ஆர். வத்ஸலா
1.
நீயும் நானும் நடந்தோம்
புல்நுனியில் நடனமாடிய
பனித்துளியின் வண்ணங்களை
வகைப்படுத்தி
சுட்ட மணலில்
கால் பாவாமல்
கரங்கோர்த்து ஓடி
மின்னல் ஒளியில்
குட்டிக் குட்டைகளை கண்டுபிடித்து
பாதம் தோய்த்து
இன்னமும்
நாம் சேர்ந்துதான் நடக்கிறோம்
ஆனால் லயம் வேறுபட்டு
கரம் தீண்டுவது
பாதை குறுகும்போது தான்
இனி என்னால் முடியாது
பின் நோக்கிச் செல்வேன்
அப்பொழுதை சந்திக்க
சந்தித்து
அதனை இல்லாமல் ஆக்கிட
பின் நோக்கிச் செல்வேன்
நம் உறவு நழுவிய அப்பொழுதை சந்திக்க
அந்த கணம் 2
ஆர் வத்ஸலா
உன் இதயம்
உனது மூளையின்
கட்டுப்பாட்டில்
என்றைக்கும்
உனது அறிவு கோலோச்சியது
உன் மேல்
உனது உணர்வுகளை
சிறிது சிறிதாக
நசித்துக் கொண்டு
உனக்கே தெரியாது
நீ ரோபோவான நொடி
எது
என்று