ஜனநேசன்
தமிழ்ச் சிறுகதை இலக்கியம் ஒரு நூற்றாண்டைக் கடந்து கொண்டிருக்கும் தருணம் இது. தமிழ்ச்சிறுகதை, உருவம், உள்ளடக்கம், உத்தி எனும் எடுத்துரைப்புகளில் பல பரிமாணங்களை சட்டையுரித்து நகர்ந்து கொண்டிருக்கிறது. பாரதி, வ.வே.சு ,புதுமைப்பித்தன் தொடங்கி நூற்றுக்கணக்கான படைப்பாளிகள் தமிழ்ச் சிறுகதை இலக்கிய வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்து வருகின்றனர். இத்தகு படைப்பு கண்ணிகளில் எழுத்தாளர் மீனா சுந்தரும் சேருகிறார்.
பழநியில் உள்ள கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராகப் பணியாற்றி வரும் மீனா சுந்தரின் மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு “புலன் கடவுள் “ . கீழத்தஞ்சையில் பிறந்த கதாசிரியர் ,பழநியில் பேராசிரியராக இருக்கிறார் . புலம்பெயர்வு இவரது கதைகளிலும் எதிரொலிக்கிறது .பேராசிரியராக இருப்பினும் இத்தொகுப்பிலுள்ள இவரது படைப்புகள் பெரும்பாலானவை தமிழகத்துக்குள்ளே பிழைப்புக்காக புலம்பெயர்ந்த அடித்தட்டு மக்களைச் சுற்றியே அமைந்துள்ளதை உணரமுடிகிறது..
‘செங்குத்தாய்த் தொங்கும் மஞ்சள் சரக்கொன்றை ‘ எனும் கதை , அலுவலகத்தில் நிலவும் , லஞ்ச ஊழல் சூழலின் முடைநாற்றத்தை எடுத்துரைத்து காறி உமிழச் செய்கிறார். இக்கதையை வாசிப்பவர் எவரும் லஞ்ச லாவண்யத்தில் ஈடுபடுவாராயின் அவரது மூக்கிலும் மலம் நாற்றத்தை உணர்ந்து ஒதுங்குவார். அந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தும் கதை. ஆனால் மஞ்சள்கொன்றைப் பூவைப் பார்க்கும்போதும் இந்தக் கதையை நினைவுக்கு வரும் ஆபத்துமுண்டு.
‘ பெருகும் வாதையின் துயரநிழல் ‘எனும் இரண்டாவது கதை தாயையும், தங்கையையும் ஸ்கூட்டர் விபத்தில் இழந்த சிறுவனின் எதிர்வினையும், அதன் விளைவாய் தந்தை படும் வாதையையும் , வாசக நெஞ்சுருக எடுத்துரைக்கிறார்..அடுத்துவரும் , ‘மிதவை’ கிராமத்துப் பண்ணையார், கிராமத்து பொதுக்குளத்தை ஆக்கிரமித்து செய்யும் அக்கிரமத்திற்கு எதிராகப் போராடும் முதிய விவசாயியின் கதை.கீழத் தஞ்சையின் ஈரம் மணக்கிறது. ‘நியதி ‘ கதை, கொய்யாப்பழம் விற்கும் முதிய தம்பதி, அனாதைக் குழந்தைகளைத் வளர்த்து படிக்க வைத்து மேம்படுத்தும் சீலத்தையும் , அவர்கள் இருவரும் கொய்யாபழம் விற்கும் நியதியையும் சொல்கிறது. வாசக மனம் ஆயக்குடி கொய்யப்பழத்தைப் போல இனித்து மணக்கிறது.
இக்கதையைப் போலவே பழநி நகரப்பேருந்து நிலையத்தைக் களமாக வைத்து இயங்கும் இன்னொருகதை ‘ சிறகிலிருந்து பிரிந்த இறகொன்று…’ செருப்புத் தைக்கும் தொழிலாளி, தனது மகனைப் படிக்க வைத்து தனது பால்ய நண்பனைப் போல பெரிய அதிகாரியாக உயர்த்தவேண்டும் என்ற லட்சிய ஆவேசத்தில் தனது நண்பனின் நினைவாக இருக்கிறார். ஆனால் சென்னையிலிருந்து வரும் உயரதிகாரியான நண்பன் .பால்யத்தில் உதவிய தன்னையே மதிக்காமல் உதாசினப்படுத்துவதும் அல்லாமல் குடியும் கூத்துமாய் இருக்கிறார். தடமாறிய நண்பனைக் கண்டு சினந்தெழும் வீராவேசம் தான் கதை. ஒடுக்கப்பட்டவரெல்லாம் மனத்தால் ஒடுங்கியவரல்ல என்று சுருக்கென்று சொல்லும் கதை.
‘ உயிர்வேலி’, ‘ நெகிழ் நிலச்சுனை ‘ போன்ற கதைகள் கிராமாந்திர தாய்மார்களின் தாய்மையை இருவேறு கோணங்களில் உருக்கமாகச் சொல்லும் கதைகள். இதேபோல, ‘தீய்மெய் ‘, ‘பாத்தியம் ‘ என்ற இருகதைகளும் தந்தை பாசத்தையும், அர்ப்பணிப்பையும் இரு மாறுபட்ட கோணங்களில் வாசகமனம் நெகிழ எடுத்துரைப்பன . ‘தவிப்பின் மலர்கள் ‘ கதையும் தந்தை மகனுக்கிடையே நிகழும் பாசப்போராட்டத்தை நாகசுரக் கலைஞர் குடும்பத்தைக் களமாகக் கொண்டு சொல்வது. நாகசுரக் கலைஞர் , நாகசுரம் வாசிக்கும்போது அவரது மெய்ப்பாடுகளைச் சிறப்பாக எடுத்துரைக்கிறார் மீனாசுந்தர்.
‘புலன் கடவுள் ‘ கதை ,தேநீரை ரசனையோடு அருந்தும் இளைஞனின் அனுபவத்தை அவனுக்கு அமையும் முரண்பட்ட குடும்பச் சூழலை மெல்லிய நகைச்சுவை மிளிர சுவையாக ஆசிரியர் சொல்லியிருக்கிறார். ’தருணம்’ கதை ரத்தப்புற்று நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனையும், அவனது பெற்றோரின் துயரங்களை நெகிழ்வாய் வாசகமனதுக்கு இடம்பெயர்க்கும் கதை.
கதாசிரியர் தமிழ்ப் பேராசிரியர் , செய்யுள் வழக்கு, நாடகவழக்கு, உலக வழக்கு என்று சொல்லும்முறை அறிந்தவர் . அவற்றை கதைச்சொல்லும் நடையில் அங்கிங்கெனாதபடி கலந்திருக்கிறார் . காவியத் தன்மையான வர்ணிப்புகளோடு கதைகளைத் தொடங்கினாலும், வாசிப்பை இடறாமல் கதைநிகழ்வுகளை அடுக்கி வாசிப்பை இயல்பாக நகரச் செய்கிறார். கவித்துவமான கதைத் தலைப்புகள் கதையின் உயிர்ப்பான முதன்மை பாத்திரங்களுக்கு முரண் நிலையிலிருந்து அணுகச் செய்கின்றன.இதற்கு ‘மாமிச வெப்பம் ‘ போன்ற கதைகளைச் சுட்டலாம்.
கதையில் சொல்லப்படும் உவமைகளும் ,படிமங்களும் கூட முரண் அழகோடு மிளிர்கிறது. திருத்துறைப்பூண்டி பேருந்து நிலையத்தில் , ‘வராக பேரரசன் படைசூழ ஆட்சி செய்வதாகச் சொல்கிறார்.’ கண்ணகி அவிழ்த்த கூந்தலாக விரிந்து நீண்டு செல்கிறது முத்துப்பேட்டை சாலை,’என்கிறார் . ‘கிராமத்து தெருக்கள் மண்புழுக்களாக உழண்டு கிடக்கின்றன ’ ; ‘அதிர்ச்சியின் சவ்வூடுபரவல் ‘ இப்படி நீண்ட பட்டியலிடலாம். எனினும் கதையின் உணர்ச்சிவேகம் குறையாமல் நகர்த்துகிறார் கதைசொல்லி.
மீனாசுந்தர் கல்லூரி பேராசிரியர் என்பதால் , இவர் இன்னும் சிறப்பான கதைகளைத் தமிழ்கூறும் நல்லுலகிற்கு தர வாய்ப்பிருக்கிறது என்ற நம்பிக்கையை இக்கதைத் தொகுப்பு நமக்கு உணர்த்துகிறது.
“புலன் கடவுள் “ – சிறுகதை நூல்.
ஆசிரியர்; மீனா சுந்தர் .
பக்;160 .விலை;190 /.
டிஸ்கவரி பப்ளிகேசன்ஸ் .சென்னை. 78 .
தொடர்புக்கு;7010408481.