விடியலா ? விரிசலா ?

author
0 minutes, 0 seconds Read
This entry is part 9 of 13 in the series 30 அக்டோபர் 2022

சக்தி சக்திதாசன்



ரிஷி சுனாக் எனும் பெயர் இன்று உலக அளவில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் ஒரு பெயர்.

இந்திய மரபுவழி.வந்தவரான இவர் இன்றைய இங்கிலாந்தின் பிரதமராக்கப்பட்டுள்ளார். ஒரு இந்து ஆசியர் கிறீஸ்துவ நாடென்று பெயர்பெற்ற வெள்ளை இனத்துவ பெரும்பான்மையினரைக் கொண்ட பிரித்தானிய நாட்டிற்கு பிரதமராக முடியுமா ? என்று எண்ணிய பலருள் நானும் ஒருவனாக இருந்திருக்கிறேன்.

அந்தக்கேள்விக்குப் பதிலாக அமைந்திருக்கிறது ரிஷி சுனாக் அவர்களின் தெரிவு.

42 வயதே நிரம்பியவர் ரிஷி சுனாக். 47 வருடங்கள் இந்த நாட்டிலே வாழ்ந்து வருபவன் நான். மாணவன் எனும் நிலையிலிருந்து இன்று ஒரு பேரக்குழந்தையின் தாத்தா எனும் நிலையை எட்டியிருக்கின்றேன்.

என்னுடைய வாழ்வின் ஒவ்வொரு நிலை மாற்றத்திலும் பல அனுபவங்களுக்கூடாக பயணித்திருக்கிறேன். அப்வனுபங்களில்.இனத்துவேஷமும் அடங்கும் என்பது.உண்மை. ஆனால் என்னுடைய வாழ்வின் ஒவ்வொரு கட முன்னேற்றத்துக்கும் இனத்துவேஷம் என்பது முட்டுக்கட்டையாக இருக்கவில்லை என்பதும் உண்மை.

பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த பெரும்பான்மையோர் நான் முன்னேறுவதற்கு உந்துதலாக இருந்தார்களேயன்றி இடையூறாக இருக்கவில்லை.

அதே மனப்பான்மைதான் இன்றைய ரிஷி சுனாக் அவர்லளையும் பிரதமர் பதவியில் அமர்த்தி பார்த்திருக்கிறது என்பதே உண்மை.

ரிஷி சுனாக் அவர்களின் அரசியல் கட்சியின் அரசியலோடு நாம் உடன்படுகிறோமோ இல்லையோ பேதங்களைக் கடந்து அவ்வரசியல் கட்சி அவருக்களித்த ஆதரவினைக் கண்டு புலபெயர்ந்த நாம் புளாங்கிதமடைய வேண்டும்.

இதுவரை நான் கண்ட பல புலம்பெயர் சமூக மக்கள் பல வருடங்களாக பிரித்தானியாவில் வாழ்ந்து பிரித்தானியப் பிரஜாவுரிமையைப் பெற்றிருந்தும் பிரித்தானிய நாட்டு வாழ்க்கையை ஒரு வாடகை வீட்டில் வாழ்வது போன்ற மனப்பான்மையுடன் அணுவது போலவே தென்படுகிறது.

அது என்ன வாடகை வீட்டு மனப்பான்மை ? ஒரு சொந்த வீட்டில் குடியிருப்பவரையும், வாடகை வீட்டில் குடியிருப்பவரையும் எடுத்துக் கொண்டால் இருவரில் யார் தாம் வாழும் வீட்டின் மீது அதிக அக்கறை எடுத்துக் கொள்வார்கள் ?

அதற்கு தம்மை நியாயப்படுத்தும் காரணமாக தாம் அந்நிய நட்டவர் எனும் வகையில் நடத்தப்படுவதாகக் கூறிக் கொள்வார்கள்.

அத்தகையோரின் வாதங்களைத் தவிடு பொடியாக்கும் வகையில் இன்று நாம் வாழும்  ஐக்கிய இராச்சியத்தின் பிரதமராக ஒரு புலம்பெயர் சந்ததியைச் சார்ந்தவர் வந்திருப்பது அமைந்திருக்கிறது இல்லையா ?

புலம்பெயர்ந்து வந்து ஐக்கிய இராச்சியத்தில் வாழ்வை அமைத்துக் கொண்ட பலருக்கும் தாம் வாழ்க்கையில் எடுத்த இலட்சியத்தை முனைப்புடன் உழைத்தால் அடையலாம் எனும் நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது .

ஆனால் புலம்பெயர் சமூகத்தினர் தம்மை தாம் வாழும் நாட்டின் அரசியலமைப்பில் இணைக்காமல் தமது சமூகங்களுக்குள் முடங்கிக் கொண்டால் தம்மையும், தமது சமூகத்தின் தேவைகளையும் முன்னிலைப் படுத்த முடியாது.

ரிஷி சுனாக் என்பவர் ஐக்கிய இராச்சியத்தின் அரசில் அமரக்கூடிய அரசியல் கட்சியில் இணைந்து.தாம் வாழும் நாட்டின் முன்னேற்றத்துக்காக உழைப்பதன் மூலம் தாம் சார்ந்த சமூகத்தையும், புலம்பெயர்ந்து வாழ்வோரின் தலைமுறையினரின் திறமைகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார் என்பதுவே உண்மை.

இன்றைய இங்கிலாந்தின் பொருளாதாரச் சிக்கல் உலக அளவில் ஒரு பேசுபொருளாக இருக்கிறது. இதற்கு உலகரீதியிலான பின்னனிக் காரணங்கள் இருப்பினும் கடந்த பன்னிரெண்டு வருடங்லளாக அரசக் கட்டிலில் அமர்ந்திருக்கும் ரிஷி சுனாக் அவர்களின் கன்சர்வேடிவ் கட்சியும் காரணம் என்பது மறுக்கப்பட முடியாதது.

குறிப்பாக பொரிஸ் ஜான்சனுக்குப் பதிலாக பிரதமராகிய லிஸ் ட்ரஸ் அம்மையாரும் , அவர் பதவியிலமர்த்திய அவரது முதலாவது நிதியமைச்சரும் அவசரமாகக் கொண்டு வந்த அதிரடிப் பொருளாதாரத் திட்டங்கள் இங்லிலாந்துப் பொருளாதாரச் சந்தையைப் படுகுழியில் தள்ளியது.

தொடர்ந்து வெறும் 49 நாட்களே பதவி வகித்த லிஸ் ட்ரஸ் பதவி விலக நமது ரிஷி சுனாக் பிரதமரானார்.

புதிய பிரதமர் ரிஷி சுனாக் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் பூதாகரமானவை.

பிரித்தானியப் பொருளாதாரச் சந்தை அரசின் மீது இழந்துவிட்ட நம்பிக்கையை மீண்டும் வலுப்பெறச் செய்ய வேண்டும்.

ஒற்றுமை இழந்து பல திக்குகளில் இழுபடும் கன்சர்வேடிவ் பாராளுமன்ற உறுப்பினர்களை மீண்டும் தான் செல்லும் திசை நோக்கி நகர்த்த வேண்டும்.

வாழ்வாதாரச் செலவினை எதிர்கொள்ள முடியாமல் தத்தளிக்கும் சராசரி பிரித்தானியப் பிரஜையின் வாழ்வினைச் சீராக்கும் கொள்கைத் திட்டங்களை வகுக்க வேண்டும்.

இவையனைத்தையும் விட ஒரு ஆசியர் எமது நாட்டின் பிரதமரா ? என்று வெகுண்டெழும் ஒரு சாரார் பெரும்பான்மை மக்களின் தொடர் எதிர்ப்புகளை எதிர்கொள்ள வேண்டும்.

இத்தனைக்கும் மேலாக ரிஷி சுனாக் ஒரு அதீத செல்வந்தர் என்றும் அவருக்கெப்படி அல்லலுறும் மக்களின் இன்னல்களைப் புரிந்து கொள்ள முடியும் எனும் தாக்குதல் வேறு.

ரிஷி சுனாக் பிரதமாரானதும் ஆசியருக்கு பல அனுகூலங்கள் கிடைக்கும் என்று கருதுவது முட்டாள்தனமானது. அவர் தனது பதவியை தம்மைச் சார்ந்தவர்களுக்காக துஷ்பிரயோகம் செய்வார் என்று எதிர்பார்த்து அவரை வீழ்த்துவதற்கு பல இனத்துவேஷிகள் காத்திருக்கிறார்கள் என்பதை மறந்து விடக்கூடாது.

ஓபாமா அவர்கள் அமேரிக்காவின் ஐனாதிபதியானதும் அவரது பதவிக்கால முடிவில் அவர் தான் சார்ந்த கறுப்பின சிறுபான்மை மக்களுக்கு என்ன செய்தார் ? எனும் விமர்சனத்தை மும் வைத்தனர்.

அத்தகைய எதிர்பார்ப்புகள் நியாயமற்றவை . ஒரு நாட்டின் ஐனாதிபதியாகவோ அன்றி பிரதமராகவோ பதவியேற்பவர் தான் சார்ந்த சமூகத்திற்காக மட்ட செயற்பட முடியாது அந்நாட்டின் சகல மக்களிந் பொது நன்மைக்காகவே செயற்பட முடியும்.

ரிஷி சுனாக்கின் வெற்றி எம் அனைவரதும் வெற்றியாகும். ஏனெனில் அவரது வெற்றியே நாம் வாழும் நாட்டினை கட்டியெழுப்பி எம் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்பும்.

ஐக்கிய இராச்சியத்தின் இனத்துவேஷிகளுக்கு ரிஷி சுனாக் பிரதமரானது மிகுந்த புகைச்சலை உண்டாக்கியிருக்கும் என்பதில் ஐயமில்லை. எங்கே இவரை வீழ்த்தலாம் என்பதில் மிகுந்த சிரத்தையோடு செயற்படுவார்கள் என்பதும் உண்மை.

மனித உணர்வுகளின் ஒரு வடிவம் தான் இனத்துவேஷம். ஒரே நிறத்தையுடையவர்களாக இருந்தும் நாடு, மதம் எனும் வேறுபாடு எமக்குள்ளேயோ பேதங்களைத் தருவதில்லையா?

ரிஷி சுனாக் ஐக்கிய இராச்சியத்தின் பிரதமரானது இங்கிலாந்துக்கு விடியலை ஏற்படுத்துமா ?
இல்லை
ஐக்கிய இராச்சியத்தின் பெரும்பான்மை இனத்தவர்க்கும், சிறுபான்மையினருக்கும் இடையில் விரிசலை ஏற்படுத்துமா ?

விடியலா ? விரிசலா ?

சக்தி சக்திதாசன்
லண்டன்
28.10.2022
 
 
Series Navigationஅந்திம காலத்தின் இறுதி நேசம்’  சிறுகதைத் தொகுப்புக்காக, எம்.ரிஷான் ஷெரீபுக்கு ‘இலங்கை அரச சாகித்திய இலக்கிய விருது’தீபாவளி
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *