கா. சு வேலாயுதன் எழுதிய சாட்சரதா நாவல் குறித்து

This entry is part 11 of 14 in the series 19 மார்ச் 2023

சுப்ரபாரதிமணியன் 

காசு வேலாயுதன்பத்திரிக்கையாளர் என்ற முறையில் பலம் வாய்ந்தவர். பத்திரிகையாளர் என்பவர் படைப்பிலக்கியம் பொறுத்த அளவில் பலவீனமானவர்.

பத்திரிகை பாணியும் எழுத்துமுறையும் படைப்பிலக்கியத்தில் மரியாதை பெறுவதில்லை என்ற குற்றச்சாட்டு உண்டு. ஆனால் பத்திரிகையாளர் என்ற முறையில் தான் பெற்ற அனுபவங்களை ஒரு அருமையான நாவலாக கொடுத்த வகையில் அவர் ஒரு பலமான பத்திரிக்கையாளராக விளங்கியதை இந்த நாவல் நிருபித்திருக்கிறது.

“ பொழுது கால் மின்னல்” என்ற ஒரு கொங்கு நாட்டு பாத்திரங்களை மையமாகக் கொண்ட ஒரு நாவலை எழுதி சுமார் 30 ஆண்டுகளுக்கு பின்னால் அவர் இந்த இரண்டாவது நாவலினை வெளியிட்டு இருக்கிறார். இடையில் சிங்காநல்லூர் ஒண்டிப்புதூர் சார்ந்த மில் தொழிலாளருடைய வாழ்க்கையை அழுத்தமாக முகநூலில் எழுதி இருக்கிறார். அது இன்னும் நாவல் வடிவம் பெறவில்லை.

இந்த நாவலை பொறுத்த அளவில் எனக்கு ” மற்றும் சிலர்” என்ற வார்த்தை தான் ஞாபகம் வருகிறது. மற்றும் சிலர் என்றால் தமிழகத்தில் உள்ள தமிழர்களை தவிர வேறு இடங்களில் வசிக்கிற தமிழர்கள் எனக்கு ஞாபகம் வருவார்கள்.

என்னுடைய முதல் நாவல் ” மற்றும் சிலர்” ( 1987 ) கூட ஹைதராபாத்தில் வசிக்கிற தமிழ் குடும்பங்களை மையமாகக் கொண்டு இருந்தது. அப்படித்தான் ஆதவன் முதல் ஆ மாதவன் வரை பலர் தாங்கள் வாழ்ந்த பகுதியை, வாழ்ந்த வேற்று மாநிலச் சூழலை படைப்புகளில் கொண்டு வந்திருக்கிறார்கள். ஆனால் தமிழகத்தில் வாழ்ந்து கொண்டு வேற்று மாநில சூழலில், வேறு இடங்களில் வாழும் தமிழர்களைப் பற்றிய படைப்புகளில் இந்த காசு வேலாயுதம் அவர்கள் நாவல் முக்கியத்துவம் பெறுகிறது.

சமீபத்தில் மலையாளத்தில் ஒரு படம் வந்திருக்கிறது ” அதர்ஸ் ”என்று பெயர். அவர்கள் ஆண், பெண்களைத் தவிர திருநங்கைகள் ஆகியவரை அதர்ஸ் என்று குறிப்பிடுகிறார்கள். அப்படித்தான் நானும் தமிழ்நாடு அல்லாமல் வேறு இடங்களில் வசிக்கிறவர்களை ” மற்றும் சிலர்” என்று குறிப்பிடுகிறேன்.

இந்த வேற்று சூழல் பற்றி தமிழ்நாட்டில் இருந்து எழுதிய எழுத்துக்கள் நிறைவே தென்படும். உடனடி யோசிப்பில் அகிலன் அவர்களுடைய ” பால்மரக் காட்டினிலே “ நாவல் ஞாபகம் வருகிறது.

அது மலேசியா பின்னணியில் அங்கு தமிழர்களுடைய வாழ்க்கையை சொன்னது. இதுபோல நாவல்களை அ.முத்துலிங்கம் அவர்கள் கூட எழுதியிருக்கிறார். நானும் பலமுறை மலேசியா நாட்டிற்குச் சென்ற காரணத்தினால் அந்த பாதிப்பில் அங்குள்ள தமிழர்களின் வாழ்வியலை கூர்ந்து பார்த்து கடவுச்சீட்டு, மாலு ( உயிர்மை பதிப்பகம், பொன்னுலகம் பதிப்பகம் ) என்ற நாவல்களை எழுதி இருக்கிறேன்.

பத்திரிகையாளராக பல ஆண்டுகள் அட்டப்பாடி பகுதியில் உள்ள தமிழர்கள் மற்றும் மலையாளிகள் வாழ்க்கையை கூர்ந்து பார்த்து எழுதப்பட்ட ஒரு முக்கியமான நாவல் இது.

அட்டப்பாடி என்றதும் நமக்கு அது அட்டப்பாடி பகுதி பழங்குடியினர் மீதான காவல்துறையினர் அத்துமீறல் என்பது தான் ஞாபகம் வரும முன்னூறு ஏக்கர் பரப்பில் அடர்ந்த காடு. ஒரு சதுர கிலோ மீட்டரில் 2000 நுண்ணுயிர்கள் வாழக்கூடிய பகுதி.

அந்த பகுதியில் 70 களில் ஒரு நீர் மின்நிலையம் கட்ட ஆரம்பிக்கப்பட்டபோது அதன் காரணமாக அமைதி பள்ளத்தாக்கு அழிந்துவிடும் என்று சுகுத குமாரி போன்ற எழுத்தாளர்கள் முன்னின்று போராட்டம் நடத்தி அந்த அணைக்கட்டும் திட்டத்தை கைவிடச் செய்தனர்.

இன்றைக்கு சமீபத்தில் நான் அங்கு சென்று இருந்த போது உலகம் வெப்பமாய் கொண்டிருக்கிற சூழலில் பாதிக்கப்பட்ட பகுதியாக அதன் ஒரு பகுதி வறட்சியாக மாறி இருந்தது. மரங்களும், அபூர்வமான தாவரங்களும் கருகி மறைந்து போய் கிடக்கின்றன.

அந்த பகுதியை பற்றி பல மலையாளச் சித்திரங்கள் ( நாவல்கள்., திரைப்படங்கள் ) இருந்தாலும் காசு வேலாயுதம் தன் நாவலில் குறிப்பிடுபவதை தனித்தன்மை வாய்ந்தவை.

அட்டப்பாடி பகுதி சார்ந்து வாழும் பழங்குடி மக்களுடைய வாழ்வியலை பிரதிபலிக்கும் அவர்களுடைய மொழியிலேயே சொல்லப்பட்ட கவிதைகளை ” ஆதிவாசிகள் கவிதைகள் “ என்ற தலைப்பில் சுதேசமித்திரனை ஆசிரியர் கொண்ட ” அகநாழிகை” மின்னிதழ் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.

அதை நிர்மால்யா மணி அவர்கள் மொழி பெயர்த்து வெளியிடுகிறார். அட்டபாடி சார்ந்து ஒரு முழு நாவலை காசு வேலாயுதம் இதன் மூலம் தந்திருக்கிறார்.

சமீபத்தில் ” பாராக்குருவி” என்ற ஒரு படம் மலையாளத்தில் அட்டப்பாடி மையமாக வைத்து வெளி வந்திருக்கிறது. அது இருளர் மொழியில் எடுக்கப்பட்ட படம். இருளர் மொழியில் மொழி வந்திருக்கிற முதல் படம் அது என்ற வகையில் முக்கியத்துவம் வாய்ந்தது.

அதில் சாராயம் காய்ச்சும் ஒரு தமிழ் பெண்மணி தான் கதாநாயகி..

கணவன் கைவிட்டு போய்விட்டான். மகள் ஒருத்தி இருக்கிறாள். அவளின் வாழ்க்கையும் அவளை சுற்றியுள்ள தமிழருடைய வாழ்க்கையும் மற்றும் பழங்குடியினர் வாழ்க்கையும்தான் அந்த திரைப்படம் சொன்னது.

”பாராக்குருவி என்பது தந்தையில்லாதக் குருவியாம். அதுபோல் அந்த இளம்பெண் கர்ர்பமாகிவிடுகிறாள். தந்தையில்லாதக் குழந்தையாக அதனை வளர்க்க விரும்பவில்லை . கல்வி என்பது பெண்ணுடைய வாழ்வில் மிக முக்கியமாக இருக்கிறது

திருமணம் என்பதைத் தாண்டி அவள் வெளிவர கல்வி முக்கிய பாதையாக இருக்கிறது என்பதை அந்த படம் சொன்னது. இந்த அம்சத்தை தான் சாராயம் மற்றும் கல்வி சார்ந்த முக்கிய கூறுகளைக் கொண்ட நாவலாக காசு வேலாயுதம் நாவல் அமைந்திருக்கிறது. இதையும் ஒரு சிறந்த படமாக்க முடியும்.

கா.சு வேலாயுதன் நாவலில் வருகிற இரண்டு குறிப்பிடத்தக்க விஷயங்கள். மதுவும் அதனால் பாதிக்கப்பட்ட பெண்களும் அவர்களுக்கான கல்வியை மீட்போம் என்ற நடவடிக்கைகளும் முக்கியமானவை. தமிழர்கள் சாராயம் காய்ச்சுகிறார்கள்

அந்த பகுதியில் மதுவிலக்கு அமலில் உள்ள போது கூட தமிழகத்தினுடைய எல்லையில் திறக்கப்படும் டாஸ்மாக் கடைகளால் அந்த கேரளப் பகுதி மக்கள் நாசமாகிறார்கள்.

அந்த ஆண்கள் மீது அந்தப் பகுதி பெண்களுக்கு பெரும் வெறுப்பு இருக்கிறது .மதுவைக் குடித்துச் சாகிறார்கள். அவர்கள் இருந்து என்ன பயன்.. சாகட்டும் என்று பெண்கள் விரும்புகிறார்கள் ஆண்கள் இல்லாமல் விதவையாகவே வாழ அவர்கள் விரும்புகிறார்கள்.

ஆனால் அதிலிருந்து மீள்வதற்காக தங்களை பல அமைப்பு மூலமாக வெளிப்படுத்திக் கொள்கிறார்கள். அதிலொன்று சாட்சரதா.

சமூக அநீதிகளை சொல்லிக் கொள்கிறார்கள் .தங்கள் குழந்தைகள் அதிலிருந்து மீட்க கல்விதான் முக்கியம் என்று உணர்கிறார்கள்.

அப்படித்தான் அந்த இயக்கம் அங்கு ஒளிர் விடுகிறது, பெண்கள் மீதான பாலியல், வன்முறை ஆண்களின் அதிகாரம், காவல்துறை அதிகாரம், கூட்டு களவாணித்தனங்களால் இவர்களின் போக்குகள் நிறைந்திருப்பது இவற்றையெல்லாம் நாவல் சொல்கிறது.

கல்வி சார்ந்த இயக்கம் வெற்றி பெறுகிற போது அப்போதைய குடியரசு தலைவராக இருந்த அப்துல் கலாம் அது சார்ந்த ஒரு கூட்டத்திற்கு வருவது என்பது ஒரு பெரிய அங்கீகாரமாக இருக்கிறது. அதில் போராடிய பெண்களை முன்னிலைப்படுத்துகிறார்.

அவர்கள் கண்ணகி, மாதவி என்ற இலக்கிய கதாபாத்திரங்கள்- காவியத்தன்மை கொண்டவை அதேபோல இந்த நாவலில் வருகின்ற அந்த இரண்டு மாதிரி என்ற பாத்திரங்களும் அப்படித்தான். ஒரு காவியத்தன்மையில் நிலை பெற்றவர்கள்.

அவர்களை அப்துல் கலாம் அவர்கள் அங்கீகரிக்கிறார். ஒரு பத்திரிக்கையாளர் என்ற முறையில் அவரின் வருகையை விவரிக்கிற விதம் சுவாரஸ்யமாக இருக்கிறது.

சமீபத்தில் வெற்றி பெற்ற அட்டப்பாடியை மையமாக வைத்த மலையாள படம் ” கோசியும் ஐயப்பனும் ” அதில் காவல் துறை அதிகாரிகள் சாராய உலகத்தில் இருப்பவர்களோடு எப்படி இறங்கி இயங்கிக் கொண்டு இருக்கிறார்கள்,

அவர்களுடைய வன்முறை உலகம் எப்படி இருக்கிறது என்பதை பற்றி சொல்வது. அந்த படத்தில் வருகிற நஞ்சம்மாவின் ஆதிவாசிப் பாடல் மனதை உருக்கும் பாடலாகும். அப்படி சாராயம் பண உலகமும் கொண்ட தளத்தில் காவல்துறை அதிகாரிகளும் எந்தளவில் இருக்கிறார்கள் என்பதை இன்னொரு பார்வையாய் காசு வேலாயுதன் இந்த நாவலில் சொல்கிறார்.

கல்வி இல்லாமல் வளரும் ஒரு சமூகம், .ஆண்களின் பாதுகாப்பு இல்லாமல் வளரும் சமூகம், . இவர்கள் மத்தியில் பெண்களுடைய நிலையை உயர்த்தும் போக்கு என்பது மிக முக்கியமாக இருக்கிறது.

இந்த தற்போதைய சமூக உலகத்தில் இருந்து இன்னொரு நல்ல சமூகம் வர வேண்டும் என்ற கனவு வேலாயிதத்திடம் இருக்கிறது.

இந்த கனவும் இந்த லட்சியமும் இந்த நாவலில் மட்டுமல்ல அவருடைய எல்லா படைப்புகளிலும் அடிநாதமாக இருக்கிறது அதை அவருடைய சிறுகதைகளிலும் முகநூல் கோப பதிவுகளிலும் நாம் காணலாம்.

அவருடைய முதல் நாவல் “ பொழுதுக்கால் மின்னல்” . மின்னல் என்றால் வெளிச்சம், ஒளி ,அப்படித்தான் இலக்கியங்கள் என்பது ஒளி தரும் கலங்கரை விளக்கமாக இருக்க வேண்டும் என்பதை அவர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

இதில் வருகிற மது சார்ந்த விஷயங்களை ஒட்டி சோம பானம் பற்றிய ஒவ்வொரு அத்தியாயத்தின் குறிப்புகளும் சுவாரஸ்யமாக உள்ளன. அந்த சோம பானத்திற்கு எதிராக மக்கள் ஊர்வலமாக செல்வது, போராடுவது என்பது இந்த நாவலின் முதல் அத்தியாயமாக இருக்கிறது .

அவர்களில் தங்களை ஒழுங்கு படுத்திக் கொண்டு ஒரு ஊர்வலமாக செல்கிறார்கள் என்பதை விவரிக்கும் அந்த காட்சியில் பல சிற்றாறுகள் சேர்ந்து கலந்து போவது போல் பேராறு எனக் கடந்து செல்லும் விவரிப்பு மிக அற்புதமானவாகும்.

அதேபோல இந்த பகுதி குழந்தைகள் விளையாட்டு அம்சங்களில் இருக்கிற பாடல்களை அவர்களின் மொழியிலேயே அவர் சொல்கிறார். அந்த இருளர் மொழி என்பது தனியாக இல்லை

ஆனால் அவர்கள் பேச்சு வழக்கில் பயன்படுத்தும் அந்த மொழியில் உள்ள பாடல்களை இந்த நாவலில் அறிமுகப் படுத்தியிருக்கிறார். பழங்குடி மக்களுடைய வாழ்க்கையை மேம்படுத்த உதவும் பண்டிகை நடவடிக்கைகள், அங்குள்ள விலங்குகள், அந்த மக்களை அச்சுறுத்துவது, குறிப்பாக காட்டு யானை போன்றவற்றின் அச்சுறுத்தல்கள் போன்றவையெல்லாம் விலா வாரியாகச் சொல்லப்பட்டுள்ளன.

அந்த பகுதியில் உள்ள ஊர் பெயர்கள், இருளருடைய பாத்திரங்களின் பெயர்கள் இவையெல்லாம் ஆச்சரியப்படுத்துபவை.

அமைதி பள்ளத்தாக்கு இந்த நாவலில் ஒரு பகுதியாக அங்கங்கே வந்து போகிறது பவானி நதியின் ஓட்டமும் அதனோடு இணைந்து போகிறது.

ஒரு காடு பாதுகாப்பாக இருக்கிறது, மக்களை பாதுகாக்கிறது ஆனால் அந்த காட்டை சுரண்டி வாழும் சில மக்கள் எப்படி அவர்களை எல்லாம் வெளியேற்றுகிற வேலையில் இருக்கிறார்கள் என்பதை தொடர்ச்சியாக சொல்லுகிறார்.

அதுவும் காவல்துறைக்கும் சாராய கும்பலுக்கும் இடையில் உள்ள பிணைப்பைச் சொல்கின்ற போது அந்த பணப்பரிமாற்றங்களை வெளிப்படையாகவே ஒரு பத்திரிக்கையாளர் என்ற முறையில் தைரியத்துடன் காசு வேலாயுதன் அவர்கள் சொல்லியிருக்கிறார்.

அதுவும் சிறுவர்கள் சிறுமிகள் சார்ந்த பாலியல் தொல்லைகள் எப்படி வடிவெடுக்கின்றன என்பதை சொல்கிறார். தமிழர்கள் சாராயம் காச்சி அந்த பழங்குடி மக்களை வீழ்த்துகிறார்கள் என்பதில் தமிழர் மீது பழி கூட இருக்கிறது.

ஆனால் அது உண்மையான விஷயமாக இருக்கிறது. ஹாஜி மஸ்தான் போன்றவருடைய பிணைப்பு, அதிலிருந்து மீள்வதற்காக ஒரு காவல்துறை அதிகாரி தருகிற நம்பிக்கைகளோ சிதறிக்கப்பட்டு இருக்கிறது.

மூன்று மாநில காவல் துறையினர் அங்கு செயல்படுவதும் அவர்களின் போக்கும் விரிவாக சொல்லப்பட்டிருக்கிறது .

பெண்கள் இந்த மதுவையும் போலீஸ் அராஜகத்தை எதிர்த்து உயிர் விட தயாராக இருக்கிறார்கள். பழங்குடிகளின் கல்வியாகட்டும் தங்களுடைய கல்வியாகட்டும் தமிழர்களுடைய கல்வியாகட்டும் அவருடைய வாழ்வில் எவ்வளவு முக்கியமானது என்பதை இந்த நாவலில் அவர் சொல்லி இருக்கிறார் .அப்துல்கலாம் அவர்கள் முன்னிலையில் மக்கள் எடுத்துக் கொள்ளும் சபதம் மதுவை ஒழிப்பது குறித்ததாக இருக்கிறது.

ஆனால் இந்த நாவல் எழுதப்பட்ட காலம் என்று இப்போது ஆக இருந்தாலும் அதில் வருகிற சம்பவங்களும் நிகழ்வுகளும் 25 ஆண்டுகளுக்கு முற்பட்டவை. 25 ஆண்டுகள் கழித்தும் அந்த மக்களின் வாழ்வு இன்னும் பெரிதாக மேம்பட வில்லை என்று கருதுகிறேன்.

ஆகவே அறம் சார்ந்து பல கேள்விகளை இந்த எழுப்பும் இந்த நாவலின் அந்த மக்கள் வாழ்வு மேம்பட அக்கறை குரல் ஒன்றையும் வேலாயுதம் அவர்கள் எழுப்புகிறார்.

தொடர்ந்து சுற்றுச்சூழல் சார்ந்து யானைகளை ஒட்டி அவர் எழுதிய யானைகள் வருகை தொடர் புத்தகங்களும், அவருடைய நொய்யல் இன்று புத்தகமும் இந்த நாவலை வருகிற அட்டப்பாடி சார்ந்த காட்டுப் பகுதிகளுடைய நுணுக்கமான விவரிப்பும் மக்களின் வாழ்க்கையும் சூழலியல் இலக்கியம் சார்ந்த இலக்கியத்தில் காசு வேலாயுதத்தின் பங்களிப்பை சிறப்பாகவே காட்டுகின்றன.

எழுத்துப் பிரசுரத்தின் இந்த ஆண்டின் சிறந்த நாவல்களில் ஒன்றாக பாராட்டைப் பெற்றது இந்த நாவல்.

விலை ரூ. 310 /- ஜீரோ டிகிரி பதிப்பகம், சென்னை வெளியீடு செல்பேசி: 8925061999

Series Navigationஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம் அங்கம் -1 காட்சி -2 பாகம் : 11சி.ஜெயபாரதன் வாழ்க்கை அனுபவங்கள்
author

சுப்ரபாரதிமணியன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *