வேரில் பழுத்த பலா

This entry is part 19 of 20 in the series 29 ஜனவரி 2023

குரு அரவிந்தன்

வீடு வெறிச்சிட்டுக் கிடந்தது. காலையில் எழுந்து நிலானி பள்ளிக்குச் சென்று விட்டாள். செல்லும்போது ஓடி வந்து வழமைபோல கட்டி அணைத்து முத்தம் தந்துவிட்டுச் சென்றாள்.

உடம்பு வளர்ந்து விட்டதே தவிர மனசளவில் எந்தவொரு கவலையும் இல்லாத குழந்தையாகவே இருந்தாள். தெளிந்த நீரோடையாய் நகர்ந்த எங்கள் குடும்ப வாழ்க்கையில் சிறு தடுமாற்றம், காரணம் சென்ற வாரம் மகள் வயதிற்கு வந்து விட்டாள் என்ற உண்மைதான்.

கற்பனை உலகிலிருந்த என்னை நிஜவாழ்க்கைக்கு இழுத்துக் கொண்டு வந்து நிறுத்தியிருந்ததும் இந்தச் சம்பவம்தான். பெண்ணாய்ப் பிறந்த எல்லோருக்கும் சாதாரணமாய் நடக்கும், சந்தோஷப்பட வேண்டிய ஒரு நிகழ்வாக இது இருந்தாலும், ஏனோ காரணமில்லாமல் என் மனசு சஞ்சலப்பட்டது.

இதுவரை காலமும் மகளைப் பற்றிய எந்த ஒரு கவலையும் இல்லாமல் இருந்ததென்னவோ உண்மைதான். ஆனால் இங்கே உள்ள சூழ்நிலையின் தாக்கத்தால், என் பெண்ணின் எதிர்காலம் பற்றிய பயம் எனக்குள் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியது. ஆண், பெண் என்ற பாரபட்சம் இல்லாத இந்த நாட்டில் என் மகளை வளர்த்தெடுக்க வேண்டும் என்பது மட்டுமல்ல, இந்த நாட்டின் நல்லதொரு பிரசையாக, எங்கள் பண்பாடு கலாச்சாரம் தெரிந்தவளாக வளர்க்க வேண்டும் என்பதுதான் எங்கள் இருவரின் விருப்பமாகவும் இருந்தது.

அவள் பிறந்ததில் இருந்து அவளது எதிர்காலம் பற்றிய நினைவுகள்தான் என் மனதில் காட்சியாய் ஓடிக் கொண்டிருந்தன. இங்கே தினம் தினம் நடக்கும் சம்பவங்களைக் கேள்விப்படும் போதெல்லாம் வயிற்றில் புளி கரைத்தது போல மனசைக் குடைய ஆரம்பித்துவிடும். என்னதான் நாங்கள் கவனமாக இருந்தாலும், அவளது எதிர்காலத்தையும், அவள் எப்படி வாழப்போகிறாள் என்பதையும் இந்த மண்தானே தீர்மானிக்கப் போகிறது என்ற தவிப்புத்தான் எப்போதும் என்னை அழுத்திக் கொண்டிருந்தது.

நானும் ஒரு பெண் என்பதால் இது போன்ற சூழ்நிலைகளைக் கடந்துதான் வந்திருந்தேன். இப்படி ஒரு சூழ்நிலை எனக்குப் பதுமவயதிலே ஊரிலே ஏற்பட்டபோது, பத்து நாட்கள் வரை என்னைத் தனிமைப் படுத்தி வைத்திருந்ததும், பத்திய உணவு சாப்பிட்டதும், ஆண்களுடன் கண்டபடி பழகக் கூடாது என்று புத்திமதி சொல்லப் பட்டதும், இப்பொழுதும் எனக்கு ஞாபகம் இருக்கின்றது.

ஊரிலே கிராமத்துப் பெண்ணாக நான் வளர்ந்த போது அங்கிருந்த சூழ்நிலை வேறுபட்டதாக இருந்தது. திருமணமாகி கடல்கடந்து இங்கே வந்த போது எனக்குக்கூட இந்தப் புதிய சூழல் புதுமையாகத்தான் இருந்தது. இந்த மேலைநாட்டு மண்ணில் எப்படிச் சமாளிக்கப் போகிறேன் என்று ஒருபக்கம் பயமாகவும், மறுபக்கம் இங்கே உள்ள ஒவ்வொன்றையும் பார்க்கப் பார்க்க வியப்பாகவும் இருந்தது.

இங்கே எல்லாம் சில இடங்களில் ‘கொமினிட்டி வாச்’ என்று ஒரு பதாதையில் எழுதி வைத்திருப்பார்கள். எங்க ஊரிலே இப்படி எல்லாம் எழுதாமலே எங்களை அக்கம் பக்கம் கவனித்துக் கொண்டே இருக்கும் என்ற பயம் எங்களுக்கு எப்போதும் இருந்தது. குடும்பமானம் போய்விடும் என்ற பயத்தில், தவறுகள் செய்யாமல் ஒதுங்கிப் போனதற்கும் அது ஒரு காரணமாக இருந்தது. ஆனால் இப்போது நினைத்துப் பார்க்கும் போது அது எங்களுக்கு ஒரு பாதுகாப்பு வேலியாகவும் பல தடவைகள் இருந்திருக்கிறது.

இங்கே நாங்களோ, பக்கத்து வீட்டில் யார் இருக்கிறார்கள், என்ன செய்கிறார்கள் என்பது கூடத் தெரிந்து கொள்ள முடியாத ஒரு சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

எனது கணவர் கணக்குப் பரிசோதகராக ஒரு நிறுவனத்தில் உயர் பதவியில் வேலை பார்க்கின்றார். அதனால் அடிக்கடி வெளியே செல்ல வேண்டிய சூழ்நிலையில் அவர் இருந்தார். அனேகமாக வார இறுதி நாட்களில்தான் அவரால் வீட்டிற்கு வர முடிந்தது. சில சமயங்களில் வரமுடியாமற் கூடப் போய்விடும். ஆனாலும் நிலானியின் படிப்பு காரணமாக இங்கேயே நாங்கள் தங்க வேண்டி வந்தது. தகப்பனை விட என்னுடைய கண்காணிப்பில்தான் நிலானி அதிகமாக வளர்ந்தாள். சில நாட்களாக நிலானியின் நடை உடை பாவனை எல்லாம் மெல்ல மெல்ல மாறுவது போல என்னால் உணரமுடிந்தது. இதுவரை காலமும் எனது சொல்லைத் தட்டாதவள் இப்பொழுதெல்லாம் சில சமயங்களில் மறுப்புச் சொல்லத் தொடங்கினாள்.

 அவளுக்காக நான் வாங்கிய சில ஆடைகளை வேண்டாம் என்றும், அவை பழைய நாரிகம் என்றும் அணிய மறுத்தாள். இரவிலே சினேகிதர்களுடன் படம் பார்க்கப் போவதற்கு அனுமதி கேட்டாள். சினேகிதியின் பிறந்தநாள் கொண்டாட்டம் என்று சினேகிதர்களுடன் சென்றவள் இரவு நேரம் கடந்து வீட்டிற்கு வந்தாள். தவறான பாதையை நோக்கி அவள் நகருகிறாளோ என்ற பயம் திடீரென என்னைப் பிடித்துக் கொண்டது.

பிள்ளைகளைக் கண்டிக்க முடியாத நிலையில் இங்கே உள்ள சில பெற்றோர்கள் தவிப்பதை நானறிவேன், எனவே கணவரிடம் இதைப் பற்றிச் சொல்லலாமா என்று மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் மனம் கிடந்து தவித்தது. வார இறுதியில் அவர் வந்த போது, பொறுக்க முடியாமல் அவரிடம் பொறுமையாக நடந்ததைச் சொன்னேன்.

‘இந்தப் பருவத்தில் பிள்ளைகள் இப்படித்தான் இங்கே இருப்பார்கள். அவர்களை மெல்ல மெல்ல விட்டுத்தான் பிடிக்க வேண்டும், அவளுடைய மனம் நோகக் கூடியதாக ஒரு போதும் நடக்காதே, அப்படி ஏதாவது நடந்தால் பிரச்னை பெரிதாகிவிடும். அவளுடைய சினேகிதர்கள் யார் என்பதை மட்டும் கவனித்துக் கொள், இப்போதைக்கு அதுவே போதும்’ என்று சொல்லிவிட்டு அவர் மேற்கொண்டு இதைப்பற்றி அலட்டிக் கொள்ளாமல் கிளம்பிப் போய்விட்டார்.

எனக்கு உயிர் போகும் விடயமாக இருந்ததை அவர் அலட்சியமாக எடுத்ததை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இதை இப்படியே அலட்சியமாக விட்டு விட்டால், நாளை அவள் எங்கள் கட்டுப்பாட்டை மீறிப் போய்விடுவாளோ என்ற பயம் பிடித்துக் கொண்டது.

இங்கே பாடசாலையிலேயே எல்லாவற்றையும் சொல்லிக் கொடுப்பதால், 16 வயது முடிந்ததும், தனித்துச் செல்லும் சுதந்திரம் கூட அவர்களுக்கு இருப்பதும் அவளுக்குத் தெரியும். இதற்கு என்ன செய்யலாம், நிலானிக்கு எப்படி அறிவுரை சொல்லலாம், சொன்னால் கேட்பாளா? என்ற சிந்தனையோடு மனம் சஞ்சலப்பட்டுக் கொண்டிருந்த போதுதான், அம்மாவின் அந்தக் கடிதம் ஊரிலிருந்து வந்திருந்தது.

கடைசிக்காலத்தில், கண்ணை மூடுமுன் ஒருமுறையாவது பேரப்பிள்ளையைப் பார்க்க விரும்புவதாக அம்மா எழுதியிருந்தது எனக்குள் ஒரு வித தவிப்பை ஏற்படுத்தியிருந்தது. பாவம், பேரப்பிள்ளைகளைக் கூடக் கொஞ்சமுடியாத நிலைமையை நாங்களாகத்தானே உருவாக்கியிருந்தோம். எங்களைப் போன்ற பலருக்கிருந்த மேலை நாட்டு மோகம் தான் அப்படி ஒரு சூழலை உருவாக்கியிருந்தது.

இதைப் பற்றிக் கணவரிடம் சொன்னபோது பாடசாலை விடுமுறைக்கு ஊருக்குச் சென்று வருவதற்கான ஒழுங்குகள் செய்வதாகவும், வேலைப்பளு காரணமாகத் தன்னால் இப்போது வரமுடியாது என்றும் சொன்னார். நிலானியிடம் இது பற்றிச் சொன்ன போது, எந்த மறுப்பும் சொல்வில்லை, ஆனால் அந்தப் பயணத்தில் அவள் பெரிதாக ஆர்வமும் காட்டவில்லை.

கிராமத்து சூழலில் நிலானி என்ன செய்யப் போகிறாள் என்ற பயம் விமான நிலையத்தில் இருந்து வீட்டிற்கு வண்டியில் போகும்போது எனக்குள் ஏற்பட்டது. வண்டியில் ஏஸி இல்லை என்பதால் எனக்கு வியர்த்து வழிந்தது. நிலானியைத் திரும்பிப் பார்த்தேன், கையில் வைத்து விளையாடிக் கொண்டிருந்த ‘மொபைல் கேமை’ பையில் வைத்துவிட்டு, வயல் வெளிகளை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். ஏஸியோ, குளியலறை வசதிகளோ இல்லாத வீட்டில் இவள் எப்படிச் சமாளிக்கப் போகிறாள் என்ற யோசனை என்னைப் பிடித்துக் கொண்டது. எங்க கிராமத்து சூழல் அவளுக்குப் பிடிக்காவிட்டால், என்ன செய்வது, பொறுத்திருந்து தான் பார்ப்போமே என்று பொறுமையாய் இருந்தேன்.

எங்கள் வீட்டு வாசலில் அப்பா, அம்மா எல்லோரும் அவளைக் கட்டி அணைத்துப் பாசத்தைப் பொழிந்த போது அவளது முகத்தைப் பார்த்தேன், எந்த ஒரு மறுப்பும் அவள் முகத்தில் தெரியவில்லை, அந்தப் பாசவுணர்வைத் தானும் அனுபவிப்பது போல, ‘தாத்தா’ என்று சொல்லிக் கன்னத்தில் முத்தம் ஒன்று கொடுத்து கண்மூடி ரசித்தாள். உணவு விடயத்திலும் அவள் பாகுபாடு காட்டவில்லை, இட்லி, சாம்பார், சட்ணி என்று எல்லாவற்றையும் ‘ஐ லைக் ஸ்பைசி’ என்று சொல்லி ரசித்துச் சாப்பிட்டாள். அம்மாவோ நிம்மதியாக பேர்த்தியின் ஒவ்வொரு செய்கையையும் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள்.

தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்த பசுவுக்கு அருகே சென்று மெல்ல அதன் தலையில் தடவி விட்டாள். ‘ம்..மா’ என்று அது மெல்லிய குரல் எழுப்பி தலையை அசைத்த போது அவள் சிலிர்த்துப் போனாள். தனக்கும் அதற்கும் ஏதோ உறவு இருப்பது போல ஏதோ கதை சொல்லிக் கொண்டு கனிவோடு வைக்கோலை எடுத்து நீட்ட பசுவும் வாங்கிச் சாப்பிட, நிலானியின் முகம் எப்படி இவ்வளவு பிரகாசமாயிற்று என்று என்னால் நம்பமுடியாமல் இருந்தது. இந்த கிராமிய சூழலுக்கு நிலானி ஒத்துப் போவாளா என்ற என்னிடம் இருந்த பயம் மறுகணமே மறைந்து போயிற்று.

தினமும் பாட்டியிடம் கதை கேட்பாள். அம்மா சொல்லும் பழைய கதைகளை ரசித்துக் கேட்பாள். முனி அடித்த கதை, கொள்ளிவால் பிசாசு விரட்டிய கதை என்று அம்மாவும் நிஜமாய் நடந்தது போலக் கதை சொல்ல அவளும் ஆர்வமாய்க் கேட்டாள். வசதிகள் அற்ற, ஆனால் இயற்கைச் சூழல் நிறைந்து வழியும் இந்தக் கிராமம் அவளுக்குப் பிடித்துக் கொண்டதற்குக் காரணம் ‘தாய் மண்’ என்பதாலோ தெரியவில்லை.

மேலை நாட்டில் பிறந்து சொகுசாக வளர்ந்த பெண்ணுக்கு நாங்கள் பிறந்த மண் வாசனை பிடிக்காதோ என்ற போலிக் கௌரவத்திற்காக இவ்வளவு காலமும் அவளின் உணர்வுகளை மூடி மறைத்ததற்காக மனசுக்குள் நான் வருத்தப்பட்டேன்.

 கொல்லைப் பக்கம் சென்றபோது, பலா மரம் ஒன்று வேரில் காய்த்திருந்தது. அதைப் பார்த்ததும் நிலானி ஓடிச் சென்று பழத்தை வருடிப் பார்த்தாள்.

‘முள்ளுக் குத்துது தாத்தா, இது ஜாக்புறுட் தானே?’என்றாள்.

‘நாங்க இதைத் தமிழில் பலாப்பழம் என்று சொல்வோம்.’ என்றார் தாத்தா.

‘படத்திலே பார்த்திருக்கிறேன் தாத்தா, ஆனால் எங்களுக்கு ரின்னில் அடைத்த மஞ்சள் நிறமான பலாச்சுளைகள் தான் தாய்லாந்து நாட்டில் இருந்து கிடைக்கும், அதைத்தான் சாப்பிடுவோம்.’ என்றாள்.

‘அது தான் மாமரம், இது வாழைமரம்’ என்று தாத்தா கொல்லையில் நின்ற ஒவ்வொரு பழமரத்தையும் அவளுக்கு அறிமுகம் செய்தார்.

‘இதை எல்லாம் வாங்குவதற்கு நாங்க சுப்பஸ்டோருக்குத்தான் போகணும், உங்களுக்குக் கொல்லையிலே எல்லாம் கிடைக்குதே தாத்தா, யூ ஆ லக்கி!’ என்றாள் நிலானி.

‘மாம்பழம், பலாப்பழம், வாழைப்பழம் இந்த மூன்றையும் நாங்கள் முக்கனிகள் என்போம். எல்லாமே எங்க தோட்டத்தில் இருக்கிறது. இந்தப் பலாப்பழத்தைப் பாரு, இதன் சுளை மிகவும் ருசியாக இருந்தாலும் அதை இலகுவில் எடுத்துவிட முடியாதபடி முள்போல அதன் தோல் மூடியிருக்கு, அதுதான் இதன் கவசம், இயற்கை தந்த கொடை.’ என்று அவளுக்கு விளக்கம் தந்தார் தாத்தா.

நிலானிக்கு சொந்த பந்தம் மட்டுமல்ல, அந்தக் கிராமச் சூழலும் பிடித்துக் கொண்டது. அவள் வயதை ஒத்த பிள்ளைகளுடன் பல்லாங்குழி, தட்டாங்கல், கண்கட்டி, கபடி, கிரிகெட், ஆறு, குளம் என்று எல்லா இடமும் ஓடி விளையாடினாள். நீளப்பாவாடை, சட்டை அணிந்து கோயிலுக்குச் சென்றாள். அம்மா ஒருத்தியும் அவளுடன் இங்கே வந்திருக்கிறேன் என்பதைக் கூட மறந்து, இவள் போகிற இடத்திற்கு ஏற்பத்; தன்னை மாற்றிக் கொள்வதை நினைத்துப் பார்த்து வியந்தேன். ஒருவேளை இந்த மண்ணின் மகிமையாய் இருக்கலாம் என ஆச்சரியப்பட்டேன்.

விடுமுறை முடிந்து வீட்டை விட்டு கிளம்பும் போது நிலானி ஓடிச் சென்று தொழுவத்தில் நின்ற பசுமாட்டை அணைத்து ‘போயிட்டு வர்றேன்’ என்று முகத்தில் முத்தம் ஒன்று கொடுத்தாள். அதற்கும் ஏதோ புரிந்திருக்க வேண்டும், தலையை அசைக்கும் போது பிரிவுத் துயரின் சோகப் பார்வை அதன் கண்களிலும் தெரிந்தது. ‘உன்னோட ஒரு செல்பி’ என்று குழந்தைத் தனமாகச் சொல்லி கலங்கிய கண்களுடன் செல்பி எடுத்துக் கொண்டாள்.

விமான நிலையத்தில் பாட்டி, தாத்தா, சித்தி என்று எல்லோரிடமும் நிலானி கட்டியணைத்து விடை பெற்றாள். சில நாட்கள்தான் பழகினாலும், பிரிவின் துயரம் தாத்தாவின் கண்களில் கண்ணீராய் வெளிவந்தது. ‘இந்த மண்ணோடு ஒட்டிக் கொள்வாளா?’ என்ற எனது சந்தேகத்தை நிலானியின் கலங்கிய கண்கள் கரைத்து விட்டிருந்தன. நிலானிக்கு எங்க மண் வாசைன பிடித்துக் கொண்டு விட்டது என்பதைப் புரிந்து கொண்டதில் பெரியதொரு மனச்சுமை குறைந்தது போல அங்கிருந்து கிளம்பினோம்.  

‘அம்மா, இவங்க எல்லாம் எவ்வளவு அன்பாய் பாசமாய் இருக்கிறாங்க, அடுத்த விடுமுறைக்கும் நாங்க இங்கே வருவோமா?’ என்றாள் நிலானி.

நான் அவளை ஆச்சரியமாகப் பார்த்து விட்டு, அருகே இருந்த அவளை ஆதரவாய் அணைத்துத் தலையைத் தடவி விட்டேன்.

விமானம் மேற்குத் திசை நோக்கிப் பறந்து கொண்டிருந்தது. எனக்கு அருகே இருந்த இருக்கையில்தான் அவள் அமர்ந்திருந்தாலும், தனது செல்போனில், தனது ரீச்சர் சொன்னதாக ரெக்ஸ் செய்தி ஒன்றைப் பதிவு செய்து அதை எனக்குக் காட்டினாள். வாசித்துப் பார்த்தேன்,

“Though our branches grow in different directions, our Roots remain as One.” 

‘வெவ்வேறு திசைகளில் கிளைகளைப் பரப்பினாலும் மூலவேர் இங்கே ஒன்றாகத்தான் இருக்கின்றது’ என்பதை நிலானியின் அந்த வார்த்தைகள் நிரூபித்திருந்தன. 

மண்ணின் உறவுகள் நிலைக்க வேண்டுமானால், நாம் நாமாகப் பாரம்பரியத்தோடு இருக்க வேண்டுமானால், நிலானியின் விருப்பப்படியே அடுத்த விடுமுறைக்கும் குடும்பத்தோடு வந்து இந்த ‘மண் வாசனையை’ நாங்கள் நுகரவேண்டும், இல்லாவிட்டால் எங்கள் அடுத்த தலைமுறையினர் அந்நியப்பட்டு விடுவார்கள். அதற்கான ஏற்பாடுகளை இப்பொழுதே ஆரம்பிக்க வேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டேன்.

Series Navigationஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம் அங்கம் -1 காட்சி -2 பாகம் : 4நெய்வேலி பாரதிக்குமாரின்   மனித வலியுணர்த்தும்  எழுத்துகள்
author

குரு அரவிந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *