
(உரைச்சித்திரம்)
கைப்பிரதியாக உள்ள நூல்கள்
ஒரு சிறுகதை தொகுப்பு ஒரு கவிதை நூல்.
பெற்ற விருதுகள்
- இலக்கிய வீதி இனியவனின் அன்னம் விருது
- கவிக்கோ துரை.வசந்தராசன் அவர்களின் பண்ணை தமிழ்ச்சங்க விருது.
- கவிஞர் செஞ்சி தமிழினியனின் விதைநெல் விருது .
- கவலைப்படாதே
- நாசா ஏவிய விண்வெளிக் கணை திமார்போஸ் விண்பாறை மேல் மோதி சுற்றுப் பாதை மாறியுள்ளது
- பகடையாட்டம்
- கவிதைப் புத்தகங்களை இலவசமாகக் கொடுத்து விடுங்கள்…
- பிரபஞ்ச மூலத் தோற்றம், விரிவை விஞ்ஞானிகள் விளக்கும் பெருவெடிப்புக் கோட்பாடு ஒரு புனைவு யூகிப்பே.
- படியில் பயணம் நொடியில் மரணம்
- சத்தியத்தின் நிறம்
- பொன்னியின் செல்வன் : படித்தது அல்ல , பார்த்தது ! தலைமுறை தாண்டியும் பேசப்படும் வரலாற்றுப் புனைவு !!
- ஆசு என்னும் ஆரவாரமற்ற கவி