நாவல்  தினை              அத்தியாயம் பதிமூன்று      பொது யுகம் 300

This entry is part 7 of 9 in the series 7 மே 2023

  

விழித்தெழுந்த பொழுதில் நகர வேண்டியவை பறக்கத் தொடங்கின.  எங்கணும் பறவைக் கூச்சல். மருத்துவர் நீலனின் குடிலில் பரபரப்பான இயக்கம் நிகழ்ந்து கொண்டிருந்தது. 

குடில் என்று ஒரு பழக்கத்தால் தான் குறிப்பிடுவது என்று அந்தக்   கட்டிடத்தை அண்ணாந்து பார்த்தாலே புரியும். இரண்டு தளங்கள் செங்கல் கூரை மூடியும் வானம் பார்த்த மச்சுமாக வீட்டுடமையாளரின் செழிப்பைச் சொல்வதாக அந்த இல்லம் திகழ்ந்தது. 

கீழ்த்தளத்தில் சஞ்சீவி மலையைச் சுமந்து கம்பீரமாகப் பறக்கும் அனுமனின் வண்ணப்படம் சுவரை நிறைத்திருந்தது. அந்த ஓவியத்துக்கு தினசரி ஆராதனை நடக்கும் என்பதால் தூபக்கால், தீபம். குடுவையில் புதியதாக சந்தனக் கட்டையைக் கருங்கல்லில் தேய்த்து வழித்தெடுத்த சந்தனம் நல்வாசனையோடு நெற்றியில் தரிக்கச் சகலருக்கும் வழங்கப்படும். 

வடக்கு மாநில வழிபாடுதான். எனில் வைத்தியக் கடவுளாக உருத்திரன் என்ற முழுமுதற் தெய்வத்தை சிறு பீடத்துக்கு இறக்கி வழிபடுவது பீடன்று. எனவே அனுமன் வந்தான். 

அது மட்டுமில்லாமல் அனுமன் வழிபாட்டுக்கு இன்னொரு காரணமும் உண்டு. மருத்துவர் நீலன் பல்லாண்டு அனுமன் அன்ன நைட்டிகப் பிரம்மச்சாரியாக் இருந்து, அண்மையில் திருமணம் செய்தவர்.  பழகிப் பழகி அவரது சொந்த தேவனும் அனுமனே என்றானது. அப்புறம் ஒன்று. அவருடைய சீடர்கள் அனைவரும் கட்டைப் பிரம்மசாரிகள் தாம்.

 இப்படி பிரம்மசாரியம் கொடிகட்டிப் பறக்கும் இல்லத்தில் தினசரி காலை ஏழு மணியில் இருந்து இரவு ஏழு வரை இரண்டு கன்யகையர் ஊழியம் செய்கிறார்கள் என்பதே விநோதமாக ஊர்வம்பருக்குப் பட்டது. எந்த ஊரிலும் இல்லாத உடுப்பும் பேச்சுமாக அந்தப் பெண்கள் சளைக்காமல் சதா பணி எடுத்துக் கொண்டிருப்பதால்  அவர்களைப் பற்றி வம்பெதுவும் புறப்பட முடியாது போனது. 

கறுத்து நெடியவர்களாக மெல்லியலார் உடல் கொண்ட, தெருவில் எங்கும் பார்க்கக்கூடிய மற்றப் பெண்களுக்கும் இவர்களுக்கும் வேற்றுமை ஏதும் சுட்டிக் காட்ட முடியாது என்பதும் குறிப்பிட வேண்டியது. 

அவர்கள் வந்தது முதல் மற்ற மருத்துவ ஊழியர்கள் தங்களுக்குள் பழகிய அன்பான உறவு சொல்லி அழைப்பது வழக்கத்துக்கு வந்தது – அக்கனாரே அச்சி பெயர்த்தியே என ஆண் ஊழியர்கள் இந்த வடக்கிலிருந்து வந்த பெண்டிரை அன்போடும் அரை மரியாதையோடும்   அழைக்க, அவர்களோ அண்ணரே, எம்பி, உம்பி, அப்பன், அப்பச்சி என்றெல்லாம் விளித்துப் பிரியம் காட்டுவார்கள்.   அழைக்க, அழைக்கப்பட உரிமையாக விளிகள் சிறந்த அவ்வெளியில் உற்சாகம் எப்போதும் அலையலையாக   நிலவி வந்தது. 

 காலை ஏழு மணிக்கு அனுமன் ஆராதனை என்று இப்பெண்கள் வடமொழியில் பாடிய கீதங்கள் புரியாவிட்டாலும், அவர்கள் கூடப்பாடிப் பாடி மருத்துவக் குடில் முழுக்க அவை மற்ற நேரத்தில் கூட இசைச் சிறப்புக்காக முணுமுணுக்கப்பட்டு வந்தன. 

ஜெய் ஜெய் ஜெய் மாருதி ஜெய் வாயுபுத்ர என்ற துள்ளலிசைப் பாட்டு அவர்களுக்குள் மிகப் பிரியத்துக்கான விளிப்பாட்டானது. 

மருத்துவர் நீலரைத் தவிர மற்றவர்களுக்கு உண்மையாகவே ஓர் மனக் குமைச்சல் இருந்தது. மருத்துவர் காலாகாலத்தில் மணம் புரிந்திருந்தால் இங்கே உறவு சொல்லி அழைக்க குழந்தைக் குரல்கள்  குரல்கள் அன்போடு சூழ்ந்திருக்குமல்லவா. இப்போதே முப்பதுகளின் மத்திய அகவை, இனி எப்போது இங்கே அடுத்த தலைமுறை வரும் என அவர்களுக்குத் தெரியவில்லை.

இந்த நிலையில் மருத்துவர் நீலர் சஞ்சீவனி என்ற விளிப்பெயருள்ள ஆயுள் நீட்டிப்பு மருந்து விழுங்கி வைத்தால் அவரை அவரது 135ஆம் வயதில் பராமரிக்க யாருண்டு? அவர் இது பற்றிக் கவலையேதும் படாது ஐநூறு வருடத்துக்கு ஒரு முறை நிகழும் மிகமிக அரிதான ஆயுள் நீட்டிப்பு ஆண்டு இதோ விரைவில் வரப் போகிறது எனக் காத்திருந்தார். 

ஒரு சல்லி காசு செலவில்லாமல் ஆயுள் அதிகமாக்க ஓடி வராமல் அதைப் பகடி செய்து மருத்துவரையும் நையாண்டி செய்ய ஒரு சனக் கூட்டமே திரண்டெழுவது நியாயமா என இதுவும் இன்னும் பலவிதமாகவும் பிரலாபித்து மருத்துவர் கவிஞராக மாறி நின்று நிலைமண்டில ஆசிரியப் பா நூறு யாத்து மனம் சமனப்பட்டார் மாதோ. 

செய்யுள் செய்யாவிட்டால் கைப்பழக்கம் நழுவி இலக்கணம் மீறிவிட வாய்ப்பு உண்டே. அவைக்கு வரும் மற்ற கவிஞர்கள் குற்றம் காணவே காதைத் தீட்டிக்கொண்டு அமர்ந்திருக்கிறார்களே. பேசாமல் இந்தப் பிற கவிஞர் ஒவ்வொருவருக்கும் ஒரு மணங்கு ஆயுள் நீட்டிப்பு மருந்தை வலுக்கட்டாயமாகப் புகட்டியோ பிள்ளைகள் போல் மாட்டேன் மாட்டேன் எனப் பிடிவாதம் பிடிக்கும் பட்சத்தில் பின்னஞ்சந்தில் குழாய் வைத்துப் பாய்ச்சியோ அவர்களைப் புராதனப் பன்றிகளாக்கி விட்டால் என்ன. 

தளைதட்டத் தட்ட தலைதட்டிப் பாட வைத்து அவர்களைத் துன்பப்படுத்தினால் தான் என்ன? வேண்டாம் மருத்துவம் நல்ல விசயம். இந்தத் துன்மார்க்கரைத் துன்பப்படுத்த மிளகாய்க்கும் ஆசனத் துவாரத்துக்கும் பொருந்த சிலேடை வெண்பா பாடவைக்கலாம். எரிவுதான் கொள்வதால் என்றும் சிவப்பதால்.

இப்படி நினைத்து மனநிறைவு கொண்டு மருத்துவர் நீலர் கோவிலுக்குப் போய்விட்டு வந்து சீடர்களுக்குப் பிரசாதமாகப் பொங்கல் போன்றவை வழங்கி அன்றைய மருந்து அரைக்கும் வேலைகளைத் தொடங்கினார். 

குயிலியும் வானம்பாடியும் ஒவ்வொரு நிமிடம் மூன்றாம் நூற்றாண்டுப் பெண்களாகத் தம்மை உணர்வதில் மகிழ்ச்சியும் உற்சாகமும் கொண்டார்கள். சல்லடையை எடுத்துக்கொண்டு குயிலியிடம் வந்த நீலர் வஸ்திரகாயம் செய்து வழக்கம் உண்டா எனக் கேட்டார். 

அவர்களும் பிரபஞ்சங்களுக்குப் பொதுவான தகவல் பரப்பான பேரிணையவழியில் மனம் ஓட்டி அது என்ன விஷயம் எப்படிச் செய்வது என்று ஒரு வினாடியில் புரிந்து கொண்டு ஓ தெரியுமே என்று அந்த முறை என்னவென்று சொல்லி, எங்கள் வடமொழிப் பூமிப் பகுதியில் நாங்கள் வஸ்திரகாயம் செய்வது இப்படித்தான் இங்கே மாறுபாடு ஏதும் இருந்தால் சொல்லுங்கள் அதுபடி சரியாக்கிக் கொள்ளலாம் என்றனர். 

ஒரு பெரிய வித்தியாசமும் இல்லை, சிறு சிறு வித்தியாசங்களைத் தவிர்த்து ஒன்று தான் அதற்கான செய்முறை எங்கேயும் என்றபடிக் கடந்து போனார். 

அண்ணா அண்ணரே 

நீலரை அன்போடு பின்னாலிருந்து அழைக்க அவர் சொன்னார் – ஓ சிறுமியரே, பணி நிறைய உண்டு; நீங்கள் பார்த்துக் கற்போம் என்றீரே அப்போது செவிக்கென்ன வேலை என்று சிரித்து வஸ்திரகாயம் சிறு மாறுதல்களை விளக்கினார். 

அடுத்த முறை அந்தத் துணிகொண்டு மருந்துலர்த்தல் செய்யும்போது நானும் தான் இருப்பேன் நீங்கள் விரட்டினாலும் போக மாட்டேன் என்று வானம்பாடி நிச்சயமாகச் சொன்னாள். 

அப்படியென்றால் நீ ஒரு வாரம் பொறுத்திருக்க வேண்டும். சிறப்பு மருந்து சம்பந்தமான பணிகள் வரும் திங்கள்கிழமை முதல் சுறுசுறுப்படையும். வெளிநாட்டு விருந்தினர்கள் வருவதும்  விரைவில் நிகழலாம் என்று கணியன்   என் ஜாதகம் பார்த்துச் சொன்னார். 

அவர் நிறுத்தாமல் பேசிப் போக வெளிநாட்டு விருந்தாளி என்ற தொடர் வந்தபோது மட்டும் அவர்கள் இருவர் புத்தியிலும் அது யார் எதற்கு எப்போது என்று கைக்குட்டை முடிச்சாக மனமேறியது.

 மருந்து உருவாக்குவதில் மருத்துவர் தான் ஒரே ஒரு செயலர். மற்றவர்கள் அவருக்கு உதவிடும் அடுத்தநிலை ஊழியர்கள். வேறு யாராவது மருத்துவர் அளவு கர்த்தனாகச் செயலாற்ற வேண்டும் என்றால் அவர்களைக் கையாளத் தேளரசு திட்டம் வகுத்து அளிக்கும்.

 காலப் பயணத்தில் இவர்கள் இருவரும் வந்திருப்பதால் செய்தி அனுப்பிப் பெறச் சில சிக்கல்கள் ஏற்படலாம், கவனித்துச் செயல்பட அரசு அவசர அமைப்பொன்று இதற்காக ஏற்படுத்தப்படும். 

அதெல்லாம் மனதில் ஒரு கணம் ஓடி மறைய, வரக் கூடிய விருந்தாளி பற்றிய மேலதிகத் தகவல் சேகரிப்பதைத் தொடங்கினாள் குயிலி.

கட்டை பிரம்மச்சாரி மடத்தில் பரசுராமனை ஏன் வழிபடவில்லை ?

