தாய் மண்

author
0 minutes, 57 seconds Read
This entry is part 1 of 7 in the series 9 ஏப்ரல் 2023

                                                                                                                                               .மீனாட்சிசுந்தரம்

நாளும் பொழுதும் மகன் கார்த்திக் நினைப்பிலேயே கழிகிறது. அவன் அமெரிக்கா சென்ற நாட்களின் எண்ணிக்கை வாரங்கள் மாதங்கள் என மாறி வருடங்கள் ஆறு ஆகிவிட்டது. ஓரிரு வருடங்களில் வந்துவிடுகிறேன் என அவன் சொன்ன வார்த்தைகள் மதிப்பற்றுப் போயிற்று. மூன்றாண்டுகள் கழித்து அவன் விரும்பிய, அவனோடு பணிபுரியும்  கவிதாவை திருமணம் செய்வதற்காக இங்கு வந்தான். அதுவும் கவிதாவின் பெற்றோர் சம்மதமில்லாமல். அதற்கு  மறுப்பேதும் தெரிவிக்காமல் அவனது விருப்பப்படி திருமணம் செய்து அனுப்பிவைத்ததையும் நினைத்துப் பார்த்தாள் சிவகாமி.

இன்றைய சூழலில் பெற்றவர்களுக்கு மட்டுமே கடமையும் பொறுப்பும் என்பது எழுதப்படாத விதி போலும்.

 ‘ஆளுக்கொரு தேசத்துல இருக்கிற அக்காiவையும் உன்னையும் நினைக்காத நாளுல்லப்பா. இப்பல்லாம் உங்கள பாக்கணுங்கிற ஆசை அடிக்கடி வருது. வயசான காலத்துல வேற என்ன சந்தோசம் எங்களுக்கு. எங்க உடம்புக்கு ஒண்ணுன்னா பார்க்குறதுக்கு யாரு இருக்கா?‘

‘புரியுதும்மா. ஆனா வாழ்கைக்கு பணம் பிரதானமா இருக்கே.‘

‘போதுமான சொத்தும் பணமும் நம்மகிட்ட இருக்கிறது தெரியாதா உனக்கு. சம்பாத்தியம் பண்றதுக்கான வயசு உங்களுக்கு இருக்கு. கூடுதலா எங்களாட பென்சன்.   வாழ்க்கையில பணம் மட்டும்தான் பிரதானமா? அதுக்கும் மேல சந்தோசத்தக் கொண்டாட நிறைய இருக்குங்கிறது உனக்கு சொல்லித் தெரியணுமா?‘

‘இப்படி  சிந்தனைபண்ணி  உடம்பக்  கெடுத்துக்காதம்மா. பக்கத்து  வீட்டு சியாமளா ஆண்டி உன்ன மாதிரி பேசுறாங்களா.‘

‘அவளும் சதீஷ்கிட்ட தினமும் பேசிப் பேசி, அவனும் மனசுமாறி வர்றேன்னுட்டானாம்.‘

‘ரெண்டு பேரும் இந்த சிந்தனையிலயே இருப்பீங்க போலருக்கு.‘

‘ஆமாப்பா பெத்தவங்க மனசும் அதுக்குள்ள ஒட்டிக்கிட்டிருக்கிற பாசமும் உன்னமாதிரி பிள்ளைங்களுக்கு எங்க புரியுது.‘

அவன் சிரித்துக் கொண்டே ‘நீ பேசுறது சீரியல்ல வர்ற அம்மா மாதிரியே இருக்கும்மா.‘

‘அது நிழல். இதுதாண்டா நிஜம்.‘

அவள் உள்ளக்கிடக்கையை சொல்லியும், நேரடியான பதில் அவனிடமிருந்து வராதது வருத்தமாய் இருந்தும் அதை மறக்கச் செய்யும் தாயுள்ளத்தை புரிந்து கொள்ள மறுக்கும் அவனின் மனசு என்றைக்கு மாறும்? எனும் கேள்வியை தனக்குள்ளேயே எழுப்பிக்கொண்டாள்.

இந்த ஆறாண்டுகளாய் தினமும் அவனோடு அலைபேசியில் பேசியது அவள் மனத்திரையில் ஒவ்வொன்றாய் ஓடி மறைந்தது.

 “என்ன நினைப்புல இருக்க. உம் பிள்ளையிட்டருந்து போன்“

      ஆவலாய் போனை எடுத்தவளிடம் மகன் சொன்ன செய்தியைக் கேட்டு,

     “அந்த இறைவனுக்குத்தாம்பா நன்றி சொல்லணும்.  அவன வேண்டாத நாளுல்ல. இன்னிக்கு உன்னோட வாயிலிருந்து வந்தத தெய்வவாக்காத்தாம் பாக்கிறேன். ரொம்ப சந்தோசம்பா. அப்பாகிட்ட நீயே சொல்லு.“

“அப்பா உங்கள தாத்தான்னும், அம்மாவ ஆச்சின்னும் கூப்பிட நம்ம வீட்டுக்கு ஒரு குட்டிப்பாப்பா வரப்போறாங்க“

“வாழ்த்துக்கள்பா. கவிதாகிட்ட குடு.“

‘‘மாமா  நல்லாருக்கீங்களா?“

“நல்லா இருக்கேம்மா. வாழ்த்துக்கள்மா. இந்த நேரத்துல உன்னோட ஆரோக்கியம் முக்கியம்மா. மனச சந்தோசமா வச்சுக்க.  நல்ல புத்தகங்கள படி. உனக்கு பிடித்த இசையைக் கேளு. சுகப்பிரசவத்துக்கான எளிமையான உடற்பயிற்சிகள தினமும் செஞ்சுரு. “

“நன்றி மாமா. கண்டிப்பா செய்றேன். அத்தையிட்ட குடுங்க.“

“நல்லா இருக்கீங்களா அத்தை.“

“நல்லா இருக்கேம்மா.“

“தாமதமா சொல்றதுக்கு மன்னிக்கணும் அத்த. மூணுமாசம் ஆகட்டும்னு டாக்டர் சொன்னதுனாலதான்.“

“சரிம்மா. உன்னோட உடல் நலம் முக்கியம்மா. வேளா வேளைக்கி சத்தானதா பிடிச்சத செஞ்சு சாப்பிடு. இந்த நேரத்துல நீயே செஞ்சு சாப்டுறதும் சிரமந்தான். “

“ஆமா அத்த. அடிக்கடி வாந்தி வருது. ஒரு மாசம் லீவு போட்டுருக்கேன். நானே செஞ்சு சாப்பிடுறதுக்கும் பிடிக்கல. ரெண்டு பேரும் மாத்தி மாத்தி சமைச்சு சாப்பிட்டுக்கிறோம்.“

“உனக்கு பிடிச்சத செஞ்சு குடுக்கிறதுக்கும், உன்னப் பாக்கணும்னும் ஆசையா இருக்கு.  நினைச்சா வந்து பார்க்கிற தூரத்திலயா இருக்கீங்க?“

                    “உண்மைதான் அத்த.  இப்பத்தான் உங்களையும், அம்மாவையும் ரொம்பவே தேடுது. ஆனா அம்மா அப்பாவுக்கு இன்னும் எம்மேல உள்ள கோபம் தீரல.“

“அவங்க கோபமெல்லாம் குழந்தை பிறந்ததும் போயிரும்மா. அதையெல்லாம் மனசுல வச்சுக்காத.“

“சரி அத்த.“

“எனக்கும் உன்ன தேடுதும்மா, நீ பண்ற கூட்டாஞ்சோறும், இட்லியும் கத்தரிக்காய் கிச்சடியும் சாப்பிடணும்னு ஆசையா இருக்கு. கவிதாவும் உன்னோட புளியோதரைக்கும், சொதிக்கும் ஆசைப்படுறா.“

“ஆசையும் மனசும் எனக்கு இருக்கு. ஆனா அப்பாவுக்கு அவ்வளவு தூரம் பயணம் பண்ணி வர்றதுக்கு யோசிக்கிறாங்க. இதுக்குத்தான் படிச்சுப் படிச்சு சொன்னேன். பணம் முக்கியமில்லடா. வெளிநாடு வேண்டாம்னு. அப்போ நல்லது கெட்டத சொல்லிக்கேக்குற மனநிலையில நீ இல்ல. உங்கண்ண மறைச்சது வெளிநாட்டு மோகம்.“

 “அடிக்கடி நீ சொல்லுவியேம்மா. நடப்பது நன்மைக்குன்னு.“

“எனக்கான பதில் இல்ல இது.

அக்காகிட்டயும் சொல்லிரு. ரொம்ப சந்தோசப்படுவா. கவிதாவுக்கு நம்ம வழக்கப்படி வளைகாப்பு விசேசத்த சிறப்பா செஞ்சுரு. அதை பக்கத்துலருந்து பார்க்குறதுக்கு எங்களுக்குத்தான் குடுத்துவைக்கல.“

அம்மாவுக்கு இதை சொல்லி முடிக்கும்போது கண்களிலிருந்து நீர் முட்டிக்கொண்டு வந்ததைப் பார்த்த அவனது விழிகளும் நிறைத்தன.

அயல்மண்ணில் வாழும் பிள்ளைகளுக்கும், பிரிந்திருக்கும் பெற்றோர்களுக்குமிடையே தினமும் நடக்கும் பாசப் போராட்டத்தில் இருவருமே வெளிநாட்டு மோகத்தில் சிக்கித் தவிப்பதுதான் வேடிக்கை.

கால ஓட்டம் அதிவேகமானது என்பதற்கு அடையாளமாக கவிதா கர்ப்பமாகி ஒன்பது மாதங்கள். கடந்தவாரம் அவன் அவள் அலைபேசிக்கு அனுப்பிவைத்த வளைகாப்பு வீடியோவையும் போட்டோவையும் திரும்ப திரும்ப பார்த்ததில் அவள் கண்கள் பூத்துப் போனது. ஆனந்தக் கண்ணீருடன் கூடவே சிறு சலனமும். நேரிலிருந்து பார்க்க முடியவில்லையே எனும் ஏக்கமும் எழுந்து அடங்கியது.

படிப்பு, பணி, பணம், அயல் தேசம் எனும் மோகத்தில் இன்றைய தலைமுறைகள் தாய் மண்ணைவிட்டு செல்லும் இச்சூழலில், உறவுகளுக்குள் உள்ள தொடர்புகளும் முன்புபோல் இல்லை. எனவே இன்றைய வாழ்வியல் அவரவர் குடும்பம் எனும் எல்லைக்குள் சுருங்கியாகிவிட்டது.

இப்படியான சூழலில் தன் குடும்பம், தன் பிள்ளைகள் எனும் நினைப்போடு ஒவ்வொரு நாளையும் கடந்து போவது, அவளுக்கு மட்டுமல்ல அவளைப் போன்ற பிள்ளைகளைப் பிரிந்து வாழும் அனைவருக்கும்தான் என்பது காலத்தின் கட்டாயம்.

இந்த நினைவுகளிலிருந்து விடுபட அவள் மனம்விட்டு பேசுவது பக்கத்து வீட்டு சியாமளாவிடம்தான். இருவரும் பள்ளித் தோழிகள். இருவருமே அரசு அலுவலர்களாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள். முப்பது ஆண்டுகளுக்கு முன் இந்த தெருவில் வீடுகட்டி குடியேறியவர்கள்.  தினமும் அவர்களின் சந்திப்பு நிகழ்வது தவிர்க்க முடியாததாகிவிட்டது. அதில் வீடு முதல் நாடு வரையில் உள்ள செய்திகள் பரிமாறப்படும். சியாமளாவின் பிள்ளைகளும் வெளிநாட்டில் இருப்பதால், இருவரும் குடும்பம் குறித்தும் பேசிக் கொள்வது வாடிக்கையாகிப் போனது. 

அன்றும் சியாமளா கூப்பிடும் குரல்கேட்டு வாசலுக்கு வந்த சிவகாமியிடம்,

“என்னடி எத்தன தடவ கூப்பிடறது. உம்பிள்ளை நினைப்பா?“

“ஆமாடி..“

“நானே உங்கிட்ட கேட்கணும்னு நினைச்சேன். கவிதாவுக்கு இதுதான மாசம். நாட்கள் எவ்வளவு வேகமா ஓடுது பார்த்தியா. “

“ஆமா சியாமளா. அவ சொன்ன தேதிப்படி இந்த வாரத்தில குழந்தை பிறக்கணும்.“

“கார்த்தி என்ன குழந்தையின்னு சொல்லிட்டானா.“

“பிறந்ததும் சொன்னாத்தான் சர்ப்பிரைசா இருக்கும்னு சொல்லிட்டான்.“

அவள் சொல்லி முடிப்பதற்குள் கையிலிருந்த செல்போனில் மகன் கார்த்திகேயன் “அம்மா உங்களுக்கு பேத்தி பிறந்திருக்காம்மா.“

அவள் முகம் முழுக்க சந்தோசக் குவியலுடன்,“உன்னோட வாயிக்கு சக்கரை போடணுண்டி. பேத்தி பிறந்திருக்கா.“

“கார்த்திகிட்ட என்னோட வாழ்த்துக்கள சொல்லிரு. நாளைக்கு பேசுவோம்.”

“யாரும்மா?“

“சியாமளா ஆண்டி. கவிதாவப்பத்தி  பேசிக்கிட்டிருந்தோம். அப்போதான் உன்னோட போன். அவளும் வாழ்த்துச் சொன்னாப்பா.“

“நன்றி சொல்லிடும்மா ஆண்டிகிட்ட.“

“சரிப்பா.“

“உன்னோட பேத்தியையும் கவிதாவையும் பாரு“ வீடியோவில் காண்பித்தான்.

“என்னங்க இங்க வந்து பாருங்க நம்ம வீட்டு மகாலெட்சுமிய“

ஆனந்தக் கண்ணீர் வழிந்தோட இருவரும் தன் பேத்தியை பார்த்துக் கொண்டிருந்தார்கள். இதைப் பார்த்த கார்த்தி, கவிதாவின் கண்களிலும் ஆனந்தக்கண்ணீர்.

“அம்மா நீ வேண்டிக்கிட்ட மாதிரி சுகப்பிரசவந்தாம்மா.“

“என்னங்க உங்க பேத்தி கண்ணையும் மூக்கையும் பாருங்க. வளர்ந்தா கார்த்தி முகச்சாடையிலதான் இருப்பா“ சந்தோசத்தில் கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது.

“கார்த்தி, நானு அனுப்பின பேறுகால மருந்த மறக்காம குடுத்துரு. துணைக்கி யாராவது இருக்காங்களாப்பா.“

“ பக்கத்து வீட்டு ஆண்டி இருக்காங்கம்மா.“

“அக்காகிட்டயும் சொல்லிருப்பா. கவிதாவ கவனமா பார்த்துக்கோ. கார்த்தி, எம்பேத்தியையும், கவிதாவையும் நேர்ல பாக்கணும் போல இருக்குடா.“ அவள் உள்ளக்கிடக்கை, அவள் முகத்திலும் பேச்சிலும் தெரிந்ததை பார்த்த அவன்,

“அம்மா உன்னோட உணர்ச்சிகளை புரிஞ்சுக்க முடியுதும்மா. கண்டிப்பா நீ எதிர்பார்க்கிறது நடக்கும்மா. கவிதாவுக்கும் அங்க வரணுங்கிற ஆசை இப்போ வந்திருக்கு. கடந்த ஒரு மாசமா அதே நினைப்போடதான் இருக்கா. உங்களோட இருக்கணுங்கிற நினைப்பு அதிகமாயிருச்சு. உன்னோட பேத்தி நம்ம கலாச்சாரம் பண்பாட்டோட வளரணுங்கிற ஆசையும் எண்ணமும் அவளோட பேச்சுல தெரியுது.  உங்களோட அரவணைப்புலதான் அவ இருக்கணுங்கிறா. அப்போதான் அவளும் நல்ல பழக்கங்களையும் பண்புகளையும் கத்துக்க முடியும்ணும், அவளோட ஆரோக்கியத்துக்கு நம்ம உணவும் ரொம்பவே முக்கியம்னு சொல்றா. இதுக்கும் மேல வயசான உங்க அப்பா அம்மாவ தனியா விட்டுட்டு நம்ம இங்க இருக்கிறது நல்லதுல்லன்னும். அவங்க உடல்நலம் முக்கியம், இதுதான் என்னோட முடிவுன்னும் சொல்லிட்டா. எனக்கும் அதுதான் சரின்னும் தோணுது.“

“எம்பேத்தி தான் உங்க மனச மாத்திருக்கா. ரொம்ப சந்தோசம்பா. சீக்கிரமா வந்திருங்க.“

“அப்பாகிட்டயும் சொல்லிரு.“

“உங்கம்மாவோட இன்னொரு ஆசையும் நிறைவேறிருச்சு.“

“ஆமாப்பா“

‘என்னங்க. உங்க மகன் இங்க வரணுங்கிற ஆசை உங்களுக்கு இருக்கா. இல்லையா?‘

‘அவங்கிட்ட நீ சொல்றது போதாதா. ரெண்டு பேரும் ஒரே சமயத்துல ஒரே கோரிக்கைய சொன்னா அவனுக்கு எரிச்சல்தான் வரும். இந்தக் காலத்துப் பிள்ளைங்க அப்படி. அவங்க மனசுக்கு என்ன தோணுதோ அதத்தான் செய்வாங்க செய்றாங்க. அத காலம்தான் தீர்மானிக்கணும். அது ஒருநாள் அவன் வாயிலிருந்தே வரும்பாரு. நம்பிக்கைதான் வாழ்க்கை.‘

ஆறு மாதத்திற்கு முன் அவள் கேட்ட கேள்விக்கு அவர் சொன்னதை நினைத்துப் பார்த்த சிவகாமி,

“என்னங்க நீங்க சொன்னது இன்னிக்கு உண்மையாயிருக்கு. மனசுக்கு சந்தோசமாவும், நிம்மதியாவும் இருக்குங்க.“ 

“மனிதவாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும், அவரவர் நம்பிக்கையும் எண்ணங்களுமே அவர்களை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும். இதுதான் நிதர்சனம்“ என்றார் சிவராமன்.

பேத்தி வரப்போகும் அந்த நாளை மனசுக்குள் அசை போட்டவாறே,

அவள் நீண்ட நாள்  ஆசை நிறைவேறியதற்கு நன்றி சொல்ல “சித்தி விநாயகர் கோவிலுக்கு போயிட்டு வர்றேங்க.“ என்று சொல்லி புறப்பட்டாள் சிவகாமி.

Series Navigationபனித் தூவல்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *