வைக்கம் முஹம்மது பஷீரின் ஐசுக் குட்டி என்ற புத்தகம்..

வைக்கம் முஹம்மது பஷீரின் ஐசுக் குட்டி என்ற புத்தகம்..
This entry is part 12 of 17 in the series 23 அக்டோபர் 2022

 

அழகியசிங்கர் 

 

          சமீபத்தில் வைக்கம் முஹம்மது பஷீரின் புத்தகமான ‘ஐசுக் குட்டி’ என் கண்ணில் பட்டது.  என் கைவசம் உள்ள எல்லா பஷீர் புத்தகங்களையும் தேடினேன்.

          உடனே நான் தொடர்ந்து வெற்றிகரமாக நடத்தும் ‘கதைஞர்களின் கூட்டத்தில்’ பஷீர் கதைகளைச் சேர்த்து விட்டேன்.  நான் நடத்துவது 41வது கூட்டம்.

          மூன்று முக்கியமான பஷீரின் கதைகளை எடுத்துப் பேசினோம்.

          பஷீரின் கதைகளில் உள்ள முக்கியமான தன்மை என்னவென்றால், அவர் கதைகளில் அவரையே முதன்மைப் படுத்தி எழுதுவார்.

          ‘பாத்துமாவின் ஆடு’ என்ற ஒரு குறுநாவலில் ஆடு அவருடைய இரண்டு புத்தகங்களைத் தின்று விட்டது என்று எழுதியிருக்கிறார்.  ஆட்டின் இந்தச் செயல் படிக்க வேடிக்கையாக இருந்தது.

          நான் கிட்டத்தட்ட பஷீரின் பத்து புத்தகங்களுக்குக் குறையாமல் வைத்திருக்கிறேன்.  

          சமீபத்தில் அபிலாஷ் என்ற எழுத்தாளர் முகநூலில் ஒன்றைக் குறிப்பிட்டார்.  ‘புத்தகங்களைப் பற்றி எழுதுகிற விமர்சனம் எல்லாம் ஒரு படைப்பாளிக்கு எந்தப் பெயரும் கொடுக்காது.  அதேசமயத்தில் ஒரு எழுத்தாளர் கதைகள் எழுதினால் அவருக்குப் பேர் எடுக்க ஒரு வாய்ப்பு கிடைக்கும்.’ 

          அவர் சொல்கிற உதாரணத்தில் அசோகமித்திரனின் பெயரைக் குறிப்பிட்டுள்ளார்.  அசோகமித்திரன் அவ்வளவாய் கட்டுரைகள் எழுதவில்லை ஆனால் அவருக்குப் பேர் கிடைத்தது கதைகள் எழுதியதால்தான் என்கிறார்.  ஒரு விதத்தில் அவர் சொல்வது நியாயமாகப் படுகிறது. 

          ஆனால் அசோகமித்திரன் சிறுகதைகள், நாவல்களுடனும் கட்டுரைகளும் ஏராளமாய் எழுதி உள்ளார்.  இதைக் கட்டுரையாளர் குறிப்பிடவில்லை என்று தோன்றுகிறது.

          முழுக்க முழுக்க எழுத்தாளர்கள் பற்றியும், புத்தகங்கள் பற்றியும் எழுதியவர் வெங்கட் சாமிநாதன்.  இன்று யாரும் அவரைக் குறிப்பிடுவதில்லை.  திட்டி விமர்சனம் செய்வதில் புகழ்பெற்றவர்கள் இருவர்.  ஒருவார் வெங்கட் சாமிநாதன்.  இன்னொருவர் பிரமிள்.  ஆனால் விமர்சனத்துடன் மட்டுமல்லாமல் பிரமிள் கவிதைகள், கதைகள் எழுதி பிரமிள் தப்பி விட்டார்.  இப்போதும் பிரமிள் கவிதைகளுக்காக எல்லோரும் குறிப்பிடுவார்கள்.  

          ஆனால் அருமையான உரைநடையில் எழுதிய வெங்கட் சாமிநாதனை யாரும் கண்டு கொண்டிருக்க மாட்டார்கள். அவரும் கதைகள் எழுதியிருந்தாலும் ஒரு சமயம் அவர் பெயரை ஞாபகம் வைத்திருப்பார்கள்.  பிரமிளுக்கு முழு தொகுப்பு வந்த மாதிரி  வெங்கட் சாமிநாதனுக்கு வரவில்லை.  எல்லோரும் மறந்து விட்டார்கள்.

          என் நண்பர் டாக்டர் ஜெ.பாஸ்கரன் சமீபத்தில் ஒரு புத்தகம் எழுதி உள்ளார் . .  அந்தப் புத்தகத்தின் பெயர் ‘இலக்கிய முத்துக்கள் 20.’  இதில் முழுக்க முழுக்க எழுத்தாளர்கள்  பற்றிய வவிபரங்கள்தான் இந்தப்  புத்தகம்தான் இது.  அதேபோல் இன்னொரு புத்தகம். தி.ஜானகி ராமனின் 50 கதைகளை எடுத்து வைத்துக்கொண்டு ஒரு புத்தகமும் எழுதியிருக்கிறார்.

          ஒரு விதத்தில் இதெல்லாம் யாரும் படிக்காமலிருப்பதற்கு வாய்ப்பு உண்டு.  

          ராமையாவின் சிறுகதை பாணி என்ற புத்தகத்தை சி.சு செல்லப்பா கொண்டு வந்திருக்கிறார்.  அந்தப் புத்தகம் உருவாகும் சமயத்தில் சி சு செல்லப்பாவைப் பார்த்து,, ‘இந்தப் புத்தகத்தை ஏன் கொண்டு வருகிறீர்கள்?’ என்று கேட்டேன். 

          நான் கேட்டதற்குக்  காரணமும் இருக்கிறது. பி.எஸ் ராமையாவின் கதைகள் எதுவும் முழுதாக அச்சில் இல்லை.  கதைகளைப் படிக்காமல் வெறும் விமர்சனம் மட்டும் ஒரு வாசகன் படிப்பானா? செல்லப்பா கொண்டு வந்த ‘ராமையாவின் சிறுகதை பாணி’ என்ற புத்தகம் பெரிதாக விற்கவில்லை.  ராமையா 304 கதைகள் எழுதியிருப்பதாக ஒரு லிஸ்ட்  கொடுத்திருக்கிறார்.  இது அபார உழைப்பாக எனக்குப் பட்டது.  

          ஆனால் சி.சு செல்லப்பாவை அவர் எழுதிய கதைகளுக்காகவும் நாவல்களுக்காகவும் தான் வாசகர்கள் அறிவார்கள். 

          சமீபத்தில் என் நண்பர் ‘கல்கியின் 3 மாத சிறைத் தண்டனை’ என்ற புத்தகத்தை என்னிடமிருந்து வாங்கிக் கொண்டு போனார்.  அந்தப் புத்தகத்தை அவரிடம் கொடுக்க மனதில்லை.  காரணம் நான் புத்தகத்தைப் படிக்காமல் வைத்திருந்தேன். அவருக்குக் கொடுத்த பிறகுதான் தெரிந்தது.  அந்தப் புத்தகம் அச்சிலும் இல்லை என்று .

          ‘அந்தப் புத்தகத்தைப் பற்றி எழுதுகிறேன்’ என்று கூறியதால் வாசிக்கக் கொடுத்தேன்.  அவர் எழுதியும் விட்டார்.  புத்தகத்தின் சுருக்கம்தான் அவர் எழுதியது. ஒரு சமயம் நண்பரின் புத்தகம்  புத்தக  வடிவில் வந்து, அதில் அந்தப் புத்தகத்தைப் பற்றியும் கட்டுரையும் வந்தால் எத்தனைப் பேர்கள் வாசிப்பார்கள்.

          அபிலாஷ் சொல்வதுபோல் புத்தகம் பற்றி எழுதுவது, கதைகள் பற்றி எழுதுவது  உண்மையில் எழுதுபவருக்கு எந்த நற்பெயரையும் யாரும் கொடுக்க மாட்டார்கள்.

          இன்று சி சு செல்லப்பாவின் ராமையாவின் சிறுகதை பாணியை எல்லோரும் பின்பற்றி எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.  அதில் நானும் ஒருவன்.  புத்தகத்தைப் பற்றி எழுதுகிறேன். கதையைப் பற்றி எழுதுகிறேன்.  கவிதையைப் பற்றி எழுதுகிறேன்.  

          நான் எழுதுவது எனக்கு ஒரு விதத்தில் திருப்தியைத் தருகிறது. கதைகளைப் பற்றிய குறிப்புகள் ஒரு விதத்தில் எனக்குத் திரும்பவும் என் ஞாபகத்திற்கு வருகிறது.  உண்மையில் மிகக் குறைவான பிரதிகளை அச்சடித்து எனக்கு மட்டும் வைத்துக்கொள்கிறேன்.  “பெரிய வாசக வரவேற்பு வரும் என்று  எதிர்பார்ப்பதில்லை.

          இப்போது பஷீர் கதைக்கு வரலாம்.

          தற்செயலாகக் கிடைத்த ‘ஐசுக் குட்டி’ என்ற புத்தகத்தில் 8 கதைகள் உள்ளன.  மொழி பெயர்த்தவர் சுரா.  பஷீர் தமிழில் எழுதிய கதைகள் மாதிரி மொழி பெயர்த்திருக்கிறார்.

          பேசுவதற்காக மூன்று கதைகள் தேர்ந்தெடுத்து ஒவ்வொருவரும் 5 நிமிடம் பேசும்படி கதைகளை வழங்கினேன்.

 

          சி சு செல்லப்பா பாணியில் ஒரு கதையை விமர்சிக்கிறேன். 

 

‘ஒரு சிறைக் கைதியின் புகைப்படம்’ என்ற கதையை எடுத்துக் கொள்வோம். 

 

          மரியாம்மாவின் காதல் இந்தக் கதை.  ஒரு வீட்டிற்குப் போகிறாள்.  அங்கு மூன்று புகைப் படங்கள் சுவரில் மாட்டப் பட்டிருக்கின்றன.  நடுவில் வீற்றிருப்பது இயேசு கிறிஸ்துவின் பெரிய படம்.  அதற்கு இரு பக்கங்களிலும் இரண்டு சாதாரண புகைப்படங்கள்.  ஒன்று வாழ்க்கையின் கஷ்டங்களை எல்லாம் அனுபவித்துத் தளர்ச்சியடைந்த ஒரு நடுத்தர வயதைத் தாண்டிய மனிதனின் படம்.  இன்னொன்று அழகான சுருண்ட கேசத்துடனும் புன்சிரிப்பு தவழ்ந்து கொண்டிருக்கும் முகத்துடனும் பெரிய கண்களுடனும் இருக்கும் இளைஞனின் படம்.

          மரியாம்மாவிற்கு அந்தப் படத்தில் உள்ள இளைஞனைப் பார்க்கும்போது முதலில் ஆர்வமாக இருந்தது.  பிறகு காதலாக மாறுகிறது.  அந்த இளைஞன் சிறையில் கடுங்காவல் அனுபவத்துக் கொண்டிருக்கும் ஜோசப். 

          இப்படிப் பார்க்காமலே காதல். எப்படி? அதுதான் கதை. முதலில் மரியாம்மா அவன் சிறைக்குக் கடிதங்கள் எழுதுகிறான்.  அவன் சிறையிலிருந்து அவளுக்குக் கடிதங்கள் எழுதுகிறான்.  சிறையில் அவன் படும் துன்பங்களைப் பற்றி எழுதுகிறான்.

          புகைப்படத்தில் இருப்பதுபோல் தான் இப்போது இல்லை என்று எழுதுகிறான்.

          அவன் கடிதத்தில், என் தாயிடமும் தந்தையிடமும் வீட்டில் இருக்கிற என் புகைப்படத்தை எடுத்துவிடச் சொல்வீர்களா? என் தலையில் இருந்த தலைமுடி பெரும்பாலும் உதிர்ந்துவிட்டது.  மீதி இருக்கும் கொஞ்சம் முடிகள் கூட நரைத்து விட்டன.  எனக்கு இரண்டு கண்கள் இருந்தன.  இப்போது வலது கண் மட்டுமே உள்ளது என்று எழுதுகிறான்.

          அவனைப் பார்க்காமல் காதல் வசப்படும் மாரியாவிற்கு அதிர்ச்சி.  அவள் கடைசியாக ஒரு கடிதம்  எழுதுகிறாள்.  நான் உங்களுக்காகக் காத்திருப்பேன்.

          காணாமல் காதல் ஏற்படும் கதை. அதை பஷீர் சொல்லும் விதம் சிறப்பாக உள்ளது.

 

16.10.2022

      

 

Series Navigationஅவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வருடாந்த தமிழ் எழுத்தாளர் விழா மெய்நிகரில்பத்திரிகையாளர் எஸ். எம். கார்மேகம் வாழ்வும் பணிகளும் !

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *