Posted in

க…… விதைகள்

This entry is part 6 of 14 in the series 19 மார்ச் 2023

1

மனிதன் தேடும் ‘சுகம்’

ஒரு நாணயமாகத்தான்

தரப்படுகிறது

அதன் மறுபக்கம்

‘வலி’

2

வெறுப்பை

விரோதத்தை

கோபத்தை

பகையை நோக்கி

எடுத்துவைக்கும்

காலடிகளே

‘விவாதங்கள்’

3

நான்

எப்படிப்பட்டவன் என்று

நான் சொல்வதும் பொய்

அவன் சொல்வதும் பொய்

அவனவன் சொல்வதும்  பொய்

4

சிவப்பு பச்சை விதி

வாகனங்களுக்கு மட்டுமல்ல

வார்த்தைகளுக்கும்தான்

5

பேச்சால்  யாரையும்

துன்புறுத்தாமல் பேசுவது

ஓர்  இன்பமான துன்பம்

6

நீ தந்த முதல்

தேநீரைச்

சுவைக்கையில்

ஒரு சொட்டு என்

சட்டையில் விழுந்தது

அந்தச் சட்டை

துவைக்கப்படாமல்

இன்றும் என்

அலமாரியில்

7 

கசக்கிக் காயப்போட்ட

என் உடுப்பு  காற்றில் துடிப்பது

நேற்று  அதை உடுத்தியபடி

வேலையில் துடித்ததைச்

சொல்கிறதோ

(ஒரு  வெளிநாட்டு  ஊழியன்)

8

அன்பு மனைவியே

யார்யார் மரணத்துக்கோ

இருவரும் சேர்ந்தழுதோம்

ஒருநாள் வரலாம்

அப்போது

நீ மட்டும் அழுவாய்

அல்லது நான்மட்டும் அழுவேன்

9

நிலாத்துண்டென

ஒரு நினைவுப்பரிசு எனக்கு

எல்லாருக்கும் அது   அழகு

எனக்கு அது ஆசான்

பார்க்கும்போதெல்லாம்

சொல்கிறது

‘போற்றவந்தேன்

உன் பெருமையை

புரண்டுவிடாதே’

அமீதாம்மாள்

Series Navigationஎரிமலை, பூகம்பம் எழுப்பும் புவி மையப் பூத அணுக்கரு உலை எரிசக்தி இருப்பு 2025 ஆண்டில் கணிக்கப்படலாம்.குவிகம் ஒலிச்சித்திரம் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *