இறந்தவர் மீதும் இரக்கம் கொள்வோம்

author
0 minutes, 1 second Read
This entry is part 2 of 7 in the series 11 டிசம்பர் 2022

 

 

முனைவர் என்.பத்ரி

           இறந்தவர்களை தெய்வத்திற்கு ஈடாக நாம் கருதுவதும் ,அவர்களை நல்லடக்கம் செய்வதில் நாம் அதிகபட்ச அக்கறை எடுத்துக் கொள்வதும் நமது  தமிழ் மரபுகளில் முக்கியமான ஒன்று. ஆனால் சமீப காலமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இறந்தவர்களை நல்லடக்கம் செய்வதில் காணப்படும் சிக்கல்களை ஊடகங்களில் காணும்போது அதிர்ச்சி அடையாதவர்கள் எவரும்இருக்க முடியாது. மனிதத் தன்மை மலிந்து விட்டதா?அல்லது மறைந்து விட்டதா என எண்ணத் தோன்றுகிறது.இறந்தவர்களை அடக்கம் செய்யும் இடம்,அந்த இடத்திற்கு செல்வதில் உள்ள இடர்பாடுகள், இவற்றால் இறந்தவரின் உடல்  இடுகாட்டுக்கு செல்லும் வழியில் பரபரப்பான சாலைகளில்  பல மணி நேரம் அலைக்கழிக்கப்படுவதையெல்லாம் பார்க்கும்போது, நாம் ஒரு நாகரிகமான  சமூகத்தில்தான் இருக்கிறோமா? என்று நம்மை நினைக்க வைக்கிறது.

            அரசு, புதிய குடியிருப்புகளை ஏற்படுத்தும் போது, திட்டத்தின் ஒரு பகுதியாக இடுகாடு/சுடுகாடு இவற்றிற்கான இடம், அவைகளுக்கு செல்லும் பொதுப்பாதை போன்றவற்றிற்கு திட்டமிடத் தவறிவிடுவதுதான் இவற்றிக்கெல்லாம் காரணம்.புறம்போக்கு பகுதி குடியிருப்பு பகுதிகள் அகற்றப்படும் போது, அவர்களுக்கான புதிய வாழ்விடங்கள் அடையாளம் காணப்படுகின்றன. அனைத்து மக்களுக்கும்  வாழ்வதற்கு இடத்தை தரும் வருவாய்த் துறையினர், வாழ்ந்த பின் அவர்கள் எங்கே செல்வார்கள்/எப்படி செல்வார்கள் என்பது பற்றி சிந்திக்காதது வேதனையானது.

           காஞ்சிபுரம் மாவட்டத்தில் வேகவதி ஆற்றில் கடந்த 2015 ம் ஆண்டு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், வெள்ளநீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்தது. ஆற்றின் கரையோரப் பகுதிகளில் மக்கள் வசித்ததே வெள்ளம் ஏற்பட காரணம் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதைத் தொடர்ந்து பொதுப்பணித் துறையினர் அளவீடு செய்ததில், 1,418 வீடுகள் ஆற்றை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருப்பது தெரியவந்ததை தொடர்ந்து ஆற்றில் வீடு கட்டி வசிக்கும் மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்திவிட்டு, அவர்களுக்காக குடிசை மாற்று வாரியம் மூலம் கீழ்கதிர்பூர் கிராமத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டன.குடிசை மாற்று வாரியம் மூலம் கட்டப்பட்ட மொத்தம் 2,112 வீடுகளில், வேகவதி ஆற்றில் ஆக்கிரமித்து வீடு கட்டிய 1,406 பேருக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாமல், அவசர கோலத்தில் இந்த அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளதாக, அப்போதே சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர். தற்போது இங்கு சுடுகாடு இல்லாததால், இறப்பர்களின் உடல்களை புதைக்க  இடமில்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர். இங்கு தச்சு தொழில் செய்து வந்த நபர் ஒருவர் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இவருக்கு மனைவியும், ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில், அன்னாரின் உடலை அப்பகுதியில் எங்கு அடக்கம் செய்வது என்பது தெரியாமல், இறந்து இரண்டு நாட்களாக இவரது குடும்பத்தினர், உறவினர்கள் செய்வதறியாமல் தவித்து வந்தனர். மேலும் இது குறித்து தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய அலுவலகத்தை தொடர்பு கொண்டபோது, அவர்களால் எவ்வித உதவியும் கிடக்கவில்லை என இறந்தவரின் குடும்பத்தாரும், உறவினர்களும், அக்குடியிருப்புவாசிகளும் குற்றம் சாட்டுகின்றனர். அவர்களை குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் அமர்த்திய போதே, சுடுகாட்டுக்கு ஏற்பாடு செய்து கொடுத்திருக்க வேண்டும். அவ்வாறு ஏற்பாடு செய்யாததன் விளைவாக, தற்போது இறந்தவர் உடலை புதைக்க முடியாமல், அப்பகுதி மக்கள் தவித்து வருகின்றனர்.இறப்பவர்களின் நல்லடக்கத்திற்காக அருகிலேயே பொது சுடுகாடு அமைத்து தரவேண்டும் என்ற கோரிக்கையையும் வெகுவாக எழுந்துள்ளது.

              இதே போன்று,சேலம் மாவட்டம்  எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் மசகாளிப்பட்டி கிராமத்திலிருந்து சுடுகாட்டிற்கு செல்லும் பாதையை தனியார் ஒருவர் கம்பி வேலி அமைத்து அடைத்து விட்டதால் அந்த கிராம மக்கள், உயிரிழந்தோரின் உடலை சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்ல முடியாமல் தவிக்கிறார்கள். சுடுகாட்டுக்கு செல்லும் பொதுப்பாதை எப்படி பட்டாவானது  எனபது  ஆய்வுக்குரியது.  கடந்த ஒரு வருடமாக பல அதிகாரிகளை சந்தித்து சொன்னாலும் பொதுமக்களின் புகாரை அதிகாரிகள் காது கொடுத்துக் கூட கேட்க மறுப்பதாக கூறப்படுகிறது.காவல் துறையின் சார்பில் பிரச்சினைக்கு தீர்வு காண  அந்த மக்கள் முயற்சி செய்யாமல், யாராவது இறக்கும் தருணத்தில் மட்டும், பிணத்தை சாலையில் வைத்து மறியலில் ஈடுபடுவது தவறானது. மற்றபடி நாங்கள் யாருக்கும் ஆதரவாக செயல்படவில்லை  எனக்கூறப்படுகிறது.

      இதே போன்று கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த மூங்கிலேரி கிராமத்தில் 100 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உள்ளனர். இக்கிராமத்தில் இறப்பவர்களை அடக்கம் செய்ய சுடுகாடு இருந்தும், சுடுகாடுக்கு பாதை இல்லாத நிலை தொடர்ந்து வருகிறது.
இதனால் இறந்தவர்களின் உடலை சுடுகாட்டிற்கு எடுத்துச்செல்ல, உறவினர்கள் மிகவும் சிரமப்பட்டுவருகின்றனர். இறந்தவர்களின் உடல்களை உறவினர்கள் விளை நிலங்கள் வழியாக,. தோள் மீது மிகவும் கஷ்டப்பட்டு தூக்கி செல்லும் அவலநிலை தொடர்கிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் கண்டுகொள்வதில்லை எனக் கூறப்படுகிறது. தமிழகத்தில் ,அநேகமாக எல்லா மாவட்டங்களிலும் இந்த அவல நிலை ஏதோ ஒருஇடத்தில் காணப்படுகிறது.

                       நமது  வாழ்வுச் சடங்குகளில் இறுதியாக நடைபெறுவது இறப்புச் சடங்குகள்தான். தாங்க முடியாத துக்கத்தை வெளிப்படுத்த, இறந்தவர்கள் கடவுளாக இருந்து அவர்கள் குடும்பத்தை வழிநடத்தவும், அக்குடும்பத்துக்கும் அவருக்கும் உள்ள உறவை முறித்து கடவுளின் பாதத்தை சென்றடையவும் பல நெறிமுறைகள் செய்யப்படுகின்றன.. ஒரு மனிதன் இறந்த பிறகு அவனைப் பிணம் என்றே அழைக்கப் படுகிறான். அவனுடைய உடம்பிலிருந்து உயிர் பிரிந்த நேரத்திலிருந்து சடங்குகளும் தொடங்கி விடுகின்றன. அந்த உடல் மண்ணில் புதைக்கவோ எரிக்கவோ செய்து அழிக்கப்படுகிறது. அவ்வாறானவர்களின் இறுதிப்பயணம்  எந்த வித பிரச்சினையுமின்றி நடப்பதில் உயிருடன் இருப்பவர்கள்தான் அக்கறை காட்டவேண்டும்.குறிப்பாக தமிழக அரசு இதில் சிறப்பு கவனம்  செலுத்தி பிரச்சினைக்குரிய இடங்களில் இறப்பவர்கள் கண்ணியத்துடன் நல்லடக்கம் செய்யப்படுவதை உரிய ஆணைகள் மூலம் உறுதிப்படுத்த வேண்டும்,. இறந்தவர்கள் மீதும் இரக்கம் கொள்வது நம் ஒவ்வொருவரின் வாழ்வியலாக மாற வேண்டு.

தொடர்புக்கு:63/2 ,A.E. கோயில் தெரு,செங்குந்தர்பேட்டை,

மதுராந்தகம்-603 306.கைப்பேசி

9443718043/7904130302nbadhri@gmail.com

 

Series Navigationசொல்வனம் இணையப் பத்திரிகையின் 283 ஆம் இதழ்   பெரிய நாயகி
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *