தமிழ்வாணன் சிங்கப்பூர் வந்தபிறகுதான் அவனுக்கு ஆண்குழந்தை பிறந்தது. அருண் என்று பெயர் வைத்தான். ஓராண்டாகிவிட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தின் ஒரு கடைக்கோடிக் கிராமம் அவனின் சொந்த ஊர். ஒவ்வொரு ஞாயிறு காலையும் அம்மா செல்லத்தாயுடன் முகம்காட்டிப் பேசுவான். அருண் மடியில் இருப்பான். அவன் முகமும் செல்லத்தாயின் கைப்பேசியில் சிரிக்கும். மகன் முகத்தையும் பேரன் முகத்தையும் தொலைபேசித் திரையில் வருடி வருடி, நகக் கண்ணில் ரத்தம் கசிகிறது செல்லத்தாய்க்கு. கண்ணாடியைப் பார்த்து கொத்திக்கொத்தி ரத்தக்கோடு போடும் சிட்டுக்குருவி மாதிரி. எத்தனை நேரம் முகம் பார்த்தாலும் பாசத்தீண்டல் ஆகுமா? மகனையும் பேரனையும் கன்னம் சேர்த்து அழவேண்டும்போல் இருந்தது செல்லத்தாய்க்கு. அருணின் முதல் பிறந்தநாள் முடிந்ததும் ஊருக்குப் போகலாம் என்ற தமிழின் ஆசையில் ஆணி அடித்தது கொரோனா. அடுத்த இரண்டு ஆண்டுகள் வெறுமையிலேயே ஓடிவிட்டது. இப்போது எல்லாம் ஒரு வழியாக முடிந்துவிட்டது. மீண்டும் பயண ஏற்பாடுகளைச் செய்தான் தமிழ். அருணுக்கு இப்போது 3 வயது. மனைவி சித்ராவின் உலகம் தமிழ்வாணன் மட்டுமே.
தான் ஊர் வரும் சேதியை செல்லத்தாய்க்கு தெரியப்படுத்திவிட்டான். அம்மா செல்லத்தாய் நிமிடம் நிமிடமாக நாட்களைத் தள்ளிக்கொண்டிருந்தார்.
ஒரு காலத்தில் தமிழின் அப்பா ராமசாமித்தேவர்தான் அந்த கிராமத்தையே ஆண்டுகொண்டிருந்தார். எல்லாரும் அவருடைய நிலங்களைத்தான் உழுது அளந்துகொண்டிருந்தார்கள். இரண்டு முறை சுயேச்சையாகவே சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, ஒரு பெரிய அரசியல் கட்சிப் பிரமுகரையே தோற்கடித்தவர். தமிழ்வாணனுக்கு அம்பலவாணன் என்று ஓர் அண்ணன். அண்ணனுக்கும் முன் மூன்று அக்காக்கள். மூன்று மகள்களுக்கும் புதுக்கோட்டை மாவட்டத்தையே திரட்டி, ஏகப்பட்ட சீர்செனத்திகள் கொடுத்து திருமணம் முடித்தார் தேவர். இனம்புரியாத ஒரு வயிற்றுவலியால் துடித்தார். தஞ்சாவூர், திருச்சி, சென்னை என்று மாறிமாறி வைத்தியம். முடிவில் அது ஒரு முற்றிப்போன புற்று என்று தெரியவந்தது. அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் கடைசிநாட்கள் கழிந்தன. சென்னையில் பொறியியல் படிப்பை முடிக்கும் தருவாயில் இருந்தான் தமிழ். அதிகப்படியான நேரத்தை அப்பாவோடு கழித்தான். மலம் கழுவினான். அப்பாவின் தலையை தன் மடிமீது வைத்துக்கொண்டு அப்பாவோடு கரைந்தான். தமிழ் இருந்தால் செல்லத்தாயை ஒரு வேலையும் செய்யவிடமாட்டான். அவனுடைய அண்ணன் அம்பலவாணன் தரையைக் கூட்டுவதுபோல் எட்டுமுழ வேட்டியைக் கட்டிக்கொண்டு, முழுக்கை மடிப்பில் சுருட்டி வைத்த காசை எடுத்து நண்பர்களுக்கெல்லாம் செலவு செய்தான். நண்பர்களோடு ஊர் சுற்றினான். அத்தனை பேருக்கும் செலவு செய்பவன் அம்பலம் மட்டுமே.
ராமசாமித்தேவர் இறந்து 20 ஆண்டுகள் ஓடிவிட்டன. குடும்ப நிலைமை தரையில் கிடக்கும் மீனாய்த் துடித்தது. மொத்த நிலங்களும் வைத்தியத்திற்காகவே விற்றுமுடிக்கப்பட்டுவிட்டது. வரவுகள் இல்லை. செலவுகள் மட்டுமே. எத்தனை நாட்களுக்குத் தாங்கும். மழை பொய்த்துவிட்டது. ஒரு காலத்தில் அரண்மனையாய் இருந்தது ராமாமித்தேவரின் வீடு. முட்டைகலந்த சுண்ணாம்புப் பூச்சு, சுட்ட செங்கல், நாட்டோடு என்று கட்டிமுடிக்கப்பட்ட வீடு இப்போது சிதைந்து கிடக்கிறது. சுற்றுச்சுவரில் காரை பெயர்ந்து அரசமரம் வேர் விட்டிருக்கிறது. முன்பக்கம் இருந்த பெரிய இரும்புக் கதவு துருப்பிடித்து கழன்று விழுந்துவிட்டது. அது சுவரிலேயே சாத்தியிருக்கிறது. பின்பக்கம் ஒரு காரே உள்ளே போகும் அளவுக்கு சுவர் உடைந்து விழுந்திருந்தது. முன்வாசல் வழியாகத்தான் வீட்டுக்குள் வரவேண்டுமென்ற அவசியமில்லை. தென்னைகள் மொட்டையாக நிற்கின்றன. எங்கு பார்த்தாலும் முழங்கால் உயரத்துக்கு புல் மண்டிக்கிடக்கிறது. நடப்பதற்கான ஓர் ஒத்தையடிப்பாதை தவிர.
அந்த வீடு இப்போது அம்பலவாணன் பொறுப்பில். அவனோடு அவன் மனைவி சந்திரா, 5 வயது மகள் தேன்மொழி. அவர்கள் இருக்கும் அந்த ஓர் அறை தவிர கூடமும் திண்ணையும்தான் புழங்கும் பகுதி. மற்ற அறைகளில் பழைய சாமான்கள் விவசாயச்சாமான்கள் அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றன. ராமசாமித்தேவரையே நம்பி வாழ்ந்த பல குடும்பங்கள் இப்போதும் செல்லத்தாயைப் பார்க்க வருவதுண்டு.
அடுப்படியில் எல்லாரும் சாப்பிட்டுவிட்டுப் போனபின்தான் செல்லத்தாய் அடுப்படிக்குப் போவார். சோறோ இட்லியோ மூடாமல் இருந்தால் அது செல்லத்தாய்க்காக அவர்கள் விட்டுவைத்ததென்று அர்த்தம். அம்பலம் அம்மாவோடு பேசுவதே இல்லை. அப்படியென்ன அவர்களுக்குள் வருத்தம்?
வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த ஒரு மனைக்கட்டு செல்லத்தாய் பெயரில் இருந்தது. அதை செல்லத்தாய் தமிழ்வாணனுக்கு எழுதிக் கொடுத்துவிட்டார். அதில் தமிழ் தன் சொந்தக்காசில் ஒரு வீடு கட்டிவிட்டான். அதிலிருந்து வரும் 5000 ரூபாய் வாடகையை செல்லத்தாய் வாங்கிக் கொள்கிறார். அது தவிர மிகப்பெரிய தொகைகளை அவ்வப்போது அம்பலத்துக்குத் தெரியாமல் தமிழ் அம்மாவுக்கு அனுப்பிக் கொண்டிருந்தான். இதுதான் அம்பலத்தின் கோபத்திற்குக் காரணம். எல்லாக்காசையும் தன்னிடம் ஒப்படைத்துவிட்டு தேவையானதை வாங்கிக் கொள்ளுங்கள் என்று அப்பத்தைப் பங்குவைத்த குரங்காக யோசனை சொன்ன அம்பலத்தின் பேச்சு எடுபடவில்லை. செல்லத்தாய் நிராகரித்தார். தன்னைத் தேடி பல ஜனங்கள் இன்னமும் வருகிறார்கள். அவருக்கு அந்தக் காசு தேவை. ராமசாமித்தேவரையே தூக்கிக் கொடுத்த செல்லத்தாய் இதையும் இழந்து மரியாதை தொலைத்து வாழ விரும்பவில்லை.
தமிழ் ஊருக்கு வரும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இன்னும் நான்கே நாட்கள்தான். அம்பலம் எப்போதுமே இரவு 10 மணிக்கு மேல்தான் வீட்டுக்கு வருவான். அதற்குள் சந்திராவும், தேன்மொழியும் அறைக்குள் அடைந்துவிடுவார்கள். அன்றும் அப்படித்தான் வந்தான்.
‘அம்பலம்’ என்று செல்லத்தாய் அழைத்தார்
‘என்ன?’
‘என்னம்மா. ஏதும் சேதியா’ என்று கேட்பான் என்று செல்லத்தாய் எதிர்பார்க்கவில்லை.
‘கொஞ்சம் பேசணும்பா. இப்புடி உக்காரு.’
‘காதுல விழுகுது. சும்மா சொல்லுங்க. உக்காந்து கேட்டாலும் அந்தச் சேதிதான் . நின்னுக்கிட்டுக் கேட்டாலும் அதே சேதிதான்’
அந்த வார்த்தைகளில் சாராய நெடி. ஆம். குடித்திருக்கிறான்.
‘தமிழ் சிங்கப்பூர்லேருந்து வர்றாம்பா. அவன் எங்கு தங்குவான். அவனெ கூடத்துலயோ, திண்ணையிலயோ இருக்கச்சொல்ல முடியாதுப்பா. சந்திராக்கிட்ட பேசி ஒரு வாரம் அவுங்க அம்மா வீட்ல இருக்கச்சொல்லு. ஒன்னோட அறையில அவன் தங்கிக்குவான். ஒரு வாரம்தானே.’
சந்திராவின் எலிக்காதுக்கு செல்லத்தாயின் வார்த்தைகள் அவளுக்கே உரித்தான அர்த்தத்தில் விழுந்தது.
‘அவரு வர்றதுக்கு, நா ஏன் எங்க அம்மாவீட்டுக்குப் போகணும். ஒரு வாரந்தான் போகச்சொல்றாங்களா, இல்ல, மொத்தமா போகச் சொல்றாங்களா. கேட்டுச் சொல்லுங்க.’
கேட்ட மாத்திரத்தில் செல்லத்தாயில் வெற்றிலை உரல் சாய்ந்து தரையில் உருண்டது. அதை நிமிர்த்தமுடியாமல் செல்லத்தாயின் கைகள் நடுங்கின.
‘நீங்களே கேட்டுட்டீங்கள்ல’
என்று அவன் சொன்னபோது அந்த வார்த்தைகளோடு சாராய வாடையும் சேர்ந்து செல்லத்தாய்க்கு குமட்டிக் கொண்டு வந்தது.
அடுத்தநாள் கார்மேகம் என்பவர் செல்லத்தாயைப் பார்க்க வந்தார். அவர் ராமசாமித் தேவரிடம் வெகுகாலம் கணக்கப்பிள்ளையாக இருந்தவர். தேவரின் கணக்கை முடித்ததில் அவருக்கும் பங்குண்டு. இப்போது பெரும் வசதி. மாடி வீடு. அவர் சொன்னார்.
‘சின்னத்தம்பி வர்றதா அம்பலம் சொன்னுச்சு. எங்க தங்கவக்கிறதுன்னு நீங்க கேட்டியலாம். என் வீட்டு மாடி சும்மாதான் கெடக்குது. ஆளுகளெ விட்டு சுத்தம் பண்ணச் சொல்றேன். தம்பிய அங்க வந்து தங்கச் சொல்லுங்க. நீங்க சொன்னீங்கன்னா நா ஏற்பாடு பண்றேன்.’
அவர் வார்த்தைகள் செல்லத்தாயை துண்டுதுண்டாக வெட்டின. அந்த ஊரில் ராமசாமித்தேவரின் பாதம் படாத தரையே இல்லை. தன் அப்பா இருந்து, கட்டி, வாழ்ந்த வீட்டில்தானே தமிழ் தங்கிக்கொள்ள விரும்புவான். ராமசாமித் தேவரிடம் ஒரு காலத்தில் வேலைபார்த்த கார்மேகம் வீட்டில் அவன் எப்படித் தங்குவான். அவரிடம் போய் இந்த உதவியை அம்பலம் எப்படிக் கேட்டான். என் வயிற்றில் வந்து இவன் எப்படிப் பிறந்தான். செல்லத்தாய் வயிற்றில் அடித்துக் கொண்டார். அவமானத்தில் குறுகிப்போனார்.
அன்று காலை, தமிழ் காரில் வந்து இறங்கினான். ஒரு பெரிய பையைத் தோளில் மாட்டியிருந்தான். மறுகையில் அருணைப் பிடித்திருந்தான். சித்ரா அவனைத் தொடர்ந்தாள். செல்லத்தாய் இரண்டு கைகளையும் விரித்தபடி ‘தமிழூன்னு’ ஓடிவந்தாள். நெஞ்சில் முகம் புதைத்தாள். அவளின் ஒரு கரம் அருணின் கன்னங்களைத் தடவியது. தமிழை விட்டுவிட்டு, பேரனைத் தூக்கி மாறிமாறி முத்தமிட்டாள். சித்ராவின் கன்னங்களை தன் கன்னங்களோடு ஒட்டிக்கொண்டு ‘நூறு வயசுக்கு நீ நல்லாயிருக்கணும் தாயீ’ என்றார். அறைக்குள்ளிருந்து எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டுதான் இருந்தாள் இந்திரா. அம்பலம் வீட்டில்தான் இருந்தான். அன்று தமிழ் வருவது அவனுக்குத் தெரியும். அவன் வெளியே வந்தான்
‘என்ன தமிழ் நல்லாயிருக்கியா? சிங்கப்பூர்லேருந்து வாரியா திருப்பத்தூர்லேருந்து வாரியா? ஒரு சாமானையும் காணொம். சாமான்கள்லாம் எங்கப்பா?’
கடகடவென்று சிரித்தான்.
‘பின்னால லாரில வருது’ தமிழும் சிரித்தான். அந்த சிரிப்புகளுக்கிடையேதான் எவ்வளவு பெரிய இடைவெளி.
திண்ணையில் உட்கார்ந்து அன்னாந்து பார்த்தான். உள்ளே பார்த்தான். சந்திரா அப்போதுதான் தலையைக் காட்டினாள்.
‘சிங்கப்பூர் ஆளாவே மாறிட்டீங்க தமிழ். வீடே சிங்கப்பூர் மணக்குது.’
என்று சொல்லி அவள் பங்குக்கு சிரித்துவைத்தாள். அடேங்கப்பா எவ்வளவு பெரிய நாடகம்.
தமிழ் தன் பையைத் திறந்து, அந்தப் பெரிய பைக்குள் இருந்த இன்னொரு பையை எடுத்து அம்பலத்திடம் கொடுத்தான்.
‘என் அளவுக்குத்தான் உங்களுக்கும் சட்டை வாங்கினேன். நல்லவேளை. நீங்க குண்டாகல. சட்டை சரியா இருக்கும்.’
அந்தப் பையை மூடமுடியாமல் தொலைவில் இயக்கும் ஒரு ஹெலிகாப்டர் பொம்மை யுடனான அட்டைப்பெட்டி மூக்கை நீட்டிக்கொண்டிருந்தது. ரொட்டியும் மிட்டாயும் மணத்தது. மீதப்பையை அம்மாவிடம் கொடுத்தான். வீட்டுக்குள் சென்றான். அந்தச் சுவரை, அந்தக் கதவுகளை, ஜன்னல்களை வருடினான். எல்லா இடத்திலும் அப்பாவின் கை தெரிந்தது. மொத்த வீட்டிலும் அப்பா மணத்தார். பிறகு ஊரின் வீதிகளில் நடந்தான். தொடக்கப்பள்ளி காலத்திலிருந்து பலகாலம் நண்பர்களாயிருந்த மூன்று பேருக்கு வாட்ஸ்அப்பில் செய்தி அனுப்பியிருந்தான். அன்று வருவதாக. நேரம் முதற்கொண்டு குறிப்பிட்டிருந்தான். அவன் செய்திக்கு யாரும் பதில் சொல்லவில்லை. பலமுறை அழைத்தும் ஒரு தடவைகூட அவர்கள் தொலைபேசியை எடுக்கவில்லை. இருந்தாலும் அவர்களைத் தேடிப்போனான் தமிழ். யாருமே வீட்டிலில்லை. ‘தமிழ் வந்தால் நாளை சந்திப்போம் என்று சொல்லுங்கள்’ என்று அவர்கள் சொன்னதாக வீட்டிலிருந்தவர்கள் தமிழிடம் சொன்னார்கள். அவர்கள் யாரென்றும் தமிழுக்குத் தெரியவில்லை. வீதிகளில் சந்தித்த பல முகங்கள் முற்றிலும் புதிதாக இருந்தது. ஒரே ஒரு பெரியவர் மட்டும்
‘அட! தேவரு மகனா? எப்பப்பா வந்தே. இப்போ எங்கே இருக்கே? என்றார். படிக்கிற காலத்திலேயே தமிழ் ஊரை விட்டுச் சென்றுவிட்டான். இப்போது சிங்கப்பூருக்குச் சென்று சில ஆண்டுகள் ஓடிவிட்டன. யாருக்கும், அவன் யார் என்று தெரிந்துகொள்ளக் கூட அக்கரையில்லாமல் போனது ஆச்சரியம்தான்.
தமிழ் வந்த கார் வீட்டு வாசலிலேயே நின்றுகொண்டிருந்தது. ஊரை ஒரு சுற்று சுற்றிவிட்டு வீட்டுக்குத் திரும்பினான். அக்காமார்களுக்கு தான் வரும் சேதியைத் தமிழ் சொல்லியிருந்தான். யாராவது ஒரு அக்காவாவது வீட்டுக்கு வந்திருக்கலாம் என்று தமிழ் எதிர்பார்த்திருந்தான். யாருமே வரவில்லே.
‘அவுங்க வரமாட்டங்க தமிழு. நீதான் அவுங்களப்போயி மொறையோட பாக்கணும்.’ என்றார் செல்லத்தாய்.
அம்பலம் வீட்டில்தான் இருந்தான். தமிழ் சொன்னான்.
‘நா சிங்கப்பூர்லேருந்து புறப்படும்போதே, திருச்சியில் தங்கிக்கொண்டு, தினமும் ஊருக்கு வந்துபோவதுபோல் ஏற்பாட்டுடன்தான் வந்தேன். இங்க வந்து நா யாரையும் தொந்தரவு செய்ய விரும்பல. அப்பா வாழ்ந்த இடம். கட்டின வீடு, அவரு கால்பட்ட மண். அவர் கைபட்ட பொருட்கள் எல்லாத்தையும் பாத்துட்டுப் போகலாம்னுதான் வந்தேன். அம்மாவெ அழச்சுக்கிட்டு திருச்சிக்குப் போறேன். நா சிங்கப்பூருக்கு போகிறவரக்கும் அவங்க என்னோட இருக்கட்டும். நா சிங்கப்பூர் புறப்பட்டவுடன் அம்மா இங்க வந்துருவாங்க.’
என்று சொல்லி, அம்மாவையும் தன்னோடு வர தயார்படுத்தினான் தமிழ். செல்லத்தாய் கொஞ்சம் துணிமணிகளோடு உரல்உலக்கையையும் மறக்காமல் எடுத்துவைத்துக்கொண்டு, ‘காவிரி ஆத்து வெத்துல, திருச்சில கெடக்கும்’ என்று சிரித்தார்.
கார் கிராமத்தை விட்டு திருச்சிக்கு புறப்பட்டது. ஊர் மக்கள் அவரவர் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அந்த மண்ணும் மரங்களும், வீடுகள் முளைத்த நிலங்களும், ஆக்ரமிக்கப்பட்ட குளங்களும் அவனுக்கு வணக்கம் சொல்லி அனுப்பி வைத்தன.
யூசுப் ராவுத்தர் ரஜித்
- நம்பிக்கை நட்சத்திரம்
- தெளிவத்தை ஜோசப்- எனது நினைவுகள்
- ஊரும் உறவும்
- பூமியின் சிக்கலான உட்கருவின் நூதனச் சுழற்சி இயக்கங்கள்
- நாசாவின் முதற்பெரும் வெற்றி : விண்கணை தாக்கி விண்பாறை சுற்றுப் பாதை சிறிதாகி உள்ளது
- 2020ஆம் ஆண்டிற்கான ‘விளக்கு’ விருதுகள் அறிவிப்பு
- ஒளிப்பரவல்
- நிலவே முகம் காட்டு…
- சிற்றிதழ்களின் சிறப்பிதழ் – காற்றுவெளி
- தூங்கும் பனிநீர் –குறும் திரைப்படப்பிரதி
- அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வருடாந்த தமிழ் எழுத்தாளர் விழா மெய்நிகரில்
- வைக்கம் முஹம்மது பஷீரின் ஐசுக் குட்டி என்ற புத்தகம்..
- பத்திரிகையாளர் எஸ். எம். கார்மேகம் வாழ்வும் பணிகளும் !
- ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
- முதுமையை போற்றுவோம்
- மலையக இலக்கிய முன்னோடி தெளிவத்தை ஜோசப் நினைவுகள்
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 281 ஆம் இதழ் இன்று