குழு பாலியல் உறவும் சமூகக் கேடுகளும்

author
0 minutes, 28 seconds Read
This entry is part 13 of 13 in the series 30 அக்டோபர் 2022

 

அழகர்சாமி சக்திவேல்

India, Sculptures religious erotic sybmboli of the Indian faith on walls of temples in Khujaraho temples. Madhya Pradesh

கடவுள் யார் என்பதில் தொடங்கி, பல விசயங்களில், உலகில் உள்ள அனைத்து மதங்களும், ஒன்றோடொன்று அடித்துக் கொண்டாலும், சில விசயங்களில், அந்த அனைத்து மதங்களும், ஒருமித்த கருத்துக்கள் கொண்டு இருக்கின்றன. அப்படிப்பட்ட விசயங்களில் ஒன்றுதான், திருமண பந்தம் என்ற உறவு ஆகும். சில மதங்கள், ஒருவனுக்கு ஒருத்தி என்ற ஒழுக்கத்தை, அதிகமாக வலியுறுத்துகிறது. ஒரு சில மதங்கள், பலதாரத் திருமணத்தை, கடவுள்களுக்கு மட்டும் நியாயப்படுத்துகிறது. முருகன்-வள்ளி-தெய்வானை, கிருட்டிணன்-பாமா-ருக்குமணி, சிவன்-பார்வதி-கங்கா, விநாயகன்-சித்தி-புத்தி, பாஞ்சாலி-பாண்டவர்கள் போன்ற தெய்வங்கள், அதற்கு ஒரு உதாரணம் ஆக இருக்கிறார்கள். சில மதங்கள், பலதார மணத்தை, நேரடியாகவே ஆதரித்தாலும், அதற்கென, சில பல திருமண விதிகளை, தத்தம் மதத்துக்குள் புகுத்தி இருக்கின்றன. ஆனால், மேலே சொன்ன  எந்த மதங்களுமே, குழுப் பாலியல் உறவு (Group Sex) என்ற ஒரு விசயத்தை, முழுமையாக ஆதரிக்கவில்லை என்பது, உண்மைதான். அதாவது, ஒருவர், பலதார மணங்கள் செய்ய அனுமதிக்கப்பட்டாலும், அவர், ஒரே நேரத்தில், அவரது பலதாரங்களுடன், பாலியல் உறவு கொள்வதை, எந்த மதமுமே, ஆதரித்துப் பேசவில்லை. கிறித்துவ மதத்தில், இந்தக் குழு பாலியல் உறவு நடவடிக்கைகள், சில இடங்களில் கோடிட்டுக் காட்டப்பட்ட போதும், அது ஒருபோதும் அங்கீகரிக்கப்படவில்லை என்பதே உண்மை.

 

இந்த எனது கட்டுரை, பலதாரத் திருமணங்களையோ, அல்லது கள்ள உறவுகளையோ பேசும் கட்டுரை அல்ல. மாறாய், சமூகத்தில், ஆங்காங்கே, மறைந்து மறைந்து நடக்கும், ஆண்கள்-பெண்கள் குழுப்பாலியல் உறவுகளின் சீர்கேடு குறித்தும், முக்கியமாய், ஆண்-ஆண் மற்றும் பெண்-பெண் ஓரினச்சேர்க்கை செய்யும் மூன்றாம் பாலின சமூகம், தங்களை, உரிமையோடு ஈடுபடுத்திக்கொள்ளும் குழுப்பாலியல் உறவின் கேடுகள் குறித்தும், இந்தக் கட்டுரை, சற்று விரிவாக அலசுகிறது.

 

சமீபத்தில், நான் ஒரு அமெரிக்கப்படம் பார்த்தேன். இந்தப் படம், கனடா நாட்டின், உலகத்திரைப்பட விழாவில், திரையிடப்பட்ட, பெருமையுடைய படம் ஆகும். படத்தின் நாயகன், இன்னொரு நாயகனைக் காதலிக்க ஆரம்பிக்கிறான். இருவரின் சம்மதத்தின் பேரில், இருவரும் படுக்கைக்குச் செல்கிறார்கள். ஆனால், படுக்கையில், இந்த இருவரோடு சேர்ந்து, இன்னும் இரு ஆண்கள், நிர்வாணமாகக் காட்டப்படுகிறார்கள். குழுப்பாலியல் உறவு, அங்கே பட்டவர்த்தனமாகக் காட்டப்படுகிறது. திரைப்படத்தில் இன்னொரு காட்சியும் காட்டப்படுகிறது. அதாவது, நாயகனைக் காதலித்துக்கொண்டு இருக்கும் இரண்டாம் நாயகன், அவனது பிறந்த ஊரில் வாழும், இன்னொரு நண்பனைச் சந்திக்க நேரிடுகிறது, அந்த ஊர் நண்பன், ஒரு ஆணை விரும்பும் மகிழ்வன் என்று தெரியவர, அவனையும் வீட்டுக்குக் கூப்பிடுகிறான். மறுபடியும், இன்னொரு படுக்கைக்காட்சி ஆரம்பிக்கிறது. அந்தக் காட்சியில், இப்போது, நாயகன், அவனது காதலன் ஆன இரண்டாம் நாயகன், ஊரில் இருந்து வந்த அந்த விருந்தாளி, மூவரும் நிர்வாணமாகிறார்கள். மறுபடியும் ஒரு குழுப்பாலியல் உறவு காட்டப்படுகிறது. இப்படிக் குழுப்பாலியல் உறவுகள் எல்லாவற்றிலும் இடம்பெறும் நாயகன், ஒரு கட்டத்தில், அந்த இரண்டாம் நாயகனிடம் ‘காதலும் அன்பும் இல்லை’ என்ற காரணம் சொல்லி, இரண்டாம் நாயகனை விட்டுப் பிரிகிறான். அதாவது, ‘காதல் வேறு, காமம் வேறு’ என்று, படம் நமக்குப் பாடம் எடுக்கிறது. படம் சொல்லும் இந்தக்கருத்தில், உண்மை இருந்தாலும், படம், அந்தக் குழுப்பாலியல் உறவுக்காட்சிகள் குறித்த, எந்த எதிர்மறைக் கருத்துக்களையும் சொல்லாமல், படத்தை நகர்த்தும்போது, நமக்குள், ஒரு எச்சரிக்கை உணர்வு வருகிறது. அதாவது, குழுப்பாலியல் உறவை, மூன்றாம் பாலினம், வெளிப்படையாக ஆதரிக்கிறதோ, என்ற அச்ச உணர்வு, நமக்கு, அங்கே எழுகிறது. அந்த அச்ச உணர்வே, இந்தக் கட்டுரையின் வெளிப்பாடு ஆகும்.

 

சரி, குழு பாலியல் உறவுகள் குறித்து, வரலாறு நமக்கு என்ன சொல்கிறது என்று, முதலில் பார்ப்போம். குழு பாலியல் உறவு, பண்டைய காலங்களில் இருந்து இருக்கிறது என்பதற்கு, இந்தியாவில் உள்ள, பிரபலமான கஜிராகோ சிற்பங்களை, ஒரு முக்கிய உதாரணமாக, நாம் கொள்ளலாம். வாத்சாயனர் எழுதிய காமசூத்ரா என்ற நூலில், குழு பாலியல் உறவு குறித்த விளக்கங்கள் இருக்கின்றன. தமிழ்நாட்டின் பற்பல கோவில்களிலும் கூட, ஒரு நிர்வாண ஆண், ஒன்றுக்கும் மேற்பட்ட நிர்வாணப் பெண்கள், ஒரே சிற்பத்தில், ஒன்றாக காமக்களி செய்வது போன்ற சிற்பங்களும், ஆங்காங்கே பரவலாக இருக்கின்றன. பண்டைய தமிழ் இலக்கியங்களில், மன்னர்களின் அந்தரங்க அறைகளை, பற்பல மாதர்கள் அலங்கரித்ததையும், அங்கேயெல்லாம், குழு பாலியல் உறவு நடந்திருக்கும் சாத்தியங்கள் குறித்த ஊகங்களையும், நாம் பல நூல்களில் படிக்கிறோம்.

 

நான்காம் நூற்றாண்டிற்கு முன்னரே, இந்து மதத்தில், ஞானச் சக்ரா அல்லது சக்ர பூஜா என்ற ஒரு பூசை வழிபாடு இருந்து வந்து இருக்கிறது. இந்த வழிபாட்டை, பின்னர் வஜ்ராயான புத்தமதமும் பின்பற்றி வந்து இருக்கிறது என்பதற்கு, பல திபெத்திய ஆதாரங்களும் இருக்கின்றன. இந்தச் சக்ர பூசையில், பஞ்சமகரா என்ற பூசைதான் அடிப்படையான பூசை ஆகும். இந்த பஞ்சமகரா பூசையில், மத்யா (மது), மாம்சா(விலங்கு இறைச்சி), மத்ஸ்யா(மீன்),  முத்ரா(தானியங்கள்), மைதுனா(பாலியல் உறவு) என்ற ஐந்து விசயங்கள் இருக்கின்றன. ஆண்களும், பெண்களும், பூசாரிகளும், வட்ட வடிவில் உடகார்ந்துகொள்ள, மேலே சொன்ன நான்கு முறைகளில் பூசை செய்யப்பட்டு, கடைசியில், ஐந்தாவது முறையான, உடலுறவு கொள்ளுதலோடு, பூசை முடிவடைகிறது. குழு பாலியல் உறவின் ஒரு வரலாறாகப் பார்க்கப்படும், இந்த இந்து மத மற்றும் புத்த மத பூசைகள் இன்றளவும் நடந்தாலும், அந்தப் பூசை, பிற்காலத்தில், குழு பாலியல் உறவின் வடிவத்தை, வெறும் தியானத்தின் வடிவமாக மாற்றிக்கொண்டன என்றும் செய்திகள் கூறுகின்றன. தவிர, இதுபோன்ற தியானத்துடன் கூடிய, குழு பாலியல் முறை, ரகசியமாகவே நடந்தது என்றே, வரலாறு, நமக்குக் குறிப்பிடுகிறது.

 

குழு பாலியல் உறவை, இந்து மதமோ, அல்லது தமிழர் பண்பாடோ, வெளிப்படையாக அங்கீகரிக்கவில்லை என்பதில் உண்மை இருக்கிறது. “ஒருவனுக்கு ஒருத்தி” என்ற பண்பாடே, தமிழர் இலக்கியங்களில், சமூக ஒழுக்கமாகப் பேசப்பட்டு இருப்பதால், குழு பாலியல் உறவு, பண்டைய காலங்களில் இருந்து இருந்தாலும், அது ஒரு சமூகக் குற்றமாகவே, இன்று வரை, தமிழர் இலக்கியங்கள் பார்க்கின்றன, என்பதை, இங்கே நாம் குறிப்பிட்டே ஆக வேண்டும்.

 

பண்டைய கிரேக்கக் கலாச்சாரத்தில், குழு பாலியல் உறவு என்பது, ஒரு சமூக அங்கீகாரம் பெற்ற ஒன்றாக இருந்து இருக்கிறது என்பதற்கு, பல ஆதாரங்கள் இருக்கின்றன. இயேசு கிறிஸ்து பிறந்த காலத்தில், ரோமப் பேரரசை ஆண்ட மன்னன் ஆன, டிபேரியஸ் சீசர், நாட்டு வளர்ச்சியை அப்படியே போட்டு விட்டு, அருகில் இருந்த காப்ரி என்ற தீவுக்குச் சென்று, ஸ்பின்ட்ரியன் என்ற குழு பாலியல் உறவு முறை உருவாகக் காரணமாக இருந்தான் என்று ரோமன் வரலாறு நமக்குக் கூறுகிறது. கிரேக்கக் கலாச்சாரத்தில், குழு பாலியல் உறவுகளுக்கெனவே, பச்சநேலியா, ஒர்கியா போன்ற விழாக்கலாச்சாரங்கள் இருந்தன என்றும், கிரேக்க வரலாறு, நமக்குச் சொல்லுகிறது. பாலியல் உறவின் உச்சத்தைத் தொடும்போது, கடவுளை அடையும் உச்சத்தைத் தொடுவதாக, இந்த கிறித்துவ மதத்துக்கு முந்தைய, கிரேக்க மதங்களின் விழாக்கள், நமக்குக் கருத்துரைக்கின்றன. புணர்ச்சிப் பரவச நிலை என்று சொல்லக்கூடிய Orgasm என்ற ஆங்கில வார்த்தை, Orgy என்று மேலே குறிப்பிடப்பட்டுள்ள குழுப் பாலியல் உறவு விழாவை அடையாளப்படுத்தும் ஒரு வார்த்தைதான், என்பது, நமக்கு, நன்கு புலனாகிறது.

 

டைசி வளையம் என்று சொல்லக்கூடிய, குழுப் பாலியல் உறவு குறித்த பிரெஞ்சு ஓவியங்கள், பத்தொன்பதாம் நூற்றாண்டில், பிரெஞ்சு உயர்குடி சமூகத்தில், பிரபலமான ஒன்றாக இருந்தன என்றும், சில செய்திக்குறிப்புக்கள், நமக்குச் சொல்லுகின்றன. மூவர் குழு, நால்வர் குழு, சுயமைதுன வளையங்கள் போன்ற,  பல வகை, குழு பாலியல் உறவுகள் குறித்த செய்திகளும், வரலாறுகளில், ஆங்காங்கே, குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவை ஆண்ட இசுலாமிய மன்னர்கள் காலத்தில், பல பெண்கள் குழுவோடு சல்லாபம் செய்யும் ஓவியங்கள், குழுப் பாலியல் உறவு நடந்திருக்கும் சாத்தியக்கூறுகளை, நமக்கு உணர்த்துகின்றன. இருப்பினும், சமூகம், குழு பாலியல் உறவை, ஒரு வக்கிரம் கலந்த எண்ணமாகவே, இன்றளவும் பார்க்கிறது என்பதே, ஓர் உலக  உண்மை ஆகும்.

 

குழு பாலியல் உறவுகள் குறித்து, மருத்துவமும், மனோதத்துவமும் என்ன கூறுகின்றன என்று பார்த்தால், நமக்கு பல சுவாரசியமான விசயங்கள் புலப்படுகின்றன. மனிதனின் மூளையில் இருக்கும் ஹைப்போதலாமஸ் மற்றும் அமிக்தலா போன்ற பகுதிகள், மனிதனின் பாலியல் உறவுக்குக் காரணம் ஆக இருக்கிறது என்றும், இத்தகைய பாலியல் காரணிகளின் செயல்திறன், ஒருவனுக்கு-ஒருத்தி என்ற பாலியல் உறவை விட, குழு பாலியல் உறவில், அதிக அளவில் பெருகுகின்றன என்றும், மருத்துவ ஆராய்ச்சிகள், நமக்குச் சொல்கின்றன. மனோதத்துவமோ, ஒரு மனிதன், குழு பாலியல் உறவில் ஈடுபடுவதற்குக் காரணிகளாக, கீழ்க்கண்ட விசயங்களை நமக்குக் கோடிட்டுக் காட்டுகிறது.

 

  1. பாலியல் உறவில் அதீத ஆர்வம்
  2. எந்த ஒரு செயலிலும், சவால்களை எதிர்நோக்கி, அந்தச் சவால்களைச் சமாளிப்பதில் அதீத சுகம் காணும் ஒரு மனநிலை. பாலியல் உறவிலும், ஒருவனுக்கு ஒருத்தி என்ற பாலியல் உறவில் சலித்துப் போய், குழு பாலியல் தரும் சமூகச் சவால்கள் மீது ஏற்படும் ஒரு வித மன ஈர்ப்பு.
  3. ஆண்-ஆண் ஓரினச்சேர்க்கை அல்லது பெண்-பெண் ஓரினச்சேர்க்கை மீது ஆர்வம் உள்ளவர்கள், தங்கள் ஓரினச்சேர்க்கை ஆர்வத்தை, சமூகத்தின் பார்வையில் இருந்து மறைத்துக்கொள்ள, இன்னொரு பெண்ணையோ, அல்லது ஆணையோ, தங்கள் குழு பாலியல் உறவில் சேர்த்துக் கொள்ளுதல். அதாவது, ஒரு ஆண்-ஆண் ஓரினச்சேர்க்கையாளர், தனது ஆண் துணையுடன், இன்னொரு பெண்ணை, உப்புக்குச் சப்பாணியாக, தங்கள் குழு பாலியல் உறவு களியாட்டத்தில் சேர்த்துக் கொள்ளுதல். இதே போல், ஒரு பெண்-பெண் ஓரினச்சேர்க்கையாளர், தனது பெண் துணையுடன், இன்னொரு ஆணை, தங்கள் குழு பாலியல் உறவில் சேர்த்துக் கொள்ளுதல்.
  4. சமூகம் சொல்லும் கட்டுப்பாடுகள் நிறைந்த பாலியல் உறவுகளில் இருந்து மீண்டு, ஒரு முழுமையான பாலியல் சுதந்திரம் குறித்து ஏக்கம் கொள்ளுதல். பொது நிர்வாண சுதந்திரம் மீதான ஆர்வம்.
  5. தனது உடல் அழகு குறித்து, அதிக கவனம் கொள்ளுதல். அந்த உடல் அழகு, பலரால் பாராட்டப்படவேண்டும் என்ற பேராசை

 

இப்படி நாம், குழுப்பாலியல் உறவுக்கான காரணங்களை, அடுக்கிகொண்டே போகலாம். இது தவிர, குழு பாலியல் உறவுகளைத் தூண்டும், ஆன்மீகவாதிகளின் போதனைகள், ஒருபுறம் இருக்கின்றன. “நிர்வாணம் மூலம் தெய்வீகம் காணுவோம்” என்று சொல்லும் சாமியார்கள், பல மதங்களிலும், பரவலாக இருக்கிறார்கள். அத்தகையோர் நடத்தும் கூட்டு வழிபாடு, கடைசியில் குழுப் பாலியல் உறவுக்கு, சில நேரங்களில் வழி வகுத்து விடுகின்றன என்பதை, நாம் முற்றிலுமாய் மறுத்து விட முடியாது. “இன்பமே சிறந்த நலம்” என்ற ஹெடோனிசம் கோட்பாடுகள், இன்பம் நுகர்தலில், அதிக ஈடுபாடு காட்டுவதை, மனிதனுக்கு வலியுறுத்துகிறது. பாலியல் இன்பத்துக்குள்ளும் நுழையும், இத்தகைய ஹெடோனிசக் கோட்பாடுகள், பல நேரங்களில், குழுப் பாலியல் உறவில் இன்பம் காண நினைப்போரையும், வரவேற்காமல் இருப்பதில்லை.

 

குழு பாலியல் உறவில், நிறைய, தீமைகள் இருக்கின்றன. அவைகளில் சில..

 

  1. கணவன்-மனைவி உறவில் உள்ள, பரஸ்பர நம்பிக்கை உடைந்து போகலாம். திருமண பந்தம் என்ற வார்த்தையின் மீதான நம்பிக்கை, மறைந்து போகலாம்
  2. உள்ளம் ரீதியான பாலியல் உறவுகளை விட, உடல் ரீதியான பாலியல் உறவுகள் மீதான நாட்டம் கூடலாம். இதன் விளைவாய், தனது உடலை தானே வெறுத்துப் போகும் நிலை உருவாகலாம். கடைசியில், பாலியல் உறவின் மீதான நாட்டம், முற்றிலும் அழிந்து போகலாம்.
  3. திட்டமிடப்படாத கருவுறுதல் நிகழலாம். அதன் விளைவாய் ஏற்படும், தனது சந்ததியினர் மீதான சந்தேகம், குடும்ப வாழ்க்கையில், விரிசல்களை, எளிதில் உண்டாக்கலாம்.
  4. குழு பாலியல் உறவில், தன் மீதான, பிறரின் பாலியல் நாட்டம், குறைவாக இருப்பதாக நினைக்கும் போது, பொறாமை ஏற்படலாம். அந்தப் பொறாமையின் விளைவாய், நீண்ட நெடுஞ் சண்டைகள், சச்சரவுகள் தோன்றலாம். அது, கொலையில் கூட முடியலாம்.
  5. AIDS, கேன்சர், ஹெபாடிடிஸ் போன்ற பால்வினை நோய்களுக்கு, எளிதில் வயப்படலாம். இதன் விளைவாய், சமூகத்தில் இருந்து ஒதுக்கி வைக்கப்படலாம்.
  6. மன அழுத்தம், பதற்றம், போன்றவை, அதிகரிக்கலாம். அதன் பலனாய், தங்கள் வேலையிடங்களில் காட்டும் திறமை குறைந்து, தத்தம் வேலை வாய்ப்பை இழக்க நேரிடலாம்.
  7. வக்கிரமான பாலியல் உறவுகளில் நாட்டம் கூடலாம். இது, பாலியல் வன்முறைகளுக்கு வித்திடலாம்.
  8. சொத்துரிமை போன்ற விசயங்களில் சண்டைகள், சச்சரவுகள் ஏற்படலாம். இவை போன்ற உரிமை மீறல்கள், கொலையில் முடியலாம்.
  9. ஒழுக்கமின்மை என்ற முத்திரையோடு, சமூகத்தில் இருந்து ஒதுக்கிவைக்கப்படலாம்
  10. பெரும்பாலான நாடுகளின் சட்டங்கள், குழு பாலியல் உறவுகளை ஆதரிப்பதில்லை. எனவே, சட்டத்தின் பிடியில் மாட்டிக்கொள்ள நேரிடலாம். இதனால், சிறைவாசம் அனுபவிக்க நேரிடலாம்.

 

குழு பாலியல் உறவுகள், மனிதர்களைத் தாண்டி, விலங்குகளிலும் இருக்கிறது என்று, பல ஆய்வுகள் நமக்குச் சொல்லுகிறது.. ஒன்றுக்கு மேற்பட்ட தெரு ஆண் நாய்கள், பெண் நாய்களோடு குழு பாலியல் உறவு கொள்ளும்போது, அதன் பாலியல் உறுப்புக்கள், ஒன்றோடொன்று சிக்கிக் கொண்டு, அல்லல் படுவதை, நாம் சில நேரங்களில், கண்கூடாகக் காண்கிறோம். சிங்கங்களிலும் இது போன்ற, குழுப்பாலியல் உறவுகள், சில நேரங்களில் நடப்பதுண்டு. கூட்டமாய் வாழும் ஆண் மற்றும் பெண் சிங்கங்களில், பெண் சிங்கங்களைக் கவருவதற்காய், சிறு சிறு குழுக்களை, ஆண் சிங்கங்கள், தங்களுக்குள் உருவாக்கிக் கொள்கின்றன. இப்படி உருவாகும், ஒரு ஆண் சிங்க அணி, இன்னொரு ஆண் சிங்க அணியுடன் மோதுகின்றன. இதில், வெற்றி பெறும்.ஆண் சிங்க அணிக்கு, அந்தக் கூட்டத்தில் உள்ள பெண் சிங்கங்கள், பாலியல் உறவுக்காக கிடைக்கும். தோல்வி பெற்று ஓடும் ஆண் சிங்கங்கள் ஒன்று சேர்ந்து, ஆண்களான தங்களுக்குள்ளேயே பாலியல் உறுப்புக்களை எழுப்பிக்கொண்டு, ஒன்றின் மீது ஒன்று தேய்த்துக் கொள்ளும் குணத்தை, நாம் ஒரு குழு பாலியல் உறவு வகையாகக் கொள்ளலாம்.  

 

சரி.. குழு பாலியல் உறவின் தற்போதைய நிலை என்ன? பல நாடுகள், குழு பாலியல் உறவை, சட்டங்களின் மூலம் எதிர்க்கின்றன. இருப்பினும், இந்த வகைச் சட்டங்கள், குழுப் பாலியல் உறவுகளின் மீது, கடுமையைக் காட்டாமல், கண்டும் காணாதது போலவே இயங்குகின்றன. குழு பாலியல் உறவுகளுக்கு எதிரான சட்டங்கள் இருப்பது தெரிந்தும், ஆண்கள்-பெண்கள் இடையேயான, குழு பாலியல் உறவுகள், அங்கொன்றும், இங்கொன்றுமாய், நடந்துகொண்டுதான் இருக்கின்றன. பண்ட மாற்று முறை போல, சாவி மாற்று முறையில், கணவர்கள், தங்கள் மனைவிகளை மாற்றிக் கொள்ளும், கேடு கெட்ட பழக்கங்களை, நாம் செய்திகளில், அவ்வப்போது படிக்கிறோம். இந்தியப் பத்திரிகைகள் கூட, சில நேரங்களில், இந்தச் சீர்கேடு குறித்து, எழுதாமல் இல்லை. சுற்றியிருக்கும் சமூகமும் கூட, ஆண்-பெண் குழு பாலியல் உறவு குறித்த, தங்கள் கடுமையான எதிர்மறை விமர்சனங்களை, எப்போதும் முன் நிறுத்துவதால், ஆண்-பெண் குழு பாலியல் உறவின் அளவுகள், எப்போதும் குறைவாகவே இருக்கின்றன. ஆனால், ஆண்-ஆண் அல்லது பெண்-பெண் ஓரினச்சேர்க்கையில், குழுப் பாலியல் உறவுகள் குறித்த ஆர்வம், எந்த நிலையில் இருக்கின்றன என்று ஆராய்ந்தால், நமக்குள், வருத்தம் ஏற்படுகிறது.

 

பல மதங்கள், “ஒருவனுக்கு ஒருத்தி” என்ற கருத்தை, மனித ஒழுக்கத்தில், அடிக்கடி வலியுறுத்துகின்றன. ஆனால், ஆண்-ஆண் பாலியல் உறவு, அல்லது பெண்-பெண் பாலியல் உறவில் ஈடுபடும் மனிதர்களுக்கு, மதங்கள், “ஒருவனுக்கு ஒருவன்” அல்லது “ஒருத்திக்கு ஒருத்தி” என்ற கருத்தை ஒரு போதும் வலியுறுத்துவதில்லை. உலகின் மனிதர்களில், பெரும்பான்மையான ஆண்களும், பெண்களும், மதங்கள் சொல்லும் ஒழுக்கத்திற்கு கட்டுப்படுகிறார்கள்.  இதனால், அங்கே குழுப் பாலியல் உறவுகள் குறைந்து போகிறது. இதையும் தாண்டி, ஆண்கள்-பெண்கள் குழுப் பாலியல் உறவை எதிர்த்து சட்டங்கள் இருக்கின்றன. எனவே, மதங்களுக்குக் கட்டுப்படாத ஆண்களும், பெண்களும், சட்டத்திற்குக் கட்டுப்படுகிறார்கள். இதனாலும், குழுப் பாலியல் உறவுகள், குறைந்து போகின்றன. ஆண்-பெண் திருமண பந்தம், சொத்துரிமை, குழந்தைப் பேறு போன்ற சட்டங்கள், “ஒருவனுக்கு ஒருத்தி” என்ற விசயத்தையே, அடிப்படையாகக் கொண்டு இருக்கின்றன, என்பதாலும், குழுப் பாலியல் உறவுகள் மீதான நாட்டம், மட்டுப்படுத்தப் படுகிறது. ஆனால், மூன்றாம் பாலினம்?

 

பெரும்பாலான நாடுகளில், ஓரினச்சேர்க்கைக்கு எதிரான சட்டம் நீக்கப்படவே இல்லை. அங்கே எல்லாம், “எப்படி ஓரினச்சேர்க்கை செய்தாலும், குற்றம் குற்றம்தானே” என்ற போக்கில், ஆண்-ஆண் அல்லது பெண்-பெண் குழுப் பாலியல் செய்வோர், கணிசமாக இருக்கிறார்கள். சில நாடுகள், ஓரினச்சேர்க்கைக்கு எதிரான சட்டங்களை நீக்கி இருக்கிறது என்றாலும் கூட, ஆண்-பெண் குழுப் பாலியல் உறவுக்கு எதிரான சட்டங்கள் போல, ஆண்-ஆண் அல்லது பெண்-பெண் குழுப் பாலியல் உறவுகளுக்கான எதிர்மறைச் சட்டங்கள், தனிப்பட்டமுறையில் இல்லை. இந்தக் காரணத்தால், இங்கேயும் குழுப் பாலியல் முறையில், ஆண்-ஆண் மற்றும் பெண்-பெண் உறவு கொள்வோரில், கணிசமான எண்ணிக்கையை, நாம் பார்க்க முடிகிறது. கட்டுப்பாடில்லாத, இந்த ஆண்-ஆண் அல்லது பெண்-பெண் குழுப் பாலியல் உறவுகள் குறித்து, மூன்றாம் பாலின ஆதரவாளர்கள், ஆதரித்தும் பேசுவதில்லை, எதிர்த்தும் பேசுவதில்லை. பாதுகாப்பான உறவாய் இருக்கும் பட்சத்தில், எந்த வகைப் பாலியல் உறவும், சரியானதே என்ற போக்கு, அவர்களிடம் நிலவுகிறதோ என்று பல நேரங்களில், சந்தேகம் எழுகிறது. பாதுகாப்பான உறவில், உடலைக் காப்பாற்றி விடலாம். ஆனால், உள்ள உணர்வுகளில் ஏற்படும் சிதைவுகள்?

 

“குழுப் பாலியல் உறவுகளால், என்ன மனச் சிதைவுகள் ஏற்பட்டு விடப்போகிறது” என்றும் பேசும் மூன்றாம் பாலினக் கூட்டம், உலகில் இருக்கலாம். அவர்களுக்கான எனது கேள்வி என்ன என்றால், ஆணோடும் பெண்ணோடும் பிணைந்து வாழ விரும்பும் மூன்றாம் பாலின சமூகம், இந்த குழுப் பாலியல் உறவு விசயத்தில் மட்டும், ஏன், அவர்களிடம் இருந்து முரண்படவேண்டும் என்பதே. தனி மனித ஒழுக்கம் என்பது யாவருக்கும் பொதுவன்றோ? “ஒருவனுக்கு ஒருத்தி” என்பதே நேற்றைய, சமூகத்தின் விருப்பம் என்றால், “ஒருவனுக்கு ஒருத்தி அல்லது ஒருவனுக்கு ஒருவன் அல்லது ஒருத்திக்கு ஒருத்தி” என்பதே, இன்றைய சமூகத்தின் விருப்பம் ஆக இருப்பது அல்லவோ நியாயமான போக்கு?

 

பாலியல் சுதந்திரம் என்பது, எல்லாருக்கும் பொதுவானதுதான். பாலியல் உறவில், தனக்குப் பிடித்த உறவைத் தேடிக்கொள்வதில், ஆண், பெண் மற்றும் மூன்றாம் பாலினத்திற்கு, சம அளவு உரிமை உண்டு. சில நேரங்களில், ஒருவர், சூழ்நிலைக்கேற்ப ஏற்படுத்திக்கொள்ளும், கள்ள உறவுகளைக் கூட, சமூகமும் சட்டமும், ஒரளவிற்கு அங்கீகரிக்கிறது. ஆனால், அதே சமூகம், ஒரே நேரத்தில், ஒன்றுக்கு மேற்பட்ட பேரோடு கொள்ளும் குழு உறவை, இன்றளவும் வக்கிர உணர்வாகவே பார்க்கிறது. எனவே பாலியல் சுதந்திரத்தின் சமூக விதிகளை, மூன்றாம் பாலினமும் புரிந்துகொண்டு நடக்கப் பழக வேண்டும்.

 

நான், முகநூலில் இப்போதெல்லாம், மூன்றாம் பாலினம் சார்ந்தோர் பதிவிடும் பதிவுகளைப் படிக்கிறேன். “அங்கே கூடுவோம், இங்கே கூடுவோம்” என்று, பற்பல அழைப்புக்கள், முகநூலில் பதிவிடப்படுகின்றன. இங்கேயெல்லாம், குழுப் பாலியல் உறவுகள் குறித்த கட்டுப்பாடுகள், உரிய முறையில் கண்காணிக்கப்படுகின்றனவா என்ற கேள்விக்கு, உரிய விடைகள் இருப்பதாக, நமக்குப் புலப்படவில்லை. சட்டங்கள், இது குறித்து கண்காணிக்கின்றனவா என்பதும் தெரியவில்லை. அங்கேயெல்லாம், பாதுகாப்பான உடல் உறவுகளின் முக்கியத்துவம் குறித்து, பேசப்படுவது என்னவோ உண்மைதான். ஆனாலும். குழு பாலியல் உறவுகள் ஏற்படுத்தும் மனச்சிதைவுகள் குறித்து, இங்கேயெல்லாம் பேசப்படுகின்றனவா என்பது, ஒரு கேள்விக்குறிதான்.

 

பாலியல் உணர்வுகள் என்பது, கட்டுப்படாத வெள்ளத்தைப் போன்றது. மதங்கள் என்ற அணைகள், அந்த வெள்ளத்தைக் கட்டுப்படுத்த உதவுகின்றன, சமூகம் என்ற பெருங்கால்வாய்கள், நீரின் ஓட்டத்தை ஒழுங்கு படுத்துகின்றன. சட்டம் என்ற ஓடைகள், பாய்ந்து வரும் நீருக்கான, பயனுள்ள பாதைகளை வகுக்கின்றன. ஆணுக்கும், பெண்ணுக்கும் இருக்கும், இந்தக் கட்டுப்பாடுகளை, மூன்றாம் பாலினத்துக்கும் விரிவுபடுத்துதலே நியாயமானது, அப்படிப்பட்ட விரிவாக்கத்திற்கு, மூன்றாம் பாலினமும் கட்டுப்படவேண்டும் என்பதே சரியானது.

 

அளவுக்கு மீறினால், அமிர்தமும் நஞ்சு என்ற தாரக மந்திரத்தை, மூன்றாம் பாலினமும் புரிந்து கொள்ளவேண்டும் என்பதே எனது ஆசை.

 

அழகர்சாமி சக்திவேல்

 

Series Navigationவியட்நாமிய நீர்ப்பாவைக் கூத்து
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *