அடிவாரத் தரிசு பூமி.
எல்லோரும் தினம் புழங்கினாலும் யாருக்கும் நினைவு இல்லை.
கருங்கல் ஒற்றைச் சிற்பமாக நிற்கும் மலையின் கீழே ஒரு காலத்தில் சூரிய வெளிச்சம் உள்ளே வராமல் மறைத்த அடர்ந்த பெருமரத் தோப்புகளும் பரந்து பந்தலித்த கொடிகளும், மூலிகைச் செடிகளும் வளர்ந்து செழித்திருந்ததை யாரும் நினைவு கொள்வதில்லை. கேட்டால், அறுதப் பழசுக் கதை என்பார்கள். நடப்பில் இருக்கும் காலத்துக்கு ஆயிரம் வருடம் முற்பட்டது என நம்பிக்கை.
மலையின் செழிப்பை எடுத்தோதிக் கொண்டு தினம் மாலை நேரத்தில் அடர்த்தியான மேகங்கள் மலைமுகட்டில் சேர்ந்து குவிந்து குறிஞ்சி நிலத்தை ஒரு மாசு, தூசு இன்றித் தூய்மைப் படுத்தும் வானத் திரவமாக நிறுத்தாமல் பொழிந்து கொண்டிருக்கும்.
மலைமேலே மழை பெய்தால் மலையடிக்கும் வாராதோ / மழைவெள்ளம் பெருகி வந்தால் மலையடியில் நதியாமோ என்று அடிவாரத்துப் பெண்கள் தினசரி மலையில் மழைபெய்யும்போது அடிவாரத்தில் வட்டமிட்டு நின்று கைகொட்டிப் பாடுவார்கள்.
மழையின் கீற்றுகள் தரைக்கு இறங்கும்போது அவர்கள் அந்தத் தாரைகளில் சொட்டச்சொட்ட நனைந்து ஆடத் தொடங்குவார்கள். இப்படி மலை வாசனை அடிக்கும், மழை மணக்கும் ஒரு நாள்.
அன்றைய தினத்துக்கு மழை ஓய்ந்த பின் அந்தி சாயும் பொழுதாக இருட்டு மெல்லக் கவிந்து வந்தபோது மானுடர் இருப்புப் பெருவெளியின் ஊடாக ஓர் இளைஞன் இடுப்பில் வேட்டி மட்டும் அணிந்தவனாகக் கடந்து வந்தான்.
பசியால் குழிந்த கண்களும் மரத்துப் போய்க் குழைந்து தடுமாறும் கால்களுமாக அவன் தன் தலைக்கு மேல் இருகையும் வைத்துக் கும்பிட்டபடியே வந்தான். மழைப்பாட்டு ஓய்ந்து வீடு திரும்பும் மகளிரிடம் ஒரு கைப்பிடி சோறு யாசித்தபடியே நடந்து வந்தவன் மழை நீர் தேங்கிய பாதையில் கால் சற்றே வழுக்க, அம்மவோ அம்மவோ என்று கூவியபடி நடந்தான்.
”வழிப்போக்கனே, நீ உண்ண இன்னும் இரண்டு மணிக்கூறாவது ஆகுமே! சோறாக்கிக் குழந்தைகளுக்கு பாலும் சீனியும் பெய்து ஆறவைத்த பால்சோறை ஊட்டி முடித்து, அடுத்து முதியவர்கள் ஆகாரம் செய்து, வளர்ந்த எம் அன்பு மக்களும், நாங்களும் எம் துணைவரும் உண்ணும் நேரம் உனக்கும் சோறுண்டு. இரண்டு மணி நேரம் பசி பொறுத்து ஊர் வனப்பும் மலை அழகும் கண்டு வா உண்டு போகலாம்”.
வழிப்போக்கனை அந்த மலைக்கு ஆற்றுப் படுத்தினது இன்று நடந்தது போல் தான் உள்ளது. அதற்குள் ஒரு ஆண்டு கடந்து போய்விட்டது.
அடிவாரக் குமரன் கோவில் வாசலில் கல் ஆசனத்தில் அமர்ந்தபடி இடுப்பில் வேட்டியைப் பிரி முறுக்கிச் செருகி இருந்த குழலை எடுத்து ஊதத் தொடங்கினான் அவன். மனையக ஆண்கள் பாட்டு கேட்டுத் தாளம் கைத்தாளமாகப் போட்டபடி அவனை அணுகினர். அவரெல்லாம் இசை ரசிகர்கள்.
”அய்யரீர், இசை நன்று. குரல் நன்று. சுவரம், கமகம், பிர்க்கா, ராகம், தானம், ஆலாபனை என எல்லாமே நன்று கண்டீர். எனில் காணீரோ, குழந்தைகளும் முதுமக்களும் இசை கேட்டு உறங்கத் துவங்கினர் மாதோ. அவர்க்குப் பொங்கிய சோறும் சமைத்த வாழைக் கறியும், வள்ளிக்கிழங்கைச் சுட்டதும் வீணாகி விடும் அந்தோ. எனவே குழல் வாசிக்காமல், பாடாமல் தாளம் தட்டாமல் இருப்பீராகின் அது நன்று. உண்டு முடித்து மனம் இருந்தால் எங்களுக்காக ஆடும். எமக்குப் பாடும். எம் உழைத்த களைப்பு நீங்கக் குழலூதுக”.
அந்த சம்சாரிகள் வேண்டியபடியே அவன் மறுபடி இடுப்பில் குழலைச் செருகியபடி சோறு கிடைக்கக் காத்திருந்தான். அன்றைக்கு நெருப்பு நீரோடு சிநேகம் அதிகம் கொள்ள, நெல்லுச்சோறு சடசடவென்று விரைவாகப் பொங்கி முடித்தது எல்லா வீடுகளிலும். அந்த வேகத்தைக் கொடுத்தவன் அந்த வழிப்போக்கன் என்பது யாருக்கும் தெரியாது.
உண்ணலாம் வருக.
ஒவ்வொரு பெண்ணும் அவர்தம் கணவன், சோதரர், தந்தையரும் அன்போடு அழைக்க, கிழக்கு மேற்கான தெருவில் மேற்குக் கோடி வீட்டுக்கு ராச்சாப்பாட்டுக்கு விருந்தாடப் போக அவன் விழைந்தான்.
வீட்டுக்கு வெளியே, நனைந்த மண் பரவிய வாசலில் தடுக்குகள் இட்டு இருந்து, பூவரச இலைகளில் வட்டித்துச் சுடச்சுடப் புளிக் குழம்பும் வழுதணங்காய் எண்ணெய்ப் புரட்டலுமாக, அமர்க்களமாக உண்டு முடிந்தானது. சோறுண்டு வயிறு நிறைந்து, குளிர்ந்த நிலவு ஒளிவீசிய இரவிலெல்லோரும் கூடி இருந்து மகிழ அவன் குழலூதத் தொடங்கினான்.
குரலிசைக் கலைஞர்கள் பாடிப் புகழ்பெற்ற சில பாடல்களை குழலில் பகர்த்தியெடுத்து அவன் வெளி நிறைக்க, கீதங்களுக்கு இடையே சில்வண்டுகள் கிறீச்சிட்டுத் துளைக்கும் அமைதியின் அடர்த்தி, இசையனுபவத்தை ஒன்று பலவாக்கி அளித்தது. இடைவெளியும் இசைதானே. குழலோசை இற்றுத் தேய்ந்து நிறைவு பெற்றது.
அவன் சிரித்தபடியே குழலை இடுப்பில் செருகிக் கொண்டான். வினாடியில் அது காணாமல் போனது.
வெளிவட்ட மனிதரிடையே சிறு சலசலப்பு. பாம்பு என்று நசுக்கப்பட்ட ஒன்றிரண்டு குரல்கள் மங்கி ஒலித்தன.
பாம்பு வரட்டும் என்று தலையசைத்தான் குழலூதி வந்தவன். ஓ என்று ஒச்சையிட்டுப் புயல் கடந்து கடலில் இருந்து நிலம் கொண்டது போல் பாறைக் கற்களை இழைந்து சுற்றி முன்னால் வந்து கொண்டிருந்த பாம்பைக் கண்டு அஞ்சி ஒரு பெரிய ஆள்கூட்டமே நடுநடுங்கி தடுக்குகளை விட்டு எழாமல் அமர்ந்திருந்தது.
மலினமும் கீழ்மையுமே வடிவான பாம்பு இனம் இந்தப் பிரதேசத்திலும் மலையிலும் பிரவேசிக்கத் தடையுள்ளதை அறிவீரோ என்று ஒரு வயோதிகன் எழுந்து கைகட்டி நின்று கேட்டான். அவனை நோக்கிப் படம் உயர்த்தி இன்னும் அதிகமாகச் சத்தமிட்டுப் பாம்பு சொன்னது –
”ஓய் சும்மா இரும். நான் குழலனுக்கு சிநேகிதன். அவனை விட்டு நான் இருக்க மாட்டேன். என்னை விட்டு அவன் இருக்க மாட்டான்”.
இறக்கை முளைத்த பாம்பா நீ என்று குடியிருப்புத் தலைவன் கேட்டான். ஏன் சிறகு இருந்தால் என்ன போச்சு இல்லாமல் என்ன ஆச்சு என்று பாம்பு போதையேற்றும் இளம்பெண் குரலில் கேட்க அவர் சொன்ன காரணம் இப்படி இருந்தது –
”நான் இதுவரை றக்கை முளைத்த பாம்பைக் கண்டதே இல்லை. நீர் அப்படியானவரென்றால் கண்டு போக உத்தேசம் கொண்டு தான்”.
அவர் சொல்லி முடிப்பதற்குள் உஸ்ஸ்ஸ் என்று ஏற்றிய பெரும் அடுப்புத் தீயை மழைபொழிந்து அணைப்பது போல் அந்த சத்தம் இருந்தது. கேட்டவர், சற்றே பின்னால் நகர்ந்து, எழுந்து நின்று, ஓடியே போனார்.
அந்த ராத்திரி தான் பாம்பு அதிரூப சுந்தரியாகி அந்தக் குழலனோடு பின்னிப் பிணைந்து கிடந்து நிலவொளியில் கலவி செய்தாள். குழல் ஊதி இசை வழங்கியதற்கு ஈடான காட்சி அனுபவமாக அந்தப் புணர்ச்சி இருந்தது.
குழந்தைகள் உறங்க, வன்முதியோர் உறங்கியதாக பாசாங்கு காட்டிக் கிடக்க, அகவை அறுபது வரையான ஆண்கள், கண்ணுக்குத் தெரியாத காட்சி என்பது போல் பொருட்படுத்தாமல் அதில் ஈடுபட்டு நோக்கியிருக்க, வயதாக வயதாக வனப்புக் கூடும் பெண்கள் கைத்தண்டையிலும் பின்கழுத்திலும் மயிர் சிலிர்க்கக் கண்டு, இணையரோடு வீடு புகுந்து இணை சேர, வீட்டுக்கு வீடு துய்த்த இன்பம் நடுராத்திரிக்கு ஐந்து நாழிகை வரை கோலாகலமாக நீண்டது.
இறுதியில் யாரும் பார்க்காத ஒரு ஷணத்தில் அந்தப் பாம்புப் பெண் குழலானாள். ஏதும் நடக்காதது போல் குழலை அவன் மடியிருத்தினான்.
அவன் அப்புறம் அந்த தாழ்வாரப் பிரதேசத்தைக் கடந்து, முல்லைத் திணைப் பரப்பும், மருதமும், ஆர்பரிக்கும் கடலலை வந்து திரும்பும் நெய்தலும் ஒன்றும் போகவில்லை. இத்தனை ஏன், மலையடிவாரம் கடந்து,, வளைந்து சுற்றி ஏகும் மலைப் பாதை ஏறி நடந்து, இளைப்பாறி, மீண்டும் மலை ஏறி, பின்னும் ஏறி, மலை உச்சிக்குச் சென்று, வேல் பிடித்த மலைக் குறவனையும், வள்ளி என்ற கொடிவள்ளி போன்ற, ஒடிந்து போகுமோ என ஐயுற வைக்கும் இடை மெலிந்த மலைக் குறத்தியையும் சிலையாக வணங்கித் தேனும் தினையும் உண்டு அலுத்து, இன்று இது போதும் என்று அன்புடன் விலக்கித் திரும்பியதும் இல்லை.
மானுடர் வாழும் வட்டத்தின் எல்லா மனைகளும் அவன் மனை ஆக நேரம் அதிகம் பிடிக்கவில்லை. மூவைந்து வயதில் திருமணமாகி உடனே தனிக் குடுத்தனம் வைத்த வாவரசிப் பெண்கள், என்றால் வாழ்வரசிப் பெண்கள் உணவு சமைக்கும் தளிகையறையைக் கூடத் தவிர்க்காமல் அவன் போய் வந்தான்.
கல்யாணம் கட்டாத குமருகளை, என்றால் குமரிப் பெண்களைக் கண்டு நீண்ட நேரம் உரையாட வேண்டாமே என்று அன்போடு விலக்கப்பட்டது வேறு கதை. அதைக் கடைப்பிடிக்க முடியாமல் போனதும் வேறொரு கதை.
அவர்கள் அதாவது அந்தப் பெண்கள் அனைவரும் நிலவு முழுக்க முழுக்க முகம் காட்டாத வாவு நாட்களின் அடர் பகல் வேளைகளில் ஏதாவது வீட்டு முன்றில் இதுவும் அதுவும் பேசியிருக்கும் கூட்டங்களில் பங்கு கொள்ளக் கோரப்பட்டான்.
அவர்களில் திருமணமான பெண்கள் அமாவாசை இரவில் கட்டியவனோடு உடல் உறவு வேண்டும் என்ற சம்பிரதாயத்தை உத்தேசித்து பிறர் அறியாது கலந்து இடைபழகத் தேர்ந்திருந்த இரவுக்குறிக்குச் செல்லக் காத்திருக்கும்போது நடக்கும் பேச்சு என்பதால் கொஞ்சம் அதிக சிருங்கார ரசம் கொண்டு விளங்கும். அது மட்டும் புரியாதது போல் பாவனை செய்து குழலன் அந்தக் கூடியிருந்து குளிரும் உரையாடலில் பங்கு பெறுவான்.
”இந்தப் பெண்கள் இதற்கு மேல் நிகழ்த்தியும் காட்டுவரோ”.
இதைக் கேட்டது அவன் மடியில் புல்லாங்குழலாகச் செருகி வைத்திருந்த பாம்புப் பெண் தான். குழலன் ஒன்றும் மறுமொழி செப்பாமல் சிரித்தபடி இருந்தான்.
ஈதிப்படி இருக்க குழலன் புகுந்து புறப்பட்டு வரும் வீடுகளில் ஒன்றில் ஒரு பிற்பகல் பழைய பாத்திரங்களை சேர்ந்தியில் இருந்து எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்தபோது சோறு பொங்கும் வெங்கலக் கங்காளம் ஒன்றுக்குள் இருந்து ஒரு தேள் கொடுக்கு நிமிர்த்தி வெளியே வந்தது, அதைப் பார்த்த மாத்திரத்தில் குழலன் ஒரு வினாடி அதிர்ந்தான். பின் சந்தோஷம் கொண்டவனாக அந்தத் தேள் அருகே குனிந்து ஊவென்று ஒரு சிறு ஓலமிட்டபோது கொடுக்கு மடக்கி வந்த தேள் பதில் மரியாதை காட்டி மரக்கதவின் பின்னே ஓடியது.
அந்த வீட்டிலும் அண்டை அயலிலும் கூச்சல் எழுப்பிட அந்த இளைஞன் எந்த அச்சமுமின்றி மரக் கதவின் பின்னால் கை நுழைத்து தேளை இரு விரலால் மெல்லப் பிடித்து வெளியே கொண்டு வந்தான். அவன் விரல்களுக்கு இடையே நின்று அவனையே பார்த்தபடி இருந்தது பெண் தேள்தான். அது அவனை ஆசையோடு பார்வையில் விழுங்கியது.
அண்டை அயல் அழகான பெண்களால் ஆனது. அத்தனை பேரும் அழகுதான். அவர்களில் ஒருத்தி கேட்டாள் – புல்லாங்குழல்காரா உனக்குத் தேளும் அடங்குமோ?
அடக்கி ஆள ஏதுமில்லை. எல்லா இனமும் அன்பு செலுத்த என் மனம் இயங்குவது எப்போதும் தான்.
அந்தப் பெண்கள் கிசுகிசுத்திருக்க, இரண்டு பேர் முன்னால் வந்து அவன் விரல்கள் நடுவில் அமர்ந்திருந்த தேளைக் காட்டி, ”அடித்துக் கொல்ல வேண்டாம் கேட்டீரோ மலைக் காட்டில் மரப் புதரில் இறக்கி விட்டுப் போய்க்கொள்மீன்” என்று ஆதூரம் ஒலிக்கச் செப்பினர்.
அப்படியே ஆகட்டும் என்று தலையசைத்து அவன் வாசல் ஏக, இடுப்பில் செருகியிருந்த குழல் பெண் குரலில் திரும்பத் திரும்பச் சொன்னது –
”தேள்ப்பெண் கொட்டி உம் உயிர் கொள்வாள். பறந்து பயமுறுத்தி அடிவாரப் பிரதேசம் ஆளின்றி வெற்றிடமாக்குவாள்”.
”வேண்டாம். அடித்துக் கொல்”.
அண்டை அயல் மானுட அழகுக் கன்யகை இருவர் குரல் உயர்த்தி கிங்கிணி இசைக்குரலில் அவனை வேண்டினர்.
”பாவம் சிறு உயிர் விட்டுவிடு. வேறு யாரையும் கேட்காதே”.
சொல்லும்போதே அவர்கள் கண்ணில் ஆசை நீர்ப் பெருகி கன்னத்தில் கோடிட்டது. அவர்களும் ஒரே நேரத்தில் குழலனைக் காமுறத் தொடங்கி விட்டார்கள் என்று கண்ட பாம்புப் பெண் அவர்களை அச்சுறுத்தும் தொனியில் சொன்னாள் – ”விரைந்து வரும் ஒரு நூறாண்டில் எல்லாம் மாறும்”.
பாம்புப் பெண் தேய்ந்து மறையும் குழல் இசையாக அவன் காதில் சொன்னாள் – ”நீ எதிர்காலத்தில் இருந்து வேடிக்கை காண வந்தவன். பார்க்க வந்தவன் பார்த்துத் திரும்பட்டும். கேட்க வந்தவன் கேட்டுத் திரும்பட்டும். படிக்க வந்தவன் படித்துப் போகட்டும். உயிர்க்க வந்தவன் உயிர்த்து உயிர் நீடிக்கத் திரும்பட்டும்”.
அவள் சொல்லிக் கொண்டிருக்கும்போதே தேள்ப்பெண் இறக்கை முளைத்து அவன் கையிலிருந்து வழுக்கி இறங்கிப் பறந்து மரக் கதவு மேல் அமர்ந்தாள். அவனையே கூர்ந்து பார்த்து தேள்ப்பெண் வெளியே பறந்து வேகம் கொண்டு வான்வெளியில் மறைந்தாள்.
அண்டை அயல் பெண்கள் ஆச்சரியம் அடக்க முடியாது அவனைச் சுற்றி நின்று கலுபிலு எனப் பலவும் பேசி வீடுகளிலிருந்து தாயார் அழைக்க, வந்தாச்சு என்று காலே இறக்கையாக ஓடித் திரும்பினர்.
இறக்கி விடு இறக்கி விடு என்று இடுப்பில் குழலாகச் செருகியிருந்த பாம்புப் பெண் அவசரப்படுத்தினாள். அந்த வீட்டுச் சேர்ந்தியின் குளிர்மையும், கடித்து உண்ணலாம் எனத் தோற்றமளிக்கும் இருளும், வெதுவெதுப்பாகச் சிறு கீற்றாக சூரிய ரேகை சுவர் மேல் ஒடுங்கிய சாளரமாகக் கவிந்த நேர்த்தியும், பாம்புப் பெண்ணை இணை விழைய வைத்து, நேரம் காலம் பார்க்காமல் மையல் மீதூறச் செய்தன. வீட்டுப்பெண் பகல் உறங்கிக் கிடந்தாள். கணவன் உப்பு விற்கப் புகார் நகர் ஏகி இருக்க, குழந்தை இல்லாத அமைதியான வீடு.
சேர்ந்தியில் சேர்ந்திருப்போம் வா என்று கலவி வெண்பா ஈற்றடி கொடுத்த பாம்புப் பெண் குழலனை இடுப்பில் வளைத்து, குறி பற்றி இறுக்க, அவன் கண்மலர்ந்து கிடக்க அவள் முழு மானுடப் பெண் ஆனாள்.
வெண்பாவையும் காமம் தோய்ந்த குரலில் அவன் காதில் ரகசியம் போல் முணுமுணுத்தாள். அந்தத் தருணத்தில் அவன் மேல் கழிவுநீர் வாடை அதிகமாக வருவதை உணர்ந்தவன் சங்கடப்பட்டு நோக்கினான்.
அது என்னை அதிகம் காமுறச் செய்யும் அது கருதித்தானே உன்னோடு உறவு விழைந்தேன் என்று அவனை உடலெலாம் வருடி இன்பம் கொண்டாள்.
அந்தப் பாம்புப்பெண் மீது தாழம்பு வாசம் அலையலையாகப் படர்ந்து வர அவன் தீர்க்கமாக சுவாசம் உள்வாங்கி வெளியிட்டு மணம் நுகர்ந்து அனுபவித்தான்.
சேர்ந்தியில் சிறு வெள்ளிமீன் பூச்சிகள் இருந்ததால் அவை ஓரமாக வெள்ளி உடல் மினுமினுக்கச் சுவர் மேலும், பழைய நாட்குறிப்புகளின் ஓரங்களிலும் வந்து நின்றன. அந்த வெளிச்சம் சிறு தாரையாகக் கவிந்திட அவன் அவளைப் புரட்டிப் போட்டான். மூக்கில் வைர மூக்குத்தி போல் ஏறி நிற்கும் வெள்ளிமீன் பூச்சிகள் ஆடவும் செய்தன.
முந்தாதே என்று கட்டளை இட்டாள். ஈற்றடி பாடச் சொன்னான். சொன்னேனே என்றாள். மூக்கால் முனகினாள் – சேர்ந்தியில் சேர்ந்திருப்போம் வா.
தேர்ந்ததோர் காமமே துயிற்போம் காந்தமே நேர்ந்த இரும்பாய். போதும் உள்ளே வா.
செய்யுள்?
நரகத்தில் போய்ப் பூர்த்தி பண்ணுடா என்று காலால் அவன் தலையில் உதைத்து இறங்கியதும் மற்றதும் சொல்ல இந்த சித்திர அதிவிசித்திரக் கதை முன்போகாது என்பதால் அது நிற்க எனச் சொல்லிக் கடந்து போவோம்.
குளிரக் குளிர பிற்பகல் மழை ஒன்று மலையடிவார நிலம் சூழ சேர்ந்தியின் சிறு கதவு பெரும் சத்தத்தோடு அடைத்துத் திறந்து, தாளமிட, முயக்கம் நீண்டு உடன் நிற்க, உலகே உறைந்த இயக்கம் நின்ற அடுத்த வினாடி, பாம்புப் பெண் திரும்பக் குழலானாள்.
அந்த இரவில் தேசாந்திரிச் சத்திர வாசலில் வழுக்கும் கல்லிலேறி நட்சத்திரங்களை நோக்கியபடி அவன் வெகுநேரம் படுத்திருந்தான். சுற்றி நடந்து கொஞ்சம் பறந்த ஆந்தைகள் கண் விரித்து ஆச்சர்யம் தெரிவிக்க, அப்படித்தான் எனக்கும் வியப்பு என்று பதில் அளித்தான்.
இடுப்பைத் தடவிப் பார்த்தான். குழல் பத்திரமாக இருந்தது. ஏனோ பாம்புப் பெண்ணை இப்போது கலக்க மனம் இசையவில்லை.
அவன் தேகம் தகித்தது சம்சாரி வீட்டில் அவனோடு சிறு உரையாடல் நடத்திக் குறுஞ்சிரிப்போடு அகன்ற பெண் மேல் கனமாகக் கவிந்தது. அவளுக்கு இருபத்தைந்து வயது இருக்குமா? மேலே இருக்கலாம். முப்பத்தைந்து? அதற்கும் மேல்? நாற்பத்துரெண்டு என்று முடிவானது.
நாற்பத்திரெண்டுக்காரியை இருபதும் முதிரா ஆடவன் இன்பம் நுகர மேலேறி வரும் மோகம் நிலைகொண்டது சரிதானா? குழலனுக்கு என்ன போச்சு?
அந்தப் பெண்ணின் கணவன்? குழலன் முகமற்ற ஒருத்தனைக் கற்பனை செய்தான். உடலில் ரோமம் அப்பி, எண்ணெய் வடிந்து, கட்டித்துப் போன வியர்வையும் நாசியழுக்கும் கண்பீளையுமாக, ஒரு மாதம் குளிக்காத உடலைச் சுற்றிய அழுக்குத் துணியுமாக அவன் அந்தப் பெண்ணைக் கணவன் என்ற உரிமையில் இணை சேர அவன் வாய்நாற்றம் பொறுத்து அவள் பின்னிக் கிடப்பாளா?
அவன் கிடக்க, குழலன் அந்த அரையுறக்கத்தை முழு மயக்கமாக்குவான். குழலின் ச துளை வெறும் காற்றை ஊத அது நடக்கும். அவனை இழுத்து ஓரமாகக் கிடத்தி விட்டு அந்த அழகியைச் சுகித்திட வேண்டும். நாற்பத்திரெண்டில் அழகு உண்டோ? உயரம் குறைவான, இடுப்பு தடித்து மடிப்பு விழுந்த பெண்ணுக்கு அழகி விருது தர ஒரு தயக்கமும் இல்லை. அறையில் கட்டிலிட்டுக் கிடக்கிற அவளை ஒட்டிக் கிடந்து காதல் பேச அவனுக்கு இயலும்.
குழல் அவன் நடப்பதையும் இருப்பதையும் தேவையானால் யாரும் எந்த வேறு ஜீவராசியும் காண முடியாது மறைக்க, இன்பம் துய்க்க, அவன் மனம் கொண்டு செலுத்த.
வழுவழுத்த கல்லில் இருந்து இறங்க வழுக்கி கொஞ்ச உயரத்தில் இருந்து கீழே தரையில் விழுந்தான். வலித்தது.
நாற்பத்து ரெண்டுக்காரியை நினைத்து இனித்தது. குழலை ச மட்டும் அமிழ்த்தி இடுப்பில் செருகிக் கொண்டான். அவன் நடமாட்டத்தை இனி தேவதைகளும் கந்தர்வர்களும் மட்டும்தான் காண முடியும் என்பதில் அவனுக்கு உற்சாகம் ஏற்பட்டது. தெய்வமோ? தெய்வத்துக்கு ஆயிரம் பொறுப்பு. குழலனைக் கண்காணிப்பதெங்கே?
வாசல் கதவைக் கொண்டித் தாழ்ப்பாள் இடாது வெறுமனே சார்த்தியிருந்த சிற்றில் உள்ளே நுழைய ஏலமும் கிராம்புமாக பலமான வாடை.
காலை ஒட்டிக் கடந்து போவது என்ன உயிர்? ஆமை. ஐநூறு வருடம் மூத்த கடலாமை.
கடலுக்குள் இருந்து தரைக்கு வர ஓராண்டு, திரும்பக் கடலுக்குச் சென்றடைய இன்னொரு ஆண்டு. அவன் நான்கு சக்கர வண்டியில் ஏறிக் கைகொண்டு சக்கரம் சுழற்றி வேகம் இயங்கும் வேறொரு கடலாமையைக் கற்பனை செய்து படுக்கையறையில் நுழைந்தான். நிலை குலைந்து விழுந்தான்.
அவன் தலையில் ஏதோ பௌதீகப் பரப்பு பலமாக மோதியது. ஆமையா? ஒரு நொடியில் காலருகே இருந்து தலை ஏற ஆமைக்கு எங்கே வேகம்?
ஜன்னல் கதவை சத்தம் எழாமல் திறக்கும்போது கட்டிலைப் பார்த்தான். குழல் ஊதி மயங்கவைக்கத் தேவை இல்லாமல், வைத்தியசாலையில் நிரந்தர நோயாளிகள் இருவரை ஒரே கட்டிலில் போட்டிருந்த மாதிரி அவர்கள் கிடந்தார்கள்.
அந்த நாற்பத்துரெண்டு வயசுக்காரி எழுந்தால் அவளது அழகு தெரியும் போல. ஜன்னல் வழியே நிலவு ஒளி ஓசைப்படாமல் இறங்க காலடியில் ஒர் வெங்கலப் பானை எழும்பி எழும்பிக் குதித்துக் கொண்டிருந்ததைப் பார்த்தான் குழலன்.
அவனைத் தலையில் தாக்கியது அந்த வெங்கலப் பானைதான். அதை மிதித்து விடாமல் காலை அகற்றிட, தலையில் கொடுக்கும் மடங்கிய கால்களுமாக தனக்குள் ஒரு தேளைக் கண்டு பயந்தான்.
மனுஷனே இல்லை நீ தேள். வராமல் அப்படியே போ. உள்ளே வந்தால் சாதாரணத் தேளுக்கான மரியாதைகள் எல்லாம் நடத்தி சல்லி சல்லியாக அரைத்து அடித்துக் கொல்லப்படுவாய் இழிபிறவியே.
செம்புக்குள் மறைந்து என்னை வம்புக்கு இழுக்கும் நீ யார் புழுவே.
நான் தினை. குவித்து, மலர் மாலை சார்த்தி வைத்த புராதன வம்சாவளி செப்புக் குடத்தில் பெய்த மூன்று கைப்பிடி தினையரிசி பேசுகிறேன்.
தினையும் தேனுமெல்லாம் பேசுவது எந்த மதுசாலையில் நேரம் போக்க யார் ஏற்படுத்திய குறும்பு?
அவன் காலில் சத்தமில்லாமல் விழுந்தது அந்தச் செம்பு. வலி உயிர் போக வேண்டியது குழலனுக்கு.
ஆனால் அவன் கால்கள் இருந்த இடத்தில் அதிகக் கால்களும் தலையில் கொடுக்குமாக அவனது பிம்பம் ஜன்னல் வழியே கசிந்த நிலவொளியில் ஒரு நொடி மாறித் தெரிந்து பின்னர் தெளிந்தது.
அதற்குள் அடித்துப் போட்டதுபோல் உறங்கிக் கிடந்த அந்த நோயாளிக் கிழமும் அவனருகே கிடந்த தொடை பருத்த அழகுப் பெண்டாட்டியும் எழுந்து திருடன் திருடன் என குழலனை நோக்கி அலறின.
செம்பு வேறே பிடரியில் சக்தியோடு மோதி வலி உச்சத்தில் ஏற்பட குழலன் வாசலுக்கு வர, அண்டைட அயல் ஆணும் பெண்ணும் அவனை அடிக்க ஓடி வந்தார்கள் கால்கள் மரத்துப் போக அவன் ஓடியபடி இடுப்பில் செருகிய புல்லாங்குழலை எடுத்து ஊதினான்.
குழல் பாம்பாக பாம்புப் பெண் முழு நாகமாகித் தரையில் நெளிந்தாள்.
அரைக் கிழவிப் பெண்டுகளை நீ சுகிக்க என்னால் நேரம் கெட்ட நேரத்தில் எல்லாம் வர முடியாது. அப்படி என்ன அரையில் அடக்க முடியாமல் குறுகுறுப்பு, அடே தேளா என்று செல்லமாக வைதபடி அவள் ஓடி வந்த ஊராரை நோக்கி ஊர்ந்து போக அவர்களில் பலரும் வந்த வழிக்கே திரும்ப ஓடலானார்கள்.
குழலன் ஓட்டம் நிறுத்தி மூச்சு வலித்துக் கொண்டு நடக்க, மறுபடி அவனது கால்கள் மரத்துப் போக, தலையில் என்ன? பக்கத்தில் சர்ப்பமாக இழைந்தோடி வந்த பாம்புப் பெண் அய்யோ என்று அவன் தலையைப் பார்த்து அலறினாள். கொடுக்கு முளைத்த அந்தத் தலை அவளை லட்சியமே செய்யவில்லை.
குழலன் பாம்புப் பெண்ணை அன்போடு கையில் எடுத்து இடுப்புத் துணியில் செருகவில்லை. அவள் பாம்பாகத்தான் இருந்தாள்.
கீழ்வானம் அணு பிளந்து விழுந்ததுபோல் குடைவிரித்த காளானாகக் கறுத்து, கருப்புத் துளிகளாக மழைவிழ, வெறும் தரை தீ பரவ எரியலானது. தினையும், சோளமும், கம்பும், கொள்ளும் நிரப்பி வழிந்த கிடங்கின் ஊழியர்கள் ஓடி வந்தர்கள். கையிலெடுத்த கோல் கொண்டு பாம்புப்பெண்ணை அடித்து குற்றுயிராக்கிக் கிடத்தி வந்தபாடே போனார்கள் அவர்கள்.
சுருண்டு கிடந்தாள் பாம்புப்பெண். அவள் கண் மலர்த்திக் குழலனை நோக்கிச் சபித்தாள் –
மனம் பிறழ்ந்தவனே, நீ மானுடன் அல்லன். அற்பத் தேள். உரு மாறினாலும் தேளன் தான் நீ. எதிர்காலத்தில் இருந்து வந்திருக்கும் நீ யாரென்று மறந்து போனாய். உன்னையும் இன்னும் சிலரையும் மனித ஆணாக்கும் தேளரசு முயற்சிகள் தோற்றுப் போக, நீ தப்பி ஓடி வந்தாய் இந்தப் பல நூறாண்டு பழங்காலத்துக்கு. எல்லாம் மறந்தாய். நீ யாரென்று நான் சொல்ல எவ்வளவு முயன்றேன். ஒன்றும் நினைவில் சேராமல் நீ தோளுருண்ட நாற்பத்து ரெண்டுக்காரி, ஈரம் உலராதவளை மோகித்து அவளோடு இணை சேர்வது தவிர லட்சியம் வேறொன்றுமில்லை எனத் திரிந்தாய். என்னை யார்யாரோ சல்லி சல்லியாக நசித்துப் புடைத்து இப்போது குற்றுயிராக்கப் பார்த்திருந்திருக்கிறாய்.
இது செய்து நீ மானுடச் சங்கிலியில் இடம் பிடிக்க நினைத்தால் அது நடவாது. சாக்கடைத் தேள் நீ, என் போல் கம்பீரமான அழகும் மானுடர் வழிபடலும் கிடைத்த நல்லதோர் நாகம் இல்லை நீ.
சாக்கடைத் தேளே உன் வம்சம் அழிந்து படும். தேளரசு இல்லாமல் போகும் நாள் குறிக்கப்பட்டது.
தரையில் படம் எடுத்து அடித்து பச்சை பிசிறிய ரத்தம் உடலெங்குமிருந்து கசிய உயிர் நீங்கினாள் பாம்புப் பெண்.
அடுத்த அடி குழலன் மேல் விழ அவன் இடுப்பில் குழல் பற்றி எரிந்தது.
.
தொடரும்
- தாய் மண்
- பனித் தூவல்
- அணுமின்னுலைக் கதிரியக்கக் கழிவுகள் நீண்டகாலப் புதைப்பும், கண்காணிப்பும் -1
- புள்ளி
- நமது இந்த இப்பிறவி பற்றி — ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ வழியாக….
- நாவல் தினை அத்தியாயம் ஒன்பது CE 5000-CE 300
- நிற்பதுவே நடப்பதுவே!