குயிலி மெல்லத் தொடங்கினாள். யார் அந்தப் பரசுராமன்? மருத்துவர் யோசித்தமாதிரி இருந்தது. அவர் யாத்த வெண்டளை விரவி வரும் இன்னிசை வெண்பாவிலோ கழிநெடிலடி ஆசிரியப்பாவிலோ வரக்கூடிய பிரகிருதி அல்லாமல் அவருக்கு வேறு யாரைத் தெரியும் என்று வானம்பாடியிடம் மனம் தொடர்புகொண்டு அங்கலாய்த்தாள். 

ஓ பரசுராமன்! அந்தப் பரசுராமன் பத்தில் ஒரு அவதாரம் மழு எறிந்து மலைநாடு கொண்டு வந்த கடவுளின் சொந்த நாட்டின் உருவாக்கிய சிற்பி அவர்தானே அவர் நைட்டிக பிரம்மசாரிதான். தேவை இல்லாமல் சினம் மூண்டு எல்லோரிடமும் எரிச்சலைச் சம்பாதித்துக் கொள்வாரே. என்னிடம் சினம் வந்தால் நிற்காதே ஒரு நிமிட நேரத்துக்கு மேல் என்று சிறியதாக ஒரு சுயதம்பட்டம் அடித்துக்கொண்டார் நீலன். 

“அண்ணரே நீர் தான் அண்ணியாரைக் கடிமணம் செய்து அழைத்து வந்து விட்டீரே. இனியும் பிரம்மச்சாரிக் கோலமும் வாக்கும் எதற்கு?

“கல்யாணம் கழித்து வந்த இந்த ஒரு வருஷத்தில் அவள் ஆறு தடவை பிறந்த வீட்டுக்குப் பயணம். ஆக நான் கட்டாயப் பிரம்மச்சாரி” அவர் சத்தம் போட்டுச் சிரித்தார்.

 பரசுராமன் நம் குடிலுக்கு எங்கே வந்தார்? தொடர்ந்து கேட்டார் நீலன்.

அப்படியா நான்சொன்னேன். உங்களுக்கு உறவு என்று யாரும் இருக்க மாட்டார்களே என்று என் ஊகம். அந்த நிலையில் யார் விருந்தாட வர முடியும் என்று வியப்பில் சொன்ன வார்த்தை அது. 

குயிலி சொல்ல மருத்துவர் மௌனமாக அவளைப் பார்த்தார். எதையோ குயிலியிடம் சொல்ல வேண்டும் என்று அவரது வாய் பரபரத்தது. பொறு என்றது அவர் புத்தி. அந்த நிலையில் தன்னோடு ரகசியம் பகர எதிராளியை மெல்லத் தூண்ட குயிலிக்குத் தெரியும். 

அந்தக் குப்பைமேனி இலைகளை வடிவாக நறுக்கச் சொன்னீர்கள் நேற்றுக் குடில் அடைக்கும் நேரத்தில். நான் அதை நீர்விட்டுத் தும்பைப்பூ இட்டு ஊற வைத்தது தவறுதான். அதுவும் உங்கள் ஆணையில்லாமல். அண்ணார் என்னை மன்னிக்க வேணும் என்றாள் குயிலி பேச்சை மாற்றி. 

மருத்துவர் முகம் அலாதியான நிறைவைக் காட்டியது. நீ செய்ய வேண்டியதைத் தானே செய்திருக்கிறாய். மன்னிப்பு எல்லாம் எதற்கு என்றவர் அந்தத் தும்பைப்பூ இட்டது சிறப்பான மருத்துவ அறிவு இருந்தாலே செய்ய முடியும். உனக்கு வாய்த்தது என்று அவள் தலை வருடி அன்பு காட்டினார். 

பாரிஸ் என்ற பாரி வரும்போது நீயும் என்னோடு இருந்தால் நன்றாக இருக்கும் என்றார் ரகசியம் பேசும் தொனியில்.

பாரிஸ்? வெளிநாட்டு விருந்தினர்? முக்கியமான தகவல் வந்து கொண்டிருக்கிறது. அவள் உஷாரானாள். 

இந்த நேரத்தில் தான் தனக்கு இதெல்லாம் எதுவும் அக்கறை கொள்ள வேண்டாத தகவல் என்று தோன்றும் முகபாவத்தை அணிந்து கொள்ள வேண்டும். அணிந்தாள். 

நான் குப்பைமேனி, தும்பைப்பூ என்று தொழில் கற்றுக்கொள்ள சிரமப்பட்டு மனதிலாக்கிப் பேசுகிறேன். நீங்களோ எனக்குத் தேவையில்லாத பாரிஸ், அவர் ஆணோ பெண்ணோ இங்கே எதற்கு அவர் வரும்போது நான் கூட இருக்க வேணும் அதெல்லாம் பேசி என் கவனத்தைத் திருப்ப முயற்சி நடக்கிற மாதிரி உள்ளது. எனக்கு குப்பைமேனியும் தும்பையும் போதும் ஊருக்கு எடுத்துப் போக. பாரிஸ் ஓரிஸ்  எல்லாம் நீங்களே கட்டிப் பிடித்துச் சீராடுங்கள். 

பொய்க் கோபத்தோடு குயிலி சொல்ல மருத்துவரின் தயக்கம் ஒட்டுமொத்தமாகத் தளர்ந்தது. அடி பயித்தியக்காரப் பெண்ணே பாரி பத்து மருத்துவன் நீலனுக்கு சமானம் என்று சொல்லி குயிலியின் தோளைத் தட்டி அவளைக் கையைப் பிடித்து உள்ளே அனுமன் ஓவியம் வழிபட வைத்திருந்த பூசனை அறைக்கு இட்டுப் போனார். 

ஏன் அவர் தினசரி நூறு கிரேக்க வெண்பா, கலிப்பா, ஆசிரியப்பா எழுதுவாரா? கவிஞர்கள் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்தால் தமிழும் வடமொழியும் தவிர வேறேதும் அறியாத இந்தச் சிறுபெண் என்ன செய்வாள் அண்ணா? வார்த்தை கேட்ட நீலன் கரைந்து போனார். 

அட கிறுக்கே அவன் கவிஞன் இல்லை, அந்த பாரி. யவன மருத்துவன். அவன் அசல் பெயர் வேள்பாரி. கிரேக்கம் போய்ப் பெயரை உள்நாட்டு வளமுறையை உத்தேசித்து  பாரிஸ் ஆனவன். அவன் ஒரு தரத்தில் என் இளைய சகோதரன். நாளை மறுநாள் வருகிறான் என்னை சந்திக்க. 

ஏகமாக ஆச்சரியப்பட்டதாகக் காட்டிக் கொண்டு உபரி ஆச்சரியத்தை காகித நாப்கின்னில் துடைத்துக் குப்பைக் கூடையில் போட அந்தக் காகித நாப்கின்னை ஆச்சரியமாகப் பார்த்தார் மருத்துவர். 

குயிலிக்குத் தன் தவறு உரைத்தது, வாசலில் கலுவம் வைத்து மருந்து இடித்தபடி இருந்த வானம்பாடி மனதில் அந்த அபத்தம் பற்ற தலை திருப்பி உள்ளே பார்த்துச் சிரித்தாள். மருத்துவர் அந்தக் காகித நாப்கினுக்காகக் கை நீட்டினார். அதற்குள் குப்பைக் கூடையில் அதைக் கசக்கி எறிந்து விட்டாள் குயிலி.

 சந்தேகமென்ன வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது தான். சீனத் துணி இதுபோல் மெல்லியது வடக்கில் புழக்கத்தில் வந்திருக்கலாம். தெற்கில் கிடையாது. 

அடம் பிடிக்கும் குழந்தை போல் காகித நாப்கினுக்கு அழிச்சாட்டியம் செய்த மருத்துவருக்கு உள்ளே ஓடி வந்து ஒரு நாப்கின் கொடுத்தாள் வானம்பாடி. 

பாடலியில் இதைச் செய்கிறார்கள் என்று மட்டும் அவர் நினைவில் பதித்தாள் குயிலி.

அது சட்டவிரோதம் என்றாலும் மிக அற்பமான பொருள் என்பதால் போனால் போகட்டும் என்று விட்டுவிட்டாள் குயிலி. என்றாலும் ராத்திரி கிழவியம்மாள் தங்குமிடத்துக்கு நடந்தபோது அந்த விஷயமாகப் பேச மறக்கவில்லை.

(தொடரும்)

Series Navigationகணம் 15 வது குறும்பட விருது விழா
இரா முருகன்

இரா முருகன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *