புரூனோ & ஷைலக்
ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம்
[ வெனிஸ் கருமூர்க்கன் ]
அங்கம் -1 காட்சி -1 பாகம் : 1
++++++++++++++++
நாடக உறுப்பினர் : [பெயர்கள் மாற்றப் பட்டுள்ளன]
ஒத்தல்லோ : வெனிஸ் சாம்ராஜிய இராணுவ ஜெனரல் [கருந்தளபதி] [45 வயது]
மோனிகா : செனட்டர் சிசாரோவின் மகள். ஒத்தல்லோவின் மனைவி [25 வயது]
புருனோ : ஒத்தல்லோவின் இராணுவச் சேவகன் [30 வயது]
காஸ்ஸியோ : ஒத்தல்லோவின் புதிய லெஃப்டினென்ட். [30 வயது]
ஷைலக் : செல்வந்தச் சீமான் மகன்
சிசாரோ : மோனிகாவின் தந்தை.வெனிஸ் செனட்டர் [60 வயது]
கிராடினோ :சிசாரோவின் சகோதரன்.
லோடாவிகோ : மோனிகா உறவினன், அரசாங்க அதிகாரி.
எமிலியோ : புருனோவின் மனைவி.
மான்டேனோ : சைப்பிரஸ் தீவின் கவர்னர்.
பயாங்கா : காஸ்ஸியோவின் கள்ளக் காதலி.
மற்றும் டியூக் ஆஃப் வெனிஸ், சாம்ராஜிய படைவீரர், இத்தாலியப் பொதுமக்கள்.
நிகழ்ச்சிகள் நடப்பது வெனிஸ் நகரம் & சைப்பிரஸ் தீவு
++++++++++++++++++
ஒத்தல்லோ & மோனிகா
அங்கம் : 1 காட்சி : 1 பாகம் : 1
இடம் : வெனிஸ் நகரத்தில் ஒரு தெரு.
நேரம் : மங்கிய மாலைப் பொழுது.
அமைப்பு : தெரு ஓர மரத்தடியில் இராணுவச் சேவகன் புரூனோ பெருஞ் சினத்துடன் ஒருவனைத் திட்டிக் கொண்டு நிற்கிறான். அப்போது செல்வந்த நண்பன் ஷைலக் வருகிறான்.
ஷைலக் : புரூனோ ! யாரைத் திட்டிக் கொண்டிருக்கிறாய் ? யார் மீது கோபம் உனக்கு ?
புரூனோ : கேட்காதே அந்த அநியாயத்தை ! நான் நொந்துபோய் உள்ளேன். என மனத் துடிப்புக்கு அந்த கருப்பன் தான் காரணம் ! என் உயர் பதவி போச்சு ! என் யுத்த அனுபவம் வீணாய்ப் போச்சு ! மூவர் ஆதரித்து எடுத்துரைத்தும் எனக்குக் கிடைக்காமல் போச்சு !
ஷைலக்: யாரந்தக் கருப்பன் ? எந்த வேலை கிடைக்காமல் போச்சு ?
Othello Drama staged in Toronto [2019]
புரூனோ : அந்த தடித்த உதடன் எனக்குத் தர வேண்டிய லெஃப்டினென்ட் வேலையைத் தகுதியே இல்லாத காஸ்ஸியோவுக்குக் கொடுத்துவிட்டான். வெனிஸ் நகரத்தைச் சேராதவன். பிளாரென்ஸ் நகரத்தைச் சேர்ந்தவன் காஸ்ஸியோ ! உயர் பதவி கொடுத்த ஆப்பிரிக்க மூர்க்கன் வெனிஸ் நகரத்தைச் சேர்ந்தவன் ! அகந்தை கொண்டவன் ! அண்டங் கறுப்பன் !
ஷைலக் : யார் ? அந்த மைக்கேல் காஸ்ஸியோவுக்கா மேற்பதவி கிடைச்சது ? நம்ப முடியவில்லையே ! யாரை மூர்க்கன் என்று திட்டுகிறாய் ?
புரூனோ : ஆம் ! எனக்குத் தெரிந்த அந்த கருப்புத் தளபதி ஆப்பிரிக்க “மூர்” இனத்தவன்தான் ! காட்டுமிராண்டி ! ஆற்றல் படைத்த கருப்பன், அறிவில்லாத அந்தக் கழுத்தைக்குத்தான் உயர்பதவி அளித்துள்ளான் ! எனக்குத் தருவதாய்க் கூறி, என்னை ஏமாற்றி விட்டான். எனக்குத் தெரியாமல் எப்படிக் காஸ்ஸியோவுக்கு தரலாம் ? அவனுக்குக் கூட்டல், கழித்தல் மட்டுமே தெரியும். எந்தப் போரிலும் கலந்து கொள்ளாதவன். முன்னின்று படை நடத்திச் செல்லும் அனுபவமும் கிடையாது.
ஷைலக் : ஜெனரலை ஏன் மூர்க்கன் என்று திட்டுகிறாய் ?
புரூனோ: கருப்பன் என் மேலதிகாரி. மூர்க்கன் ! முரடன் ! காமாந்தகன் ! கன்னிப் பெண்ணைத் தூக்கிச் சென்றவன் ! கள்ளத்தனமாய்க் கடத்திச் சென்று கல்யாணம் செய்து கொண்டவன் ! ஆப்பிரிக்க “மூர்” இனத்தைச் சேர்ந்தவன் ! அவன் ஒரு முசுடன் ! அதனால் கரு மூர்க்கன் என்று திட்டுகிறேன்.
ஷைலக்: என்ன ? இளங்கன்னி மோனிகாவைக் கடத்திக் கொண்டு போய் விட்டானா ? மோனிகா என்னருமைக் காதலி அல்லவா ? என்னைப் பற்றி, அவள் தந்தையிடம் சொல்லி மோனிகாவைக் கட்ட நீயெனக்கு உதவி செய் ! , புரூனோ ! நானுனக்குப் பண முடிப்பு அளிக்கிறேன் ! அவள் தந்தை சிசாரோவுக்கு இதை நாம் தெரிவிக்க வேண்டும் ! அவர் மோனிகாவை எனக்கு மண முடிப்பதாய் வாக்குறுதி அளிக்க வேண்டும் !
புரூனோ : நான் கருமூர்க்கனை வெறுக்கிறேன். மோனிகா வெண்ணிலவு போன்ற வெள்ளைப்புறா ! அவன் கருநிலவு ! ஏதாவது உடற் பொருத்தம் உள்ளதா ? அவள் வெனிஸ் அழகி ! வீனஸ் ! சிறு வடிவம். அவன் பூத வடிவம் ! இருவரையும் பார்த்தால் யானைக்குப் பக்கத்தில் வெள்ளைப் பசு நிற்பது போல் தெரியும் ! அவள் அப்பனைக் கூப்பிடு ! மகள் தப்பினைக் காட்டிடு ! கோபத்தைக் மூட்டிடு ! மகிழ்ச்சி மனத்தில் விஷத்தை ஊற்றிடு ! தெருவைக் கூட்டி முரசடி ! ஊரார், உற்றார் உறவினர்க்கும் உரைத்திடு ! ஊரைக் கூட்டி அவர் பேரைக் கெடு ! தளபதிக்கு எதிராய்ப் பேசி மோனிகாவின் தந்தைக்கும் அவருக்கும் பிளவை உண்டாக்கித் தளபதியின் புது மண வாழ்வைச் சீர்குலைத்திடு !
வில்லன் புரூனோ
ஷைலக் : எதிரில்தான் மோனிகா இல்லம் ! இருட்டி விட்டது ! விளக்கில்லை ! உரத்த குரலில் அவள் அப்பனை விளிக்கிறேன் !
புரூனோ : இடி முழக்கம் எழட்டும் வீட்டு முன் ! இரவில் யாருக்கும் தெரியாமல் நேர்ந்த கள்ளக் கடத்தல் கன்னியைப் பற்றிச் சொல் !
ஷைலக் : [மோனிகா வீட்டு முன் சென்று, கதைத் தட்டி உரத்த குரலில் ] ஐயா பெரியவரே ! விழித்தெழுவீர் ! வெளியே வாரீர் ! உமது வீட்டில் களவு போயிருக்குது ! பெருங்களவு !
புரூனோ : [மோனிகா வீட்டு முன் சென்று] விழிதெழுவீர் கிழவரே ! உமது குமரிப் பெண்ணைக் கடத்தி விட்டான் கரு மூர்க்கன்! கள்ளன் ! வீட்டுக்குள் தேடிப் பாரீர் ! பணப் பெட்டியைத் திறந்து பாரீர் ! கன்னிப் பெண் எங்கே ? கண்ணைத் திறந்து பாரீர் பெண்ணைப் பெற்றவரே !
[ கதவைத் திறந்து பரபரப்புடன் சிசாரோ, சிசாரோவின் மனைவி புதல்வர், வெளியே வருகிறார்]
[ தொடரும்]
++++++++++++++++++++++++++++++
தகவல்:
- Othello By William Shakespeare, Folger Shakespeare Library [1993]
- Othello DVD Movie by Warner Brothers [2007]
- Othello Drama staged in Toronto [2019]