வெற்றிலைத்தட்டில் ஒரு பாக்குவெட்டி

This entry is part 11 of 13 in the series 30 அக்டோபர் 2022
 
குரு அரவிந்தன்
 
கனடாவில் இருந்து சோமாலியா செல்லவிருந்த சமாதனப்படையில் நிர்வாக அதிகாரிகளில் ஒருவனாகச் செல்ல விருப்பமா என்று அவர்கள் என்னைக் கேட்டபோது நான் சற்றுத் தயங்கினேன். ஆறு மாதத்தில் திரும்பி வந்திடலாம் என்று ஆசை காட்டினார்கள். முதலில் தயங்கினாலும், எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவரும் அதில் இடம் பெற்றிருந்ததால், அவர்களுடன் இணைந்து ஒரு கனடியனாக வெளிநாட்டில் செயற்பட எனக்குக் கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்த நினைத்தேன். கடந்தகால வாழக்கையில் இதுபோன்ற எத்தனையோ பாத்திரங்கள் ஏற்றிருக்கிறோம், ‘ஆப்ரேஷன் டெலிவரன்ஸ்’ என்ற இதையும் போய்த்தான் பார்ப்போமே என்று அவர்களுடன் கிளம்பினேன்.
 
இலங்கையில் இருந்த சூழ்நிலை மாதிரித்தான் அங்கேயும் பல இயக்கத்தினர் கொள்கைகளைக் காப்பதாகச் சொல்லி இலகுவாக மக்களிடம் நல்ல பெயர் எடுத்துக் கொண்டிருந்தார்கள். ‘பலெட்குயுஎன்’ (Belet Huen) என்ற இடத்தில் அமைந்த எங்கள் முகாமைச் சுற்றிவர உள்ள குறிப்பிட்ட சில கிராமங்களுக்குப் பாதுகாப்புக் கொடுக்க வேண்டிய பொறுப்பு எங்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
 
போராளிகள் தங்களுக்குள் முரண்பட்டுக் கொண்டு, தங்கள் கொள்கைகளை மறந்து பழிவாங்கும் நோக்கத்தோடு கிராமங்களில் உள்ள இளம் பெண்களையும், சிறுவர்களையும் கடத்தத் தொடங்கியிருந்தார்கள். வடக்கே இன்னும் பெரிய அளவில் கப்பல்களைக் கடத்தி, வேற்று நாடுகளிடம் இருந்து கப்பம் வாங்கத் தொடங்கியிருந்தனர். ‘சோமாலிய கடற்கொள்ளையர்’ என்று சொல்லி, அவர்கள் ஒரு புறம் கடலாதிக்கம் செலுத்திக் கொண்டிருந்தனர். அதைப்பற்றி எல்லாம் நாங்கள் கவலைப்படாமல் எங்களுக்குக் கொடுத்த வேலையில் மட்டும் கவனம் செலுத்தினோம்.
 
எங்கள் பாதுகாப்புப் படையணிக்குத் தேவை கருதி அங்குள்ள சில உள்ளுர் மக்களையும் எங்கள் கட்டுப்பாட்டில் இணைத்துக் கொண்டோம். எங்களுடன் உதவிக்கு இணைந்தவர்களில் அருகே உள்ள கிராமங்களில் உள்ளவர்கள் இரவு சென்று காலையில் திரும்பி வருவார்கள். அங்கே உணவு தட்டுப்பாடு காரணமாகப் பசிபட்டினியாக இருந்தது மட்டுமல்ல, தங்கள் உயிரைப் பாதுகாக்கவும் சிலர் எங்களுடனேயே முகாமில் தங்கினார்கள். இவர்கள் எங்களோடு எப்பொழுதுமே முகாமில் இருப்பதால், உள்ளுர் மக்கள் எங்களைத் தாக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையும் ஒரு காரணமாக இருந்தது. அப்புறம் போராளிகளின் கிராமப் பக்கமான நடமாட்டம் பற்றிய உள்ளுர் தகவல் அறிவதற்கும் அவர்கள் உதவியாக இருந்தார்கள்.
 
அங்கேதான் ‘அப்டி அகமட்’ என்ற உள்ளுர் வாசியைச் சந்தித்தேன். அவனது கிராமம் அருகே இருந்ததால், இரவு வீட்டிற்குச் சென்று வருவான். தங்கள் கிராமத்து இளம் பெண்கள் சிலரை இயக்கத்தினர் கடத்திச் சென்றுவிட்டாதாக அடிக்கடி புலம்பிக் கொண்டே இருப்பான். தங்களிடம் ஆயுதம் இல்லாததால், அந்தச் சந்தர்ப்பத்தில் ஆயுதக் குழுவோடு தங்களால் போராட முடியாமல் போய்விட்டதாகவும் வருத்தப்பட்டான். ஏன் இவன் மட்டும் அந்தப் பெண்களுக்காகக் கவலைப்படுகிறான் என்று விசாரித்த போதுதான், கடத்தப்பட்ட பெண்களில் அவனது காதலியும் ஒருத்தி என்பது அதன் பின்புதான் எனக்குத் தெரியவந்தது.
 
கனடியரென்றால் குளிர்பிரதேசத்தில் வெள்ளை நிறமாக இருப்பார்கள் என்று அவன் எதிர்பார்த்திருக்கலாம். ‘நீங்க கனடியரா சார்?’ என்று என்னைப் பார்த்து ஒருநாள் சந்தேகத்தோடு கேட்டான்.
 
அவன் சோமாலிய மொழியை மட்டுமல்ல, ஆங்கிலமும் சரளமாகக் கதைத்ததால் மொழி பெயர்ப்பதற்கு உதவியாக இருந்தான். அவனுக்கு எனது பிறவுண் நிறத்தைப் பார்த்ததும் சந்தேகம் வலுத்திருக்க வேண்டும். அதனால் ‘உங்க பிறந்த நாடு எது?’ என்று வேறு ஒருநாள் அவன் கேட்டான்.
 
‘இலங்கையிலே அதாவது ஸ்ரீலங்காவின் வடபகுதியில் உள்ள யாழ்ப்பாணம்’ என்று சொன்னேன். அவனுக்கு விளங்க வேண்டும் என்பதால் ‘யப்னா’ என்ற ஆங்கிலச் சொல்லைப் பாவித்தேன்.
 
அவன் சிறிது நேரம் யோசித்தான்.
 
‘அதைத்தான் ‘யப்னா’ என்று சொல்லுவாங்களா?’ என்றான்.
 
‘ஆமாம், ஆங்கிலத்தில் ‘யப்னா’ என்று சொல்லுவாங்க, ஆசியாவில் உள்ள யப்பான் அல்ல’ என்று விளக்கமாகச் சொன்னேன்.
 
‘அப்போ முன்பு பிரபலமாக இருந்த ‘யப்னாகிங்டம்’ தான் உங்க பிறந்த ஊரா?’
 
‘ஆமா, எப்படி ‘யப்னாகிங்டம்’ பற்றித் தெரிந்து வைத்திருக்கிறாய்.’ என்று ஆச்சரியத்தோடு கேட்டேன்.
‘அப்படின்னா, என்னுடைய தாத்தாவின் மூதாதையர்கள் முன்பு உங்க ‘யப்னா கிங்டத்திற்கு’ வந்திருக்கிறாங்க’ என்றான். அவன் ஆர்வத்தோடு அதைச் சொல்ல வந்தபோது வேடிக்கையாகச் சொல்வதாக நினைத்து நான் பெரிதுபடுத்தவில்லை.
 
நேரம் கிடைக்கும் போது தனது வீட்டிற்கு வரும்படி அழைத்திருந்தான். பாதுகாப்பு காரணங்களுக்காக நாங்கள் தனியே செல்லக்கூடாது என்பதால், அந்தக் கிராமத்திற்கு எங்கள் படையினரின் வழமையாகச் செல்லும் ‘கொன்வே’ சென்றபோது, நானும் அவர்களுடன் சென்றிருந்தேன்.
 
சோமாலியாவில் ஒட்டகப்பாலும், ஒட்டக இறைச்சியும் பிரபலமானது என்பதால், அவன் ஒட்டகப்பால் கலந்த தேனீர் தந்து எங்களை வரவேற்றான்.
 
நாங்கள் அவனது குடும்பத்தைப் பற்றி நலம் விசாரித்த போது, அவன் தனது வீட்டிலே இருந்த தூசி படிந்த ஒரு பழைய சிறிய பெட்டியை எடுத்து வந்து எனக்குக் காட்டினான். பனையோலையில் பின்னப்பட்ட மூடிபோட்ட பெட்டி போல அது இருந்தது.
 
ஆவலோடு அதைத் திறந்து பார்த்த போது உள்ளே இருந்த பொருள் என்னை ஆச்சரியத்தில் மூழ்கடித்தது. அதற்குள் ஒரு வெற்றிலைத் தட்டமும், பாக்கு வெட்டியும் இருந்தன. அரும்பொருள் காட்சிச்சாலைகளில் வைத்திருப்பது போன்ற செம்பினால் செய்யப்பட்ட வேலைப்பாடுகள் கொண்ட மிகப்பழைய வெற்றிலைத்தட்டு, கறுப்பு நிறத்தில் மயில் போன்ற தோற்றத்தில் ஒரு பழைய பாக்குவெட்டி.
 
‘இது என்னவென்று தெரியாது, ஆனால் இந்தத் தட்டோடு சேர்த்து இதையும் இன்னும் சில பொருட்களையும் கொடுத்தாங்களாம்’ என்று பழைய பாக்குவெட்டியை எடுத்துக் காட்டினான்.
 
‘இதுதான் பாக்குவெட்டி’ என்று சொன்னேன்.
 
‘அப்படின்னா?’ என்று விளங்காதது போலக் கேட்டான்.
 
‘‘kind of scissors for cutting areca nuts  ‘ என்று ஆங்கிலத்தில் விளக்கம் தந்தேன்.
 
‘அப்படியா? அந்த நாட்களில் யப்னா பட்டினத்திற்கு எங்க மூதாதையர் இந்துசமுத்திரத்தைக் கடந்து படகிலே வர்த்தகம் செய்யச் சென்ற போது, அவங்க இவங்களுக்கு நினைவுப் பரிசாகக் கொடுத்திருந்தாங்களாம். எங்க பாட்டனின் பூட்டன் முறையானவராம், மாலுமிகளின் தலைவராகப் படகோட்டியாக இருந்தாராம். அதனாலே எங்க குடும்பத்திற்குக் கிடைத்த கௌரவ பரிசுப் பொருளாக நாங்க இதைப் பரம்பரையாகக் காப்பாற்றி வருகின்றோம். மூத்த மகனான வாரிசுக்கே இவை போய்ச் சேரும் என்பதால் என்னிடம் வந்து சேர்ந்தன.’ என்றான்.
 
இது எப்படி சாத்தியமாயிற்று என்று இணையத்தில் தேடிப்பார்த்தேன். அந்த நாட்களில் ஆபிரிக்காவில் இருந்த அயூரான் (Ajuuraan) இராச்சியத்திற்கும் யாழ்ப்பாண இராச்சியத்திற்கும் இடையே வர்த்தகத் தொடர்பு இருந்ததாக அறிந்தபோது, எனக்கு வியப்பாக இருந்தது. எங்கே இந்த அயூரான் இராச்சியம் இருந்தது என்பதை அறிந்து கொள்ளும் ஆவலுடன் அக்கால வரலாற்றை, இணையத்தளத்திலும், ஆறு மாதம் சேவைக்காலம் முடிந்ததும் கனடா வந்து பழைய நூல்களைப் பிரட்டிப் படித்தும் அறிந்து கொண்டேன்.
 
அப்போதுதான், யாழ்ப்பாணத்தில் இருந்து ஆபிரிக்க நாடான அயூரான் இராச்சியத்திற்குக் கறுவா ஏற்றுமதி நடந்ததாகத் தெரிய வந்தது. இந்து  சமுத்திரத்தின் கரையோரத்தில், ஆபிரிக்காவின் கிழக்குக் கரையோரமாக இந்த இராச்சியம் இருந்தது. கொம்பு போன்ற குடாநாட்டு நில அமைப்பைக் கொண்டிருந்ததால், அக்காலத்தில் ‘ஆபிரிக்காவின் கொம்பு’ (Horn of Africaர்) என்றும் இதை அழைத்தார்கள். இந்த அயூரான் இராச்சியம்தான் இப்போது பிரிக்கப்பட்டு நவீன உலகில் சோமாலியா, எதியோப்பியா, கெனியா போன்ற நாடுகளின் பெயரைப் பெற்றிருக்கின்றது. கறுவாவுக்குப் பதிலாக ஆடை அணிகளைப் பண்டமாற்றாக அங்கிருந்து யாழ்ப்பாண இராச்சியம் பெற்றுக் கொண்டதாகவும் வரலாறு குறிப்பிடுகின்றது.
 
யாழ்ப்பாண அரசை ஆரியசக்கரவர்த்தியின் அரசு என்றும் அழைத்தனர். 1215 ஆம் ஆண்டு ‘யப்னாகிங்டம்’ என்று வெளிநாட்டவர்களால் அழைக்கப்பட்ட இந்த இராச்சியம் உதயமானது. பாண்டிய அரசுக்கு மாணியம் செலுத்திய யாழ்ப்பாண அரசு 1323 ஆம் ஆண்டு பாண்டிய மன்னனை மாலிக்கபூர் தேற்கடித்தபோது, முழு சுதந்திர இராச்சியமாக மாறியது. இப்போது உள்ள திருகோணமலை, வன்னி உள்ளிட்ட பரந்த இந்த இராச்சியத்தை ‘தமிழர்களின் பட்டினம்’ என்றும் அந்த நாட்களில் அழைத்தார்கள். தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும், இந்துமத வளர்ச்சிக்கும் உறுதுணையாக நின்ற, உலகறிந்த பிரபலமான இந்த யாழ்ப்பாண இராச்சியம் 1624 ஆம் ஆண்டு வரை நிலைத்து நின்றது.
 
‘சரசுவதி பண்டாரம்’ என்ற படிப்பகம் ஒன்று இவர்கள் காலத்தில் யாழ்ப்பாணத்தில் இயங்கி வந்ததாகவும், ஆனால் மதவெறி பிடித்த போத்துக்கேயர் காலத்தில் இந்துக் கோயில்கள் அழிக்கப்பட்ட போது, இந்த நூல்நிலையமும் எரிக்கப்பட்டதாம். அதே வழியைப் பின்பற்றித்தான் 1981 ஆம் ஆண்டு பல்லாயிரக் கணக்கான மக்களுக்குக் கல்வியறிவூட்டிய யாழ்ப்பாண நூல்நிலையமும் இராணுவத்தால் எரிக்கப்பட்டது. ஆனாலும் ‘விழுந்தாலும் எழுவோம்’ என்று தமிழ் மக்கள் காலாகாலமாய் மீண்டும் எழுந்து நின்று நிரூபித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
 
யாழ்ப்பாணத்தில் பிறந்து, கனடாவுக்குப் புலம் பெயர்ந்து, பணி நிமிர்த்தம் சோமாலியா சென்று அங்கே எங்கள் யாழ்ப்பாண அரசின் பெருமை பற்றி அறிந்து கொண்டதை நினைத்த போது எனக்குப் பெருமையாக இருந்தாலும், இதுவரை காலமும் இதைப்பற்றி அறியாமல் இருந்ததை நினைக்க ஒருதமிழனாய் எனக்கு வெட்கமாகவும் இருந்தது.
 
யாழ்ப்பாண இராச்சியத்தின் நினைவுச்சின்னமாக இருந்த அந்த வெற்றிலைத் தட்டையும், பாக்குவெட்டியையும் புகைப்படமாவது எடுத்து வைக்கவேண்டும் என்ற  நோக்கத்தோடு ‘அப்டி அகமட்’டைத் தேடினேன். அன்று அவன் வேலைக்கு வரவில்லை என்பது தெரியவந்தது. அன்று மதியம் எங்கள் ‘கொன்வே’ அவனது கிராமத்திற்குச் சென்றபோது, அவனைத் தேடிச் சென்றோம்.
 
எங்களோடு சேர்ந்து அவன் செயற்பட்டதற்குப் பழிவாங்கும் நோக்கத்தோடு, போராளிகளால் அவனது வீடு எரிக்கப்பட்டுத் தரைமட்டமாகக் கிடந்தது. எங்கள் பெருமையைச் சொல்லும் மிகப் பழைய முக்கியமான எங்கள் வரலாற்றுச் சின்னம் எந்தவொரு காரணம் இல்லாமல் அந்த நாட்டில் அழிக்கப்பட்டிருந்தது. இப்படி ஒரு சம்பவம் அங்கு நடந்ததை நான் யாரிடம் சொல்லி அழுவது?
 
நான் திரும்பி வந்தபின் சோமாலியாவில் இருந்த எங்களின் அந்த முகாமில் நடந்த சில சம்பவங்கள் மிகவும் கசப்பானவையாக இருந்தன. பாதுகாப்புப் படையினரால் அந்தக் கிராமத்து மக்கள் சிலர் பாதிக்கப்பட்டதால் பிரச்சனை பெரிதாகிவிட்டிருந்தது. அதனால் நானும் அந்த சம்பவங்களை மறக்க விரும்பிச் சிறிதுகாலம் மௌனமாகவே இருந்துவிட்டேன்.
 
 
Series Navigationதீபாவளிவியட்நாமிய நீர்ப்பாவைக் கூத்து
author

குரு அரவிந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *